மேடையில் நான்

maxresdefault

 

ஒருவழியாக திருக்குறள் உரைத்தொடர் முடிந்தது. கடைசிவரியைச் சொல்லிவிட்டு மேடைவிட்டு இறங்கியதும் எழுந்தது மிகப்பெரிய ஆறுதல், விடுதலை உணர்ச்சி. எனக்கு எப்போதுமே மேடைக்கலைஞர்கள் மேல் பெரிய வியப்பும் கொஞ்சம் பொறாமையும் உண்டு. மேடைமேல் எழுந்து நின்று அங்கேயே தன்னை மறந்து வெளிப்படுவதென்பது ஓர் அருள். எழுதும்போது மட்டுமே நான் அதை உணர்கிறேன். நல்ல மேடைப்பேச்சாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் மேடையாலேயே தூண்டப்படுகிறார்கள். மேடையிலேயே ஆளுமை முழுமை கொள்கிறார்கள்

என் மூன்று உரைகளையுமே அற்புதமானவை, ஆழமானவை, செறிவானவை, கவித்துவமனாவை என பொங்கிப்பொங்கிப் பாராட்டினர். ஆனால் நான் உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்ததை, என் ஆழம் பதைத்துக் கொண்டிருந்ததை நான் மட்டிலுமே அறிவேன். இந்த உரைகளுக்காக நீண்ட கட்டுரைகளைப் போல குறிப்புகளை எழுதி பலமுறை அவற்றை உளப்பாடம் செய்த பின்னரே மேடையேறினேன். ஆனாலும் நடுக்கம் இருந்துகொண்டிருந்தது

இரு சிக்கல்களை நான் காண்கிறேன். ஒன்று தேர்ந்த மேடை விற்பன்னர்கள் சிறந்த குரல்வளம் கொண்டவர்கள். உச்சரிப்பை பட்டை தீட்டி வைத்திருப்பார்கள். ஆகவே தெள்ளத்தெளிவாகப் பேசுகிறார்கள். என் குரல் கம்மியது. உச்சரிப்பு எப்போதுமே மெல்லிய குளறுபடிகள் கொண்டது. அதை பயின்று மேம்படுத்தல் என்னால் ஆகாதது. இரண்டாவதாக மேடைப்பேச்சாளர்கள் ஒரே பேச்சை பலமுறை நிகழ்த்துகிறார்கள். சில உரைகளை நூறுமுறைகூட அவர்கள் அப்படியே திரும்பப் பேசிவிடுகிறார்கள். ஆகவே அவை தங்குதடையின்றி வெளிப்படுகின்றன. நான் எல்லா பேச்சையும் முற்றிலும் புதியதாகவே நிகழ்த்துகிறேன். அந்த மேடையில் சிந்தனை நிகழ்ந்தாகவேண்டும். சமயங்களில் நிகழாமலும் போகக்கூடும் என்னும் இடர் உண்டு. அதோடு இத்தனை எழுதியபின் நான் பேச எழுவதனால் புதியதாக எதையாவது சொல்லியாகவேண்டும். திரும்பச் சொல்லி சலிப்பூட்டக்கூடாது.

நான் பேசும்போது என்னென்னவோ நிகழ்கின்றன. முதல் விஷயம் மறதி. நான் என் மூச்சின் பகுதியென்றே கொண்டிருக்கும் செய்யுட்கள் கூட மறந்து போய் உள்ளம் ஒழிந்து கிடக்கும். அந்த திகைப்பு எழுந்து நடுங்கிவிட்டேன் என்றால் அடுத்தடுத்து ஒன்றுமே நினைவில் எழாது. மிகமிகச் எளிய சொற்கள் மேடையில் நிற்கையில் நினைவிலிருந்து அகன்றுவிடுகின்றன. இன்னொரு சிக்கல், ஒரு கருத்தைச் சொன்னதும் அதிலிருந்து முற்றிலும் தொடர்பற்ற ஒரு உளத்தாவல் நிகழ்கிறது. அதை அடக்கி உரைக்கு மீண்டும் வரவேண்டியிருக்கிறது. மேடையில் சிந்தனையும் சேர்ந்தே நிகழ்ந்தால் உரை சிதறிவிடுகிறது.

கடைசியாக ஒன்றுண்டு. அது நினைவுமாற்றம். ‘உறங்குவதுபோலும் சாக்காடு’ என்னும் குறளை ‘துஞ்சுவதுபோலும் சாக்காடு’ என நினைவு ஏனோ பதிந்து வைத்துள்ளது. சில பெயர்களை நினைவு வேறுவகையில் சேர்த்திருக்கிறது. அதை எத்தனை பயிற்றுவித்தாலும் மேடையில் தன்னிச்சையாக நாவில் அதுதான் எழும்.

ஆகவே ஒவ்வொரு உரையையும் பெரும் பதற்றத்துடன் எதிர்கொள்கிறேன். பலமுறை தயாரித்துக்கொள்கிறேன். உரைக்கு தெளிவான திட்டம்- கட்டமைப்பு ஒன்றை முன்னரே உருவாக்கிக் கொள்கிறேன். ஒருவகை மன்னிப்புகோரலுடன் மட்டுமே பேசத் தொடங்குகிறேன். என் பேச்சைக் கேட்பவர்கள் என் வாசகர்கள்தான் என்பதனால் பெரும்பாலும் சிக்கலில்லாமல் கடந்துசெல்கிறேன்

ஆனால் ஒன்றுண்டு, இன்றுவரை வெறுமே அரங்கை மகிழ்விக்கும் உரை என ஒன்றை ஆற்றியதில்லை. மேடைநேரத்தை வீணடித்ததில்லை. என் உரைகள் அனேகமாக அனைத்துமே அச்சேறியிருக்கின்றன. பதிவாகியிருக்கின்றன. என் முன் அரங்குக்கு வந்தமர்ந்தவர்களிடம் எப்போதுமே அவர்கள் அறியாத சிலவற்றை முன்வைத்திருக்கிறேன். அந்தவகையில் என்னை நானே ‘பரவாயில்லை, நீயும் ஒரு பேச்சாளன்தான்’ என பாராட்டிக்கொள்கிறேன்.

சவுண்ட் கிளவுடில் என் உரைகள்

 

முந்தைய கட்டுரைமிருகவதை என்னும் போலித்தனம்
அடுத்த கட்டுரைவானதி- அஞ்சலிகள்