’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72

[ 18 ]

தளிர்ப்பசுமை சூழ்ந்த சோலைக்குள் மரங்களின் அடிக்கவர்களின்மேல் கட்டப்பட்ட சிறுகுடில்கள் குருவிக்கூடுகள்போலிருந்தன. காற்றில் மரங்கள் ஆட அவை மெல்ல ஆடுவது தொட்டில்போலிருந்தது. மூங்கில் வேய்ந்த தரைமேல் ஈச்சையோலைகளைப் பரப்பி மெத்தென்றாக்கியிருந்தனர். வைதிகமுனிவரான காண்டவரின் மாணவர்களான சந்திரரும் சிகரரும் அங்கே தங்கள் மாணவர்களுடன் இருபது குடில்களிலாக தங்கியிருந்தனர். விருந்தினர்களுக்கான பெரிய குடில் நடுவே நின்றிருந்த பிரமோதம் என்னும் இலுப்பைமரத்தின் மேல் அமைந்திருந்தது. அதில் அந்தணர் நால்வரும் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்கள் சுகவாணிச் சோலைக்குள் நுழைந்ததுமே சந்திரரும் சிகரரும் நேரில் வந்து வரவேற்று அழைத்துச்சென்றனர். அவர்கள் அளவைநோக்கு கொண்ட வைதிகர்கள் என்பதனால் ஜைமினி மிக அணுக்கமாக உணர்ந்தான். அவர்களும் மிக விரைவிலேயே அவனை தங்களவர் என கண்டுகொண்டனர். சூதமைந்தனை ஜைமினி தோளிலேற்றிக்கொண்டு வந்தமையால் முதலில் சந்திரர் அவனை நேர்கொண்டு நோக்குவதை தவிர்த்திருந்தார். அவன் தன் குருமரபைச் சொன்னபோது அவர் விழிகள் வியப்பில் சுருங்கி உக்ரனை ஒரு கணம் நோக்கி அகன்றன.

ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் முறைச்சொல் உரைத்து அவர்களை அழைத்துச்சென்று குடில்களில் அமர்த்தினர். நீராடி வந்ததும் பால்கஞ்சியும் பழங்களும் அளித்து மன்று அமர்த்தினர். சூதர்கள் இருவருக்கும் மாணவர்களின் குடில்களுக்கு அப்பால் சிறிய குடிலொன்று அளிக்கப்பட்டது. நால்வரும் அவர்களின் அந்தி வேள்வியில் கலந்துகொண்டனர். வேள்விக்குப்பின் அங்குள்ள மாணவர்களின் வினாக்களுக்கு ஜைமினி அளித்த மறுமொழிகள் அவனை மகாவைதிகன் என அவர்கள் எண்ணும்படி செய்தன. அதுவரை இருந்த நோக்கும் நடப்பும் மாற அவர்கள் மூதாசிரியனிடமென அவனிடம் பேசலாயினர்.

இரவுணவுக்குப்பின் அந்தணர் நால்வரும் அமர்ந்திருந்த விருந்தினர் குடிலுக்கு நூலேணி வழியாக உக்ரன் ஏறிவந்தான். வாயிலில் நின்றபடி கைகளை விரித்து “எங்கள் குடில் சிறியது… அங்கே கரடி வந்து என்னை தூக்கிக்கொண்டு செல்லப்போகிறது… மூத்த தந்தையை கரடி சங்கைக்கடித்து கொல்லும்” என்றான். தன் கையை கடித்துக்காட்டி “கரடி குருதியைக் குடிக்கும். மூத்த தந்தை அழுவார்” என்றான். “ஏன் மூத்த தந்தைமேல் இத்தனை சினம்?” என்றான் சுமந்து. “வேறென்ன, ஆணைகளை இடுகிறார் அல்லவா?” என்றான் பைலன். “இவர் அவருடைய ஆணைகளுக்கு மட்டுமே கட்டுப்படுகிறார்” என்றான் சுமந்து. “விதையிலேயே மரத்தின் அனைத்து இயல்புகளும் இருக்கும் என்பார்கள். எத்தனை சரி என எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் வைசம்பாயனன்.

“எங்கள் குடிலில் இதேபோல மான்தோல் படுக்கை இல்லை” என்று உக்ரன் சொன்னான். “இதேபோல தொங்கும் விளக்கும் அங்கே இல்லை.” உள்ளே வந்து கொடியை சுட்டிக்காட்டி “இவ்வளவு பெரிய கொடி அங்கே இல்லை” என்றான். “நீங்கள் இங்கேயே இரவு தங்குங்கள், சூதரே” என்றான் ஜைமினி. “ஆம், நான் அவருடன் தங்கமாட்டேன். அவரை இருட்டில் கரடி பிடிக்கும்போது நான் அழவே மாட்டேன்” என்றான். உள்ளே வந்து மான்தோலிருக்கையில் அமர்ந்து பலமுறை எம்பி அந்த மென்மையை நுகர்ந்து மகிழ்ந்தபின் “ஆனால் அங்கே என்னிடம் நல்ல முழவு இருக்கிறது. பெரிய முழவு. அதை நீங்கள் கேட்டால் தரவே மாட்டேன்” என்றான்.

கீழே விளக்கொளி விழுந்துகிடந்த வட்டத்தில் சண்டன் வந்து நின்று “இங்கே இருக்கிறானா சுண்டெலி?” என்றான். “ஆம்” என்றான் ஜைமினி. “உங்களை கரடி பிடிக்கப்போவதாக சொல்கிறார்.” சண்டன் சிரித்தபடி “மேலே வரலாமா?” என்றான். “வருக… உங்கள் இடம் அல்லவா இது?” என்றான் ஜைமினி. சண்டன் நூலேணி வழியாக மேலே வந்து “மைந்தரை வளர்ப்பது எளிதல்ல.பெற்றவர்களுக்கு மெய்யுசாவ நேரமிருப்பதில்லை என்பது ஏன் என்று புரிந்தது” என்றான். “காலைமுதல் இவன் பேச்சைக்கேட்டு என் தலைக்குள் எலிச்சத்தம் நிறைந்துவிட்டது. மைந்தன் என்ற சொல்லே உடலை நடுங்கச்செய்கிறது.”

ஜைமினி சிரித்து “அதிலும் இவர் மைந்தர்களாலான ஒரு படைக்கு நிகரானவர்” என்றான். சண்டன் களைப்புடன் அமர்ந்துகொண்டு “இனிய காடு…” என்று சுற்றிலும் பார்த்தான். “அழகாக இருக்கிறது. அனைத்தும் தளிர்விட்டிருக்கிறது” என்றான் சுமந்து. பைலன் “இக்காட்டின் அடியில் நீர் நிறைந்துள்ளது. எங்கெல்லாம் பள்ளங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் நீர் ஊறி எழுந்துள்ளது” என்றான். “ஆம், சுகவாணி என இதற்குப் பெயர் வந்ததே அதனால்தான். இங்கே கிளிகள் மிகுதி” என்று சண்டன் சொன்னான். உக்ரன் “அதில் ஒரு கிளியின் பெயர் சகனை. அது என்னிடம் இங்கே உள்ள வேதங்களை கேட்டுக்கேட்டு தங்கள் வேதங்களை மறந்துவிட்டதாக சொன்னது” என்றான்.

அவர்கள் அந்திப் பறவைகளின் ஒலியை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். “என்ன ஓசை! கூடணைந்தபின்னர்தான் அவை பேசிக்கொள்ளவே தொடங்குகின்றன போலும்” என்றான் பைலன். சண்டன் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்தான். “இரவு இத்தனை வெம்மையுடன் சூழ்ந்துகொள்ளுமென எண்ணியதே இல்லை… ஏதோ பெருவிலங்கின் ஆவிமூச்சுபோல இருக்கிறது காற்று” என்றான் பைலன் மீண்டும்.

ஜைமினி “நாகங்கள் மரங்களின்மேல் சுற்றி ஏறும் பொழுது. அவற்றைக் கண்டபின்னர்தான் பறவைகள் ஒலியெழுப்புகின்றன” என்றான். “நாகங்களுக்கான அச்சம் அவற்றின் ஆழத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு தெருவித்தையன் முட்டை ஒன்றை என் கையில் தந்தான். அதை படம்கொண்ட நாகத்தின் அருகே நீட்டும்படி சொன்னான். நாகம் மெல்ல அதைநோக்கி குனிந்தபோது என் கையிலிருந்த முட்டை மெல்ல அதிர்வதை உணர்ந்தேன்” என்றான் வைசம்பாயனன்.

பைலன் சண்டனை நோக்கி “தங்கள் உள்ளம் இங்கில்லைபோலும்” என்றான். சண்டன் விழித்து “என்ன?” என்றான். “எதை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றான் சுமந்து. சண்டன் “காலபீதி என்னும் முனிவரைப்பற்றி” என்றான்.

அவர்கள் நோக்கி அமர்ந்திருக்க சண்டன் “மகாருத்ரபுராணத்தில் இக்கதை உள்ளது. அந்த முட்டையைப்பற்றி சொன்னபோது நினைவிலெழுந்தது” என்றான். “சொல்லுங்கள்” என்றான் வைசம்பாயனன். “நான் அந்தக் கதையை கேட்டதே இல்லை” என்று எழுந்து வந்து இடையில் கைவைத்து நின்றான் உக்ரன். “சென்று அமர்ந்துகொள்ளுங்கள். சூதர் சொல்வார்” என்றான் பைலன். அவன் திரும்பி நோக்கியபின் சென்று ஜைமினியின் மடியில் அமர்ந்தான். அவனை மெல்ல தழுவிக்கொண்டான் ஜைமினி. ஜைமினியின் மார்பில் தன் தலையை சாய்த்து கால்களை நீட்டிக்கொண்டு உக்ரன் அமர்ந்தான். சண்டன் சொல்லத் தொடங்கினான்.

[ 19 ]

மாம்டி என்னும் அந்தணன் பத்தாண்டுகாலம் மைந்தரில்லாமையால் பதினாறு ருத்ரர்களை பதினாறு மாதம் நோற்று தன் மனையாட்டியாகிய காலகேயியின் கருவில் ஒரு குழவியை பெற்றான். கூரை கிழிய பொன்மழை விழுந்த கருமி என அவன் ஆனான். களஞ்சியம் நிறைந்த வேளாளன் என கைபெருகப்பெற்றான். அந்தணருக்கும் சூதருக்கும் அள்ளி வழங்கினான். அவன் தலைக்குமேல் கந்தர்வர்கள் இன்னிசையுடன் எப்போதுமிருந்தனர். அவன் செல்லுமிடமெல்லாம் கின்னரர்கள் நறுமணம் சூழச்செய்தனர். அவன் கேட்கும் சொல்லையெல்லாம் வித்யாதரர்கள் கவிதையென்றாக்கினர்.

ஒருநாள் விண்ணில் பறந்த இந்திரன் தன் நிழல் நீண்டு விழுவதை கண்டான். “என்ன இது, தேவர்களுக்கு நிழல் விழலாகாதே?” என்று அவன் மாதலியிடம் கேட்டான். “அரசே, தேவர்கள் தன்னொளி கொண்டவர்கள். ஆகவே அவர்களுக்கு நிழலில்லை. இன்று உங்களைவிட ஒளிகொண்ட ஒருவன் இதோ கீழே சென்றுகொண்டிருக்கிறான். அவன் உங்கள் உடலுக்கு நிழல் சமைக்கிறான்” என்றான் மாதலி. “யாரவன்?” என்றான் இந்திரன். “தவமிருந்து மைந்தனைப்பெற்ற மாம்டி என்னும் அந்தணன். அவன்மேல் விண்ணவர்கள் மலர்சொரிந்தபடியே உள்ளனர்” என்றான் மாதலி.

இந்திரன் அவனை கூர்ந்து நோக்கினான். “மாற்றிலாத இன்பத்தை மானுடர் உலகியலில் பெறமுடியாதே? எவ்வாறு இப்படி நிகழ்ந்தது?” என்றான். “அவன் தேவர்களை அறிந்தான். தேவருக்கும் தேவரான தென்றிசைத்தலைவனை இன்னும் அவன் அறியவில்லை” என்றான் மாதலி. இந்திரன் அன்றே சிறுகருவண்டாக மாறி பறந்துசென்று யமனை அடைந்தான். “மாம்டியின் மைந்தனின் ஊழ் என்ன? சொல்க, அறச்செல்வரே!” என்றான். “ஊழ்நெறியை முன்னால் அறியலாகாது, அரசே” என்றான் யமன். “அது புடவியை நெய்திருக்கும் ஊழின் ஓட்டத்தை அழிப்பதாகும். அதைச் சொல்ல எனக்கு ஆணையில்லை.” இந்திரன் “அவன் எவ்வண்ணம் இறப்பான் என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்றான். “எவ்வண்ணம் இறப்பான் என்பது எவ்வண்ணம் வாழ்வான் என்பதைத்தான் சுட்டுகிறது. அதை நான் சொல்லமுடியாது” என்றான் யமன்.

பலவாறாகக் கேட்டும் யமன் இரங்காததனால் இந்திரன் யமன் அறியாமல் சித்திரபுத்திரனிடம் சென்று “அந்தணரே, நான் வேள்விகாக்கும் தேவர்தலைவன். ஒன்றை மட்டும் சொல்லுங்கள், ஊழ்முதிர்கையில் அவனை அழைத்துவரும் யமபுரியின் காவலன் யார்?” என்றான். “அதைச் சொல்ல எனக்கு ஆணையில்லை, அரசே” என்றார் சித்திரபுத்திரன். “உம்மால் பிறிதொருவரை அனுப்ப முடியுமா?” என்றான் இந்திரன். “இல்லை, அம்மைந்தன் கருக்கொள்கையிலேயே இங்கே இவனும் இருட்துளியாக ஊறிவிட்டிருப்பான். இருவரும் சேர்ந்தே பிறக்கிறார்கள். இங்குள்ள பெருங்கோட்டைவாயிலில் அவன் ஒரு சிறுபுள்ளியென தோன்றிவிட்டிருப்பான்” என்றார்.

இந்திரன் காலபுரியின் கோட்டைச்சுவர் வழியாக விழி ஆயிரம் கொண்ட வண்டாகப் பறந்தான். கோடானுகோடி கொலைவிழிகளையே கருங்கற்சில்லுகள் என அடுக்கிக் கட்டப்பட்டிருந்தது அக்கோட்டை. “மாம்டியின் மனைவியிலமைந்த கருவை கொல்லப்போகும் காலதேவன் எழுக! இது அரசாணை!” என்று கூவிக்கொண்டே சென்றான். கோட்டைச்சுவரில் ஒரு கண் அசைந்தது. “மாம்டியின் மைந்தன் நூறாண்டு வாழ்ந்தபின்னர் சென்று அழைக்கவேண்டும் என்பதல்லவா ஆணை?” என்றது அக்கண்களின் வாய். “நீ அதை எப்படி அறிவாய்?” என்றான் இந்திரன். “என் பெயர் காலமார்க்கன். நானே அவனை அழைத்துவரவேண்டியவன். இங்கே கருத்தவத்தில் இருக்கிறேன்” என்றான் அவன்.

இந்திரன் “கரியவனே, நான் உன்னைத்தான் தேடிவந்தேன். எனக்கு ஓர் அருள் செய்க! மாம்டியின் மனைவி காலகேயியின் கருவிலிருக்கும் குழவிக்கு உன் முகத்தை மட்டும் காட்டி மீள்க!” என்றான். காலமார்க்கன் “அதற்கு எனக்கு ஆணையில்லை, அரசே” என்றான். “உன்னை அவன் அறிவானா என எப்போதேனும் எண்ணியிருக்கிறாயா?” என்றான் இந்திரன். “ஆம், அவ்வியப்பு எனக்கு உண்டு. நான் அவனை அறிவேன் என்பதனால் அவனும் என்னை அறிந்திருக்கவேண்டும்” என்றான் காலமார்க்கன். “அத்தனை குழவியரும் அவர்களின் காலனை கருவறைக்குள் அறிந்திருக்கின்றனர். அவனைநோக்கி கைகூப்பியபடியே மண்ணில் தோன்றுகின்றனர்” என்றான் இந்திரன்.

காலமார்க்கன் “ஆனால் அவனை கருவறைக்குள் சென்று நோக்க எனக்கு நெறியில்லையே?” என்றான். இந்திரன் “காலனே, அவனை நீ கொண்டுவருவதே ஊழ் என்றால் கருவில் விதையென இருக்கும் அவன் உன் முகத்தை நன்கறிந்திருப்பான்” என்றான். காலமார்க்கன் “ஆவல் என்னை அலைக்கழிக்கிறது. ஆனால் அவன் என்னை அறிந்துகொண்டால் பின்னர் என்னிடம் நெருங்கமாட்டான். இறப்பை மானுடன் தெரிவுசெய்து தேடிவந்து அணிகலன் என எடுத்து சூட்டிக்கொண்டாகவேண்டும். விரும்பாதவனை அணுகி உயிர்கவர எங்களுக்கு ஆணையில்லை” என்றான்.

“அவ்வாறு நிகழுமென்றால் அதுவே அவன் ஊழ் அல்லவா?” என்றான் இந்திரன். “அவன் ஊழ் அதுவென்றால் நாம் என்ன செய்தாலும் அது நிகழ்ந்தாகவேண்டும், காலமார்க்கனே” என மீண்டும் சொன்னான். “ஆம், அதை ஆராய்ந்துநோக்கவே விழைகிறேன். ஆனால் என் உள்ளம் தயங்குகிறது” என்றான் காலமார்க்கன். “ஆவல் எழுந்தபின் எவரும் அமைந்ததே இல்லை. நீ சென்று அவனை நோக்குவாய்” என்றபின் புன்னகையுடன் விழைவுக்கிறைவன் தன் அரியணைக்கு மீண்டான்.

இந்திராணி உளச்சோர்வுடன் “தேவர்க்கரசே, அந்த அந்தணனின் இன்பத்தை அழிப்பதனால் நீங்கள் அடைவதென்ன?” என்றாள். “நான் எனக்கு பெருநெறி இட்ட ஆணைகளை நிறைவேற்றுபவன் மட்டுமே. மானுடன் மண்ணில் காலூன்றி நின்று விண்ணவனுக்குரிய இன்பங்களை அடையக்கூடாது. மானுடனின் சித்தத்தில் முட்டைக்கருவுக்குள் சிறகுகள்போல  ஞானப்பேரார்வம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதுவன்றி பிறிதை அவன் அழியா இன்பமென உணரலாகாது” என்றான்.

கருவுக்குள் புகுந்து அங்கே துரியத்தில் இருந்து துளித்து உருக்கொண்டு சுஷுப்தியில் சொக்கிச் சுருண்டிருந்த குழவியின் நெற்றிப்பொட்டில் தொட்டு எழுப்பினான் காலமார்க்கன். உடல் அதிர்ந்து விழித்து அசுரவடிவில் வந்த அந்த முகத்தை நோக்கி அஞ்சி குழவி ஓசையிலாது அழுதது. கால்களை உந்தி உந்தி கருநீரில் நீந்தி விலகமுயன்றது. சிரித்தபடி அணுகி “நான் உன் காலன். உன்னை அழைத்துச்செல்லவிருப்பவன்” என்றான் காலமார்க்கன். “நான் வரமாட்டேன்” என்று குழவி அஞ்சி நடுங்கியபடி சொன்னது. அதன் சொற்கள் குமிழிகளாயின. “எவரும் மறுக்கமுடியாத அழைப்பு என்னுடையது” என்றான் காலமார்க்கன்.

கருக்குழவி அழுதுநடுங்கிக்கொண்டு கருவறைக்குழிக்குள் ஒடுங்கியது. அன்னை தன் வயிற்றில் கொப்புளங்களையும் நடுக்கங்களையும் உணர்ந்தாள். மருத்துவர்கள் அவளை ஆய்ந்துநோக்கி அவள் வயிறு அருவியருகே அமைந்த பாறைபோல உள்நடுக்குகொண்டிருப்பதை உணர்ந்தனர். ஒன்பது மாதங்களானபோது கருவறை சுருங்கி கருவழி வாய் திறந்து குழவியை உமிழ்ந்து வெளித்தள்ள முயன்றது. மைந்தன் தன் இரு கால்களாலும் கருவழியை அழுத்தி மூடிக்கொண்டான். வலி தாளாமல் அன்னை துடித்தாள். குழவி வெளிவரவில்லை. கைதுழாவி நோக்கிய வயற்றாட்டியர் உள்ளே குழவியின் கால்கள்தான் தொடுபடுகின்றன என்றனர்.

பன்னிருமுறை அவ்வண்ணம் குழவி வந்து முட்டி மீண்டது. மூன்று மாதம் குழவி உள்ளேயே இருந்தது. தன் மனையாட்டியின் துடிப்பை தாளமுடியாமல் மாம்டி ருத்ரர்களை வேண்டினான். அவர்கள் மறுமொழி உரைக்காமை கண்டு பதினாறு கைகளுடன் காட்டாலயத்தில் அமர்ந்திருந்த காளியன்னையின் திருநடையில் சென்று நின்றான். “அன்னையே, என் மைந்தனை காத்தருள்க!” என்று கூவினான். பூசகனில் சன்னதமாக எழுந்த அன்னை “அவன் அஞ்சுகிறான். அவன் அச்சமென்ன என்று கேள்” என்றாள். “என் அகல்விளக்கு எண்ணையில் அவன் எழுக!” என ஆணையிட்டாள்.

அகல்விளக்கின் கரியநெய்யில் அச்சம்நிறைந்த கண்களுடன் மைந்தன் தோன்றினான். “தந்தையே, நான் காலமார்க்கன் என்னும் அசுரனால் கொல்லப்படுவேன். ஆகவே நான் வெளிவரவே அஞ்சுகிறேன்” என்றான் மைந்தன். “நீ நிறைவாழ்வுடையவன் என நிமித்திகர் சொல்கிறார்கள், மைந்தா” என்றான் மாம்டி. “நூறாண்டு வாழ்ந்தாலும் இறுதியில் அந்த அசுரனால் கைப்பற்றப்படுவேன் அல்லவா? தந்தையே, நான் இங்கேயே இருந்துகொள்கிறேன்” என்றான் மைந்தன். “அது நீ வாழுமிடமல்ல, மைந்தா. அன்னையின் வயிற்றில் வாழ்வதற்கொரு காலமுள்ளது” என்றான் மாம்டி. “நான் வளராதொழிகிறேன். சிறுகருவாகிறேன். பார்த்திவப்பரமாணுவாக மாறுகிறேன். தந்தையே, இறப்பு என்னை அச்சுறுத்துகிறது” என்றான் மைந்தன்.

KIRATHAM_EPI_72

“மூடா, நீ அஞ்சுவது இறப்பை அல்ல, பிறப்பை” என்று மாம்டி சொன்னான். “நான் பிறக்கவே விரும்பவில்லை. மண்ணில் வரவேமாட்டேன்” என்று மைந்தன் கைகளால் தொப்புள்கொடியை பற்றிக்கொண்டான். “இங்கே அனைத்தும் இனிதாக உள்ளது. அன்னையின் குருதியால் சூழப்பட்டிருக்கிறேன். அதையே உண்டு உயிர்க்கிறேன். அவள் நெஞ்சத்தை கேட்டுக்கொண்டிருக்கிறேன். மேலும் இனிதாக அப்புவியில் என்ன இருக்கிறது?” என்றான். மாம்டி திகைத்து நோக்கிக்கொண்டு நின்றான். அக்கணம் உண்மையிலேயே புவியில் என்னதான் இருக்கிறதென்று அவனால் சொல்லமுடியவில்லை.

அக்கருக்குழவி காலபீதி என அழைக்கப்பட்டான். அவனைப்பற்றிய செய்திகளை அறிந்து முனிவரும் நூலறிந்த அந்தணரும் வந்து அவனை கண்டனர். “சொல்க, நான் புவிபிறப்பது ஏன்? அங்கிருப்பவற்றில் இங்கிருப்பவற்றைவிட இனியது எது?” என்றான் காலபீதி. “அங்குளோர் அனைவரும் தேடுவது அமுதை. நானோ அவ்வமுதில் திளைத்து இங்கே வாழ்பவன். நான் ஏன் மண்ணிறங்கவேண்டும்?”

அனைவரும் மறுமொழி இன்றி திரும்பிச்சென்றனர். மன்றுகளிலும் இல்லங்களிலும் அமர்ந்து சொல்லாடினர். இரவுகளில் தனித்திருந்து எண்ணி எண்ணி குழம்பினர். உண்பது, புணர்வது, விளையாடுவது, அடைவது, வெல்வது, கற்பது, எய்துவது என்னும் ஏழு மெய்யுவகைகளும் இருப்பது என்னும் ஒருநிலையின் மாற்றுருக்களே என்றும் இருத்தலென்பது இறத்தலுக்கெதிரானதென்னும் உவகையை மட்டுமே கொண்டது என்றும் உணர்ந்தனர். அவ்வறிதல் அவர்களை சோர்வுறச்செய்தது.

மாம்டி மீண்டும் பதினாறு ருத்ரர்களை எண்ணி தவம்செய்தான். ஒவ்வொருவரிடமாக அவன் கேட்டான் “என் மைந்தன் கேட்டதற்குரிய விடை என்ன?” அவர்கள் “பிறப்பு இறப்பால் நிகர்செய்யப்பட்டாகவேண்டும். பிறிதொரு விடையும் எங்களிடமில்லை” என்றனர். தாங்களும் குழம்பி “பிறப்பதனால் வாழ்வமைகிறது. வாழ்வமைவதனால் இறப்பு நிகழ்கிறது. பிறிதொரு விளக்கமும் இதற்கில்லை” என்றனர். பதினாறாவது ருத்ரன் “அந்தணனே, ஒரு மெய்வினாவுக்கு முழுமெய்மை மட்டுமே விடையென்றாகும். நீ கேட்கும் இவ்வினாவுக்கு பிரம்மஞானம் மட்டுமே விடை. அதை மகாருத்ரனிடம் கேள்” என்றார்.

மாம்டி மகாருத்ரனை எண்ணி தவம்செய்தான். அவன் ஏழு கருநிலவுக்காலம் தன்னை உதிர்த்து அருந்தவம் செய்து நிறைந்தபோது மின்னல்தொட்டு எரிந்தெழுந்த கரும்பனையாக மாருத்ரம் அவன் முன் எழுந்தது. “எனக்கு பிரம்மஞானம் அருள்க!” என்றான் மாம்டி. அவன் மேல் அனல் கவிந்தது. தலைமுடியும் இமைமயிர்களும் பொசுங்கின. எரிமணமென எழுந்தது மூச்சு. தன்னுள் அவன் “ஆம்” என்னும் ஒலியை கேட்டான். “சிவோகம்” என முழங்கியபடி அவன் எழுந்துகொண்டான்.

மாம்டி தன் மைந்தனிடம் மீண்டான். காளியின் அகலெண்ணையில் மைந்தனை வரவழைத்தான். கால்கட்டைவிரலை வாயிலிட்டு தன்னைத்தான் சுவைத்து மகிழ்ந்திருந்த காலபீதி “சொல்க தந்தையே, நான் ஏன் வெளிவரவேண்டும்?” என்றான். “ஏனென்றால் நீ சிவம். உருக்கொண்டு உருவழிந்து சிவம் ஆடும் நடனமே நீ கொள்ளும் வாழ்க்கை” என்றான் மாம்டி. “ஒவ்வொரு உயிர்த்துளியும் ஒவ்வொரு பருப்பொடியும் அவ்வாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இது அழியாத தாளமென்றறிக! எழுக காலரூபனாக! காலத்துடன் நின்றாடுக!”

மனையாட்டியின் வயிற்றில் வாயை வைத்து அவன் முதன்மைச்சொல்லை மூன்றுமுறை சொன்னான். “சிவமேயாம்! சிவமேயாம்! சிவமேயாம்!” குழவி அச்சொல்லை தான் முழங்கியது. அன்னையின் உள்ளத்தில் எரிதழல்தூண் ஒன்று கனவென எழுந்தது. எரிந்து எழுவதுபோல மைந்தன் வெளியே வந்தான். அரைவிழி திருப்பியபோது தன் நிழலென உடன் எழுந்த காலமார்க்கனைக் கண்டான். புன்னகையுடன் கைகளை வீசி உடல்நெளித்து அதனுடன் ஆடினான்.

காலநிழலுடன் ஆடி வளர்ந்தவனை மகாகாலர் என்று வழுத்தினர் நூலோர். சொல்தேர்ந்த அறிஞனாகி சொல்கரைந்து யோகியாகி அமர்ந்தார் மகாகாலர். ஒவ்வொருமுறை அவர் வளரும்போதும் அவரைவிட வளர்ந்தான் காலமார்க்கன். அவர் ஆற்றும் செயல்களில் விளைவுகுறித்த அச்சமாக இருந்தான். அவர் கற்ற நூல்களில் ஐயமானான். அவர் கொண்ட உறவுகளில் ஆணவத்தின் இறுதிக் கசப்பானான். அவர் செய்த பூசனைகளில் பழக்கமெனும் பொருளின்மையானான். அவர் அமைந்த ஊழ்கங்களில் எஞ்சும் தன்னிலையானான்.

நூறாண்டு முதிர்ந்தபோது ஒருநாள் அவனை நோக்கித் திரும்பி அவர் கேட்டார் “உன்னை வென்ற மானுடர் எவரேனும் உளரா?” காலமார்க்கன் சொன்னான் “வெல்லலாகாதென்பதே புடவியின் முதல்நெறி.” மகாகாலர் “தேவர்களில் உன்னை வென்றவர் எவர்?” என்றார். “தேவர்கள் என்னால் வாழ்த்தப்படுபவர்கள் மட்டுமே” என்றது நிழல். “தெய்வங்களில் உன்னை வென்றவர் எவர்?” என்றார் மகாகாலர். “முக்கண்முதல்வனின் காலடியில் அமைபவன் நான்” என்றான் காலமார்க்கன். “அவர் ஏந்திய பினாகமும் பாசுபதமும் என்னை ஆள்கின்றன.”

தன் இடையாடையை அவிழ்த்துவீசிவிட்டு தென்மேற்கு திசையில் வடக்கு நோக்கி அமர்ந்தார் மகாகாலர். ஊழ்கத்திலாழ்ந்து சென்றார். உடலுருகி சித்தம் அழிந்து தன்னிலையும் மறைந்தபோது அப்பால் எழுந்த அனல்துளியை கண்டார். “ஆம்” என்றபடி விழிதிறந்தார். அருகே நீண்டுகிடந்த கரிய நிழலைக்கண்டு புன்னகையுடன் கைகளை விரித்து “அருகே வா, காலமார்க்கனே!” என்று அழைத்தார்.

விண்தொடும் பேருருவுடன் அவர் முன் எழுந்தது கருநிழல். அது மான்மழுவும் நீர்மலிச்சடையும் முக்கண்ணும் முப்புரிவேலும் கொண்டிருந்தது. அதைநோக்கி விழிதூக்கி “யாமேநீ!” என்றார் மகாகாலர். “ஆம் யாமேநீ” என்றது நிழல்.

சண்டன் சொல்லி முடித்தபோது வைதிகர் நால்ரும் இருளை நோக்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தனர். இலைத்தழைப்பு வழியாக காற்று ஓடிக்கொண்டிருந்தது. இடைவெளியில் தெரிந்த ஒற்றை மீன் நடுங்கியது. நீண்டநேரம் கடந்து பைலன் பெருமூச்சுடன் விழித்துக்கொண்டான். அவ்வொலியில் பிறரும் நனவுமீண்டனர். ஜைமினி எழுந்துசென்று கருந்திரி எரிந்த அகலை தூண்டினான். ஒவ்வொருவரும் நிழல்பெற்றனர்.

உக்ரன் “பெரிய தந்தையே” என மெல்லிய குரலில் அழைத்தான். “சொல்க!” என்றான் சண்டன். “மகாகாலர் பெற்ற அந்த மெய்மையின் பெயர் என்ன?” சண்டன் “அதை பாசுபதம் என்கின்றனர் அறுநெறிச் சைவர்” என்றான். அவன் எழுந்து அருகே வந்து நின்று “எப்படிப்பட்டது அது?” என்றான். “அறியேன். யோகநூல்கள் உரைப்பவற்றை சொல்கிறேன்” என்றான் சண்டன். “பிநாகம் பொன்னிறமான பெருநாகம். அது வடதிசையிலிருந்து தென்திசைவரை நிறைத்திருக்கும் முடிவிலா வளைவையே உடலெனக்கொண்டது.”

“அதற்கு ஏழு தலைகள். செந்நிறமான ஆணவம், அனல்நிறமான சினம், பொன்னிறமான விழைவு, பசும்நிறமான அறிவு, நீலநிறமான மொழி, கருநீலநிறமான ஊழ்கம் கருநீலச்செம்மைகொண்ட தன்னிலை என அதை வகுக்கின்றன நூல்கள். பாசுபதம் அதன் அம்பு. அது நீலநா பறக்கும் தழல்வடிவமான சிறுநாகம். நிழலற்றது அது” என்றான் சண்டன். “பாசுபதம் பெற்றவன் தானும் சிவமென்றாகிறான்.”

அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த சொல்லையே உக்ரன் கேட்டான் “பெரிய தந்தையே, அர்ஜுனன் பாசுபதம் பெற்றானா?” சண்டன் “பெற்றான் என்கின்றன சூதர்கதைகள். திசைவென்றவன் பின் வெல்வதற்கு எஞ்சுவது அதுவே. ஏனென்றால் அது திசைகளின் மையம்” என்றான்.

தன் உடலுறுப்பென தோளில் கிடந்த முழவை எடுத்து சண்டன் பாசுபதச் சொல்லை  பாடலானான். தாளம் உறும சொல் உடனிணைந்து ஆடியது.

ஓம்! நமோ பகவதே மகா பாசுபதாய!

அதுலபலவீர்ய பராக்ரமாய! திரிபஞ்சனயனாய!

நானா ரூபாய! நானாபிரஹரணோத்யதாய!

சர்வாங்கரக்தாய! ஃபின்னாக்ஞனசயபிரக்யாய!

ஸ்மஸானவேதாளப்ரியாய…

பைலன் ஒருசொல்லால் அறையப்பட்டான். அவன் விரல்கள் நடுங்கத் தொடங்கியபின்னரே அச்சொல்லை அவன் சித்தம் அறிந்தது. சர்வாங்க ரக்தாய! குருதியுடல். கருக்குழவியுடல். சர்வாங்க ரக்தாய! கொலைகளத்தில் குருதிசூடிக் கூத்தாடும் உடல். சர்வாங்க ரக்தாய! அனலுடல். அனலெனும் குருதிப்பேருடல்.  சர்வாங்க ரக்தாய!  சர்வாங்க ரக்தாய! குருதியுடல் கொண்டெழுக! சர்வாங்க ரக்தாய! சர்வாங்க ரக்தாய! சர்வாங்க ரக்தாய! சிவாய!

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா – சுகா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்