ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1

ja

 

சென்ற எட்டு நாட்களில் முப்பத்திமூன்று மின்னஞ்சல்கள், ஜக்கி வாசுதேவ் பற்றி கேட்டு. எப்படியாவது ஒரு வசையை வாங்கிப் பரப்பலாம் என்னும் நோக்கம் கொண்டவை, உண்மையிலேயே ஐயம் கொண்டவை, என்ன ஏது என்று தெரியாமல் பரப்பப்படும் ஒற்றை வரிகளை முன்வைப்பவை.

இளையவாசகர் சந்திப்பில் அமர்ந்ததுமே ஒருவர் கேட்ட முதல்கேள்வியும் அதுதான். விளக்கமாக பேச வேண்டியிருந்தது. ஆகவே கேள்விகளை தொகுத்துக் கொண்டு ஒரு விளக்கத்தை பதிவு செய்யலாமென நினைத்தேன். அதற்கு இணையக் களேபரங்கள் கொஞ்சம் முடியட்டும் என காத்தேன்

முதலில் இவ்விஷயத்தில் தொண்டைநரம்பு புடைக்கக் கத்திக் கூச்சல் போடும் நபர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி, சென்ற காலங்களில் இந்துமதத்தின் ஏதாவது அமைப்பு குறித்து, ஏதாவது ஆளுமையைப் பற்றி, ஏதேனும் நூல் சார்ந்து நீங்கள் ஏதாவது சாதகமான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்களா என்பதுதான். இல்லை, இந்துமதமே ஒட்டு மொத்தமாகச் சாணிக்குப்பை என்று பதில்வருமென்றால் அவர் பேசுவது வெறும் காழ்ப்பு. ‘அது உன் புண் ராசா, நீயே வைத்து நோண்டு’ என்பதைத்தவிர அந்த ஆத்மாவிடம் எதுவும் பேசவேண்டிய தேவை இல்லை.

லட்சுமி மணிவண்ணன் சொன்னதுபோல இதில் முற்போக்கு, சூழியல், பகுத்தறிவு முகமூடிகளை மாட்டிக்கொண்டு வந்து பேசுபவர்களில் கணிசமானவர்கள் மாற்றுமதங்களைச் சேர்ந்தவர்கள். தங்கள் மதத்தின் உலகலாவிய அழிவுப்போக்கு, வன்முறை வரலாறு, இன்றைய ஊழல்கள், உள்மோதல்கள், அப்பட்டமான மூடநம்பிக்கைப் பரப்பல்கள், மோசடி மதமாற்றங்கள் பற்றி ஒரு சொல்லும் சொல்லாதவர்கள் இவர்கள். அங்கே இந்த முகமூடிகள் ஏதுமில்லாமல் சொந்த முகத்துடன் வாய்பொத்தி நிற்பவர்கள். ஏனென்றால் அவர்களின் மதஅமைப்பு சர்வவல்லமை கொண்டது. அவர்களை வேரடி மண்ணோடு கெல்லி அகற்றும் ஆற்றல் கொண்டது. அவர்களுடையதை மதக்காழ்ப்பு என்னும் மனநோய் என்று அன்றி கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.

கடைசியாக, உண்மையிலேயே பகுத்தறிவுத் தரப்பாகச் செயல்படக் கூடியவர்கள். சொந்த வாழ்க்கையில் அந்தப் பின்புலம் கொண்டவர்கள் ,அனைத்து நிலையிலும் பகுத்தறிவு நோக்கை கைக்கொள்பவர்கள் மட்டும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். அவர்கள் தர்க்கப்பூர்வமான மொழியில் பேசினார்கள் என்றால் மறுதரப்பாகக் எடுத்துக் கொள்ளலாம். வெறும் அவதூறு, வசைபாடல் என்றால் ’போடா’ என்று மட்டும் அன்போடு சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

தான் மறுக்கும் ஒரு தரப்பைப் பற்றி எள்ளலையும் வெறுப்பையும் அவதூறுகளையும் மட்டுமே கக்கிக் கொண்டிருப்பவன் ஒரு நோயாளி மட்டுமே. அவனுக்குச் சிந்தனையில் நம்பிக்கை இல்லை. விவாதத்தில் நம்பிக்கை இல்லை. அதேபோல அவன் எதிர்க்கும் தரப்பு அவன் நம்பும் ஆளுமைகளையும் கருத்துக்களையும் எள்ளலும் காழ்ப்புமாகப் பேசினால் அவன் கொந்தளிப்பதைப் பார்க்கலாம். பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

 

photo
ரவிசங்கர்

 

 

 

மற்றவர்களின் ஐயங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றியே இக்கட்டுரையில் பேசலாமென நினைக்கிறேன்.

காப்பரேட் சாமியார்கள் தேவையா? அவர்களால் என்ன நன்மை?

1980-களில் நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் பாதிப்பேர் இந்துக்கள் அடங்கிய எங்கள் கல்லூரியில் உச்சகட்ட மதமாற்றப் பிரச்சாரம் நிகழும். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இருசாராருமே இந்துக்களை நோக்கி உங்களுக்கு வெறும் சடங்குகளும் ஆசாரங்களும் மட்டுமே உள்ளன. உங்கள் மதத்தில் ஞானநூல்கள் இல்லை. எங்களுக்கு மெய்நூல்கள் உள்ளனஎன வாதிடுவார்கள். நான் உட்பட எந்த இந்து மாணவனுக்கும் இந்து மதநூல்களைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இந்து தத்துவமோ ஆன்மீகமோ தெரியாது. உண்மையிலேயே அப்படி ஏதுமில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும்.

அவர்களுடன் எப்போதும் இணைந்து கொண்டு செயல்படும் திராவிடர் கழகமும் அதையே சொல்லும். புராணக் கதைகளை எடுத்துக்கொண்டு அதை மிக எளிய அன்றாடத் தளத்தில் வைத்துகட்டுடைப்பார்கள்’. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றால் அவர்கள் ஓரினச்சேர்க்கையா செய்தார்கள் என்பது போன்ற பகுத்தறிவுக் கேள்விகள்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பதில் சொல்ல மரபான மடாதிபதிகளால், மதப்பிரச்சாரகர்களால் இயலவில்லை. ஏனென்றால் அவர்களும் சடங்குகள், புராணங்களுக்குள் மட்டும் செயல்பட்டவர்கள்தான். நவீனச் சிந்தனைகளுடன் அறிமுகம் அற்றவர்கள். ஒருமுறை நான் இந்தப் பகுத்தறிவுக் கேள்விகளைப் பற்றி ஆழ்ந்த ஐயத்துடன் கிருபானந்தவாரியாரிடம் விளக்கம் கேட்டேன். முருகனின் வேல் உங்களை காப்பாற்றும், அதை வழிபடுங்கள் போதும் என்று பதில் சொன்னார்.

ஆன்மிகமும் தத்துவமும் அறிந்த சிலர் இருந்தனர், அவர்களை மிகச்சிறிய வட்டத்திற்குள் மட்டுமே அறிந்திருந்தனர். பெரும்பான்மையை நோக்கிச்செல்ல அவர்களிடம் ஊடகம் இல்லை, அமைப்பு இல்லை. இந்துமதம் சார்ந்து அமைப்புக்களை உருவாக்குவது எளிதும் அல்ல.

இச்சூழலில்தான் கார்ப்பரேட் சாமியார்கள் வருகிறார்கள், குறிப்பாக ஜக்கி வாசுதேவ், வேதாத்ரி மகரிஷி, மற்றும் ரவிசங்கர். “இந்துமதத்திற்கு நூல்கள் ஏதேனும் உண்டா?” என டிஜிஎஸ் தினகரன் நாகர்கோயிலில் பல்லாயிரம் பேர் கூடிய மாபெரும் கூட்டத்தில் அறைகூவியதை நான் நினைவுகூர்கிறேன். இன்று அதே மைதானத்தில் தான் ஜக்கி பல்லாயிரம் பேரைக் கூட்டி பதஞ்சலி யோகசூத்திரம் பற்றியும் உபநிடதங்கள் பற்றியும் பேசுகிறார். இப்படி ஒரு காலம் வந்துள்ளது.

இன்று மேலே சொன்ன இந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஓர் இந்து இளைஞனிடம் சொல்லமுடியுமா? உன்னதமான யோகநூல்களும் தத்துவநூல்களும் காவியங்களும் இந்துமதத்தில் உள்ளன என்று ஒருவனாவது எழுந்து பதில் சொல்வான். பதஞ்சலியோக சூத்திரம் என்றும் யோகவாசிஷ்டம் என்றும் உபநிடதங்கள் என்றும் எடுத்துச் சொல்வான். இந்த இடத்துக்கு வந்துசேர இருபதாண்டுக் காலமும் அமைப்பு சார்ந்த மாபெரும் பிரச்சாரமும் தேவைப்பட்டுள்ளது.

நாகர்கோயிலிலேயே எட்டாண்டுகளுக்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் ஐயப்பனைப்பற்றி அதே பழைய பகுத்தறிவு நையாண்டியைப் பேசிய பழைய கறுப்புச் சட்டைக்காரரிடம் 18 வயதான ஓர் இளைஞன் எழுந்து சிவன் யோகசக்தி. விஷ்ணு போகசக்தி. இரண்டும் இணைந்து உருவானதே ஐயப்பன். அது குறியீட்டு முறையில் சொல்லப்பட்டுள்ளது. உலகம் முழுக்க எல்லா ஞானமரபுகளிலும் குறியீடுகள் உள்ளன, உளறாதீர்கள்என பதில் சொன்னான்.

கறுப்புச்சட்டை பரிதாபமாக தம்பி நீ இங்கர்சால், கார்ல்மார்க்ஸ், பெரியார்லாம் படிக்கணும்என்றார்.அதெல்லாம் பழைய சிந்தனைகள். நீங்க முதல்ல ஜோசஃப் கேம்பல் படியுங்க. சிமியாலஜின்னு ஒண்ணு இருக்கு, போய்ப் படியுங்க. குறியீட்டை குறியீடா பாக்கிறது எப்டின்னு தெரிஞ்சுட்டு பேசுங்க. உளறாதீங்கஎன்றான்.

அட!என வியந்தேன். அவனை அழைத்துப் பேசினேன். அவன் பேசியது அப்படியே நாகர்கோயிலில் ஜக்கி வாசுதேவ் அக்கேள்விக்குச் சொன்ன பதில் என அறிந்தேன். கார்ப்பரேட் குருமார்களைப் பற்றிய என் எண்ணம் அப்போதுதான் பெரிய அளவில் மாறியது.

இதற்குத்தான் கார்ப்பரேட் அமைப்பு. நானும் இதே விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் ஐம்பதாயிரம் பேரைச் சென்றடைய முடியாது. ஜக்கி வாசுதேவின் அமைப்புதான் அந்த அடிப்படைச் சிந்தனைகளை ஐந்து கோடி பேரிடம் கொண்டுசென்று சேர்க்கமுடியும்.

இங்கே இந்துச் சிந்தனைகளையும் பண்பாட்டையும் கொச்சைப்படுத்தி பேசிவருபவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே அமைப்பாகத் திரண்டவர்கள். ஈவெரா ஊர் ஊராகப்போய் நிதி திரட்டினார். எடைக்கு எடை நன்கொடை பெற்றுக் கொள்ள ஊர்தோறும் தராசில் அமர்ந்தார். அந்தப் பணத்தால் பேச்சாளர்களை உருவாக்கி ஊர்தோறும் அனுப்பினார். இன்றும் அது ஜக்கிவாசுதேவ் அமைப்பை விட பலமடங்கு வலுவான செல்வமும் அரசியல் ஆதரவும் கொண்ட அமைப்பு.

இங்குள்ள மதமாற்ற அமைப்புகள் அனைத்துமே மிகப்பிரம்மாண்டமானவை. செல்வமும், அதிகாரமும், சர்வதேசத் தொடர்புகளும், அறிவுலகில் ஐந்தாம்படை வலையும் கொண்டவை. அந்த அமைப்புக்கள் உருவாக்கிய கருத்துப் பிரச்சாரத்தை, அதிலுள்ள அப்பட்டமான திரிபுகளையும் காழ்ப்புகளையும் கொஞ்சமேனும் எதிர்ப்பதற்கு இன்னொரு அமைப்பால் மட்டுமே முடியும். இன்றிருப்பவை ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் போன்றவர்களின் ஓரிரு சின்ன அமைப்புக்கள்தான். இன்னமும் உருவாகவேண்டும்.

இங்கு இந்துமதம் மீது காழ்ப்பை வளர்க்கும் அத்தனை அமைப்புக்களையும் அவற்றின் அத்தனை ஊழல்களுடன், அத்தனை குற்றக்கறைகளுடன் அப்படியே ஏற்றுக்கொண்ட கும்பல்கள்தான் இப்போது ஓரளவு உருவாகி வரும் இந்த அமைப்புக்கள் மீது அவதூறுகளையும் கக்கிக் கொண்டிருக்கின்றன. இது எவ்வகையிலும் அறம் சார்ந்ததோ, எதிர்க்கருத்தியல் சார்ந்ததோ அல்ல. வெறும் பதற்றம் மட்டுமே.

ஒரு சின்ன அவதானிப்பைப் பாருங்கள். ஒருநாளில் உங்கள் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கக் கிடைக்கும் மதப்பரப்பு தொலைக்காட்சிகள் எத்தனை! கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புக்கள் எவ்வளவு! எவ்வளவு பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டவை அவை! எத்தனை செல்வம்! ஜக்கிக்கோ ரவிசங்கருக்கோ ஒரு தொலைக்காட்சி ஊடகம் இன்றில்லை. அதற்கான நிதி அவர்களிடம் இல்லை [எப்படியாவது நிதி திரட்டி அவர்கள் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது என் வலுவான கோரிக்கை].

அந்த அமைப்புக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நம்மூர் முற்போக்குப் பகுத்தறிவுக்கு இந்தச் சின்ன அமைப்புக்கு எதிராக மட்டும் ஏன் இத்தனை காழ்ப்பு? மிக எளிய பதில் இதுதான், ஐயப்பனைப் பற்றி பேசிய அந்த இளைஞன் இங்கு உருவாகி வந்திருக்கிறானே, அவனைத்தான் இவை அஞ்சுகின்றன.

இவ்வகை அமைப்புக்கள் முன்பு இருந்ததில்லையே? இப்போது ஏன் இவை தேவையாகின்றன?

ஒரு கருத்தியல் அதற்கான அமைப்பை உருவாக்கிக் கொள்வது என்பது வரலாற்றில் எப்போதுமே இருந்து வந்ததுதான். கிறிஸ்தவம் இஸ்லாம் சீக்கியம் போன்ற தீர்க்கதரிசன மதங்கள் தன்னளவிலேயே மாபெரும் அமைப்புக்கள். மைய அதிகார அமைப்பும், வட்டார அதிகார அமைப்புக்களும், நிர்வாக முறைமைகளும் கொண்டவை. அவற்றுக்குள்ளும் நூற்றுக்கணக்கான துணை அமைப்புகள் பெரும் நிதியாதாரங்களுடன் அம்மதங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சர்வதேச அளவில் பரவியவை.

இந்துமதம் ஒரு தொகைமதம். பழங்குடி வாழ்க்கையில் இருந்து உருவானது. பழங்குடி வாழ்க்கையில் இருந்த பலநூறு ஆன்மிக தரிசனங்களும் வழிபாட்டுப் போக்குகளும் வரலாற்றின் பெருக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து, உரையாடி, தத்துவத்தைக் கட்டமைத்து உருவாகி வந்த ஒரு மரபு இது. ஆகவே அதற்கு மைய அமைப்பு இல்லை. ஆனால் வெவ்வேறு ஆன்மிகத் தரப்புகள், கருத்தியல்கள் தங்களுக்குரிய அமைப்புக்களை வரலாற்றில் உருவாக்கிக் கொண்டுதான் இருந்தன

இன்றுள்ள சைவ, வைணவ மடங்கள் கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குள் பக்தி இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் உருவானவை. சைவ, வைணவ மதங்களுக்கான கல்விமுறையை நிலைநிறுத்துவதும் ஆலயங்களைப் பராமரிப்பதும் அவற்றின் பணி. அவற்றுக்கு அரசர்களால் பெரும் செல்வம் அளிக்கப்பட்டது.

சங்கர மடங்கள் சங்கரரின் கொள்கையை நிலைநிறுத்தும் பொருட்டு அவரது மாணவர்களால் உருவாக்கப்பட்டவை. சங்கர வேதாந்தம் போன்ற தத்துவக் கொள்கைகளுக்கு இருவகை அமைப்புக்கள் உண்டு. ஒற்றை அமைப்பாகத் திரளாதவர்களும் அலைந்து திரியும் துறவிகளுமான சங்கர வேதாந்திகளின் குருசீடமரபு ஒருவகை அறிவியக்கம். இது ஏகதண்டி மரபு என்ற பேரில் அறியப்பட்டது. வெவ்வேறு இடங்களில் அமைந்து நிர்வாகம் போன்றவற்றில் ஈடுபட்ட சங்கர மடங்கள் இன்னொரு வகை அமைப்பு.

பின்னர் இந்திய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் மதச்சீர்திருத்த அலை உருவானது. அதில் தோன்றிய அத்தனை ஞானிகளுக்கும் அமைப்புக்கள் உள்ளன. விவேகானந்தரின் ராமகிருஷ்ண மடம், நாராயணகுருவின் நாராயணமடம், வள்ளலாரின் சத்யஞானசபை போல நூற்றுக்கணக்கில் உருவாயின. இவை அனைத்துமே மைய அமைப்பும் கிளைகளும் கொண்டவை. நிதியாதாரங்களை பக்தர்களின் கொடைகள் வழியாக திரட்டிக்கொண்டவை.

இன்று வேதாத்ரி மகரிஷி, ஜக்கி, ரவிசங்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புக்களை மூன்றாவது அலை என்று சொல்லலாம். இந்த ஒவ்வொரு அலைக்கும் அதற்கான பங்களிப்பு உள்ளது. நம் சைவ மடங்கள்தான் மிகமிக இடர்மிக்க படையெடுப்புக் காலகட்டங்களில் கூட தமிழ்நூல்களை பேணி, தமிழ்க்கல்வியை நிலைநிறுத்தியவை. ஆலய வழிபாட்டை காத்தவை. சிருங்கேரி மடம் இல்லையேல் தென்னகத்தில் இந்துமதமே இருந்திருக்காது.

ஆனால் அடுத்த காலகட்டத்தின் தேவைகளை அவை நிறைவேற்ற முடியவில்லை. ஐரோப்பிய கல்விமுறையுடனும் நவீன ஜனநாயகச் சிந்தனைகளுடனும் அவற்றால் உரையாட இயலவில்லை. ஆசாரங்களில் இருந்து அவை வெளியேறவும் முடியாது, ஏனென்றால் அவற்றின் கட்டமைப்பே ஆசாரங்களைக் காப்பதற்காக அமைந்தது. ஆகவே தங்கள் பங்களிப்பை வரலாற்றில் ஆற்றிவிட்டு அவை பணியை வரையறை செய்துகொண்டன. ஆகவே அடுத்த தலைமுறைக்கு ஏதும் சொல்ல முடியவில்லை. அதனால்தான் விவேகானந்தரின் அமைப்பும் நாராயணகுருவின் அமைப்பும் உருவாகி வரநேர்ந்தது.

[பழைய அமைப்புக்களுக்கும் புதிய அமைப்புக்களுக்கும் இடையே மோதலும் இருந்தது. அருட்பா மருட்பா விவகாரமே வள்ளலாருக்கும் சைவ மடங்களுக்கும் இடையே நிகழ்ந்த பூசல்தான் பார்க்க ப.சரவணன் அருட்பா மருட்பா]

இன்று மூன்றாவது காலகட்டத்தில் இன்றைய தேவைக்குரிய அமைப்புக்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. சென்ற காலகட்டத்தின் அமைப்புகளை விட மேம்பட்ட செயல்பாட்டு முறை இவற்றுக்கு உள்ளது. இன்றைய யுகம் கார்ப்பரேட் யுகம். எதுவும் அறிவியல் முறைகளை கருவிகளாகக் கொண்டு, நவீன நிர்வாக முறைகளை பயன்படுத்திக் கொண்டுதான் சிறப்பாகச் செயல்பட முடியும். ஆகவே கார்ப்பரேட் அமைப்புக்கள் உருவாகின்றன.

திருவாவடுதுறை மடத்தின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் அல்ல ராமகிருஷ்ண மடத்தின் வழிமுறை. அது இன்னும் நவீனமானது. ஜக்கி வாசுதேவ் அமைப்பின் நிர்வாக முறையும் தொடர்புறுத்தல் முறையும் ராமகிருஷ்ண மடத்தின் அமைப்பை விட மேலும் நவீனமானவை, கார்ப்பரேட் தன்மைகொண்டவை. இது காலத்தின் தேவையால் எழுந்தவை.

vedhathri
வேதாத்ரி மகரிஷி

 

நவீனச் சாமியார்கள் கறாராகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். நிறையப் பணம் பெறுகிறார்கள். இது தவறு அல்லவா?

நவீனச் சாமியார்கள் கார்ப்பரேட் அமைப்பை வைத்திருக்கிறார்கள் என்பதன் அவசியத்தைச் சொன்னேன். அந்த அமைப்பு தேவை என்றால் அது கட்டணம் வசூலிப்பதும் அவசியமே. அந்த நிதி இல்லையேல் அவ்வமைப்பே செயல்பட முடியாது.

சென்ற காலத்திலும் அமைப்புக்கள் அரசக்கொடையை, நிதிக்கிழார்களின் அளிக்கைகளைப் பெற்றே இயங்கி வந்தன. நிதியாதாரம் இல்லாத அமைப்பு ஏது? வெளிநாட்டு நிதிபெறும் அமைப்புக்கள்தானே இங்கே மிகுதி? அவற்றுடன் ஒப்பிடுகையில் ஜக்கியின் ஈஷா அமைப்பு ஒரு சின்னக்கொசு.

ஜக்கியின் அமைப்பின் கட்டணம் அதிகமா? என்னிடம் பேசிய நண்பர் சொன்னார் “ஆறுநாள் தங்கி தியானம் பயில மூவாயிரம் ரூபாய் கேட்டனர் சார்” என்று. தங்குமிடம் சாப்பாடு உட்பட செலவு நாளுக்கு ஐநூறு ரூபாய். இது கொள்ளை என நினைப்பவரின் மனநிலை என்ன?

உண்மையில் இந்த மனநிலைதான் பிரச்சினை. நாம் ஒரு நுகர்பொருளுக்கு, அந்தஸ்தைக் காட்டும் பொருளுக்கு பணத்தை அள்ளிக் கொடுப்போம். ஐந்தாயிரம் ரூபாய்க்குச் சட்டை வாங்குவோம். அறுபதாயிரம் ரூபாய்க்கு செல்பேசி வாங்குவோம். அவற்றின் உண்மையான மதிப்பு ஐந்தில் ஒன்றே என அறிந்தாலும் கவலையில்லை.

ஆனால் பண்பாட்டு, ஆன்மிக விஷயங்கள் சும்மா கிடைக்கவேண்டும். ஒரு புத்தகம் நூறு ரூபாய் என்றால் கொந்தளிப்பு. ஒரு நவீன நாடகத்துக்கு நூறு ரூபாய் டிக்கெட் வைத்தால் எதிர்ப்பு. இங்கே ஒரு சொற்பொழிவுக்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வைக்க முடியுமா? கட்டணம் பற்றிப்பேசுபவர்கள், அதை கொள்ளை என்பவர்களிடம் வெளிப்படுவது இந்த வெறுக்கத்தக்க நடுத்தரவர்க்கக் கீழ்மை மட்டுமே

ஜக்கியின் அமைப்பு ஒரு சேவையை வழங்குகிறது. அதற்குரிய கட்டணத்தை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். தேவை இல்லை என்றால் நிராகரிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. அவர்கள் அதை சும்மா தரவேண்டும் என கொந்தளிப்பதைப் போல பைத்தியக்காரத்தனம் ஏதேனும் உண்டா?

சரி, சும்மா கொடுத்தால் எவரேனும் செல்வார்களா? ஜக்கி அளிக்கும் அதே பயிற்சியை, அதைவிட பலமடங்கு நுட்பமான தத்துவ விளக்கத்தை இலவசமாக அளிக்கும் நூறுபேராவது இங்கே உள்ளனர். ஏன் நீங்கள் அங்கே செல்லவில்லை?

ஏனென்றால் உங்களுக்கு கார்ப்பரேட் அமைப்பு தேவைப்படுகிறது. அது விளம்பரம் செய்யவேண்டும். வாசலில் வந்து அழைக்க வேண்டும். அண்மையில் இருக்கவேண்டும். தெரிந்த மொழியில் பேசவேண்டும். உங்களுக்கு அத்தனை வசதிகளையும் செய்து தரவேண்டும். ஆனால் நீங்கள் காசு கொடுக்கமாட்டீர்கள். காசு கொடுக்காது கிடைப்பதை மதிக்கவும் மாட்டீர்கள்.

ஜக்கி வாசுதேவ் மோசடி செய்கிறாரா?

திரும்பத்திரும்ப இங்கே இந்த அவதூறாளர்களால் போலிச்சாமியார், மோசடிப் பேர்வழி என வசைபாடப்படுகிறார் ஜக்கி. Godman என்னும் சொலை சில ஊடகங்கள் திட்டமிட்டு பயன்படுத்துகின்றன

நான் ஒவ்வொருவரிடமும் கேட்கும் கேள்வி இதுதான். அவர் எங்கேனும் தன்னை தெய்வம் என்றோ தெய்வ அருள்பெற்றவர் என்றோ சொல்கிறாரா? நோய்களை தன் தெய்வீக ஆற்றலால் குணமாக்குவதாகச் சொல்கிறாரா? ஏதாவது மாயமந்திரங்கள் செய்கிறாரா?

உண்மையில் அவர்கள் அளிக்கும் யோகப்பயிற்சிகளைப் பற்றிக்கூட மிகையான பிம்பங்களை உருவாக்குவதில்லை. எதிர்மறையான எச்சரிக்கையுடன் மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள். யோகத்தின் பொதுவான நன்மைகளைக்கூட குறைத்தே சொல்கிறார்கள்.

யோகமுறை போன்றவை மிகவும் அகவயமானவை. அதன் பயன்களும் பெரும்பாலும் அவற்றை பயில்பவரின் அக்கறை, முயற்சி, மற்றும் உளவியல் சார்ந்தவை. ஆகவே திட்டவட்டமான புறவயமான விளைவுகளை அனைவருக்கும் அவை அளிக்கமுடியாது.

இது யோகத்துக்கு மட்டும் அல்ல, சாதாரண உளவியல் ஆலோசனைக்கே கூட பொருந்தும். உளவியலாளர் ஆலோசனைதான் அளிக்கமுடியும், அதைச் செயல்படுத்துவது நாம்தான் ‘இந்த உளவியலாளர் மோசடிக்காரர், ஒருவாரம் போனேன் ஒண்ணுமே ஆகலை’ என்று ஒருவர் சொன்னால் அது எவ்வளவு கேனத்தனம். [பெரும்பாலான உளச்சிக்கல் கொண்டவர்கள் உளவியலாளர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்].

இந்தவகையான நவீன யோகமுறைகளுக்கு விளம்பரத்தைக் கண்டு ஆர்வம் கொண்டு செல்பவர்களில் ஒரு சாராருக்கு மிகப்பெரிய உளச்சிக்கல் ஒன்று உண்டு என்பதை கண்டிருக்கிறேன். தன்னைப்பற்றி மிகையான பிம்பத்தைக் கொண்டிருத்தல். போன மூன்றாம் நாளே நெற்றிக்குள் ஒளி தெரிகிறது என ஒரு கூட்டம் சொல்லும். ‘மூணு நாள் போனேன், ஒண்ணுமே ஆகலை’ என இன்னொரு கூட்டம் அலுத்துக்கொண்டு கிளம்பிச்செல்லும்.

அசாதாரணமான அறிவாற்றலும் ஞானத்திறனும் கொண்டவர்களாகத் தங்களை எண்ணிக் கொள்கிறார்கள் பலர். ஊடகங்களில் கூச்சலிடுபவர்களின் அந்த வீங்கிய அகந்தையை கவனியுங்கள். ‘டேய், நீயெல்லாம் யாரு?’ என்னும் வியப்பையே நான் அடைகிறேன். கொஞ்சமேனும் தங்களைத் தாங்களே நோக்கி மதிப்பிட முடியாதவர்கள் யோகம் தியானம் போன்றவற்றுக்குள் நுழையவே முடியாது. அவர்களுக்கு உளவியல் சிகிழ்ச்சையே தேவை

ஜக்கி போன்றவர்கள் சொல்லிக்கொடுப்பது ‘உண்மையான’ யோகமா? அவர் யோகக்கலையை சிதைக்கிறாரா?

உண்மையான யோகம் என்றால் என்ன? யோகம் இந்தமண்ணின் தொன்மையான ஒரு மரபு. அது தெய்வநம்பிக்கை, வழிபாடு, பக்தி ஆகியவற்றின் ஒரு பகுதி அல்ல. ஆறு தரிசனங்களில் ஒன்றாக, பொருள்முதல்வாத தரிசனமாகிய சாங்கியத்தின் ஒருபகுதியாக அது இருந்தது. அதில் பிரபஞ்சம் குறித்த ஒரு தரிசனமும், அதை அடைவதற்கான பயிற்சி முறைகளும் இருந்தன.

பின்னர் அது இந்துமதத்திற்குள் உள்ளிழுக்கப்பட்டது. இந்து தெய்வங்கள் அனைத்திற்குமே யோகத்தில் அமர்ந்த தோற்றம் உண்டு. ஒவ்வொரு இந்துமதப் பிரிவும் வெவ்வேறு முறைகளில் யோகத்தை வளர்த்துக் கொண்டன. வெவ்வேறு முறைகளை உருவாக்கிக் கொண்டன. குறிப்பாக சைவம் யோகத்தை மிகவிரிவாக முன்னெடுத்தது. ஆறுவகை சைவப்பிரிவுகளுமே யோகத்தை முதன்மையாகக் கொண்டவை.

அதேபோல பௌத்தமும் யோகத்தை தன்னுள் எடுத்துக் கொண்டது. பௌத்த யோகாசார மரபு புத்தரின் பல்வேறு யோகநிலைகளை உருவகித்தது. சமணமும் யோகமுறைகளை தன்னுள் இழுத்துவிரிவாக்கிக் கொண்டது. இன்று கிறித்தவத்திற்குள் யோகமுறைகள் சிலதரப்புகளால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அது மிக இயல்பானது, வரவேற்புக்குரியது.

ஜக்கி சைவமரபு சார்ந்த யோகத்தை முன்னெடுக்கிறார் என நினைக்கிறேன். அதற்கு இங்கே குறைந்தது மூவாயிரமாண்டுக் கால மரபுத்தொடர்ச்சி உண்டு. அதேசமயம் அவர் அதை மரபான சைவமாக குறுக்கவும் விரும்பவில்லை. ஆகவே சைவத்திலுள்ள அனைத்தையும் அப்படியே கொண்டுவந்து நிறுத்தவில்லை. இன்றைய காலகட்டத்திற்குரிய சைவம் ஒன்றை உருவாக்க முயல்கிறார் என தோன்றுகிறது. அது தத்துவம், யோகம் சார்ந்த ஒன்றாக இருக்க விரும்புகிறார்.

make
மகேஷ் யோகி

 

ஜக்கியின் யோகமுறைகளின் இடம் என்ன? யோகத்தை இப்படிப் பரப்பலாமா? சென்ற காலங்களில் மக்கள் இந்த யோகமுறைகள் ஏதும் இல்லாமல்தானே வாழ்ந்தார்கள்?

யோகமுறைகள் நம் மரபில் மிகச் சிறுபான்மையினருக்கு உரியவையாக மட்டுமே வைக்கப்பட்டன. யோகம் என முன்பு சொல்லப்பட்டது உடல் மனப்பயிற்சிகளின் தொகுதி. அவற்றை பிரிக்க முடியாது. ஆனால் நவீனகாலத்தில் யோகாசனங்களை வெறும் உடற்பயிற்சியாக ஆக்கி பரவலாக்குகிறார்கள். அது ஒரு தேவையை நிறைவேற்றுகிறது. ஆகவே பயனுள்ளதுதான்.

நவீன குருமார்கள் உடல் மனப்பயிற்சிகளை கலந்து, தனிப்பட்ட தியானம் கூட்டுத் தியானம் இரண்டையும் பின்னி சிலவகையான முறைமைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவையே இன்று யோகப்பயிற்சி எனப்படுகின்றன.

இந்து மதம் மூன்று வழிகளை முன்வைக்கிறது. பக்தி முறையே பெருவாரியான மக்களுக்குரியது. எளிய அர்ப்பணிப்பு போதும் அதற்கு. ஆழமான நம்பிக்கையும் சீரான சடங்குகளும் இருந்தால் ஒருமனிதர் தன்னளவில் நிறைய முடியும். ஆலயவழிபாடு, பஜனை, தீர்த்தயாத்திரை என அதற்கான வழிகள் பல.

பக்தியில் நிறைவடையாத அறிவுக்கூர் கொண்டவர்களுக்கு உரியதே ஞானமுறை. அது அறிதலின் பொருட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு உரியது. கற்கவும் சிந்திக்கவும் நேரமும் வாழ்க்கையமைப்பும் இருக்கவேண்டும். ஆசிரியர்களைத் தேடிச் செல்லவேண்டும். அறிதலில் சமரசமற்று இருக்கவேண்டும்.

மூன்றாவது முறையே யோகம் எனப்பட்டது. அது அதன் பொருட்டு பிற அனைத்தையும் விடுவதற்கும் துணிபவர்களுக்கு உரியவை. மிகக்கடினமான சுய உளவியல் பயிற்சிகளின் வழி அது. உலகியலில் இருந்து விலகவேண்டும். உரிய ஆசிரியர்கள் அமையவும் வேண்டும்.

ஆனால் இப்பிரிவினை முழு முற்றானது அல்ல. பக்தியும் ஞானமும், ஞானமும் யோகமும் கலந்து வெவ்வேறு வழிமுறைகள் இதற்குள் உருவாகியிருக்கின்றன.

ஆனால் யோகமுறை பரவலாக ஆனதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. உலகப்போருக்குப்பிந்தைய சோர்வுக்காலத்தில் பிறந்த ஒரு தலைமுறையை அமெரிக்காவில் பீட்டில்ஸ் தலைமுறை என்பார்கள். பீட்டில்ஸ் என்னும் இசைக்குழுவை அடையாளமாகக் கொண்டு அளிக்கப்பட்ட பெயர் அது. நிறுவன மதங்களில் அவநம்பிக்கையும் அரசு, குடும்பம் போன்ற அமைப்புகள் மேல் எதிர்ப்பும கொண்டவர்கள் இவர்கள்.

அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த ஆதிக்கப் போர் இவர்களின் உணர்வுகள் ஒருங்கிணையவும் ஒரு சமூக இயக்கமாக இவர்கள் எழுவதற்கும் காரணமாக அமைந்தது. இதுவே ஹிப்பி இயக்கம் எனப்படுகிறது. போதைப் பொருள் நுகர்வு, இசைவெறி, அரசுக்குக் கட்டுப்படாதிருத்தல், அலைந்து திரிதல், கட்டற்ற பாலுறவு என இவர்கள் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்

பீட்டில்ஸ் அமைப்பு 1968 ல் இந்தியாவில் ரிஷிகேஷ் நகருக்கு வந்தது. அவர்களுக்கு முன்னரே சுவாமி சிவானந்தருடன் தொடர்பு இருந்தது. ஆன்மிகமான தேடலுடன் வந்த அவர்கள் மகரிஷி மகேஷ் யோகியைச் சந்தித்தனர். மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைத் தியானம் அவ்வாறாக அமெரிக்காவில் பிரபலம் அடைந்தது

1958ல் மகேஷ் யோகி உருவாக்கிய ஆழ்நிலை தியானத்தை யோகமரபு என்னும் ஆற்றில் அள்ளிய ஒருகுடம் நீர் என்று சொல்லலாம். அதை அவரே applied yoga என்றுதான் சொன்னார். அன்றாட லௌகீக வாழ்க்கையில் உள்ள மனிதர்களுக்காக, அவர்களின் உள்ளச் சிதறலைக் குவிக்கவும், இயற்கையுடனான உளப்பூர்வமான ஒத்திசைவை அடையவும் உதவும் ஒரு 20 நிமிடப்பயிற்சி இது. பழைய யோகமுறைகளில் இருந்து எடுத்து சுருக்கி உருவாக்கப்பட்டது.

மகேஷ் யோகி அதை அன்றைய ஹிப்பியுக அமெரிக்கர்களுக்காக உருவாக்கினார். அமெரிக்காவில் அவர் அமைப்பு ஈட்டிய பெரும்பணத்தை இந்தியாவில் அடிப்படைக் கல்விக்காகவே செலவிட்டார். தமிழ்நாட்டில் கூட எண்பதுகளின் தொடக்கத்தில் ஏராளமான பள்ளிகள் அவரது நிதியுதவியால் தொடங்கப்பட்டன. இன்று இந்துவித்யாலயாக்கள் என்னும் பேரில் அவை அமைந்துள்ளன. ஒருகாலத்தில் நான் அவற்றுடன் சம்பந்தப்பட்டிருந்தேன்

எண்பதுகளுக்குப் பின்னர் இந்த நவீன யோக-தியானமுறைகளுக்கு இந்தியாவிலேயே தேவை ஏற்படத் தொடங்கியது. உலகமயமாக்கலுக்குப் பின்னர் அது அதிகரித்தது. வேலை சார்ந்த உள அழுத்தம், உறவு நெருக்கடிகள், வாழ்க்கையின் இலக்கு பற்றிய குழப்பங்கள். அவற்றுக்கான ஒரு உளவியல் பயிற்சி முறையாக இந்த யோகமுறை இந்தியாவில் பிரபலமாகியது.

ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் போன்றவர்கள் மகேஷ் யோகியின் மரபில் உருவானவர்கள். அவர்கள் மகேஷ் யோகியின் முன்னுதாரணத்தைக் கொண்டு தங்களுக்குரிய யோகமுறைகளை உருவாக்கிக் கொண்டார்கள். அவர்களுக்கான தேவை இன்று நம் சூழலில் உருவானதே அவர்கள் உருவாவதற்கான காரணம்.

இந்தப் பிரச்சினைகள் முன்னரும் ஓரளவு இருந்தன. ஆனால் அன்றைய மனம் அதற்கு மரபுசார்ந்த பதில்களால் நிறைவடைந்தது. இன்றைய கல்விகற்ற, நவீன மனம் எளிய நம்பிக்கை சார்ந்த வழிகளை ஏற்பதில்லை. மரபு அளிக்கும் வாழ்க்கை முறையும் இன்றில்லை. குடும்பம், உறவுகள் அனைத்துமே மறுவரையறை நோக்கிச் செல்லும் காலகட்டம் இது.

இந்தக் காலகட்டத்திற்கு இன்றைய சிந்தனை முறைகளை உள்வாங்கிப் பேசுபவர்கள் தேவைப்படுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் பேசுவதில் பெரும்பகுதி ஒருவகை ‘கௌன்சிலிங்’தான். இன்றைய வாழ்க்கையின் உலகியல் சிக்கல்களை புரிந்து கொள்ள உதவுவதே அவர்களின் முதன்மைப் பணி. அவர்களிடம் வருபவர்களில் பெரும்பாலானவர்களின் தேவையும் உலகியல் சார்ந்த சிடுக்குகளைப் புரிந்து கொண்டு கடப்பது மட்டுமே

ஜக்கியின் உரைகளை கவனித்தால் அவர் எவரை முன்னிலையாகக் கொள்கிறார் என்று ஊகிக்கமுடியும். நவீனக் கல்விகற்ற, நவீன வாழ்க்கையின் இடர்களில் இருந்து அடிப்படைக் கேள்விகளைச் சென்றடைந்த, ஆனால் அதற்கு சென்ற காலகட்டத்தின் எளிய மதநம்பிக்கை அல்லது அரசியல் நம்பிக்கை அளிக்கும் விளக்கங்களால் நிறைவடையாத ஒரு வட்டம் அவரை நாடி வருகிறது.

அவர்களுக்கு அவர் அளிக்கும் விளக்கம் நவீன உளவியல், சமூகவியல், தத்துவம் ஆகியவற்றிலிருந்து சாத்தியமான தர்க்கங்களை எடுத்துக் கொள்கிறது. அவற்றை பொதுவான சிந்தனைத்தள அறிமுகம் மட்டுமே கொண்டவர்கள் புரிந்து கொள்ளும்படி எளிதாக்கி முன் வைக்கிறது. இந்த விளக்கம் இன்று நம் எளிய மதநம்பிக்கைகளோ அதைவிட எளிய அரசியல் கொள்கைகளோ அளிப்பதைவிட நுட்பமானது என்பதனாலேயே அவரிடம் படித்த வட்டம் சென்று சேர்கிறது.

அத்துடன், சென்ற இருபதாண்டுகளில் உலக அளவில் இலட்சியவாதம் சார்ந்த அரசியல் வீழ்ச்சியடைந்ததும், உலகை மாற்றியமைக்கும் அரசியல் கனவுகள் தகர்ந்ததும் இந்தக் கண்ணோட்டங்கள் வலுப்பெற அடித்தளம் அமைத்தன

ஜக்கியும் நம்பிக்கைகளை அளிக்கிறார். ஆனால் அவற்றுக்கு நவீன உளவியல், குறியீட்டியல் சார்ந்த விளக்கங்களை அளிக்கிறார். அறிவியல் கொள்கைகளைப் பயன்படுத்துகிறார். அவை இந்தியச் சூழலுக்குரிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய உள்ளங்களுக்கு மேலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக உள்ளன. தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்து பெறும் பின்னூட்டமே அவற்றை வடிவமைக்கிறது என நினைக்கிறேன்.

ஒரு வலுவான தேவை உருவாகியது. வரலாற்று ரீதியான ஒரு பதில் அதற்கு இருந்தது. இரண்டும் சந்தித்தன, அவ்வளவுதான்.

எளிய மக்களுக்கு இது எவ்வகையில் உதவுகின்றது? ஏழை எளிய மக்கள் இதற்குள் செல்ல இடமுண்டா?

ஜக்கி அரசியல் கட்சி நடத்தவில்லை என்பதே சுருக்கமான பதில். இந்த ஏழை எளியவர் கோஷம் என்பது நம்மவர் போடும் ஒரு வேடம். எந்த விஷயத்தைப் பேசினாலும் ‘இதனால் பாமரருக்கு என்ன பயன்?’ என ஒரு கேள்வி எழும். ஏதோ இங்கே அத்தனைபேரும் பாமர மக்களுக்காகவே உயிர் வாழ்வதுபோல. பாமர மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஜக்கி போன்றவர்கள் நான் முன்னரே குறிப்பிட்டதுபோல நவீனக் கல்வி கற்று, நவீன வாழ்க்கைச் சூழலில் எழும் சிக்கல்களினால் நிலையழிந்து, அதேசமயம் மரபான மதநம்பிக்கைகளில் அமையமுடியாது போனவர்களுக்கான ஆசிரியர்கள் மட்டுமே. ஏழை எளிய பாமர மக்களுக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்கள் இன்றும் பக்தியின் வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

ஜக்கியின் தோற்றம் ஏன் அப்படி இருக்கிறது? அது துறவியின் தோற்றமா என்ன?

எந்த தோற்றமென்றாலும் அது ஒருவகை அறிவிப்பு மட்டுமே. எல்லா தோற்றங்களும் குறியீடுகளே. ஜக்கி அறிவுறுத்த விரும்புவதற்கான தோற்றம் அது. தாடியும் துறவுக்கோலமும் அவரை இந்தியாவின் துறவுமரபுடன் இணைக்கின்றன.

கூடவே தான் பழைமையானவர் அல்ல, நவீன யுகத்தைச் சேர்ந்தவர் என்று அவர் காட்ட விரும்புகிறார் அவ்வளவுதான். உளவியலாளர்கள் போன்று அகவயமான விஷயங்களை கையாள்பவர்கள் தங்களுக்குரிய தோற்றங்களை அமைத்துக்கொள்வது இங்கே இயல்பாக நிகழ்வதுதான்

ஜக்கி லிங்கபைரவி, ஆதியோகி போன்ற உருவங்களை உருவாக்குவது ஏன்? அதற்கான தேவை என்ன?

ஆன்மிகவாதிகள், தத்துவ தரிசனங்களை முன்வைப்பவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான ஒரு செயல்முறைதான் இருக்கும்.

அ. அவர்கள் ஒரு தரிசனத்தை அடைந்திருப்பார்கள்.

ஆ. அவர்கள் அதை தத்துவார்த்தமாக விளக்குவார்கள்

இ. அதை கதைகளாகவும் நம்பிக்கைகளாகவும் சற்று எளிமைப்படுத்திச் சொல்வார்கள்.

ஈ. அதை குறியீடுகளாக ஆக்கி நிலைநிறுத்துவார்கள்.

சிலைகள், அடையாளங்கள், வழிபாடுகள் சடங்குகள் போன்றவை குறியீடுகளே. சாதாரண மக்கள் முதலில் குறியீடுகள் வழியாக கதைகளுக்கும் அங்கிருந்து தத்துவத்திற்கும் அங்கிருந்து தரிசனத்திற்கும் செல்வார்கள்.

ஜக்கி அவர் அறிவுறுத்த விரும்பும் தரிசனத்தை அங்கே மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறார். உலகெங்கும் அத்தகைய பலநூறு மகத்தான சிலைகள், குறியீடுகள் உள்ளன.

நான் அமெரிக்க சுதந்திரதேவி சிலைமுன் நிற்கையில் இதை தீவிரமாக உணர்ந்தேன். சென்ற நூற்றாண்டில் உருவான ‘அறிவினூடாக மானுட விடுதலை’ என்னும் தரிசனம் பல்வேறு தத்துவ மேதைகளால் விளக்கப்பட்டு இறுதியில் ஒரு சிலை என என் முன் ஓங்கி நின்றிருந்தது. அமெரிக்காவின் ஜனநாயக தரிசனம் என்று ஒன்று உண்டு என்றால் அதன் கண்கூடான வடிவம் அச்சிலைதான்.

அது எனக்கு அளித்த உளஎழுச்சி அந்த தரிசனம் நோக்கி நான் சென்றமையால்தான். இருமுறை அங்கே சென்று முழுநாளும் அதையே நோக்கிக் கொண்டிருந்தேன். இன்னும் செல்ல வேண்டுமென்றே விழைகிறேன். ‘தேவி, உன் கையில் அந்த மானுடத்தின் பேரொளியுடன் இன்னும் ஆயிரமாண்டுக் காலம் இங்கே நின்றிரு’ என உண்மையான கண்ணீருடன் வேண்டிக் கொண்டேன். குறியீடுகள் போல உணர்வு பூர்வமாக தரிசனத்தை காட்டி நிற்பவை வேறில்லை.

adi

ஜக்கி சொல்லும் ஆதியோகிக் கதை ‘உண்மையா?’

நகைப்புக்கிடமான இக்கேள்வியை பலர் கேட்டிருந்தனர். ‘உண்மை’ என்றால் என்ன? ஜக்கி சொல்வது ஒரு புராணம். எல்லா புராணங்களும் தரிசனங்களையோ தத்துவங்களையோ விளக்குவதற்காக உருவாக்கப்படும் கதைகளே. அவை தொல்பழங்காலம் தொட்டு சமகாலம் வரை உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றன. தமிழகத்தின் கணிசமான தலபுராணங்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானவை. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையே நூற்றுக்கும் மேற்பட்ட தலபுராணங்களை எழுதியிருக்கிறார்.

ஐய்யப்பன் கதை பதினேழாம் நூற்றாண்டில் உருவானது. அது தத்துவப்புலம் கொண்ட கதை. ஆனால் பல புராணங்கள் சும்மா செவிப்புலனை அடிப்படையாகக் கொண்டு சொல்லி வைக்கப்பட்டவை. சுசீந்திரம் ஆலயத்தின் கல்வெட்டுப் பெயர் சிவஇந்திரம் அல்லது சிவீந்திரம். அது உச்சரிப்பில் சுசீந்திரமாகியது. உடனே சுசீ+இந்திரம் என அதற்கு அர்த்தம் அளித்து இந்திரன் குஷ்டநோய் தீர நீராடியதனால் அந்தப்பெயர் வந்தது என புராணக்கதை உருவாக்கப்பட்டது.

எல்லா பழைய புராணக் கதைகளும் ஏதேனும் ரிஷியால் அல்லது கவிஞரால் அவருடைய மெய்யறிதலைச் சொல்லும் பொருட்டு உருவாக்கப்பட்டவையே ஆகும். எல்லா புராணக் கதைகளுக்கும் பல்வேறு வடிவங்கள் இருப்பதும் அதனால்தான். புராணம் எதைச் சுட்டுகிறதென்பதே முக்கியமானது.

இதில் வருந்தத் தக்கது என்னவென்றால் மேலே சொன்ன கதை புராணங்களில் இல்லை என வாதிடும் ஒரு சாராரிடம் உள்ள மேட்டிமை நோக்குதான். ஒரு சாதாரண பிராமணன் ஜக்கி தன்னிடம் வந்து ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே என்னும் பாவனையில் எழுதுவதிலுள்ள ஆணவத்தைப் பார்க்கையில் தான் எத்தனை ஜக்கிகள் இங்கே இன்னும் தோன்ற வேண்டியிருக்கிறது என்னும் எண்ணம் வருகிறது.

ஜக்கி மீதுள்ள காழ்ப்புகளே இருவகையாக பீரிடுகின்றன. அவர் இங்குள்ள முதிராப் பகுத்தறிவை அடிப்பதனால் அவர்கள் போடும் கூச்சல் ஒருபக்கம். மறுபக்கம் அவர் பிராமணர் அல்ல என்னும் ஒரே காரணத்துக்காக ஆசாரப் பிராமணர்களின் பொத்திவைத்த காழ்ப்பு, இடக்கரடக்கல்கள்.

கூச்சல்கள் எழுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. இங்கே குறுக்கும் மறுக்கும் காலை நீட்டிக்கொண்டு பாதை மறித்திருந்தனர். திராணியுள்ள ஒருவர் மிதித்துக் கொண்டு முன்னால் செல்லும்போது மிதிபட்டவர் அலறக்கூட செய்யக்கூடாது என்பது எவ்வகையிலும் நியாயமில்லைதான்.செய்யட்டும்

தொடர்ச்சி ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2

முந்தைய கட்டுரைசுட்டி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜக்கி -அவதூறுகள், வசைகள், ஐயங்கள் -2