ராணுவம், தேசியம், ஷர்மிளா

Sharmila1

 

ஜெ

 

ஐரோம் ஷர்மிளா பற்றிய உங்கள் கட்டுரை வாசித்தேன். அதன் அடிநாதமாக இருப்பது இந்திய ராணுவ ஆதரவு, இந்திய தேசியவெறி என நினைக்கிறேன். இந்திய தேசியத்தின் பெயரால் இந்திய ராணுவம் இழைக்கும் அநீதிகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

 

அருண்குமார் செல்வம்

 

அன்புள்ள அருண்குமார்,

 

கட்டுரைபோட்ட எட்டாவது நிமிடம் வந்த எதிர்வினை – ஆகவே நீங்கள் இக்கட்டுரையையும் வாசிக்கவில்லை.

 

நான் எந்த ராணுவத்தையும் ஆதரிப்பவன் அல்ல. நூறுமுறையாவது இந்தத் தளத்தில் எழுதியிருப்பேன். சீருடை அணிந்த எந்த ராணுவமும் ஒன்றே. ராணுவம் சிவில் ஆட்சியின் கட்டுப்பாட்டில் பாரக்குகளுக்குள் மட்டுமே இருக்கவேண்டும்.

 

ராணுவத்துக்கு அதிகாரமளிக்கப்பட்டால் அது பொதுமக்களை கிள்ளுக்கீரையாகவே நடத்தும். வன்முறையே அதற்குப் பயிற்றுவிக்கப்பட்ட வழி. அது பிறிதொன்றை ஆற்றமுடியாது. இதில் நம் ராணுவம் அவர்களின் ராணுவம் என்னும் பேதம் இல்லை. புரட்சிராணுவம் அரசுராணுவம் என்னும் பேதமும் இல்லை. இதுவே வரலாறு, உலகெங்கும் இக்கணம் வரை அப்படித்தான்

 

ராணுவம் என்பது அரசின் ஆயுதம். அரசு  மக்களின் எண்ணத்தை பிரதிநிதித்துவம் செய்வது. ஆகவே ராணுவமும் மக்களின் முகமே. அது மக்களிடமிருந்தே உருவாகிறது. மக்களின் ஆதரவுபெற்ற அரசால் நடத்தப்படுகிறது. மிக அபூர்வமான வரலாற்றுத்தருணங்களில் மிகச்சில சர்வாதிகாரிகள் மட்டுமே மக்களின் எண்ணத்துக்கு நேர் எதிரான அரசை அமைத்து நடத்துகிறார்கள்.

 

அரசு என்பது   மக்களிடம் நிலவும் கருத்தியலின் அதிகார முகம். ஆகவே அக்கருத்தியலை மாற்றும்பொருட்டு செய்யப்படும் தொடர்ச்சியான நீடித்த கருத்துச்செயல்பாடு மற்றும் சேவையே அரசியல் மாற்றத்துக்கான வழியாக அமைய முடியும். அது ஒன்றே உண்மையான அரசியல்மாற்றத்தை உருவாக்கும்.

 

இப்படிச் சொல்லலாம்,இருவகை புரட்சிகள் உள்ளன. மக்கள் விருப்பத்திற்கு மாறாக மக்களை அடக்கி ஆளும் சர்வாதிகார ராணுவ அரசுக்கு எதிரான ஆயுதக்கிளர்ச்சிகள் வரலாற்றில் சிலசமயம் தேவையாக இருந்துள்ளன. சிலசமயம் வென்றும் உள்ளன. அவ்வெற்றிகளுக்குப்பின்னால் பெரும்பாலும் இன்னொரு நாட்டின் ஆதரவு இருக்கும். அல்லது போரால் அரசும் ராணுவமும் பலவீனமாக இருக்கும் தருணம் வாய்த்திருக்கும். இல்லையேல் வெற்றி அனேகமாக சாத்தியமில்லை என்பதே உலக வரலாறு.இது ஆயுதப்புரட்சி.

 

இரண்டாவது புரட்சி என்பது மக்களின் கருத்தியலை மெல்லமெல்ல மாற்றி அரசின் அடித்தளத்தை அகற்றி இயல்பாகவே அது மாறும்படிச் செய்வது. காந்திமுதல் மண்டேலாவரையில் செய்திகாட்டிய புரட்சி அதுவே. அதுவே நீடிப்பது, உண்மையான மாற்றத்தை உருவாக்குவது. ஆனால் அது மெல்லமெல்ல நிகழ்வது. தொடர்ச்சியான முன்னகர்வும் பின்னகர்வும் கொண்டது. சோர்வளிக்கும் காலகட்டங்கள் நிறைந்தது. தொடர்ச்சியான சுயசோதனைகள், சுயதிருத்தங்கள், தகுந்த இடங்களில் பின்வாங்குதல் போன்ற கவனமான முயற்சிகள் வழியாக நிகழ்த்தப்படவேண்டியது. அதையே ஜனநாயகப்புரட்சி என்கிறோம்.

 

ஜனநாயகப்புரட்சியின் விளைவுகள் உடனடியாக கண்ணுக்குத்தெரியாது. மாற்றம் என்பது வளர்சிதை மாற்றம் என்பதனால் அதை அது நிகழ்ந்தபின்னர் திரும்பிப்பார்க்கையில்தான் கண்ணால் காணமுடியும். நாடகீயத்தன்மை அதில் மிகமிகக்குறைவு. ஆகவே அது பயனற்றது என ஆயுதத்தை நம்புகிறவர்களாலும் பொறுமையிழந்த இளைஞர்களாலும் அரைவேக்காடு அறிவுஜீவிகளாலும் எப்போதும் கேலிசெய்யப்படும்

 

ஆயுதப்புரட்சி என்பது நாடகத்தன்மைகொண்டது. வெறுப்பரசியல் சார்ந்தது. வெற்றி பெற்றால்கூட அதன் நிகர நன்மையைவிட நிகர அழிவே அதிகம்.  அரசுக்கு மக்களின் கருத்தியல் அடித்தளமாக இருக்கும் நிலையில் அரசுடன் ஆயுதமேந்திப்போரிடுவதென்பது நேரடியாகவே தற்கொலை. அதை நோக்கி எளிய மக்களைச் செலுத்துவது படுகொலை. சென்ற காலகட்டங்களில் உலகவரலாற்றில் நிகழ்ந்த பெரும்பாலான ஆயுதப்புரட்சிகள் மக்களை அழிக்க மட்டுமே செய்துள்ளன. வென்ற இடங்களில் போல்பாட் போல மேலும் கொடூரமான ஆட்சியாளர்களையே அளித்துள்ளன

 

கணிசமான இடங்களில் நிகழும் ராணுவவன்முறையின் பின்னணி என்ன என்று பாருங்கள். மக்களாதரவுகொண்ட அரசின் ராணுவத்தை அம்மக்களில் ஒரு குறிப்பிட்ட சாரார் ஆயுதம்தாங்கி எதிர்க்கிறார்கள். அதற்கு வெளிநாட்டு ஆதரவைப் பெற்றுக்கொள்கிறார்கள். அச்சமூகத்தையே முடக்கிவைக்கிறார்கள். வாக்களிப்பு நிகழ்ந்தால் மிகச்சிறிய அளவுக்கு ஆதரவே பெறச்சாத்தியமான தரப்பு இது, ஆனால் அச்சமூகத்தை வன்முறைமூலம் அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைத்திருக்கிறது.

 

அதற்கு எதிராக அரசு ராணுவத்தை பயன்படுத்தும் ,ஏனென்றால் அந்த எதிர்ப்பு அரசின் இருப்பையும் அதன் அடிப்படைப் பணியையும் எதிர்க்கிறது. ஓர் அரசின் இருப்பை ஆயுதம் வழியாக எதிர்ப்பதற்குப்பெயர் போர். போரை தொடங்கியபின் எதிர்த்தரப்பு வன்முறையை கையாள்கிறது என்பதில் பொருளே இல்லை.

 

ராணுவம் வன்முறையால் ஆனது. ராணுவத்திடம் நிர்வாகம் செல்வதென்பது வன்முறையைத்தான் உருவாக்கும்.அரசை எதிர்த்து சமூகத்தை அச்சுறுத்திக் கட்டுப்படுத்தும் ஆயுதமேந்திய அமைப்புகளுக்கு எதிராக ராணுவம் வன்முறையில் இறங்கியதும்  அந்தக்குழுக்களின் அறிவுஜீவிகளே ராணுவத்தின் வன்முறையை சுட்டிக்காட்டி  ‘அரசு ஒடுக்குமுறை! ராணுவக்கொடுமை பாரீர்’ என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருப்பார்கள்

 

பொதுவாகவே போர்ச்சூழலில் உச்சகட்ட உணர்ச்சிகர பிரச்சாரம் நிகழும்.அதை அனைவரும் கவனிப்பார்கள் என்பதனால் அதன் பாதிப்பு மிகமிக அதிகம். அச்சூழலில் ஒவ்வொருவரும் தன்னை, தன் குழுவைச் சார்ந்தே யோசிப்பார்கள் என்பதனால் நடுநிலைநோக்குக்கோ சமநிலைப்பார்வைக்கோ அறச்சார்புக்கோ அங்கே இடமே இருப்பதில்லை..இதுவே திரும்பத்திரும்ப வரலாற்றில் நடக்கிறது.

 

போர்ச்சூழலில் வன்முறைப்பின்னணியில் உருவாகி நிலைகொள்ளும் கருத்துக்களை  எதிர்கொள்வது மிகமிகக்கடினம்.ஏனென்றால் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் உண்மையானவை. அடக்குமுறை நிகழ்ச்சிகளும் பெருமளவுக்கு உண்மையானவை. ஆனால் அவை வரலாற்றுத்திரிபு கொண்டவை. அந்த உணர்ச்சியைக் கடந்து, ராணுவம் உண்மையிலேயே ஒடுக்குமுறைத்தன்மைகொண்டதுதான் என்னும் உண்மையை ஓப்புக்கொண்டு, அந்த வரலாற்றுத்திரிபைச் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்தமான உண்மையுயையும் நிகரமதிப்பைச் சொல்வது மிகமிகக் கடினமானது. ஊடகங்களில் அதைப்பற்றிபேசுவதோ மக்களிடம் விளக்குவதோ மிகக்கடினம். ராணுவத்தின் ஆதரவாளன் என்றும் அடக்குமுறையை ஆதரிப்பவர் என்றும் முத்திரை வந்துச்சேரும்

 

உதாரணமாக காந்தி 1925 ல் அன்றைய இந்தியாவின் 30 சதவீத மக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதமெடுக்க தூண்டிவிட்டிருக்கமுடியும். ஆனால் 70 சதவீத மக்கள் பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் என்பதனால் மக்களின் ஆதரவின் மேல் அமர்ந்திருந்தது அன்றைய பிரிட்டிஷ் அரசு. மக்கள் ஆயுதம் எடுத்திருந்தால் பிரிட்டிஷ் அரசு மக்களை கொன்றுகுவித்திருக்கும். .ஏனென்றால் போர் என வந்துவிட்டால் இருபக்கமும் இருப்பது ராணுவம் என்றாகிறது. போரில் கொலை இயல்பானது

 

பிரிட்டிஷார் இந்தியமக்களைக் கொல்ல ஆரம்பித்ததுமே காந்தி பிரிட்டிஷ் ஒடுக்குமுறை அது என உணர்ச்சிகரமாக பிரச்சாரம் ஆரம்பித்திருக்கலாம். பல லட்சம்பேரை பிரிட்டிஷ் ராணுவம் கொன்ற வரலாறு அவருக்கு ஆதாரமாக இருக்கும்.பிரிட்டிஷாரை கொடூரர்கள் கொலைக்காரர்கள் என சித்தரிக்கமுடியும். அவர்களின் அரசுக்கு எதிராக ஆயுதமெடுத்த தன் செயலை உணர்ச்சிகரமாக அந்த அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டியே நியாயப்படுத்தவும் முடியும்.

 

காந்தி அதைச்செய்யவில்லை என்பதனால்தான் அது அகிம்சைப்போராட்டம். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிராக அவர் மக்களைக்கொண்டுசென்று நிறுத்தவில்லை. இருபத்தைந்து ஆண்டுக்காலம் தொடர்ச்சியான ஜனநாயகப் போராட்டம் வழியாக மக்களின் கருத்தியலை மாற்றினார். அக்கருத்தியலை ஓர் அமைப்பாகத் தொகுத்தார். தேர்தலரசியல் வழியாக மக்களுக்கு ஜனநாயகப்பயிற்சி அளித்தார். பிரிட்டிஷார் வெளியேற வேண்டியிருந்தது.

 

மக்களின் கருத்தியலாதரவு கொண்ட அரசின் ராணுவத்திற்கு எதிராக மக்களில் ஒருசாராரைத் தூண்டிவிடுவதும் ராணுவம் பதிலுக்குஅடக்குமுறையை ஏவும்போது அதை ராணுவக்கொடுமை எனக்குற்றம்சாட்டுவதும் மிகப்பெரிய அரசியல்மோசடி. அதைச் சுட்டிக்காட்டுவது ராணுவத்தின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவது அல்ல. ராணுவத்தை ஆதரிப்பது அல்ல. அப்படி வாதிடுவது உண்மையைச் சொல்பவரை எதிரிக்கு ஆதரவாளர்கள் எனா முத்திரைகுத்தி ஒழிக்க முயலும் கருத்துலக வன்முறைதான்.

 

ஐரோம் ஷர்மிளா மணிப்பூரின் இனக்குழுத் தீவிரவாதத்தின் முகமாகவே இருந்தவர். அதன் குரலாக ஒலித்தவர். அவர் இந்திய ராணுவத்தின் அத்துமீறலை எதிர்த்தார் என்பது சர்வதேச அளவில் ’மனிதாபிமான’ ஆதரவுபெறுவதற்கான ஒரு உத்தி மட்டுமே. அவர் எளியமக்களை வன்முறைப்பாதையில் தள்ளி அவர்களின் அழிவுக்கு வழிவகுத்தவர்களை ஆதரித்தார், அவர்களுக்காக வாதிட்டார்.

 

இந்திய ராணுவம் அடக்குமுறையில் ஈடுபட்டதா? கண்டிப்பாக ஈடுபட்டிருக்கும். ஈடுபடும். ஈடுபடாத ராணுவமே இல்லை. ஏன் மணிப்பூரின் பிரிவினைவாதத் தரப்பினரின் ராணுவங்களும் அதேபோல அம்மக்கள்மேல் அடக்குமுறையை வன்முறையைச் செலுத்தியவை, செலுத்துபவைதான். அந்த உண்மைகளை மறைத்து ‘இந்தியராணுவ அத்துமீறல்’ என ஒரே குரலை ஒலித்த ஐரோம் ஷர்மிளா அந்த பிரிவினைவாத வன்முறைத்தரப்பின் குரலே ஒழிய அகிம்சைப்போராட்டத்தின் குரல் அல்ல.

 

இப்படிப்பாருங்கள். 1940களில்  பகத்சிங் குழுவினர் ஜெர்மனியின் ஆதரவைப்பெற்று பெரிய குழுவாக ஆகி பிரிட்டிஷ்காரர்களை கொன்றுகொண்டே இருக்கிறார்கள். இந்தியாவையே முடக்கி வைத்திருக்கிறார்கள். மக்களில் 70 சதவீதம்பேரின் ஆதரவுடன் பிரிட்டிஷார் அவர்களை அடக்க  வன்முறையை மேற்கொள்கிறார்கள். காந்தி பிரிட்டிஷ் அடக்குமுறையை மட்டும் சுட்டிக்காட்டி அதற்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டால் அது அகிம்சைப்போராட்டம் ஆகுமா? அவர் முதலில் கண்டிக்கவேண்டியது பகத்சிங்கை அல்லவா? உண்மையில் அதைத்தானே அவர் செய்தார்?

 

ராணுவம் வன்முறையின் வடிவம். அது ஒடுக்குமுறைக்கான கருவியேதான் –. எந்த ராணுவமும். ராணுவத்தைத் தாக்கி அது களமிறங்கியபின் அதன் வன்முறையை அரசியல்பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதென்பது அகிம்சையின் வழி அல்ல. அது அரசியலின் கீழ்மையான உத்தி. இன்று புரட்சி என்றபேரில் பலரும் செய்வது. நதை நாம் மிகமிகக் கவனமாகவே அணுகவேண்டும். அவர்கள் உருவாக்கும் உணர்ச்சிக்கொந்தளிப்பில், மனசாட்சி அறைகூவல்களில் அவர்கள் செய்யும் அரசியலின் தந்திரத்தை மறந்துவிடக்கூடாது. ஐரோம் ஷர்மிளா பற்றி நான் சுட்டிக்காட்டுவது இதை மட்டுமே.

 

நான் தேசியவாதியா? ஆம். இந்தியாவின் தேசியத்தை நம்புபவன், ஏற்பவன். அது இந்துத்துவர் சொல்வதுபோல எனக்கு ஒரு உணர்ச்சிகர நம்பிக்கை அல்ல. அது ஒரு புனிதக் கட்டமைப்பும் அல்ல. ஒரு நடைமுறை யதார்த்தம் அது. வேறுவழியே இல்லாதது. இந்தியப்பெருநிலத்தில் அனைத்துவகை மத, இன,மொழி மக்களும் கூடிவாழ்வதாகவே அனைத்துப் பகுதிகளும் உள்ளன. ஆகவே ஒருதேசமாக தொகுப்புத்தேசியமாக வாழ்ந்தே ஆகவேண்டும் நாம். இல்லையேல் அழிவோம்.

 

இங்கே பேசப்படும் அத்தனை பிரிவினைவாதங்களும் மத, இன,மொழி அடிப்படைவாதங்களின் மேல் அமைந்தவை. அவை ஒவ்வொரு பகுதியிலும் நேர்ப்பாதிப்பங்கு மக்களை அன்னியரும் அகதிகளுமாக ஆக்கும். ஆகவே அவை பேரழிவை  மட்டுமே விளைவிக்கும். ஆகவே வேறுவழியே இல்லை, இன்று இந்தியா ஒரேநாடாகவே விளங்க முடியும். நான் முன்வைக்கும் இந்தியதேசியம் காந்தி நேரு அம்பேத்கர் போன்றவர்கள் காட்டிய வழி. அவர்களின்பெயர் சொல்லும் எவரும் ஏற்றாகவேண்டிய தீர்வு

ஜெ.

 

ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2

ஐரோம் ஷர்மிளாவின் மனமாற்றம்

முந்தைய கட்டுரைசில கேள்விகள்
அடுத்த கட்டுரைபறக்கை நிழற்தாங்கல் –சந்திப்பு