’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51

[ 9 ]

இந்திரபுரிக்கு நடுவே ஆயிரத்தெட்டு அடுக்குகளில் பன்னிரண்டாயிரம் உப்பரிகைகளும் நாற்பத்தெட்டாயிரம் சாளரங்களும் கொண்டு ஓங்கி நின்ற வைஜயந்தம் என்னும் அரண்மனைவாயிலில் விரிந்த மஹஸ் என்னும் பெருமுற்றத்தின் நடுவே இந்திரனின் வெண்கொற்றக்குடை தெரிந்தது. அதன்கீழே அணிவகுத்து நின்றிருந்த ஏழு வெள்ளை யானைகள் கடல்நுரையலை போல காதுகளை ஆட்டி துதியசைத்தன. பனிமலையடுக்குகளுக்குமேல் மேரு எழுந்ததுபோல ஐராவதம் அவற்றின் நடுவே நான்கு பொற்கொம்புகளுடன் நின்றிருந்தது.

அதனருகே பன்னிரு அணிப்புரவிகள் கொடிகளுடன் நிற்க நடுவே பொன்னிறக் காதுகளும் குளம்புகளும் கொண்ட உச்சைசிரவம் நின்றது. ரம்பை, ஊர்வசி, மேனகை என்னும் தேவமகளிர் தலைமையில் அப்சரப்பெண்கள் மங்கலத்தாலமேந்தி இருநிரைகளாக நின்றிருக்க அவர்களுக்குப் பின்னால் தும்புருவின் தலைமையில் இசைகந்தர்வர்கள் கொம்புகளும் குழல்களும் முரசுகளும் முழவுகளும் மணிகளும் சல்லரிகளுமாக நின்றனர். அணிபடாம்களும் கொடிகளும் ஏந்திய தேவர்நிரைகள் அவர்களுக்குப் பின்னால் நீண்டன.

குன்றா இளமைகொண்ட சனகர் சனந்தனர் சனாதனர் சனத்குமாரர் என்னும் முனிமைந்தர்கள் தலைமையில் அமைச்சர்கள் இருபக்கமும் சூழநிற்க நடுவே தன் துணைவியான இந்திராணியுடன் முழுக்கவச உடையணிந்து மணிமுடி சூடி இந்திரன் நின்றிருந்தான். அவனுக்கு முன்னால் அவன் மைந்தன் ஜயந்தன் உருவிய வாளுடன் நின்றான். அவன் பின்னால் உடைவாள் ஏந்தி பிறிதொரு மைந்தனாகிய பாலி நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் மெய்க்காவலர்களாகிய இருபத்தேழு மருத்தர்களும் இடிபடைகள் ஏந்தி நான்கு வரிசைகளாக நின்றனர்.

மாதலியின் தேர் அணுக அணுக அவர்களின் எதிரேற்புநிலை விரிதிரை ஓவியம்போல நுட்பங்களுடன் அணுகி வந்தது. அர்ஜுனன் “யாருக்காக காத்திருக்கிறார்கள்?” என்றான். “இங்கு விழவு கூடுகிறதா என்ன?” மாதலி திரும்பி சிரித்தபடி “உனக்காகவே” என்றான். “தன் மைந்தனைப் பார்க்க மாளிகை வாயிலுக்கே எழுந்தருளியிருக்கிறார் அரசர்.” அர்ஜுனன் உளஎழுச்சியுடன் “எனக்காகவா?” என்றான். “தந்தை உலகாளலாம், மைந்தர் தந்தையை ஆள்கிறார்கள்” என்றான் மாதலி.

“நீ அறிந்திருக்கமாட்டாய். உன்னை அவர் வந்து தொட்டுத்தழுவி வருவதுண்டு. உன் மஞ்சத்தில் பறந்து தழுவிச்செல்லும் சாளரத்திரைச்சீலையாக, காடுகளில் தோளுரசிச்செல்லும் மலர்க்கிளையாக, கன்னம் தொட்டு பறந்துவிடும் பறவையிறகாக அவர் உன்னை தொடுவார். உன்னை பிறர் பாராட்டும் தருணங்களிலெல்லாம் பொன்னொளிர் புன்னகையுடன் உன் மேல் நின்றிருப்பார். பாலையில் நடந்து களைத்த உன் கால்களை வந்து தடவிச்சென்ற சருகு அவரே. மயங்கிக்கிடந்த உன்மேல் மழையென விழுந்து நீரூட்டியதும் அவரே” என்றான் மாதலி.

கலுழும் நெஞ்சுடன் கைகளைக் கூப்பியபடி அர்ஜுனன் தேரில் அமர்ந்திருந்தான். தேர் சென்று முற்றத்தில் நின்றதும் மங்கலஇசை முழங்கியது. வாழ்த்தொலிகள் எழுந்தன. “இந்திரமைந்தன் வாழ்க! இளைய பாண்டவன் வாழ்க! வில்விஜயன் வாழ்க!” மூன்று நங்கையர் தலைமையில் அப்ரசப்பெண்டிர் மங்கலத்தாலமேந்தி முன்னால் வந்து அர்ஜுனனை வரவேற்றனர். ஜயந்தன் ஏழு அடி எடுத்து முன்னால் வந்து உடைவாள் தாழ்த்தி “வருக, இளையவனே! இந்நகரும் அரசரும் உன் வரவில் மகிழ்கிறார்கள்” என்றான்.

அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடியே நடந்துசென்று முதலில் இந்திராணியின் கால்களைத் தொட்டு சென்னிசூடி வணங்கினான். இந்திரனை அவன் வணங்கப்போகும்போது அவன் தோள்களைத் தழுவி தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் விண்ணரசன். முனிவர்கள் அவர்களை மலரிட்டு வாழ்த்தினர். இந்திராணி “உன் தந்தையின் இல்லத்திற்கு வருக, மைந்தா!” என்றாள். இந்திரன் “நீ விழைவன அனைத்தும் இங்கு ஒருக்கப்பட்டுள்ளன. நீ எண்ணும் காலம் இங்கு வாழலாம். நீ விழையும் காலமென அதை மண்ணில் அமைத்துக்கொள்ளலாம்” என்றான்.

வாழ்த்தொலிகளும் இன்னிசையும் சூழ அவர்கள் அரண்மனையின் இடைநாழிகளினூடாக நடந்தனர். அர்ஜுனன் அதன் உருண்டு எழுந்த தூண்களையும் பொன்னூல்பின்னிய பட்டுப் பாவட்டாக்களையும் நோக்கியபடி நடந்தான். “எங்கோ பார்த்திருக்கிறேன் இவ்வரண்மனையை. என் கனவிலா?” என்றான். “ஆம், உன் கனவிலிருந்து எடுத்து உருவாக்கப்பட்டது இவ்வரண்மனை” என்றான் இந்திரன். அர்ஜுனன் நகைத்து “உங்கள் முகமும் அவ்வாறுதானா?” என்றான். “அல்ல, மாறாக என் கனவிலிருந்து எழுந்தது உன் முகம்” என்றான் இந்திரன்.

விழிகளை ஓட்டி அவ்வரண்மனையின் பொன்பட்டையிட்ட படிக்கட்டுகளையும் வளைந்த மேல்வளைவுகொண்ட மான்கண் சாளரங்களையும் பொற்குமிழ்கள் மின்னிய கதவுகளையும் நீர்நிழலென பாவை உடன்வந்த பளிங்குத்தரையையும் நோக்கிக்கொண்டு நடந்தான். வியப்புடன் “என் உளமயக்காகவும் இருக்கலாம் எந்தையே, இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகை இதைப்போலுள்ளது” என்றான்.  “ஆம், இதைப்போன்றதே அதுவும்” என்றான் இந்திரன். “இதை தன் கனவில் அவள் இளவயதில் கண்டாள்.”

“எங்ஙனம்?” என்றான் அர்ஜுனன். “மானுடர்கள் மூன்று வலைகளால் சேர்த்து பின்னப்பட்டுள்ளனர், மைந்தா” என்றான் இந்திரன். “குருதியின் வலையால். ஊழின் பெருவலையால். கனவுகளின் முடிவிலா வலையால்.” அர்ஜுனன் அங்கிருந்த சேடியரை நோக்கி “இவர்களின் முகங்களும்கூட அங்குள்ளவையே” என்றான். “ஆம்” என்று இந்திரன் நகைத்தான். “வருக, அரசவை கூடியிருக்கிறது!” என தோள்தொட்டு அழைத்துச்சென்றான்.

நீள்வட்ட அரசவை பதினாறாயிரத்துஎட்டு பெருந்தூண்களுக்குமேல் பருவுருக்கொண்ட வெண்ணிற வானம் என அமைந்த குவைக்கூரையால் மூடப்பட்டிருந்தது. அதிலிருந்து ஒளிரும் அருமணிகளையே சுடர்களாகக்கொண்ட செண்டு விளக்குகள் தொங்கின. அவ்வொளியில் துலங்கிய அவைப்பரப்பில் வலப்பக்கம் முனிவரும் இடப்பக்கம் பெண்டிரும் அமரும் பீடங்கள் இருந்தன. முகப்பில் அலைவளைவுக்குள் வளைவென அமைந்த பீடங்களில் தேவர்களும் சித்தர்களும் குஹ்யர்களும் வித்யாதரர்களும் கிம்புருடர்களும் கின்னரரும் கந்தர்வர்களும் யட்சர்களும் அமர்ந்திருந்தனர்.

“இதுவும் இந்திரப்பிரஸ்தம் போன்றதே” என்றான் அர்ஜுனன். அவனருகே நின்றிருந்த பாலி “நான் இங்கு வந்தபோது கிஷ்கிந்தையின் அவையென இது தெரிந்தது. தெரிந்ததன் வடிவிலேயே நீ இதைப் பார்க்கமுடியும், இளையோனே. தெரிந்தது உதிர்ந்து தெளிவது எழ நீ செல்லவேண்டிய தொலைவு சில உண்டு” என்றான். ஜயந்தன் “வருக இளையோனே, உனக்கென நிகர்பீடம் இடவேண்டுமென எந்தை ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “நிகர்பீடமா?” என்று அர்ஜுனன் திரும்பி நோக்க பாலி “தலைமேல் வைத்துக்கொள்ளவே தந்தை விழைவார். முறைமை நோக்கியே நிகர்பீடம்” என்றான்.

சனகரும் சனாதனரும் சனந்தனரும் சனத்குமாரரும் வந்து அர்ஜுனனை அழைத்துச்சென்று அரசமேடையில் இந்திரனின் அரியணைக்கு நிகராக போடப்பட்டிருந்த பிறிதொரு அரியணையில் அமர்த்தினர். வாழ்த்தொலிகள் சூழ அவன் அதில் அமர்ந்ததும் இந்திரன் எழுந்து வந்து தன் மணிமுடியை எடுத்து அவன் தலையில் சூட்டினான். முனிவர்கள் மலர்வீசி வாழ்த்த அவையமர்ந்தவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “உன் வருகையால் மீண்டும் மைந்தனைப் பெற்ற இளந்தந்தையின் உணர்வுநிலையை அடைந்தேன்” என்றான் இந்திரன்.

பின்னர் உணர்வுமிகுதியால் அவனை கைபற்றி இழுத்து தன் தொடைமேல் அமரச்செய்தான். அர்ஜுனன் நாணி எழமுயல அவன் தன் வலிய கைகளால் மைந்தனை இறுகப்பற்றி அமரச்செய்தான். அவையமர்ந்தவர்கள் உரக்க நகைத்தனர். இந்திராணி அவன் முகத்தை தன் கைகளால் வருடி “நாணும்போதே மைந்தர்கள் அழகர்” என்றாள்.

தும்புரு கைகாட்ட அவரது இளையோரான பகு முழவுடனும் ஹஹ யாழுடனும் ஹுஹு குழலுடனும் வந்து இசைமேடையில் அமர்ந்தனர். இசையெழத்தொடங்கியதும் தேவநடனமகளிரான ஊர்வசியும் ரம்பையும் திலோத்தமையும் ஆடல்தோற்றத்தில் வந்து நின்றனர். தொடர்ந்து கிருதாசியும் பூர்வசித்தியும் ஸ்வயம்பிரபையும் வந்தனர். மிஸ்ரகேசியும் தண்டகௌரியும் வரூதினியும் பின்னர் வந்தனர். தொடர்ந்து கோபாலி, ஸகஜன்யை, கும்பயோனி, பிரஜாகரை, சித்ரலேகை ஆகியோர் வந்து பின்னின்றனர்.

இனிய குரலுள்ள ஸகை பாடத்தொடங்கியதும் அவர்கள் நடமிட்டனர். இசைவழி கைகள் செல்ல, கைவழி கண்கள் செல்ல, கால்வழி தாளம் எழுந்து உடலென்றாக, கண்வழி நோக்கும் இசையென்றாயினர் அம்மகளிர். மயில்கழுத்துகள் அன்னத்திரும்பல்கள் மான்விழிவெட்டுகள் கன்றுத்துள்ளல்கள் மலர்க்கிளையசைவுகள் கனிக்கொடி ஊசல்கள். பருவடிவு கொண்டவை அசைவிலேயே உயிர்கொள்கின்றன. ஆடலிலேயே அசைவு முழுமைகொள்கிறது.

ஆடுவதே அழகென்றாகிறது. இதோ கைநீட்டி அணுகுகிறது மதலை. துள்ளி ஓடி ஒளிந்து சிரிக்கிறது இளமை. இடையொசிய தயங்குகிறது கன்னிமை. முலைபெருத்து வளைகிறது தாய்மை. மகிழ்கிறது காதல். உள்ளம் நெகிழ்கிறது காமம். உள்ளுருகி வழிகிறது கனிவு. உடலில் நிகழ்கின்றன ஐம்பருவின் அசைவுகளனைத்தும். பாறையென உருள்கின்றன யானைகள். அனலென பாய்கின்றன புலிகள். காற்றெனச் சுழல்கின்றன பறவைகள். நீரென ஓடுகின்றன நாகங்கள். பெண்ணுடலில் நிகழ்கின்றன உடலென்றான அசைவுகள் அனைத்தும். இளயானைத் தளர்நடை. மயிலாடும் மெல்நடை. ஏறுநடை. சிம்மத்தின் எழுநடை. பாம்பு வழிதல். பருந்து எழுதல். நாரை அமைதல். மீன்கொத்தி விழுதல். சிட்டு நீந்தி நிற்றல்.

தலைக்கோலியாகிய ஊர்வசி கோலைத் தூக்க அனைத்து அசைவுகளும் அமைந்தன. ஊர்வசி “அவைக்கு வந்த மாவீரரே, முதிர்ந்த நுண்ணறிவுகொண்டவர் என்று உம்மைப் பற்றி சொன்னார்கள் இங்குள்ள முனிவர். ஆணென்றும் பெண்ணென்றும் காதலை அறிந்தவர் நீங்கள் என்றுரைத்தனர். இங்கே எங்கள் ஆடலில் ஒரு வினாவெழுகிறது. உங்கள் விடை எங்களுக்கு தெளிவு அளிக்கட்டும்” என்றாள். மேனகை “விடை எங்களுக்குத் தெரியும்” என நகைத்தாள்.

திலோத்தமை “பிழையான விடை என்றால் நீங்கள் காமத்தில் எங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும்” என்றாள். கிருதாசி “இல்லையேல் நாங்கள் உங்களுக்கு பணிவிடை செய்வோம்” என்றாள். அர்ஜுனன் நகைத்துக்கொண்டு பேசாமலிருக்க “என் மைந்தன் அவன். போர்க்களத்திலும் காமக்களத்திலும் அவனை விஞ்சுபவர் இல்லை. விடை சொல்வான்” என்றான் இந்திரன். அவை கலைந்து நகைத்தது. தண் என முழவொலிக்க ஊர்வசி தலைக்கோலை மீண்டும் தூக்கினாள். தாளம் நடைமாறியது. நடனம் தொடங்கியது.

[ 10 ]

காமநிறைவை கண்டடைவதற்கென்றே வாழ்ந்த அரசனொருவன் இருந்தான். அவனை பங்காஸ்வன் என்று அழைத்தனர். கடலோரச் சிறுநாடாகிய கமலத்வஜத்தின் தலைவன். தந்தை நிறைத்துச் சென்ற கருவூலம் கொண்டிருந்தான். மழை நெறிநின்றதாலும் நிலம் சுவைநிறைவு கொண்டிருந்ததாலும் கதிர்வழிப் பாதை நாட்டின் மேல் அமைந்திருந்ததாலும் எழுவகைக் காற்றுகள் சூழும் திசையில் மலைகள் திறந்திருந்ததாலும் அவன் நாட்டில் வளம் குன்றவே இல்லை. அலைகடலால் அரணிடப்பட்ட அவன் நகருக்கு எதிரிகள் இருக்கவில்லை. எனவே இளமையிலேயே காமமன்றி பிறிதொரு நாட்டமில்லாதவனாக இருந்தான்.

உடலை உணர்ந்த முதல் நாளிலேயே அரண்மனை மகளிரால் காமம் கற்பிக்கப்பட்டான். பின்னர் உடல்களினூடாக, அசைவுகளினூடாக, உணர்வுகளினூடாக, கனவுகளினூடாக, காமத்தின் வண்ண மாறுதல்களை தொட்டுத் தொட்டு அறிந்தபடி நாள் என நாழிகை என கணமென காலத்தைக் கடந்தான். பருவத்திற்கு ஒரு மாளிகை கட்டினான். அதைச் சூழ்ந்து மலர்வனங்கள் எடுத்தான். சுனைகளும் அருவிகளும் இசைமண்டபங்களும் கொடிமண்டபங்களுமென காதலுக்கான அனைத்தும் அங்கு அமைந்தன.

பொற்கிழிகளுடன் அமைச்சர்களையும் ஒற்றர்களையும் பாரதவர்ஷமெங்கும் அனுப்பி அழகுமிக்க மகளிரை தன் அரண்மனைக்கு கொண்டுவந்தான். முறித்தமஞ்சள் என மின்னிய தோலும் நீர்த்துளிக் கண்களும் கொண்ட குருவிபோன்ற காமரூபத்துப் பெண்கள். சுண்ணப்பளிங்குச் சிலைபோன்ற ஓங்கிய உடல்கொண்ட காந்தாரநாட்டுப் பெண்கள். செஞ்சந்தன வண்ணம்கொண்ட  திரிகர்த்தநாட்டவர். சுடுமண்சிலை நிறமும் சிற்றுடலும் கூர்முகமும் கொண்ட விதர்ப்பநாட்டுக் கன்னியர். அகன்ற மூக்கும் பெரிய உதடுகளுக்குள் பரந்த பற்களும் கொண்ட தண்டகாரண்யப் பெண்கள். கொழுவிய கன்னங்களும் கமுகுப்பாளை நிறமும் கொண்ட திருவிடத்துப் பெண்கள். கருங்கல்சில்லென நீர்மை மின்னிய நீண்ட விழிகளும் ஒளிரும் பற்களும் கருங்குருத்துத் தோலும் கொண்ட தமிழ்நிலத்துப் பெண்கள்.

பெண்கள் வந்துசேரும்தோறும் அழகென்பதன் இலக்கணம் மாறிக்கொண்டிருந்தது அவனுள். அழகை அறிந்த விழிகள் ஒவ்வொரு அழகுக்குள்ளும் அழகின் நுண்வண்ணங்களை காணலாயின. யானைமுகப்படாம் என மெல்ல அசைந்து நடந்தனர் காந்தாரியர். விட்டிலெனத் தாவினர் காமரூபர். காற்று கொண்டுசெல்வதுபோல நடந்தனர் விதர்ப்பினியர். அலைகளிலெழுந்தாடும் மலர்மொட்டுபோல திருவிடர். மானெனத் தயங்கினர் தமிழ்க்கன்னியர். நடக்கையில் ஒருத்தி நிற்கையில் பிறிதொருத்தி. அஞ்சி ஆடைசீரமைக்கையில் முற்றிலும் புதிய ஒருத்தி. முடிதிருத்தி திரும்புகையில் எங்கிருந்தோ வந்தமரும் ஒருத்தி. கண்கனிந்து ஊழ்கத்திலாழ்பவள். அவர்களனைவரையும் கடந்த வேறொருத்தி. ஒரு பெண்ணில் கடந்துசெல்லும் ஓராயிரம் பெண்கள். தெய்வமென்பது ஒரு வாசல் மட்டுமே. தெய்வமென நிறைந்திருக்கும் பெருவெளி பீரிடும் மடை. பெண்ணென வந்த தெய்வம் புவி நிறைத்தாள்கிறது.

பட்டுச்சிறகடித்தன சில விழிகள். சில விழிகள் காற்றில் கனன்றன. சில நகைத்து ஒளிர்ந்தன. சில நாணி மயங்கின. சில ஓரக்கூர் கொண்டிருந்தன. நேர்நின்று நோக்கின சில. சிவந்துருகிச் சொட்டிய பொற்துளியென்றாயின அவை. நோக்கு கொள்ளமுடியுமா உடல்? விழியை அள்ளி உடலெங்கும் பூசி மயங்கும் பெண்கள். தொடுவதற்கு முன் தொடுகையறியும் தோல்பரப்பில் வந்து காத்து நின்றிருக்கும் நுண்மை. முல்லைச்சரப் புன்னகைகள். பொரிபொங்கும் சிரிப்புகள். உடல்குலுங்கும் அலைநுரைப்புகள். உள்ளே தேங்கி கன்னச்சிவப்பென கண்கசிவென உதட்டுச்சுழிப்பென மெல்லசைவென கசியும் மென்னகைகள்.

எழுந்தவை குழைந்தவை கரந்தவை கனிந்தவை. ததும்புகையில் குலுங்குகையில் தொட்டுச்சிவக்கையில் அளித்து எஞ்சி அப்பால் நின்று அதுவல்ல நானென்று சொல்லி சிவந்தணைபவை. அழைப்பென்றே ஆன மென்மை. விலக்கி விழிசீறுகையில் அணைக்க விரிந்தன தோள்கள். எவையுறங்கும் வயிறு? எதுவென்றான சுழிப்பு? நெகிழ்ந்தவை இறுகுவதெப்போது? கனன்று சிவந்து உருகி பின் குளிர்ந்து ஈரம்பூத்து அவை அமையும்போது தொடுகையை விழையாது விலகுவது ஏன்? அறிந்தறிந்து ஆளலாகுமா? அறியாச்சுனைகளில் ஆழம் மிகுகிறது. இன்சொல். பெரும்பாறை விரிசலில் கசியும் ஒருதுளி. உள்ளுறைப் பேரமைதியின் ஒலி. ஒவ்வொருவருக்கும் ஓர் ஒலி. பொருளொன்றே ஆன சொற்களின் களஞ்சியம். பெண்ணென்பது விழைவு சென்றுபடியும் அருமணி. அழகென்பது அதில்பட்டு நூறுமேனி பெருகி மீளும் விழைவு.

பின்பு பெண்ணெல்லாம் அழகென்றாயினர். மானும் மயிலும் போலவே பன்றியும் காகமும் அழகெனத் தோன்றின. தசையால் அழகில்லாதவை அசைவால் அழகுகொண்டு நிகர் செய்தன. அசைவாலும் அழகுகொள்ளாதவை வேட்கையால் அழகென்றாயின. அனல்கொள்கையில் அனைத்து உலோகங்களும் அழகே. அழகென்று ஈர்ப்பது அழகென்றே எஞ்சி அழகெனச் சூழ்வது விழைவு. ஆயிரம் நா கொண்டது. பல்லாயிரம் கண் கொண்டது. லட்சம் செவி கொண்டது. கோடி மெய் கொண்டது. பூக்கும் மரம் அழகு. பூக்கவிருக்கும் மரம் உள்ளுறை அழகு. இலையுதிர்க்கையில் அதன் துயர் அழகு. காத்திருக்கும் அதன் தவம் அழகு. முதல்தளிர் கொள்கையில் அது கொள்ளும் மலர்வு பேரழகு.

நூறு மனைவியர் அவனுக்கிருந்தனர். ஆயிரம் காமமகளிர் உடனுறைந்தனர். ஒரு மலர்போல் பிறிதொன்றிலை என்றும் மலரனைத்தும் ஒன்றே என்றும் மாயம் காட்டும் இயற்கையால் விழித்திருக்கும் கணமெல்லாம் அவன் அலைக்கழிக்கப்பட்டான். அறியுந்தோறும் பெருகும், பெருகுந்தோறும் விசை கொள்ளும், விசைகொள்ளும்தோறும் இனிமை கொள்ளும் பசி. ஈரத்திலெழும் எரி. அவனுடலை எரித்து அழித்துக்கொண்டிருந்தது அது. வெறியாட்டு கொண்ட பாணனின் கையில் அமைந்த முழவுத்தோலென நாளும் தளர்ந்தது அவன் நரம்பிழைப்பரப்பு. மீளமீள அதை முறுக்கி கட்டை சேர்த்து முடுக்கி நிறுத்தினர் அவை மருத்துவர். மீளமீளக் குறைவது அன்னம். மீண்டும் மீண்டுமென எழுவது அனல். அன்னத்தை உண்டு எழும் அனலுக்கு அன்னமே எல்லையென்றாகிறது.

மெல்ல அவர்களின் கைத்திறன் எல்லை கண்டது. தன்னுடலும் தளர்வு கொள்ளும் என்று ஒருநாள் உணர்ந்தபோது இறப்பை எதிர்கண்டவன் போல அஞ்சி எழுந்து உடல் நடுங்கினான். அவன் முன் விழித்து காத்துக்கிடந்தாள் அந்தப் பெண். “ஆம்” என்று அவன் அவளிடம் சொன்னான். “ஆம், இதுவும் உடலே. ஐம்பருப்பொருள் இணைந்து உயிரனலில் எரிவது.” அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “எழுந்து செல்க!” என்றான். அவற்றிலுள்ளது என்ன? பெண் ஆணை வெல்லவே விழைகிறாள். வென்று செல்கையில் ஏன் துயர்கொள்கிறாள்?

காமமென்பது கொள்வதல்ல என்றும், வெல்வதல்ல என்றும், பகிர்வதுமல்ல என்றும் அவன் உணர்ந்த இளமுதிர் அகவை அது. செவிப்பரப்பில் பால்நுரையென நரை வந்தமைந்திருந்தது. கண்ணிமைகளுக்குக் கீழே நிழல் தீற்றப்பட்டிருந்தது. காமமென்பது மூழ்குதலே என்றும் மீளாதிருத்தலே என்றும் முனைகொள்ளலே என்றும் அறிந்து முதலடி எடுத்துவைத்த நாள் அது. முதல் வாயிலை தட்டினான். அப்பால் வந்து தாழ்மேல் வைக்கப்பட்ட கையை உணர்ந்தான். அங்கு எழும் மூச்சை கேட்டான். அங்கு நின்றிருந்தாள் காமக்கொடி, காமவிழியள், காமக்கன்னி, காமக்கடலி.

நெஞ்சுடைந்து நடைதளர இடைநாழியில் அவன் ஓடினான். காமினி, காமவல்லி, காமாக்‌ஷி, காமிகை, காமாம்பரை. அவன் நெஞ்சு கூவிய சொற்களை வாய் அரற்றியது. பித்தனைப்போல கைவிரித்துக் கூச்சலிட்டபடி அவை மருத்துவர்களின் மருத்துவசாலைக்குள் நுழைந்தான். “பூட்டுக என் நாணை… மருத்துவர்களே, மீட்டுக என் உடலை! என் நரம்புகளில் அனல் பாய்ச்சுக! என் குருதி மின் கொள்க!” என்றான். “இன்றே, இப்போதே… ஆம், இக்கணமே” என்று வீரிட்டான்.

மருத்துவர்கள் அஞ்சி பின்னடைந்தனர். தலைமை மருத்துவர் பிருங்கர் துணிந்து முன்னால் வந்து “அரசே, உள்ளமென்பது ஒரு நுண்மை. உடலோ பருண்மை. உடலில் மட்டுமே உள்ளம் நின்றாகவேண்டும் என்பதும் உள்ளத்தால் மட்டுமே உடல் அறியவும் ஆகவும் இயங்கவும் கொள்ளவும் முடியுமென்பதும் தெய்வங்கள் தங்களுக்கு தாங்களே இட்டுக்கொண்ட ஆணை. அதை நாங்கள் மீற இயலாது” என்றார். “மருத்துவர் முடிவில் தோல்வியடைந்தாக வேண்டிய ஊழ் கொண்டவர் என்பது மருத்துவத்தின் முதல்நெறி, அரசே” என்றார் முதுமருத்துவரான கிருபாகரர்.

“ஒவ்வொரு தோல்வியும் மருத்துவத்தை மேன்மைப்படுத்துகிறது. அது போரிடுவது எப்பெருவல்லமையுடன் எனக் காட்டுகிறது” என்றார்  சங்கரர் என்னும் மருத்துவர். “மருந்தில் வாழும் நுண்மை உடலுள் அமைந்த நுண்மையுடன் உரையாடும் தருணமொன்று உண்டு, அதை நோக்கியே மருத்துவம் இயங்குகிறது. அந்நுண்புள்ளி விலகிச்செல்லுமென்றால் மருந்துகள் பயனற்றவையே” என்றார் சூத்ரகர். “இங்குள்ள அனைத்து இறப்புகளும் மருந்துகளை வென்று நிகழ்பவையே” என்றார் சபரர். “சிதையில் எழுந்தாடும் அனலால் மருத்துவர்கள் வாழ்த்தப்படுகிறார்கள் என்கின்றன எங்கள் நூல்கள்” என்றார் சம்பவர் என்னும் இளமருத்துவர்.

அச்சொல் அனல் என வந்து சுட சீறி வாளை உருவி அவர்களை வெட்டச் சென்றான் பங்காஸ்வன். “மூடர்களே, துரத்தப்பட்ட எலிபோல ஆயிரம் சுவர்களில் முட்டி மோதி திசையுலைந்து நான் வாழ்க்கையை வீணடித்தேன். இன்றுதான் என் வழியை கண்டுகொண்டேன். இத்தருணத்தில் என் உடல் தளர்கிறது என்றால் அது ஊழ். அவ்வூழை வென்று மறுபக்கம் காணவே உங்களை இங்கு அழைத்திருக்கிறேன்” என்று அலறினான். நெஞ்சிலும் தோளிலும் அறைந்தபடி “நான் வென்றாகவேண்டும். என் உடல் எழுந்தாகவேண்டும். இல்லையேல் இக்கணமே உடல்துறப்பேன்” என்றான்.

“அரசே, உங்கள் உடலனலை மூட்டும் நூறு மருந்துகள் எங்களிடம் இருந்தன. நூறாவது மருந்தும் சென்ற ஒரு மண்டலத்துடன் முடிந்தது. இனி மருந்தென ஏதுமில்லை” என்றார் தலைமை மருத்துவர். நோக்கி சில கணங்கள் நின்று நாண் இழந்து தளர்ந்து  தள்ளாடிப் பின்னடைந்து பீடத்தில் விழுந்து அமர்ந்து விம்மி அவ்விம்மலோசையால் உளமுருகப்பெற்று தலையை அறைந்துகொண்டு அவன் அழுதான். “வீணடித்துவிட்டேன். இதுவரை நானறிந்ததெல்லாம் காமமே அல்ல. இன்றே அறிந்து விழித்தேன். இனி காமத்தை அறியலாகாதென்றால் இலக்கெட்டாத அம்பென வீணில் விழுந்தவனாவேன்.”

இமைகளில் சிலிர்த்து நின்ற கண்ணீருடன் நிமிர்ந்து அவர்களை நோக்கி சொன்னான் “காமம் கரிய பேரன்னை ஒருத்தியின் சிறுவிரல் மோதிரம். மும்முறை புவியை சுழற்றிக்கட்டும் நாகம் அது. மருத்துவர்களே, அது நுகர்வல்ல, களியாட்டல்ல. தவம்! ஆணவம் கலந்திருக்கும்வரை தவமும் களியாட்டே. ஆணவம் அழிந்து திளைக்கையில் களியாட்டும் தவமே. நான் ஈடேறும் வழி இதுவே. இதற்கு என் உடல் ஒப்பவில்லை என்றால் இருந்து பயனில்லை.”

அழுது மெல்ல அமைந்தபோது அக்கணத்தில் விரிந்த வெறுமையின் எடைதாளாது உளம் பொங்க பாய்ந்து தன் உடைவாளை எடுத்து கழுத்தை வெட்டப்போனான். அரண்மனை வைதிகர் சலஃபர் பாய்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “அரசே, பொறுங்கள்! உடலை வெல்வதற்கு ஓர் எல்லையுண்டு. ஏனெனில் அது பருவடிவம் கொண்டது. உயிரென அமைந்ததற்கு எல்லையே இல்லை. ஏனெனில் அது விண்ணின் துளி. வேள்விகளால் வெல்லத்தக்கதே விண். இதற்கென வேள்வியொன்றுண்டா என்று வினவுவோம்.”

வாளை உதிர்த்து இமைமயிர் ஒட்டிய கன்னங்களுடன் இளமைந்தன் என விதும்பிய இதழ்களுடன் அரசன் கேட்டான் “இதற்கென்றொரு வேள்வியா? இருக்கிறதென்று நீர் அறிவீரா?”  சலஃபர் “இல்லை. இதுவரை இதற்கென்று எவரும் வேட்டதில்லை. ஆனால் இப்புவியில் மானுடர் விழைவு தேடுவது எதற்கும் வேதத்தில் வழி உண்டென்றே என் முன்னோர் சொல்லியுள்ளனர். ஆயிரம் வேள்வி நிகழ்த்தி நூறு அகவை திகைந்து இல்லத்தில் அமர்ந்திருக்கிறார் முதுவைதிகரான எந்தை, அவரிடம் வினவுகிறேன்” என்றார்.

மறுநாள் சலஃபர் முகம்மலர்ந்து வந்து வணங்கி “அரசே, ஒரு நற்செய்தி உரைக்க வந்தேன். தங்கள் வினாவை தந்தையிடம் உரைத்தேன். முன்பு மாமன்னர் யயாதி இயற்றிய பெருவேள்வி ஒன்று உள்ளதென்றார். அதன் பெயர் இந்திரதுவஷ்டம். விழைவுக்கு இறைவனை வேட்டு வேள்விப் பந்தலில் நிலைமரத்தில் அவனை எழச்செய்து அவனிடம் அருட்சொல் பெறுவோம். விண்ணனைத்தையும் ஆள்பவன், மண்ணெல்லாம் முளைத்தெழும் முடிவிலா வீரியம் கொண்டவன், இந்திரனே, காமத்தின் தெய்வம்” என்றார். “அவ்வாறே ஆகுக!” என்று அரசன் ஆணையிட்டான்.

தலைக்கோலேந்தி வந்து ஆடிநின்ற ஊர்வசி இனிய குரலில் ஓங்கி சொன்னாள் “காமநிறைவுக்கென இந்திரதுவஷ்டமெனும் வேள்வியை எடுத்தான் அரசன். காமநிறைவே கொள்ளஇயலாதவனே காமத்தைக் காக்கவேண்டுமென எண்ணினான். மானுடர் தெய்வங்களை பகடைக்காய்களென வைத்தாடுகிறார்கள். தெய்வங்களுக்காக இரங்குக! தெய்வங்களை வாழ்த்துக!” இந்திரன் நகைத்து தன்தொடையில் தட்டினான். அவை முழுக்க சிரிப்பொலி பரவியது.

முந்தைய கட்டுரையோகியும் மூடனும்
அடுத்த கட்டுரைகன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்