நாகம்

unnamed9

அன்பின் ஜெ

ஒரு சாமானியனின் முதல் கடிதத்திற்கு பதில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்பதைப் போன்ற முறைமை சொற்களோடு எழுதி எனக்கு பழக்கமில்லை, போலவே முப்பது வருடத்திற்கும் மேலாக எழுத்துலகில் இருக்கும் உங்களுக்கும் இது போன்ற முறைமை சொற்கள் அயர்ச்சியைத் தான் கொடுக்கும் என்பது என் அபிப்ராயம்

எழாம் உலகமும் ஏழாம் உலகத்தினைப் பற்றியும் எழுதும் உங்களிடம் நாகப்பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்பது குழந்தைத்தனம் என்பதால் கேள்வியை வேறுமாதிரியாக கேட்கிறேன் உங்கள் முகத்திற்கு நேர் முன்னால் படமெடுத்து நிற்கும் நாகத்தைப் பார்த்திருக்கிறீர்களா..? ஆமெனில் மனதில் எந்த சலனுமுமின்றி அதன் அழகை குறைந்தபட்சம் இரண்டு நிமிடமேனும் ரசித்திருக்கிறீர்களா..?

நான் ரசித்திருக்கிறேன். என் வீட்டின் மல்லிகைப் பந்தலின் கீழே ஒரு குட்டி கருநாகம் (அதிகபட்சம் போனால் அரையடி நீளம் கூட இருக்காது) படமெடுத்து நின்றதை வைத்த கண் எடுக்காமல் நான் ரசித்திருக்கிறேன். அதன் பளபளப்பான கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த தோலினை. இரண்டு இன்ச் உயரத்திற்கு தன் தலையைத் தூக்கி அசையாது நின்ற அந்த பாங்கு. சற்றும் அங்குமிங்கும் நகராத அதன் நேர்பார்வை. மற்ற எந்த ஊர்வனவற்றிற்கும் இல்லாத ஒரு பெருமை பாம்பிற்கு மட்டுமே உண்டு. பரவசம் கலந்த பயம். எனக்கு அந்த குட்டி பாம்பைப் பார்த்தபொழுது பயமென்று எதுவும் தோன்றவில்லை மாறாக காதலியைப் பார்க்கும் காதலனின் பரவச மனநிலை தான் தோன்றியது. அதை அள்ளி கையிலெடுத்துக் கொள்ளும் ஆர்வமும் மூண்டது. குழந்தைகள் சுதந்திரமானவர்கள் ஜெயனண்ணா.. அவர்கள் வளர வளர தான் சுதந்திர விரும்பிகளாக மாறிவிடுகிறார்கள். அதனால் என் ஆசையை அடக்கிக் கொண்டேன்.

ஆனால் அந்த பயம் கலந்த பரவசத்தை வேறோரு இடத்தில் அனுபவித்தேன். உயிர் கொண்ட உடல்களோடு அல்ல ஏழடி உயர கொற்றவை சிலையோடு. பீர்மேடின் அருகிலிருக்கும் பாஞ்சாலி மேட்டிலிருக்கும் அந்த கருங்கல் கொற்றவை தான் எனக்கு அந்த பயம் கலந்த பரவசத்தைக் கொடுத்தாள். மூடுபனியால் சூழ்ந்திருந்த அந்த மேட்டின் கீழே நின்று பார்த்தபொழுது, சிவப்பு சேலையால் சுற்றப்பட்டிருந்த அந்த கொற்றவை நிஜமாகவே என்னைத் திகிலில் ஆழ்த்திவிட்டது. பின்னர் அந்த கொற்றவையின் அருகே சென்று நின்ற பொழுது பயமும் இல்லை பரவசமும் இல்லை அவளின் அழகு மட்டுமே என் கண்ணிற்கு தெரிந்தது.

பதில் கடிதம் எழுத துவங்கிவிட்டு வேறு ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் மன்னிக்கவும். என் கடிதத்திற்குரிய பதிலில் “நான் பைக்கில் பின்னால் அமர்ந்துதான் செல்லமுடியும். அது ஒரு நல்ல அனுபவம் அல்ல” என்று எழுதியிருந்தீர்கள். பல நூறு கிலோமீட்டர்களுக்கு வண்டியை ஓட்டிச் செல்வது ஒருவகையான அனுபவமெனில் பின்னால் அமர்ந்து பயணிப்பது என்பது வேறு விதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது என் தரப்பு வாதம்.

மேலும் சாலையோர தேநீர் கடைகளில் காரில் சென்று இறங்கும் மனிதர்களையும் பைக்கில் சென்று இறங்கும் மனிதர்களையும் ஒன்று போல பார்ப்பதில்லை. முன்னவர்கள் அவர்கள் கவனத்தைப் பெரிதாக கவர்வதில்லை. பின்னவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையில் ஒரு தோழமை இருக்கும். இது என் தனிப்பட்ட அனுபவம்.

பிகு. படம் விரித்து நின்ற அந்த குட்டி நாகத்தின் படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

Never quit. winners never quit, quitters never wins…

thanks & regards

வாஸ்தோ

 

 

முந்தைய கட்டுரைநாராயணகுருகுலம் நிதியுதவி
அடுத்த கட்டுரைமலைக்கிராமம் -கடிதங்கள்