புத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள்

book-06-1483711765

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். வாசகர் கிறிஸ்டி எழுதியிருக்கும் கடிதத்தை இரண்டு முறை படித்துவிட்டேன். அவர் அடைந்திருக்கும் பரவசம் என்னையும் தொற்றிக்கொள்ளும்போல இருந்தது. ஒவ்வொரு வாக்கியத்திலும் அவருடைய உற்சாகமும் ஆனந்தமும் சுடர்விடுகின்றன. திறக்காத திடல்முன்னால் இரண்டு மணிநேரங்களுக்கும் முன்னால் காத்திருக்க மனத்தில் ஓர் இலட்சிய தாகம் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

கிறிஸ்டியில் வாசிப்புத்தாகம் சிலிர்க்கவைக்கிறது. உண்மையில் கிறிஸ்டி ஓர் இலட்சிய வாசகர். இப்படிப்பட்ட இலட்சிய வாசகர்களின் கைகளைச் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்டியின் கடிதம் கிளாஸிக் வகை. அவர் தொடர்ந்து எழுத முயற்சி செய்யவேண்டும்.

அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்

பாவண்ணன்

இரண்டு கட்டைப்பை நிறைய புத்தகங்களை நிறைத்துக்கொண்டு கடைகடையாக வேடிக்கை பார்த்தபடி நடந்த என் அனுபவத்தை நினைத்துக்கொண்டேன். புத்தகங்கள் வாங்குவதற்காகவே அவர் மேற்கொண்ட சென்னைப்பயணம் வாழ்த்துக்குரியது

***

சார் வணக்கம்

இந்த பதிவில் கிரிஸ்டியின் பரவசம் முழுக்க வாசிக்கும் என்னையும் தொற்றிக்கொண்டது. அழகாய் அப்படியே நடந்ததை விவரித்திருக்கிறார்கள். வாசிக்கையிலேயே நானும் அவசர அவசரமாய் அந்த புத்தகக்கடலுக்குள் அலைந்துகொண்டிருந்தது போல இருந்தது அப்படி ஒரு எழுத்து நடை.

கிரிஸ்டியின் பதிவில் அவருக்கும் அவரின் இந்த ”முதல் புத்தக வாங்கல்” எனும் அனுபவம் மற்றும் பரவசத்தை விடவும் என்னைக் கவர்ந்ததும், வியக்க வைத்ததும் கிரிஸ்டியின் கணவரைப்பற்றி அறிந்து கொண்டதுதான் சார். உடல்நிலை சரியில்லாமலும் மனைவியை வெளியில் ,அதுவும் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது என்று தெரிந்து புத்தககண்காட்சிக்கு அழைத்துபோனவர், பஸ் ஒத்துக்காது என்று ரயிலில் பதிவு செய்து கொடுத்தவர், ஆட்டோவில் இருந்து அப்படியே குதிச்சுரு கிரிஸ்டி என சொன்னவர், உள்ளே போனபின்பு அலையக்கூடாது என முன்னடியே தகவல் பலகைகளை பார்க்கச்சொல்லியவர், மனைவியை சுதந்திரமாய் உள்ளே புத்தகங்களை பார்க்கவும் வாங்கவும் விட்டு விட்டு  வெளியில் காத்திருந்தவர், மதிய உணவை கூட நேரம் மிச்சப்படுத்த வாங்கி வைத்தவர், மனைவி உள்ளே இருந்தபொழுது அவர் வெளியே கேட்டுக்கொண்டிருந்த மேடைப்பேச்சுக்களை மனைவி வந்ததும் அவரிடமும் பகிர்ந்து கொண்டவர் ஆஹா இப்படியுமா கணவர்கள் இருப்பார்கள்? இருக்கிறார்கள்?

கிறிஸ்டியின் புத்தககண்காட்சி அனுபவம் இனிது என்றால் அவரின் கணவரின் அன்போ அதனினும் இனிது!!

அன்புடன்

லோகமாதேவி

***

முந்தைய கட்டுரைசந்திரா
அடுத்த கட்டுரைபுதிய வாசகருக்கு…