அ.மார்க்ஸிடம் ஒரு விண்ணப்பம்

amaa

அ.மார்க்ஸ் எழுதும் முன்முடிவுகளும் காழ்ப்புகளும் கொண்ட அரசியல்கட்டுரைகளையும் நான் தொடர்ந்து வாசிப்பதுண்டு. அனேகமாக அவர் எழுதிய ஒருவரியையும் விட்டிருக்கமாட்டேன் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் அறியாத தகவல்கள் எப்போதும் அவரிடமிருந்து எழும். அவருடைய இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு அரசியல்மீது கசப்பு இருந்தாலும் மனித உரிமை சார்ந்த களப்பணிகள் தமிழ்ச்சூழலில் முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஆனால் அவர் தன் வாழ்க்கை, நட்புகள் குறித்து எழுதும் சித்திரங்களில் உள்ள நேரடியான உணர்ச்சிகரமும் நுணுக்கமான சித்திரங்களும் அவருக்குள் இருக்கும் அவரே அறியாத கலைஞனைக் காட்டுகின்றன. அவர் நல்ல புனைவுகளையும் எழுத முடியும் என்று தோன்றுகிறது. புனைவு என்பது உண்மைகளுக்கு மேலே சென்றுவிடும் மீஉண்மை. அது அவருடைய உணர்ச்சிகரம் வழியாகவே அவருக்கு வாய்க்கும்.

ஒரு ஃபாஸிச, நாஸிச, பிற்போக்கு, மதவாத, சாதியவாத, ஏகாதிபத்திய, தரகுமுதலாளித்துவ, தேசியவாத, மலையாளித்துவ, பார்ப்பன அடிவருடித்துவ எழுத்தாளனாக இருந்தாலும் அ.மார்க்ஸின் நல்ல வாசகன் நான். அவ்வகையில் அவர் ஒரு நாவலையாவது எழுத முயலவேண்டும் என்று கோருகிறேன். எளிய தயக்கங்களைக் கடந்து அதை அவர் தொடங்கினால் போதும். அவரது உணர்ச்சிகரம் அதை எழுதச்செய்யும் என தோன்றுகிறது. அது தமிழுக்கு ஒரு கொடையாக அமையும்.

பொதுவாக அ.மார்க்ஸ் போன்ற கருத்தியல் அடிப்படைவாதிகளுக்கு புனைவு என்பது இரண்டாம் பட்சமானது, அல்லது ஒருவகை இனியபொய் என்னும் நம்பிக்கை உள்ளூர உண்டு. பழைய செவ்வியல் மார்க்ஸியர்கள் அனைவருக்குமே அந்நம்பிக்கை இருந்தது. புனைவிலக்கியத்தை அனுதாபத்துடன் குனிந்து நோக்கி ஆதரிப்பார்கள்.

புனைவிலக்கியம் என்ன செய்யும்?இக்குறிப்புகளையே எடுத்துக்கொள்வோம். இதில் புரட்சியாளரான அந்தோணிச்சாமியை அ.மார்க்ஸ் நோக்குகிறார், உணர்வெழுச்சியுடன் பதிவுசெய்கிறார். ஆனால் ஒரு புனைவாக இது வெளிப்படுமென்றால் அவர் ஏதோ ஒரு புள்ளியில் அந்தோணிசாமியாக மாறி வெளிப்படத் தொடங்குவார். அந்தோணிச்சாமி அ.மார்க்ஸாக வெளிப்படுவார் என்றும் சொல்லலாம். இக்கட்டுரைகளில் நான்- அவர் என்றிருக்கும் இருமை மறையும். அதன் மூலம் விலக்கப்பட்டுள்ள அதியுண்மை ஒன்று வெளிப்படும். அது எந்தக்கட்டுரையும் அளிக்காத விரிவு ஒன்றைச் சாத்தியமாக்கும்.

புரட்சியாளர்கள், தியாகிகள், மாமனிதர்கள் எவராயினும் அவர்களை சமூகம் மறந்துவிடும். அவர்கள் சொல்லில் வாழ்ந்தாலொழிய. பாரியை பாட்டில் நிறுத்தியது கபிலனின் கொடை அல்ல கடமை. புனைவெழுத்தாளனின் பணியும் அதுவே. மார்க்ஸ் புரட்சியாளராகிய அந்தோணிச்சாமியை சொல்லில் நிறுத்தலாம். கடமை எனக்கொள்ளலாம்.

ama

*

என் தந்தை : ஒரு குறிப்பு –  அ.மார்க்ஸ்

விக்டர் ஹ்யூகோ பற்றி ய பதிவில் என் தந்தையை “குடிகாரன்’ என எழுதியது குறித்துச் சில நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன்வைத்தனர். சற்றே கண்டனமும் அவற்றில் ஒலித்தன. உங்கள் தந்தையைப் பற்றி அப்படி எழுதியிருக்கக் கூடாது என.

நான் என் தந்தையை மிகச் சிறிய வயதில் இழந்தவன். மிகப் பெரிய பொறுப்புகளை என் மீது சுமத்தி மறைந்தவர் அவர். இறக்கும்போது தன் பெயரில் 5000 ரூ தவிர வேறு ஏதும் சொத்துக்கள் இல்லாமல் இறந்தவர் அவர்.

அவரை நான் பெரிதும் நேசிக்கிறேன். ஒவ்வொரு கணமும் அவரை நான் நினைக்கிறேன். ஒரு மகத்தான மனிதர். 14 வயதில் கூலித் தொழிலாளியாக மலேசியா சென்று 28 வயதில் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் அவர்.

என்னுடைய அரசியல் ஈடுபாடுகளுக்கு மட்டுமல்ல எனது இலக்கிய நாட்டங்களுக்கும் அவரே மூலகாரணம். வெறும் 5ம் வகுப்புப் படித்த அவர் மலேசியக் கம்யூ கட்சியின் ‘ஜனநாயகம்’ இதழின் ஆசிரியராக இருந்தவர். அற்புதமான உலக இலக்கியங்களை எனக்கு அறிமுகம் செய்தவர் அவர். கிறிஸ்தவ சர்ச்சை விரோதித்துக் கொண்டு எனக்கு மார்க்ஸ் எனப் பெயரிட்டவர். என் அம்மா இறந்த வருத்தத்தில் நிறையக் குடித்துவிட்டு அருகில் இருந்த குளத்தில் மூழ்கிச் செத்தவர்.

நான் மலேசியா சென்றபோது இரு முறைகளும் தோழர் காத்தையாவின் உதவியுடன் அப்பா இருந்த பகுதிகளைச் சென்று பார்த்து வந்தேன். அப்போது அவர் குறித்து நான் எழுதிய ஐந்து கட்டுரைகளில் ஒன்று மட்டும் இங்கே.

கீழே உள்ள படங்களில், மூவர் உள்ள படத்தில் நடுவில் இருப்பவர் அப்பா. இருவர் உள்ள படத்தில் நாற்காலியில் அமர்ந்துள்ளவர் ‘தூக்கில் தொங்கிய கணபதி’. கைப்பிடியில் அமர்ந்துள்ளது என் அப்பா. அப்பா மிகப்பெரிய அறிவாளி மட்டுமல்ல. எத்தனை அழகு பாருங்கள் அவர். எனக்கு ஒரே வருத்தம்தான், அந்த அழகு எனக்கு வாய்க்காமல் போயிற்றே என்பதுதான்…

இனி கட்டுரை:

amaa

அன்று பற்றிய கரங்கள் அ.மார்க்ஸ்

ஒரு பத்துநாட்கள்தான் மலேசியாவில் இருந்தேன். எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தேன் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் நான் பார்த்தவரைக்கும் ஒப்பீட்டளவில் பெரிய கட்டிடங்கள் முதலான பெரு நகரச் சாயல்கள் குறைந்த ஒரு எளிய நகரமாகவே ரவாங் இருந்தது. இன்னும்கூடப் பெரும் காடுகள் இருந்தத் தடயங்களுடன்தான் அது காட்சியளித்தது. இந்தக் காடுகள் மத்தியிலொரு சிறிய கடைத்தெருவுடன் கூடிய நகரம்தான் அது. பழைய செங்கற் சூளை இன்று மூடிக் கிடந்தது. சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஒரு பழம் புகை போக்கிக் கோபுரம் ஒன்றைக் காட்டித்தான் அதைப் பற்றிச் சொன்னார் காத்தையா. சுரங்கம் ஒன்று மூடப்பட்டு அது இருந்த இடம் இன்றொரு மிகப் பெரிய ஏரியாகக் காட்சியளிக்கிறது. இந்தப் பெருங்காடுகளை அழித்து அதைத் தோட்டமாகவும் தொழிற்சாலைகளாகவும், சுரங்கங்களாகவும், வாட்டர்ஃபால் எஸ்டேட்களாகவும் உருவாக்கியதில் சஞ்சிக் கூலிகளாக இரு நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு வந்த தமிழர்களுக்குப் பெரும் பங்குண்டு. எந்த உரிமைகளும், தொழிற் சங்கம் முதலிய பாதுகாப்புகளும் இன்றி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் துயர்கள் நிறைந்த வாழ்வைச் சுமந்திருந்தவர்கள் அவர்கள்.

அந்தச் சிறிய நகரத்தில் காரை நிறுத்திவிட்டு ஒரு முடிதிருத்தும் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார் காத்தையா. அது ஒரு தமிழரின் கடை. 1940களில் தொழிற்சங்கத் தோழர்கள் சந்தித்துப் பேசும் இடங்களில் அதுவும் ஒன்றாம். தற்போது முடி திருத்திக் கொண்டிருந்தவரின் தந்தைக்கு என் அப்பாவைத் தெரியுமாம். காத்தையா விளக்கிச் சொன்னபோது அவர் சிரித்தார். உட்காரச் சொன்னார். தேநீர் சாப்பிடச் சொன்னார். நன்றி சொல்லி வெளியே வந்தோம். எதிர்ப்புறத்தில் இப்போது ஒரு காவல் நிலையம் உள்ளது. அந்த இடத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் சுட்டுக் கொன்று குவிக்கப்பட்டிருந்த காட்சி ஒன்றை நினைவு கூர்ந்தார் காத்தையா. மிகப் பெரிய வன்முறைகளினூடாகச் சென்ற நூற்றாண்டில் கம்யூனிச இயக்கம் அழிக்கப்பட்ட இடங்களில் ஒன்று மலேசியா என்பது நினைவுக்கு வந்தது. இன்றும்கூட மிகப் பெரிய இராணுவ முகாம் ஒன்று ரவாங்கில் குடிகொண்டுள்ளது. அங்கிருந்து சற்று முன்னே சென்றோம். ஒரு பெரிய மைதானம், அதன் கரையில் ஒரு அலுவலகக் கட்டிடத்துடன் காட்சியளித்தது. அது ஒரு தொழிற்சங்க அலுவலகம். அன்றும் அங்குதான் தொழிற்சங்கம் இருந்ததாம். “உங்கள் அப்பா ராமதாஸ் அங்கே நின்று கொண்டுதான் எதிரே கூடியுள்ள தொழிலாளர்களை நோக்கி உரையாற்றுவார்” என்று காத்தையா சொன்னபோது நான் ஒரு கணம் அந்தக் காட்சியை மனக் கண்ணில் ஒடவிட்டுப் பார்த்தேன்.

அப்பா ஆறடி உயரம். கூரிய நாசி, மாநிறம், வகிடெடுக்காமல் மேலேற்றிச் சீவிய தலையுடன் மிக அழகாகத் தோற்றமளிப்பார். கிடைக்கும் படங்களில் மிக நவீனமான உடைகளுடன் அவர் காட்சியளிப்பார். அவரது ஆக உச்சமான இளமைக் காலம் மலேசியாவில்தான் கழிந்தது. அப்பாவின் வீடு எங்கே இருந்தது எனத் தெரியுமா என்றேன். சற்றுத் தொலைவு காரை ஓட்டிச் சென்று ஒரிடத்தைச் சுட்டிக் காட்டினார். வெறும் புதரும் காடுமாக அது காட்சியளித்தது.

அருகில் ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது. அப்போது அது ஒரு பாகிஸ்தானியிடம் இருந்ததாம். அதுவும் இயக்க வரலாற்றில் ஒரு முக்கிய இடமாக இருந்துள்ளது. மறைந்த தொழிற்சங்கத் தலைவர் சின்னப்பன் உள்ளிட்ட வேறுசிலரது வீடுகளுக்கும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். “அப்படியா” என்று எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள். தேநீர் சாப்பிடச் சொன்னார்கள். இன்னும்கூட அதே பழைய கட்டிடங்கள் சிலவும் தொழிற்சாலை அதிகாரிகாளுக்கான குவாட்டர்ஸ் சிலவும் அப்படியே இருந்தன.

இறுதியாக சில நாட்களுக்கு முன் மறைந்த பத்துரவாங் தருமலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றோம். அவரது தம்பி குப்புசாமிக்கு ஓரளவு அப்பாவைத் தெரிந்திருந்தது. அப்பாவை விட அண்ணன் சுப்பையாவை நன்றாகத் தெரிந்திருந்தது. திண்டுக்கல் மாவட்டம் மணப்பாரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அவர்கள், தருமலிங்கத்தின் உறவினர்களும் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நாடு திரும்பி நான்கைந்து ஆண்டுகள் முன்பு வரை உயிர் வாழ்ந்திருந்தவர்களுமான சங்கையா பொன்னுசாமி சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் சுப்பையா அண்ணன். அப்பகுதியின் நாட்டுப்புற நாயகர்களான பொன்னர் சங்கர் பெயர் சங்கையா சகோத்ரர்களுக்கு வைக்கப் பட்டிருந்தது. நாடுகடத்தப்பட்ட கம்யூனிஸ்டுகள், போர்க்காலத்தில் நாடு திரும்பியவர்கள். போஸின் இராணுவத்தில் இருந்தவர்கள் என மலேசிய நண்பர்கள் பலரும் அவ்வப்போது அப்பாவைத் தேடி வருவார்கள். பழைய கதைகளையும், சாகசங்களையும் மிக உற்சாகமாக அப்பா பேசத் தொடங்கிவிடுவார். முழுமையாகப் புரியாவிட்டாலும் வியப்புடன் நன் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருப்பேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தொடர்ந்து இருந்து செயல்பட்ட ஆர்.எச்.நாதன். பாரதிமோகன், குருதேவன், அப்புறம் நகரம் ராமசாமி, செம்பனார்கோவில் தம்பையா, பரவாக்கோட்டை முத்து, மணப்பாரை சங்கையா சகோதரர்கள், திருச்சி மோகன், ராமு, யாழ்ப்பாணம் ஶ்ரீ (ரெங்கநாதன்), ஆம்பலாப்பட்டு சுந்தரம், கவிஞர் பாரதிமோகன் முதலானோர் இப்போதும் என் நினைவில் உள்ளனர். ஓரிருவர் அப்பா இறந்த பின்னும் ஓரிரண்டு ஆண்டுகள் வரை வந்து சென்றதுண்டு. இவர்களில் சிலர் தாழ்த்தப்பட்டவர்கள், சிலர் தேவர், நாயிடு, அம்பலக்காரர், செட்டியார், வெள்ளாளர் முதலிய சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் ஒரு அற்புதமான தோழமை அவர்களைக் கட்டி இறுக்கியிருந்தது.

அவர்களில் இருவர் அப்பாவின் குடும்பத்திலேயே அங்கத்தவர்கள் ஆனார்கள். எனக்கு அண்ணன்கள் ஆயினர். மூத்தவர் சுப்பையா அண்ணன். மற்றவர் முத்துச்சாமி அண்ணன். மணப்பாரையச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர். அவர்களின் அப்பா பழனியாண்டி கூலித் தொழிலாளியாக மலேசியா வந்தவர்களில் ஒருவர். மலேசியாவில் பிறந்த அண்ணன்கள் இருவருக்கும் 1950வரை தமிழ் நாட்டைத் தெரியாது. சிறு வயதிலேயே தாயை இழந்த பிள்ளைகள் அவர்கள்.

போர்க்கால நெருக்கடிகள் மத்தியில் அப்பாவின் தொழிற்சங்க அலுவலகம் எப்போதும் பிசியாக இருக்குமாம். சுப்பையா அண்ணன் சொல்வார். நான் திரும்பத் திரும்ப அவரைச் சொல்லச் சொல்லிக் கேட்பேன். நிறையப் பத்திரிக்கைகள், வானொலி, ரேடியோகிராம் சகிதம் அமைந்திருந்த அப்பாவின் வீடு + அலுவலகத்தில் அடிக்கடி வந்து பேப்பர்கள் படிப்பது, போர்ச் செய்திகளை வானொலியில் கேட்பது, ரேட்டியோகிராமில் பாட்டுக்கள் கேட்பது சுப்பையா அண்ணனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. எப்போதும் அப்பாவின் வீட்டில் சாப்பாடும் கிடைக்கும். தம்பையாவின் வேலை சமையல் செய்வது. சிறுவன் முத்துச்சாமியும் எப்போதாவது அங்கு வந்து பாட்டுக்கள் கேட்டுவிட்டுச் சாப்பிட்டுச் செல்வதுண்டு. இருவரும் அப்பாவை “சார்” என்றுதான் கூப்பிடுவார்க்ள். சாகும்வரை அப்படித்தான் கூப்பிட்டார்கள். அவர்களைப் பார்த்து எங்கள் ஊரில் பலரும் அப்பாவை சார் என்றே கூப்பிடும் பழக்கம் இருந்தது.

ஒருநாள் பழனியாண்டிக்கு உடல் நலமில்லாமற் போய் மருத்துவ மனையில் சேர்க்க வேன்டியதாயிற்று. பிள்ளைகள் இருவருடனும் அப்பாவைத் தேடி வந்த பழனியாண்டி மருத்துவமனையில் துணையாக இருப்பதற்கு சுப்பையாவும் வர வேண்டி இருப்பதால் முத்துச்சாமியை அப்பாவின் பொறுப்பில் விட்டுச் செல்வதாகச் சொல்லியுள்ளார். அதனாலென்ன இருக்கட்டும் என அப்பா சம்மதித்துள்ளார். ஒரு அனாதை போலத் தன்னந்தனியாக இதே போன்ற ஒரு வயதில் இந்த நாட்டுக்கு வந்தவர்தானே அவரும். மருத்துவமனையில் இருந்த பழனியாண்டிக்கு நாளுக்கு நாள் உடல் நலம் மோசமாயிற்று. ஒரு நாள் இரவு இரண்டுமணிக்கு அப்பாவின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. திறந்தபோது சுப்பையா தேம்பித் தேம்பி அழுத வண்ணம் நின்றிருந்திருக்கிறார். சத்தம் கேட்டு முத்துசாமியும் விழித்துக் கொண்டு ஓடி வந்துள்ளார். நடந்ததைப் புரிந்து கொண்ட அப்பா சுப்பையா, முத்து இருவரின் கரங்களையும் பற்றிக்கொண்டார். “அழுவாதீங்கடா, நான் இருக்கேண்டா, நான் இருக்கேன்”. சுப்பையா அண்ணன் இதைச் சொல்லும் போதெல்லாம் அவர் குரல் கம்மிவிடும். கேட்டுக் கொண்டிருக்கும் என் கண்கள் பனித்துவிடும்.

அன்று பற்றிய அந்தக் கரங்கள் நான்கையும் அப்பா சாகும் வரை விடவில்லை. அடுத்த சில ஆண்டுகள் மலேசியத் தமிழர்களுக்கு மிகவும் சோதனையானவை. ஜப்பானியர் ஆட்சியின் இறுதியிலும் அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சியிலும் அப்பா தலைமறைவாக நேரிட்டது. சுப்பையாவும் கொரில்லாப் போராளியானார்.

கெடுபிடிகள் அதிகமாயின. ஜப்பானிய ஆட்சி மட்டுமின்றி பின் வந்த பிரிட்டிஷ் ஆட்சியும் கொடூரமாகக் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியது. ஜப்பானியரின் சித்திரவதை முறைகளை அப்பா சொல்லக்கேட்டு நான் அஞ்சி நடுங்கியிருக்கிறேன். இந்த நேரத்தில் தமிழகச் சொந்தங்களோடு தொடர்பு வைத்திருந்த பலரும் ஊர் திரும்பினர். எங்கள் ஊரச் சேர்ந்தவர்கள் என் தாத்தாவிடமும் அப்பாயியிடமும் (பாட்டி) அப்பாவின் நிலையைச் சொல்லி அச்சுறுத்தியுள்ளனர். தாத்தா சாகக் கிடக்கிறார் என்றும், கடைசித் தடவையாகப் பார்த்துச் செல்ல ஒருமுறை வந்து போகுமாறும் என் அப்பாயியிடமிருந்து கடிதமொன்று அப்பாவுக்கு வந்தது.

கட்சி அனுமதி பெற்று ஊருக்கு வந்ததாக அப்பா சொல்லுவார். ஒருவேளை உயிருக்குப் பயந்தும் வந்திருக்கலாம். ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட இரகசியப் பிரிவுபசார நிகழ்ச்சிகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் இயக்கத்திற்குத் தெரிந்தே அவர் புறப்பட்டிருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மலேசியாவில் நிலைமை எப்படி இருந்தாலும் அந்தக் காலத்தில் ஒருவர் சிங்கப்பூர் சென்று வருகிறாரென்றால் ஓரளவு பணம், நகைகள், இங்கே கிடைக்காத பொருட்களுடன் வருவார் என்பதுதான் பொருள். சரியாகப் பதிநான்காண்டு காலத்திற்குப் பின் வந்து சேர்ந்த மகனைப் பற்றி என் அப்பாயி சொல்லுகிற சொற்கள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. “வந்தான் பாரு உங்கொப்பன். ஒரு தோல் பையையும் சவரக் கத்தியையும் தூக்கிட்டு”

அவர் சொல்லிய அந்தத் தோலாலான உயர்ரக சூட் கேஸ் ரொம்ப நாட்கள் வரை என் வீட்டில் இருந்தது. அவர் சொன்ன சவரக் கத்தி ஒரு கில்லட் ரேசர். அவசரமாக அப்பாவுக்குத் திருமணம் செய்வித்து நாங்கள் பிறந்த கதையெல்லாம் இங்கே தேவையில்லை.
சென்னைத் துறைமுகத்தில் வந்து இறங்கியவுடன் அப்போது பிராட் வேயில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத்தான் அப்பா சென்றுள்ளார்.

அ[ப்போது அங்கும் நெருக்கடி. யாரும் கண்டு கொள்ளாத சூழலில் ஊருக்கு வந்த அப்பா வயதான பெற்றோரைப் பாதுகாக்கும் பொறுப்புக்கு ஆளானார். திருமணமும் ஆகியது. இருந்த கொஞ்ச நிலத்தைச் சாகுபடி செய்யும் திறமையும் அவருக்கில்லை. அதே நேரத்தில் உளவுத் துறை தொல்லை வேறு. அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசு அவரைக் கொண்டு சென்று சில நாட்களுக்குப் பின் விடுதலை செய்த போதிலும் இறுதிக் கட்டப் பிரிட்டிஷ் ஆட்சியும் தொடர்ந்து வந்த இந்திய அரசும் அவரை நீண்ட காலம் கண்காணிப்பிலேயே வைத்திருந்தது. எனினும் கட்சிக்காரர்களும் தலைமறைவுத் தோழர்களும் வந்து செல்லும் இடமாகவே அப்பாவின் வீடு இருந்தது. மலேசியாவிலேயே பழக்கமானவரும் இந்திய அரசால் சுட்ட்டுக் கொல்லப்பட்டவருமான வாட்டாக்குடி இரணியன் சுடப்பட்ட நாளுக்கு முதல் இரண்டு நாட்கள் அப்பாவின் பாதுகாப்பில்தான் இருந்தார்.

சில வாழ்க்கைச் சம்பவங்கள் தமிழ் சினிமாக் காட்சிகளைக் காட்டிலும் நம்பத் தகாதவையாகவும் வியப்புக்குரியதாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி அப்பாவின் வாழ்விலும் நடந்தது. அப்பாவுடன் மலேசியாவிலிருந்த கோமஸ் என்கிற ஒரு மலையாள நண்பர் குடும்ப சகிதம் சென்னைக்கு வருவதாகவும் துறைமுகத்தில் வந்து அழைத்துச் செல்லுமாறும் அப்பாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

துறைமுகத்தில் கோமசுக்காக அப்பா காத்திருந்தபோது, “சார், சார்” என்ற அந்தப் பழக்கமான குரல் உரத்துக் கூவியது. கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தபோது இரண்டு கரங்களிலும் விலங்கிடப் பட்டு சுப்பையா அண்ணன் போலீஸ் பிடியில் நின்றிருந்துள்ளார். நாடுகடத்தப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரை “எங்கே போகிறாய்? முகவரியைச் சொல்” எனப் போலீஸ் கெடுபிடி செய்துள்ளது. தமிழ்நாடு குறித்து முன்பின் அறிந்திராத அவர் என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றுள்ளார். அப்பா சென்று தன்பொறுப்பில் அழைத்துச் செல்வதாகக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு அண்ணனை அழைத்து வந்தார். 500 ரூபாய் இந்தியப் பணம் மட்டும் அவருக்கு மலேசிய அரசால் வழங்கப் பட்டது.

1948 அன்று பிரிட்டிஷ் ஹை கமிஷனர் சர் ஹென்ரி குர்னீ கம்யூனிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுஅடக்குமுறைகள் அதிகமாயின. அண்ணன் சுப்பையாவும் தலைமறைவானார். அவரும் ஒரு சீனப் பெண் தோழரும் ரப்பர் தோட்டமொன்றில் பதுங்கியிருந்தபோது படையினர் சுற்றி வளைத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் அப்பெண் படுகாயமடைந்து விழுந்துள்ளார். “இந்தோ தொங்சி நீ ஓடிப்போ, தப்பித்துப் போ” எனச் சீன மொழியில் அப்பெண் கத்தியதாகவும், சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின், தன்னிடமிருந்த கைத் துப்பாகியைச் சேற்றுக்குள் பதுக்கி விட்டுச் சரண் அடைந்ததாகவும் அண்ணன் சொல்வார். ஆறுமாத காலக் கடுஞ் சித்திரவதைகளுக்குப் பின் அவர் நாடுகடத்தப்பட்டார். பல நூறு பேர்கள் அவ்வாறு அப்போது நாடுகடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
கொஞ்ச நாட்கள் கழித்துத் தம்பி முத்துச்சாமியும் வந்து சேர்ந்தார். இருவருக்கும் அப்பா தன் சொந்தக்காரப் பெண்களைத் திருமணம் செய்வித்தார், சுப்பையா அண்ணன் ஒரே குடும்பமாய் அப்பா இறக்கும் வரை வாழ்ந்தார். எனக்கும் இரு குழந்தைகள் பிறந்து நான் தஞ்சை நகரத்திர்கு இடம்பெயரும் வரை ஒரே குடும்பமாகவே வாழ்ந்தோம். இன்று இரண்டு அண்ணன்களும் இறந்து போனார்கள். அவர்களது பிள்ளைகள் திருமணமாகிக் குடும்பங்களோடு வாழ்கின்றனர்.

மனித உரிமைப் போராளி தோழர் ஆறுமுகம் மலேசியத் தமிழர் வாழ்வில் மறக்க இயலாத மூன்று கணங்கள் குறித்துச் சொன்னது பற்றித்தான் ஆரம்பித்தேன். கதை எங்கெங்கோ போய்விட்டது. பெரியாரின் வருகை, போஸின் இந்திய தேசிய இராணுவச் செயல்பாடுகள் என்பதற்கு அடுத்த கட்டமாக அவர் நான் எதிர் பார்த்தது போல் கம்யூனிஸ்டுகள் சென்ற நூற்றாண்டின் மத்தியில் நடத்திலாயுதப் போராட்டத்தைச் சொல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற ‘ஹின்ட்ராஃப்’ இயக்கத்தைக் குறிப்பிட்டதை நான் எதிர்பார்க்கவில்லை. கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை அவர் ஏதும் குறைத்துச் சொல்லவில்லை ஆயினும் அது அத்தனை முக்கியத்துவம் உள்ளதாகக் கருதப் படாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்துச் சிந்திக்கத் தொடங்கிய போதுதான் ரெங்கசாமியின் மூன்று நாவல்களையும் நான் படிக்க நேரிட்டது.

(ஐந்து கட்டுரைகளாக வந்த தொடர் கட்டுரையில் ஒன்று மட்டும் இது என்பதை நினைவிற் கொள்க)

***
சென்றகாலங்கள்
குறைத்துரைத்தலின் அழகியல்
அ.மார்க்ஸும் ஜெகேவும்
அ.மார்க்ஸின் ஆசி
ஜெகே கடிதங்கள்
முத்திரைகள்
அ.மார்க்ஸ்,காந்தி
இஸ்லாம், மார்க்ஸ்:ஒரு கடிதம்
கடிதங்கள்
அ.மார்க்ஸ்:கடிதங்கள்
தேர்தல் கண்காணிப்பு
அ.மார்க்ஸ் என்னும் வழக்குரைஞர்
அ.மார்க்ஸ்;கடிதம்
முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் சந்திப்பு நினைவுகள்
அடுத்த கட்டுரைபிரபஞ்சன் 55