அ.கா.பெருமாள், அசோகமித்திரன் -கடிதங்கள்

asokamithran

அன்புள்ள ஜெ

அ.கா.பெருமாள் அவர்களைப்பற்றி நீங்கள் தொகுத்தளித்திருக்கும் எழுத்துக்களைப் பார்த்தேன். இருபதாண்டுகளாக அவரைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் என தெரிகிறது. திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறீர்கள்.

நல்லது. ஆனால் காலம் மிகவும் கெட்டுக் கிடக்கிறது. கொஞ்சநாள் கழிந்ததும் நீங்கள் உண்மையில் அ.கா.பெருமாள் அவர்களை அவமதிக்கத்தான் செய்திருக்கிறீர்கள், அவரை வைத்து பணமும் புகழும் சேர்த்துவிட்டீர்கள் என ஒரு கும்பல் கிளம்பிவரும். ஆகவே பணம் புகழ் எல்லாம் சேர்க்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை கைவசம் ரெடியாக வைத்திருங்கள்

சங்கர்

***

அன்புள்ள சங்கர்

உண்மை. என் கட்டுரையில் அசோகமித்திரனைப்பற்றி 56 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என வந்த வரிக்கு ஒன்றல்ல நால்வர் அதை குறிப்ப்பிட்டு நான்  அக்கட்டுரைகளுக்காக மொத்தம் என்ன ஊதியம் பெற்றேன் என்பதை தெரிவித்திருக்கவேண்டும் என எழுதியிருந்தனர்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

அ.மி பற்றி நீங்கள் விகடனில் எழுதிய குறிப்பு வாசித்தேன். அ.மியின் இயல்பு, அவருடைய இலக்கிய இடம், அவர் அடுத்த தலைமுறைமேல் செலுத்திய செல்வாக்கு மூன்றுமே அக்கட்டுரையில் சுருக்கமாக வெளிப்பட்டிருந்தது.

நீங்கள் உங்கள் தளத்தில் எழுதிய குறிப்பு நீங்கள் சொன்னவற்றின் விரிவான பின்னணியைச் சுட்டிக்காட்டியது. குறிப்பாக கவிஞர் நெப்போலியன் தொகுத்து அளித்த அ.மி பேட்டிகளின் தொகுப்பு இவர்கள் சொல்லும் அ.மியை விட சம்பந்தமே இல்லாத ஒரு அ,மியை காட்டியது. அவர் கடுமையாக வாழ்க்கையிலே போராடியவராக இருக்கிறார்.

ஆனால் ஓர் ஐயம், எண்பதுகளில் அ.மி இலக்கியத்தளத்திலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார் என நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஆச்சரியமளிக்கிறது.

சாரங்கன்

***

அன்புள்ள சாரங்கன்,

அன்றைய விவாதங்களை இன்று நோக்கினால் எளிதில் புரிவதே இது. அன்றைய இலக்கியக் கருத்தியல் மையங்கள் நான்கு. சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட்சாமிநாதன், கைலாசபதி –சிவத்தம்பி. இந்நான்கு முனைகளுமே அசோகமித்திரனை நிராகரித்தவை

பிரமிள், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் அசோகமித்திரனை முழுமுற்றாக நிராகரித்தார்கள். அவரது எழுத்து வெறும் அன்றாடச் சித்தரிப்பு, எந்திரத்தனமானது, உள்ளொளி இல்லாதது என்பது அவர்களின் மதிப்பீடு. சுந்தர ராமசாமி அன்றாட வாழ்க்கையைச் சொல்ல மொழியை கணக்காகப் பயன்படுத்தியவர் என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டார். இடதுசாரிகள் அவரை பெரிதாகக் கருத்தில் கொள்ளவில்லை= அவர் ஃபோர்டு நிறுவன  நிதி பெற்று அமெரிக்கா சென்றுவந்தது காரணம்.

அதோடு அ.மி அன்று அதிகமும் வணிக இதழ்களில் எழுதினார். வணிக இதழ்களுக்காக வக்காலத்து வாங்கி கட்டுரையும் எழுதினார் [வெங்கட் சாமிநாதனை கடுமையாக கண்டித்து அ.மி எழுதிய ‘அழவேண்டாம், வாயைமூடிக்கொண்டிருந்தால் போதும்’ என்னும் கட்டுரை சாவியை நியாயப்படுத்தியமையால் விவாதமாக ஆகியது] அன்றைய சிற்றிதழ்ச் சூழலில் இருந்த தீவிரம் வணிக இதழ்களில் எழுதிய அனைவரையுமே நிராகரிக்கும் போக்கு கொண்டிருந்தது. ஜெயகாந்தன், சுஜாதா அனைவருமே முழுமையாக நிராகரிக்கப்பட்டார்கள்.

வெ.சா, பிரமிள், சு.ரா வழிவந்த அனைவருமே அ.மியை நிராகரித்தனர். வேதசகாயகுமார் அவரது அஞ்சலி உரையில்தான் அ.மியைப்பற்றி தான் எழுதிய கடுமையான நிராகரிப்புக் கட்டுரைகளை குறிப்பிட்டு தன் கோணம் சற்று மாறியிருப்பதைச் சொன்னார். ஆனால் அஞ்சலிக்கூட்டம் ஆகையால் கடுமையாகச் சொல்ல விரும்பவில்லை என்றும் சேர்த்துக்கொண்டார். இதுதான் அன்றைய சூழல்..

அச்சூழலில்தான் அதற்கும் அடுத்த தலைமுறையாகிய நான் வந்தேன். சு.ராவின் மாணவனாக. ஆனால் அசோகமித்திரனை முதன்மைப் படைப்பாளியாக தொடர்ந்து முன்னிறுத்தினேன்.  விரிவாக எழுதினேன், விவாதித்தேன். அவருக்காக விமர்சன மலர் வெளியிட்டேன். இன்று பேசிக்கொண்டிருக்கும் பலர் அன்றைய சிற்றிதழ்ச் சூழலுக்குள் இல்லை. மட்டுமல்ல பலர், அ.மியை தாங்களும் சர்வசாதாரணமாகவே மதிப்பிட்டனர். இன்று அவரது கதைகளாக புகழ்பெற்றுள்ள பலவற்றின் மீது இருக்கும் வாசிப்பு நான் என் வாசிப்பினூடாக உருவாக்கி எடுத்த மறுவாசிப்பு என்று பதிவு செய்யத்தான் வேண்டும். அன்று அவை வெறுமே நடுத்தரவர்க்க வாழ்க்கைச் சித்திரங்கள் என்று மட்டுமே கருதப்பட்டன.

ஆனால் தனிப்பட்ட முறையில் நான் வெங்கட் சாமிநாதன், பிரமிள் கொண்டிருந்த இலக்கிய அழகியலையே ஏற்றுக்கொண்டேன், கொள்கிறேன். இலக்கியம் தன்னிச்சையான மொழிப் பெருக்கை உருவாக்கும் பித்துநிலையின் விளைவு என நினைக்கிறேன். மெட்டபிஸிக்கலான ஒரு முழுமை நோக்கு இல்லாத எழுத்து குறையுடையது என கருதுகிறேன். ஆகவேதான் அ.மியின் நாவல்களை நான் முன்னிறுத்தவில்லை. சிறுகதைகளை மட்டுமே முன்வைக்கிறேன். அவற்றையும் நவீனத்துவத்தின் முகங்களாக மட்டுமே குறிப்பிடுகிறேன். இதைப் பற்றியெல்லாம் விரிவாகவே எழுதிவிட்டேன்.

பொதுவாக எழுத்தாளர்கள் அடுத்தடுத்த தலைமுறையினரால் மீள்வாசிப்பு செய்வதும் மீண்டெழுவதும் நிகழ்ந்துகொண்டிருப்பதே. ப.சிங்காரம் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எல்லாம் அப்படி மீண்டும் வந்தார்கள்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஒளிர்வோர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்