இன்னும் அழகிய உலகில்…

q

 

நெடுங்காலத்திற்கு முன் சுந்தர ராமசாமியின் இல்லத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். சி.சு.செல்லப்பா அவருடைய நூல் ஒன்றுக்கு அவரே வெளியிட்டுக்கொண்ட படம். “கொன்னிருவேன்! என்பதுபோல விரலைக் காட்டுவார். விரல் கருமையாக இருக்கும். அதன்பின்னர் தெரிந்தது அது பேனா. “என்ன கண்ராவியான படம்என்றேன். “அந்தக்காலத்திலே பேனாவோட போஸ் தர்ரது பெரிய ஃபேஷன் என்றார்

அது மிக இயல்பானது. பேனா அன்றுதான் வந்துகொண்டிருந்தது. சொந்தமாக பேனா வைத்திருப்பதே ஓரு சமூக அடையாளம். பேனாவுடன் போஸ் கொடுக்கையில் முதலில் ஆணித்தரமாக நிறுவப்படுவது ஒன்று உண்டு. ”நான் எழுதுபவன். இந்தியாவில் அன்று அது ஒருவகை போர் அறைகூவல்

புத்தகங்கள் வாசிப்பது எழுதுவது போன்ற புகைப்படங்கள் பின்னர் வரலாயின. அவற்றிலிருந்து எழுத்தாளர் தப்ப முடியாது. “சார் ப்ளீஸ், ஒரு ஸ்நாப் என்று சொல்லி அவற்றுக்கு நம்மை போஸ்கொடுக்க வைத்துவிடுவார்கள்.நானெல்லாம் பாறைமேல்கூட ஏறி அமரவைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் சுந்தர ராமசாமியை டைட்டானிக் கதாநாயகன் போல கைவிரித்து நிற்கவைத்த பாண்டி இளவேனில் ஒரு கலைஞர்மக்கள்தொடர்பில்.

இன்று யோசிக்கையில் பலவகையான போஸ்கள் நினைவுக்கு வருகின்றன. சி.என். அண்ணாத்துரை நூலுடன் சால்வை போர்த்தியபடி அமர்ந்திருக்கும் காட்சி. அதுகட்டமைக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது ஒரு செய்தி. அன்றுமட்டுமல்ல இன்றும் அச்செய்தி தேவைதான். சொல்லப்போனால் கையில் நூலுடன் நின்றிருக்கும் அம்பேத்கர் எவ்வளவுபெரிய நவீன விக்ரகம்!

ஸ்டாலின் வாசிப்பாரா என்பது ஐயம், எழுதுவாரா என்பது அதைவிட ஐயம். ஆனால் வாசிப்பதுபோல எழுதுவதுபோல நிறைய புகைப்படங்கள் போஸ்டர்களில் வருகின்றன. திராவிட இயக்கம் அதன் அடிப்படையில் ஓர் அறிவியக்கம் என்பதனால் அதன் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள் தங்களை வாசகர்களாக வெளிப்படுத்திக்கொண்டார்கள். அந்த மரபு ஸ்டாலினில் தொடர்கிறது. அழகிரி பெரும்பாலும்டேய் அவன அடிச்சு தூக்கி கொண்டாங்கடா என்று செல்பேசியில் ஆணையிடும் கோலத்தில்தான் போஸ்டர்களில் சிரிக்கிறார்.

எழுத்தாளர் படங்கள் இன்று பல்வேறுவகையில் வெளிவரத் தொடங்கிவிட்டன. நடனமாடும் எழுத்தாளர்களின் படங்கள் கூட வந்துள்ளன. அபூர்வமாகவே சில படங்கள் அவர்களின் சரியான தருணமொன்றை வெளிப்படுத்துகின்றன. அல்லது நாம் அவர்களைப் பார்க்க விரும்பும் காட்சித்துளியாக அமைந்துள்ளன

இந்தப்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நாய் நம் மூக்கை, உதடுகளை நாவாலும் மூக்காலும் தொடுவதற்கு நாய்மொழியில்நீ எனக்குப் பிடித்தமானவன். நாம் நண்பர்கள் என்று பொருள். காது பின்னிழுக்கப்பட்டிருப்பது அந்த நாய் அன்பால் உள எழுச்சிகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதன் வால் சுழன்றுகொண்டே இருக்கும். கண்கள் சற்று நீர்மைகொண்டிருக்கும். மெல்ல முனகும்.

டோரா அவள் கூண்டுக்குள் நான் சென்றால் ஒரு முத்தமாவது இடாமல் அமையாது. இல்லையேல் கத்த ஆரம்பித்துவிடும். தங்கள் வாழ்விடத்திற்கு வரும் விருப்பமானவர்களை முத்தமிட்டு வரவேற்பது நாய்களின் இயல்பு. உல்லாஸ் காரந்த் அவருடைய நூலில் அதே இயல்புகள்தான் புலிக்கும் என எழுதியிருந்தார்

அந்த குட்டிமண்டை அதை அனேகமாக ஒருவயதுக்குள் உள்ள நாய் எனக் காட்டுகிறது. அந்த வயதுவரை நாய்கள் மிகுந்த விளையாட்டுத்தன்மையுடன் இருக்கும். உலகையே நக்கியும் முகர்ந்தும் அறிந்துவிடத்துடிக்கும். நாலைந்து வயதானதும்சரிதான் எல்லாம் இப்டித்தான் என்னும் ஒரு வகை நிறைந்த சலிப்பு. அதன்பின்னர் ஒரு கனிந்த விவேகம்.

சாருவின் முகம் அவர் நாய்களின் உலகில் நாய்களால் அனுமதிக்கப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது. பத்தடி தொலைவிலேயே நாய்கள் அதைக் கண்டுகொள்ளும். தெருநாய்களே வாலாட்டிநல்லாருக்கிகளா? பாத்து நாளாச்சு என்று சொல்லிவிட்டுச் செல்லும். முதிய நாய்கள் படுத்தவாறே வாலை அசைத்துநல்லா இருடே மக்கா என்று வாழ்த்தும். அவர்களின் உலகம் அன்பால் அழகாக ஆக்கப்பட்ட ஒன்று

 

முந்தைய கட்டுரைஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–31