அ.மி – கடிதங்கள்

aso

ஜெ,

அசோகமித்திரன் மறைந்தபோது நீங்கள் சொன்ன ஓர் உணர்வுபூர்வமான பேச்சின் எதிர்வினையாக வந்த செய்திகளைக் கேட்டு நானும் ஓர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் கடுமையாக வசைபாடி உங்களுக்கு ஓரு கடிதம் எழுதினேன்

ஆனால் சமீபத்தில் அசோகமித்திரன் பேட்டி ஒன்றில் இந்த வரிகளை வாசித்தேன்.

உண்மையில் பல விஷயங்களுக்கு நான் பொறுப்பாளியே அல்ல. வேறு பலவற்றைச் செய்துதான் நான் பிழைக்க வேண்டியிருந்தது. நான் சம்பந்தப்பட்டவரை தரம் இருக்க வேண்டும், கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் பலமுறை அதில் தோற்றுப்போயிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் வாழ்க்கையில் பல நிர்ப்பந்தங்கள் இருந்தன.

வேலைக்காக டிரைவிங் கற்றுக்கொண்டு லைசன்ஸ் எடுத்ததை, வேலைசெய்ததை எல்லாம் சொல்கிறார். சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டதைச் சொல்கிறார். வேலைதேடி அலைந்து சிறுமைகொண்டதை, எவருமே உதவிசெய்யாததை எல்லாம் பேட்டிகளில் சொல்கிறார்.பல்வேறு பேட்டிகளில் பலசெய்திகளைச் சொல்லியிருக்கிறார். அவர் எழுத்தின்மூலம் வசதியாக வாழ்ந்ததாக இவர்கள் உருவாக்கும் செய்திகளுக்கும் சம்பந்தமே இல்லை. ஃபேஸ்புக்கிலும் பலர் எழுதியிருக்கிறார்கள். சில கட்டிங்குகளை பாருங்கள்.

இப்போது நான் குற்றவுணர்ச்சியாக உணர்கிறேன். உங்கள் கடைசிக் கட்டுரையை வாசித்தேன். அதில் நீங்களே அவர் அளித்த பேட்டிகளை மட்டும் வாசிக்கச் சொல்லியிருக்கிறீர்கள். அதிலுள்ள முக்கியமான கேள்வி ஒன்றை இப்போதுதான் வாசித்தேன். பெரியவர் இங்கேதான் இத்தனைகாலம் வாழ்ந்திருக்கிறார். நீங்கள் 50 கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இப்போது அவருடைய நண்பர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் அவருக்காக ஒரு நிகழ்ச்சியாவது ஏற்பாடு செய்தார்களா? அவரைப்பற்றிஎழுதினார்களா? அவருக்காக இரண்டு மலர்கள் போட்டதாக சொல்கிறீர்கள், இவர்கள் ஏதாவது செய்தார்களா? பலர் இதழியலில் செல்வாக்கான பதவிகளில் இருந்திருக்கிறார்கள்.

வருத்தம்தான் மிஞ்சுகிறது

கோபிநாத் மகாதேவன்

***

1

அன்புள்ள கோபி

உங்களைப்போல 86 பேர் வசைபாடியிருந்தனர். இணையத்தில் நக்கல்கள் கிண்டல்கள் சிரிப்புகள். தமிழின் தலைசிறந்த மேதை ஒருவரின் இறப்பை ஜெயமோகனை கவிழ்ப்பதற்கான வாய்ப்பாக கருதி ஒருவகைக் கொண்டாட்டமாக ஆக்கிவிட்ட அவலம் நிகழ்ந்தது. அதில் பங்கெடுக்கலாகாது என்பதனால் விலகிக்கொண்டேன்.

அவருக்கு பணம் அள்ளியள்ளிக் கொடுக்கப்பட்டது என அயோக்கியர்கள் இன்றைக்குச் சொல்கிறார்கள். அந்தக்காலகட்டத்தில்தான் பையனுக்கு பள்ளிப்படிப்புக்கு அக்னிபுத்திரன் என்ற [அதி தீவிரமான பார்ப்பனிய எதிர்ப்பாளரான] கவிஞர் பண உதவிசெய்தார் என அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். தான் சந்தித்த இழிவுகள் கஷ்டங்கள் பற்றி அவர் எழுதிய நூற்றுக்கணக்கான வரிகள் தமிழில் பதிவாகியிருக்கின்றன. வாழ்ந்தபோது அவரை பொருட்படுத்தாமல் இன்று கூச்சலிடும் கும்பலிடம் அதைப்பற்றி என்ன விவாதிப்பது?

இனி இந்தத் தளத்தில் எதையும் பேசவேண்டாம் என நினைக்கிறேன். இந்தப்பேச்சே அவரைப்பற்றி எண்ணமுடியாதபடி  செய்கிறது. அவருடைய புனைவுகள் இங்குள்ளன. அவற்றைப்பற்றிப் பேசுவோம்.

ஒருபக்கம் அவரை ஒருசாரார் வெறும் மைலாப்பூர் மாமாதான் என்றார்கள். மறுபக்கம் ஆமாமாம், அவர் எங்களைப்போல ஒரு மாமாவேதான் என்று இவர்கள் கொண்டாட்டமாக சொன்னார்கள். வெறும் ஒரு மாமாவாக அவரை நிறுவிவிட்டார்கள்

என் வருத்தம் அவருக்காக சென்னை, கோவை, மதுரையில் மூன்று அஞ்சலிக்கூட்டங்களை பிறமொழி எழுத்தாளர்களை பங்கெடுக்கவைத்து ஏற்பாடு செய்திருந்தோம். அவரை வைத்து நான் பணமும் புகழும் சம்பாதிப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.. அனைத்தையும் ரத்துசெய்தோம். சரி, எழுத்தாளனுக்கு இறப்பில்லை. எனக்கு இன்னும் சிலகாலம், என்வழியாக அவரை அறிந்தவர்களுக்கு மேலும் நீண்டகாலம்.

அவருக்கு ஞானபீடம் கிடைத்திருக்கவேண்டும். அது அவருக்கு பெரிய விஷயம் அல்ல. கடைசியில் அதையெல்லாம் அவர் கடந்துவிட்டார். எனக்கு என் மூச்சுவிடும் செயல்மட்டுமே ஒரே அக்கறை என ஒரு குறிப்பை எனக்கு எழுதினார்.  ஆனால் இந்தியமொழிகளின் மிக முதிர்ந்த நவீனத்துவ எழுத்து தமிழில் நிகழ்ந்தது என்பதற்கான சான்றாக அது இருந்திருக்கும். நமக்கு ஓர் அடையாளமாக ஆகிவிட்டிருக்கும்.

அவர் படைப்புகள் பல கல்யாணராமன் அவர்களால் நல்ல ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தமையால் அதற்கான பூர்வாங்கம் அமைந்தது. ஆனால் தமிழகத்தில் கல்வித்துறை அங்கீகாரம் அவருக்கு இருந்தாகவேண்டும் என்பது அதற்கான தேவைகளில் ஒன்று. அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் ஞானபீடம் கிடைத்தது என்றால் அதற்கு முதன்மைக்காரணம் பல்கலைகள் அவர்களுக்கு நிகழ்த்திய கருத்தரங்குகள், வெளியிட்ட ஆய்வுமலர்கள்.

2

அதற்காக நான் தொடர்ந்து முயன்றேன். அது பல நண்பர்களுக்குத்தெரியும். பலர் உதவிகளும் செய்திருக்கிறார்கள். எதுவுமே நிகழவில்லை பலமுயற்சிகள் இறுதிநேரத்தில் முறியடிக்கப்பட்டன. வெளிப்படையாகவே சாதிதான் குறிப்பிடப்பட்டது. தமிழின் தலைசிறந்த மேதையை இங்குள்ள பல்கலைகள் பொருட்படுத்தவே இல்லை. சற்று அவர்கள் மனம்வைத்திருந்தால் அவர் கௌரவிக்கப்படாமல் சென்றிருக்கமாட்டார். கடைசியில் நான் அவரைப்பற்றிப் பேசியபோது இயல்பாக எழுந்து வந்தது அந்த ஆதங்கம் மட்டுமே.

அதை உடனடியாக அவருக்கு நான் தெரிவித்திருக்கக்கூடாது என இப்போது உணர்கிறேன். இப்போது பலபேட்டிகளில் மறைமுகமாக அவர் அதைக்குறிப்பிடுவதை வாசித்தபோது அவ்வாறு சொன்னதனால்தான் என தெரிகிறது. இயல்பாக சாதிசார்ந்த உணர்வுகள் இல்லாமல் தன்னை சாமானியனாக உணர்ந்த அவரை வருத்தமுறச்செய்ததே அதன் நிகரபயன் என்று இன்று தோன்றுகிறது.

ஜெ

***

அண்ணன் ஜெயமோகனுக்கு,

சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் தினமும் முக நூலிலும், இன்ஸ்டக்ராமிலும் ஒரு பதிவென – சிங்கப்பூர் தமிழ் மொழி விழா – 2017 ற்காக எனது ” வாசிப்பில் ஈர்த்த வரிகள்” தொடரினைத் தொடங்கியுள்ளேன் … ஏப்ரல் மாதம் முப்பது நாட்களும் தினம் ஒரு பதிவு. முதல் பதிவாக, எழுத்தாளர் அசோகமித்திரன் பல்வேறு கால கட்டங்களில் கொடுத்த பேட்டிகளில், நேர்காணல்களில்… என் வாசிப்பில் ஈர்த்த வரிகளைப் தேடித் தொகுத்துள்ளேன். படித்துப் பார்க்கவும்.

அன்புத் தம்பி

நெப்போலியன்

சிங்கப்பூர்.

 

https://www.facebook.com/kavingar.nepolian/posts/10210813937576568

***

அன்புள்ள ஜெமோ

அசோகமித்திரன் அவருடைய பேட்டிகளில் நீண்ட நாவல்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்திருக்கிறாரே, உங்களிடம் அதைப்பற்றிப் பேசியதுண்டா?

ஆர். மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்

விஷ்ணுபுரம் வெளிவந்தபோது அதை தமிழின் மாபெரும் இலக்கிய முயற்சி என பாராட்டி அசோகமித்திரன் இந்துவில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். நீண்ட நாவல்கள் ஏன் தேவை என்பதற்கான அழகிய சுருக்கமான விவரணை அதில் உண்டு.

ஆனால் மெல்லமெல்ல அவருடைய மனநிலை மாறத் தொடங்கியது. சுருக்கமான, நேரடியான, பூடகத்தன்மை அற்ற, மென்மையான, ஆசிரியக்கூற்று இல்லாத கதைகளை முன்னிறுத்தத் தொடங்கினார்.

தல்ஸ்தோய் கூட இறுதிக்காலத்தில் இதேபோல ஒரு மாற்றத்தை அடைந்து தன் குட்டிக்கதைகளையும் புத்துயிர்ப்பு நாவலையும் மட்டுமே முன்னிறுத்தினார். போரும் அமைதியும் நாவலை நிராகரித்தார்.

இதெல்லாம் எழுத்தாளனின் அழகியற்கொள்கையில் வரும் மாற்றமோ பரிணாமமோ அல்ல, அவரது மனநிலையில் உருவாகும் மாற்றம் அல்லது பரிணாமம். அவரைப் புரிந்துகொள்ளவே அது உதவும், அவரது கலையைப் புரிந்துகொள்வதற்கல்ல. தல்ஸ்தோய் நிராகரித்ததனால் போரும் அமைதியும் நாவலை விமர்சகர்கள் நிராகரிக்கவில்லை, அதன் இலக்கிய இடம் அழியவுமில்லை.

அசோகமித்திரன் என் பெருநாவல்களை நிராகரித்தும் கிண்டல் செய்தும் என்னிடமே சொல்லியிருக்கிறார். கடைசியில் வெண்முரசையும் அப்படிச் சொன்னார். ‘சரி, நீங்கள் வாசிப்பதெல்லாம் பெருநாவல்களைத்தானே, உங்கள் நினைவில் நிற்பவையும் அவைதானே?” என்று கேட்டேன். “தெரியலை” என்றார்

ஜெ

***

முந்தைய கட்டுரைபாறை ஓவியங்களுக்காக…
அடுத்த கட்டுரைஒளிர்பவர்கள்