’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57

[ 19 ]

மாளிகைகள் செறிந்த அமராவதியின் அகன்ற வீதிகளின் வலைப்பின்னலில் இளங்காற்றில் அலைவுறும் கருநீலக் குருவியின் மெல்லிறகென அர்ஜுனன் திரிந்தான். ஒவ்வொரு மாளிகையும் முதற்கணம் விழிவிரிய நெஞ்சுகிளர வியப்பூட்டியது. ஒவ்வொரு தூணாக, உப்பரிகையாக, வாயிலாக, சாளரமாக விழிகள் தொட்டுச்சென்றபோது முன்பே அறிந்திருந்த அது முகம் தெளிந்தது. எங்கு எங்கு என நெஞ்சு தவித்து அடையாளம் கண்டுகொண்டு அவன் அகம் துள்ளியெழுந்தது. அவனறிந்தவை அனைத்தும் முழுக்க மலர்ந்திருந்தன அங்கு. இங்கிருக்கும் ஒவ்வொன்றும் அங்கு தன்னில் ஒரு அணுவைத்தான் சொட்டிவைத்துள்ளன என்று ஒருமுறையும் அங்குள்ளவை எல்லாம்  இங்குள்ளவையென பெருகும் வாய்ப்புள்ளவை அல்லவா என்று மறுமுறையும் தோன்றிக்கொண்டிருந்தது.

அத்தனை மாளிகைகளும் அவனை அறிந்திருந்தன. புன்னகையுடன் இதழ் விரித்தவை, சொல்லெடுக்க சற்றே வாய் திறந்தவை, மகிழ்ந்து அழைக்கும்பொருட்டு வாய் குவிந்தவை, தன்னுள் ஆழ்ந்து கண் மயங்கியவை, கனவில் விழிமூடி புன்னகை கொண்டவை. பால்நுரையென வெண்மாளிகைகள், மலரிதழென இளஞ்சிவப்பு மாளிகைகள், மீன்கொத்தியின் இறகுப்பிசிறு என நீலமாளிகைகள். முகில்கீற்றென கருமை கொண்டவை, இளந்தளிரென பச்சை ஒளி கொண்டவை, காலைப்பனி என பொன்னிறம் கொண்டவை. அனைத்து வண்ணங்களும் ஒளியே என்று அங்கு உணர்ந்தான்.

மண்ணில் அவன் அறிந்த அனைத்து மாளிகைகளும் எடையென்றே தங்கள் இருப்பை காட்டியவை. அமராவதியின் மாளிகைகள் அனைத்தும் அறியமுடியாத கையொன்றால் தாங்கப்பட்டவை என மிதந்து நின்றன. மூச்சுக்காற்றில் அவை மெல்ல அலைவுறுமென்றும் கைநீட்டி தொடச்சென்றால் புகைக்காட்சியென உருவழியுமென்றும் மயல் காட்டின.

நகரில் அனைத்து முகங்களும் பேருவகையொன்றின் உச்சியில் திளைத்து நிறைந்தமைந்த பாவனை கொண்டிருந்தன. நாவே உடலாகித் திளைக்கும் இன்சுவை, நெஞ்சு கவிந்தெழும் இசைத்தருணம், சித்தம் திகைக்கும் கவிப்பொருளவிழ்வு, தான் கரைந்து ஊழ்கவெளியில் அமைதல். இவர்களை இம்முனையில் நிறுத்துவதேது? இருப்பே தவமென்றான நிலையில் எய்துவதுதான் என்ன?

தேவர் முகங்களை கூர்ந்து நோக்கியபடி சென்றான். அவையனைத்தும் அவன் முன்பறிந்த முகங்கள். இதோ இவர் முகம்! காமரூபத்தின் கடைத்தெரு ஒன்றில் உடலெங்கும் சொறியுடன் தன் கடைமுன் வந்து நின்று வாலாட்டிய நாய்க்கு குனிந்து ஒரு அப்பத்தைப் போட்டு புன்னகைத்த சுமைவணிகன். அக்கணத்தில் சூடியிருந்த முகம் இது. காசியில் வேள்விச்சாலைவிட்டு வெளிவந்து கையிலிருந்த அவிப்பொருளை அங்கு நின்றிருந்த கரிய உடலும் புழுதி படிந்த கூந்தலும் கொண்டிருந்த பிச்சிக்கு தாமரை இலைபரப்பி நீர்தெளித்து வலக்கையால் அள்ளிவைத்து அன்னம் ஸ்வாகா என உரைத்து கைகூப்பி அளிக்கையில் முதிய அந்தணர் கொண்டிருந்த முகம் அது.

இந்த முகத்தை எங்கோ ஓர் இசைநிகழ்வின் திரளில் பார்த்திருக்கிறேன். அந்த முகம் மிக அப்பால் ஒலித்த ஆலயமணி ஓசையைக் கேட்டு அசைவிழந்து நின்று கைகூப்பியவர் மேல் கனிந்திருந்தது. அது இல்லத்திலிருந்து நடை திருந்தா சிறுமகன் இரு கைகளை விரித்து ஓடிவரக்கண்டு குனிந்து கைவிரித்து கண்பனிக்க அணுகிய தந்தைக்குரியது. முலையூட்டி உடல்சிலிர்த்து இமைசரிந்து முற்றிலும் உளம் உருகிச்சொட்ட அமர்ந்திருந்த அன்னையல்லவா அது! இது நோயுற்றுக் கிடந்த இரவலன் அருகே துயிலாது விழித்திருந்து பணிவிடை செய்த பிறிதொரு இரவலனின் முகம். மாளவத்துப் பெருஞ்சாலையில் அவன் முகம் சோர்ந்திருந்தது. இங்கு அவ்விழிகளின் அளிமட்டும் விரிந்து எழுந்திருக்கிறது.

அந்தக் கணங்களின் முகங்கள். அவை எழுந்து திரண்டு அலை கொண்டிருந்தது அப்பெருவெளி. நடப்பது களைப்பை உருவாக்கவில்லை. எண்ணினால் எழுந்து பறக்க முடிந்தது. எண்ணுமிடத்திற்கு அக்கணமே செல்ல முடிந்தது. எண்ணம் எண்ணியாங்கு சென்றடையுமென்றால் இடமென்பதே ஓர் எண்ணம் மட்டும்தான். இடமிலாதானால் காலமும் மறைகிறது. காலமில்லாதபோது எங்கு நிகழ்கின்றன எண்ணங்கள்? அவை எண்ணங்களே அல்ல, எண்ணமென எழாத கருக்கள். இவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் நிகழ்ந்து மறையும் ஒரு கனவு.

குளிர்ச்சுனைகளில் நோக்கிய அவன் முகம் எப்போதோ  ஊசிமுனையென கூர் கொண்டிருந்த இலக்கொன்றை தன் அம்பு சென்று அடைந்தபோது அவன் சூடியிருந்தது. அலை எழுந்த ஏரியில் அவனுடன் வந்த அவன் உருவம்  இளைய யாதவரின் கை தன் தோள் மேல் அமர்ந்திருக்கையில் அவன் கொண்டிருந்தது. மாளிகைப் பரப்பொன்றில் அவன் கண்ட முகம் அபிமன்யூவை கையிலெடுத்தபோது அவனில் பூத்தது.  அந்த முகம் எது? அவன் நின்று அதை நோக்கினான். கைகள் ஏதுமில்லை என விரிந்திருக்க அவன் ஒரு மலைப்பாதையில் விழுந்து இறந்துகொண்டிருந்தான். அருகே எவருமில்லை. அவன் விழிகளில் வானம் நிறைந்துகொண்டிருந்தது. புன்னகையில்லாத மலர்வுகொண்டிருந்தது அம்முகம்.

தளிர்களும் மலர்களும் மட்டுமேயான சோலைகள். வண்ணம் மட்டுமே கொண்ட மலர்களுக்கு பருவுடலென ஒன்று உண்டா என்றே ஐயுற்றான். நிழல்களும் மெல்லிய ஒளி கொண்டிருந்தன. இசை சூடிச்சுழன்று பறந்த கந்தர்வ வண்டுகள் பொன்னென வெள்ளியென அனலென நீர்த்துளியென தங்களை ஒளி மாற்றிக்கொண்டன. இவ்வுலகு ஒவ்வொன்றிலிருந்தும் எடுத்த உச்சங்களால் ஆனது. வேதம் ஒன்றே மொழியென்றானது. புன்னகை ஒன்றே முகங்கள் என்றானது. புன்னகையே கண்ணீராகவும் இங்கு சொட்டமுடியும்.

தனிமை எப்போதும் அத்தனை முழுமை கொண்டிருந்ததில்லை என்றுணர்ந்தான். தான் என்னும் உணர்தல் ஒருபோதும் அத்தனை நிறைவளித்ததில்லை. சென்று சேர இலக்கின்றி வந்த வழியின் நினைவின்றி ஒருபோதும் கணங்களில் அப்படி பொருந்தியதில்லை. ஏனெனில் இப்பேருலகு உணரும் அக்கணத்தால் மட்டுமே ஆனது. கணமென்று மட்டுமே காலம் வெளிப்படும் வெளி. இதற்கு நீளமில்லை, அகலம் மட்டுமே என்று அவன் எண்ணிக்கொண்டான். உறைவிடமும் உணவும் உணவுக்கலமும் அன்னைமடியும் ஒன்றென்றே ஆன எளிய தேன்புழு. உலகென்று தேனன்றி பிறிதொன்றை உணராதது.

அலைகளில் தானும் உலைந்தாடும் நீர்ப்பாசியின் பொடிபோல அப்பேருலகின் நிகழ்வுகளில் அவனுமிருந்தான். ஆனால் அவன் நீர் அல்லாதுமிருந்தான். நீர் சூழ்ந்த வெளியில் அணுவெனச் சிறுத்து, எவரும் நோக்காதிருந்தும் தானெனும் உணர்வுகொண்டு தனித்திருக்கும் உயிர்த்துளி.

அங்கு மிதந்தலைந்த முகங்கள் அவனை நோக்கி புன்னகைத்தன. விழிகள் அவன் விழிதொட்டு அன்பு காட்டி கடந்து சென்றன. இதழ்கள் குவிந்து விரிந்து இன்சொல் உரைத்தன. உள்ளங்கள் அவன் உள்ளத்தைத் தழுவி அகன்றன. ஆயினும் அவனுள் இருந்து கூர்கொண்டிருந்த முள்ளின் முனை ஒன்று தினவு கொண்டிருந்தது. முள்முனை அளவிற்கே அணுவளவுத் தினவு. சிறியதென்பதனாலேயே முழுச்சித்தத்தையும் அறைகூவுவது. இன்பம் மட்டுமே பெருகி நிறைந்திருக்கும் இப்பெருவெளியில் அது துழாவிக்கொண்டே இருக்கிறது. கூர்முனையின் கூர்மையென ஒரு துளி.

எங்கேனும் தொட்டு குருதி உண்ணத் தவிக்கிறது போலும் அந்த முள். ஏதேனும் விரல் வந்து தன்மேல் அமர விழைந்தது. வந்தமர்வது ஓர் அணுவென்றாலும். முள் அறியும் முள்முனை. முள் என்றுமிருந்தது. எப்பெருக்கிலும் தான் கரையாதிருந்தது. இங்கு அப்படியொன்று தன்னுள் இருப்பதை உணர்ந்த எவரேனும் இருக்கக்கூடுமா? இப்பேருலகம் முற்றிலும் அதற்கு அப்பாற்பட்டது. ஒவ்வொன்றும் மலரும் இங்கு முள்ளென்று ஒன்று மலர்த்தண்டில்கூட இருக்க வழியில்லை. முள்ளை உணர்வதில் விழிகளுக்கு தனித்திறனுள்ளது. ஏனென்றால் நோக்கு என்பது ஒரு முள்.

முள்ளை உணர்ந்த ஒரு விழியும் அங்கு தென்படவில்லை. விழி பார்த்துக்கொண்டிருந்தபோதே அவன் சித்தம் சென்று தொட்டது. நின்று  ‘ஆம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டது. அவள் அம்முள்ளை முதல் நோக்கிலேயே தொட்டறிந்திருந்தாள். அவன் அவளை எண்ணியதுமே மெல்லிய சிரிப்பொலி அவன் காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்கையில் கடந்து சென்ற யானை ஒன்றின்மேல் முழுதணிக் கோலத்தில் ஊர்வசி அமர்ந்திருந்தாள் அவளைச் சூழ்ந்து வெண்புரவிகளில் அப்சரகன்னிகைகள் அணிகுலுங்க ஆடைநலுங்க அசைந்து சென்றனர்.

[ 20 ]

புரவிகளை பின்னிருந்து காலவெளி உந்தி உந்தி முன்னோக்கி தத்திச் செல்ல செய்தது. யானையை அது கையிலெடுத்து பக்கவாட்டில் ஊசலாட்டியது. புரவி ஒரு சொட்டுதல். யானை ஒரு ததும்புதல். அவன் நின்று அவர்களை நோக்கினான். முன்னால் வந்த களிறு அவனைக் கண்டதும் துதி நீட்டி மணம் கொண்டது. தன் உடலுக்குள் தானே அசைவொன்று உருண்டு அமைய கால்மாற்றி நின்று மூச்சு சீறியது. நின்றுகூர்ந்த செவிகள் மீண்டும் அசையத் தொடங்கின. சிறிய விழிகளை கம்பிமயிர்கொண்ட இமைகள் மூடித் திறந்தன.

மேலிருந்து குனிந்து “இளைய பாண்டவரே, நகர் நோக்குகிறீர்கள் போலும்” என்றாள் ஊர்வசி. “ஆம்” என்று அவன் சொன்னான். வளையல்கள் அணிந்த கையை நீட்டி “வருக! யானை மேலிருந்து நோக்கலாமே?” என்று சொன்ன அவள் விழிகளில் இருந்த சிரிப்பை அவன் சந்தித்தான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “யானை மேலிருந்து நோக்கும் உலகம் பிறிதொன்று” என்று அவள் சொன்னாள். “கரியை காலாக்கியவன் என்று இந்திரனை ஏன் சொல்கிறார்கள் என்று அறிவீர்களா?’’

அவன் அருகே சென்று யானையின் கால்களைத் தொட்டபடி தலைதூக்கி நோக்கி “நீயே சொல்!” என்றான். “பதறாத கால்கள் கொண்டது யானை. ஏனென்றால் அது தன் கால்களை நோக்கமுடியாது. கரியூர்ந்தவன் பிறகொரு ஊர்தியிலும் தன்னை பெரிதென்று உணரமாட்டான்.” அர்ஜுனன் சிரித்தான். அவள் கைநீட்டி “ஏறிக்கொள்க! கரிகாலனின் யானை இது, அவர் மைந்தனை அது நன்கறியும்” என்றாள். “நன்று” என்றபடி அவன் யானையின் முன்கால் மடிப்பில் மெல்லத்தட்ட அது காலைத்தூக்கி படியென்றாக்கியது. அதில் மிதித்து கால் தூக்கிச்சுழற்றி ஏறி அவளுக்குப் பின் அமர்ந்துகொண்டான்.

“செல்க!” அவள் யானையின் மத்தகத்தை மெல்ல தட்டினாள். அது துதிநுனி நீட்டி மண்ணை முகர்ந்து அவ்வழியே காலெடுத்து வைத்து சென்றது. அலைபாயும் படகிலென அவளுடன் அவன் அமர்ந்திருந்தான். அவள் குழல்புரி ஒன்று பறந்து அவன் முகத்தின் மேல் பட்டது. அதை புன்னகையுடன் பற்றி காதருகே செருகிக்கொண்டாள். அது மீண்டும் பறந்து அவனை வருடியது. அவன் அதைப் பிடித்து சுட்டுவிரலில் சுழற்றி சுருளாக்கி கொண்டைக்குள் செருகினான். கழுத்தை நொடித்துத் திரும்பிநோக்கி அவள் புன்னகை செய்தாள்.

சாலையின் இருபுறமும் மாளிகைகள் மிதந்தமிழ்ந்து அலைகொண்டு கடந்து சென்றன. “அமராவதியை நோக்கி நிறைந்தவர் எவரும் இல்லை” என்றாள் ஊர்வசி. “ஏனென்றால் நோக்குபவரின் கற்பனை இது. கற்பனை என்பது ஆணவம். தான் எவரென்று தான் கண்டு முடித்தவர் எவர்?” அர்ஜுனன் “நோக்குகிறேன் என்றுணர்ந்து நோக்கும் எவரும் நிறைவடைவதில்லை” என்றான். “இங்கிருப்பவர் எவரும் இதை நோக்குவதில்லை என்பதைக் கண்டேன். அவர்கள் இதற்குள் இருக்கிறார்கள்.”

“இதற்குள் அமைய உங்களைத் தடுப்பது எது?” என்று அவள் கேட்டாள். அவள் கொண்டை அவன் மார்பைத் தொட்டு அசைந்தது. அவன் “ஒரு முள்” என்றான். “எங்குள்ளது?” என்று அவள் கேட்டாள். “நீ அதை அறிந்ததில்லையா?” என்று அவன் கேட்டான். அவள் சிரித்து “ஆம், அறிவேன்” என்றாள். “முதல் நோக்கிலேயே அதைத்தான் கண்டேன்.” பின்னர் மீண்டும் சிரித்து “முள்ளை முள்ளால்தான் அகற்ற முடியும். அறிவீரல்லவா?” என்றாள்.

“எப்படி?” என்று அவன் கேட்டான். அவள் தலைதூக்கி அவனை நோக்கி “காமத்தை காமத்தால் வெல்வதுபோல” என்றாள். அவள் விழிகளை அவன் விழிகள் சந்தித்தன. நோக்குணர்ந்ததும் மொட்டு விரிவதுபோல மிக மெல்லிய ஓசையுடன் அவள் இதழ்கள் பிரிந்தன. வெண்பற்களின் ஈரம் படிந்த ஒளிநிரை தெரிந்தது. மென் கழுத்து மலர்வரிகளுடன் விழிக்கு அண்மையில் இருந்தது. அப்பால் தோள்களின் தாமரைநூல் போன்ற வளையக்கோடுகள். பொற்சங்கிலி ஒன்றின் ஒளிமட்டும் விழுந்ததுபோல. கச்சின் வலுக்குள் இறுகிய இளமுலைகள் நடுவே மென்மையென்றும் இளமையென்றும் துடித்தது நெஞ்சு.

அவள் இடையை தன் கைகள் வளைத்திருப்பதை அவன் உணர்ந்தான். அதை பின்னிழுக்க விழைந்தான். ஆனால் உடனே அதைச் செய்தால் அவள் அவ்வச்சத்தை உணர்ந்துவிடக்கூடும் என எண்ணி தயங்கினான். அந்தத் தயக்கத்தை அவள் உணர்ந்துகொண்டு அவன் கைமேல் தன் கையை வைத்துக்கொண்டாள்.  விழிகளை திருப்பிக்கொண்டு “ஆம்” என்று அவன் சொன்னான்.  அவன் கையை அழுத்தியபடி  “இருக்கிறேன் என்று. பின் நான் என்று. நானே என்னும்போது ஒரு துளியேனும் குருதியின்றி அது அமைய முடியாது” என்று அவள் சொன்னாள்.

“நன்கு அறிந்திருக்கிறாய்” என்று அர்ஜுனன் மெல்லிய கசப்புடன் சொன்னான். “ஆண்களின் பொருட்டே உருவாகி வந்தவள் நான். என் உடல் ஆண்களின் காமத்தால் வடிவமைக்கப்பட்டது. என் உள்ளம் அவர்களின் ஆணவத்தால் சமைக்கப்பட்டது” என்றாள் ஊர்வசி. இடக்கு தெரியாத இயல்பான குரலில் “ஆணுக்கு முற்றிலும் இசைவதன் மூலம் அவனை மூடனாக்குவீர்கள். மூடனுடன் முற்றிலும் இசைய உங்களால் இயலும்” என்றான் அர்ஜுனன்.

அவள் அதைப் புரிந்துகொண்டு சிரித்து “ஆண்களிடம் குன்றா பெருவிழைவை உருவாக்கும் பெண் அவர்களுக்கு முற்றிலும் அடிபணியும் இயல்பு கொண்டவளல்ல. தன் அச்சை வாங்கி உருக்கொண்டு எதிர்நிற்கும் பெண்ணிடம் ஆண் முழுமையாக பொருந்தக்கூடும். ஆனால் அவளை அக்கணமே மறந்தும் விடுவான். அவனை ஒவ்வொரு கணமும் சீண்டி உயிர்ப்பிக்கும் ஆணவத்தின் துளியொன்றை தானும் கொண்டிருப்பவளே நீங்கா விருப்பை அவனில் உருவாக்குகிறாள். அவன் அவள் ஊரும் வன்புரவி. பசும்புல்வெளியென்றும் பின்தொடையில் எப்போதுமிருக்கும் சவுக்கின் தொடுகையென்றும் தன்னை உணரச்செய்பவள்” என்றாள்.

மறுகணமே விழிகளில் ஏளனம் வெளிப்பட முகவாய் தூக்கி உடல் குலுங்க நகைத்து “ஆனால் கொழுந்தாடுபவை விரைந்தணைய வேண்டுமென்பதே நெறி” என்றாள். “அனல் ஈரத்தை முற்றும் உண்டபின் விலகி வானில் எழுகிறது. பின்பு ஒருபோதும் எரிந்த கரியை அது திரும்பிப்பார்ப்பதில்லை.” அவளுடைய நேரடியான பேச்சால் சீண்டப்பட்ட அர்ஜுனனை அந்த விளையாட்டுச்சிரிப்பு எளிதாக்கியது. அவள் இடையை அழுத்தி தன்னுடன் அவளை சேர்த்துக்கொண்டு  “நீ எரியென படர்பவளா?” என்றான். அவன் விழிகளை சிறுகுழந்தையின்  தெளிந்த நோக்குடன் ஏறிட்டு “ஆம், நான் அதற்கென்றே படைக்கப்பட்டவள்” என்றாள்.

அவன் நோக்கை விலக்காமல் “அதன்பொருட்டே என்னையும் அணுகுகிறாயா?” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “இங்கு நீங்கள் எழுந்தருளியபோது உங்கள் ஆழத்தில் கூர்ந்திருந்த அந்த முள்ளை உணர்ந்தவள் நான். முள்முனை உணரும் முள்முனை ஒன்றுண்டு.” அர்ஜுனன் முகத்திலிருந்த நகைப்பு அணைய “ஆம், உண்மை” என்றான். “இங்கு இப்பெருநகரின் வீதியில் மகிழ்ந்து திளைத்து நீங்கள் அலைந்து கொண்டிருப்பதாகவே இங்குள்ள பிறர் எண்ணக்கூடும். ஒவ்வொரு கணமும் அந்த முள் முனையில் நஞ்சு செறிவதை நான் உணர்கிறேன்” என்றாள்.

“நானும் அதை இப்போதுதான் உணர்ந்தேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “அந்நஞ்சு ஏன் என்றே என் உள்ளம் வியந்துகொள்கிறது.” அவள் “இவை அமுதென்பதனால் அது நஞ்சு, அவ்வளவுதான்” என்றாள். “இருக்கிறேன் என்றுணர்கையில் அது துளி, நானென்று எழுகையில் அது கூர்மை. எவர் என்று தேடுகையில் அது நஞ்சு. இளைய பாண்டவரென நீங்கள் இருக்கையில் ஆம் நீங்கள் இளைய பாண்டவரென சூழ்ந்திருக்கும் அனைத்தும் திருப்பிச் சொல்லியாக வேண்டும்.” அவள் அவன் கையைப்பற்றி “அவ்வண்ணம் திருப்பிச் சொல்ல இங்கிருப்பவள் நானொருத்தியே” என்றாள்.

“அந்நஞ்சு உன்னை அச்சுறுத்தவில்லையா?” என்றான் அர்ஜுனன். “ஆண்களின் அந்நச்சு முனையே பெண்களைக் கவர்கிறது” என்று அவள் விழிகளில் சிரிப்புடன் சொன்னாள். “நச்சுப்பல் கொண்ட நாகங்களையே நல்ல பாம்பாட்டிகள் விரும்புவார்கள்.” அர்ஜுனன் அச்சொற்களைக் கேட்காதவன் போல தன்னுள் ஆழ்ந்திருந்தான். “பெண்ணுக்குள் உள்ள முள்முனையால் அம்முள்முனையை தொட்டறிவதைப்போல காதலை நுண்மையாக்கும் பிறிதொன்றில்லை” என்று அவள் மீண்டும் சொன்னாள்.

“இது மேலும் தனிமையையே அளிக்கிறது” என்று அர்ஜுனன் சொன்னான். அவள் நகைத்து “அத்தனிமையை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்” என்றாள். அர்ஜுனன் “வேட்டையாடி காமம் கொண்டாடிய நாட்களிலிருந்து நான் நெடுந்தொலைவு விலகி வந்துவிட்டேன்” என்றபின் “உன்னுடன் நான் காமம் கொண்டால் அது என் ஆடிப்பாவையைப் புணர்வதுபோல பொருளற்றது. நீ கொண்டுள்ள இத்தோற்றம் இந்நகைப்பு இந்தச் சீண்டல் அனைத்துமே என் விழைவுகளிலிருந்து எழுந்து வெளியே திரண்டு நிற்பவை என்று நானறிவேன். எதிரொலியுடன் உரையாடுவதுபோல் அறிவின்மை பிறிதொன்றில்லை” என்றான்.

“ஆணவத்தின் உச்சத்தில் நிற்பவர்கள் காமம் கொள்வது தன்னுடன் மட்டுமேதான்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் “எனது ஆணவம் அத்தனை முதிரவில்லை போலும்” என்று சொல்லி புன்னகைத்தான். இயல்பாகவே அவர்களுக்குள் சொல்லாடல் அடங்கியது. இருபுறமும் நிரைவகுத்த மாளிகைகளின் நடுவே அவர்களின் களிறு முகில் பொதியென சென்றுகொண்டிருந்தது.

ஏன் உரையாடல் நிலைத்தது என அவன் எண்ணிக்கொண்டான். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே உரையாடல் தேய்ந்திறுவது எதனால்? சொல்லித்தீர்வதல்ல காமம். காமத்தை முகமாக்கி அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் வகுத்துக்கொள்கிறார்கள். அவ்வரையறைமேல் ஐயம்கொண்டு அதன் எல்லைகளை சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கோ ஓரிடத்தில் உள்ளிருக்கும் உண்மையைச் சென்று தொட்டுவிடுகிறார்கள். அது இருவரும் சேர்ந்து தொடும் உண்மை. ஆகவே இருவரும் சொல்லிழந்துவிடுகிறார்கள்.

அவள் “தங்களை இன்று அவையில் அரசர் சந்திக்கக்கூடும்” என்றாள். அவ்வாறு முற்றிலும் புதிய இடத்தில் அவள் தொடங்கியது அவன் எண்ணியது உண்மை என உணரச்செய்தது. “ஆம், எனக்கு செய்தி வந்தது” என்று அர்ஜுனன் சொன்னான். “அதற்குள் உங்களிடம் அவர் உரைக்கவேண்டிய அனைத்தையும் அவர்பொருட்டு பிறர் உரைத்திருப்பார்கள்” என்றாள் ஊர்வசி. இயல்பாக சந்தித்த நான்கு மைந்தர்களும் கணாதரும் பேசியவை அவன் நினைவில் எழுந்தன. அவை ஒரு திட்டத்துடன் சொல்லப்பட்டவை என்பதை அப்போதுதான் உணர்ந்து “ஆம்” என்றான்.

“உங்களை சந்திப்பதற்கு முன் நீங்கள் சிலவற்றை உணர்ந்திருக்க வேண்டுமென்று அவர் விழைகிறார்” என்றாள் ஊர்வசி. “நீயும் அதற்கென அனுப்பப்பட்டாயா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆமென்றே கொள்ளுங்கள்” என்று அவள் சொன்னாள். “சொல்” என்று அர்ஜுனன் சற்று எரிச்சலுடன் சொன்னான். “உங்களை நேற்று தோளணைத்து அழைத்துச் சென்ற மூத்தவர் பிறந்ததெப்படி என்றொரு கதை உண்டு, அறிந்திருக்கிறீர்களா?” என்றாள் ஊர்வசி. அவ்வினாவின் பொருளென்ன என்று உணரமுடியாமல் விழிசுருக்கி அவன் நோக்கினான்.

“விண்ணவர்க்கரசர் ஒருமுறை கிழக்கே இந்திரகீலமலைமேல் தன் தேவமகளிருடன் சோலையாடச் சென்றிருந்தார். அவ்வழியாகச் சென்ற சூரியனின் மாற்றுருவான தேர்ப்பாகன் அருணன் அக்களியாடலைக் கண்டான். அவர்களுடன் சேர்ந்து கொள்ளும்பொருட்டு தன் மாயத்தால் பெண்ணுருவம்கொண்டு அருணி என்னும் பெயருடன் அம்மலையில் இறங்கினான்.  கன்னியருடன் ஆடிய முதல் தேவர் அவர்களில் அருணியே அழகு நிறைந்தவள் என்று கண்டார். அவள் உளம்கவர்ந்தார். மின்படையோனின் மாயத்தால் காதல்நிறைந்தவளாக மாறிய அருணியும் அவருடன் காமத்திலாடினாள். அவ்வுறவில் பிறந்தவரே கிஷ்கிந்தையின் அரசனென வந்த பாலி” என்று ஊர்வசி சொன்னாள்.

“தொல்கவியின் காவியத்தில் அச்செய்தி உள்ளது” என்றான் அர்ஜுனன். “அக்கதை சுட்டும் செய்தி என்ன என்று பாருங்கள்” என்று ஊர்வசி சொன்னாள். “மாகேந்திர வேதம் திகழ்ந்த நாளில் கிழக்கின் தலைவனெனத் திகழ்ந்தவர் சூரியன். மகாவஜ்ரவேதம் எழுந்தபோது அவிகொள்ளும் உரிமைகளை பகிர்ந்தளித்த பிரம்மன் திசைகளை தேவர்களுக்குரியதாக்கினார். தெற்கு எமனுக்கும் வடக்கு குபேரனுக்கும் மேற்கு வருணனுக்கும் வடகிழக்கு ஈசானருக்கும் தென்கிழக்கு அனலவனுக்கும் வடமேற்கு வளிதேவனுக்கும் தென்மேற்கு நிருதிக்கும் அளிக்கப்பட்டது. கிழக்குத்திசை இந்திரனுக்குரியதாகியது.”

“கிழக்கின் தேவனாகிய சூரியனை அது சினம்கொள்ளச் செய்தது. இந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூசல் எழுந்தது. திசை தேவன் எவன் என்பதில் தேவர்களும் முனிவர்களும் குழம்பினர். இந்திரனுக்கு அளிக்கும் அவி தனக்குரியது என்று சூரியன் எண்ணினார். சூரியனுக்கு அவியளிக்கலாகாதென்று இந்திரன் ஆணையிட்டார். ஆயிரமாண்டுகாலம் அப்பூசல் நிகழ்ந்தது” என்றாள் ஊர்வசி.

“மகாநாராயண வேதம் எழுந்தபோது எட்டுத்திசைகளும் அதன் மையமும் விஷ்ணுவுக்குரியதே என்று அது கூறியது. அவியனைத்தும் முதலில் விஷ்ணுவுக்குச் சென்று அவர் அளிக்கும் முறைமையிலேயே பிறருக்கு அளிக்கவேண்டுமென அவ்வேதவேள்வியில் வகுக்கப்பட்டது. அது இந்திரனையும் சூரியனையும் சினம்கொள்ளச் செய்தது. அச்சினம் அவர்கள் இருவரையும் ஒன்றென இணைத்தது” என்றாள் ஊர்வசி. “அவ்விணைப்பின் விளைவாக இந்திரகுலத்திற்கும் சூரியகுலத்திற்கும் இடையே உருவான உறவே பாலியை உருவாக்கியது.”

அவள் சொல்லவருவதென்ன என அவன் எதிர்நோக்கி அமர்ந்திருந்தான். “இளைய பாண்டவரே, இந்திரன் மைந்தர் நீங்கள். உங்கள் மூத்தவராகிய கர்ணன் சூரியனின் மைந்தர். நீங்கள் இருவரும் ஒன்றாகவேண்டும் என்று உங்கள் தந்தை விழைகிறார். அதுவே அவர் உங்களுக்கிடும் ஆணை என்றும் சொல்வேன்” என்றாள். அர்ஜுனன் பேசாமல் கூர்ந்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தான். “உங்கள் பொது எதிரி மகாநாராயண வேதமே. அதன் விழுப்பொருளாகத் திரண்டு வரும் மெய்மையையே இளைய யாதவர் முன்னிறுத்துகிறார்.”

அர்ஜுனன் மெல்லிய பொறுமையின்மையை உடலசைவில் காட்டினான். அவன் கைமேல் கையை வைத்து “ஆம், உங்களுக்கு அவருடன் இருக்கும் உறவை நான் அறிவேன். உங்கள் தந்தை மேலும் அறிவார்” என்றாள். “ஆனால் மைந்தருக்கு தந்தையுடனான கடன் என்பது ஊழால் வகுக்கப்பட்டது. பிரம்மத்தின் விழைவையே ஊழென்கிறோம். அக்கடனிலிருந்து நீங்கள் விலகமுடியாது.”

அர்ஜுனன் “களிறு நிற்கட்டும்” என்றான். “பொறுங்கள், நான் சொல்வதை கேளுங்கள்” என்றாள் ஊர்வசி. அர்ஜுனன் களிறின் பிடரியில் தட்ட அது நின்று முன்வலக்காலைத் தூக்கியது. “அங்கு நிகழ்வது வேதங்களின் போர். நீங்கள் நின்றிருக்கவேண்டிய இடம் உங்கள் தந்தையின் தரப்பே” என்று அவள் சொன்னாள். அவன் யானையின் கால்களினூடாக இறங்கி திரும்பி நோக்காமல் நடந்தான்.

முந்தைய கட்டுரை‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா
அடுத்த கட்டுரைமதுரைக்காண்டம் -கடிதம்