விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன்

IMG_8242

இது போன்ற கூடுகைகளின் நோக்கமே முக்கிய அல்லது சில மாறுபட்ட சிந்தனைகளை கவனப்படுத்த அல்லது உருவாக்க முடியுமா என்பது தான். கடந்த காலங்களில் மலையாளக் கவி டி.பி.ராஜீவன் கவிதைகளில் இருந்து படிமத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டியதன் அரசியல் அவசியம் பற்றிப் பேசினார், அது ஊட்டி முகாம் வரை நீடித்தது. சென்ற ஆண்டு கே.என்.செந்தில் தற்காலத்திய நெருக்கடி என்பது ‘கருணையின்மை’ தான் என்றார், அது அப்போதே சிந்திக்க வைத்தது, இப்படி விஷ்ணுபுரம் கூடுகைகளுக்கு சில தவிர்க்க இயலா சிந்தனை முக்கியத்துவம் உண்டு. சில சமயம் அது திறம்படக் கூறல் மற்றும் சிலாகித்தல் ஆக இருக்கக் கூடும், சிலசமயம் ஆச்சர்ய தகவல்களாக இருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக சிலசமயம் புது சிந்தனைகள் மற்றும் அதுகுறித்த அறிமுகங்கள்.

இந்த 2016 லும் அப்படி பலவாறாக நிகழ்ந்தது. ஒப்புநோக்க இது ஊட்டி கூடுகைகளுக்கு நிகராகவே இருந்தது. கடந்த எல்லா ஆண்டு விஷ்ணுபுர டிசம்பர் கூடுகைகளின் கிரீடம் இது தான். அடுத்த ஆண்டு கூட இந்த உயரத்தை எட்டிப் பிடிப்பது சற்று சிரமம் தான். இம்முறை சரஸ்வதி தேவியின் கூடவே அதிருஷ்ட தேவியின் ஆசியும் இருந்தது. கோவைக்கு வந்து இறங்கியபோதே “மோட்டார்” ஸ்ரீனிவசன் என சற்று மேம்பட்ட பெயரை தனக்குத் தானே சூட்டிக்கொள்ளும் “மென்டலின்” ஸ்ரீனிவசனுடன் எனது விவாதம் துவங்கிவிட்டது.

ஒரு கால கட்டத்தின் குரல் என ஒரு எழுத்தாளனையோ, கவியையோ அல்லது அக்காலகட்ட எழுத்தாளர்கள் சிலரையோ சொல்லலாகுமா, 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு வலிந்து வட்டம் ஒன்றை போட்டு அதற்குள் அவர்களை புகுத்திக்கொள்ளலாகாதா  அது என்பதே அவ்விவாதம். இன்றில் நின்றுகொண்டு கடந்த காலத்தை நாம் வரையறுக்கிறோம், பின்னர் எழுத்துலக சிந்தனையை வரையறுக்கிறோம், தர்க்கப் பொருத்தம் காரணமாக நாம் அதை ஒப்புக்கொள்கிறோம். இந்த வரையறை பொருத்தப்பாடு இரண்டுமே தவறாகவும் இருக்கலாம். வரலாறு சமகாலத்தேவைசார்ந்து உருவாக்கப்படும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.

நாஞ்சில் அமர்வில் அவர் கூறிய ஓர் உவமை நினைவில் நிற்கிறது. பேசாமல் செய்பவர்கள் -பலா பூக்காது ஆனால் காய்க்கும், பிரகடனப் படுத்திவிட்டு செய்பவர்கள் -மா கொத்து கொத்தாக பூக்கும் கூடவே மிகுதியாக காய்க்கும், வாய்ச்சொல் வீரர்களுக்கு – பாதிரி, பூத்துத் தள்ளும் காய்ப்பது அபூர்வம் — என மேற்கோள் காட்டியது புருவத்தை உயர்த்த வைத்தது, அராத்து பாரதியின் மொழி மாஜிக் ஏன் பின்னர் நிகழவில்லை என்னும் கேள்வியை எழுப்பினார், நாஞ்சிலும் அதை ஒப்புக்கொண்டு ‘சூதர் அவையினிலே தொண்டு மகளிர் உண்டு …….” கவிதையை அக்கணம் பாடினார், கவிதைக்கு சொற்தேர்வும், சொல் இணைவும் முக்கியம், பாரதி ஒரு யுக புருஷன் அவர்போல அரிதாகத் தான் தோன்றுவார் என்றார். ஏனோ “பாரதி மகாகவியா” என்கிற சிற்றிதழ் விவாதம் இங்கு சுட்டிக் காட்டப்படவில்லை.

இதைக் குறித்து வைத்துக் கொண்ட தேவதேவன் கடைசி அமர்வில் அதை மறுத்துப் பேசினார். கவிஞனுக்கு மனத்தால் எட்டிப் பிடிக்கும் இடம்தான் முக்கியம் அதை வெளிப்படுத்த மொழி ஒரு கருவி மட்டுமே என்கிற அவரது வாதத்தை நாஞ்சில் மீண்டும் மறுத்து அப்படி என்றால் மௌனத்தாலேயே கவிதை எழுதி வாசித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானே என்றார், இவ்விவாதம் இனியும் தொடரும். தேவதேவன் இதை விடமாட்டார் என எண்ணுகிறேன், அல்லது இதை அவர் மறந்து போக நாம் அனுமதிக்க கூடாது. கள்ள மௌனம் என்னும் சொல்லாட்சி, யானையின் பல்வகைப் பெயர்கள், குறித்தும் அவரது உரையாடல் நீண்டது.

பாரதி மணி கலைக்கு சேவை செய்ய யாரும் நாடகத்திற்கு வருவதில்லை எனவும், காவியத் தலைவன் படம் அறியாமையால் எடுக்கப்பட்டது எனவும் கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன் பெண் வேடம் இடும் சிறுவர்கள் அனுபவிக்கும் பாலியல் தொந்தரவு சொல்லி மாளாது என்றார். ஒருபால் உறவு அப்போது சாதாரணம், இப்போது ஒப்பு நோக்க மிக அரிது என எண்ணவைத்தது. ஒரு பெண் வேடமிட்ட நடிகரை, சில ஜமீன்தார்கள் நாடகம் முடிந்து அதே பெண் உடையில் தமது பங்களாவுக்கு வந்து தங்களுக்கு மது பரிமாறினால் மட்டும் போதும் என ரூ.5000/- வழங்கினார்கள் எனவும் அது இன்றைய தேதியில் 10 லட்சம் பெரும் எனக் கூறினார்.

நமது நாடகங்கள் சற்று பின்தங்கித் தான் உள்ளது என்றார், ‘மைக்’கில் இருந்து விடுபடவே பல வருடமானதாகச் சொன்னார், நவீன நாடக முயற்சி தமக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும், அதில் கோணலான பரிசோதனைகள் உள்ளன, கலை இல்லை எனவும் கூறினார். என்றாலும் நாடக இயக்கங்கள் குறித்தோ, வெவ்வேறு மொழி நாடகங்கள் குறித்தோ, நாடக முன்னோடிகள் குறித்தோ, நாடக சரித்திர மாற்றம் குறித்தோ அவரால் எதுவும் சொல்ல இயலவில்லை. மசால் வடை இடும் பக்குவம், அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவர் தந்தை கவிஞர் ஹன்ஸ்ராஜ் பச்சனிடம் பையன் என்ன செய்கிறான் எனக் கேட்டது, பின்னர் அமிதாப் அவர் என்னை உண்மையிலேயே தெரியாமல் இருந்தால் ஒரு முட்டாள் எனவும், அதைத் தெரிந்தே கேட்டிருந்தார் என்றால் என்னைவிட பெரிய நடிகர் எனவும் ஒரு பேட்டியில் கூறியது போன்றவற்றை அவர் குறிப்பிட்டது சுவாரஸ்யமாக இருந்தது.

இரா. முருகன் வருவதற்கு சற்று தாமதம் ஆன இடைவெளியில் ஜெயமோகன் மேடை ஏற்றப்பட்டார், பொதுவாக ஊட்டி விஷ்ணுபுரம் அமர்வுகளிலும்,கோவை கூடுகைகளிலும் ஜெயமோகனை பற்றியோ அவரின் படைப்புகள் பற்றியோ ஏதும் பேசுவதில்லை என்கிற எழுதப்படாத விதியை நாம் கடை பிடிக்கிறோம். வேண்டுமென்றால் அரங்கிற்கு வெளியேயோ, காலை -மாலை நடையிலோ அவரிடம் அவர் படைப்புகள் குறித்து உரையாடலாம். ஆனால் நேரமின்மை காரணமாக மாலை நடையே இல்லை, எனவே சில வாசக- வாசகிகள் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு திடீர் உப்புமா அமர்வாக ஜெயமோகன் அமர்வு ஒரு 20 நிமிடம்.

ஏன் கண்ட கண்ட அவசியமற்ற எழுத்தாளர்களை எல்லாம் படித்து எழுதி எங்களையும் சுற்றலில் விடுகிறீர்கள் என்பது போன்று நகைக்காக சில பேசப்பட்டதே ஒழிய, வெண்முரசில் புதிய சொல்லாக்கம் என்பது தவிர்த்து பெரிதாக எதுவும் நிகழவில்லை. வேண்டுமானால் விஷ்ணுபுரம் சார்பில் தனியாக ஜெயமோகன் வாசகச் சந்திப்பை நாம் நடத்தலாம் எனத் தோன்றியது.

இரா.முருகன் சமீபத்தில் நமது நண்பர்களால் மிகுந்த ஸ்வாரஸ்யமான எழுத்தாளர் என சிலாகிக்கப் பட்டவர். jump cut எனும் வெவ்வேறு காலத்தை எழுத்தில் உறுத்தலில்லாமல் இணைக்கும் யுக்தி பற்றி பேசியது புதிது. புகை இலை விற்கும் பிராமணர்கள் பற்றி அரசூர் வம்சத்தில் வருவது, சிவகங்கையில் மலையாளம் கலந்த தமிழில் சில பாத்திரங்கள் உரையாடுவது தம்மை மீறியது எனக் கூறினார். மார்க்விஸ் தான் தமது ஆதர்ச எழுத்தாளர் எனவும், மாய எதார்த்தம் தனக்கு பிடித்தமானது எனவும் கூறினார். இவர் மறுநாள் மேடையில் எழுதி வைத்து படித்தது பின்பற்றக் கடினமாக இருந்தது.

பவாவின் அமர்வு தான் அன்றைய நாளின் ஹிட். சக்காரியாவின் தேன் என்னும் சிறுகதை, அதை கரடி எனக்கூறியிருக்க வேண்டும் என துவங்கி, ஒட்டர்களின் கதை, தாம் பாம்பு பிடிக்கும் இருளர்களுடன் சென்றது, ஜப்பான் கிழவன் கதை, அதே போல ஒரு படம் பார்த்தது, திருவண்ணாமலையில் யோகிராம் சுரத்குமாரின் இருப்பு, அவருடனான நட்பு, அவர் மகனை இழந்தபின் மனைவியுடன் யோகியின் குருகுலத்திற்குச் சென்றது, பின்பும் எந்த மாறுதலும் இல்லாமல் திரும்பியது, பல்வேறு வெகுஜனக் கூட்டங்களை நடத்தியது போன்றவை வியக்க வைத்த செய்திகள். தனது தெருவில் குடியிருக்கும் ஒருவன் தன்னை ஒரு கதை சொல்லி என உணரவேண்டும், அதே எனது சாதனை என்பதே அவரது key note.

இலக்கிய குவிஸ் பலரை வசீகரித்தாலும் அது அவ்வளவு தகுந்ததாக இல்லை. தகவலை தெரிந்து வைத்திருக்கும் சோதனையே மிகுதியாக இருந்தது. gestalt theory, catharsis போன்ற இலக்கிய கோட்பாடுகள், மாய எதார்த்தம், மீ எதார்த்தம் போன்ற இலக்கிய யுக்திகள், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கிய போக்குகள் குறித்து எந்த கேள்வியும் இல்லை. ஆக இது ஒரு இலக்கியத் தகவல் களஞ்சிய வினாடி வினா. இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது, இளம் வாசகர் பாரதி பலரின் தூக்கத்தை கெடுத்தார்.

கு சிவராமனின் அமர்வும் எதிர்பாரா தீவிரம். முடிக்க இரவு 10.30 ஆனது. ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம், மேலை நாடுகளில் எல்லாம் ஜப்பானிய, சீன பாரம்பரிய மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது அவ்வாறு இந்தியாவில் இருப்பதில்லை எனக் கூறினார். ஒரு மிட்டாயில் 45 உள்ளீடுகள் இருப்பதாகவும் அனைத்தும் ரசாயனம் எனவும் கூறினார். ‘ரெட் மீட்’ புற்று நோய்க்கு காரணமாவது பற்றியும் கூறினார். பேலியோ டயட் பற்றி கேட்டபோது ஒரு ஆய்வு முடிவு வந்து ருசுப்படுத்த 20, 30 ஆண்டுகள் பிடிக்கும், இதன் எதிர் விளைவுகள் பின்னரே தெரியும் என்றார். புற்றுநோய்க்கும் புகையிலைக்கும் ஆன தொடர்பை நிரூபிக்க 30,40 ஆண்டுகள் ஆனதாகவும், இங்கிலாந்தில் முதல் புற்றுநோய் காரணி அலசல் அமர்வில் அனைவரும் புகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் மிகப் பிரபலம் எனக்கூறினார். மருந்து அரசியல் குறித்தும் விளக்கினார். மிகுந்த சமநிலையுடன் கூடிய உரையாடல் அவருடையது, கண் கொட்டாமல் அனைவரும் பங்கேற்றனர்

.

IMG_8441
கிருஷ்ணன், ராஜகோபாலன்

மறுநாள் நாயகன் சிவப்பிரசாத். கடந்தமுறை ஜோடி குரூஸ், இம்முறை இவர். நவீன ஜனநாயக சிந்தனைகள் நமக்கு ஆங்கிலம் வழி வந்தது, அது நம்மை விடுவித்தது. அதே ஆங்கிலம் இன்று கான்வென்டுகளாக நின்று நம்மை அடிமைப்படுத்துகிறது என்றார். கலை ஒருவகைப் பிரச்சாரம், ஆனால் ஒரு கலைஞன் பிரச்சாரத்தை மீறி எழவேண்டும், கலை இயல்பாக பிரச்சாரத்தை மீறி எழும் என்றார்.

மறுநாள் மேடையில் பேசும் போது தமிழகத்தில் அரசியல் மேடைகளில் உரத்து பேசுதலும், அடுக்கு மொழியும் அதிகம் இது பிற மொழிகளில் இல்லை, ஆனால் இதன் எதிர்வினையாக தமிழ் நவீன கவிதைகளில் இந்த உரத்துப் பேசுதல், அடுக்கு மொழிகள் இல்லை, அது அடங்கிய குரலில் நுட்பமாக பேசுகிறது என்றார். இது ஆந்திரம், கர்நாடகம், ஹிந்தியில் தலைகீழாக நிகழ்கிறது என்றார். மிக கூரிய அவதானிப்பு இது. மேலும் அமர்வில் ஒரு எழுத்தாளனின் சுதந்திரத்தை விட பொறுப்பை தான் நான் வலியுறுத்திக்கிறேன் என்றது அவரைப் போல தடாலடி கவிஞரின் வாயில் இருந்து சற்றும் எதிர்பாராதது. இவர் அசல் சிந்தனையாளராக அக்கணம் தோன்றினார்.

உணவு இடைவேளைக்கு பிறகு பஷீர் பற்றி சு வேணுகோபால் மற்றும் ஜெயமோகனின் விவாதம். பஷீருக்கு நேர்ந்த வாழ்வனுபவம் அரிது, பெரிது. ஒப்பு நோக்க அது குறைவாகவே அவர் படைப்பில் வெளிப்பட்டு இருக்கிறது என்றார் வேணுகோபால். இன்றைய வாசகனுக்கு சு.வேணுகோபாலின் உக்கிரமே உவப்பானது, பஷீரின் ஆன்மிகம் சற்று தொலைவாகவே இருக்கும். என்றாலும் ஜெயமோகனின் வாதம் அசரவைத்தது, தத்துவமற்ற ஆன்மிகம் அவருடையது என்றும் முழுமையாக உணர்ந்தபின் சிரிக்கும் சூபி பஷீர் என்றும் சொன்னார். இந்தியாவின் சிறந்த 10 எழுத்தாளர்களில் பஷீரும் ஒருவர் என்றார். ஜெயமோகன் வக்கீலுக்கு படித்து ஃபெயிலாகி இருக்க வேண்டும். ஒரு வாசகியும் ஜென்மதினம் கதை பற்றி கூறினார். சு.வேணுகோபாலுக்கு ஜெயமோகனுக்குப் பதில் சொல்ல நேரம் வாய்க்காமல் வண்ணதாசன் வந்தார்.

தன்னை கல்யாண்ஜியாக வண்ணதாசனாக அணுகுவதைவிட கல்யாணியாக அணுகுவது பிடிக்கும் என்றார். தயக்கத்துடன் ஆரம்பித்து பின்பு தோழமையுடன் அனைவருடனும் உரையாடினார், விஜயா வேலாயுதம் போர்த்திய பொன்னாடை நழுவியது, இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் நழுவி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது என சாகித்ய அகாடமி பற்றி சொல்லாமல் சொன்னார். அவருக்கெனவே வந்திருந்த வாசகர்கள் நெகிழ்ந்தனர், தழுதழுத்தனர். அவரது கவிதைகள் கதைகளை அங்கேயே வாசித்துக் காட்டினர். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக அங்கு தோன்றினார். இறுதிக்கட்டத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டார், அவரின் குவைக்கோல் நிலத்தடி நீரை அறிந்துகொண்டது.

விஜயா வேலாயுதம் இறுதியில் எதிர்பாராமல் மைக்கை கைப்பற்றி கடந்தகால ஏக்கத்தை நிரவச் செய்தார், அது வயசாளிகளின் உலகம், இளைஞர்களிடையே அதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை, நித்தமும் நிகழ்காலத்தில் வாழும் வாசகர்களிடையே அதற்கு எந்தப் பொருளும் இல்லை. இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து 3 நபர்கள் அவையறியாது பேசிவிட்டனர். இதை அடுத்த கூடுகைகளில் தவிர்த்துவிடவேண்டும் என நண்பர்கள் சொன்னார்கள், இதை எனக்கும் நானே சொல்லிக் கொள்கிறேன்.

இறுதியாக சுப்ரபாரதி மணியன், பாவண்ணன், நாஞ்சில், இரா.முருகன் மற்றும் தேவதேவனின் கூட்டு அமர்வு. நாடகம் பற்றி பேச்சு வந்தது. நாடகத்திற்கு தமிழகத்தில் இன்று வரவேற்பில் என்றால் அது தனது வடிவத்தை மாற்றிக் கொள்ளலாம் என ஒரு வாசகர் கேட்டார். அவரது சிபாரிசு குறும்படம் போல நவீன திரைக்கு மாறலாம் என்பது. தேவதேவன், இதை கடுமையாக மறுத்தார். நாடகம் ஒரு தூய காலை வடிவம் அது ஒருவரின் உடலில் இருந்து நேரிடையாக வெளிப்படுவது, நாம் நேரில் ஒருவரைக் காணும் அனுபவம் மகத்தானது என்றார். தான் வண்ணதாசனை சந்திக்க முயன்றதை கூறினார், அவரது கவிதைகளை படித்திருந்தாலும் அவரை சந்த்தித்தால் தான் அது முழுமை பெரும் என தனக்கு தோன்றியதாக கூறினார். நேரடி உடல் வெளிப்பாடு ஒரு தரிசனம்.

எப்படி என்று தெரியவில்லை சுப்ரபாரதி மணியன் தலைப்பை முன்னுணர்ந்தது போல ஒரு அச்சிட்ட தாளை கொண்டு வந்து அதை 15 நிமிடம் படித்து அயர்ச்சியை ஊட்டினார். பிறகு தான் தெரிந்தது “நவீன இலக்கியம் பெரிதும் வீழ்ச்சியைத் தான்பேசுகிறதா?” என்கிற அன்றைய தலைப்பிற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு தமது படைப்பையே முன்வைத்தார், இங்கு வாசிப்பில் ஒரு அரசியல் உள்ளது என்றார். நேரமின்மை காரணமாக இந்த இறுதி அமர்வு வலிந்து முடித்துவைக்கப்பட்டது, திகட்டத் திகட்ட புகட்டப் பட்ட தேனமுது இது, வாசகர்கள் 130 பேர் மேலும் மேலும் என்றனர் காலம் போதும் என திரையிட்டது நாம் விழாவிற்கு சென்றோம்.

இரண்டு நாளும் இமை சோராது, தளராது கவனித்து, கணமும் தவறவிடாது அணைத்து அமர்வுகளில் பார்வையாளராக பங்கேற்ற 60 ஐ தாண்டிய நாஞ்சில் ஒரு ஞான உபாசகனின் முன்மாதிரி. அவர் முன் பணிகிறேன்.

கிருஷ்ணன்.

வண்ணதாசன் விழா அனைத்து இணைப்புக்களும்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18
அடுத்த கட்டுரைபணமில்லாப் பொருளாதாரம் – பாலா