எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்-3

1i

 

 

1.இரவு முழுதும்

இரவு முழுதும்

ஓவென்ற காற்றின் ஊளை

உடல்மீது பாய்வதுபோல இருந்தது

இந்நேரம்

சுக்குநூறாகச் சிதைந்திருக்கலாம்

என் வாடகை வீடு

பகல் முழுதும்

பொழிந்தபடியே இருந்தது

மழைமழைமழை

இந்நேரம்

கரைந்துபோயிருக்கலாம்

என் வாடகை வீடு

இந்தக் கோடை முழுவதும்

எரிந்தபடியே இருந்தது

வானுயர்ந்த நீல அடுப்பு

இந்நேரம்

எரிந்து பொசுங்கியிருக்கலாம்

என் வாடகை வீடு

குளிர்காலம் முழுவதும்

கவிந்து மூடிக்கொண்டிருந்தது

கடுமையான குளிர்

உறைந்துபோயிருக்கலாம்

என் வாடகை வீடு

இன்னும் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது

என் வாடகை வீடு

காத்துக்கொண்டிருக்கிறது

என் வாடகை வீடு

என்னுடையதாக மாறாத என் சொந்த வீடு

 

index

2.அடுப்பு

திருமணம் திவசங்களெல்லாம்

முடிந்துவிட்டன.

பூமியகலமுள்ள அடுப்பு

இப்போது அணைந்திருக்கிறது.

கோடானுகோடி வயிறுகளுக்கு

உணவு கிடைக்கட்டுமென

சுட்டழித்த காடு.

வடதுருவத்திலிருந்து தென்துருவம் வரைக்கும்

பச்சைப்பசேலென நீண்டிருந்த காடு

இப்போது எரிந்து சாம்பலாகிவிட்டது.

நீங்களே தொட்டுப் பாருங்கள் !

எவ்வளவு குளிர்ச்சி.

காடு விழுங்கிய நெருப்பு

நாட்டிலும் எரிந்து

நாட்டினரின் கதைகளும் முடிந்துவிட்டன.

அந்த அழிவுகளின் விசித்திர அலங்கோலப் படங்களை

நான் தன்னந்தனியே தீட்டிக்கொண்டிருக்கும்போது

அந்தச் சாம்பலின் அகன்ற பரப்பில்

இதோ

சூரியன் !

அந்த மாபெரும் அடுப்பின் கருப்பையின் ஆழத்தில்

புதிய கரு.

 

HS_Shivaprakash

  1. கட்டிட வேலைக்காரர்கள்

சுடுகாட்டுச் சாம்பலுடன் கலந்த மண்

கல்குவியலையும் பாதி வெந்த விறகுகளையும்

தாண்டியும் தடுக்கியும் வெளியே வந்தேன்

ஒருமுறையாவது

இதமான காற்றால் நெஞ்சை நிரப்ப

மண்திமிங்கலம் எழுந்து நின்றதுபோல

வர்ணம் பூசாத மாளிகை

அதன் தோள்களை நிறைக்கும்

கூலியாட்களின் வரிசை

முதலில் செங்கல்லாக மாறும் மண்

அப்புறம் கட்டடமாகும்

மெல்ல மெல்ல உயரும் வாழ்க்கை எல்லை

கைக்குக் கைமாறும் மண்சட்டியொன்று

இறக்கை முளைக்காத உலோகப்பறவை

ஏறித் தாழும் தோளிடுக்கில்

நீல வானமே எரிந்தாலென்ன?

வேகமாய்ப் புகையுயர்ந்து அடர்ந்தாலும் என்ன?

மண்பிளந்து படிப்படியாய்

உயிரிறிந்து நெடிதுயர்ந்த

அழகான மாளிகை

சடசடக்கும் கிணற்றுராட்டினம்

கூவி விடுக்கும் அழைப்புக்கு நடுவில்

சுடுமணல் குவியல்களின்

சிறுசிறு நிழலடியில்

அரைவிழி திறந்த குழந்தைக்கு

அமுதூட்டும் அம்மா

உன் ரகசியக் கருவறையில் புரளும்

நகரங்கள் எத்தனை, நாடுகள் எத்தனை?

 

interview_shivaprakash

  1. அபூரண கதை

எனக்கு நீதான் காட்டினாய்

ஓர் உதிர்ந்த தலைமுடியை

அதன் கதையை முழுசாய்

அறிந்துகொள்ளும் முன்பு

மேலே பறந்து மறைந்தது

ஒரு கொக்கைப்போல

நான் உனக்குக் காட்டினேன்

உதிராத தளிர்களை

அதன் கதையை முழுசாய்

அறிந்துகொள்ளும் முன்பே

கீழே உதிர்ந்து மறைந்தது

மாரிக்காலம்போல

நீ காட்டியது – முழுமை பெறாத கதை

நான் காட்டியது – முழுமை கிட்டாத கதை

 

தமிழில்: பாவண்ணன்

 

மதுரைக்காண்டம்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ்

எச்.எஸ்.சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கவிதைகள்

 

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
அடுத்த கட்டுரைஒண்ணுமே படிச்சதில்லை -கடிதங்கள்