ஜக்கி -அவதூறுகள், வசைகள், ஐயங்கள் -2

ja

முந்தைய பதிவு – ஜக்கி அவதூறுகள், வசைகள், ஐயங்கள் -1

ஜக்கி மீதான குற்றச்சாட்டுக்களில் சில தொடர்ந்து எழுகின்றன. நான் முதலில் சுட்ட விரும்புவது அவருடைய அமைப்பு குறித்த விமர்சனங்களை வைத்து அவர் சொல்லும் அனைத்திற்கும் மீதான காழ்ப்பைக் கக்குவதன் தந்திரத்தை மட்டுமே. நாலாந்தர அரசியல் உத்தி மட்டும்தான் இது. ஜக்கி நில ஆக்ரமிப்பு செய்திருக்கிறார், ஆகவே அவருடைய யோகமுறை ஒரு மோசடி– இந்தவகையான கூற்றுக்கள்.

இவ்வாறு சொல்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் சென்ற ஐம்பதாண்டுக் காலத்தில் தமிழகத்தையே ஊழலில் மூழ்கடித்த மோசடி அரசியல் குடும்பங்களை ஆதரித்து கோவணத்துடன் நடனமாடும் அரசியல் அடிமாட்டுத் தொண்டர்கள் என்பது என்னை கசப்படையச் செய்கிறது.

ஜக்கி தன் மனைவியைக் கொன்றார், ஜக்கி கஞ்சா விற்றார், அங்கே போதைப் பொருள் அளிக்கப்படுகின்றது என்றெல்லாம் எல்லாவகையான அவதூறுகளும் பரப்பப்படுகின்றன. இருபதாண்டுகளுக்கும் மேலாக அவ்வமைப்புடன் அணுக்கமாக உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் எனக்கு உள்ளனர். இந்த அவதூறு ஒரு கீழ்மை மிக்கத் தாக்குதல் என நான் உறுதியாகவே அறிவேன்

யோசித்துப் பாருங்கள், ஜக்கி ஓர் இந்துத்துறவி என்பதனால்தானே இதைச் செய்யமுடிகிறது? ஒரு சாதாரண அரசியல்வாதிபற்றி இப்படியெல்லாம் சொல்ல இங்கே எவருக்காவது துணிவிருக்குமா?

நீங்கள் ஒரு நடுநிலையாளர் என்றால் கேட்டுக் கொள்ள வேண்டிய முதல் கேள்வி இதுதான். இங்கு பல்வேறு தளங்களில் இந்நாட்டின் செல்வத்தைச் சூறையாடி ஊழலில் திளைக்கும் அரசியல் குடும்பங்கள், கட்டைப் பஞ்சாயத்து குறுநில மன்னர்கள், மணற்கொள்ளையர், பாறைத்திருடர்கள் எவருக்கும் எதிராக எழாத இந்த உச்சகட்ட எதிர்ப்பு ஜக்கி மேல் மட்டும் ஏன் வருகிறது? அவர் அப்படி பொதுமக்களுக்கு என்ன தீங்கை இழைத்துவிட்டார்?

அப்படிக் கேட்டீர்கள் என்றால் அடுத்த கேள்விக்குச் சென்றுசேர்வீர்கள். அந்த குற்றவாளிக் கூட்டங்களிடம் கைகட்டி நிற்பவர்கள் அல்லவா இன்று ஜக்கிக்கு எதிராக முகநூலில் கூச்சலிடும் கும்பல்களில் பெரும்பகுதியினர்?

ஜக்கி தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்து பிறர் மகள்களை துறவியாக்குகிறாரா?

மீண்டும் மீண்டும் பேசப்படும் இந்த கேள்வியே நம் சூழல் எந்த அளவுக்குப் பாமரத்தன்மை கொண்டது என்பதற்குச் சான்று. ஜக்கி அமைப்புடன் தொடர்புடைய பல்லாயிரம் பேரில் கிட்டத்தட்ட நூறு பேர் தான் அங்கே துறவிகள். அவர்களும் பலவகையான சோதனைக்குப் பின்னர், பல எச்சரிக்கைகளுக்குப் பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். சுயவிருப்பால் உள்ளே செல்கிறார்கள். அவர்களிலேயே பலர் வெளியேறுவதும் நிகழ்கிறது. பலரை எனக்கே தனிப்பட்ட முறையில் தெரியும்.

இங்கே கிறித்தவ அமைப்புகளில் பல ஆயிரம் கன்யாஸ்த்ரீகள் உள்ளனர். சமண குருகுலங்களில் சமணத்துறவிகள் உள்ளனர். அனைவரும் மொட்டையடித்துக் கொண்டவர்களே. சுயவிருப்பால் அப்பாதையை அவர்கள் தெரிவுசெய்தால் என்ன தவறு? ஒரு பெண்ணுக்கு துறவு பூண முடிவெடுக்க உரிமை இல்லையா என்ன?

இல்லை, ஜக்கி குடும்ப வாழ்க்கையை ஆசைப்பட்ட தன் மகளை வலுக்கட்டாயமாக மொட்டையடித்துச் சாமியாராக ஆக்கியிருக்க வேண்டும் என்கிறார்களா?

ஜக்கியின் மனைவி இறப்பு சந்தேகத்துக்கு உரியதாக சொல்லப்படுகிறதே? அங்கு நடனம் போன்றவை நடைபெறுகின்றனவே? இது அனுமதிக்கத்தக்கதா?

எந்த ஆன்மிக குருவும் இளமையின் நீண்ட அலைக்கழிப்புகள், கொந்தளிப்புகள், அலைந்து திரிதல்கள் வழியாகவே உருவாகி வந்திருப்பார். பலவகையான வாழ்க்கை முறைகளை சோதித்துப் பார்த்திருப்பார். பிழைகள் குழப்பங்கள் வழியாகவே மேலெழுந்திருப்பார்.

ஆசாரமான வாழ்க்கையும் நடுத்தரவர்க்க ஒழுங்கும் கொண்டு வாழும் ஆத்மாக்கள் எவரும் ஆன்மிகமாக எதையும் அடையமுடியாது. வேளை தவறாது வெந்ததை உண்டு வாழும் சீலைப்பேன் வாழ்க்கையை ஆன்மிகவாதிகளிடம் நாம் எதிர்பார்க்கக்கூடாது. ரிஷிமூலம் தேடலாகாது என்பது இதனால்தான்

ஜக்கி அவருடைய திருமண வாழ்க்கையைப் பற்றி தெளிவாகவே எழுதியிருக்கிறார். அவருடைய தேடல்களையும் அலைபாய்தல்களையும் சொல்லியிருக்கிறார். அவருடைய மனைவியின் தந்தையைப் போன்ற லௌகீகருக்கு அவர்கள் தெரிவு செய்து கொண்ட வாழ்க்கையின் ஆபத்தும் சிக்கல்களும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதைப் பற்றி உளக்கொந்தளிப்பு கொண்டதும் எதிர்த்ததும் இயல்பே. ஆனால் அவர்களால் அந்த வசைகள் அன்றி எந்த ஆதாரமும் அளிக்கமுடியவில்லை. ஜக்கியின் மகள் அவருடன் தான் இன்றும் இருக்கிறார்.

சீலைப்பேன்கள் ஆன்மிக அமைப்புக்களை எதிர்ப்பது இந்தியாவெங்கும் உள்ளதுதான். ஆனந்த மார்க்கத்தை இடதுசாரிகள் கல்கத்தாவில் பலமுறை தாக்கியிருக்கிறார்கள். ஓஷோ மையம் பூனாவில் பலமுறை தாக்கப்பட்டுள்ளது. அரவிந்தர் ஆசிரமம் பற்றி உள்ளூர் கேடிகளும் நில ஆக்ரமிப்பாளர்களும் வழிநடத்த உள்ளூர் மக்கள் ஆயிரம் பொய்க் கதைகளைச் சொல்லிப் பரப்புகிறார்கள்.

சீலைப்பேன் வாழ்வின் சீரான தன்மை, மடி ஆசாரமெல்லாம் ஆன்மிக அமைப்புகளில் இருக்கமுடியாது. அவை மாற்றுவாழ்க்கைக்கான அறைகூவல்கள். அவை ஒருவகைச் சோதனைச் சாலைகள். கேரளத்திலுள்ள சித்தாஸ்ரமம் என்னும் தொன்மையான அமைப்பு கட்டற்ற பாலுறவை தன் உறுப்பினர்களுக்கு அமைத்துள்ளது. அன்னைக்கும் மகனுக்கும் இடையேகூட உறவு அனுமதிக்கப்பட்டுள்ளது அங்கு. நாம் பொதுவாக அறியாத ஆசாரங்களும் ஒழுக்கங்களும் கொண்ட மெய்வழிச்சாலை போன்ற அமைப்புக்கள் இங்குள்ளன. பல்வேறு தாந்த்ரீக அமைப்புக்கள் இங்கே செயல்படுகின்றன.

அத்தகைய பலவகையான சோதனை முறைகளை, பிரிவுகளை அனுமதிக்கும் சமூகமாகவே இந்தியா என்றும் இருந்துள்ளது. மதக்கெடுபிடி மிக்க மத்திய ஆசிய நாடுகளைப் போன்றது அல்ல இந்நிலம். அல்லது சம்பிரதாய ஒழுக்கவியலை போதிக்கும் நாடுகளைப் போன்றதும் அல்ல. என்றும் இந்தச் சுதந்திரத்துடன் மட்டுமே இந்நிலம் இருந்தாக வேண்டும். அதில் மாற்று மதத்தினரும் நாத்திகர்களும் ஆசாரவாதிகளும் பேச ஒன்றுமில்லை.

இங்குள்ள சீலைப்பேன்களின் அரைவேக்காட்டு ஒழுக்கவியலின்படி தொன்மையான இந்த தேசம் செயல்படவேண்டும் என்று சொல்வார்கள் என்றால், அதற்காக ஆன்மிக அமைப்புக்களின் மேல் ஏதேனும் கட்டாயங்களைச் செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அரசு என்றால் என்ன என்பதை கற்பித்தாக வேண்டும். இந்த நாடு என்றும் மதங்களின். நம்பிக்கைகளின், ஆசாரங்களின் ஈற்றறையாகவே இருந்தது. இருக்கவேண்டும்.

ஜக்கி ஒரு வகை வாழ்க்கை முறையை அவருடைய மாணவர்களுக்கு அளிக்கிறார் என்றால் அது அவருடைய சுதந்திரம். அவர்களின் தெரிவு அது. அதில் வெளியே இருக்கும் ஆசாமிகள் கருத்துச் சொல்ல ஏதுமில்லை. அரசியல்வாதிகளின் ஆணைப்படி அனைத்தும் இங்கே நிகழவேண்டுமென்பதில்லை. பொது வாழ்க்கையில் இருக்கும் அரசியல்வாதிகளின் நாலாந்தர வாழ்க்கையை சப்பைக்கட்டு கட்டும் கும்பல்களால்தான் இத்தகைய ஆன்மிக அமைப்புக்கள் வசைபாடப்படுகின்றன என்பது நம் கீழ்மையின் சான்று அன்றி வேறல்ல.

நம் முற்போக்குக் கும்பலுக்கு ஜனநாயகத்தில் சற்றேனும் ஆர்வமிருந்தால் இந்த அசட்டு ஒழுக்கவியலை சமூகத்தின் பொதுவிதியாக ஆக்கி அனைத்து அமைப்புகளையும் கண்காணிக்கும், அவதூறு செய்யும் கும்பலுக்கு எதிராகவே பேசியிருக்கவேண்டும்

ஜக்கியின் அமைப்பு பழமைவாதம் சார்ந்ததா?

சென்ற இருபதாண்டுக் காலத்தில் தலித் அரசியல், மூன்றாம்பாலின சமத்துவம் முதல் அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தில் மிகமிக முற்போக்கான நிலைபாடுகள் எடுத்துள்ள மத அமைப்பு ஜக்கியுடையது. இன்றைய சூழலில் இதை வரவேற்பதே இங்கு ஆக்கபூர்வமான எந்த மாற்றமும் நிகழ்வதில் ஆர்வம் உடையவர்கள் செய்ய வேண்டியது.

ஜக்கியின் அமைப்பு நில ஆக்ரமிப்பு செய்துள்ளதா?

நான் விசாரித்தவரை ஜக்கியின் அமைப்பின் தொடக்கத்தில் அமைந்த இடம் லட்சுமிமில்ஸ் அமைப்பால் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. பிற அத்தனை நிலங்களும் சட்டபூர்வமாக விலைகொடுத்து வாங்கப்பட்டவை. மிகப்பெரிய அளவிலான நிலமெல்லாம் அல்ல. அங்கே ஜக்கி வைத்திருப்பதைவிட அதிகநிலம் வைத்திருக்கும் பல விவசாயிகள் உள்ளனர். சில கல்விநிலையங்கள் பலமடங்கு நிலம் வைத்துள்ளன.

அன்று அந்நிலங்களின் மதிப்பு மிகக்குறைவு. விவசாய – மேய்ச்சல்நிலம் அது. இன்று அவரால் அந்நிலத்தின் மதிப்பு ஏறியிருக்கிறது. அன்று சந்தை விலையைவிட கூடுதலாக பெற்று அந்நிலங்களை அவருக்கு விற்றவர்கள் இன்றுள்ள மதிப்பை நினைத்துக்கொண்டு தாங்கள் மோசடி செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

என்னிடமே ஒருவர் அதைப் பற்றிப் பேசினார். ஜக்கியிடமிருந்து நிலத்தை மீட்கவேண்டும் என ஒரு துண்டுப் பிரசுரத்துடன் வந்து என்னைச் சந்தித்தார். அப்பகுதியில் ஏக்கருக்கு இரண்டு லட்சம் விலை இருந்தபோது அவர் மூன்று லட்சத்திற்கு ஜக்கி அமைப்புக்கு நிலம் விற்றிருக்கிறார். இன்று மதிப்பு முப்பது லட்சமாம். ஆகவே தன் நிலம் திரும்ப அளிக்கப்படவேண்டும் என அவர் கூறுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ஜக்கி வெளியாள் என்பது. ’அதெப்டீங்க நம்ம நெலத்த அசலூர்க்காரன் கொண்டுட்டுப்போலாம்?” இதைத்தான் நம்மவர் மோசடி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜக்கியின் நில ஆக்ரமிப்பு குறித்த எல்லா செய்திகளும் சமூக ஊடகங்களில் உலாவரும் அவதூறுகள். அவர் இன்று கட்டியிருக்கும் சிலை இருக்கும் இடம் உட்பட அனைத்தும் சட்டபூர்வமான நிலம் என அவ்வமைப்பு ஆதாரபூர்வமாகச் சொல்கிறது. சட்டவிரோத ஆக்ரமிப்பு இருந்தால் அதை நிரூபிக்க வேண்டிய இடம் நீதிமன்றம். சமீபகாலம் வரை அவருடைய பட்டாநிலம் வழியாக யானைகளின் வழித்தடம் உள்ளது என்பதை மட்டுமே குற்றச்சாட்டாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது மொத்தநிலமும் மோசடி என ஆரம்பித்துவிட்டார்கள்.

கட்டிடம் கட்டுவது உட்பட அங்கே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாமா? வேறுவகை மீறல்கள் இருக்கலாமா? இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். பெரிய அமைப்புக்கள் பலவும் அத்தகைய மீறல்கள் வழியாகவே செயல்படுகின்றன இங்கே. அவற்றை ஆதாரபூர்வமாகத் தட்டிக்கேட்கலாம். நீதிகோரலாம். போராடலாம்.

ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகளின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் பிற நிறுவனங்களும் அரசுநில ஆக்ரமிப்பால்தான் அமைந்துள்ளன. காட்டுநிலம் சூறையாடப்பட்டுதான் தமிழகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் சிறுபான்மை அமைப்பினரின் பல கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான மலைப்பகுதிச் சுற்றுலா விடுதிகள் கட்டிடம் கட்டும் விதிகளை மீறியவையே இதை அறியாத குழந்தை கூட தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.

அவற்றுக்கு எதிராகவும் எழும் பொது எதிர்ப்பின் ஒரு பகுதியாகத்தான் இவ்வெதிர்ப்பும் அமையவேண்டும். அக்கட்சிகளின் கொடிகளைப் பிடித்துக் கொண்டு அலைபவர்கள் ஜக்கியின் விதிமீறல்கள் மட்டுமே இங்கே பிரச்சினை என பேசுவது என்ன அரசியல் என்பதை நாம் அடையாளம் காணவேண்டும்.

ஜக்கியின் அமைப்பு சூழியலை அழிக்கிறதா?

சூழியல் சார்ந்த பிரக்ஞை உள்ள அமைப்புகளே இங்கே குறைவு. ஜக்கியின் அமைப்புக்கும் அந்தப் பிரக்ஞை இருக்கிறது என நான் நினைக்கவில்லை. மிகக் கணிசமான விடுதிகள், மத நிறுவனங்கள் சூழியலுக்கு எதிரானவையாகவே அமைந்துள்ளன. அவற்றுக்கு எதிரான ஒரு பொது எதிர்ப்பு ஜக்கிக்கும் எழுமென்றால் நன்று.

பொதுவாக பெரும் அமைப்புக்கள் அனைத்தையுமே சூழியலாளர்கள் மத, சாதி, அரசியல் பாகுபாடில்லாமல் கண்காணித்துக் கொண்டும் பிறழ்வுகளை சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் எதிர்த்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

முன்பு ஒரு சூழியலாளர் எனக்கு கொதிப்புடன் எழுதியிருந்தார், ஜக்கி வைக்கும் வினைல் போர்டுகளால் சூழியல் அழிகிறது என. குப்பை மலைகள் மண்டிய தமிழகத்தில், நீர்நிலைகள் சூறையாடப்பட்ட தமிழகத்தில், நிலத்தடிநீர் நஞ்சாகிவிட்ட தமிழகத்தில் உள்ள ஒரே சூழியல் பிரச்சினை அந்த சில நூறு வினைல் போர்டுகளாம். இந்தவகையான உள்நோக்கம் கொண்ட எதிர்ப்புகள் சூழியல் பிரக்ஞை கொண்டவையே அல்ல.

mo

மோடி இந்த விழாவில் கலந்துகொள்ளலாமா?

முன்பு அமெரிக்க அதிபர் புஷ் பில்லி கிரகாம் என்னும் கார்ப்பரேட் மதபோதகரின் சீடராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது அமெரிக்க வாழ் நண்பர் கடுமையாக அதைக் கண்டித்திருந்தார். அமெரிக்காவின் மதச்சார்பின்மைக்கு அது எதிரானது என்று சொன்னார். நான் அவ்வாறு நினைக்கவில்லை. மதநம்பிக்கை கொண்டவர் அமெரிக்க அதிபர் ஆகக்கூடாது என்றில்லை. அதை அவர் ஒளிக்கவேண்டும் என்றும் இல்லை. அதைத்தான் இப்போதும் சொல்வேன், மோடி அவரது மதநம்பிக்கையை ஏன் ஒளிக்கவேண்டும்?

முன்னரே மோடி நாராயண தர்ம சமிதி [நடராஜ குரு, நித்யாவின் அமைப்பு அல்ல] நிகழ்த்திய பெருநிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். அவர்கள்தான் அவரை முதலில் அங்கீகரித்த குருகுலம். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கும் அவர் அணுக்கமானவரே.

ஆனால் மதச்சார்பற்ற நாட்டின் அதிபர் இதேபோல இஸ்லாமிய கிறித்தவ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும், தவிர்க்கக்கூடாது என்பது என் எண்ணம். தவிர்த்தால் அது சரியல்ல என்றுதான் சொல்வேன்

அதன் மறுபக்கமாக ஒரு பதில் எழக்கூடும். இந்து நிகழ்ச்சிகளை எள்ளி நகையாடி இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் தொப்பியுடன் கலந்துகொள்ளும் தலைவர்கள் இருக்கும்போது அதற்கு எதிர்வினையாகவேனும் மோடி போன்றவர்கள் வரத்தான் செய்வார்கள். ஆனால் அது மோடி பிறமதத்தவர் நிகழ்ச்சிகளை தவிர்ப்பார் என்றால் அதை நியாயப்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

பகுத்தறிவு சார்ந்த எதிர்ப்புகள் தேவையா?

ஆம், அவதூறுகள் காழ்ப்புகள் இல்லாமல் நிதானமான மொழியில் பகுத்தறிவுசார்ந்து யோகமுறைமைகளை, மதவழிபாடுகளை, பண்பாட்டு நம்பிக்கைகளை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் மிகமிகத் தேவை. ஏனென்றால் அவர்கள்தான் இந்த இயக்கத்தின் எதிர்விசை. இவை மூடநம்பிக்கைகளாக மோசடிகளாக ஆகாமல் தடுக்கும் சக்திகள் அவர்கள்.

யோகமுறைகள் போன்றவை அகவயமானவை என்பதனாலேயே எளிதில் மோசடியாக ஆகத்தக்கவை. மதவழிபாடுகள் மிக எளிதில் வணிகமாக ஆகும் தன்மை கொண்டவை. வலுவான பகுத்தறிவு எதிர்நிலையே அவற்றுக்கான கட்டுப்பாடு. எந்த கருத்து முதல்வாத, ஆன்மிக தரப்பும் பொருள்முதல்வாத, நாத்திகத் தரப்புடன் விவாதித்தே முன்னகரவேண்டும்

ஆனால் அந்த பொருள்முதல்வாத, நாத்திகத் தரப்பு தங்கள் கொள்கையில் உறுதிகொண்டவர்களாக இருக்கவேண்டும். அவர்களின் எதிர்ப்பரசியல் என்பது மதப்பாகுபாடுகள் கொண்டதாகவும் சந்தர்ப்பவாத அரசியல் சார்ந்ததாகவும் அமையக்கூடாது.

இன்று எழும் மூர்க்கமான எதிர்ப்புகளின் உண்மையான பின்னணி என்ன?

உண்மையான பின்னணி ஒன்றே, ஜக்கிக்கு வரும் கூட்டம். அந்தக்கூட்டம் மோடிக்கு ஆதரவானதாக ஆகிவிடுமா என்னும் அரசியல் பதற்றம். அடுத்ததாக இவர்கள் உருவாக்கும் இந்து மதக்காழ்ப்புக்கு எதிராக அறிவார்ந்த குரல்கள் எழுவதன் மீதான அச்சம்.

நான் ஜக்கி அமைப்பை ஆதரிக்கிறேனா?

இல்லை. அதைப் புரிந்து கொள்கிறேன், அதன் வரலாற்றுப் பங்களிப்பை ஏற்கிறேன் அவ்வளவுதான். அது அளிக்கும் வரலாற்றுப் பங்களிப்பு காரணமாகவே அது வசை பாடப்பட்டு அவதூறு செய்யப்படும்போது எதிர்வினையாற்றுகிறேன்.

நான் அவ்வமைப்பை ஏன் ஏற்கவில்லை?

ஒன்று, பெரிய அமைப்புக்கள் கருத்துச் செயல்பாட்டின் மேலோட்டமான தளங்களை மட்டுமே தொடமுடியும் என நினைக்கிறேன். அவை ஒருவகை சமூக இயக்கங்கள் மட்டுமே. அவை பல்லாயிரம்பேர் பங்குகொள்வதனாலேயே அனைவருக்கும் பொதுவான சராசரியைத்தான் அடையமுடியும். ஆகவே அவை மிகமிகச் சராசரியான ஒரு தத்துவக் கல்வியை, ஆன்மிகப் பயிற்சியை மட்டுமே அளிக்கமுடியும் என நினைக்கிறேன்.

இரண்டு, அமைப்புகள் எவையாயினும் அவற்றில் ஊழல்கள், உறவுப் பிரச்சினைகள், ஆணவ மோதல்கள் என பல உள்ளுறைச் சிக்கல்கள் இருக்கும். அவையின்றி அவற்றை நடத்தவே முடியாது. ஜக்கி குருகுலம் போன்ற பெரிய அமைப்புக்களில் அவை மிகப்பெரிய அளவில் இருக்கும். பல்வேறுவகை மக்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கெடுக்கும் அமைப்புகளில் சமூகத்தின் ஒட்டுமொத்த தீங்கும் எவ்வகையிலோ பிரதிநிதித்துவ அடிப்படையில் இருக்கும். அங்கே தேர்வுக்கெல்லாம் வாய்ப்பில்லை

ஒரு பெரிய அமைப்புதான் மக்களிடம் மிகப்பெரிய அளவில் ஒன்றைக் கொண்டு சேர்க்க முடியும், அதன் பங்களிப்பு அது. ஆனால் பெரிய அமைப்புகளுக்குரிய அனைத்து சிக்கல்களும் உடன் வந்துசேரும். அதுவேண்டுமேன்றால் இதை சகித்தே ஆகவேண்டும். எனக்கு அதில் ஆர்வமில்லை.

மூன்று, குரு என்பவர் ஒரு மனிதர். நீங்கள் அவரை அறிவதைவிட அவர் உங்களை அறிவது முக்கியமானது. இங்கே அளிக்கப்படுவது ஒரு பிம்பம். ஊடகம் உருவாக்குவது. அதை நாம் எப்படி வேண்டுமென்றாலும் உருவகித்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல. குரு என்பவர் நம்மை அறிந்த, நமக்காக மட்டுமே பேசக்கூடிய, நாம் உடனுறையும் வாய்ப்பளிக்கும் ஒரு மனிதர் மட்டுமே. ஆகவே இவை குருகுலங்கள் அல்ல.

நித்ய சைதன்ய யதி எனக்கு உள்ளும் புறமும் தெரிந்தவர். ஜக்கியை அவர் குருகுலத்தில் உள்ளவர்களில் சிலர் தவிர பிறர் அணுகித் தெரிந்து கொள்ள முடியாது. அவர் ஒரு பிம்பம் மட்டுமே. அத்தகைய பிம்பங்கள் சிலவகையில் முக்கியமானவை, அவை சில கருத்துக்களின் குறியீடுகள். ஆனால் நான் மனிதர்களை ஏற்பவன்.

நான்கு, நான் இவ்வமைப்புகள் அளிக்கும் பயிற்சியை கவனித்திருக்கிறேன். எனக்கு அவை தேவை எனத் தோன்றவுமில்லை. என்னால் ஒட்டுமொத்தமாகச் செய்யப்படும் விஷயங்களில் ஈடுபட இயலாது. என் இயல்பு தனித்துச்செல்வதே.

ஆகவே எவ்வகையிலும் நான் ஜக்கியை ஏற்கும் மனநிலையில் இல்லை. அவர் மேல் ஒரு ஆர்வம் மட்டுமே எனக்குள்ளது. என் குருமரபு வேறு.

*

கார்ப்பரேட் குருக்கள் தேவையானவர்களா?

ஜக்கி

ஜக்கி வாசுதேவ்

ரவிசங்கர் ஜக்கி-கடிதம்

முந்தைய கட்டுரைஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1
அடுத்த கட்டுரைஜக்கி கடிதங்கள்-1