அ.மி

OLYMPUS DIGITAL CAMERA

இனிய ஜெயம்,

இந்நாள் வாசித்தேன். புரிந்துக்கொள்ள முடிந்தது. உங்கள் இல்லத்தில் [ நூல் அலமாரி மேல் ] அலங்கரிக்கும் ஒரே படம் அசோகமித்திரன் அவர்களுடையது.நீங்களே சொல்வது போல, தர்க்கப் பூர்வமாக அதை வகுக்க இயலாது. ஒரு எழுத்தாளுமை மற்றொரு எழுத்தாளுமை உதிர்ந்து மொழியில்,காலத்தில் கரைவதை அந்தரங்க நிலையில் உணரும் கணம். தமிழில் ‘இதுவரை’ சொல்லப்படாத நிலை.

சரிஇதை தினசரிகள் எப்படி எதிர்கொள்கின்றன? பஜார் வழியில் தந்தி, தினமலர் தலைப்பு பதாகைகள் கண்டேன். தந்தி சசிகலாவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்ததில் நிலை கொண்டிருந்தது. தினகரனுக்க்கு சம்பள சிக்கல் மேல் ஆர்வம். தினமலருக்கு பின்நவீன துக்கம் பன்னிரண்டு வயதில் அப்பா ஆன சிறுவன் பின்னால் அது போனது. ஒரு காலக்கட்டத்து சமூகம் கண்ட உயர் செல்வம் எழுத்தாளன். அந்த சொரணை இத்தகு தினசரிகள் வசம் இருந்தால் தமிழ் சமூகம் விளங்கித் தொலைத்து விடுமே.

சொல்லால், செயலால், மூச்சாவால், சாதி கடந்த அன்பர்களின் முகநூலில் அமி பிராமணராக பிறந்த ”பாவத்துக்கு” அவருக்கு கிட்டாமல் போன ஞான பீடம் குறித்த புலம்பலுடன் அஞ்சலி.

வாசகர்களுக்கு? நேற்று ஒரு நண்பர் தொலைபேசி இருந்தார். அமி வீட்டுக்கு போவீங்கதானே என்றார்.

மாட்டேன். எழுதிக்கொண்டிருக்கும் கரங்களை முத்தமிட வேண்டுமானால் செல்வேன். ‘எழுதிய’ கரம் என்று காண அங்கே ஏதும் இல்லை. ‘வழியின் தனிமை’ பதிவு வழியே இன்று ஒரு வாசகன் அந்த எழுத்தாளரின் அந்தரங்கத் துயரை சென்று தொடுவான் எனில், இன்னும் நூறு வருடம் கழித்து வரும் வாசகனும் அவ்வாறே அந்த எழுத்தாளனின் அகத்தை தொட முடியும். ஆக எழுத்தாளனுக்கு மரணம் இல்லை. சுரா இதையே ”சொல்லில் வாழ்பவன் அன்றோ நான்” என்கிறார்.

எழுத்தாளனை புறக்கணிப்பது, அவமதிப்பது, சாதி பெருமிதமாக ஆக்குவது இதுவே ஒரு எழுத்தாளனின் மரணம். அந்த மரணத்துக்கு மட்டுமே என் துக்கம்.

மொழிதான் எழுத்தாளனின் உயிர். மொழி உள்ளளவும் எழுத்தாளன் வாழ்வான்.வாழ்வாங்கு வாழ்வான்.

கடலூர் சீனு

***

அசோகமித்ரன் சந்திப்பு

இரண்டரை வருடம் முன் ஐஐடியில் சேர்ந்த போது ’யானைடாக்டர்’ நூல் வேண்டி அரங்காவைத் தொடர்புகொண்டு, எனக்கு நண்பரானவர் பேராசிரிய நண்பர் பரத் பிகாஜி. இரண்டு வருடமும் இலக்கியம் பேச எனக்கு இனிய நண்பர். தான் புதிதாக வாங்கியுள்ள ஃப்ளாட்டிற்கு அடுத்த ஃப்ளாட்டில் தான் அசோகமித்ரன் இருப்பதாக கூறியிருந்தார். இருப்பினும் நேரில் பேசும் துணிவு இல்லை என்றார்.

இரு வாரத்தில் இந்தியாவை விட்டு கிளம்புவதால், கடந்த வெள்ளிக்கிழமை அசோகமித்ரனை சென்று பார்த்துவருவது என திட்டமிட்டோம். எதிர்பாராத வேலைகளில் பரத் சிக்கியதால் திட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

சனி இரவு அமியின் ‘நினைவோடை’ படித்துக் கொண்டிருந்தேன். ஞாயிறு முற்பகல் கூகுள் மேப்பில் 1A, 9th Cross Street, Dandeeswaram என அசோகமித்ரனின் முகவரியைத் தட்டினேன். ஐஐடியின் கிருஷ்ணா ஹாஸ்டல் கேட்டிலிருந்து நடந்து சென்றால் பதினைந்து நிமிடத்தொலைவில் இருக்கிறது என்றது.

5 நிமிடத்தில் அவரது தெருவிற்கு அருகில் சென்று சேர்கையில் பெட்ரோல் இன்றி வண்டி அணைந்து விட்டது. வேர்த்துக் கொட்ட உருட்டிக்கொண்டே 8th Cross ஐயும் 9thCross ஐயும் இணைக்கும் குறுக்குத் தெருவில் இருந்த நடுவயதுடைய ஒருவருவரிடம் அட்ரசைக் கேட்டேன். அடுத்த தெருதான் என்றார். அவரது வீட்டம்மா உள்ளிருந்து எட்டிப்பார்த்து ”யாரைப்பார்க்கணும்?” என்றார். ”ரைட்டர் அசோகமித்ரன்” என்றேன். இங்க தான் ”ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருக்கார், பைக்க வெளியவே வச்சிட்டுப் போய்ப் பாருங்க என்றார்.

காலிங் பெல் “ப்ளீஸ் ஓபன் த டோர்” என முழங்கியது. உள்ளிருந்து வந்தவருக்கும் அசோகமித்ரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் சரியாத்தான் வந்தோமா? என ஒரு குழப்பம்.

”என்ன வேண்டும்”?

அசோகமித்ரன் சார்…..

நீங்க?

அவரோட வாசகன்.

முன்னாலயே வரேன்னு சொல்லியிருந்திங்களா?

இல்ல..

இறுக்கமான பார்வையுடன் உள்ளே சென்று, ’ஒரு தம்பி உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்’ என்றார்.

பேசாமல், அப்படியே திரும்பிவிடலாமா என எண்ணிக் கொண்டிருக்கையில், திரும்பி வந்தவர் உள்ளே வாங்க என்றார்.

அறை வெளிச்சமின்றி அமைதியாக இருந்தது. உள்ளே இருந்து வேஷ்டியும், கலர் பாக்கெட் வைத்துத் தைத்த வெள்ளை முண்டா பனியனுடன் ஒரு முதியவர் மெல்லிய கூனலுடன் நடந்து வந்தார்.

அருகில் வரும் வரை அவர்தான் அசோகமித்ரன் என அடையாளம் காண இயலவில்லை. அவர் வந்ததும் உள்ளே இருந்து இரு முகங்கள் எட்டிப்பார்த்து மறைந்தன. மீண்டும் நிசப்தம்.

தப்புப்பண்ணிட்டோமோ? என மறுபடியும் எண்ணுகையில் ’உட்காருங்க’ என்றார்.

யார் நீங்க?

உங்க ரீடர்.

எதுக்கு வந்தீங்க?

சும்மா… உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு . . .

பற்களைக் கடித்தபடி கூர்ந்து நோக்கினார்.

கலக்கமாக இருந்தது..

”ஹ்ஹ்ஹேஹே’ என பரிவுடன் ஒரு நீண்ட சிரிப்பு. கலக்கம் குறைந்து, அவர்தான் அசோகமித்ரன் என்பது அப்போதுதான் உறுதியானது.

என்ன பண்றீங்க? அப்பா அம்மா என்ன பண்றாங்க? சொந்த ஊர் எல்லாம் கேட்டுக்கொண்டார்.

சரி சொல்லுங்க.. எது உங்களை இங்க அழைத்து வந்தது?

ஒரு உணர்ச்சிவேகத்தில் கிளம்பியதால் எந்த முன் தயாரிப்புமின்றி சென்றிருந்தேன். அழியாச் சுடரிலுள்ள அவரது சிறுகதைகள், அசோகமித்ரன் எழுத்துலகம் குறித்த ஜெயின் கட்டுரைகள், 18வது அட்சக் கோடு நாவல், ஒரு கட்டுரை நூல் இவ்வளவு தான் படித்திருக்கிறேன்.

என்ன சொல்லுவதெனத் தெரியவில்லை. தயக்கத்துடன் உங்க புத்தகங்கள்… இல்ல உங்க எழுத்து.. எனத் தடுமாறி.. ” 4 வருடங்கள் முன் ஜெயமோகன் தளத்தின் மூலம் உங்கள் எழுத்துக்களை அறிந்து கொண்டேன். இணையத்தில் உள்ள சில சிறுகதைகளும், ஒரு நாவலும், ”நினைவோடை” கட்டுரை நூலும் படித்திருக்கிறேன். இருவருடமாக அருகில் இருந்தும் பார்க்கத்துணிவில்லாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது இப்போது இங்கிருந்து கிளம்புவதால் எப்படியும் பார்த்துவிட வேண்டும்” என வந்தேன் என்றேன்.

”ஹ்ஹ்ஹேஹே’ என மறுபடியும் இரண்டடி தூரத்தில் இருப்பவருக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய சத்தத்தில் சிரித்துவிட்டு ஜெயமோகனைப் படிக்க ஆரம்பிச்சு என்கிட்ட வந்திங்களா?

”ஹ்ஹ்ஹேஹே’ ”நினைவோடை படிச்சிங்களா, நல்லாயிருக்கா, என்றார்.

”ரொம்ப நல்லாயிருந்தது சார்.. காநாசு சுரா ஜெமோ என்ற ரசனை விமரிசக வரிசையின் அடிப்படையில் வாசிப்புப் பயிலத் தொடங்கிய எனக்கு நீங்க காட்டிய காநாசுவின் வலி மிக்க இலக்கிய வாழ்க்கை நான் அறியாதது” என்றேன்.

”தாமரையில் எழுதியதால் அவர் என்னையும் அவரது எதிரிகளின் கோஷ்டியைச் சேர்ந்தவன் என்றே எண்ணிவந்தார். அதனால் ஆரம்பத்தில் எல்லாம் ரொம்பப் பேச மாட்டார். பின்னர் என் நூல்களைப் படித்தபின் ரொம்பப் பிரியமாயிருந்தார்” என்றார்.

குடும்பத்துடன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த அவரது மகனிடம் இவர் ஐஐடியில் இருந்து வருகிறார் என அறிமுகப்படுத்தினார். தற்போது பள்ளியில் உள்ள, அவரது பேத்தி ஐஐடியில் பயோலஜி படிக்கவிரும்புவதாகத் தெரிவித்தார். அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து அவர் மகன் சற்று முக மலர்வுடன் ஐஐடியில் பயோடெக் துறை குறித்து கேட்டறிந்துகொண்டு வெளியே கிளம்பினார்.

திரும்பிப் பார்க்கையில் அ.மித்ரன் கையில் BIO-BC28 என்ற ஒரு மருந்து டப்பா. ”பயோடெக் படிக்கிறாயே, இது என்ன தெரியுமா?” 12 Schussler cell salts என்றிருந்தது. இந்த உப்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படும் என்று புன்னகையுடன்திருப்பிக்கொடுத்துவிட்டேன்.

”இது வயசானவங்களுக்கு தேவையான உப்பு சத்தக் கொடுக்கும்னு சொல்றாங்க. பயோனு போட்டிருக்கிறதால உன்னிடம் கேட்டேன்” என்றார். சரி வந்த விசயத்த பேசுவோம்.. ”உங்களுக்கு அப்ப ’நினைவோடை’ பிடிச்சிருக்கு இல்லையா? கவிதா பதிப்பக உரிமையாளர் அந்த நூல் அவ்வளவு ரசிக்கப்படவில்லை. பெரிதாக விற்பனையில்லை என்றார், அவரிடம் சொல்ல வேண்டும்” என்றார்.

இணையத்தில் இருந்த சில சிறுகதைகள் மட்டுமே படித்துள்ளேன், முதன் முதலில் படித்தது ‘பிராயாணம்’, திகிலும் வியப்பும் அமானுஷயமும் கலந்த கதை, அந்த ஒரே கதையில் உங்கள் எழுத்தில் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது என்றேன்.

பிராயணம் படிச்சிங்களா, நல்ல கதையில்லயா…. ரொம்ப நல்லா இருக்கும். அந்த குரு ஒரு ஹடயோகி. சிஷ்யன் ஏன் அவரை கீழே கொண்டு செல்கிறான்னா ஈமச்சடங்குகளை எப்போதும் ஆற்றங்கரை அருகில் செய்வது தான் வழக்கம். காரியம் முடிஞ்ச உடன குளிச்சுரலாம். சுடுகாடு எப்பவும் ஆத்தங்கரையில தான் இருக்கும், இல்லனா கிணறாவது இருக்கும். இப்ப சென்னை சிட்டில அப்படிலாம் இருக்காது. எல்லாம் மாறிடுச்சு இல்லையா….

நீங்க சென்னை நகரின் மாற்றத்தைக் குறித்தே ஒரு நூல் எழுதியிருக்கீங்க இல்லையா, அதன் தலைப்புத் தெரியவில்லை. புத்தக சந்தையில் தேடினேன். கிடைக்கவில்லை.

“ஒரு பார்வையில் சென்னை நகரம்” என்றவர், சென்னை நகரம் குறித்து பேசுகையில் பேச்சு அவரது பழைய இலக்கிய நண்பர்கள் என ஒரு நீண்ட எழுத்தாளர் வரிசையை சொன்னார். பெரும்பாலானோர் முன்னரே போய் விட்டனர், இருப்பவர்களில் ஞானக்கூத்தன், ஞாநி ஆகியோர் இன்றும் என் நலம் விரும்பிகள். ஞாநி என்னை விட வயதில் சிறியவர், ஆனால் என்னை விட அதிகம் நோயால் அவதிப்படுகிறார்” என்றார்.

தி நகரிலிருந்த அவரது வீட்டைப் பற்றி சொல்கையில், வீடு பஸ் ஸ்டாண்ட் அருகே. வெளியூர் பஸ் எல்லாம் அப்போது தி.நகர் வழி தான் செல்லும். அந்த வீட்டிற்கு வராத ஆளே இல்லை எனலாம். கோணங்கினு ஒருத்தன் இருந்தான். தெரியுமா?”, “தெரியும் சார்’. அதிகாலை 5 மணிக்கு பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் நேராக வீட்டிற்கு வந்து என்னை ஒரு பாடு படுத்திவிட்டு பின்னர் கிளம்பிவிடுவான்.

பின்னர் அவன் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தான், நான் கட்டாயம் எழுத வேண்டும் என்றான். என்னுடைய கட்டுரைகளில் என்னுடைய சொந்த அவதானிப்புகளும், கருத்துக்களும், அசலானதாக இருக்கும். மற்றவர்கள் எழுதுவது வேறு யாரோ எங்கோ சொன்னதைக் கேட்டு எழுதியதாக இருக்கும். கட்டுரையோ கதையோ நான் என் எல்லா எழுத்துக்களையுமே சின்சியராகத் தான் எழுதியிருக்கேன். அப்படி இருக்கையில் அவன் என் கட்டுரைகளை பிரசுரிக்க இயலாது எனத் திருப்பி அனுப்பி விட்டான். அதன் பின் அவனுக்கு அனுப்புவதில்லை. ஆனால் அவனும் கொஞ்சநாளில் பத்திரிக்கையை நிறுத்திவிட்டான்.

எவ்வளவு நாள் தான் கோணங்கி கோணங்கியா இருக்க முடியும்? அவனும் மனுசன் தான. ஏன் சொல்றேன்னா? எல்லாம் மாறிட்டே இருக்கும், நாம மட்டும் வித்தியாசமான ஆளா இருந்துட்டே இருக்க முடியாது. நாமளும் வாழணும்ல, மாற்றத்துக்கேற்ப மாறிக்கொண்டே தான் இருக்க வேண்டியது இருக்கும்.

ஒரு பார்வையில் ”சென்னை நகரம் கவிதா பதிப்பகத்தில் கிடைக்கும்” என்றார்.

”புக் ஃபேரில் தான் உங்கள் புத்தகங்கள் எல்லாம் வாங்கியுள்ளேன். இனிமேல் தான் படிக்கவேண்டும்” என்றேன்.

”உங்கள் சிறுகதைகள் சிறு சிறு தொகுப்புகளாக வந்துள்ளன. அவற்றில் சில கிடைக்கவில்லை. முழுத் தொகுப்பு வெளிவந்துள்ளதா?” என்றேன்.

நான் வருடத்திற்கு நான்கு சிறுகதைகளாவது எழுதிவிடுவேன். சமீபத்தில் கூட ’வைரம்’ என ஒரு சிறுகதை எழுதியிருந்தேன் என்றார். தி ஹிந்து பொங்கல் இதழில் வந்த அந்தக் கதையை பார்த்திருந்தேன் ஆனால் படிக்கவில்லை. படித்திருக்கலாமே என எண்ணிக் கொண்டேன்.

தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கும் ஆசிரியரின்”முழுத்தொகுப்பு என்பது அவரது ஆயுளுக்கு பின்னர் தான் வர வேண்டும்” என்றார்.

புக் ஃபேர் போனியா? என்ன புத்தகம் வந்துள்ளது என்றார். ஜெயமோகனின் ”வெள்ளையானை” வெளிவந்தது என்றேன்.

ஆமாம் கேள்விப்பட்டேன். அது ஏதோ “ஐஸ் பெர்க்” பத்தினதாமே..?

இல்ல அது ”ஐஸ் ஹவுஸ் கலவரம்” பத்தினது…

ஓ.. ஐஸ் ஹவுஸ்… ஐஸ்ஹவுஸ்!

உன்கிட்ட அந்த புத்தகம் இருக்கா? நான் படிக்கணும் நெனைச்சுருக்கேன். இருந்தாக் கொடு.. படிச்சிட்டு திருப்பிக் கொடுத்திடுரேன்.

”வீட்டில் இருக்கு சார்.. அடுத்தவாரத்தில் ஒரு நாள் கொண்டு வந்து தருகிறேன்” என்றேன். வெண்முரசு பற்றிக் கூறி அதையும் தருவதாகக் கூறினேன்.

பையோடு கொண்டு சென்ற அவரது நூல்களில் கையொப்பம் கேட்டேன். இதெல்லாம், ஏன் தூக்கிக் கொண்டு அலைகிறீர்கள். படிக்கிறபையனுக்கு இதெல்லாம் தேவையில்லாத சுமை அல்லவா என்றபடி, இரு, பேனா எடுத்து வருகிறேன் என்று தள்ளாடியபடியே நடந்து சென்றார். விழுந்து விடுவாறோ என்ற பயம் எனக்கு.. அவரது அறையில் பெரிய பாரதி படம் ஒட்டியிருந்தது.

மாமி எழுந்து வந்து தண்ணீர் கொடுத்து நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன் என்றார்.

அவர் திரும்புகையில் ’எரியாத நினைவுகள்’ என்ற புத்தகம் கொண்டுவந்தார். இது எனக்கு ஃப்ரீ காப்பியா கொடுத்தா. உனக்கு இது என் கிஃப்ட் என்றார்.

”நாங்க ஜெயமோகனோட வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்புங்கற பேர்ல விருது விழா, இலக்கிய கூட்டங்கள் நடத்துகிறோம். உங்களை சிறப்பு விருந்தினராக பேச அழைக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அழைக்கத் தயக்கம்” என்றேன்.

அவன் (ஜெயமோகன்) எப்பவும் இப்படிதான். அவன் சின்ன வயசில இருந்தே, எதாவாது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற துடிப்போட இருப்பான். தொடர்ந்து அப்படி இருப்பது ஆச்சரியம்தான். பாவம் சின்ன வயசிலயே பெரிய சோகம் அவனுக்கு. அவங்க அப்பா அம்மா எல்லாம் சீக்கிறம் போய் சேந்துட்டா… அவன் மனைவி ரொம்ப நல்ல பொண்ணு. இரண்டு சிறு குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? ஒனக்குத் தெரியுமா? என்றார்.

சார், அஜிதன் கல்லூரியே முடித்துவிட்டான் என்றேன்.

அப்படியா என்றவர்.

”அவர் சினிமாக்குப் போனது தான் கஷ்டமாக இருக்கிறது. அங்கே பணம் கிடைத்தாலும் எழுத்தாளர்களை அவமரியாதை செய்வார்கள். நான் நேராப் பாத்திருக்கேன். அதான் சொல்றேன். ஆனா ஓரளவுக்கு மேல் நான் சொல்ல முடியாதல்லவா?”

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் ஜெமினியில் பார்த்த சினிமா உலகில் ஜெ இன்று இல்லை, அவர் இருக்கும் நிலை வேறு என்பதை என்னால் அசோகமித்ரனுக்கு விளக்க முடியுமா எனத் தெரியவில்லை.

நிகழ்ச்சி எல்லாம் எங்க நடத்துறான்? நாகர்கோவிலில் அல்லவா?

இல்ல சார் கோவையில்.. சென்ற முறை உங்கள் பெயரை முன் மொழிந்த போது கூட ஜெமோ ”முதிய வயதில் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம், என்றார்” என்றேன்.

ஆமா, கடைசியா கோவை ஞானியின் ஒரு நிகழ்ச்சியிலே பார்த்தேன். அப்போ ரொம்ப முடியாமா இருந்தேன், அதான் அப்படி சொல்லி இருப்பார். இப்போ பரவாயில்ல.. ஆனா தனியா எங்கயும் போய் வர முடிவதில்லை. என் பையன் என்னை இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை எதுவும் செய்யக் கூடாது, சும்மா படுத்து ரெஸ்ட் எடுத்தா போதும் என்று சொல்லியிருந்தான். அதான் நீ பார்க்க வந்தப்ப சங்கடப் பட்டான். அடுத்தமுறை வரும் போது முன்னரே போன் பண்ணிட்டு வா” என நம்பர் கொடுத்தார்.

சார் நாங்கள் கடந்த வருட விழாவிற்கு இ.பா.வை அழைத்திருந்தோம். அவருக்கும் முதுமை மற்றும் உடல் நலக் குறைவால் பயணம் செய்வதில் விருப்பம் இல்லை. அவருடன் கூடவே எங்கள் நண்பர் ஒருவரை துணைக்கு அனுப்பி ஃப்ளைட்டில் கோவைக்கு அழைத்து வந்து திருப்பி வழி அனுப்பினோம், கலந்து கொண்டபின் மிகவும் மகிழ்வுடன் சென்றார் என்றேன்.

கோவை வர இயலாது எனில் குறைந்தது சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்விலாவது கலந்து கொள்ள வேண்டும் என்றேன்.

அப்படி துணைக்கு ஒருவர் உதவியாக வரக் கூடும் எனில் கோவையிலேயே தன்னால் கலந்து கொள்ள முடியும் என்றார்.

அடுத்த விழா எப்போது என்றார். டிசம்பரில் என்றேன். ”இன்னும் பல மாதங்கள் இருக்கிறதே, அவ்வளவு நாள் இருந்தால் வருகிறேன்” என்றார்.

நூல்களை ஆசையாக எடுத்துப் பார்த்தார். ”இன்ஸ்பெக்ட்ர செண்பகராமன்” நூலை எடுத்துக் காட்டி இது ரொம்ப நன்னா இருக்கும், என்றார். ”இந்திய முதல் நாவல்கள்” என்கிற நூலைக் காட்டி இந்த நூல் ரொம்ப முக்கியமானது. நிறைய நல்ல நாவல்களை உனக்கு அறிமுகம் செய்யும். நிறையா விற்றிருக்க வேண்டும். ஆனால் போகலை. உனக்குப் பிடிக்கலனா திட்டாதே” என்றார்.

நிச்சயம் எனக்கு இது பிடிக்கும் என்றேன். ஜெமோவின், இத்தகைய இலக்கிய அறிமுக நூல்கள், கட்டுரைகள் மூலமாகத்தான் என்னை போன்ற பலர் இலக்கியத்தையே அறிமுகம் செய்து கொள்கிறோம். அவ்வாறு தான் நான் உங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

எந்தப் புத்தகம்?

உதாரணமாக இலக்கிய முன்னோடிகள் வரிசை.

நல்ல புத்தகம் இல்லையா. ரசிச்சு எழுதிருப்பாரு. உண்மையாவே அவர் நிறையா படிக்கிறார் இல்லையா. எனக்கு எப்படி இந்த சின்ன வயசில அவன் எப்படி இவ்வளவும் படிச்சு, எழுதவும் செய்றான்னு ஆச்சரியமா இருக்கும்.

சார் நான் திடீரென கிளம்பி வந்து விட்டேன். என் நண்பர் ’ பேராசிரியர் பரத்’ தான் நீங்கள் வேளச்சேரியில் அவர் வீட்டின் அருகே இருப்பதாக கூறினார். அவருக்கு உங்களை நேரில் சந்திக்க மிக விருப்பம் ஆனால் பயம் என்றேன். என்னைப் பார்க்க என்ன பயம், அவரை அடுத்தமுறை அழைத்து வா என்றார்.

”விஷ்ணுபுரம் நண்பர்கள் சென்னையில் மட்டுமே பத்து பேருக்கு மேல் இருக்கிறோம். தெரிந்தால் அனைவரும் உங்களைப் பார்க்க விருப்பப் படுவார்கள்” என்றேன்.

”என்னை அவ்வளவு பேர் எதற்கு பார்க்க விரும்புகிறார்கள்” என்றார்.

சார் ”எங்களுக்கு நீங்கள் ஒரு “Legend” . உங்களை சந்தித்தது என் பாக்யம்” என்றேன்.

பதில் பேசாமல் அமைதியாக கூர்ந்து பார்த்தார், அவர் கண்களின் ஆழத்தை என்னால் சந்திக்க இயலவில்லை. சில நொடி மௌனத்திற்குப் பின், “அவ்வளவு பேர் வந்தால் வீட்டில் சந்திக்க வேண்டாம். நாம் மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது இல்லையா? வேண்டுமெனில் ஒரு பொது இடத்தில் சந்திக்கலாம்” என்றார்.

கை நடுங்க பொறுமையாக, நூல்களில் ”வியப்பு கலந்த அன்புடன், அசோகமித்ரன்” என கையொப்பம் இட்டார். ”குழந்தை மாதிரி எழுதுறேன்ல?” என்றார்.

”சரி டா கண்ணா, டயர்டா இருக்கு நான் போய் படுத்துக்கிறேன், நீ சாப்பிடுறியா” என்றார். இல்ல சார் நான் ஹாஸ்டலில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று விடைபெற்றுக் கொண்டேன். இரண்டு மணி ஆச்சு ஹாஸ்டலில் சாப்பாடு இருக்குமல்லவா என இருமுறை கேட்டுக் கொண்டார்.

நீண்ட நேரம் சேரில் அசையாமல் உட்கார்ந்திருந்ததால் அவரால் உடனடியாக எழ முடியவில்லை. “ஹே ராம்” என்றபடி கைகளை அழுத்தி ஊன்றி எழுந்து மிக மெதுவாக தன் அறைக்குச் சென்றார்.

பைக்கைத் தள்ளியபடி கிளம்புகையில் விரைவில் விஷ்ணுபுரம் சார்பில் ”அசோகமித்திரனுடன் ஒரு வாசகர் சந்திப்பை” நடத்திட ஏற்பாடு செய்யவேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.

செந்தில்குமார் தேவன்

2014-02-25

***

முந்தைய கட்டுரைபொய்ப்பித்தலும் ஃபேய்சியமும் –கடிதம்
அடுத்த கட்டுரைகல்வி – தன்னிலையும் பணிவும்