சிறுகதைகள் என் மதிப்பீடு -6

download (1)
அனோஜன்

 

எழுதத் தொடங்குபவர்களின் முக்கியமான சிக்கல்களில் இறுதியாக ஒன்றைச்சொல்லவேண்டும். ஒரு சூழல் உருவாக்கி நிலைநிறுத்தி வைத்திருக்கும் பொதுவான உணர்வு நிலைகளுக்குள், அழகியலுக்குள், கருத்தியலுக்குள், வடிவங்களுக்குள் சென்று விழுவது அது. இது விகடன் குமுதம் போன்ற பெரிய இதழ்களில் மட்டுமல்ல, காலச்சுவடு, உயிர்மை போன்ற சிற்றிதழ்களுக்கும் பொருந்தும்.

இதழ்கள் இருவகையில் பொதுப்போக்கை உருவாக்குகின்றன. ஒன்று, சமூகத்தில் இன்றிருக்கும் பொதுவான உணர்வுநிலைகளும் கருத்துநிலைகளும் இவற்றினூடாக இயல்பாக வெளிப்படும் இன்னொன்று இவ்விதழ்களுக்கு இருக்கும் தேர்வுமுறையினால் பொதுவான சில போக்குகள் இவ்விதழ்கள் வழியாக வெளிப்பட்டு அவையே இன்றையபோக்கு என நிலைநிறுத்தப்படும்.

எண்பது தொண்ணூறுகளில் வெளிவந்து கொண்டிருந்த கணையாழி சிற்றிதழின் கதைகளை இப்போது எடுத்துப்பார்த்தால் தொண்ணூற்றொன்பது விழுக்காடு கதைகள் கணையாழிக் கதைகள் என்ற அடையாளத்திற்குள் நிற்பதைப் பார்க்கலாம். அவற்றின் பொது அம்சங்களை இப்படிச் சொல்லலாம். பெரும்பாலும் அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டவை அவை. நகர்ப்புற நடுத்தர வர்க்கம் அவற்றின் கதைப்புலமாக இருக்கும். அன்றாட வாழ்க்கை சார்ந்த ஒரு கதைக்கருவைக் கொண்டிருக்கும். உணர்வுகளை குறைத்து சொல்ல முயன்றிருக்கும். புறவயமான அறிக்கையிடும் நடை கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் சைக்கிள் தொலைந்து போவது திரும்பிக்கிடைப்பது போன்ற விஷயங்களை எழுதும் கதைகளாக கணையாழி நிரம்பி வழிந்தது.

கணையாழியில் இருபதாண்டு காலத்தில் எழுதிய எழுத்தாளர்களின் பட்டியல் ஒன்றை போட்டால் ஐந்தாறு எழுத்தாளர்கள் மட்டுமே அந்த பொதுப்பரப்பிலிருந்து எழுந்து மேலதிகமாக எதையாவது அடைந்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இன்று பெயர் சொல்ல முடிந்த எழுத்தாளர்களாக நீடிக்கிறார்கள். அவ்வாறு எழுத்தாளராக நீடிக்கும் அனைவருமே ஒருவகையில் கணையாழியின் பொதுப்போக்கை நிராகரித்து தங்களுக்கான எழுத்துமுறையை உருவாக்கிக் கொண்டார்கள்.

இன்று உயிர்மைக்கு என்று ஒரு எழுத்து முறை உருவாகி வந்துள்ளது. கொஞ்சம் தளர்வாக உயிர்மைக்கதைகள் என்றே அவற்றை வரையறுக்கலாம். சற்று கற்பனாவாதம் கலந்த காமச்சித்தரிப்பு, அன்றாட வாழ்க்கையைப்பற்றிய ஒழுக்கஎதிர்ப்பு நோக்கு, உச்சம் என எதுவும் நிகழாது சித்தரிப்பாகவே சென்று முடியும் வடிவம் அல்லது உருவகத்தன்மை ஆகியவை இந்தக்கதைகளின் மாதிரிவடிவங்கள். உண்மையில் இக்கதைகளை உயிர்மையே உருவாக்கி எடுத்தது என்று எண்ணத் தோன்றுகிறது. தொடக்க காலத்தில் அதில் எழுதிய ஜே.பி.சாணக்யா போன்ற படைப்பாளிகள் இதற்கான முன்வடிவை அவ்விதழ்களுக்கு அளித்தார்கள். பின்பு அந்தப்பாணியில் எழுதும் கதைகளையே அவர்கள் தொடர்ந்து பிரசுரித்து அதையே மேலும் எழுத்தாளர்கள் எழுதச்செய்தனர்.

அச்சில் வெளிவரும், வாசிக்கப்படும் என்பதனாலேயே இளமெழுத்தாளர்கள் அதை எழுதினர். இன்று இளம் எழுத்தாளர்கள் சென்று ஒட்டிக் கொள்ளும் ஒரு பிசினாக அது அமைந்துள்ளது. அவ்வாறு வெளிவரும் கதைகளில் மிகச்சில கதைகளுக்கே ஏதேனும் இலக்கிய மதிப்பு உள்ளது. முன்பு தீவிரமான அரசியல் செய்திகளை வெளியிடும் நான்மடிப்பு இதழ்களில் கூடவே பாலியல்சுவை கொண்ட ஒரு கதையை வெளியிடும் வழக்கமிருந்தது. உயிர்மை சிறுகதை வடிவை அதற்காக பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் இன்றைய வாசகனுக்கு எழலாம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் கூட இந்த வகையான எழுத்து முறை ஒரு பொதுப்போக்காக எழுந்து வந்துள்ளது. இதற்கான காரணங்கள் பல இருக்கலாம். உண்மையிலேயே இன்றைய இளைய தலைமுறைக்கு பாலியல் சித்தரிப்பும் ஒழுக்கமீறல் நோக்கும் அணுக்கமானதாக இருக்கலாம். ஆண் பெண் உறவுக்கப்பால் அவர்களுக்கு சொல்வதற்கோ தேடுவதற்கோ எதுவும் இல்லாமல் இருக்கலாம். இதற்கப்பால் ஒர் அரசியல் காரணத்தைக் கூட அதற்கு யோசித்துப்பார்க்கலாம். 1990- களுடன் இடதுசாரிக் கருத்தியல் மீதான அறிவுத்தள நம்பிக்கை சரிந்ததன் வெற்றிடம் இப்போக்கை உருவாக்கியதா என்ன?

அதுவரைக்கும் தமிழிலக்கியத்தின் புறவயப்பார்வையை, பொதுவான அரசியல்நோக்கை தீர்மானித்திருந்தது இடது சாரி அணுகுமுறைதான். சமூகச்சித்தரிப்பை, வாழ்க்கையின் அன்றாடத் தருணங்களை சித்தரிப்பதனூடாக அமைப்பை ஏழைகளுக்கு மேலும் நீதி கிடைக்கும் ஓர் இடம் நோக்கி நகர்த்த முயலும் ஒருவனாகவே எழுத்தாளன் அன்றிருந்தான். சோவியத் ருஷ்யா என்னும் தொன்மம் 1990களில் சரிந்ததுமே அதுவரை நம்சூழலில் மிகப்பெரிய ஒருபொதுப்போக்காக இருந்து வந்த முற்போக்கு எழுத்து கரைந்து வடிவிழக்கத் தொடங்கியது.முன்னோடியான முற்போக்கு எழுத்தாளர்கள் கூட அகவய உலகத்திற்குள்ளும் உறவுச் சிக்கல்களுக்குள்ளும் சென்றனர். கந்தர்வன், ச.தமிழ்செல்வன், பவா.செல்லத்துரை போன்றவர்கள் அதில் குறிப்பிடப்படும் வெற்றியையும் அடைந்தனர்.

இப்போக்கின் அடுத்த கட்டமே உருவாகி வந்த இளம் எழுத்தாளர்கள் அகத்துறை சார்ந்த எழுத்துக்களை மட்டுமே எழுதுவதாக மாறியிருக்கலாம். அகத்துறை எழுத்து இயல்பாக ஒழுக்கம் சார்ந்த வினாக்களை எழுப்பும். ஒழுக்கமில்லா உளநிலை ஒன்றை நோக்கி கொண்டு செல்கிறது இன்றைய உலகமயமாக்கக் காலம். இவற்றுக்கான எல்லா சமூகவியல், அரசியல், உளவியல் விளக்கங்களை அளிக்கும் போது கூட தனக்கெனத் தனியாளுமை கொண்ட எழுத்தாளன் இப்பொதுப்போக்கின் ஒரு பகுதியாக ஒலிக்கமாட்டான் என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எச்சூழலிலும் எது அனைவராலும் எழுதப்படுகிறதோ எது அனைவராலும் விரும்பப்படுகிறதோ அதை எழுதாமல் தனக்கென ஒரு குரலும் பாதையும் கொண்டு எழும் எழுத்தாளனே அடுத்த கட்டத்தை முடிவு செய்கிறான். எண்பதுகளில் ஆழ்ந்த புறவய எதார்த்தவாதம் ஓங்கி நின்றிருந்த சூழலில் கட்டற்ற கற்பனாவாதத்தையும், நாட்டுப்புற அழகியலையும் முன்வைத்த கதைகளை நானும் கோணங்கியும் எழுதினோம். அவை உண்மையில் அன்றிருந்த ஒருவகையான தேக்க நிலையை உடைக்கும் வழியாக மேலதிக வரவேற்பையே பெற்றன. எழுத்தாளர்களாக எங்களை முன்னால் கொண்டு வந்து நிறுத்தவும் செய்தன.

இன்றைய இளம் எழுத்தாளர்களைப் பார்க்கையில் பொதுப்போக்கிலிருந்து எவரது தலை ஒரு அடியேனும் மேலெழுந்து நிற்கிறது என்பதே என் முதல் தேடலாக இருக்கிறது. கவிதையில் முகுந்த் நாகராஜன், இசை, குமரகுருபரன்,இளங்கோ கிருஷ்ணன் போல ஒரு புதிய குரலைப்பார்ப்பது அடிக்கடி சாத்தியமாகிறது. சிறுகதையில் அப்படி நிகழவில்லை என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு முறை ஒரு சிறுகதைத் தொகுப்பை எடுக்கும்போதும் ஓரிரு கதைகளுக்குள்ளேயே அவை எந்த பொதுப்போக்கில் இணைந்து கொள்கின்றன என்பதைக் கண்டு மெல்லிய சலிப்பையே அடைய வேண்டியிருக்கிறது. பொதுப்போக்கிலிருந்து முயற்சி செய்யாமலேயே வெளியே நின்று எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அப்பொதுப்போக்கையே அதிகமாக அறியாதவர்களாகவும் முற்றிலும் வேறுபட்ட ஒரு பண்பாட்டுத்தளத்திலிருந்தோ மொழித்தளத்திலிருந்தோ இலக்கியத்துக்குள் வரக்கூடியவர்களாகவும் இருப்பர். உதாரணம் ஜோடி குரூஸ். அதற்கு முன் தோப்பில் முகம்மது மீரான். அப்பொதுச்சூழலில் பலகாலமாக நீச்சலடித்துக் கொண்டிருப்பவர்கள் விழைந்து அடைய முடியாத முக்கியத்துவத்தையும் தனித்துவமான கலைவெற்றியையும் அவர்கள் அடைந்து கடந்து செல்கிறார்கள். காரணம் அவர்களிடம் பொதுச்சூழலின் தேய்வழக்குகளேதும் இல்லை

 

index
கோணங்கி

 

அப்பொதுச்சூழலை உண்மையான படைப்பு நோக்கம் கொண்ட ஒரு எழுத்தாளன் சந்திக்கும்போது அவனில் ஓர் ஒவ்வாமைதான் எழும் என்று நான் நினைக்கிறேன். இது அல்ல, இது அல்லஎன்றே அவன் உள்ளம் தொட்டுச் செல்லும். ஒரு வேளை ஒரு பயிற்சிக்காக ஓரிரு கதைகளை அப்பொதுப்போக்கு சார்ந்து அவன் எழுதியிருந்தாலும் கூட அவற்றை நிராகரித்து முன்செல்லவே அவன் விரும்புவான். தன்னுடைய அனுபவத்தின் தனித்தன்மைகளை, தனது உள்ள மொழியின் இயல்பான ஓட்டத்தை முதலில் கவனித்து அதை எழுதவேண்டும் என்று நினைக்கும் எழுத்தாளன் பொதுப்போக்கின் ஒரு பகுதியாக தன்னியல்பாகவே இருக்க மாட்டான்.

அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய அசங்கா என்னும் சிறுகதையை முதிராத பயிற்சி எழுத்து என்று சொல்லிவிட முடியாது. சரளமான இயல்பான மொழிநடை இக்கதைக்கு அமைந்துள்ளது. புறவய நிகழ்வுகளையும் எதிர்வினையாளனின் இயல்புகளையும் பின்னி கதைப்படைப்பை முடைந்து செல்லும் தேர்ச்சி உள்ளது. இக்காரணத்தால் ஆர்வமூட்டும் வாசிப்பு அனுபவத்தை அளிக்கக்கூடியதாக அசங்கா உள்ளது. அத்துடன் நாம் அறியாத ஒரு வாழ்க்கைச் சூழல் பலவகையிலும் பொது வாசகனுக்கு ஆர்வமூட்டுவது

இணைய தளங்களிலும் அச்சிதழ்களிலும் வந்துகொண்டிருக்கும் சிறுகதைகளின் பொதுத் தளத்தை வைத்துப்பார்க்கும்போது ஒரு படி மேலாகவே இச்சிறுகதை இருக்கிறது என்று சொல்லலாம். அத்துடன் ஒரு உணர்வுபூர்வமான உறவு முடிச்சை சொல்வதனால் இக்கதை வாசகன் மேலதிகமாக ஊகித்துச் செல்லவும் இடமளிக்கிறது. அந்தப் பூனை பலவகையிலும் அவன் கற்பனையில் அர்த்தம் கொள்ளக்கூடும். பதுங்கியிருக்கும், விழி ஒளிரும், நகங்களை ஒளித்திருக்கும், ஓசையற்று உலா வரும் பூனை மறைமுக உறவின், அதுசார்ந்தெழும் வெளித்தெரியா உணர்வுநிலைகளின் மிகச்சிறந்த உருவகமே

அப்பூனையிலிருந்து வாசகனின் கற்பனை திரும்பி அசங்காவுக்கும் கதைசொல்லிக்குமான உறவையும் அவ்வுறவின் நடுவில் சிக்கிக் கொள்ளும் அக்குழந்தையின் உளவியலையும்சென்று தொடுவதற்கான வாய்ப்பு இக்கதையில் உள்ளது அவ்வகையில் இதை ஒரு குறிப்பிடத்தகுந்த கதை என்று சொல்ல எனக்குத் தயக்கமில்லை.

அப்படியென்றால் இக்கதையின் குறைகள் என்ன? முதன்மையாக இக்கதையை தமிழில் எழுதப்படும் பொதுப்போக்குக்குள் முற்றிலும் அடங்கியுள்ளது. தமிழில் இன்று எழுதும் எந்த எழுத்தாளரும் இந்தக் அக்தையை எழுதியிருக்கக்கூடும். அனோஜன் என்னும் எழுத்தாளனின் முத்திரை இதில் இல்லை. ஏறத்தாழ இதே வயதில் நான் எழுதிய படுகை, போதி, மாடன்மோட்சம் போன்றகதைகளை இன்றுவரை பிறிதொருவர் முயலவில்லை. அதில் என் தேடலும் என் கண்டடைதல்களும் உள்ளன. இதையே கோணங்கியின் மதினிமார்கள் கதைக்கோ கருப்பன் போனபாதைக்கோ மாயாண்டிக்கொத்தனின் ரசமட்டத்திற்கோ சொல்லமுடியும்

இன்றைய சிற்றிதழ் வாசகனைனே ஆர்வத்துடன் வாசிக்க வைக்கும் பாலியல் சித்தரிப்பும், சற்றே அவனை இலக்கிய கற்பனை நோக்கி நகர்த்தும் ஓர் உருவகமும் மிகக்கச்சிதமாகவே இன்றையப் பொதுப்போக்கின் இலக்கணங்களுக்குள் பொருந்துகிறது இக்கதை. இந்த ஒரு காரணத்தினாலேயே வளர்ந்து எதிர்காலத்தில் முதன்மையான கதையை எழுதக்கூடும் என்று நான் நினைக்கும் இளம் எழுத்தாளர் இதை எழுதியிருப்பதை நான் நிராகரிக்கிறேன்.

வடிவ ரீதியாக இக்கதைக்கு இரண்டு முதன்மையான பலவீனங்கள் உள்ளன. ஒன்று இக்கதை அசங்கா என்ற பெண்ணுக்கும் கதை சொல்லிக்குமான உறவை, அது குழந்தையில் அவள் குழந்தையில் உருவாக்கும் உளவியல் நெருக்கடியை சொல்லிச்செல்கிறது. ஆனால் அக்கதைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாமல் நீண்ட நிலக்காட்சி வர்ணனையும் மழைவர்ணனையும் கதைக்குமுன் வருகின்றன. ஒரு நாவலின் அத்தியாயம் இவ்வாறு தொடங்கியிருந்தால் அது இயல்பானது. ஏனெனில் நாவல் நிலக்காட்சியின் ஒருபகுதியாக நிகழ்கிறது. நேர்மாறாக சிறுகதையில் நிகழ்வுகளின் ஒரு மறைமுகப்புலமாகவே நிலக்காட்சி இருக்க முடியும். அவ்வாறில்லையென்றால் அந்நிலக்காட்சி அக்கதையை தீர்மானிக்கும் மிக முக்கியமான புள்ளியாக இருக்கவேண்டும்.

இக்கதை கதைசொல்லி ஒரு பலாக்காயுடன் அசங்காவின் வீட்டுக்குப்போகும்போதுதான் உண்மையில் தொடங்குகிறது. அதுவரைக்குமான பத்திகளை சொல்லப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் அதற்கு பிந்தைய கதையோட்டத்திற்குள் ஆங்காங்கே குறிப்புணர்த்தி கொடுக்கமுடியும் என்பதே ஆசிரியர் உணரவேண்டிய வடிவப்பயிற்சி.ஒரு வெற்றிகரமான சிறுகதை கதையின் மைய ஓட்டத்திற்குள் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக வாசகனை இழுப்பதாகும். மைய முடிச்சை அவன் உள்ளத்தில் ஆழ நிறுவுவதற்கு இரண்டு பத்திகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது ஒர் இலக்கணம். இக்கதையின் முதல் பல பத்திகளில் அசங்கா என்ற பேருக்கு அப்பால் ஏதோ வாசகனுக்கு கிடைப்பது ஏதுமில்லை

இவ்வியல்பு கதைமுழுக்க உள்ளது. இக்கதை முழுக்கவே கதை எதை நோக்கி செல்கிறதோ அதனுடன் தொடர்பற்ற தகவல்களும் வர்ணனைகளும் ஏராளமாக உள்ளன. ஒரு மறுசீரமைப்பில் ஆசிரியனே வெட்டி அகற்ற வேண்டிய பகுதிகள் என்று அவற்றைச் சொல்லலாம். இக்கதையில் அசங்காவுக்கும் கதை சொல்லிக்குமான பாலியல் உறவும் சரி, அசங்காவின் மகள் அந்த பூனையை எடுத்து வளர்க்கும் தகவலும் சரி, அப்பூனையின் சித்தரிப்பும் சரி சற்று அதிகமாகவே சொல்லப்பட்டுள்ளன.

இக்கதை பலவகையிலும் வண்ணதாசன் உலகத்தைச் சார்ந்தது. வண்ணதாசன் பூடகமாக சொல்லப்படும் கதைக்கருக்களை கையாள்வதில் நிபுணர். அவரது திறன் என்பது எவ்வளவு தேவையோ அதற்குமேல் ஒரு சொல்லும் சொல்லாமல் இருக்கும் நாவடக்கம். இக்கதையை வண்ணதாசன் எழுதியிருந்தால் அசங்காவுக்கும் கதைசொல்லிக்குமான உறவையோ அல்லது அந்தக் குழந்தையின் நோக்கில் அவர்களிடையே உறவுச் சிக்கலையோ சொல்லியிருப்பார். மற்றவை பின்புலத்தில் ஊகிக்கக்கூடியவையாக நிறுத்தப்பட்டிருக்கும்.

அல்லது ஒருவேளை கதை அந்த பூனையைப்பற்றி மட்டுமானதாக நிறுத்தி மற்ற அனைத்தையும் வெறும் உதிரிக்குறிப்புகளாக கதைக்குள் தூவியிருப்பார். எதுவாக இருந்தாலும் அந்த மைய சித்திரம் மிக உயிரோட்டமான மெல்லிய கோட்டோவியமாக இருக்கும். அந்த ஓவியத்துக்குள்ளே பிற கதைகள் வாசகனால் நுட்பமாக ஊகிக்க கூடிய விதத்தில் மறைக்கப்ப்ட்டிருக்கும்.

கதைமுடிவில் பூனையை ஒரு குறியீடாக்கும்பொருட்டு ஆசிரியர் அளித்திருக்கும் உணர்ச்சிகரமான அழுத்தம் கதையின் கலைக்குறைபாட்டை உருவாக்குகிறது. அக்குழந்தையின் இறப்பு வரைக்கும் கதை செல்லும்போது நெடுந்தொலைவுக்கு முன்னரே முழுக்கதையையும் பெற்றுக் கொண்ட வாசகன் சற்று சலிப்புடனே அதைத் தொடர்கிறான்.

இக்கதையின் அடுத்த மிகப்பெரிய குறை என்பது அதன் மையப்படிமமேதான். ஒரு படிமம் முதலில் பயன்படுத்தப்படும்போது கலை. மறுபடியும் பயன்படுத்தப்படும்போது நகல்.மூன்றாம் முறை பயன்படுத்தப்படும்போது அது தேய்வழக்கு. பூனையை பாலியலுடன் தொடர்புறுத்தும் தேய்வழக்கிலிருந்து எழுத்தாளர்கள் வெளிவரலாம் என்று தோன்றுகிறது.

இக்கதை உரையாடல்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும். இலங்கை வட்டார வழக்கின் இயல்ப்பான உரையாடல்களாக அவை அமைந்துள்ளன. உரையாடல்கள் கதைக்குள் மூன்று வகையில் வெளிப்படலாம். பூமணி அல்லது இமயம் வகையான இயல்புவாத எழுத்தில் எவ்வித நுட்பமோ அழகோ இல்லாத தட்டையான் உரையாடல்கள் மட்டுமே இருக்கும். உரையாடல்கள் உண்மையில் அப்படித்தான் நிஜவாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. புகைப்படத்தன்மை என்பது அவ்வழகியலின் இயல்பு.

லா.ச.ரா அல்லது மௌனி எழுதும் வகையான கதைகள் எங்கும் எவரும் பேசாத அசாதாரணமான கவித்துவம் வாய்ந்த உரையாடல்கள் கொண்டவை. அவ்வழகியலின் ஒட்டுமொத்த உணர்வுநிலையில் ததும்பும் கவித்துவமே முக்கியம். அசங்கா போன்ற கதைகளின் அழகியல் யதார்த்த தளத்தில் நின்றுகொண்டு கவித்துவத்தை உட்குறிப்பாக அடையமுயல்வது. வெறும் யதார்த்த உரையாடல்களில் கதையின் குறியிட்டுத்தன்மை அழிந்து உணர்வுநிலைகள் வெளிப்படாமல் போகும். நேரடியாகக் கவித்துவமாக அமையுமென்றால் கதை உருவாக்கும் யதார்த்தம் மறுக்கப்படுகிறது. அந்நிலையில் யதார்த்தமாகத் தோன்றும்போதே கவித்துவக் குறிப்புடன் உரையாடல்கள் அமையுமென்றால் மட்டுமே அவை கதையை செறிவுள்ளவையாக ஆக்கும்.

அசங்காவுக்கும் கதைசொல்லிக்குமான உரையாடலில் எந்த வகையிலும் கவித்துவமான மேலதிக உட்குறிப்புகள் இல்லை. கவித்துவம் என்பது இங்கு கற்பனாவாதம் சார்ந்ததாக சொல்லவில்லை. நவீன கவிதை அடைந்த புறவயமான எதார்த்தத்திற்குள்ள சாதிக்கப்படும் ஒரு புறவயமான னகவித்துவம் உண்டு. அக்கவித்துவமே இக்கதையை வலுவானதாக அமைக்கும்.

நிமினி என்ற அக்குழந்தையே இக்கதையின் மையம். அவளுடைய தோற்றம் இக்கதைக்கு மிக முக்கியமானது. அசங்காவின் தோற்றத்தைக் கூர்மையாக வர்ணிக்கும் கதை நிமினியின் தோற்றத்தை சொல்லாமல் விட்டுவிட்டது ஒரு குறையே. கதை முடியும்போது நிமினியின் ஆளுமைக்கும் பூனைக்குமான நுட்பமான மயக்கம் இக்கதையில் வந்திருக்கலாம். மாறாக நிமினியும் பூனையும் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட ஓர் இணைப்பை மட்டுமே இக்கதைக்குள் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக இக்கதையின் ஒட்டுமொத்தமான நீளம் குறிப்பிடத்தகுந்தது. சிறுகதைக்கு நீளம் ஒரு பொருட்டல்ல. அச்சில் முப்பது பக்கம் வரக்கூடிய சிறுகதை கூட மேற்கில் எழுதப்படுகின்றன. ஆனால் அந்நீளம் கதைக்கருவுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். கூர்மையாக, நுட்பமாக ஒன்றை மட்டுமே உணர்த்தி நிற்கக்கூடிய கதை நீளமாக பலபடிகளாகச் செல்ல முடியாது. ஒரு உணர்வு நிலையை அல்லது கருத்து நிலையை பல படிகளுக்கு வளர்த்துச் செல்லும் கதைகளுக்கு மட்டுமே நீளம் ஒப்புதல்.

அனோஜன் பாலகிருஷ்ணனின் அசங்கா நிமினி அப்பூனையென கதை சொல்லியின் உள்ளத்தில் உருவெடுக்கும் ஒரு கணத்தை மட்டுமே தன் கதைப் புள்ளியாகக் கொண்டுள்ளது. அப்புள்ளியைக் கண்டடைவதற்கு இத்தனை சொற்களை கடந்து வருவது வாச்கனுக்கு ஆயாசமூட்டுவது. உருவக்ககதைகள், குறிப்புணர்த்தும் கதைகள் ஒரு வாள் வீச்சு போல ஒரே உணர்வு நிலையில் வாசித்து முடிக்கப்படுபவையாகவும்,ஒரே கணத்தில் ஒட்டுமொத்தமாக நினைவில் மீட்டெடுக்கக் கூடியவையாகவும் அமையவேண்டும். வடிவக் கூர்மையே அவற்றின் அழகெனக் கொள்ளப்படும்.

 

ஐசக் அசிமோவ்

 

அறிவி

அறிவியல் சிறுகதைகள் என்பவை என்ன, அவை ஏன் எழுதப்படவேண்டும்? இவ்வாறு சொல்லலாம். கதை என்பது மனிதஅனுபவத்தின் அனைத்துச் சாத்தியங்களையும் தன்வடிவில் எடுத்துக்கொள்ளும் ஒன்று. வரலாற்றை, சமூகசித்திரங்களை, அரசியலை எல்லாம் அது எடுத்துச்சொல்கிறது. ஆகவே அறிவியலும் அதற்குள் வரலாம். ஆனால் அறிவியலை பேசுபொருளாகக் கொண்டது அறிவியல் புனைவு அல்ல. அறிவியலை தன் கருவியாகப்பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையைப் பேசுவதுதான் அறிவியல் சிறுகதை.

அடிப்படை வினாக்கள், புனைவுத் தருணங்கள், உணர்வுநிலைகள் இவை மூன்றையும் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையின் தருணங்களிலிருந்தே நாம் இலக்கியத்திற்குள் எடுத்துக்கொள்கிறோம். அதுவே வாசகன் இயல்பாக அடையாளம் காணக்கூடியது. ஆனால் சில கருக்களுக்கு அதுபோதாது. ஒரு தத்துவத்தை,ஒரு தரிசனத்தை முழுவாழ்க்கைக்கும் பொருத்திப்பார்க்கவேண்டும் என்றால் அன்றாடவாழ்க்கை அதற்கு உதவாது. ஆகவே வரலாற்றுக்கும் தொன்மத்திற்கும் செல்கிறோம். ஷாஜகானை ஔரங்கசீப் சிறையிட்டது ஒரு வாழ்க்கைநிகழ்வு மட்டும் அல்ல, ஒரு குறியீடு. ராமன் வில்லை முறித்தது ஓரு படிமம்.

அந்த வாய்ப்புக்காகவே அறிவியலுக்குள்ளும் புனைவு நுழைகிறது. அடிப்படை வினாக்கள், புனைவுத் தருணங்கள், உணர்வுநிலைகள் இவை மூன்றையும் அறிவியல் புலத்திலிருந்து ஒரு கதை எடுத்துக் கொண்டதென்றால் அதை அறிவியல் சிறுகதை என்று சொல்லலாம்

இலக்கியத்தின் அடிப்படை நோக்கமென்பது வாழ்க்கை சார்ந்த ஆதாரமான வினாக்களை எழுப்பிக் கொள்வதும், வாழ்க்கையின் உச்சங்களையும் சரிவுகளையும் சித்தரித்துக் காட்டுவதும், வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதும்தான். அறிவியலை களமாகக் கொண்டு அறிவியல் புனைகதை செய்வதும் அதையே. பத்தாயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு செவ்வாய்க்கிரகத்தில் நிகழும் ஒரு நிகழ்வை அறிவியல் சிறுகதை எழுதலாம். வைரஸ்களின் உலகுக்குள்ளேயே ஒரு கதை நிகழ்ந்து முடியலாம். எதுவாயினும் அக்கதை எழுதி வாசிக்கும் மனித குலத்தின் வாழ்க்கையைத்தான் பேசிக் கொண்டிருக்கும்.

ஆக, எத்தனை விலகிச் சென்றாலும் அறிவியல் புனைகதையின் பேசுதளம் சமகாலவாசகனே. வாசகனை அக்கதையுடன் தொடர்பு படுத்துவது ஒன்றுதான், சமகால வாழ்க்கை.சமகாலத்தின் அறச்சிக்கலை, ஒழுக்கப்பிரச்சினையை, ஆன்மீகத்தேடலைத்தான் அனைத்து அறிவியல் கதைகளும் பேசிக் கொண்டிருக்கும்.

இதற்கும் அப்பால் அறிவியல் புனைகதைகளுக்கு உள்ள ஒரு தனிச்சிறப்பு அவற்றின் அன்றாட வாழ்க்கையைக் கடந்த மீபுனைவுத் தன்மைதான். அன்றாட வாழ்க்கையை புனைகதைகளில் மிகக்குறைவாகத்தான் எழுதியிருக்கிறார்கள் என்பது இரண்டாயிரம் வருடக்கதைகளை எடுத்து பார்த்தால் அறிய முடியும். அன்றாட வாழ்க்கையில் உள்ள உலகியலின் இரும்பு விதிக்ள் எழுத்தாளனின் கற்பனையை கட்டிப்போடுகின்றன.

கதை கவித்துவமாகக் கூர்மை கொள்ள வேண்டுமென்றால் அதிலுள்ள செய்திகள் அனைத்தும் உருவகமாக வேண்டும். மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மீன்வாங்கப்போகும் அன்றாட நிகழ்வை கவித்துவ உருவகமாக்குவது கடினம். கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு செங்குத்தான பாறையில் இறங்கி தேனை எடுப்பதை உருவகமாக்க முடியும் ஆகவே கலை எப்போதும் அசாதாரணமான நிகழ்வுகளை உக்கிரமான தருணங்களையும் நோக்கிச் செல்கிறது.

அவை அன்றாட வாழ்க்கையில் அதிகம் இல்லை என்பதனால்தான் சென்ற காலங்களில் புராணம் என்னும் வடிவமே உருவாகிவந்தது. அதில் மனிதர்களுடன் அரக்கர்களும் அசுரர்களும் பங்கெடுக்கிறார்கள். விலங்குகள் பேசுகின்றன. மலைகள் மிதந்தலைகின்றன. ஓர் அன்றாடக்கதையிலிருந்து புராணத்துக்குச் செல்லும் போது அதன் ஒவ்வொரு வரியும் கவிதையாகவும் ஒவ்வொரு தருணமும் உருவகமாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

மனித குலத்தின் ஈராயிரம் ஆண்டு இலக்கியப்பாரம்பரியத்தில் பத்தில் ஒன்று கூட யதார்த்த வாழ்வுடன் தொடர்பு கொண்ட நேரடி இலக்கியம் அல்ல. தமிழ் மரபை நாம் எடுத்துக் கொண்டால் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் புனைகதை என்பதே சிலப்பதிகாரம் தான் ஆனால் அதிலும் உச்சம் புராணத்தன்மை வழியாகவே அடையப்படுகிறது. நவீன இலக்கியம் தோன்றியதும் அது அன்றாட வாழ்க்கைச் சித்தரிப்பை நோக்கி தன் கவனத்தை செலுத்தியது.

அன்றாட வாழ்க்கையை எழுதும் யதார்த்தவாதமும் இயல்புவாதமும் நேரடியான உருவகத்தன்மையை விடுத்து மறைமுகமான குறிப்புணர்த்தும் தன்மையை கையாள்கின்றன. கதைநிகழ்வுகளில் வாசக இடைவெளிகளை உருவாக்கி அவற்றை வாசகனே நிரப்பிக் கொள்ள வைக்கின்றன. கதைக்குள் உருவகங்களை பயன்படுத்துவதை விடுத்து அக்கதைநிகழ்வையே ஒரு பிரதிநிதித்துவத் தன்மையுடன் மொத்த வாழ்க்கைக்கும் பொருத்திப்பார்க்கும் வாய்ப்பை வாசகனுக்கு அது அளித்தது.

ஆனால் மிக விரைவிலேயே இலக்கியத்துக்கு அது போதாது என்பதை கதை கண்டுகொண்டது. ஆகவே யதார்த்தக் கதைகளுக்குள்ளேயே நவீன உருவகங்கள் வரத்தொடங்கின. தங்களை யதார்த்த தளத்திலேயே நிறுத்திக் கொண்டிருக்கும்போதுகூட மேலதிக அர்த்தங்களை சுமந்து நிற்கும் தன்மை அவற்றுக்கு உண்டு. அசோகமித்திரனின் புலிக்கலைஞன் ஓர் அன்றாட நிகழ்வுச்சித்தரிப்பே. ஆனால் புலி என்பது ஒரு புராண உருவகம் அளவுக்கு அழுத்தமானது. தி.ஜானகிராமனின் பரதேசி வந்தான் கதையில் அனைத்து நிகழ்வுகளும் அன்றாட வாழ்க்கையைச் சார்ந்தவையாயினும் அப்பரதேசியின் தோற்றத்தில் தொன்மையான பிக்ஷாடனரின் புராண தன்மையை மேலதிகமாக ஏற்றி தி.ஜானகிராமனால் காட்ட முடிகிறது

மேலும் மேலும் யதார்த்த கதைகள் எழுதப்படும்போது ஒரு பக்கம் எழுத்தாளனின் உள்ளம் சலிப்புறத்தொடங்குகிறது. கட்டற்ற கற்பனைக்காகவும், கணம் தோறும் பொருள் விரிவு கொள்ளும் உருவகங்களுக்காகவும் அவ்வுள்ளம் ஏங்குகிறது. இருவகையில் அவன் தன் பாதைகளை அமைத்துக் கொள்கிறான். ஒன்று திரும்பி தொன்மங்களுக்கும் புராணங்களுக்கும் செல்வது. அவற்றைக் கொண்டு புதிய புனைவுகளை உருவாக்குவது. இன்னொன்று முன்னால் சென்று அறிவியலின் சாத்தியங்களை கற்பனைவிரிவை கண்டடைவது.

index
சோ தருமன்

 

அறிவியல் புனைகதைகள் இந்நூற்றாண்டுக்கு முக்கியமான புனைவுவகையாக ஆனதற்குக் காரணம் அவற்றில் உள்ள அன்றாடம் கடந்த தன்மைதான். ஒருவகையில் அவை தொன்மங்களுக்கு மிக அணுக்கமாக இருப்பதைப்பார்க்கலாம். அறிவியல் புனைகதைகள் என்பதே அறிவியல் தருக்கத்துடன் சொல்லப்பட்ட புராணங்கள் என்று கூட பல சமயம் வரையறுக்க முடிவதில்லை. ஐசக் அசிமோவின் கதைகளில் வரும் எந்திர மனிதர்களுக்கும் இந்தியத் தொன்மங்களில் அசுரர்களுக்குமான ஒப்புமையை ஒருவன் பார்த்தால் போதும் அதை உணரலாம்

இன்றைய அறிவியல்புனைகதையுலகம் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அசாதாரண உளவியலையும் ஏன் அன்றாட வாழ்வின் உறவுச் சிக்கல்களையும்கூட அறிவியல் உருவகங்களின் மூலம் மிக விரிவாகச் சொல்லும் பல கதைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் அனைத்திலும் பொதுவாக இருக்கும் அம்சம் அன்றாட வாழ்க்கையின் எல்லைகடந்த அந்த வியப்புக்கற்பனைதான். ஒருகதையில் அந்த அம்சம் உருவாக்கும் மன எழுச்சி இல்லையேல் அறிவியல் புனைக்தைகள் என்னும் வடிவம் அளிக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பை ஆசிரியர் நழுவ விட்டதாகவே நா,ம் கொள்ளவேண்டும்.

ஐசக் அசிமோவின் கதையில் வரும் ஒரு எந்திர மனிதன் ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல, அவன் குறியீடும் கூட. அவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லும், அவனுடைய ஒவ்வொரு அசைவும் வெவ்வேறு வகையில் அர்த்த விரிவாக்கம் பெற்று வாசிப்பை விரியச் செய்யும். அவ்வாறு அர்த்தங்கள் உருவாக்கும் ஒருவகை ‘மூளைவிழிப்பு’ நிலையை அந்த மிகைக்கற்பனை உலக நமக்குள் உருவாக்குகிறது. அது அறிவியல் கதையில் முதல் தேவைகளில் ஒன்று.

சதீஷ்குமார் எழுதிய அறிவியல் புனைகதை 10.5 முதன்மையாகத் தவறவிட்டிருப்பது அந்த விந்தை அம்சத்தைதான். எடுத்துக் கொண்டிருக்கும் கருவுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு மிக விரிவான ஒரு அன்றாட வாழ்க்கைச் சித்தரிப்பை இக்கதை அளிக்கிறது. ஓட்டப்பந்தய வீராங்கனை நிஷாவின் வாழ்க்கை, அவளுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சியாளனின் வாழ்க்கை, ஒழுங்கின்மைக்கோட்பாடு பற்றி ஆய்வு செய்யும் ஒரு ஆய்வாளனின் வாழ்க்கை என பல வாழ்க்கைகள் தனித்தனியாக சொல்லப்படுகின்றன. மிக விரிவான நிகழ்வுத் தொடர்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

அறிவியல் புனை கதைகளை வாசிக்கும் வாசகன் ஆரம்பத்திலேயே பல வகைகளில் உருவகங்களும் கவித்துவங்களும் நிறைந்த ஒரு சூழலை எதிர்பார்ப்பான். கதை கற்பனையின் எல்லைகளை நோக்கிச் செல்லவேண்டும் என, தன் உள்ளத்தை அதன் பரவசத்தில் நிறுத்தவேண்டும் என எதிர்பார்ப்பான். ஆனால் பலபக்கங்களுக்கு அவன் சோர்வூட்டும் தக்கையான அன்றாடச்சித்தரிப்பையே இக்கதையில் காண்பான். முதன்மையாக இது அறிவியல் சிறுகதையின் தளத்திலிருந்து நழுவிவிடுவது இந்த அம்சத்தினால்தான்.

நிஷா ஓட்டப்பந்தய வீராங்கனை என்றால் அவளுடைய இலக்கோ அறிவியல் ஆர்வமோ தான் இக்கதையின் தொடக்கமாக அமைந்திருக்க வேண்டும். அவளுடைய பயிற்சியாளன் இக்கதைக்குள் எவ்வகையில் முக்கியமானவனல்ல. அவன் அளிக்கும் அழுத்தம் அவள் உணரும் அளவிலேயே கதைக்குள் இருந்தால் போதுமானது. அதற்குள் ஒரு அறிவியலாளர் வந்து ஒழுங்கின்மைக்கோட்பாடுபற்றி நேரடியாக இவ்வளவு பெரிய விவரணையை சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஒருபத்திக்குள் கதையில் அது நிஷா அறிந்துகொள்ளும் அளவிலேயே வந்திருந்தால் போதுமானது.

இன்னும் சொல்லப்போனால் இந்தச் சிறுகதை நிஷா அந்த ஓட்டப்பந்தயத்தில் துப்பாக்கிக் குண்டின் ஒலிக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் கணத்தில் தொடங்கி வென்று முடியும்போது முடிந்து விட்டிருக்க வேண்டிய ஒன்று. ஒரு சிறுகதையின் மிகச்சிறந்த தொடக்கம் என்பது முடிவுக்கு மிக நெருங்கியிருக்கும் ஒரு புள்ளிதான். அந்தப்புள்ளியை நோக்கி நெடுந்தொலைவிலிருந்து வெவ்வேறு கதாபாத்திரங்களின்வழியாக ஓடி வருகிறது இந்தக் கதை. அம்மையப்புள்ளிக்கு எவ்வகையிலும் சம்மந்தமில்லாத ஏராளமான தகவல்களையும் உரையாடல்களையும் சொல்லி அலைக்கழிகிறது. இம்முடிவு வரை வரும் வாசகன் பெருமளவுக்கு சலிப்பை அடைகிறான்.

அறிவியல் புனைகதைகளுக்குள்ள சுவாரசியம் என்ற அம்சத்தை எவ்வகையிலும் அடையாததால் முழுமையாக தோல்வியடைந்த கதை என்று சொல்லலாம். இதிலுள்ள அறிவியல் அம்சம் என்பது ஒன்றே. அதுவும் மிகப்புகைமூட்டமாக இக்கதைக்குள் சொல்லப்பட்டிருக்கீறது. வாழ்க்கையை தீர்மானிப்பதின் ஊகிக்கக் கூடிய விதிகளுக்கு அப்பால் செயல்படும் விசைகள் சில உண்டு. அவற்றைச் சொல்வதற்கு இந்த ஒழுங்கின்மைக் கொள்கையோ அதன் உட்சிக்கல்களோ எதற்கு? இது அறிவியல் சிறுகதை அல்ல. மிகச்சாதாரணமான ஒரு நிகழ்வுக்குள் ஓர் அறிவியல் கொள்கையை பேசியிருக்கும் ஒரு சாதாரணமான கதை மட்டுமே [ http://sathish-story.blogspot.in/ ]

 

 

 

IMG_1206
கலைச்செல்வி

 

கலைச்செல்வியின் மஞ்சுக்குட்டி வழக்கமாக பெண்கள் எழுதும் குடும்பச்சித்திரத்தை, அல்லது பெண்ணியக் கொள்கைகளையோ நோக்கிச் செல்லாமல் சற்று அசாதாரணமான ஒரு வாழ்க்கைச் சூழலை நோக்கிச் சென்றிருப்பது ஒரு முக்கியமான இலக்கியக்கூறு என்று நினைக்கிறேன். ஜி.நாகராஜன் முதல் இமயம் வரை எழுதிக்காட்டிய அடித்தள மக்களின் வாழ்க்கை. அங்கு செயல்படும் இச்சை,வன்முறை. அதில் மறைந்து எங்கோ ஓர் இடத்தில் மேலெழும் அறத்தின் வெளிப்பாடு.

பலவகையிலும் இயல்பான மொழிநடையுடன் ,அயர்ச்சி தெரியாது எழுதப்பட்டுள்ளது இக்கதை .தமிழில் வழ்க்கமாக இத்தளத்தில் எழுதப்படும் கதைகளில் இருக்கும் வலிந்த சித்திரங்களும் இல்லை. சுப்ரபாரதிமணியன் பாவண்ணன் போன்ற முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் அடைந்த இயல்பான தொடக்கம், சரளமான உரையாடல், நிகழ்வுகளிலிருந்து நினைவுகளுக்கு சென்று மீண்டும் வருதல் என்னும் ஊசலாட்டம் ஆகியவை சிறப்பாக இக்கதையில் அமைந்துள்ளன், நம்பகமான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பது இக்கதையில் நிகழ்ந்துள்ளது

மஞ்சுவின் சித்திரம் ஆரம்பத்திலிருந்து நுணுக்கமாகச் சித்தரிக்கபப்ட்டு எழுந்துவந்து இயல்பான அறவெளிப்பாடொன்றில் திருப்பம் கொள்கிறது. சிறுகதையின் வடிவத்தில் சரியாகக் கதை அடைந்திருப்பதைக் காட்டுகிறது இது. மனைவியை விட்டு காதலியுடன் வந்தவன் உள்ளத்தின் ஆழத்தில் அம்மனைவி குடிகொள்வதும், அந்த நெருக்கடியின் குற்றஉணர்வு அவனை நோயென பீடிப்பதும் ,அந்த நோயுற்ற நிலையிலும் காதலி மேல் கொண்ட மோகம் அவனை ஆட்டுவிப்பதும் கதையில் தன்னியல்பாகவே நிகழ்கிறது. அனைத்து இழிவுகளையும் அவளுக்காக அவன் தாங்கிக் கொள்கிறான். மலம் நடுவே தூங்கும் நிலை வரை.

ஒரு கட்டத்தில் அந்த மோகம் கரைந்துவிட்டதென்பதை காதலி காண்கிறாள். அதன்பிறகு அவனை இயக்குவது அவளை அழைத்து வந்துவிட்டோம் என்ற பொறுப்புணர்வுதான். மனைவியை விட்டு வந்தவன் காதலியைக் கைவிட்டுச் செல்ல தயங்குகிறான். எங்கோ ஓரிடத்தில் அதை அக்காதலி உணருகிறாள் . அவனுள் வாழும் மனைவியின் சித்திரத்தை உணர்ந்ததும் அவனை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறாள். கதைப்பரப்புக்குள் பேசப்படாத ஒரு நுண்ணிய உளநகர்வு இக்கதைக்குள் நிகழ்ந்திருப்பதால் இதை ஒரு நல்ல கதை என்று சொல்லலாம்.

இக்தையை மேலும் கூர்மைபடுத்துவது என்றால் சிலவற்றைச் சொல்லலாம். காந்திமதியின் சித்திரம் இத்தனை அழுத்தமாக கதைக்குள் வந்திருக்க வேண்டியதில்லை. மீண்டும்மீண்டும் அவள் வருவதும் மஞ்சுவின் முன்னால் நின்று பூசலிடுவதுமான சித்திரங்கள் சற்று வழக்கப்படி உள்ளவை. அவன் கிளம்பி வரும்போது அமைந்திருந்த அதே சித்திரத்தில், ஆழமான அமைதியுடன் உறைந்திருப்பதுபோல அப்படியே விட்டிருந்தால் மேலும் அழுத்தம் நிகழ்ந்திருக்கும். அந்த அழுத்தத்தை நோக்கி அவன் திரும்பிச் செல்வதாகத் தோன்றும்

மஞ்சுவின் குணச்சித்திரத்தில் இருக்கும் ஒரு கட்டற்ற தன்மை ஆரம்பம் முதலே சரியாக வந்திருக்கிறது. அவள் குமாரை மணம் செய்ய முடிவெடுக்கிறாள். அந்தக் குமார் கதைக்குள் இன்னும் தெளிவான ஒரு முகத்துடன் வந்திருக்கலாம். மனைவி இன்னொருவனுடன் இருக்கையில் அவனுக்காகவும் சேர்த்து பிரியாணி வாங்கிச்செல்லும் அவனுடைய உளவியல் சொல்லப்படாது, குறிப்பும் உணர்த்தப்படாது விட்ப்படுகிறது.

இக்கதையில் முடிவுக்குப்பின் நீளும் அடுத்த கட்டமென ஒன்றில்லை என்பதே முக்கியமான குறையென தோன்றுகிறது. மஞ்சுவின் மனதில் நிகழும் அந்த மெல்லிய மாற்றத்திற்கு அப்பால் இக்கதை நமக்குணர்த்தும் வாழ்க்கைஉண்மை என்பது எதும் இல்லை. அதேசமயம் இத்தருணத்தையே வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்துக்கான ஒரு பிரதிநிதித்துவ நிகழ்வாகக் கொள்ளவும் முடியவில்லை. அக்காரணத்தாலேயே வாழ்க்கையின் ஒருதருணத்தை நோக்கி வெளிச்சம் காட்டும் சிறுகதை என்ற அளவிலேயே இது நின்றுவிடுகிறது.

இத்தகைய கதைகளை தமிழ் முன்னோடி எழுத்தாளர்கள் பலகோணங்களில் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பது இக்கதையை ஒருபடி கீழிறக்கும் அம்சம். இலக்கியப் படைப்புக்கு இருந்தாகவேண்டிய பிறிதொன்றிலாத தன்மை இதிலில்லை. இக்கதையை படிக்கும்போதே குறைந்தது பத்துபதினைந்து வெவ்வேறு கதைகளின் நினைவில் எழுந்து மறைகின்றன. இரண்டாவது பெண் என்பதும் சரி ,அடித்தள வாழ்க்கையைச் சேர்ந்த பெண்ணின் அறம் என்பதும் சரி ,மிகச் சம்பிரதாயமாக சொல்லி செய்து வந்த கதைக்கருக்கள். அது ஒன்றே இக்கதையின் குறைபாடென்று நினைக்கிறேன்.

 

 

imayam
இமையம்

 

 

இந்த ஆறு தொகுதிகளாக வந்த சிறுகதைகளை படிக்கும்போது ஒட்டுமொத்தமாக தோன்றும் சித்திரங்கள் சில உண்டு. ஒன்று, எக்கதையும் அசாதாரணமான கதைக்கருக்களில் எழுதப்படவில்லை. புதிய ஒர் எழுத்தாளர் இலக்கியச் சூழலுக்குள்நுழையும்போது சொல்லப்படாத கதைக்கருக்களின் ஒரு ரகசியத் தொகை அவனிடம் இருக்கும். இமையமோ சோ.தருமனோ எழுந்தவந்தபோதுகூட அந்த கவன ஈர்ப்பு அம்சம் அவர்களின் கதைக்கருக்களில் இருந்தது.

இக்கதைகள் அனைத்துமே தமிழ்ச் சூழலில் ஏற்கனவே எழுதப்பட்ட கதைக்கருக்கள். இங்கு வந்து வாசித்து இவை பலராலும் எழுதப்படுவதைப்பார்த்து இவற்றை தானும் எழுத முடியுமே என்று எண்ணி முயன்றவை போலுள்ளன. பலகதைகளுக்கு வேறுகதைகளே முன்தூண்டலாக இருந்திருக்கும். நேரடி வாழ்க்கை அல்ல. இந்த ஆறு தொகுதிகளில் மிகச் சிறந்த கதையாகிய சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதை கூட முன்னரே இச்சூழலில் எழுதப்பட்ட கதைகளிலிருந்து உருவானது என்றே சொல்லத் தோன்றுகிறது. கதைகளின் மிக முக்கியமான குறைபாடு இதுவே

இரண்டாவதாக, தங்கள் கதைவடிவம் முன்னரே பலராலும் எழுதப்பட்டு பழகிப்போன ஒன்றா என்ற வினாவும் அப்படி ஆகி விடக்கூடாதென்ற எச்சரிக்கையும் இவ்வெழுத்தாளர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே அனேகமாக எல்லாக் கதைகளும் வெவ்வேறு வகையில் முன்னரே எழுதப்பட்டு பழகிவிட்ட கதைவடிவில் அமைந்துள்ளன. ஆகவே வாசகனின் ரசனைசார்ந்த கவனம் இக்கதைகளில் நிலைக்கவில்லை. நல்ல கதை ரசனையைச் சீண்டி ஒரு சவாலை அளிப்பதாக அமையும் – மூளையின் பொறியியல்திறனுக்கு அல்ல.ஆகவே இவற்றில் பெரும்பாலான கதைகள் ஓரிரு பத்திகள் படித்தபின் தாவிச்சென்று ஆங்காங்கே படைத்து முடிவுக்கு வந்ததால் எதுவும் இழக்கப்படுவதில்லை.

மூன்றாவதாக, கதைகளின் நடை. பெரும்பாலாலும் எல்லா எழுத்துக்களிலும் பிரபல வணிக எழுத்துக்களின் செல்வாக்கே அதிகமாக இருக்கின்றது என்பது எனக்குப் பெரும் ஆச்சரியம். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதை மட்டுமே சற்றேனும் விதிவிலக்கு என்று சொல்வேன். மற்ற கதைகளில் எல்லாவற்றிலுமே தமிழ் வார இதழ்களின் தேய்வழக்குகள் நிறைந்துள்ளன.

ஒப்புநோக்க நல்ல கதை என்று சொல்லக்கூடிய தருணாதித்தன் கதைகளில் கூட விகடனின் பொதுவான மொழிவழக்குகளைக் காணும்போது இவ்வெழுத்தாளர்களின் முதன்மை ஈடுபாடு வணிகக்கதைகள் தானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அவற்றுக்கு வெளியே எப்போதும் நின்றிருக்கும் எனக்கு அதில் மிகப்பெரிய மனச்சோர்வு என்பதைச் சொல்லாமலிருக்கமுடியாது.

ஆனால் அவர்களின் இளமைப்பருவத்தில் வாசித்த அந்தக் கதைககளின் செல்வாக்கு அவர்களில் தீவிரமாக இருக்கலாம். அவற்றில் இருந்து விடுபடும் அளவுக்கு பின்னர் அவர்க்ள் தீவிரமான இலக்கிய வாசிப்புக்கு வரவில்லை என்றே ஊகிக்கிறேன். இன்று உழைப்பு, குடும்பம் என்னும் சூழலில் ஓரளவே வாசிக்கிறார்கள். ஆழமான மொழிப்பாதிப்பைச் செலுத்துமளவுக்கு அவ்வாசிப்பு விரிவானது அல்ல. இதுதான் பிரச்சினையாக இருக்குமெனத் தோன்றுகிறது

கடைசியாக இலக்கியம் அல்லாத ஒரு சிக்கல். இணைய தளத்தில் இக்கதைகளைப்படிப்பது மிகவும் தொல்லை தரும் அனுபவமாக இருந்தது. உதாரணமாக, அனோஜன் பாலகிருஷ்ணனின் கதை. அவை சரிவர பத்தி பிரிக்கப்படாமல், சகட்டு மேனிக்கு பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றன. இணைய தளத்தில் பத்தி என்பது இரட்டை இடைவெளி விட்டு தான் வெளியிடப்படவேண்டும். அச்சில் அப்படி அல்ல, ஒற்றைவரி இடைவெளி போதும்.

மின்னஞ்சலில் வரும் ஒரு பிரதியை அப்படியே இணையத்தில் ஏற்றும்போது பத்திகளுக்கு இடையே உள்ள இடைவெளி பதிப்பாளர்களால் பிரிக்கப்படாவிட்டால் மொத்தையான எழுத்துப்பரப்பாக ஆகிவிடும். இணையதளத்தின் பக்கத்தில் நாம் பக்கத்தை உருட்டி மேலேற்றி வாசிப்பதனால் பத்திகளுக்கான இடைவெளியும் சரி வரிகளுக்கான இடைவெளியும் சரி தெளிவாக விழுந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத இக்கதைகளில் பலவற்றை இணையத்தில் வாசிப்பது மிகவும் துன்பம் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஒப்பு நோக்க சொல்வனம் ஒன்று ம்மட்டுமே இவ்விஷயத்தில் கவனம் செலுத்துகிறது மற்ற இணைய தளங்கள் வரும் கதைகளை அப்படியே வெட்டி ஒட்டிவிடுகின்றன என்ற எண்ணம் ஏற்படுகின்றது. வாசகன் என்பவனுடைய இருப்பைப்பற்றி எவ்வளவு தூரம் அவர்கள் கவனம் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்ச் சூழலில் எப்போதுமில்லாதவரை அனைத்து கதைகளும் பிரசுரமாகும் வாய்ப்பு இன்று வந்துள்ளது. கைப்பிரதியாக ஒன்று தங்கிவிடும் நிலையே இன்றில்லை. இது ஒரு நல்ல விஷயம் என்றாலும் மறுபக்கமென்பது பிரசுரிக்கப்படும் படைப்புகளில் மிகப்பெரும்பாலும் எவராலும் படிக்கப்படுவதில்லை என்பது. தன்னை வாசகனிடம் கொண்டு சேர்ப்பதே எழுத்தாளனின் கடமையாக மாறிவிடுகிறது. இது எழுத்தாளனை மிகநுட்பமாகத் திரிபடையச் செய்து முகநூலில் கழிசுற்றவைக்கிறது. கதைகளுக்குள் குரலெழுப்பவைக்கிறது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட புதிய நம்பிக்கை என்னும் இதழில் நான் எழுதிய மாடன் மோட்சம் என்னும் கதை அன்று பதினைந்து முறைகளுக்கு மேல் மறுபிரசுரமாகியது. அதற்கு அன்றே நூற்றியிருபது கடிதங்கள் வந்தன. சேர்த்து ஒரு கோப்பு வைத்திருந்தேன். அது இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படுகிற்து. அத்தகைய ஒரு வாசக கவனத்தை இன்றைய சூழலில் கதைகள்  தன்னியல்பாக பெற வாய்ப்பே இல்லை என்பது மிக துரதிருஷ்டவசமானது.

இன்று ஒருகதை அதன் பேசுபொருளின் இணையப்பரபரப்பால் மட்டுமே சற்றேனும் கவனிக்கப்படும் என்று எண்ணுகிறேன். உயிர்மை கால்ச்சுவடு போன்ற இதழ்களில் வரும் கதைகளுக்கு வாசகர்கள் இருக்கிறார்களா என்றே ஐயம் எழுகிறது. இந்நிலையில் வலுவான கதைகள் மட்டுமே எழுதி வெளியிடும் ஒரு எழுத்தாளன் மட்டுமே தன்மீது தொடர்கவனத்தை நிலைநிறுத்த முடியும். ஆகவே சிறந்தகதைகள் மட்டுமே தன் பெயரில் வெளியாகவேண்டும், எழுத்துப்பயிற்சிகளை அச்சிலோ இணையத்திலோ பெருக்கிவிடக்க்கூடதென்பது முக்கியமானது.

இன்று பல எழுத்தாளர்கள் மூன்று நான்கு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விட்டார்கள். ஆனால் வாசகச் சூழலில் அவர்களின் எந்தச் சிறுகதையுமே தனித்து பேசப்படுவதோ, இயல்பாக நினைவுகூரப்படுவதோ இல்லை என்னும் நிலை இப்போது இருக்கிறது. காரணம் கதைகளுக்கென்று ஒரு தனித்துவத்தை அவர்களால் அடைய முடிவதில்லை. கதை வாசகனிடம் ஒரு பாதிப்பை செலுத்தி அவன் சிந்தனையின் ஒரு பகுதியாக நீடிக்க முடியவில்லை. இந்த எழுத்தாளர்கள் இன்றைய சூழலின் இச்சவால்களை சந்தித்து மேலேறவேண்டுமென விரும்புகிறேன். வாழ்த்துக்கள்

===================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

சிறுகதைகள் என் பார்வை 4

சிறுகதைகள் என் பார்வை 5

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி சதீஷ்குமார்

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

சிறுகதை விமர்சனம் 12

சிறுகதை விமர்சனம் 13

சிறுகதை விமர்சனம் 14

 

 

 

 

முந்தைய கட்டுரைஇந்தியா குறித்த ஏளனம் – பதில் 2
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40