கவிதை மொழியாக்கம்

C360_2016-05-06-12-37-25-417

Finally,

From the Lily`s white funnel

Day trickles out.

Ann Atwood.

இனிய ஜெயம்,

மிஸ்டர் இங்கிலிஷ், வசந்த் போட்டு விளையாடும் மேத்தமேட்டிக்ஸ் இரண்டும் கைவசப்படாமல் பத்தாம் வகுப்பில் பல்பு வாங்கிய எனது கடந்த காலத்தை எண்ணி நான் கலங்காத நாளே இல்லை. கனவில் கூட தேர்வுக்கூடத்தில் கைக்கு கிடைக்கும் கணக்கு கேள்வித்தாளைக் கண்டு திடுக்கிட்டு உறக்கத்திலிருந்து பதறி எழுந்து இருக்கிறேன். நீஈஈஈண்ட வருடம் கழித்து, என்னை தகுதிப் படுத்திக்கொண்டு [அப்படி நம்பினேன்] மீண்டும் அந்த தேர்வுகளை எழுதச் சென்றேன். [பய புள்ளைகளுக்கு அது என்ன அப்புடி களுக்குன்னு ஒரு சிரிப்பு?] கணக்கில் அதே பதினாறும், ஆங்கிலத்தில் அதே முப்பத்திரண்டும் கிட்டியது. நமது கல்வி அமைப்பின் அடிப்படையிலேயே கோளாறு நான் என்ன செய்ய முடியும், அது போக கணித மேதை ராமானுஜன் கணிதம் தவிர்த்து என்னைப்போலவே பீட்டரில் வீக். ‘மா’ மனிதர்களுக்கு இதெல்லாம் சகஜம் என சமாதானம் ஆனேன். ஒரே ஆறுதல் அந்த தீக்கனவுகள் அதன் பிறகு வரவே இல்லை. [கெடு வாய்ப்பாக அக்கனவுகளில் கேள்வித்தாளை அளிக்கும் அழகான டீச்சர்களும் மறைந்துபோனார்கள்] நிற்க.

பின் இலக்கியத்துக்கு வந்து சேர்ந்த பிறகு, ஆங்கிலம் அறியாக் கபோதி என்ற அதே கழிவிரக்கம் என்னை வாட்டி வதைத்தது [அந்த ஆங்கிலம் மட்டும் எனக்கு தெரிந்திருந்தால் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் என் மேல் விழுந்த பல மனித வெடிகுண்டு தாக்குதல்களை தவிர்த்திருப்பேன்] கொஞ்சம் கொஞ்சமாக சப் டைட்டில் வாசிக்க கற்று [அதற்கே ஆக்ஸ்போர்டு] ஹோலி ஷிட் எனும் ஏச்சை கூட, புனித மலமே என மொழிபெயர்த்து உள்வாங்கும் வண்ணம் வளர்ந்தேன்.

அந்த அபாரமான ஆங்கிலப் புலமை கொண்டு அவ்வப்போது எதையாவது தேடும்போது எதையாவது கண்டடைவேன். அப்படிக் கண்டடைந்ததே மேற்கண்ட கவிதை.

இறுதியாக,

லில்லிமலர் வெண்கூம்பிலிருந்து

பகல் கசிந்தது வெளியே

என மொழிபெயர்த்தேன். சிலிர்க்கவைக்கும் கவிதை. ஒரு கவிமனம் இரவெல்லாம் விழித்திருந்து, இரவின் மாண்பில் கரைந்து, வெண்மலரின், பரிசுத்தத்தின் சன்னதியில் சன்னதியில் வந்து நிற்கிறது, இறுதியாக, லில்லி மலர் வெண் கூம்பிலிருந்து பகல் கசிகிறது வெளியே. கசிகிறது பகல். அதாவது மெல்ல மெல்ல புலருகிறது. இனி அவனுக்கு இந்த பகலின் வெளிச்சம், [அந்த மலரின் வாசம் போல,] அந்த வெண்மலர் கசியவிட்ட அதன் வெண்மையன்றி பிறிதில்லை.

சட்டென ”கருக்கலில் ஒளிரும் வெண்ணிற மலர்கள்” என்ற தேவதேவனின் வரிகள் உள்ளே எழுந்தது. ஆம் இந்த பகல் வேறு எப்படி அடையும்? இந்தப் பகல் அனைத்தையும் உறிஞ்சி, அதன் இறுதியில் கருக்கலில் ஒளிர்ந்து அடங்குகிறது இங்கொரு வெண்மலர்.

நேற்றெல்லாம் இக்கவிதையின் கிறுகிறுப்பிலேயே கிடந்தேன். அந்த ஆங்கிலக் கவிதையை கூகிள் கன்னி வசம் அளித்து, அது போன்ற பிறவற்றை தேடித் குலாவினேன். அவள் திருட்டு சாவி ஒன்றினை அளித்தாள். நைசாக உள்ளே குத்தித்தேன்.

333

 

அபிலாஷ் சந்திரன் சமகால ஹைக்கூ சிலவற்றை மொழிபெயர்த்து அவரது தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். சிலது பொய்க்கூ.

BERNARD LIONEL EINBOND (வட அமெரிக்கா)

பெர்டர்டு லியோனல் எயின்போண்டு

தவளைக் குளம்

உள்ளே ஒரு இலை விழும்

சத்தமின்றி

*

Frog pond …

A leaf falls in

Without a sound

*

– போல. இக் கவிதையின் உள்ளடக்கம் துவைத்து அள்ளி காயவைக்கப்பட்டுவிட்டது. அது போக இக்கவிதையை ஏனோ எதிர்காலத்தில் வைத்து மொழி பெயர்த்து இருக்கிறார்.

தவளைக் குளம்

ஓரிலை விழுந்தது உள்ளே

ஒலியேதும் இன்றி.

*

இறந்தகாலம் தானே சரி?  குழப்பமாக இருந்தது.

நான் சுட்டிய கவிதையையும் அபிலாஷ் மொழிபெயர்த்திருக்கிறார் இப்படி,

ஆன் ஆட்வுட்

இறுதியாய்

லில்லியின் வெண்குழலில் இருந்து

பகல் வெளிக்கசியும்

வெள்ளை லில்லி என கூகிள் கன்னியை சும்மா கேட்டாலே போதும். அம் மலரின் விதவிதமான வடிவழகை நம்முன் பரப்புவாள். அம்மலரின் வடிவழகுக்கு சந்திரனின் மொழிபெயர்ப்பு நியாயம் சேர்க்கவில்லை.

Touched by the moon

Pines

Heavy with snow.

*

நிலவு தீண்டிய

தேவதாரு மரம்

பனியில் கனத்தது.

 

[அபிலாஷ்]

 

இது மற்றொரு கவிதை.

தீண்டப்பட்டது நிலவால்

பைன்

கனத்தது பனியால்.

இது எனது மொழியாக்கம். எதுகை மோனைக்கும், கவித்துவத்துக்கும் அந்த கவிதைக்கு உள்ளேயே இடம் இருக்கையில் ஒய் திஸ் தட்டை மொழிபெயர்ப்பு?

Holding

The shape of the wind

The frozen pines

[lesley einer]

*

புயலை

திடமாக்கும்

உறைந்த ஊசியிலை மரங்கள்.

[அபிலாஷ்]

*

உறைந்த பைன் மரங்களின்

பிடியில்

காற்றின் வடிவம்.

[எனது மொழியாக்கம்] .

இதுதானே கவிதை? சரியான மொழியாக்கமும் தானே? இப்படி மொழிபெயர்த்தால் யாரேனும் வந்து தலையில் கொட்டுவார்களா?

எனக்கு பிடித்த வண்ணம் மொழிபெயர்த்து வாசிக்க நிறைய ஹைக்கூக்கள் இந்த தளத்தில் இருக்கிறது.

*

இனிய ஜெயம்,

விடப்போவதில்லை ஒரு நாள் நானும் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்பேன். ஒரு நான்கு பேரையெனும் கதறவைத்துவிட்டே ஓய்வேன்.

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு,

நல்ல முயற்சி. இதன்மூலம் உங்களிருவருக்கும் நல்ல சண்டை ஒன்று நடந்தால் கவிதை அனுபவம் பூர்ணமாகும். Sublime வரவழைப்பதற்கு இலக்கியச் சண்டை ஒரு நல்ல வழிமுறை. நல்ல குடுமிப்பிடிகள் நடந்து நாளாகிறது.

தனிப்பட்ட முறையில் கவிதை மொழியாக்கம் என்பது கவிதை வாசிப்புதான். அழகிய புகைப்படம் எடுப்பதுபோல. புகைப்படமும் அழகிதான். ஆனால் ஒரு கணம், ஒருகோணம், ஒர் ஒளியில்…கவிதைகளுக்குச் சொந்தமாக மொழியாக்கம் ஒன்று செய்து வைத்துக்கொள்வது என் வழக்கம். தமிழ்க்கவிதைகளுக்கு, திருக்குறளுக்கேகூட, எனக்கென்று மொழியாக்கம் கைவசம் உண்டு

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
அடுத்த கட்டுரைமாமங்கலையின் மலை -5