‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68

68. நச்சுப்பல்

தன் குடிலுக்குச் சென்றதும் தேவயானி சர்மிஷ்டையிடம்  “ஏன் முகத்தை வாழைக்கூம்புபோல வைத்துக்கொண்டிருக்கிறாய்? இப்போது என்ன ஆயிற்று?” என்றாள். “ஒன்றுமில்லை, எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “என்ன அச்சம்? இன்றுவரை நீ இளவரசி, இதே இடம்தான் அரசிக்கும். எவரோ சொல்வதைக் கேட்டு ஏன் அஞ்சுகிறாய்?” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை “இல்லை…” என சொல்லவந்து அப்படியே விழிகரைந்து விசும்பலானாள். “என்னடி இது…? அறிவிலிபோல…” என்றாள் தேவயானி.

சாயை “நாம் நீராடச் செல்வோம்…” என்றாள். “நீந்தினால் இளவரசி மீண்டுவிடுவார்கள்.” சர்மிஷ்டை “இல்லை, நான் அந்த உளநிலையில் இல்லை” என்றாள். “முதலில் வந்து நீந்துங்கள். உளநிலை அதுவே அமையும்” என சாயை அவள் கையை பிடித்தாள். “இந்த ஆடைகளுடனா?” என்றாள் சர்மிஷ்டை. “உன் சேடியும் வரட்டும். அவள் ஆடைக்கு காவலிருப்பாள். விருஷபர்வனின் அரசில் அரசுப்பொருளை எவர் திருடமுடியும்?” என்றாள் தேவயானி.

தயங்கியபடி சர்மிஷ்டை கிளம்பினாள். “இங்கே நீராடினால் அத்தனைபேரும் பார்ப்பார்கள். நான் சில நாட்களாகவே வெறிக்கும் விழிகள் முன்னால் வாழ்கிறேன்” என்றாள். “அஞ்சாதே. நாம் புதிய ஓரிடத்திற்கு செல்லலாம். பிரதமை ஒரு சிற்றருவியாக கொட்டுகிறது, பார்த்திருக்கிறாயா?” என்றாள் தேவயானி. “இந்த ஆறா? கேள்விப்பட்டதே இல்லையே!” என்றாள் சர்மிஷ்டை. “இங்கிருந்து சற்று அப்பால். நாம் புரவிகளில்கூட செல்லலாம். அங்கே முன்னொரு காலத்தில் வித்யாதர முனிவரின் தவக்குடில் இருந்திருக்கிறது. இன்று காடாகிவிட்டது. ஆனால் அவர்கள் நட்ட மலர்மரங்கள் பெருகி மலர்க்காடாக மாறி நின்றிருக்கின்றன. காடு அலையிளகி வண்ண நுரை எழுந்ததுபோலிருக்கும்” என்றாள் தேவயானி.

அவள் நீராடக் கிளம்பியதைக் கேட்டதும் அணுக்கச்சேடி “வேண்டாம் இளவரசி, இது நன்றல்ல என என் உணர்வு சொல்கிறது” என்றாள். “விரைவில் மீண்டுவந்துவிடுவோமடி. புரவிகளிலேயே செல்லலாம் என்கிறார்கள். எனக்கும் இவ்வுள மாறுதல் தேவையாக உள்ளது” என்றாள் சர்மிஷ்டை. சேடி “நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன், இளவரசி” என்றாள். “நீ உடன் வந்தால் போதும். ஆடையணிகளை நோக்கிக்கொள்” என்றாள் சர்மிஷ்டை. சாயை சென்று நான்கு புரவிகளை ஓட்டிவந்தாள். “இங்கே  அரசகாவலருக்குரிய இரு புரவிகளே இருந்தன. இருபுரவிகள் உங்கள் தேரில் கட்டப்பட்டிருந்தவை. மானுடர் ஏறினால் தாங்கும் முதுகுகள் உள்ளவை என நினைக்கிறேன்” என்றாள்.

“நாம் நெடுந்தொலைவு செல்லப்போவதில்லை அல்லவா?” என்றாள் சர்மிஷ்டை. “அருகேதான்… நான்கு நாழிகை தொலைவு” என்ற தேவயானி “ஏற்றம்கூட இல்லை. காட்டுவழியானாலும் நிகரமைந்த மண்” என்றாள். அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். சர்மிஷ்டை “காட்டுக்குள் புரவியில் செல்வது ஒரு அரிய விளையாட்டு. வரும் கிளைகளை எல்லாம் முன்னரே உய்த்துணர்ந்து தலைகுனியவேண்டும். சிறுமியாக இருக்கையில் நான் எந்தையுடன் சென்று ஆடியதுண்டு…” என்றாள். தேவயானி “கிளைகளுக்கு தலைகுனியாமலேயே செல்லலாம். அது மேலும் நுண்ணிய விளையாட்டு… பார்!” என்றபடி புரவியை தட்டினாள்.

எதிர்வந்த கிளைகளுக்கெல்லாம் தலைதிருப்பியும் புரவியை ஒதுக்கியும் சாரைப்பாம்பென நெளிந்து விரைந்து சென்றாள் தேவயானி. கிளைகளுக்கு குனிந்தும் சில தருணங்களில் புரவிக்கழுத்துடன் முகத்தை பதியச்செய்தும் அவளைத் தொடர்ந்து சர்மிஷ்டை சென்றாள். மிக விரைவிலேயே அவள் உளநிலை மாறியது. கூச்சலிட்டு நகைத்தபடி “வளைவது ஆணவக்குறைவாக இருக்கலாம், ஆனால் பயணத்தை எளிதாக்குகிறது, மூத்தவளே. நீங்கள் புரவிமேல் அமர்ந்து நடனமிடுகிறீர்கள்” என்றாள். சாயை பின்னால் வந்தபடி “அது நடனமல்ல, போர். போரில் வளைவதென்பது தோற்பதே” என்றாள்.

தொலைவிலேயே அருவியின் ஓசை கேட்கத்தொடங்கியது. “பெரிய அருவியா?” என்று அவள் கேட்டாள். “நின்று நீராடலாம்… அதற்குமேல் அது எத்தனை பெரிதாக இருந்தாலும் என்ன?” என்றாள் சாயை. மலர்க்காட்டின் வண்ணங்கள் மரங்களுக்கு அப்பால் தெரிந்தன. அங்கே மாபெரும் ஓவியப்பட்டுத்திரை ஒன்று தொங்குவதுபோல என அவள் எண்ணினாள். கொன்றையின் பொன், வேங்கையின் அனல், செண்பகத்தின் நீலம். கலவையான மணம் வந்து மூக்கை சீண்டியது. அவள் முகம் சுளித்து தும்மலிட ஐயம்கொண்டு புரவி நின்றது. அவள் அதை தட்டி முன் செலுத்தினாள்.

வித்யாதர முனிவரின் குடிலிருந்த பகுதி முழுமையாகவே மலர்க்காடாக மாறிவிட்டிருந்தது. “இங்கே அவர்கள் பெய்த ஞானமே மலர்களாக செறிந்துள்ளது என்கிறார்கள். அவருடைய சிறிய ஆலயம் ஒன்று நடுவே அரசமரத்தின் அடியில் அமைந்துள்ளது. சித்திரை முழுநிலவன்று அவருடைய மாணவநெறியினர் இங்கே வந்து வணங்கி அருள்கொண்டு செல்வதுண்டு” என்றாள் சாயை. தேவயானி “மரங்களை ஒழித்து அவர்கள் அமைத்த வெட்டவெளியை எளிதில் வளரும் மலர்மரங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. வண்டொலியை அசுரவேதத்தின் முதலோசை என்பது மரபு. ஆகவே இதை வேதவனம் என்றும் அழைக்கிறார்கள்” என்றாள்.

மலர்க்கிளைகள் காற்றில் உலைய வண்ணம் அலையடித்தது. காற்றில் வண்டுகளும் தேன்சிட்டுகளும் எழுந்து அமைந்து பிறிதொரு அலையாயின. “வா, அருவிக்குச் செல்ல பாறைகளால் ஆன பாதையொன்றை முனிவரின் மாணவர்கள் முன்பு அமைத்திருக்கிறார்கள்” என்றாள் தேவயானி. “இந்த இடத்தை எப்படி அறிந்தீர்கள்?” என்றாள் சர்மிஷ்டை. “நம் குருநிலையில் வித்யாதர மரபின் மாணவன் ஒருவன் வந்துசேர்ந்திருக்கிறான். அவனிடமிருந்து அறிந்தேன்…” என்றாள் தேவயானி. “நானும் இவளும் மட்டும் இங்கே வந்து நீராடினோம். மலராடை அணிந்து விளையாடினோம். அப்போதே உன்னையும் இங்கே அழைத்துவர எண்ணினோம்.”

மலர்களை நோக்க நோக்க சர்மிஷ்டையின் உள்ளம் விம்மியது. உவகை என்பது ஒரு கொந்தளிப்பாக ததும்பலாக நிலையழிவாக மட்டுமே ஏன் இருக்கிறது? அது அமைதியாக நிலைகொள்ளலாக ஏன் ஆகக்கூடாது? இன்பமென்பது அலை, துன்பமென்பதும் அலையே என சுக்ரர் சொன்ன வரி நினைவிலெழுந்தது. எந்த வகுப்பில்? நானும் அரிய நூலுரைகளை நினைவில்கொள்ளத் தொடங்கிவிட்டேன்! நானும் அரசியாகிவிட்டேன். “புன்னகைக்கிறார்… இங்கு வந்தது வீணாகவில்லை” என்றாள் சாயை. “நீராடுவோம்” என்றாள் தேவயானி.

சர்மிஷ்டை ஆடை களையத்தொடங்கியபோது தேவயானி “இங்கே முற்றிலும் ஆடை களையவேண்டும் என்பது நெறி” என்றாள். “எவர் நெறி?” என்று சர்மிஷ்டை அச்சத்துடன் கேட்க “இந்த மலர்க்காட்டை ஆளும் கந்தர்வர்களின் ஆணை” என்றாள் சாயை. “அய்யோ!” என்றாள் சர்மிஷ்டை. “விளையாடாதே! ஏற்கெனவே அஞ்சிக்கொண்டிருக்கிறாள்” என்ற தேவயானி “இங்கே எவரும் வருவதில்லை. இக்காட்டுக்கு அப்பால் அடர்காடு எழுந்து கடக்கமுடியா மலையென்றாகிறது. ஆகவே முழு விடுதலையை நம் உடலுக்கு அளிக்க இதைவிட உகந்த இடம் வேறில்லை” என்றாள். “ஏன்?” என்று அவள் மிரண்ட விழிகளுடன் கேட்க “இரு சிறுகுழவிகள் அவை, இளவரசி. அவற்றை நாம் எப்போதும் கட்டி சிறையிட்டிருக்கிறோம்” என்றாள் சாயை. “யார் சிறையிட்டது?” என சர்மிஷ்டை புரியாமல் கேட்க “வாடி!” என அவள் கையை பற்றினாள் தேவயானி.

தேவயானி தயக்கமே இல்லாமல் விரைவாக தன் ஆடையை களைந்தாள்.  உடன் சாயையும் ஆடையைக் களைந்து வெற்றுடலுடன் இளங்குதிரைகள் போல இறுகிய தொடைச்சதைகள் அசைய குருத்தொளி கொண்ட முலைகள் துள்ள அருவியை நோக்கி ஓடினாள். அணுக்கச்சேடி தயங்கி நிற்க தேவயானி “வாடி” என அதட்டினாள். சர்மிஷ்டை அந்த நீர்ப்படலத்திற்குள் சென்று நிற்பது ஓர் ஆடையை சூடுவதுபோல என உணர்ந்தாள். சேடியின் விழிகளை தவிர்த்தபடி ஆடையைக் களைந்து வெற்றுடலை தன் கைகளால் மூடிக்கொண்டு தோள்குறுக்கி நடந்து அருவியை நோக்கி சென்றாள்.

சாயை நீரை அள்ளி அவள் மேல் தெறிக்க சிலிர்த்துச் சிரித்தபடி பாய்ந்தோடி நீருக்குள் புகுந்துகொண்டாள். குளிர்ந்த நீர் அவளை அக்கணமே முழுமையாக ஆட்கொண்டது. நீரோசை எண்ணங்களையும் மூடியது. குறுக்கிய உடலை மெல்ல விடுவித்து கைகளை விரித்தபடி சுழன்றாள். கூச்சலிட்டபடி துள்ளிக்குதித்தாள். மூச்சுக்காக வெளிவந்தபோது முன்காலையின் ஒளியில் நீர்வழியும் முலைகளுடன் சாயையும் தேவயானியும் நிற்பதை கண்டாள். “விடுதலை ஆகிவிட்டாள்” என்று தேவயானி சொன்னபோது பற்கள் வெண்ணிறமாக மின்னின.

“நீருக்கு கன்னியைத் தழுவும் உரிமை உண்டு என்கின்றன நூல்கள்” என்றாள் சாயை. எதிர்பாராதபடி தேவயானி சர்மிஷ்டையை நீருக்குள் தள்ளிவிட்டாள். மூச்சுத் திணறி அவள் கூச்சலிட்டு திமிறி விலகி தேவயானியின் கையைப்பற்றி உள்ளே இழுத்தாள். ஓடிவந்து சேர்ந்த சாயை அவர்கள் இருவரையும் பிடித்து மேலும் விசையுடன் நீர்பொழிந்த இடம் நோக்கி தள்ளினாள். மூவரும் கைகள் பிணைத்தபடி ஒருவரை ஒருவர் உந்தினர். கூவிச்சிரித்து துள்ளிக்குதித்தனர்.

அருவியில் அதற்கு முன்னரும் சர்மிஷ்டை ஆடியதுண்டு. சேடியரும் செவிலியரும் துணைவர, ஆடைகளும் அணிகளுமாக. அருவிக்குக் கீழே ஆடையின்றி நிற்பதில் மட்டுமே முழுமையுள்ளது என அப்போது தோன்றியது. நீர்தழுவ உடல்நெகிழ்ந்து நின்றிருக்கும் பாறைகளுடன் ஒரு பாறையாக ஆகிவிடுவதுபோல. முழுமையாக ஒப்படைத்துவிடுவதன் விடுதலை அது என எண்ணிக்கொண்டாள். கைகளை விரித்து நீரின் அடிகளை பெற்றுக்கொண்டாள். குனிந்து அதன் எடையை தாங்கினாள். நீர் பெருகிவருவதுபோல் தோன்றியது. அலையலையாக எதையோ சொல்வதுபோல செவிமயக்கு ஏற்பட்டது.

வெளியே சென்று நின்ற சாயை “செல்வோம்!” என்றாள். “இன்னும் சற்றுநேரம்” என்றாள் சர்மிஷ்டை. “நீதான் செல்லவேண்டும் என்றாய்” என்றாள் சாயை. “இதோ” என மீண்டும் நீருக்குள் புகுந்தாள் சர்மிஷ்டை. சாயை கரைக்குச் சென்று மலர்க்காட்டுக்குள் நுழைந்தாள். நீருக்குள் இருந்து வெளிச்சென்று தலைமயிரை வழித்து பின்னால் கொண்டுசென்று சுருட்டி உதறினாள் தேவயானி. “கரையேறுகிறீர்களா?” என்றாள் சர்மிஷ்டை. “இல்லை, வர்த்தினி அங்கே மலராடை செய்கிறாள். அதை அணிந்துகொண்டு மலர்கள் நடுவே திளைப்பேன். உடலெங்கும் மலர்ப்பொடி பரவி மணம் தோலுக்குள் சென்றபின் மீண்டும் வந்து ஒருமுறை உடல்கழுவி மீண்டுசென்று ஆடையணிவேன். அதுதான் வழக்கம்” என்றாள்.

“கொன்றைமலர் மணமா?” என்றாள் சர்மிஷ்டை. “அங்கே பன்னிரண்டு வகையான மலர்கள் உள்ளன. அவையனைத்தும் கலந்தால் எழுவது மலர்மணம்… வானிலுள்ள மலரொன்றின் மணம் அது.” சர்மிஷ்டை கரைக்குச் சென்று அவளருகே நின்று உடலுக்குக் குறுக்கே கைகளைக் கோத்து நடுங்கியபடி “என்ன மணம்?” என்றாள். “கல்யாண சௌகந்திகம் என அதை சொல்கிறார்கள். அந்த மலரின் மணத்தை நான் காவியங்களில்தான் பயின்றேன். எண்ணும் மலரின் மணத்தை தான் எனக் காட்டுவது அது. இங்கு வந்து இந்த மலர்க்குவையில் ஆடிச்செல்லும்போது அதை நானும் உணர்ந்தேன்…”

சாயை அப்பால் வந்து நின்று கைகாட்டி அழைத்தாள். “மலராடையா?” என்றாள் சர்மிஷ்டை. “அது நம்மை மறைக்குமா?” தேவயானி சிரித்து “மறைக்காது, காட்டும்… வாடி” என்றபடி கைகளைப் பற்றி அழைத்துச்சென்றாள். அவள் நடையை நோக்கியபடி உடன்சென்ற சர்மிஷ்டை அறியாமல் நின்றுவிட்டாள். “என்னடி?” என்றாள் திரும்பிநோக்கிய தேவயானி. “யானையின் நடை… கஜராஜவிராஜிதமந்தகதி” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி புன்னகைத்து “நீயும் கவிதைக்குள் வந்துவிட்டாய், வா!” என நடந்தாள். “சாயை நடப்பது புலி போலிருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “அதன் பெயரென்ன?” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை மெல்லிய குரலில் “சார்த்தூல விக்ரீடிதம்” என்றாள். “நன்று!” என்றபடி தேவயானி முன்னால் சென்றாள்.

பின்னால் சென்றபடி சர்மிஷ்டை “என்னால் மட்டும் ஏன் அப்படி  நிமிர்ந்து நடக்கமுடியவில்லை? என் உடலை பற்றியிருப்பது எது?” என்றாள். தேவயானி “உடல் என்பது உள்ளிருப்பதன் வெளிப்பாடு. உன்னுள் உறைவது அவ்வாறு தன்னை காட்சியாக்கவே விழைகிறது” என்றாள். “நீ நடப்பதும் அழகுதான். அதை மயில்நடனம் என்கிறார்கள்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை பாறைமேல் மெல்ல காலெடுத்துவைத்து மலர்க்காட்டை அடைந்தாள்.

தேவயானி ஓடிச்சென்று சாயையிடமிருந்து மலராடை ஒன்றை வாங்கி இடையில் கட்டிக்கொண்டாள். சாயை “இதோ” என ஒரு மலராடையை சர்மிஷ்டையிடம் அளித்தாள். அதை வாங்கி அணியும்போது சர்மிஷ்டைக்கு சிரிப்பு வந்தது. “என்ன சிரிப்பு?” என்றாள் சாயை. “இதை ஆடை என்று எப்படி சொல்வது?” என்றாள். “இந்த ஆடையைக் கண்டு காற்று ஏமாந்துபோகும். இதை அதனால் மேலும் விலக்கமுடியாது” என்றாள் தேவயானி. “நாம் மலர்களுக்குள் புகுவதற்கு இதுவே வழி. அருவிக்குமுன் முழுமையாக நம்மை அளிப்பதுபோலத்தான் இதுவும்” என்றாள் சாயை.

மலராடைகளுடன் அவர்கள் மலர்க்காட்டுக்குள் நுழைந்தனர். தாழ்ந்த கிளைகள் மலர்செறிந்து ஆட தரையெங்கும் உதிர்ந்த மலர்கள் கம்பளமென பரவியிருக்க காற்றலைகளில் மலர்மழை பொழிந்துகொண்டெ இருக்க அது மலர்களால் ஆன அருவியென்றே தோன்றியது. அவள் கிளைகளை கைகளால் பற்றி ஒதுக்கி ஒதுக்கி நடந்தாள். எதிர்பாராதபடி அவளை தேவயானி பிடித்து தள்ள தடுமாறி பூஞ்சருகு மெத்தையில் விழுந்தாள். அவள்மேல் தேவயானியை சாயை பிடித்து தள்ளினாள். இருவரும் புரண்டு எழுந்தபோது உடலெங்கும் மகரந்தமும் தேனும் பரவியிருந்தன.

அதன்மேல் ஒட்டிய மலரிதழ்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் அவளை கால்தட்டி புரளவிட்டாள் சாயை. தேவயானியும் சர்மிஷ்டையும் சேர்ந்து அவளைப் பிடித்து இழுத்துவந்து பூஞ்சருகுமேல் உருட்டினர். கால்களைப்பற்றி இழுத்தனர். சாயை கூச்சலிட்டு நகைத்து சருகுகளை அள்ளி அவர்கள்மேல் வீசினாள். கால்பின்னி மல்லாந்து விழுந்த சர்மிஷ்டைமேல் உதிர்ந்த மலர்களை அள்ளி அள்ளிக் குவித்து எழாதபடி மேலும் மேலும் போட்டாள். சிரித்து மூச்சுத்திணறி எழுந்து அமர்ந்தபோதுதான் சர்மிஷ்டை ஆண்குரல் ஒன்றை கேட்டாள். “யார்?” என அவள் திகைப்புடன் கேட்க தேவயானியும் அதை கேட்டுவிட்டாள்.

தேவயானியும் சாயையும் “உடைகள் எங்கே? உடைகள்?” என்று கூவியபடி ஓடினர். அவர்களை நோக்கி சேடி ஓடிவர தேவயானி அவள் கையிலிருந்த ஆடையைப் பறித்து விரைந்து அணிந்து மேலாடையால் தன் உடலை மூடிக்கொண்டாள். எழுந்து செயலற்றவள்போல நின்ற சர்மிஷ்டை நிலையுணர்ந்து உடல்பதற ஓடிச்சென்றபோது சாயை தன் ஆடையை அணிந்தபின் எஞ்சியிருந்த தேவயானியின் ஆடையை எடுத்து அவளை நோக்கி வீசினாள். குனிந்து அந்த ஆடையை கையில் எடுத்தபின் திரும்பி தேவயானியை நோக்கிய சர்மிஷ்டை தன்னுள் முற்றிலும் அறியாத ஒன்று பொங்கி எழுவதை உணர்ந்தாள்.

தேவயானியின் ஆடையைச் சுருட்டி அப்பால் வீசிவிட்டு வெறியுடன் பாய்ந்துசென்று தேவயானி அணிந்திருந்த தன் ஆடையைப் பற்றி “கழற்றுடி என் ஆடையை…” என்று கூச்சலிட்டாள். அவள் முகம் சுருங்கி பற்கள் சீறித்தெரிந்தன. “என்னடி இது…? இரு” என்று தேவயானி பதற “என் ஆடையைக் கழற்று… என் ஆடையைக் கழற்று….” என்று  சர்மிஷ்டை பூனைபோன்ற குரலில் கூவினாள். “உன் ஆடைதான்… இரு. அதை இப்போதைக்கு அணிந்துகொள். அக்குரல் எவர் என பார்ப்போம்” என்றாள் தேவயானி சினத்தை அடக்கியபடி. “உனக்கு பேரரசியின் ஆடைதான் வேண்டும் அல்லவா? இதை அணியத்தான் இந்த நாடகமா?” என்றாள் சர்மிஷ்டை.

“சொல் எண்ணிப்பேசு… நீ இளவரசியாக இருப்பது எந்தையின் அருளால்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை ஆடையைப்பிடித்து இழுத்தபடி “வாயை மூடடி… நீ யார்? என் அரசில் அண்டிவாழும் அந்தணனின் மகள். என் தந்தையின் கையிலிருந்து கொடைபெற்று உண்ணுபவள். என் கருணையால் உன்னை நான் நிகரெனக் கருதினால் நீ பேரரசியாக நினைக்கிறாயா? அரசியின் ஆடையை அணிந்துகொண்டால் மிச்சில் பெற்று உண்ணும் குலத்தவள் அரசியாக ஆகிவிடுவாயா? நெய்க்கரண்டி ஏந்தும் கைக்கு செங்கோல் வேண்டுமா என்ன? கழற்று இப்போதே, அந்த ஆடையை… இல்லையேல் இதன்பொருட்டே உன்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்காலடிக்க ஆணையிடுவேன்” என்றாள் சர்மிஷ்டை.

அவள் அணுக்கச்சேடி அஞ்சியவள்போல பின்னடைந்துவிட்டிருந்தாள். தேவயானி சில கணங்கள் சுருங்கிய கண்களுடன் நோக்கிவிட்டு ஆடையை கழற்றினாள். அதை எடுத்து சர்மிஷ்டை அணிந்தாள். எடைமிக்க இரும்புக்கம்பியை வளைத்து அணிவதைப்போல பற்களைக் கடித்து கழுத்துநரம்புகள் புடைக்க ஆடையை சுழற்றிக் கட்டினாள். அவள் பற்கள் அரைபடும் ஒலி அவள் காதிலேயே கேட்டது. தேவயானி சீரான நடையுடன் தன் ஆடையை நோக்கி செல்வதைக்கண்டு மீண்டும் எரிந்தெழுந்து “உன் திட்டம் என்ன என்று அறிந்துதான் வந்தேன்… என்னைக் கொன்றுவிடவே நீ அழைத்து வந்தாய்… சென்றதுமே தந்தையிடம் சொல்கிறேன். உன்னையும் உன் கிழத்தந்தையையும் நாடுகடத்த ஆணையிடச் செய்கிறேன்” என்றாள்.

“இளவரசி…” என சாயை அழைத்து ஏதோ சொல்லவந்தாள். அவள் குரல் அடைத்திருந்தது. “வாயைமூடு, கீழ்மகளே! நீ யார்? என் அரண்மனை மிச்சிலுண்ணும் அடிமை. நீ என்னை ஒருமையில் அழைக்கிறாயா? எனக்கு நீ ஆணையிடுகிறாயா? உன்னை குதிரைச்சவுக்கால் அடிக்க ஆணையிடுகிறேன்…” என்று கையை ஓங்கி அடிக்கப்போனபடி கத்தினாள் சர்மிஷ்டை. “உன் ஆடை கிடைத்ததல்லவா? கிளம்பு” என்றாள் தேவயானி. “ஆடை கிடைத்தது. ஆனால் இந்நாட்களில் என் அணிகள் எத்தனை காணாமலாகியிருக்கின்றன என்று நான் அறிவேன்… அரசப்படைகளை அழைத்து உங்கள் குடில்களை நோக்கச்சொல்கிறேன்” என்றாள் சர்மிஷ்டை.

தன் ஆடையை எடுக்கக் குனிந்த தேவயானி ஆத்திரத்துடன் திரும்பி “சீ, கீழ்பிறப்பென்று காட்டிவிட்டாய் நீ” என்றாள். பின்னர் என்ன நிகழ்ந்ததென்று சர்மிஷ்டை உணரவில்லை. அடிபட்ட விலங்கென உறுமியபடி பாய்ந்து தலையால் முட்டி தேவயானியை தள்ளினாள். அவள் தடுமாறி பின்னால் நகர்ந்து விழுந்து எழுவதற்குள் எவராலோ பற்றி இழுக்கப்பட்டவள்போல தடுமாறி மல்லாந்து விழுந்தாள். “அரசி” எனக்கூவியபடி சாயையும் அவளருகே ஓட இருவரும் என்னவென்றறியாமல் கைகால்கள் பதற விழுந்து எழமுயன்று மீண்டும் விழுந்தனர்.

அவர்கள் காலடியில் வண்ணவிரிப்பு போன்ற மலர்ச்சருகுப் பரப்பு இழுபட்டுக் குவிந்து புதைந்து அவர்கள் அதில் அமிழ்ந்துகொண்டே இருப்பதை சர்மிஷ்டை திகைப்புடன் நோக்கி நின்றாள். “பள்ளம், அங்கு ஒரு பள்ளம் இருக்கிறது, இளவரசி” என்றாள் சேடி. சர்மிஷ்டை “வாடி” என தன் புரவியை நோக்கி ஓடினாள். சேடி “அவர்கள் உள்ளே விழுந்துவிட்டார்கள், இளவரசி” என்று மூச்சுக்குரலில் கூவினாள். “வாடி…!” என்று சர்மிஷ்டை புரவியை அணுகி அதன்மேல் ஏறினாள். “அவர்களால் ஏறிவர முடியாது… மலர்க்குவை உள்ளே சரிந்துகொண்டே இருக்கும்” என்றாள் சேடி. “வீரர்களை அனுப்புவோம்…” என்றபடி சர்மிஷ்டை புரவியை தட்டினாள். அது பாய்ந்து குளம்படிகள் எதிரொலிக்க கிளைகளுக்குள் புகுந்தது.

சேடி திரும்பிப்பார்த்தாள். சாயையின் குரல் மிக ஆழத்திலென கேட்டது. “வாடி!” என சர்மிஷ்டை அழைக்கும் ஓசை. அவளும் புரவியில் ஏறிக்கொண்டு சர்மிஷ்டையைத் தொடர்ந்து சென்றாள்.

tigerகாட்டுப்பாதையில் நாய்களின் துணையில்லாது செல்வதென்பது வழிபிறழச்செய்யும் என்பதை யயாதி முன்பும் பலமுறை அறிந்திருந்தான். ஆயினும் ஹிரண்யபுரியை அணுகும் பாதையில் ஓர் இடத்தில் சிறிய ஊடுவழி ஒன்று காட்டுக்குள் செல்வதைக் கண்டதும் உடன்வந்த படைத்தலைவன் பார்க்கவனிடம் “இவ்வழி செல்லலாம்” என்றான். பார்க்கவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். “ஆம், சுற்றுப்பாதையாகவே இருக்கமுடியும். ஆனால் மையச்சாலை வழியாக நகருக்குள் நுழைவது எளிதல்ல. நம்மை அறிந்த வணிகர் எவரேனும் இருக்கக்கூடும். இது வேட்டைப்பாதை என்று நினைக்கிறேன்… இதன் கிளைகளில் ஒன்று கோட்டைக்குள் சிறுவாயில் ஒன்றினூடாக நுழையும்” என்றபடி புரவியைத் திருப்பி தழைகிளைகளின் இலைச்செறிவுக்குள் நுழைந்து மூழ்கினான்.

காட்டுக்குள் நுழைந்ததுமே யயாதி விடுதலையை உணர்ந்தான். “இதுவரை கண்களையே உணர்ந்துகொண்டிருந்தேன். எவரும் என்னை அடையாளம் காணவில்லை. ஆனால் என் ஏதோ ஒரு துளியை அனைவரும் அறிந்துகொண்டிருந்தனர்” என்றான். “அத்துளியில் இருந்து என்னை முழுதறிய அவர்களுக்கு சற்றுநேரத் தனிமையே போதுமானது. இங்கே விழிகள் இல்லை என்பதே என்னை வெட்டவெளிமுன் நிறுத்துகிறது.” முதுவேனிலில் பெய்த மழையால் காடு பசுமை சூடியிருந்தது.  “கொன்றைப்பெருக்கு…” என்றான் யயாதி. “கொன்றைக்கு தானிருக்கும் இடத்தை முழுதும் நிறைக்கவேண்டுமென்ற வீம்பு உண்டு.”

மலர்களையும் பறவைகளையும் நோக்கியபடி சென்றபோது வழிதவறிவிட்டதை உணர மிகவும் பிந்திவிட்டது. ஒரு யானை முதுகு முழுக்க கொன்றைமலர்களை அணிப்போர்வையெனக் கொண்டு புதர்களுக்குள் இருந்து அவர்கள் முன் எழுந்தது. துதிநுனி நீட்டி மணம் பெற்றது.  யயாதி புரவியைப் பற்றி அசைவிழக்கச்செய்து காத்து நின்றான். யானை மெல்ல வயிற்றுக்குள் பிளிறியபின் பின்காலெடுத்து வைத்து பச்சை இருளுக்குள் அமிழ்ந்தது. “இது வேட்டைப்பாதை அல்ல, யானைவழி” என்றான் பார்க்கவன். “ஆம்” என்றான் யயாதி.

“மீண்டும் பழைய வழியிலேயே செல்லவேண்டியதுதான்” என்றான் பார்க்கவன். “அது காட்டிடம் தோற்பது… பார்ப்போம், அவள் நம்மிடம் விளையாடுகிறாள்” என்ற யயாதி புரவியைத் திருப்பி பிறிதொரு தடம் தேர்ந்தான். அவர்கள் கிளம்பி வந்ததே பார்க்கவனுக்கு பிடிக்கவில்லை. அவனிடம் காட்டுக்குள் புகுவதுவரை ஹிரண்யபுரிக்குள் செல்வதாக சொல்லியிருக்கவில்லை. சொன்னதும் திகைத்து புரவிக்கடிவாளத்தை இழுத்து நின்றுவிட்டான். “அசுரர்களுக்கு நம் நெறிகள் ஏதும் இல்லை. அவர்கள் உங்களை சிறைப்படுத்திவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டதென்றே பொருள்” என்றான். “நாம் அவர்களின் குடியில் பெண்கொள்ளப்போகிறோம். அவர்களின் குருதியை நம்புவோம் என்றால் நெறிகளை ஏன் நம்பக்கூடாது?” என்றான் யயாதி.

பார்க்கவன் அந்த மணவுறவையே உள்ளூர ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவன் சொல்லெடுக்காமல் வந்தான். “அவளை ஒருமுறை பார்க்கவேண்டும். அழகியல்ல என்று அறிவேன். ஆனால் அவள் என் உளம்நிறைபவள் என்று எவ்வண்ணமோ என் ஆழம் சொல்கிறது” என்றான் யயாதி. “அதைவிட ஒன்றுண்டு. அவள் என் அரசியான பின்னர் அவளை நான் தேடிவந்ததை சொல்லும்போது அவள் முகம் மலர்வதை எண்ணிக்கொள்கிறேன். சிறிய வீரச்செயல்கள் இன்றி ஆணும் பெண்ணும் அணுகக்கூடாது.” பார்க்கவன் “நம்மை எவராவது அறிந்துவிடக்கூடும்” என்றான். “இவ்வண்ணம் குருநாட்டரசன் எதிரி மண்ணுக்குள் தனியாக நுழைவான் என அவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். அதனாலேயே அவர்களால் நம்மை அறியமுடியாது. தேடாத எதையும் மானுடர் அறிவதில்லை” என்றான் யயாதி.

விந்தையான மணம் ஒன்று வந்தது. “கொன்றை” என்றான் யயாதி. “வேங்கை அல்லவா?” என்றான் பார்க்கவன். “ஆம், அப்படியும் தோன்றுகிறது. செண்பகம் என்றும் தெரிகிறது” என்ற யயாதி “தேவமலரா என்ன? எண்ணும் மணத்தை காட்டுகிறதே” என்றான்.  “அங்கே ஒரு மலர்க்காடு உள்ளது. அங்கிருந்து எழுகிறது அந்த மணம்” என்றான் பார்க்கவன். “அங்கே அத்தனை மலர்களும் உள்ளன. காற்றுவீசும் திசைக்கேற்ப மணம் மாறுபடுகிறது.” யயாதி புன்னகையுடன் “நான் அதை கல்யாண சௌகந்திகம் என்று சொல்லவே விழைவேன். சூதர்கள் நாளை பாடுவதற்கு சில அரிய நிகழ்வுகள் அமையட்டுமே!” என்றான்.

“செறிந்த காடு… அதைக் கடந்து அப்பால் செல்லமுடியாது” என்றான் பார்க்கவன் “அப்பால் எங்கோ ஓர் அருவி உள்ளது” என்று யயாதி சொன்னான். “அது காற்றின் ஓசை” என்று சொன்ன பார்க்கவன் “இல்லை, அருவிதான். நீராவி மணம் எழுகிறது” என்றான். உக்கில்பறவை ஒன்று அவர்களுக்குக் குறுக்காக புதர்கள் நடுவே ஓடியது. “இதற்கு மணமறியும் உணர்விருந்தால் பித்து பிடித்திருக்கும்” என்றான் யயாதி. “முதுவேனிலில் விலங்குகள் மதம்கொள்கின்றன… கரடியும் யானையும் காட்டெருதும் கட்டுகளை இழக்கின்றன” என்றான் பார்க்கவன். “கந்தர்வர்கள் அவற்றின்மேல் ஏறிக்கொள்கிறார்கள் என்பார்கள் சூதர்கள்.”

“விந்தையான நிலம். இங்கே ஒரு ஊர் இருந்திருக்கக்கூடும். விரைவில் வளரும் மரங்கள் மட்டுமே உள்ளன” என்றான் பார்க்கவன். “இரவில் நிலவில் இங்கு வந்தால் நாமும் நிலையழிந்துவிடக்கூடும்” என்று சொன்னபடி புரவியில் வளைந்து மரக்கிளை ஒன்றை கடந்துசென்ற யயாதி சிரிப்பொலியை கேட்டான். “பெண்கள்” என்றான். பார்க்கவன் “காட்டணங்குகளா?” என்றான் அச்சத்துடன். “மூடா, இது பெண்களின் நகைப்பொலி…” என்ற யயாதி உரக்க “யாரங்கே?” என்றான். சிரிப்பொலி நின்றது. “யாரங்கே?” என்று அவன் மீண்டும் கேட்டான். ஓசையெழவில்லை.

“காட்டணங்குகளேதான்” என்று பார்க்கவன் புரவியை இழுத்து நின்றுவிட்டான். “அவர்கள் நம் குரல்கேட்டு அஞ்சிவிட்டனர். போய் பார்ப்போம்” என்றபடி யயாதி முன்னால் சென்றான். “மகளிர் நீராடும் இடம்போலும்” என்றபடி பார்க்கவன் தொடர்ந்தான். “ஆம், இத்தனை விலகிய இடத்தில் இப்படி ஒரு மலர்க்காட்டில் நீராட வருவதென்றால் அவர்கள் அரசகுடியினரே. அதில் அவளும் இருக்கக்கூடும்” என்றான் யயாதி. “சர்மிஷ்டை… அழகிய பெயர். அவளிடம் அதைத்தான் முதலில் சொல்லப்போகிறேன்.”

அப்பால் மீண்டும் பெண்களின் குரல்கள் கேட்டன. பூசல்போல உரத்த பேச்சுக்கள். “எவரோ அவர்களுக்கு இடர் அளிக்கிறார்கள்” என்று யயாதி சொன்னான். “வா, சென்று பார்ப்போம்!” அவர்கள் மலர்மரங்களினூடாக குனிந்தும் நெளிந்தும் சென்றனர். புரவிகள் விலகிச்செல்லும் ஓசை கேட்டது. பின்னர் அமைதி. “அங்கே என்ன நிகழ்கிறது? சென்றுவிட்டார்களா?” என்றான் பார்க்கவன். யயாதி பேசாமல் மரங்களினூடாக சென்றுகொண்டே இருந்தான்.

முந்தைய கட்டுரைஅரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்
அடுத்த கட்டுரைபாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்