ஆட்டம்

unnamed

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றை என் நண்பருக்கு அனுப்பி இருந்தேன். அதில் நான் எழுதியிருந்தது எல்லாத்தையும் விட்டுவிட்டு அதை நான் ஏன் உங்களுக்கு அனுப்பினேன் என்று கேட்டான். எதையாவது தீவிரமாக யோசிப்பது என்பதே உங்களிடமோ, மாலதியிடமோ, நண்பர் ஆனந்தனிடமோ நேரிலோ, மானசீகமாக விவாதிப்பதாக ஆகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். அதை சொல்லி புரியவைக்கும் துணிச்சல் அன்று இல்லை.

இன்று சிற்பம் பற்றிய உங்கள் மறுப்பதிப்பை பார்த்தவுடன் ஒரு முக்கிய காரணம் தோன்றியது. சிற்பங்களை பார்க்க கற்றுத்தந்தவர் என்ற முறையில் உங்களிடம் அதை பேசுவதே முறை. ஒரு வரியிலிருந்து, ஒரு ஓவியத்திலிருந்து, ஒரு கணத்திலிருந்து தனக்கான ஒரு பேரனுபத்தை படைத்துக்கொள்பவனை நம்பியே நூல்களும் சிற்பங்களும் ஓவியங்களும் காத்திருக்கின்றன என்பதை நான் கற்றுக்கொண்டதே உங்களால்தான். பின் என் பரவசத்தை வேறு எங்கு அனுப்புவது?

அன்புடன்,

கௌதமன்

***

ஆட்டத்திற்கு வெளியே !!

——————————————–

அன்புள்ள ஜெயமோகன்,

“டேய் இங்க வாடா. எங்க போன? இப்பதான் இதை மாலதிக்கு காட்டினேன்” என்றுஅவருக்கே உரிய அலட்சியத்துடன் ஆனந்தன் (என் குரு, நண்பர், உங்களின் வாசகர்) என்னை அழைத்து போனார். எல்லோராவின் கைலாசநாதன் குகையினுள் (cave 16) உயரே சுவற்றில் மன்மதன்-ரதி சிலையாய் கரும்பு சோவையை வைத்து அடையாளம் கண்ட திமிர் குறையாமல் நானும் போனேன். கோவிலை சுற்றி கல் மண்டபம் வழியாக அதிகாலை இருட்டில் வழிநெடுகிலும் இருக்கும் சிலைகளை சட்டை செய்யாமல் அவர் போன போதே என் ஆர்வம் பெருகிவிட்டிருந்தது.

அவர் நின்று கைகாட்ட அதற்குள் இருட்டிருக்கு பழகியிருந்த கண்களில் ஒரு அற்புத சிற்பம் தெரிந்தது. விஷ்னுவும் (சிவனோ?) தேவியும் பகடை ஆடும் காட்சி. தேவனின் வலது கரங்களில் ஒன்று பகடையாய் உருட்ட தயாராய். இன்னொரு கை விரல்களை மடக்கி , கட்டை விரலை மடக்கிய விரல்கள் மீது வைத்து ‘ம்க்கும் ஹ்ஹீம் இது சரியில்லை” என்று காண்பிக்கும் விதமாய் சுட்டுவிரலை உயர்த்திய வண்ணம்.

இடது கரத்தில் ஒன்று கீழே ஊன்றப்பட்டு உடலின் எடையை தாங்கி இருக்க இன்னொரு கரமோ தேவியின் இடது கரத்தை பற்றி உயர்த்தி, பக்கவாட்டில் ஆடுகளத்திலிருந்து விலக்கி பிடித்திருந்தது.

ஆனந்தன் மெல்ல விளக்க அந்த சிற்பம் ஒரு நிகழ்வாய், ஒரு கவிதையாய், ஒரு முழு வாழ்வாய் என்முன் விரிந்தது.

ஆடிய விளையாட்டில் தேவி எதோ ஏமாற்றி இருப்பாள் போல. பகடையின்எண்களை கூட்டியோ குறைத்தோ இருக்கலாம். காய்களை வேறிடம் மாற்றியிருக்கலாம். வெட்டுப்படாத ஒன்றை வெட்டியதாய் வெளியே எடுத்து மறைத்திருக்கலாம். கண்டுகொண்ட தேவன் அவள் கைகளை கையும் களவுமாக பிடித்துவிட்டான்.

பகடையை உருட்ட வந்த தேவனின் கை நின்றுவிட்டது. ‘ம்க்கும் ஹ்ஹீம் இது சரியில்லை! என்னிடம் இது இனி நடக்காது” என்று சுட்டு விரலை உயர்த்தி, இடம் வளமாய் ஆட்டி காண்பிக்கிறான். பாதி மூடிய விழிகள் மற்றும் சற்றே மேல்நோக்கிய தாடை வழி அவன் தலை இடம் வளமாய் ஆடுவதை என்னால் பார்க்க முடிகிறது. களவை கண்டுகொண்ட பெருமிதம் அவன் உதடுகளில். “இது தான் கடைசி தடவை, என்ன?” என்ற சொற்கள் நிமிர்த்திய நெஞ்சில்.

“இது எல்லாம் ஒரு விஷயமா?” எனும் விதமாக தேவியின் முகத்தில் ஒரு புன்னகை. இந்த ஒருமுறைதானே என் ஏமாற்றை பிடித்திருக்கிறாய், ஊழி தொடங்கிய பொழுதிலுருந்து என் ஆட்டத்தை, என் களவை பற்றி என்ன கண்டாய் நீ என்பதாய் அவள் கண்கள். இது ஒன்றும் கடைசி ஏமாற்றலும் இல்லை என்று சொல்லும் சற்றே பின் வளைந்த தோள்கள். “இல்லையே நான் ஒன்னும் பண்ணலியே” என்பது போல விரிந்த விரல்களுடன் பிடிக்கப்பட்ட கை. மடக்கி உயர்த்திய காலும், தரையில் ஊன்றி இருக்கும் இன்னொரு கையும், “ரொம்ப பேசாதே, ஆட்டத்த கலைச்சிடுவேன்” என்று சொல்ல நானொரு காவியத்தை கண்ட பூரிப்பில் நின்றிருந்தேன்.

“தேவனே நீ வெல்வதுகூட என் பெருங்கருணையால்தான்” என்று அவள் நினைத்திருக்க கூடும். “பிடித்துவிட்டானாமா!” என்று நினைத்திருக்க கூடும். வெற்றியின் மீதான பற்று அவளிடம் இருப்பதாய் தெரியவில்லை. அவனின் பகடையில் வரும் என் பற்றி ஓன்றும் கவலை இல்லை.

“ஆடுவது மட்டுமே அங்கு அவளில் நிகழ்கிறது. ஆனால் ஆட்டத்தின் பாதிப்பு எதுவும் அவளில் இல்லை” என்றார் ஆனந்தன்.

அன்புடன்,

கௌதமன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–11
அடுத்த கட்டுரைசித்ராபதி