விஷ்ணுபுரம் விருது விழா பதிவுகள் 8- யோகேஸ்வரன்

24.12.2016 சனி அதிகாலை முதல் வடகோவைவிலுள்ள குஜராத்தி சமாஜ் நண்பர்களால் நிறைந்துகொண்டிருந்தது. “மக்களே” என்ற பெருவொலியோடு தங்குமிடத்தின்
கதவுகளை அகல திறந்தபடி உள்ளே நுழைந்தார் ஜெ. அறிமுகப்படலத்திற்குப்பின் நின்றவாக்கில் ஒரு சிறு உரையாட.ல்.

காலை உணவிற்குப்பின் முதல் அமர்வு. 9.55 மணியளவில் அரங்கம் நிறைந்து தயாராக, மிகச்சரியாக 10 மணிக்கு “இந்த ரெண்டுநாள் முடிஞ்சி நீங்க சோகமா கிளம்புனீங்கன்னா, அது எங்களுக்கு கிடைத்த வெற்றி, அப்பாடா டார்ச்சர் முடிஞ்சிருச்சிடா அப்படீன்னு நினைச்சி கிளம்புனீங்கன்னா அது எங்களுக்கு கிடைத்த மிகபெரிய வெற்றி” என்ற கிருஷ்ணனின் வரவேற்புரையோடு ஆரம்பித்தது முதல்நாள் முதல் அமர்வு.

நகைச்சுவைத் துணுக்கு ஒன்றோடு தன் உரையை ஆரம்பித்தார் நாஞ்சில்நாடன். அங்குமிங்கும் அலைபாய்ந்த கேள்விபதில் உரையாடல் சற்றைக்கெல்லாம் ஒரு ஒழுங்குபெற்று அழகாய் முன்னேறிக்கொண்டிருந்தது. “நல்லா இருக்கியாடா” தோளில் வேகமாய் தட்டியபடி அருகில் வந்தமர்ந்தார் பாட்டையா பாரதிமணி.

சற்றைக்கெல்லாம் சுகாவுடன் உள்ளே நுழைந்தார் வண்ணதாசன், நாஞ்சிலின் அருகில் சென்றமர்ந்து கைபற்றி காதோரம் சேதி சொல்கிறார்.

 

 

RISK என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான தமிழ்சொல்லை கடந்த பத்துநாட்களாக தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார் நாஞ்சில்.

தமிழ் சொற்கள் மற்றும் சொல்லாடல்கள் குறித்த நீண்ட உரையாடல்கள், “கள்ள மவுனம்” என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியது பற்றி பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியா, ஜெ தனது சொல் (‘பரப்புரை’?) ஒன்று தமிழ் பத்திரிக்கைகளில் கையாளப்படுவது பற்றி பேசினார். அவ்வப்போது குறிக்கிடும் ஜோக்குகளால் அரங்கம் அதிர்ந்து அடங்கியது.

காலை தேநீர் இடைவேளை 333

அடுத்து பாரதிமணியின் நாடக அனுபவங்கள்.

பாட்டையாவின் நினைவலைகளை தூண்டி சுவாரஸ்ய பதில்களை பெற சில கேள்விகளை இடையிடையே வீசினார் ஜெ.

நாடக அனுபவத்தை பகிர்ந்துகொள்வதற்காக மேடையேறியவர் ஒரு கட்டத்தில் தனது வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

க.நா.சு தொடங்கி, அவரின் “புள்ளிகள், கோடுகள், கோலங்கள்” புத்தகத்தில் இடப்பெற்றுள்ள சுவாரஸ்ய சம்பவங்களை தொடர்ந்து ராயல் சல்யூட்டில் நின்றது.

மதிய உணவு இடைவேளை

இரா.முருகன் உடன் சந்திப்பு. தன்னுடைய படைப்புகள், அவற்றிற்கிடையேயான சங்கிலி தொடர்புகள் குறித்து முன்னுரைத்தார். ”என்னுடைய படைப்புகள் குறித்து நிறைய தகவல்களை நானே வியக்குமளவிற்க்கு இன்று
தெரிந்துகொண்டேன்”- இரா.முருகனே வியக்குமளவிற்க்கு அமைந்தது நண்பர்களின் சுவாரஸ்ய உரையாடல்கள்.

மாலை தேநீர் இடைவேளை

 

தான் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதை மீண்டும் மீண்டும் அழகாய் நிறுவும் பவா செல்லதுரை. மூன்றாம் அமர்வாய் அமைந்த இந்நிகழ்வு பங்கேற்பாளர்கள் அனைவரையும் கூர்ந்து கவனிக்க வைத்து, புருவத்தை உயர்த்த வைத்து, மனம்விட்டு சிரிக்க வைத்தது என்றே சொல்லவேண்டும்.

”தேன்” என்ற மலையாள கதையில் ஆரம்பித்து “முற்றம்” நிகழ்வின் செயல்பாடுகளோடு முடிந்தது.

 

மாலை இரண்டாம் இடைவேளை

அனேகமாக இதுவே உலகத் தமிழிலக்கியவரலாற்றில் நிகழ்ந்த முறையாக வினாடி வினாவாக இருக்க வேண்டும். நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள். சில கடினமான கேள்விகளை முடிக்கும் முன் பதில் வந்து விழுந்தது ஆச்சரியம்தான்.

கல்லூரி மாணவர் பாரதியின் பங்களிப்பு அருமை. கேட்ஜெட்டுகளில் நத்தைபோல் தங்களை சுருக்கிக் கொள்ளும் இன்றைய தலைமுறைக்கிடையே புத்தகத்தை புதையலாய் பார்க்கும் பாரதியை போன்றவர்கள் அரிது.

இரவு உணவு இடைவேளை

மருத்துவர் கு.சிவராமனுடனான கலந்துரையாடல். கேன்சரின் காரணிகள், பேலியோ டயட்டின் சாதக பாதகங்கள், essential drugsல் தங்க புஷ்பம் நுழைக்கப்பட்ட நுண்ணரசியல் உள்ளிட்ட பல தகவல்கள்.

தூக்கம் கவ்வும் கண்களோடு முதல் நாள் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 

 

விழாவின் இரண்டாம் நாள்.

சு.வேணுகோபாலோடு தொடங்கிய இரண்டாம் நாள் அமர்வு, ஏதோ ஒரு புள்ளியில் பஷீரின் படைப்புகள் தொடப்பட, உரையாடல்கள் அனைத்தும் பஷீர், அவருடைய கடைசிகால வாழ்க்கை மற்றும், தி.ஜா, கி.ராவுடனான ஒப்பீடாகவே சுழல ஆரம்பிக்க வேணுகோபால் அவர்களுடன் படைப்புகள் குறித்து உரையாட மடைமாற்றப்பட்டது.

பலத்த கரவொலிக்கிடையே வந்தமர்ந்தார் வண்ணதாசன். வண்ணதாசனின் ஒரு சிறுகதை தொகுப்பு தான் முதல் நாவல் ஒன்றினை எழுதி அது போட்டிக்கான முதல்பரிசை வென்றதைப் பற்றி சிலாகித்து முடித்துக்கொண்டார்.

”ஓரமாய் அமர்ந்திருக்கும் என்னை நடு இருக்கைக்கு மாறச்சொல்கிறார் வேணுகோபால், எனக்கு ஓரமாக இருக்கவே பிடித்திருக்கிறது. ஓரமாய் அமர்ந்தபடி ஆர்ப்பரிக்கும் கடலை, கரையை, மனிதனை கவனிக்கவே எனக்கு விருப்பம்” என்று தொடங்கினார் வண்ணதாசன்.

இவ்விருநாட்களுக்கான மிகச்சிறந்த நிகழ்வாக நான் கருதுவது இதுவே. மாலை நடைபெற்ற விருதுவிழாவில் டிசம்பர் மாத முதல் வாரத்தில் செல்வேந்திரன், சக்தி கிருஷ்ணன், மீனாம்பிகை எனது வீட்டிற்கு வந்தபோதே விஷ்ணுபுர விருதினை நான் பெற்றுவிட்டேன், இந்நிகழ்வு ஒரு மீள்நிகழ்வே என்று வண்ணதாசன் குறிப்பிட்டார். இந்த அமர்வையும் நான் அவ்வேறே கருதினேன்.

மலையப்பனில் தொடங்கி கோமு வரை வண்ணதாசனின் கதைமாந்தர்களும், கல்யாண்ஜியின் கவிதை மாந்தர்களும் அரங்கினுள் ஆர்ப்பாட்டமின்றி அரவம் செய்தார்கள்.காசர்கோட்டு மலையப்பனை நினைவுபடுத்திய ஜெ. பணிசுமை நிறைந்த ஒரு வேலைநாளில், வண்ணதாசனை வங்கியில் சந்திக்க சென்றதை தர்மபுரி வாசகியொருவர். ஜெயமோகனின் ஏழாம்அறிவு புத்தகத்தை தனது காதலிக்கு கொடுத்து அதனால் ஏற்ப்பட்ட பிரளயத்தை வண்ணதாசனின் கதை தொகுப்பின் மூலம் சரி செய்த கடலூர் நண்பர் ஒருவர் (கடலூர் சீனு அல்ல).

முதல் நாள் முதல் தனது மகனோடு வந்தமர்ந்து, இத்தருணத்திற்க்காகவே காத்திருந்ததைப்போல, வண்ணதாசனின் கதைகளை வகைப்படுத்தி, கைகளை கட்டியபடி மிக நிதானமாய் பேசியமர்ந்த வாசகியொருவர், தலையுயர்த்தி தனது தாயின் நிதான பேச்சை ஒருவித திகைப்போடு உள்வாங்கியமர்ந்திருந்த அவ்வாசகியின் மகன்.

பரவசநிலையடைந்திருந்த அரங்கு. தரிசனம் முடித்த தேர் நிலைகொள்ளத்தானே வேண்டும், வண்ணதாசனின் “நிலை” பற்றிய கதையோடு நிறைவுபெற்றது.

கொடுக்கப்பட்ட பரிசுகளையும், போர்த்தப்பட்ட பொன்னாடைகளையும் சுகா வற்புறுத்தி கேட்டும் கொடுக்க மறுத்து, கைகொள்ளாது தன் நெஞ்சில் அணைத்தபடி அரங்கை விட்டு வெளியேறினார் வண்ணதாசன்.

 

காலை தேநீர் இடைவேளை

”எனக்கு தமிழ் புரியும் ஆனா பேச வராது, தேவைப்பட்டால் மொழிபெயர்த்துக்கொள்ளலாம்”, கன்னட எழுத்தாளர் H.S.சிவப்பிரகாஷ் முடிக்கும்வரை மொழிபெயர்ப்பாளர் தேவைப்படவே இல்லை. மிக நிதானமாக தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

தனது படைப்புகள் குறித்தான தடைகள் குறித்து பேசுகையிலும் அதே நிதானம். கடைசியாக பேசிய பாவண்ணன் இதை தொட்டு பேசினார், இருபது வருடங்களுக்கு முன் மொழிபெயர்ப்புக்காக தான் சந்தித்த அதே சிவப்பிரகாஷ் இன்றும் அதே ரெஸ்பான்ஸிபில் பர்சனாக உள்ளார் என்று உணர்வுப்பூர்வமாக பேசினார்.

முடிவுக்கு முன் கேள்வி கேட்க மைக் பிடித்த ஒரு இங்கிலீஷ் புரொபசர் தனது மேதாவிதனத்தை காட்ட முயற்சித்து ஜெமோவிடம் நன்றாக வாங்கிக்கட்டிகொண்டார்.

 

மதிய உணவு இடைவேளை

பாக்குத்தோட்டம் பற்றிய பேச்சுக்களோடு பாவண்ணன், நாஞ்சில், பாட்டையாவுடன் முடிந்தது மதிய சாப்பாடு.

இறுதி அமர்விற்காக அரங்கில் காத்திருக்கையில் இரா.முருகன், லா.சா.ராவின் மகன் சப்தரிஷி தனது தந்தையுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். முக்கியமான சிந்தனையோட்டத்தில் இருந்த லா.சா.ராவை “ஓரம்போ ருக்குமணிவண்டி வருது” என்று அவரும் அவருடன் பிறந்தவர்களும் இம்சித்ததை, அவர் சொல்ல சொல்ல “துளசி” கதையை செப்பனிட்டதை சிலாகித்தபடி இருந்தார்..

திருப்பூர்  சுப்ரமணியம், நாஞ்சில், இரா.முருகன், தேவதேவன், பாவண்ணன் ஆகியோருடன் இறுதி அமர்வு.

பெரும்பாலான கேள்விகளுக்கு நாஞ்சிலும் இரா.முருகனும் பதில்சொல்ல, சுப்ரமணியம் எழுதியெடுத்து வந்த தனதுரையை வாசித்தார். “எனக்கு பக்கத்துல ஒக்காந்திருக்கவன் நல்லவனா, நாதாரியான்ன்னு இப்ப என்னால தெரிந்து கொள்ள முடியுதுன்னு” நாஞ்சில் சொல்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த இரா.முருகன் ஒரு கணம் ஆடித்தான் போனார். அரங்கத்தின் சிரிப்பலை சகஜமாக்கியது.

unconditional love பற்றிய பரிமாற்றங்களுடன் தனது பேச்சை தொடங்கி அதிலேயே முடித்தார் பாவண்ணன்.

ஒவ்வொரு முறை மைக் தன்பக்கம் வரும்போதெல்லாம் அதை கடத்தியபடி இருந்த தேவதேவன் கடைசியாக பேசி நிறைவுசெய்தார்.

 

மாலை விருது வழங்கும் விழா. மிகச்சரியாய் 5.55 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

வழக்கம்போல பின்வரிசையில் அமரச்சென்ற பாவண்ணனை கைபிடித்து பக்கத்து இருக்கையில் இருத்தினேன். முன்னால் ஒரு வரிசை சேர் போடப்பட்ட பிறகே ஆசுவாசமானார்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்தமற ஆரம்பித்தார்கள். முன் வரிசையில் வந்தமர்ந்தார் நாசர். மிகச்சமீபமாய் அவரது மூக்கு. கிள்ள நினைத்த ஆசையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினேன்.

“நதியின் பாடல்” ஆவணப்படத்தின் சில பகுதிகள் திரையிடப்பட்டபின் விருந்தினர்கள் மேடையேறினார்கள்.

பேசுபவரின் தாய்மொழியிலுமில்லாமல், கேட்பவரின் தாய்மொழியிலுமில்லாமல் வேறொருமொழியில் பேசுவதற்க்கு மன்னிப்புக்கோரியபடி ஆரம்பித்த சிவப்பிரகாஷ் மழை பற்றிய வண்ணதாசனின் கவிதையொன்றோடு நிறைவு செய்தார்.

தன் எழுத்துரையை வாசித்தமர்ந்தார் இரா.முருகன்.

”பாடாத பாட்டெல்லாம்” கதை தன்னை பாடாய் படுத்தியதை நினைவுகூர்ந்த நாசர், அவதாரம் படத்தில் அதை பயன்படுத்தியதற்க்கு வண்ணதாசனுக்கு நன்றி தெரிவித்தார் (இப்பவாவது நன்றி சொன்னதுக்கு நாம சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்).

வழக்கம்போல கதைசொல்லியாய் பவா, அருமையான பேச்சில் தனக்கும் வண்ணதாசனுக்குமான உறவை மிக அழகாய் விவரித்தார்.

மருத்துவர். கு.சிவராமனின் எதார்த்த பேச்சு, எந்த குறிப்பும் இல்லாமல் இலகுவாக எல்லோரையும் கவர்ந்த பேச்சு.

 

இறுதி வாழ்த்துரை ஜெமோ…

H.S.சிவப்பிரகாஷை காலபைரவராக சித்தரித்து, பிற விருந்தினர்களை பற்றியும் குறிப்பிட்ட பிறகு வண்ணதாசனைத் தொட்டார். சுருக்கமான, ஆழமான பேச்சு. மின்மினி பூச்சுகள் மொத்தமாய் கிளம்பி உருவாக்கும் வெளிச்ச வெள்ளத்தில் விரியும் காட்டை விவரித்தபடி “மின்மினித்தீ” என முத்தாய்ப்பாய் வாழ்த்தியமர்ந்தார்.

இறுதியாக வண்ணதாசனின் ஏற்புரை.

ஆர்ப்பாட்டமில்லாத, சற்றே சோகம் கவிழ்ந்த ஆரம்ம பேச்சு, சற்றே இலகுவாகிறார். சாகித்ய அகாடமி விருதின் தொடர்ச்சியாய் தன்மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சக்கூற்றுகளிலிருந்து தன்னை வெளியேற்றிக்கொள்ள விஷ்ணுபுர விருதுவிழா துணை நின்றதாய் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் அவரது படைப்புகளைப் போலவே சட்டென்று முடிந்துவிட்டதாய் தோன்றவைத்த பேச்சு…..கரவொலிகள் அடங்க நீண்ட நேரமாயிற்று. விழிகளின் ஓரம் கண்ணீருடன் இருகரம் கூப்பியபடி எழுந்தமர்கிறேன் நான்.

நாற்காலிகள் நகரும் சத்தம், கேமிராக்களின் பளிச் வெளிச்சம், புரட்டப்படும் புத்தகங்களின் சரசரப்பு….

திடீரென சூழும் வெறுமை, ஒரு தியான நிலையிலிருந்து சராசரி மாலை நேரத்துக்கு ராட்டின சுற்றலாய் கீழிறங்கும் மனோநிலை. IRCTC பிரிண்ட்அவுட்டுகளையும், REDBUS மெசேஜ்களையும் வெறித்தபடி நிலைகொள்ளாமல் இங்குமங்கும் அலைபாயும் நண்பர்கள்,.

”10 மணிக்கு பஸ்” என்றபடி விடைபெறுகிறார் பாவண்ணன். “போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாடா”. கைத்தடியை கவனமாய் ஊன்றியபடி கடந்துசெல்லும் பாட்டையாவை பார்த்து மௌனமாய் தலையசைக்கிறேன். மௌனத்தை கலைக்க விரும்பாமல் கை அசைத்து விடைபெறுகிறார் நண்பர் முரளி சுந்தரம்.

மேடைப்படிகளில் மெதுவாய் ஏறுகிறேன் நான்.

 

லாடம் போன்ற வரிசை வண்ணதாசனை நோக்கி மெதுவாய் நகர்கிறது. என்முறை வர அவரது கைகளை அழுந்த பற்றிக்கொள்கிறேன். கண்ணாடி வழியே கண்களை ஊடுருவுகிறார். காலை உரையாடலில் பேசியவற்றை நினைவுகூறுகிறார். கைகளை இன்னும் அழுந்தப்பற்றி விடைபெறுகிறேன்.

“சார், நம்ம நண்பர் ஒருத்தர் மலை வாழைப்பழம் கொண்டுவந்திருக்கிறார்” என்றபடியே பழங்கள் நிரம்பிய காதிதப்பையை வண்ணதாசனிடம் நீட்டுகிறார் பவா செல்லதுரை.

“என்ன, செம்பகப்பூ வாசமடிக்கி……”

அருகிலிருக்கும் அனைவரும் காதிதப்பையினுள் பார்வையை செலுத்துகிறோம்…..

“அது………………….. நா தலயில வச்சிருக்கேன் சார்………..” சற்றே வெக்கத்தோடு புன்னகைத்தபடி கையெழுத்துக்காக புத்தகத்தை நீட்டுகிறார் வாசகியொருவர்.

”நீங்கள் கல்யாணியை தொடுங்கள். நான் கல்யாணியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்”. இடதுகை விரல்களால் மைக்கின் அடிப்பகுதியை திருகியபடியே காலையமர்வில் வண்ணதாசன் பேசியது காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த செம்பகப்பூவின் வாசனை திருநெல்வேலியின் பெருமாள்புரத்துக்கு இந்நேரம் சென்றடைந்து கல்யாணிக்காக காத்துக்கொண்டிருக்கும்.

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிப்பதிவு -1
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -9 -சிவமணியன்