ஜக்கி கடிதங்கள் 7-பொய்யின் ஊற்றுமுகம்

ja

ஜெ,

ஜக்கி மீதான வன்மமும் இணைய வசையும் எங்கிருந்து துவங்கியது என நீங்கள் அறியத்தான் வேண்டும்

இணைய எழுத்தாளர் அதிஷா என்பவரின் வேலை அது, பிப் 20 அன்று அவர் எழுதிய பொய்யும் அவதூறும் மட்டுமே நிறைந்த கட்டுரைதான் இணைய புரளிகளின் துவக்கம், விகடனில் கட்டுரைகள் வரவைத்து புரளிகளை பொதுவுக்கு கொண்டுசென்றதும் அவர்தான்.

கோவையை சேர்ந்தவரும், பலமுறை ஈஷா சென்றவரும் ஆன அந்த இதழாளர் மர்மமான காரணங்களால் தன்னெஞ்சறிந்தே பொய் சொன்ன கட்டுரை இது.

http://www.athishaonline.com/2017/02/blog-post_20.html?m=1

உங்கள் கட்டுரை வந்தபின் அதை எதிர்கொள்ள வழியற்று ஊதுகிறார், குனிகிறார், காசு வாங்கிவிட்டார் என்கிறார் பாவம்.

நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி காட்டுயிர்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். ஏற்கனவே காடுகளின் பரபரப்பளவு குறைந்துவரும் நிலையில் மேலும் மேலும் ஆக்கிரமிப்பது தவறில்லையா? – அவருடைய வரி.

பத்து வருடமாக அவருக்கு ஈஷாவை தெரியும், எங்கே காடு அழிக்கப்பட்டது? அது முழுக்க பட்டாநிலம். மேய்ச்சல், விவசாய நிலம். மரங்களே இல்லாமல் இருந்த விவசாய நிலத்தில் ஈஷா வந்தபின் 20 ஆயிரம் மரங்களாவது இருக்கின்றன.

முதலில் லிங்கம் வைத்திருந்தாலும்எங்களுக்கு மதமில்லை என்றனர். ஆனால் விபூதி கொடுத்தனர். பிறகு லிங்கத்திற்கு பின்னாலேயே சக்தி பீடமோ என்னமோ ஒன்றை வைத்து குங்குமம் கொடுக்க ஆரம்பித்தனர். மலைச்சுனையிலிருந்து இயற்கையாக வருகிற நீரை உறிஞ்சி குளம்வெட்டி உள்ளேயே புனிதக் குளியலுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இது எதுவுமே இந்துமதத்திற்கு தொடர்புடையது இல்லையாம்எல்லாமே ஓர் இறை கொள்கைதானாம்இப்போது ஆதியோகி என மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றை நட்டுவைக்க போகிறது ஈஷா. இதுவும் கூட இந்துமதம் தொடர்பானது இல்லையாம்...

ஆக அவரது காழ்ப்புக்கு ஈஷாவின் இந்துமத அடையாளங்களும் மோடியின் வருகையுமே காரணம்.

ஆனால் அந்த சிலையை வைக்க வெறும் 300 சதுர மீட்டர் அளவுக்குத்தான் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால் சிலையை சுற்றி ஒருலட்சம் சதுர அடியில் பார்க்கிங், மண்டபங்கள், பூங்கா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டது

முழுப்பொய், காட்டில் இருந்து 2 கிமீ தள்ளி ஐம்பதாண்டுக்காலமாக விவசாய நிலமாக இருந்த, விலைகொடுத்து வாங்கப்பட்ட சொந்த இடத்தில் 100 அடிமட்டுமே நிரந்தர கட்டுமானம் உள்ளது.

ஒரு நாட்டின் பிரதமர் கிளம்பி வருகிறார். அவருக்கு இந்த சாமியாரின் மீதிருக்கிற அத்துமீறல் வழக்குகள் பற்றி ஒன்றுமே தெரியாதாஇப்படி ஒரு முட்டாளைப்போல கிளம்பிவந்து அந்த சாமியாரோடு இழித்தபடி மேடையில் உட்கார்ந்திருந்தால்அவனுடைய குற்றங்களுக்கு துணைபோவதாக ஆகிவிடாதா?

என்ன ஒரு பத்திரிக்கையாளர் பண்பு! முட்டாள் பிரதமர் இளித்தபடி அவனுடன்… இதே மொழியில் இவர்கள் மதிப்பவர்களை பிறர் எழுதினால் எப்படி எதிர்கொள்வார்கள்? அப்போது பண்பு பண்பு என்று கூவுவார்கள்.

இந்த அஞ்சாப்பொய்கள் அவசியம் பதிந்துவைக்கப்பட வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.

ஈஷா குறித்த என் வருத்தங்களும்…

ஈஷாவின் ஒருகோடி மரம் வளர்க்கும் அறிவிப்பு (2006 வாக்கில்) இந்த விமர்சனக்குரலுக்கு எதிர்வினை மட்டும்தான் என தோன்றுகிறது, ஒரு கோடி மரங்கள் நிச்சயம் 2016 ல் இல்லை, இருந்திருந்தால் அறிந்திருப்போம்.

நான் சிலமுறை ஈஷா போயிருக்கிறேன் (நிச்சயமாக உபயோகமான ஆரம்ப யோகா வகுப்புக்கும்) சின்மயா, தயானந்த சரஸ்வதி ஆசிரமங்கள் போலவே காட்டை ஒட்டி ஆசிரமம் அமைந்துள்ளது, அந்த காடுகள் கானுயிர்கள் நிறைந்தவை. இந்த ஆசிரமங்களால் அதிகரிக்கும் வாகன, மனித நடமாட்டங்களும் விழாக்களின் போது கூடும் லட்சக்கணக்கான மக்களும் நிச்சயமாக சூழியலுக்கு எதிரானவைதான்.

குறிப்பாக சிவராத்தியின்போது கூடும் வாகன ஓசையும், ஸ்பீ்க்கர்களால் எழும் பேரோசையும், அதீத மின்னொளியும் கானுயிர் சூழலுக்கு எதிரானவை, இதை படிக்கும் நண்பர்கள் ஜக்கிக்கு கொண்டு போய் சேர்த்தால் நல்லது.

அரங்கா

***

அரங்கா

அந்த இளைஞரை நான் அறிவேன். வழக்கம்போல அண்டிப் பிழைக்கத் தெரிந்த அடிமாட்டுத் தொண்டர். இந்த நாட்டில் இந்துத்துறவியை, பிரதமரை அவன் இவன் என்றெல்லாம் எழுதமுடியும். அல்லாது ஊரைச் சுரண்டி குடும்பமாகக் கொழுத்த உள்ளூர் தானைத் தலைவர்களையா அப்படி எழுதமுடியும்? கட்டைப் பஞ்சாயத்துக்காரர்களை, ஏரித்திருடர்களை, மணல்கொள்ளையரையா எழுதமுடியும்?

ஜெ

முந்தைய கட்டுரைஜக்கி கடிதங்கள் -6
அடுத்த கட்டுரைகல்வியழித்தல்