மழையில் நிற்பது….

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தில் அடிபட்ட பெயர்களில் ஒன்று பீர்மேடு. காமராஜர் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்று விரும்பினார். ஆகவே தேவிகுளம் பீர்மேடு ஆகிய மலைப்பகுதிகளையும் பாலக்காட்டையும் கேரளாவுக்கு விட்டுக் கொடுத்தார். குமரிமாவட்டத்திலுள்ள மூன்று பெரிய அணைகளும், ஐந்து சிறிய அணைகளும், தமிழகத்தின் மீன் வளத்தில் மூன்றில் ஒரு பகுதியை அளிக்கும் கடற்கரையும் தமிழகத்துடன் வந்தாகவேண்டுமென்பதில் காமராஜர் குறியாக இருந்தார். ஆகவே எவ்வகையிலும் அது ஒரு லாபகரமான நடவடிக்கைதான்

பீர்மேடு தமிழகத்தின் முதன்மையான முக்கியமான சூஃபி ஞானியான பீர்முகம்மது அப்பா  [ரலி] பெயரால் அமைந்த ஊர் என்கிறார்கள். அவர் வாழ்ந்து நெசவுத்தொழில் செய்து மெய்ஞானப்பாடல்களை இயற்றி நிறைவடைந்த இடம் குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை. பீர்முகம்மது அப்பா பிறந்த ஊரை கேரளாவுக்கு அளித்து மறைந்த ஊரை தமிழகத்துக்குப் பெற்றுக் கொண்டார் காமராஜர் என்று சொல்லலாம்.

பீர்மேட்டை ஒட்டியிருக்கும் பகுதிகள்தான் கேரளாவில் மிக அதிகமாக மழை பொழியும் மலைஉச்சிகள். குறிப்பாக வாகமண் கேரளத்தின் கூரை என்றே அழைக்கப்படுகிறது. முற்றிலும் மலை உச்சிகளால் ஆன அழகிய நிலம் அது. மண்ணுக்கு அடியில் பாறை இருப்பதனால் பெரிய மரங்கள் வளராது. அங்கெல்லாம் அடர்ந்த பசும்புல்லே நிறைந்திருக்கும்.  ‘புத்தம் புது பூமி வேண்டும்’ என்ற திருடா திருடா படப்பாடலில் பீர்மேடு புல்மடிப்புகளை அழகாக மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பார். மலைக் குவைகளுக்கு நடுவே அதிகம் உயரமில்லாத கிளைவிரிக்கும் சோலைமரங்கள் பச்சை நுரை போல படிந்திருக்கும்.

ஜுன் தொடக்கத்தில் கேரளத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மழையைக் கொண்டுவரத் தொடங்கும். கேரளத்திற்கு மிக அதிகமாக மழையைக் கொடுக்கும் பருவக்காற்று இது. இந்த பருவமழைக்காலம் தமிழகத்துக்கு கிடையாது. ஜுன் மாதம் நமக்கு மே மாதத்தின் தொடர்ச்சிதான். கேரளத்தை ஒட்டியிருக்கும் கன்யாகுமரி மாவட்டத்திலும், ஊட்டியிலும், தேனியிலும் கேரள மழையின் நீட்சி ஓரளவுக்கு இருக்கும். ஜூன் மாதமென்பது தமிழ்மனம் மழைக்காக ஏங்கும் மாதம். கண் பச்சையில்லாமல் பூத்துவிட்டிருக்கும்

ஆகவே ஜுன் மாதம் கேரளத்திற்கு மழை பார்க்க செல்வதென்பது நாங்கள் ஒரு வழக்கமாக பல ஆண்டுகள் கடைபிடிக்கிறோம். ஈரோட்டிலிருந்து ஒன்றோ இரண்டோ வண்டிகள் கிளம்பும். பீர்மேட்டில் ஒரு சிறிய கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. அதை ஒட்டி தேவசம் போர்டு நடத்தும் ஒரு விடுதி உண்டு. கேரளத்தில் பல ஆலயங்களை ஒட்டி இத்தகைய தங்கும் விடுதிகள் இருக்கும். பழங்காலத்தில் மகாராஜாவோ திவானோ வந்து தங்கி ஆலயத்தில் வழிபடும்பொருட்டு கட்டப்பட்டவை. இப்போதும் ஓரளவு நல்ல நிலையில் அவை பராமரிக்கப்படுகின்றன. வாடகை மிக மிகக் குறைவு அன்றெல்லாம் ஓர் அறை நூறு ரூபாய் தான் நான்கு பேர் தங்கிக் கொள்ளலாம். தலைக்கு இருபத்தைந்து ரூபாய் அங்கேயே உணவும் சமைத்துக் கொடுப்பார்கள். சூடான கேரளத்துக் கஞ்சி கொட்டும் மழைக்கு ஓர் அரிய உணவு

 

7

மழைக்கான மழைச்சட்டையும் சப்பாத்துகளும் எடுத்துக்கொண்டிருப்போம். அங்கிருக்கும் நாட்கள் முழுக்க மழையிலேயே அலைய வேண்டுமென்பது எங்கள் பயண விதிகளில் ஒன்று. தமிழகத்தின் தீவெயிலில் இருந்து கிளம்பும் போது எப்போது மழை வரும் என்று உடல் ஏங்கிக் கொண்டிருக்கும். உடுமலைப்பேட்டை பகுதியின் வறண்ட கருவேலம் மரங்கள் நிறைந்த நிலத்தினூடாக செல்லும்போது வெயிலில் வெந்த புழுதிக்காற்று உடம்பை மூடும். இன்னும் சற்று நேரம்தான், இதோ மழை ,இதோ குளிர் கூதல் என்று நிமிடங்களை எண்ணிக் கொண்டிருப்போம். கேரள எல்லைக்குள் நுழைந்து முதல் மழைச்சாரல் காரின் கண்ணாடியில் அறையும்போது கைகளை விரித்து கூச்சலிடுவோம். பின்னர் மழையைக் கிழித்தபடி செல்வோம்.

மழை அறையும் காருக்குள் குளிருக்குள் ஒண்டி அமர்ந்தபடி செல்வது ஒர் இனிய அனுபவம். பீர்மேட்டுக்குச் செல்லும் பாதை மலைப்பாதையில் சூழ்ந்திருக்கும் பச்சைமலையின் அடுக்குகள் முழுக்க மழைக்காலத்தில் நூற்றுக்கணக்கான அருவிகள் கண்ணுக்குத் தெரியும் .சாலையிலேயே பல அருவிகள் பேரோசையுடன் விழுந்து கடந்து மறுபடியும் அருவியாகிச் செல்லும். லாரி ஓட்டுநர்கள் சாலையில் லாரிகளை நிறுத்திவிட்டு அதன் பின்பக்கம் ஏறி நின்று அருவியில் நீராடுவதைப்பார்க்கலாம்.

நாங்களும் வண்டிகளை நிறுத்தி அருவிதோறும் நீராடியபடி செல்வோம். மழை நின்றுபெய்யும்போது உண்மையில் அருவிக்குக்கீழேதான் ஊரே இருப்பதுபோல இருக்கும். பச்சைப் பெருக்கென அலையலையாக நிறைந்து சூழ்ந்திருக்கும் மலைகள் வெள்ளி மரங்கள் நின்றிருப்பது போல் அருவிகள் தெரியும் கரிய பாறைகளில் யானைகளுக்குத் தந்தம் போல அருவிகள் நின்றிருக்கும்.

பசும்புல்வெளிகளைக் காணும்போது மனம் விரிந்து பறக்க ஆரம்பிக்கிறது.பிறந்து ஒருநாள் ஆன நாய்க்குட்டியை மென்மையாக கையால் வருடுவதுபோல மனதால் அந்ப்புல்வெளிகளை வருடிக்கொண்டே இருப்போம். மழை வெள்ளியிறகால் புல்வெளிகளை வருடிச்செல்வதைக் கண்டபோது ஒருமுறை நான் மனம்பொங்கி அழுதேன்.

சற்று மழை இடைவெளி விடும்போது சாலையில் நின்று சுழன்று சுழன்று எல்லாபக்கமும் தெரியும் அருவிகளைப் பார்ப்பது மழைப்பயணத்தின் பரவசங்களில் ஒன்று. மலைகள் புன்னகைப்பதுபோல மலைகள் நரைமுடி சூடியதுபோல புதர்களில் வெண்பறவைகள் இறகுதிர்த்ததுபோல . போல போல என்று சொல்லிச்சொல்லி ஓர் அனுபவத்தை அத்தனை இன்பங்களுடனும் தொடுத்துப் பெரிதாக்கிக்கொள்கிறோம்

பீர்மேடு கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று விடுதியில் பெட்டிகளைபோட்டதுமே மழைச்சட்டையை அணிந்தபடி இறங்கிவிடுவோம். மழை சுழன்று சுழன்று அடிக்கும். மழைச்சட்டை என்பது ஒரு மெல்லிய பாதுகாப்பு அவ்வளவுதான். எத்தனை சிறந்த மழைச்சட்டையானாலும் உள்ளாடைகள் நனைவதைத் தடுக்கமுடியாது. மழைச்சட்டையுடன் அலைவது ஒரு கூடாரத்திற்குள் இருக்கும் சந்தோஷத்தையும் அலைந்து திரியும் அனுபவத்தையும் அளிப்பது. மழை ஈரமரக்கிளைகளை சுழற்றிச் சுழற்றி நம்மை அடிப்பது போலிருக்கும்.

மழைக்காலத்தில் பீர்மேடு மண்பகுதிகள் முழுக்க அட்டைகளின் காலகட்டம். புல் நுனியில் வாழும் சிறிய அட்டைகள் படைபடையாக பெருகி அப்பகுதியை நிறைத்திருக்கும். மண்ணெணையையும் சிறிது டெட்டாலையும் கலந்து காலில் ஊற்றிக்கொள்வோம். கடித்து விட்டதென்றால் அதன்மேல் உப்பை போடலாம். குருதியை உமிழ்ந்தபடி உதிர்ந்துவிடும். இரண்டு மூன்று கிலோ உப்பு வாங்கி பையில் வைத்திருப்போம். ஆனால் மிக நுட்பமாக ஆடையில் தொற்றிக்கொண்டு சப்பாத்துகளுக்கு உள்ளே சென்று விரல்நடுவே கவ்வி உறிஞ்சி பெருத்து இருக்கும் அட்டைகளை திரும்ப அறைக்குள் வந்து கால்களை வெளியே எடுக்கும்போது நோக்க முடியும். ரத்த தானமின்றி மழைக்காலத்தில் பீர்மேட்டில் வாழமுடியாது. அக்காரணத்தினாலேயே மழைக்காலம் முழுக்க அங்குள்ள எந்த விடுதியிலும் பயணிகள் எவரும் இருக்கமாட்டார்கள்.

மழை நனைந்தபடி பீர்மேட்டில் இருந்து வாகமன் முனைக்குச் செல்வோம். வாகமண்ணில் ராணுவத்தினர் கிளைடர் மற்றும் பாராசூட் பயிற்சி எடுக்கும் இடங்கள் உள்ளன. செங்குத்தாக வெட்டப்பட்ட மலைஉச்சிகள். அங்கு சென்று அந்தப்புல்வெளிகள் தோறும் அலைவோம். புல்வெளிச்சரிவில் ஓடுவோம். விழுந்து உருள்வதும் உண்டு. புல்வெளிமேல் மழை புகைபோல பரவும். பாலிதீன் தாள்போல மூடியிருக்கும். நின்று யோசித்து மீண்டும் ஓங்கி அறைய ஆரம்பிக்கும் மழை நம்முடன் பேசுவதுபோலவே இருக்கும்.

இப்பகுதியில் பல புல்மேடுகள் உண்டு. பருந்துப்பாறை என்று அழைக்கப்ப்டும் புல்வெளி மேடு வாகமன் அளவுக்கே அழகானது. அங்கு சென்றபோதுதான் அங்கு சந்தித்த இன்னொருவர் பாஞ்சாலிமெட்டு என்னும் ஊரைப்பற்றிச் சொன்னார். அதைப்பார்த்துவிடுவோம் என்று பீர்மேட்டிலிருந்து பாஞ்சாலி மெட்டுக்குச் சென்றோம். அன்று அதிக மழைஇல்லை. காலையில் தூறல் அடித்துவிட்டு நின்றுவிட்டது. மழை முடிந்தபின் வரும் கண்கூச வைக்கும் தூய வெளிச்சம். நீராவி எழுந்து வியர்வையைக்கூட்டியது. உப்பு நீரில் ஊறவைத்த நெல்லிக்காய் அங்கு கிடைக்கும். அவற்றை தின்று தண்ணீர் குடித்தபடி நடந்தோம்.

பாஞ்சாலி மெட்டு வரை ஏறுவது அந்த வெக்கையில் மிகக்கடுமையான பயிற்சியாக இருந்தது. ஒற்றையடிப்பாதை அது புல் சரிந்து காலடிகளில் வழுக்கியது. கைகளை ஊன்றியும் அவ்வப்போது சறுக்கியும் மேலே சென்றோம். வாய் வழியாக நீராவி போன்ற மூச்சு வந்தது. உச்சியில் சில பெருங்கற்கால நடுகற்கள் இருந்திருக்கின்றன. இன்று அவை சிறு கோயில்களாக மாற்றப்பட்டுவிட்டன. வரிசையாக நடுகல்தெய்வங்கள்.

ஓர் ஓரத்தில் ஜேஷ்டாதேவி பதிட்டை செய்யப்பட்டிருந்தாள். சேட்டை என்று நாம் சொல்வது அச்சொல்லின் மரூஉ தான். இவள் மூத்தவள். இளையவள் ஸ்ரீதேவி. மூத்தவளாதலால் இவள் பெயர் மூதேவி. ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும் காடுகளுக்கு அருகிலும் இவளை நிறுவி வழிபடுவார்கள். பொதுவாக தீவினைகள் நீங்கவும் பிறருக்கு தீவினைகள் சென்று சேரவும் இவளை வழிபடுவதுண்டு. வாடிய மாலை சூடி ஜேஷ்டை அமர்ந்திருந்தாள்

அங்கு அமர்ந்திருக்கையில் எங்களுடன் வந்த கேபி வினோத் எங்களை அழைத்துச் சென்ற பழங்குடி இளைஞரிடம் பொதுஅறிவு சேகரிக்கத்தொடங்கினார். இங்கிருந்து சபரிமலை எத்தனை தூரம், கோட்டயத்துக்கு போகும் சாலை எது, இங்கு பழங்குடிகள் எங்கு வசிக்கிறார்கள், அவர்களின் தொழில் என்ன என்றெல்லாம். வினோத் அப்போதுதான் எங்களுடன் சேர்ந்துகொண்டவர். நான் கடுப்பாகி நான் சொன்னேன். இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம்? இயற்கையை ரசிப்பதற்குத்தேவை அர்ப்பணிப்பு. கனவு. தகவல்கள் வெறும் திரைதான்

உடைகளைக் கழற்றிப்போட்டு காற்றில் நிற்பது போல எண்ணங்களை கழற்றி விட்டு நிற்கப்பாருங்கள். பயணம் என்பது அதுதான். வானத்தை நிறைத்து மழை பெய்யும்போது குடை பிடித்து நிற்பது போலத்தான் இயற்கையின் முன் மூளையைத்திறந்து வைத்து நிற்பதுஎன்றேன். வினோத் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டார்

அந்த பழங்குடி இளைஞன் இங்கே இன்னும் அழகான இடம் இருக்கிறதுஎன்றான். ஆர்வம் எழ உடன் சென்றோம். அவன் மிகுந்த உற்சாகத்துடன் நாங்களெல்லாம் இதைச் சென்று பார்ப்போம். நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் வந்து இதைப்பார்க்கிறார்கள்என்றபடி கூட்டிச்சென்று காட்டியது. ஒரு மஞ்சள் டிஸ்டம்பர் அடித்த சதுர வடிவக்கட்டிடத்தை. பழங்குடியினருக்காக கட்டப்பட்ட சமுக நலக்கூடம் அது. காட்டில் அலையும் அவர்களுக்காக புதிய கட்டிடம் போல் ஆச்சரியமானது வேறொன்றுமில்லை.

இயற்கையின் மடியில் வாழ்பவர்கள்கூட இயற்கையை அறிந்திருப்பதில்லை. இயற்கை என்பது உண்மையில் வெளியே இல்லை. அது நம் மனதுக்குள் உள்ளது. நாம் அளிக்கும் அர்த்தத்தால்தான் இயற்கை அழகாக ஆகிறது. அந்த அர்த்ததை நாம் நமது கற்பனையாலும் கவனிப்பாலும் இயற்கைக்கு அளிக்கவேண்டும். அதற்கு இயற்கைக்கு முன்னால் கொஞ்சம் அன்றாடவாழ்க்கையை கழற்றிஅகற்றி வைக்கவேண்டும். கொஞ்சம் மூளையை விலக்கவேண்டும். கொஞ்சம் அமைதியாக இருக்கவேண்டும்

 

முந்தைய கட்டுரைசூரியனுக்கே சென்ற தமிழன்!!!!!!!!!
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78