ராணுவத்தின்மீதான ஊழல்குற்றச்சாட்டு

bsf

அன்புள்ள ஜெ

இந்தச்செய்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? http://www.msn.com/en-in/news/newsindia/bsf-jawan-targetted-for-speaking-up-and-exposing-reality-says-his-family/ar-BByaA7c?li=AAggbRN&ocid=SK2MDHP.

ராணுவத்தில் நிகழும் விஷயங்களை இப்படி ஊரறிய தண்டோரா போடுவதும் ஊடகங்கள் இதை மேலெடுத்துச்செல்வதும் சரியானதா? இது ராணுவத்தின் நம்பிக்கையைக்குலைக்கும் செயல் அல்லவா?

சத்யன்

*

அன்புள்ள சத்யன்,

சில விஷயங்களைக் கேட்டதுமே ஓர் உள்ளுணர்வால் அது முழுக்க உண்மை என்று நமக்குத்தோன்றுமே, அதைப்போன்ற ஒன்றுதான் யாத்வின் வெளிப்படுத்தல். ஏனென்றால் மொத்த இந்தியச்சூழலே ஊழல்மனம் கொண்டிருக்கிறது. எங்கும் எதையும் சுரண்டிக் கொள்ளலாம் என்னும் மனநிலை. நாம் போற்றுபவர்கள் பெரும்பாலானவர்கள் ஊழல்வாதிகள். வெற்றி பெற்றவர்கள் என கொண்டாடப்பட்டவர்கள் அவர்கள். நம் சமூகத்தின் ஒருபகுதியே ராணுவம். அங்கு இதே மனிதர்கள் கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஊழல் செய்வதற்கு இதைப் போன்ற சில வாய்ப்புகளே உள்ளன

உண்மை. ராணுவத்தின் நம்பிக்கையை குலைக்கும் செயல் இது. ஆனால் இதை விட முக்கியமானது ராணுவத்தில் இப்படிப்பட்ட உணவு வழங்குவது மேலும் நம்பிக்கையைக் குலைக்கும் செயல் என்பது. ராணுவவீரர் காணொளியில் காட்டிய உணவு போலியானது என இன்றுவரை ராணுவம் சொல்லமுடியவில்லை. அந்த உணவைச் சமைத்தவர்கள், அந்த உணவை அளித்த மேலதிகாரிகள் விசாரிக்கப்பட்டார்களா, தண்டிக்கப்பட்டார்களா என நாம் எதிர்பார்க்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை. மாறாக ராணுவம் அந்த வீரரைத்தான் குற்றம் சாட்டுகிறது

அவர் ஒழுங்கின்மை, குடி ஆகியவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டவர் என்பதைத் தவிர ராணுவம் சொல்லும் சமாதானம் ஏதும் இல்லை. அது ஒரு பதில் குற்றச்சாட்டு மட்டுமே. உண்மையில் குடிப்பழக்கமும் முன்பு மீறலுக்காகத் தண்டிக்கப்பட்டவர் என்பதும்தான் ராணுவ வீரர் யாதவின் குரல் உண்மையானது என்பதற்கான சான்றுகள். அவர் மீறல் கொண்டவர் என்பதனால்தான் இந்த உண்மையை வெளியே சொல்கிறார். பல்லாயிரம் பேர் சகித்துக்கொண்டு வாழ்ந்து கடந்து செல்லவே முயல்வார்கள். மீறல் என்பது ஓரு பிறவிக்குணம். அவர்களே குரலெழுப்புவார்கள். அவர்களுக்கு எல்லாவகையான மீறல்களும் இருக்கும். அவர்கள் மீறுவதே அவர்கள் மீறி எழுந்து சொல்லும் உண்மையை மறுப்பதற்கான நியாயம் ஆகிவிடாது

நம் நாட்டில் நீதிமன்றம், ராணுவம் இரண்டுமே புனிதப் பசுக்களாக முன்வைக்கப்படுகின்றன. இரண்டுமே கேள்வி கேட்பார் இல்லாமல் ஊழலில் புழுத்துக் கிடக்கின்றன என்பதே நான் அடிக்கடிக் கேள்விப்படுவது. ராணுவத்தில் இருந்த பலர் ராணுவத்தில் உணவு உட்பட ரேஷன் பொருட்கள் வெளிச் சந்தையில் விற்கப்படுவதைப் பற்றி பேசிக்கேட்டிருக்கிறேன். எல்லாமே அச்சத்துடன் சொல்லப்படும் முணுமுணுப்புகள். ஒருவர் சற்றே கிறுக்குத்தனம் கொண்டவராதலால் உண்மையை உரக்க ஒலித்திருக்கிறார். இதுவே நான் புரிந்துகொண்டது.

வட இந்தியாவிலுள்ள மேல் கீழ் அடுக்கின் மூர்க்கத்தை வைத்து இதை நாம் இன்னும் புரிந்துகொள்ள முடியும். அங்கே அனைத்து தளங்களிலும் மேலே இருப்பவார்கள் கேள்விக்கு அப்பார்பட்டவர்கள்தான். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ராணுவத்தில் அதற்கு ஒரு சட்டபூர்வமான அனுமதியும் உள்ளது எனும்போது அது உச்சமடைகிறது. ராணுவ வீரர்களை மனைவியின் துணி துவைக்க அனுப்புவதெல்லாம் இன்றும் கிட்டத்தட்ட அதிகாரபூர்வமாகவே நிகழ்கிறது [இங்கே வள்ளியூரிலேயே நீதிமன்ற ஊழியர் தனக்கு வீட்டில் மீன் சரியாகப் பொரித்துத் தரவில்லை என எழுத்து பூர்வமாக மெமோகொடுத்த நீதிபதியைப்பற்றிய செய்தி வெளிவந்தது]

இது ஒரு அபாய அறிவிப்பு. பாரதிய ஜனதாக்கட்சியின் தேசபக்தி உண்மை என்றால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரிகள். அந்த உண்மை சொல்லி அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைமொழிங்கடித்தல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : வானவன் மாதேவி