ஒண்ணுமே படிச்சதில்லை -கடிதங்கள்

pp

 

அன்புள்ள ஜெ.மோ அவர்களுக்கு,

”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை” என்னும் கட்டுரையைப் படித்தேன்…..நானும் இதே முட்டாள் தனத்தை செய்தேன். அதுவும் [ நீங்கள் இக்கட்டுரையில் பெயர்சொல்லாமல் குறிப்பிட்டிருக்கும் ] நாஞ்சிலிடமே!

அவர் வேலை செய்த Brady & Co  கம்பெனியில் என் தந்தையாரின் நண்பரும் வேலை செய்தார்….அவரை சந்திக்க சென்ற போது  “குரு, உனக்கு ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறேன் எனக்கூறி நாஞ்சிலை அழைத்து அறிமுகம் செய்தார்….நான் அவர் எழுத்தை வாரப்பத்திரிக்கைகளின் வாயிலாக மட்டுமே படித்திருந்தேன்.

என்ன பேசுவது என தடுமாறி ஒரு மாதிரி உளறிக்கொட்டி விட்டேன்….உங்கள் கட்டுரையில் அந்த வாசகி குறிப்பிட்டிருந்தாரே ….“நான் வாசிச்சிருக்கேன். கதைகள் ஞாபகமும் இருந்தது. ஆனால் அவரை மாதிரி இருக்கிறவங்ககிட்ட நுணுக்கமா அறிவாப் பேசணும், அது நமக்குத் தெரியாதேன்னு நினைச்சேன். தப்பா பேசுறதவிட வாசிக்கலைன்னு சொன்னா நல்லதுன்னு தோணிச்சு” கிட்டத்தட்ட அதே எண்ணங்களில் தான் நானும் அப்படி செய்தேன்! பின்னாளில் நண்பர் ஓவியர் ஜீவாவிடம் இதை சொல்லி திட்டு வாங்கிக் கட்டிக்கொண்டது தனிக்கதை!

குரு பிரசாத்

 

 

அன்பு ஜெமோ,

‘நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை’ கட்டுரையை வாசித்தேன். நீங்கள் அமெரிக்கா வந்தபோது உங்களைப் பார்க்க வந்த அமெரிக்கப் பேராசிரியர்களை நினைத்துக் கொண்டேன்.

உங்களை சந்திக்க வந்த அறுவரில் இருவர் உங்களுடைய படைப்புகளைப்பற்றி கேள்விப்பட்டவர்கள். அவர்களுடைய உயர் ஆராய்ச்சி வட்டத்தில் ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். மற்ற நால்வரும் என் வழியாக மட்டுமே உங்கள் பெயரைக் கேட்டிருக்கிறார்கள். சந்திப்பு நாளுக்கு 3 வாரம் முன்பிருந்து ‘முன்னேற்பாடு’ செய்யத் தொடங்கினர். ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் நான் அதற்கு உதவ வேண்டும் என்பது எனக்கிடப்பட்ட கட்டளை (கரும்புதின்ன கூலி)!

அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாதென்பதால், முதலில் உங்களைப்பற்றி வந்த ஆங்கிலக்கட்டுரைகளை எல்லாம் தேடித்தேடி வாசித்தார்கள். வாரம் ஒருமுறை எல்லாவற்றையும் தொகுத்து என்னிடம் கொடுத்து கருத்தைக்கேட்பார்கள்! நானும் ‘இது உண்மையில்லை’, ‘இது எல்லாத் தரப்பையும் சொல்லவில்லை’ என்று செய்திக்கு தகுந்தாற்போல் பதில் சொல்வேன். மிக விரைவில் அவர்களுக்கு ஒரு வியப்பு வந்துவிட்டது- என்னவென்றால், எப்படி ஒருவர் இவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்து ‘அசராமல் தாம்பாட்டுக்கு’ எழுதிக் குவிக்கிறார் என்பதே! நீங்கள் சொன்ன “யானை Vs பூரான்” கதையை அவர்களுக்கு சொன்னேன், கண்ணில் நீர்வர சிரித்தார்கள்!

பிறகு உங்கள் ஆக்கங்களில் ஏதேனும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடி, காடு நாவலை படித்தனர். ஒரு 100 பக்கம் முடித்தவுடனே, நண்பர் ழாக் சொல்லிவிட்டார் “இவர் படிமங்களை வைத்துக் கதை சொல்கிறார்; மொழிபெயர்ப்பெல்லாம் ஒத்து வராது ” என்று.

கடைசியாக சிறுகதைக்கு வந்தார்கள். உங்களது சிறுகதைகளில் எனக்குப்பிடித்த இரண்டு கதைகளை எடுத்து ‘பத்தி பத்தியாக’ சொல்லவேண்டும் என்று ஏற்பாடு. மாடன் மோட்சத்தையும், யானை டாக்டரையும் எடுத்துக்கொண்டேன்.

ஏசு கையில் என்ன ஆயுதம் வைத்திருந்தார் என்று மாடன் கேட்குமிடம் அனைவரையும் கவர்ந்த தருணம். அது மட்டுமே ஒரு மணிநேர விவாதமாய் நீண்டது. அப்படி எந்த ஆயுதமும் இல்லாத ஒருவர் மேய்ப்பராக ஆனதே அவரின் சிறப்பு என்று ஒருதரப்பும், மகாவீரரோ, புத்தரோ, கிருஷ்ணரோ சொல்லாத எதை அவர் சொல்லிவிட்டார் என்று இன்னொரு தரப்பும் விவாதித்தனர். யானை டாக்டர் கதை ஒரு ‘தரிசனம்’ என்பதே அனைவரின் கருத்தும்.

சந்திப்பு நாளன்று நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கும். மாலை 5:30 மணிக்குத்தொடங்கி 2 மணி நேரம் சந்திப்பு என்று நிரல். ஆனால், விவாதம் சூடு பிடித்து தட தடவென ஓடி ஒரு வழியாய் முடிவுக்கு வந்தபோது இரவு 11:30 மணி! நடுவில் இரண்டு முறை மட்டும் அணைத்து வைத்திருந்த செல்பேசியை பயன்படுத்தினர்- குழந்தைகளை வீட்டில் பார்த்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த காப்பாளரை சிலமணி நேரங்கள் மேலும் நீட்டிக்கச்செய்ய.

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

***

அன்புள்ள ஜெ

நான் ஒண்ணுமே வாசிச்சதில்லே அனுபவம் எனக்கும் உண்டு. நான் பிரபஞ்சனைச் சந்தித்தபோது அவருடைய மானுடம் வெல்லும் வானம் வசப்படும் இருநாவல்களையும் வாசித்திருந்தேன். இரண்டையும் ஞாபகமும் வைத்திருந்தேன். ஆனால் அவரிடம் உளறக்கூடாது என்பதனால் வாசித்ததே இல்லை என்று சொல்லிவிட்டேன். அவர் பேசுவதைக் கேட்போம் என நினைத்தேன். ஆனால் வாசிக்கவில்லை என சொன்னதுமே பிரபஞ்சன் சர்வசாதாரணமான விஷயங்களைப்பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார் .பெரும்பாலும் ஓட்டல் உணவுகளைப்பற்றியும் சென்னை திரையரங்குகள் இடிப்பதைப்பற்றியும்

நான் பெரிய சோர்வுடன் திரும்பி வந்தேன். அதன்பின் உங்களை சந்தித்தேன். அப்போதும் இதேதான் நடந்தது. அங்கே வந்த நான்குபேரில் மூவருமே உங்களை வாசிக்கவில்லை என்றார்கள் நீங்கள் சினிமா பற்றிப் பேசினீர்கள். அன்றைக்குத்திரும்ப வரும்போது பெரிய சோர்வு. ஏன் இப்படி நிகழ்ந்தது என்றே நினைத்தேன். எழுத்தாளர்களைச் சந்திக்கச்செல்வது அவர்கள் முக்கியமான எதையாவது சொல்வார்கள் என்பதனால்தானே?

திடீரென்று ஒரு விஷயம் புரிந்தது. நாம் நம்மை, நம் தகுதியைக் காட்டிக்கொள்ளவேண்டும். நம்மை கொஞ்சமேனும் நிரூபிக்கவேண்டும். இல்லாவிட்டால் நம்மை அவர்கள் பாமரர் என்றே நினைத்துக்கொள்வார்கள். பாமரர்களுக்கு உரியவகையில் பேச ஆரம்பிப்பார்கள். மிக இன்ஸ்பைரிங் ஆகப் பேசக்கூடியவர் நீங்கள் என என் நண்பர்கள் பலர் சொல்லியிருக்கிறார்காள். ஆனால் பேசவைப்பது கேட்பவர்கள் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள், எந்த அளவுக்குத் தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதுதான்.

அன்றைக்கு உங்களிடம் பேசியபோதும் சரி பிரபஞ்சனிடம் பேசியபோதும் சரி வாசித்தவர்கள் சும்மா இருந்தோம். வாசிக்காத ஒரே ஒருவர் சாப்பாடு சினிமா என்று பேச்சைக்கொண்டுபோனார். எந்த நல்ல உரையாடலும் கேட்பவரை ஒட்டியே உருவாகிறது என்று அன்று புரிந்தது. அதெல்லாம் மிகப்பெரிய இழப்புகள்

உண்மையில் வாசகர்களிடம் சாதாரணமான விஷயங்களை ஓர் எழுத்தாளர் பேசுகிறார் என்றால் அவர் அவர்களை உள்ளூர மிகச்சாதாரணமாக எடைபோட்டுவிட்டார் என்றுதான் அர்த்தம். அதற்கு முழுக்கமுழுக்க அந்த வாசகர்கள்தான் காரணம்

முத்துராஜ் ஆறுமுகம்

***

வாசிச்சதில்லை…யை விட ஒருபடி மேல்:

இந்த வருடம் ஒரு இலக்கியக்கூட்டத்தில் ஒரு பெண்மருத்துவர் வந்திருந்தார். ஆங்கிலத்தில் ஒரு தொகுதி (யோ ஒரு கதையோ) எழுதி இருப்பார் போல.

கூட்டத்திற்கு வந்திருந்த இ.பா’வை, தமிழின் முக்கியமான எழுத்தாளர் என்று அவருக்கு யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள்.

நான் ஒரு (குருதிப்புனல், மழை தவிர) ‘ஒண்ணுமே வாசிச்சதில்லை சார்’ – category என்பதால், கொஞ்சம் அகலாது-அணுகாது அமர்ந்திருந்தேன்.

மருத்துவரோ நேராக வந்து, அடுத்த இருக்கையில் அமர்ந்து, வாஞ்சையோட முறுவலித்து Sir, can you please give me some tips on how to write என்றாரே பார்க்கலாம்.

கூட்டம் தொடங்கி இ.பா’வைக் காப்பாற்றியதாக எனக்கு நினைவு, அல்லது நம்பிக்கை.

பிரபு

 

சாரி சார் ஒண்ணுமே படிச்சதில்லை

முந்தைய கட்டுரைஎச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்-3
அடுத்த கட்டுரைவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை