தேவதேவன் கவிதை -கடிதங்கள்

கவிஞர் தேவதேவன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

“ வாசகர்களே இல்லாத ஒருவெளியில் நின்றுகொண்டு தனக்கே என இவற்றை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்” இது ஒரு வரம் என்று தான் புரிந்துகொள்ள வேண்டும். எதிலும் மற்றவரின் அங்கீகாரம் வேண்டும் என்று தேடும் பொழுது தனக்கு பிடித்ததை தொடர்ந்து எழுதுவது வரம்தான்.கற்பனையும் ரசனையும் இல்லாத ஒரு உலகம் சொரணையற்றதாக மட்டுமே இருக்கும் அதில் நாம் என்பது மற்றவர் கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொருள், அங்கு ஒரு இருத்தலே இல்லை.

பழுத்தும் விழாது ஒட்டிக்கொண்டிருக்கும்.

இலைகள் தான் தொட்டதனால்தான்

உதிந்ததென்றிருக்கக் கூடாதென்ற

எச்சரிக்கை நேர்ந்து

அப்படி ஒரு மென்மையை

அடைந்திருந்தது காற்று.

இந்த வரிகளை கடந்த பொழுது சொரணையற்ற ஒரு உலகில் இருந்து மீண்டது போன்ற ஒரு உணர்வு, அந்த இலையை காற்று மிக மிக மிக மெல்ல தீண்டிய பொழுதில் எழுந்த ஒரு அசைவு எனக்குள் என்று தான் அதை புரிந்து கொள்ளவேண்டும். இப்படி ஒரு காட்சியை தினமும் பார்க்கமுடியும் ஆனால் தேவதேவன் இதை எழுத்தில் பதிவு செய்து கற்பனைக்கு பல்வேறு சாத்தியங்களை ஏற்படுத்துகிறார்.

கவிதை என்பதே கற்பனைக்கு சவால் விடும் அளவில் காட்சிப்படுத்துதல் என்பது என் புரிதல், இந்த வரிகள் சவாலாக இல்லை ஆனாலும் எனக்குள் நானே மீண்டும் மீண்டும் சிரித்து ரசித்த அற்புதமான வரிகள். தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையின் முகம் போல …

முரளி

***

அன்புள்ள ஜெ

தேவதேவனின் கவிதை பற்றிய குறிப்பை மிகவும் கூர்ந்து வாசித்தேன். கவிதை விமர்சனமும் கவிதைபோல் ஆகமுடியும் என்பதை கண்டுகொண்டேன். இன்னொரு வாசிப்பில்தான் அந்தச் சருகை தேவதேவனுடன் நீங்கள் தொடர்புபடுத்தி வாசித்திருப்பதை  உணர்ந்து கொண்டேன். அதை வாசித்ததுமே கவிதை வேறு ஒரு தளத்திற்கு உயர்ந்துவிட்டது. அற்புதம் என்றுதான் சொல்வேன்.

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ

நான் இப்போதுதான் கவிதைகளை வாசிக்கிறேன். கவிதை என்பது உணர்வுபூர்வமான வரிகளும் புதியவகை கருத்துக்களும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் சுட்டிக்காட்டிய தேவதேவனின் கவிதை மிகுந்த கற்பனையை அளித்தது.தேவதேவனை நான் இப்போதுதான் புரிந்துகொள்கிறேன். இத்தனை எளிமையான விஷயம் இத்தனை சாதாரணமாகவே மகத்தான கவிதையாக ஆகமுடியும் என்று புரிந்ததும்தான் கவிதையே பிடிகிடைத்தது

சுந்தரராஜன்

உதிர்சருகின் முழுமை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–27
அடுத்த கட்டுரைஜக்கி -கடிதங்கள் -2