கதையாளனும் கலைஞனும்

sujatha

 

இனிய ஜெயம்,

எப்போதுமே தீவிர இலக்கிய உரையாடலில் நண்பர்கள் சுஜாதாவின் சிறுகதையை எடுத்து பேசும்போதெல்லாம். அவர்களுக்கு சுஜாதா படைப்புகளில் இலங்கும் ”கலைத் தருணம்” குறித்து, அவற்றை ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு விளக்குவேன். ஹாலிவுட் படங்கள் கலை ரசிகனுக்கும் தன்னுள் இடம் அளிக்கும் முழுமையான வணிக சினிமா. சுஜாதா கதைகளும் அதேதான். அவை கலை ரசிகனுக்கும் தன்னுள் இடம் அளிக்கும் வெகுஜன எழுத்துக்களே என்பேன். [பதிலுக்கு அவர்களின் சாபங்களை பெறுவேன்].

இதோ இந்த வார விகடனில், கண்டு பிடித்து தந்தால், மகளைக் கட்டிக் கொடுத்து பாதி ராஜ்யமும் தருவேன் என சுஜாதா அறிவித்து தேடிய அவரது முதல் கதை ”எழுத்தின் ஹிம்சை” வெளியாக்கி இருக்கிறது. சுஜாதாவின் முதல் கதையுடன் அசோக மித்ரனின் முதல் கதையை ஒப்பு நோக்கினால், தீவிர இலக்கியத்தின் மாஸ்டர், அமி, யின் திறனும். சுஜாதாவின் எல்லைகளும் தெளிவாகவே துலங்குகிறது.

எழுத்தின் ஹிம்சை கதையின் நாயகன் ஒரு [இடையில் குத்திய கத்தி போல கூச்செரிய செய்யும் தலைப்பில் கதைகள்] க்ரைம் கதை. எழுத்தாளர். ஒரு நாள் அவர் முன் ஒரு யுவதியால் கொலை செய்யப்பட்ட யுவனின் ஆவி எழுகிறது. அவர் எழுதும் கதையில் வருவது போல [தனக்காக] தன்னைக் கொன்ற பெண்ணை கொலை செய்யப் பணிக்கிறது. தமாஷ் கதை. இறுதியில் இப்படி முடிகிறது. எழுத்தாளர் இப்போதெல்லாம் குடும்பக் கதைகள் மட்டுமே எழுதுகிறார். அவர் கதையில் ஒரு எறும்பு கூட கொல்லப்படுவதில்லை.

 

asokamithran

சுஜாதாவுக்கே உரிய கச்சித வர்ணனை, துள்ளும் மொழி,

சரளம், சும்மா ஒரு கதை எனும் விளையாட்டுத்தனம் என எது சுஜாதாவோ அனைத்தும் அவரது முதல் கதையிலேயே உருவாகி வந்திருக்கிறது.

அசோகமித்திரனை எடுத்துக்கொண்டால் அவரது முதல் கதையும் எழுத்தாளனை குறித்ததுதான். நாடக எழுத்தாளன். அவனது நாடக பாத்திரம் ஒன்றே அவனது மரணத்துக்கு காரணம் ஆகிறது. அதாவது அவனது படைப்பு திறனே அவனுக்கான யமன். படைப்பாளி மற்றும் அவனது படைப்புத்திறன் இவற்றுக்கு இடையான உறவை கலாபூர்வமான விவாதித்த வகையில் ஒரு மாஸ்டர் தனது முதல் கதையிலேயே தான் யார் என நிரூபித்து விடுகிறார்.

அசோகமித்திரன் கதைகள் பெரும்பாலானவை [அவரது சிறந்த கதைகள் எனும் தளத்தைக் கடந்து] மனித அகத்தின் ஆழத்து விகாரங்கள், விசாரங்களில் கவனம் குவிப்பவை. கலை முழுமை கூடாதுபோன கதைகளில் கூட, மனித அகத்தின் புதிர் அவிழா அடிப்படைச் சிக்கல் மீதான அவரது அவதானம் தனித்துவமானது. மனிதவாழ்வை கண்ணில் விழுந்த துளி மணல் முதல் ஆளைப் புதைக்கும் புதைமணல் வரை இத்தளங்களில் நிறுத்திப் பார்த்த நவீனத்துவத்தின் பெரும் படைப்பாளி

அவரது முதல் கதை *நாடகத்தின் முடிவு *. நாடக ஆசிரியர் ஆனந்த குமார் தான் 7 வருடம் பாடுபட்டு உருவாக்கிய நாடகம் அடைந்த பெரு வெற்றியில் ஆனந்தம் தாளாமல், இரவு 11 மணிக்குமேலும் உறங்காமல் தவிக்கிறார். ஒரு மாயக் கணத்தில் அவரது நாடகத்தின் நாயகி சரோஜா, உருவெளித் தோற்றமாக அவர் முன் தோன்றுகிறாள். மரித்த தனது காதலனுக்காக வாதாடுகிறாள். விவாதம் முற்றுகிறது. காலையில் ஆனந்தகுமார் மாரடைப்பால் காலமான செய்தியை தினசரிகள் தெரிவிக்கின்றன.

அமி தனது முதல் கதையிலேயே, படைப்பாளியும் அவனது படைப்பின் சாரத்துடன் அப்படைப்பாளியின் அகம் கொள்ளும் உறவும், எனும் உலகப் படைப்பாளிகளின் பிரத்யேக முரண் வகைமைக்குள் சென்றுவிடுகிறார். ஆனந்தகுமார் தனது ஆன்மாவால் சலித்து துளித்துளியாக சேகரித்து உருவாக்கிய அவரது உயிர் உருக்கும் கனவின் பிரதிமை. சரோஜா. சரோஜாவை நோக்கி உதடுக்குள் முணுமுணுக்கிறார் ”ஆம் உன்னிலும் சிறந்த பெண், இனி கற்பத்திலோ, கற்பனயிலோ சாத்தியமில்லை ”. நாடகத்தின் இறுதியில் அவளது காதலன் சுகுமாரன் கொல்லப்படுகிறான். ஆனந்தகுமாரின் கனவுப்பெண் கண்நீர்வடித்துக் கதறுகிறாள். அவளது காதலன் சுகுமாரனை சாகடிக்காதிருக்கும்படி. ஆனந்த் நாடகத்தின் தர்க்கசாத்தியத்தை எடுத்துக் கூறி மறுக்கிறார். உரையாடல் தொடர்ந்து கோபம் மீதூர சரோஜா ஆனந்தின் அடிமன வக்கிரத்தை கண்டடைந்து சபிக்கிறாள். இந்த உரையாடல்கள் வழி ஆனந்த் தனது ஆழத்து இருளை தரிசிக்கிறான். மாரடைத்து இறந்துபோகிறான்

ஒரு மனிதனின் படைப்பாளியின், மரணத்தருவாயின் மனக்கொந்தளிப்புகளை, அவன் அகம் குலைந்து பொங்கிவரும் விசித்திரத் தோற்றங்களை, அவனது அகத்தின் கீழ்மையை அவனது மேலான பாத்திரம் ஒன்றே துலங்கச் செய்யும் விசித்திர கனவை, அமி நேரடியான நடையில் தாகூரின் செவ்வியல் கதைகள் போல சொல்லிச் செல்கிறார். ஆனந்த் ஒரு நாடகாசிரியன் என்பதால் சிறுகதையின் மொத்த ஓட்டமும், ஒரு நாடக நிகழ்வு போலவே முன்வைக்கப்படுவது இக்கதையின் அழகியல். சுகுமாரனின் பிணம் மிதந்துவரும் போது ஆனந்த் அதை தன்னில் இறந்துபோன லட்சிய உருவமாகக் காண்கிறான். ஜெயம் ரிபு என்று சொல்வார். மனிதன் தன் சுய அழிவுக்கான காரணியை தானே விரும்பி வளர்ப்பதின் பெயர். சரோஜா ஆனந்தின் ரிபு. எளிய, ஆனால் ஆற்றல் வாய்ந்த கதை. [முன்பு உங்களுக்கு எழுதிய கடிதத்தில் உள்ளது மேற்கண்ட அமி கதை குறித்த பத்தி].

இரு விதைகள். எது காலம் கடந்து நிற்கும் ஆலம் வித்து என்பது இதோ நம் முன்னால்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–31
அடுத்த கட்டுரைகடவுள் இல்லாத நிலம்