கருணை நதிக்கரை -1

u

1986ல் அம்மா தற்கொலைசெய்துகொண்டபின் முதல் முப்பதாண்டுகளாக நான் அம்மாவின் முகத்தை நினைவிலிருந்து மட்டுமே எடுத்து வந்திருக்கிறேன். அம்மாவின் படத்தை எங்கும் வைத்துக் கொண்டதில்லை. உண்மையில் அதிகப் படங்கள் இல்லை. அண்ணா வீட்டில் ஒரு படம் இருந்தது, அப்பாவும் அம்மாவும் சேர்ந்திருப்பது. அப்பா பணி ஓய்வு கொள்ளும்போது அலுவலக தேவைக்காக எடுத்துக் கொண்ட படம் அது. அவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் இன்னொரு படம் என்பது நாங்கள் சின்னக்குழந்தைகளாக இருக்கும் போது வாவுபலி பொருட்காட்சியில் எடுத்துக் கொண்டது. அது எங்கள் சித்தப்பா வீட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் அம்மாவின் சிறு படம் ஒன்றை வைத்திருந்தேன். அது என்னை கனவுகளில் ஆழ்த்தி படுத்தி எடுத்தது. துயில்நீக்கம் மற்றும் உளநிலைச்சிக்கல்களுக்குப்பின் அம்மாவின் படங்களை பார்ப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று மணிப்பால் மருத்துவமனையின் உளவியலாளர் ஆலோசனை சொன்னார். பலவிதமான உளக்கொந்தளிப்புகளுக்குப் பிறகு நான் அம்மாவை எனது அன்றாட நினைவிலிருந்து ஆழ்மனம் நோக்கி தள்ளிவிட்டேன் என்று நினைக்கிறேன். அருண்மொழி என் வாழ்க்கையில் நுழைந்தபின்  அம்மாவை நினைவு கூர்வதென்பது சாதாரண ஒரு நிகழ்வாகவே இருந்தது.

அஜிதன் நீர்நிலம்நெருப்பு  ஆவணப்படத்திற்காக அம்மாவின் புகைப்படத்தை அண்ணா வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தான். அதைப்பார்த்தபோது பெரிய கொந்தளிப்பு எதையும் உணரவில்லை.இருபத்தெட்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு அரங்கசாமியும் கிருஷ்ணனும் உடன்வர எங்கள் சொந்த ஊருக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். அந்த மண்ணுக்கு மீண்டும் என்னால் செல்லவே முடியாது என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அப்போது சென்ற போது அது பெரிய உளச்சிக்கல் எதையும் அளிக்கவில்லை. அப்பாவின் இளவயது நண்பராகிய நாராயணன் போற்றி வீட்டுக்குச் சென்றேன். பக்கத்து வீடுகளுக்குச் சென்றேன். கோயிலையும் படிக்கட்டையும் பார்த்துவிட்டு வந்தேன்.

ஆகவேதான் மீண்டும் ஆவணப்படம் எடுக்கும்போது அஜியுடன் அங்கு சென்று அங்கு நிகழ்ந்த அனைத்தையும் மீண்டும் நினைவில் மீட்டெடுத்தேன். அப்போதும் அது ஒரு சாதாரண நினைவு மீட்டலாகவே இருந்ததே ஒழிய உளக்கொதிப்பாக ஆகவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஒரு மனநிலையில் இரவெல்லாம் அம்மாவின் விழிகளை பார்க்க நேர்ந்தது. தர்க்கத்தால் சொற்களால் நான் கட்டிவைத்திருந்த ஆழ்மனம் பீறிட்டு வெளிவந்தது. அதற்கு முதன்மைக் காரணம் மாமலர். தொடர்ந்து அன்னையரின் கதையாகவே அது இருக்கிறது. மூகாம்பிகை ஆலயத்திற்குச் சென்று மாமங்கலையை தரிசித்துவிட்டு வந்த பிறகு தான் அதை எழுதவே தொடங்கினேன். அதில் விதவிதமாக வந்து செல்லும் பெண்களில் அம்மா மின்னி மின்னிச் சென்று கொண்டிருந்தாள். கலைடாஸ்கோப் போல அம்மாவை திருப்பி திருப்பி பலநூறு சித்திரங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

சட்டென்று உளம் கைவிட்டுப்போய் ஆழ்ந்த மனச்சோர்வுக்கும் தனிமைக்கும் துயருக்கும் ஆளானேன். அப்போதுதான் கிருஷ்ணன் ஒரு பயணம் முடித்து வருவோம், மீண்டுவிடுவீர்கள் என்றார். ஏறத்தாழ அதே நேரத்தில் வாசகர் ஜான் பிரதாப் சிங் திருநெல்வேலியிருந்து ஒரு மின்னஞ்சல் செய்திருந்தார். அம்பாசமுத்திரம் அருகே சிவசைலத்தில் களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குள் கடனா நதி உற்பத்தியாகும் இடத்திற்கு ஒரு கானுலா சென்று வர ஏற்பாடு செய்கிறேன் வருகிறீர்களா என்றார். கிருஷ்ணன் பீர்மேடுக்கு ஒரு மழைப்பயணம் செல்லலாம் என்று சொல்லியிருந்தார். நான் ஜான் பிரதாப் சிங்கின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டேன்.

வெள்ளிக்கிழமை ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், பாரி, தாமரைக்கண்ணன்,ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேருந்தில் வந்து திண்டுக்கல்லில் சக்தி கிருஷ்ணனின் காரில் ஏறிக்கொண்டு நெல்லைக்கு வந்தனர். நாகர்கோவிலில் இருந்து நான் பேருந்தில் சென்று சக்தி கிருஷ்ணன் இல்லத்தில் தங்கினேன். இரவு பேசிக்கொண்டிருந்துவிட்டு பதினொருமணிக்கெல்லாம் படுத்துவிட்டோம்.

சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு ஜான் பிரதாப் சிங் ஏற்பாடு செய்திருந்த வேனில் கிளம்பினோம். முந்தைய நாள் இரவும் எனக்கு தொந்தரவு தரும் கனவுகள் இருந்தன. பல முறை எழுந்து அமர்ந்து அது கனவுதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். உள்ளம் போடும் நாடகங்கள் மிக நுணூக்கமானவை. கனவுக்குள் அம்மா வருகையில் அது பேரானந்தமாக இருக்கிறது. கனவுக்குள்ளேயே அடடா இவள் இறந்துவிட்டாளென்று நினைத்தோமே அது பொய், கனவு. உயிருடன் தான் இருக்கிறாள் என்று மனம் குதூகலம் கொள்கிறது. விழித்ததுமே தலைகீழாகத் திரும்பி ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்படுகிறது.

அத்துடன் சுவாரசியமான ஒன்று, கனவுக்குள் ஒவ்வொரு முறையும் அம்மா வெளியிலிருந்து வந்து எங்கோ ஓரிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வதாகத் தான் வருகிறது.ஆச்சரியம் என்னவென்றால் அம்மா உயிரோடிருந்த திருவரம்பின் பழைய வீடு நினைவுக்கு வரும்போது கூட அந்த வீட்டில் நான் இருக்க அம்மா வெளியிலிருந்துதான் வருகிறாள். வந்து ஏதேனும், ஒரு காரணத்தை சொல்லி என்னை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்கிறாள். பசுமாடை பிடித்து வரச்சொல்கிறாள். யாரோ தேடி வந்திருக்கிறார்கள் என்கிறாள். எங்கோ செல்ல என்னை துணைக்கு அழைக்கிறாள். அல்லது முற்றத்தில் நின்றபடி வீட்டில் நான் இருக்கிறேனா என்று விசாரிக்கிறாள். இந்தக் கனவுகளையெல்லாம் எப்படி விளங்கிக் கொள்வதென்று தெரியவில்லை. ஏதோ ஒருகணத்தில் வீட்டை விட்டிறங்கி அவர்களுடன் நானும் சென்று விடுவேன் என்று விழித்தெழுந்ததுமே உளம் திடுக்கிடுகிறது.

காலையில் அம்பாசமுத்திரம் சாலையில் செல்லும்போது பயணம் மெல்ல என்னை ஆறுதல் படுத்தியது. சேர்மாதேவி வந்ததும் வ.வே.சு அய்யரின் சேர்மாதேவி குருகுலம் நினைவுக்கு வர அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம். ஆழ்வார்க்குறிச்சி வந்ததும் வண்ணதாசன் – ஆழ்வார்க்குறிச்சி ஆயான் நினைவில் எழுந்தது. கடையம் வந்ததும் பாரதி. அது செல்லம்மாவின் சொந்த ஊர். அங்கேதான் பாரதி பாண்டிச்சேரியிலிருந்து திரும்பிவந்து புறக்கணிக்கப்பட்ட கஞ்சாக்கிறுக்கராக வாழ்ந்தார். கழுதையைக் கொண்டுவந்து அக்ரஹாரத்தில் வளர்த்தார். அதை ஒட்டித்தான் வெங்கட் சாமிநாதன் எழுதி ஜான் ஆபிரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில்கழுதை என்னும் சினிமா எடுக்கப்பட்டது. கீழாம்பூர் வந்ததும் யாரோ ஒருவர் நினைவுக்கு வந்தார். யாரென்று தெளிவும் வரவில்லை. சற்று நேரத்திற்குள்ளேயே முகம் மலர்ந்து நண்பர்களுடன் அளவளாவவும் சிரிக்கவும் தொடங்கிவிட்டேன்.

செல்லும் வழியில் அம்பாசமுத்திரத்தில் ஒரு உணவகத்தில் இருந்து புளிசாதம் தயிர்சாதம் இட்டிலி போன்றவற்றை பொட்டலங்களாக வாங்கிக் கொண்டோம். சிவசைலம் சென்று அங்கிருந்து கடனாநதி அணைக்கட்டுக்குச் சென்றோம். இது களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்த்தின் எல்லையாக அமைந்திருக்கிறது. அணைக்கட்டில் மிகக்கொஞ்சமாகவே நீர் இருந்தது. இவ்வருடம் மழை முழுமையாகவே பொய்த்துவிட்டிருந்தது. மார்ச் மாதம் பெய்த ஓரிரு மழைகளால்தான் காடு தப்பித்தது.

ஜான் பிரதாப்

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாயலம் தென்தமிழகத்தின் மிக முக்கியமான வனப்பகுதிகளில் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழகச்சரிவு இது. மறுபக்கம் கேரளச்சரிவு. கேரளா அளவுக்கு இப்பகுதிகளில் மழை இல்லையென்றாலும் கூட தமிழகத்தின் இப்போதிருக்கும் மிகப்பசுமையான பகுதிகளில் ஒன்று. தென் தமிழகத்தில் ஓடும் மிகச்சிறிய ஆறுகள் இந்த மலைப்பகுதியின் உற்பத்தியாகின்றன. கடனா நதி அதில் ஒன்று. நதியென்று ஒரு மரியாதைக்கு சொல்கிறோம். இப்போது அது பெருவெள்ளம் வரும் மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் எல்லாம் சிற்றோடை தான்.

வனத்துறை அனுமதியை ஜான் பிரதாப் பெற்று வைத்திருந்தார்.அவர் அகில இந்திய வானொலி ஊழியர். முன்பு வருவாய்த்துறையில் நாகர்கோயிலில் பணியாற்றியிருக்கிறார். பார்வதிபுரம்சாலைக்கே பலமுறை வந்து என்னை சந்திக்க விரும்பி சந்திக்காமல் திரும்பியிருக்கிறார்.

இந்த மலையில் மூன்று சிற்றாறுகளாக கடனா நதி தொடங்குகிறது.கருணைநதி என்றும் இது அழைக்கப்படுகிறது.அணைக்குள் இறங்கி மறுபக்கம் ஏறி நான்கு கிலோமீட்டர் மலையேறிச்சென்றால் அங்கு கோரக்கநாதர் ஆலயம் இருக்கிறது.செல்லும் வழியிலேயே பாறைகளினூடாக பெருகிவரும்  கல்லாறுஎன்னும் காட்டாற்றின் ஆழ்ந்த சுனை ஒன்றுக்குள் குளித்து நீராடினோம். பாறைகளினூடாக பீறிட்டு வரும் சிறிய அருவிகளில் நெடுநேரம் தலைகுளிர அமர்ந்திருந்தேன். அதிதூயநீரில் நீந்தி நீராடுவது என்பது இப்படி எப்போதாவது அமைந்தால்தான் உண்டு.

கோரக்கர் ஆலயம் காட்டுக்குள் பெருமரங்கள் சூழ அமைந்துள்ளது. பழைய சிறிய ஆலயம் சமீபமாக கான்கிரீட்டால் மாற்றிக்கட்டபட்டுள்ளது .அங்கு முன்பு அத்திரி முனிவர் அனசூயையுடன் வந்து  தங்கியிருந்ததாகவும் அங்கிருந்து பார்த்தால் தொலைவில் தெரியும் சிவசைலத்தை நோக்கியபடி அமர்ந்து தவம் செய்ததாகவும் தொன்மம் இருக்கிறது. பின்னர் அங்கே கோரக்கர் சித்தர் வாழ்ந்தாராம். கோரக்ககங்கை எனப்படும் ஆறு அங்கே சிறு ஊற்றாக எழுகிறது. குளிர்ந்த இனிய நீர் ஒரு பாறையிடுக்கில் உற்பத்தியாகிறது

உண்மையில் அந்த ஊற்றுதான் அங்கே ஆலயம் அமைய காரணமாக அமைந்திருக்கும். அந்த ஊற்று புதைத்துவைக்கப்பட்ட ஒரு குழாயிலிருந்து எழுவதுபோல வருகிறது. அந்த அற்புதம் அங்கே தெய்வ இருப்பை உணர்த்தியிருக்கலாம். அங்கே சித்தர்கள் தங்கியிருக்கலாம். அப்பகுதியின் தனிமை ஓர் அரிய அனுபவம்தான்.

கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே கோத்தார் பாபாவின் தர்க்கா இருக்கிறது.  எது சித்தர்களை ஈர்த்ததோ அதுதான் சூஃபிகளையும் அங்கே கொண்டுவந்திருக்கிறது. இந்தியாவெங்கும் சித்தர்கள், சமணமுனிவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு அருகிலேயே சூஃபி ஞானிகளின் தர்காக்களும் இருப்பது இதனால்தான்.

அப்பகுதியின் மாபெரும் சுண்ணப்பாறைகள் முற்காலத்தில் ஏதோ பூகம்பத்தில் தகர்ந்து சரிந்தது போல் கிடக்கின்றன. ஆலமரங்கள் பாறைகளுக்கிடையே விரிசல்களில் எழுந்து பெரிய உகிர்கள் கொண்ட கழுகுக்கால்களைப் போல அப்பாறைகளைக் கவ்வியிருக்கின்றன. ஒருபாறையில் குகை ஒன்று அமைந்ததற்குள் சுண்ணத்தூண் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் சுண்ணத்தை எடுத்து மருந்தாக உட்கொள்வதும் பூசிக் கொள்வதும் உண்டு என்கிறார்கள்.

கோரக்கநாதர் ஆலயத்தில் நாங்கள் செல்லும்போது ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சமைத்துக் கொண்டிருந்தது. பூசகர் இருந்தார். செல்லும்போதே மழை பெய்ய ஆரம்பித்தது நனைந்து கொண்டுதான் சென்று சேர்ந்தோம். சிலகணங்களில் மழை கொட்டி ஓய்ந்தது. மழை ஓய்ந்து சற்று நேரத்திலேயே காற்று சுழன்றடித்து இலைகளை உதறி மழையின் சுவடின்றி மின்ன வைத்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவியும் நனைந்த மண்ணின் மணமும் தான் மழையை நினைவுறுத்தின. கடந்த பல நாட்களாகவே மழை பெய்து கொண்டிருந்தாலும் கூட மண்ணில் இறங்கியிருந்த வெம்மை இன்னும் தணியவில்லை. மழைபெய்த சற்று நேரத்திலேயே நீராவி எழுந்து வியர்வை பெருகி சட்டை உடலுடன் ஒட்டத் தொடங்கிவிட்டது. உடைத்துக் கொட்டும் பெருமழையால் மட்டுமே கடந்த நான்கைந்து மாதங்களாக இருந்த மண் அனலை அவிக்க முடியும்போலும்.

கோரக்க நாதர் ஆலயத்திலிருந்து மேலும் உள்காடுக்கு சென்றோம். அங்கு ஒரு கருப்ப சாமியின் ஆலயம் இருக்கிறது. என்னால் அவ்வளவு தூரம் ஏற முடியவில்லை. இதைவிடப்பல மடங்கு உய்ரமான மலைகளில் சாதாரணமாக ஏறி இறங்கியிருக்கிறேன். தூக்கமின்மையும் உடற்களைப்பும் வழியிலேயே ஒரு இடத்தில் அமரவைத்தன. நானும் கிருஷ்ணனும் பாரியும் மட்டும் தங்கினோம். பிறர் சென்று கருப்பசாமியின் ஆலயத்தை தரிசித்துவிட்டு மீண்டு வந்தார்கள். வெட்டவெளியில் மலைக்கருப்பசாமி ஒரு கற்சிலையாக அமர்ந்திருக்கிறார்.

இப்பகுதியின் காடு கன்னியாகுமரி மாவட்டத்தின் காடுகளைப்போல பசுமைமாறாக்காடு அல்ல. ஆண்டிற்கு ஒரு மழைக்காலம் தான். இப்போது பெய்தது போல உதிரி மழைகளினாலான ஆறுதல் உண்டு. ஆகவே மழைக்காடுகளின் அமைப்பு இங்கில்லை. மழைக்காடுகள் மூன்றடுக்கு தழைக்கூரை கொண்டவை.  ஆகவே மண்ணில் ஒரு சூரியக்கீற்று கூட விழுவதில்லை. இலை மெத்தை மேல் வெள்ளிக்காசு விழுந்தது போல அவ்வப்போது ஒரு ஒளிவட்டம் விழுந்திருக்கும். ஒளிச்சட்டம் ஒன்று இலைநுனிகளை பற்றி எரியச்செய்தபடி சாய்ந்து மேலே சென்றிருக்கும். அதை சூழ்ந்து பல்லாயிரம் பூச்சிகள் ஒளிகொண்டிருப்பதைக் காணலாம். அனைத்து இலை நுனிகளிலும் ஒளி எண்ணெயென வழிவதை காணலாம். சூரிய ஒளிக்கதிர் விழுந்த மழைக்காட்டுப்பகுதி உயிரின் மாபெரும் நாடகமேடை ஆனால் மிக விரைவிலேயே அங்கு அந்த ஒளியமுதை உண்ணுவதற்கான நாவுகளுடன் இலைகள் எழுந்து மூடிவிடும்.

இப்பகுதி வெயில் நேரடியாகவே மண்ணில் விழுமளவுக்கு அடர்த்தி குறைந்த உயரமற்ற மரங்களால் ஆனது. ஆயினும் காட்டு மரங்களுக்கே உரிய கட்டற்ற திமிறல், கொடிகளும் மரங்களும் செடிகளும் ஒன்றுடனொன்று பிணைந்து ஓருடலாகி நின்றிருக்கும் உயிர் மூர்க்கம். காடு என் உளச்சோர்வு அனைத்தையும் இல்லாமல் ஆக்கியது.

மீண்டும் கோரக்கநாதர் ஆலயத்திற்கு வந்தோம். அங்கு முன்னரே சென்றவர்கள் சமைத்து உண்டு மிச்சம் வைத்திருந்த சோறும் சாம்பாரும் இருந்தது. நாங்கள் கொண்டு வந்த புளிசாதமும் தயிர்சாதமும் சோறுமாக உண்டோம். அந்தக் களைப்பிற்கு அவர்கள் செய்திருந்த சாம்பார் மிக சுவையாக இருந்தது. இளவயதில் காட்டில் வேலைக்கு செல்லும் தோழர்களுடன் நானும் சென்று வேலை செய்வேன். ஒருநாளின் எட்டு மணிநேர உடல் உழைப்புக்கு பிறகு உணவு அமுதென மாறிவிடும் வித்தையை அங்கு நான் அறிந்திருக்கிறேன். காடு என்றாலே சுவையான உணவு நினைவுக்கு வருவதற்கு காரணம் உடல் சலிக்காமல் காட்டில் நடமாடவே முடியாதென்பதாக இருக்கலாம். பகலெல்லாம் நாற்காலியில் அமர்பவர்களுக்கு உண்மையில் அந்த சுவை ஒருபோதும் தெரியவருவதில்லை.

மேலும்

முந்தைய கட்டுரைபறக்கை நிழற்தாங்கல் –சந்திப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43