‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39

[ 6 ]

ஏழுமாத காலம் எண்ணி எண்ணி ஏங்கி வெந்து சுருங்கிய இந்திரனிடம் இந்திராணி சொன்னாள் “அஞ்சுவதை விட்டு அகலவேண்டும். வஞ்சம் கொள்வதை நோக்கி அணுகவேண்டும். அகன்றிருப்பதனால் பெருகுவதே வஞ்சம். சென்று அவ்வசுரனை காணுங்கள். அவனுடன் சொல்லாடுங்கள். அவன் யாரெனத் தெளிந்தால் இவ்வஞ்சம் அணையக்கூடும்.” இந்திரன் சினத்துடன் உறுமினான்.

“கரந்தமையும் எண்ணம் எதுவும் நஞ்சு. வஞ்சம் வீண் எண்ணங்களை உணவெனக்கொண்டு பெருகுவது. நீங்கள் எண்ணுபவன் அல்ல அவ்வசுரன் என்றிருக்கலாம். உங்கள் சொல்கேட்டு நண்பனென்றும் ஆகலாம். சென்று பாருங்கள். நல்லவை நிகழுமென நம்புங்கள்” என்றாள் இந்திராணி. எண்ணி இருநாட்கள் இருந்தபின் “ஆம், அவன் முகம் எனக்கு வேண்டும். வெறுப்பதற்கேனும். அவன் வல்லமையை நான் அறியவேண்டும். என்னுள் போர்புரிந்துகொள்வதற்கேனும்” என்றான் இந்திரன்.

ஒரு வெண்புறாவாக மாறி பறந்து மகாவீரியத்தின் முகடு ஒன்றின்மேல் இறங்கினான் முதல் அமரன். முதிய அந்தணனாக உருக்கொண்டு கழியூன்றி நடந்து சென்று நான்கு ருத்ரர்களை சந்திக்க  ஒப்புதல் கேட்டான். முதல் ருத்ரன் மலைப்பாறைகளை தேடிச் சென்றிருந்தான். இரண்டவது ருத்ரன் இரும்பு அகழ மண்ணுக்குள் துளைத்துச் சென்றிருந்தான். நான்காம் ருத்ரன் வேள்விச்சாலையில் மட்டுமே  இருப்பவன்.

இந்திரனை மூன்றாவது ருத்ரனாகிய த்வஷ்டாவின் முன் கொண்டுசென்று நிறுத்தினர் அசுரகுலக் காவலர். “அரசே, அளப்பரிய ஆற்றல்கொண்டிருக்கிறாய். நீ அமைத்த நகர்தான் இதுவரை மண்மேல் எழுந்தவற்றிலேயே முதன்மையானது. அதைப் பார்த்து வாழ்த்திச் செல்லவே வந்தேன். நீ வாழ்க! உன் நகர் நீடூழி வாழ்க!” என்றான்.

நற்சொல் கேட்டு மகிழ்ந்த த்வஷ்டா “அந்தணரே, நீர் விரும்பும் பரிசு எது? சொல்லுங்கள், இப்போதே அளிக்கிறேன்” என்றான். “நான் பரிசில்பெற வரவில்லை, ஒரு சொல்லுரைத்துச் செல்லவே வந்தேன். அரசே, முழுமையான செல்வத்தையும் அழகையும் இன்பத்தையும் மானுடரோ அசுரரோ நாடிச் செல்லலாகாது. முழுமையைத் தேடும் இன்பமே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையில் அமர்வது அவர்களுக்கு பெருந்துன்பமே ஆகும்” என்றார் அந்தணர்.

“அரசே, முழுமையை நாடி மலர்களுக்கு தேனீக்கள் என தெய்வங்கள் வந்துகொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் இப்பெருநகரை அடையவிரும்பினால்கூட நீ அத்தெய்வத்துடன் சமராடவேண்டியிருக்கும். அது உன்னை அழிவுக்கே கொண்டுசெல்லும். மானுடர் பெற்றுப்பெருகுபவர். அன்னத்தில் முளைக்கும் எதுவும் அன்னத்தின் கட்டுக்குள் அடங்கியதே. அன்னம் மிகுவதில்லை குறைவதுமில்லை. அன்னம் அழிந்தே அன்னம் பிறக்கமுடியும். அன்னம் எரிந்தே அன்னம் வாழமுடியும்.”

“வேந்தே, தெய்வங்கள் எண்ணத்தில் பிறப்பவர்கள். எண்ண எண்ணப் பெருகுபவர்கள். ஆகவே தெய்வங்களை மானுடரோ அசுரரோ வெல்லவே முடியாது. தேவர்கள் எண்ணங்களை உருவாக்குகிறார்கள். எண்ணங்கள் வேள்விகளாக ஆகுதியாகின்றன. செயல்களாக பெருகுகின்றன. வேள்வியும் செயலும் தேவர்களை பெருக்குகின்றன. ஆம், நீ வல்லவன். தெய்வங்களை எதிர்த்து நிற்பவன். ஆனால் அச்சமர் புயல்காற்றில் மலர்மரம் என உன் உள்ளத்தை ஆக்கும். ஒருகணமும் நீ உவகைசூடி  அமைய முடியாது.”

“ஆகவே முழுமைக்கு முன்னரே நின்றுவிடுவதே இன்பத்தில் என்றும் வாழும் வழி. உலகோருக்கு என முன்னோர் நெறியொன்று அமைத்துள்ளனர். அணிகொள்கையில் ஒரு குறை வை.  அன்னமுண்ணும்போது ஒரு துளி கசப்பும் இலையில் வை. செல்வக்குவையில் ஒரு பிடி அள்ளி பிறருக்கு அளி. அரசே, இல்லத்தில் ஒரு சாளரக்கதவை எப்போதும் மூடி வை. அகல்களில் ஒன்றில் சுடரில்லாமலிருக்கட்டும். அதுவே வாழ்நெறி” என்றார் அந்தணர்.

“வெறுமையும் முழுமைகொள்ளலாகாது என்றறிக! எனவே நீர் சேந்தும்போது ஒரு குவளை மிச்சம் வை. மலர்கொய்யும்போது ஒரு மலர் மிஞ்சியிருக்கட்டும். மைந்தரைக் கொஞ்சும்போது ஒரு சொல் உள்ளத்திலேயே எஞ்சட்டும்” என்றார் அவர். “பெருக்கத்தில் பணிவென்று மூதாதையர் சொன்னது இதையே. செல்வம் இன்பமென மாறும்போதே பொருள்கொள்கிறது. ஆணவமென இருக்கையில் அது நோய்க்கட்டியே ஆகும்.”

எண்ணம் திரள நோக்கிக்கொண்டிருந்த ருத்ரனிடம் “இப்பெருநகர் முழுமைகொண்டிருக்கிறது. இதன் அனைத்து முகடுகளும் பழுதற்ற வடிவுடன் உள்ளன. அனைத்து உப்பரிகைகளும் கொடிகள் பறக்க ஒளிகொண்டுள்ளன. இதன் அனைத்துச் சாளரங்களும் வாயில்களும் விரியத் திறந்துள்ளன. இது தெய்வங்களுக்கு விடப்படும் அறைகூவல். உன் நலம்நாடியே இதை சொல்கிறேன். இப்பன்னிரண்டாயிரம் முகடுகளில் ஒன்றை இடித்துவிடு. அந்தக் குறை இந்நகரை வாழச்செய்யும்” என்றார் அந்தண முதியவர்.

சினந்தெழுந்து கைகளை தட்டியபடி த்வஷ்டா கூவினான் “ஒளி வளருமென்றால் இருளும் உடன்வளருமென்றறிக, அந்தணரே! மலைகளைவிடப் பெரிது மலைநிழல் என்று உணர்க! முழுமையை வென்றபின் நான் மானுடனல்ல, அசுரனுமல்ல. நானே தெய்வம்.” அந்தணர் முகம் சுளித்து “தருக்கி நிமிரலாகாது, அரசே. தெய்வமென்று தன்னை உணர்தலைப்போல மானுடன் தெய்வங்களுக்கு இழைக்கும் பிழை பிறிதொன்றில்லை” என்றார்.

“ஆம், தெய்வங்களைப்போல வெல்வது என்றால் அது பிழை. தண்டிப்பதென்றால் பெரும்பிழை. அடைவதென்றால் பிழையினும் பிழை. ஆனால் படைப்பதென்பது பிழையல்ல. படைத்து திரும்பி நோக்கி இது நான் என்றுணர்பவனை தெய்வமென்றாக்குவது தெய்வங்களைப் படைத்த வல்லமை” என்றான் த்வஷ்டா. “ஆம், உன்னால் படைக்கமுடியும் என்று உணர்ந்துவிட்டாய். வென்றவனென்று உன்னை உணர்ந்துவிட்டாய். இனி நீ ஓர் அடி எடுத்து பின்னால் வைக்கலாம். ஒரு முகடை இடி. ஓர் உப்பரிகையையாவது அழி” என்றார் அந்தணர்.

“அதை எந்தக் கலைஞனாலும் செய்யமுடியாது, அந்தணரே. அந்தக் குறையின் சிறுபுள்ளியிலேயே சென்று மோதிக்கொண்டிருக்கும் அவன் சித்தமெல்லாம். அதை வெல்லாமல் அடுத்த படைப்பை அவன் ஆக்கமுடியாது. அறிந்து ஒரு படைப்பில் குறைவைத்த கலைஞன் வாளெடுத்து தன் கைகளை தானே அறுத்தெறிந்தவன். இதை வென்றபின் இனிமேல் என்ன என்றே நான் எழமுடியும்” என்றான் பொற்சிற்பி.

அந்தணர் தன் உருமாற்றி மணிமுடியும் ஒளிர்படையும் கொண்டு எழுந்தார். பெருங்குரலில் இந்திரன் சொன்னான் “நான் தேவர்க்கரசன். எனக்கிணையாக ஒன்றை நான் ஒப்பக்கூடாதென்பதே தெய்வங்கள் எனக்கிட்ட ஆணை. இம்மணிமாளிகையை நான் அழித்தாகவேண்டும். அதை அழிக்க வேண்டாமென்றுதான் நானே உன்னிடம் வந்தேன்.” அவன் எவரென உணர்ந்ததும் மேலும் சினம்கொண்டு “இது போருக்கான அறைகூவல். இதை எதிர்கொள்ளவேண்டியவர் என் உடன்பிறந்தார் இருவர்” என்றான் த்வஷ்டா.

“ருத்ரனே கேள், என்னை எதிர்த்து எவரும் இன்றுவரை வாழ்ந்ததில்லை. அழியவேண்டாம் என்று உன்னிடம் கோருகிறேன்” என்றான் இந்திரன். “படைக்கப்பட்டுவிட்ட ஒன்று அழிவதில்லை. அது பிறிதொரு படைப்புக்குள் தன்னை செலுத்திக்கொண்டுவிடும்” என்றான் த்வஷ்டா. சினந்து தன் வாளை நீட்டியபடி அவனை அணுகி இந்திரன் கூவினான் “இக்கணம் உன்னிடம் எச்சரிக்கிறேன்.  அந்த மாடங்களில் ஒன்றை இடி. அந்த உப்பரிகைகளில் ஒன்றையேனும் உடை!”

“இயலாது, இந்திரனை இங்கு வரவழைத்தது அது என்று உணரும்போது அதை ஆக்கியவன் என்று என் உள்ளம் உவகையே கொள்கிறது” என்றான் த்வஷ்டா. “தணிந்து கேட்கிறேன், அதன் வாயில்களில் ஒன்றையேனும் மூடி வை” என்றான் இந்திரன். “நான் இக்கலைவடிவை அழித்தேன் என பெயர்கொள்ள விழையவில்லை. எண்ணிச்சொல்!” த்வஷ்டா “எண்ணவே வேண்டியதில்லை, இது இங்கு இவ்வாறே இருக்கும்” என்றான். “ஒரு அகல்சுடரையாவது அணைத்து வை” என்றான் இந்திரன். “ஒரு துளி குங்குமம்கூட அந்நிலத்தில் விழுந்து கறையாகாது” என்றான் த்வஷ்டா.

சினத்தால் உடல் ததும்ப நின்று நோக்கியபின் மீண்டும் ஒரு புறாவென மாறி தேவர்க்கிறைவன் மறைந்தான். அவன் செல்வதை நோக்கி நின்ற த்வஷ்டாவிடம் அவன் மூத்தவர் இருவரும் வந்தனர். “எல்லைகடந்து ஒரு புறா நகருக்குள் வந்தது என்று அறிந்தேன்” என்றான் அஜைகபாத்.  “என் கூர்முனைகள் அதை கிழிக்கவில்லை என்று கண்டேன்” என்றான் அஹிர்புத்ன்யன். “வந்தவன் இந்திரன். நம் நகர்முழுமை கண்டு நெஞ்சழிந்து மீள்கிறான்” என்றான் த்வஷ்டா.

[ 7 ]

மகாவீரியமென்னும் அசுரர்பெருநகரை வெல்ல எண்ணிய இந்திரன் தன் படைத்தலைவர்களை அழைத்து அவர்களிடம் படைகொண்டு செல்வதைப்பற்றி கேட்டான். அவர்கள் ஒற்றைக்குரலில் அஜைகபாத் அமைத்த ஏழு கோட்டைகளைக் கடந்து எவரும் செல்லமுடியாது என்றனர். அஹிர்புத்ன்யனின் ஆயிரம்கோடிக் கூர்முனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் தேவர்களுக்கும் இல்லை என்றனர்.

இந்திரன் துயருடன் தன் அரண்மனையில் உலவினான். தொலைப்பயணியான நாரதரை அழைத்துவரும்படி சொல்லி அவரிடம் ஆவதென்ன என்று கேட்டான். “அரசே, போர் பயனற்றபோது சூழ்ச்சி பயனளிப்பது. சூழ்ச்சியும் பயனற்றுப் போகும்போது தவம் பயனளிப்பது. சூழ்ச்சி வழியாகவே அசுரர்களின் பெருநகரை வெல்லமுடியும்” என்றார் நாரதர். “அதற்கான வழிகளை சொல்க!” என்றான் இந்திரன்.

“சூழ்ச்சிகளில் தலையாயவை எட்டு. காமத்தால் அறிவிழக்கசெய்தல், பெருவிழைவால் நிலையழியச்செய்தல், தன் வல்லமையை மிகையென எண்ணச்செய்தல், தன் வல்லமையை குறைவென எண்ணி அஞ்சவைத்தல், அணுக்கர்களை நம்பிக்கையிழக்க வைத்தல், ஏவலர்களை நேர்மையிழக்கச்செய்தல், பொய்யிலக்குகளை நோக்கி திருப்பிவிடுதல், நட்புகளுக்குள் பகை உருவாக்கல்” என்றார் நாரதர். “அறம் வெற்றியால் மட்டுமே நிலைக்குமென்றால் அறத்தின்பொருட்டு இவற்றை ஆற்றலாம் என்கின்றன நூல்கள்.”

“இவை ஒவ்வொன்றுக்கும் உரியவர்கள் உள்ளனர். எதிரியரசு ஒற்றையொருவனை நம்பியிருக்குமென்றால் காமமும் பெருவிழைவும் கொண்டு அவனை வெல்வது உகந்த வழி. வெற்றிமேல் வெற்றிகொண்டெழும் நாட்டை மிகைநம்பிக்கை கொள்ளச்செய்யலாம். பல்லாண்டுகளாக போரிலீடுபடாத நாட்டை குறைநம்பிக்கை கொள்ளச்செய்யலாம். அடித்தளத்திலிருந்து மேல் தளம் மிக அகன்றுபோகுமளவுக்கு பெரிய நாட்டை அணுக்கர்களை சோர்வுறச்செய்தும் ஏவலரை திரிபடையச்செய்தும் வெல்லலாம். உரிய அமைச்சர்கள் இல்லாதவர்களை திசைதிருப்பிவிடலாம்” என்று நாரதர் சொன்னார். “ஆனால் எங்கும் எப்போதும் வெல்லும் வழி என்பது நட்புத்திரிபு என்னும் சூழ்ச்சியே.”

இந்திரன்  “ஆம்” என்று தலையசைத்தான். “திரிபுகொள்ளச் செய்யத்தக்கவர் இருவகை. அரசின் உச்சியிலிருப்பவர் மேலும் உச்சிநோக்கி செல்லும் தகுதிபடைத்தவர் தாங்கள் என எண்ணியிருப்பார்கள். அவர்களிடம் அவர்களின் வல்லமையும் கொடையும் உரியமுறையில் மதிக்கப்படவில்லை என்று சொல்லி உளத்திரிபடையச் செய்வது எளிது. மிகஅடித்தளத்தில் உள்ளவர்களிடம் அவர்கள் வெளியேதெரிவதில்லை என்னும் உளக்குறை இருப்பதனால் அவர்களை வெல்வதும் எளிது” என்றார் நாரதர்.

“நடுவிலிருப்பவர்களை திரிபடையச் செய்வது கடினம். அவர்களுக்கு மேலே வாய்ப்புகள் நிறைந்துள்ளன. கீழே அச்சுறுத்தும் வீழ்ச்சிகளும் தென்படுகின்றன. ஆகவே நிலைவிட்டு ஓர் அடியும் எடுத்துவைக்க அஞ்சுவார்கள்” என நாரதர் தொடர்ந்தார். “ஆனால் எவராயினும் அவர்களுக்கு எதிரியென ஒருவன் சுட்டிக்காட்டப்படவேண்டும். அவர்கள் இழந்ததை எல்லாம் பெறும் ஒருவன். அவர்கள் செல்லவேண்டிய இடங்களில் முந்திச்செல்பவன். அவர்களுக்கு என்றும் தடைக்கல்லாகி நிற்பவன்.”

“அவ்வெதிரி திரிபுக்குரியவனுக்கு மிகவும் கீழிருப்பவனாக இருக்கலாகாது. அவனை அவர்கள் திறனற்றவன் என்றே உள்ளூர எண்ணுவர். மிக மேலே இருப்பவனாகவும் எண்ணக்கூடாது. மேலிருப்பவர்களை அவர்கள் உள்ளூர அஞ்சுவர். அவனுக்கு நிகரானவனாக அவன் எண்ணுபவனாகவே எதிரி இருக்கவேண்டும். அத்தகைய ஒருவன் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே இருப்பான். அவன் மேல் நம் இலக்குக்குஉரியவன் கொள்ளும் உள்ளுறை அச்சத்தை நாம் தொட்டறியவேண்டும். தூண்டி வளர்க்கவேண்டும்.”

“அரசே, ஐந்து வகையினர் எளிதில் திரிபடையக்கூடியவர். அச்சம் கொண்டவன் திரிபடைவான். அவன் அஞ்சுவதை எளிதில் பெரிதாக்கிக் காட்டலாம். விழைவு கொண்டவன் திரிபடைவான். அவனுக்கு நாம் வாக்குறுதிகளை அளிக்கலாம். அன்பு கொண்டவர் திரிபடைவர். அவர்கள் அன்புகொண்டுள்ளவற்றின் பொருட்டு பணிவார்கள். ஆணவம் கொண்டவர்கள் திரிபடைவார்கள். அவர்களின் ஆணவத்தை புண்படச்செய்யலாம். அரசே, வீணே இருப்பவனைப்போல திரிபடையச் செய்ய எளிதானவன் எவனுமில்லை. அவனை மூச்சுக்காற்றால் ஊதிப்பறக்கவிடலாம்.”

மகாவீரியத்தைத் தாங்கி நின்றிருந்தவை நான்கு ஆமைகள். அவை ஆழுலகத்தின் அன்னையின் கைநகங்களிலிருந்து உருவானவை. கிழக்கே மஞ்சள் நிறம்கொண்ட கனகன், மேற்கே சிவப்பு நிறம் கொண்ட சோனன், தெற்கே நீலநிறமான சியாமன்,  வடக்கே பச்சை வண்ணம் கொண்ட ஹரிதன். அவை ஒன்றையொன்று நோக்கமுடியாத கோணத்தில் திரும்பி நின்று ஆழ்துயிலில் இருந்தன. ஒவ்வொன்றும் அந்நகரை அதுமட்டுமே தாங்குவதாக எண்ணியிருந்தது. அவ்வெண்ணம் அவற்றுக்குள் செரிக்காத ஊனுணவென கிடந்தது. அதன் சுமையால் அவை இனிய புன்னகையுடன் கண்சொக்கி அமைந்திருந்தன.

அப்பால் நின்று அவற்றை நோக்கியதுமே அவற்றின் உள்ளக்கிடக்கையை அரசன் புரிந்துகொண்டான். சிற்றறிவுகொண்டவர்கள் அருகருகே இருந்தால் ஒற்றை எண்ணத்தையே கொண்டிருப்பர். அவர்கள் சிற்றறிவுகொண்டவர்கள் என்பதனால் மாறாமலிருப்பர். மாறாமலிருப்பவற்றுக்கு இருக்கும் உறுதியினால் அவர்கள் மேல் பெருஞ்சுமைகள் ஏற்றப்பட்டிருக்கும். சிற்றறிவுகொண்டவர்கள் அனைத்தையும் தாங்கி அடித்தளமாவது என்பது பெரும்பிழை. மேலும் செல்லும் அறிவுகொண்டவர்கள் அனைத்தையும் தாங்கி அடித்தளமாக அமைந்து அறியப்படாமலிருக்க ஒப்பமாட்டார்கள்.

மானுடரின் இக்கட்டுகளை எண்ணி நகைத்தபடி இந்திரன் ஒரு பொற்சரடென ஒளிவிடும் நாகமென மாறி நெளிந்து அந்த ஆமைகளின் அருகே சென்றான்.  தெற்கை ஆளும் திசையாமையாகிய நீலனின் கழுத்தில் சுற்றிக்கொண்டான். “மகாபலரே, பேரெடைசுமப்பவரே, அழியாதவரே, வாழ்க! உங்களை நம்பி இப்புவியின் பெருநகர் ஒன்று அமைந்துள்ளது. எண்ண எண்ண பெருமை கொள்ளவேண்டியது இது” என்றது நாகம்.

“என் பெயர் சுவர்ணை. பொன்னொளியுடன் நான் பிறந்தபோது என்னை சிறு ஆரம்போலிருக்கிறாள் என்றனர் என் குலத்து மூத்தோர். இவள் எந்தக் கழுத்திற்கு அணி என்று வியந்தனர். என் ஊழ்நெறி நோக்கிய நிமித்திகர் நான் இப்புவியிலேயே பேராற்றல்கொண்ட ஒருவரின்  அணிகலன் ஆகும்பொருட்டு பிறந்தவள் என்றனர். என்னைச் சூடுபவரை தெய்வங்கள் தங்களுக்கு நிகரென ஏற்கும்.”

“ஆற்றல்மிக்கவரைத் தேடி நான் அலைந்தேன். புவிதாங்கும் ஆமைகள் என் மூதாதையர். வாசுகியும் சேடனும் என் குலமூத்தார். மண்மேல் எழுந்தபோது இந்நகரைக் கண்டேன். இந்நகரின் எடைதாங்கும் உங்களைப்பற்றி அறிந்தேன். உங்கள் நால்வரையும் இங்கு வந்து கண்டேன். நால்வரில் எவர் ஆற்றல் மிக்கவர் என்று அறிந்து உங்களை அணுகினேன். என்னை ஏற்று என் பிறப்புக்கு ஒரு பொருள் தருக!” என்றது நாகம்.

“ஆம், நீ எனக்கு இனியவள். என் ஆற்றலை அறிவிக்கும் அடையாளமும் கூட” என்றது நீலன். மகிழ்ச்சியுடன் நீலனின் முதுகுமேல் வளைந்தேறி நின்று “கண்டேன் புவியிலேயே ஆற்றல்மிக்கவரை. நிகரற்றவரின் துணைவி ஆனேன். நானும் நிகரற்றவளானேன்” என்றது நாகம். சினத்துடன் திரும்பிய வடக்குதிசையின் ஆமையாகிய ஹரிதன் “எவ்வாறு சொல்கிறாய், இவனே நிகரற்றவன் என்று?” என்று கேட்டது.

நாணத்துடன் விழிசரித்து “வடவரே, நால்வரில் நீங்களே செல்வர். இந்நகரின் செல்வம் அனைத்தும் குவிக்கப்பட்ட கருவூலம் குபேரமூலையிலேயே உள்ளது. அதைத் தாங்குபவர் நீங்கள். இவர்களனைவரும் உங்கள் அளிநிழல்கீழ் வாழ்பவர்களே” என்றது நாகம். “அப்படியென்றால் நான்?” என்று சீறிக்கேட்டது கீழ்த்திசையின் கனகன். நாணம் கொண்டதென நெளிந்து “நீங்களே நால்வரில் அழகர். புலரிப்பொன்னொளி கொண்டவர்” என்றது நாகம்.

மேற்குத்திசையின் சோனன் கால்களை உதைத்து திரும்பிநோக்கி “என்னை நீ அறியமாட்டாய்” என்றது. வேட்கையுடன் மூச்செறிந்து “உங்களை அறியாதோர் எவர்? நீர் நகரின் நீர்நிலைகள் அனைத்துக்கும் தலைவர் அல்லவா?” என்றது நாகம். “நாள்தோறும் பெருகும் நீர்நிலைகளை சுமப்பவன் நான். என்னைவிட எடைதாங்குபவனா இவன்?” என்றது சோனன். “தெற்குத்திசையில் மூதாதையர் அமைந்திருக்கிறார்கள். அவர்களே நாள்தோறும் பெருகும் எடைகொண்டவர்கள்” என்றது நாகம்.

“பெண்ணே நீ அறியமாட்டாய், இந்நகரின் கருவூலம்போல கணம்தோறும் பெருகும் பிறிதொன்றில்லை” என்றது ஹரிதன். “எவர் சொன்னார்? நானறிவேன், இங்கு பெருகும் ஒளியின் எடையை” என்றது கனகன். “உயிருக்கு நிகரான பிறிதேதுள்ளது?” என்றது தெற்கின்  ஆமை. அவர்களின் சொல்லாடல் பூசலாகியது. ஆமைகள் மாறிமாறி காலால் உதைத்துக்கொண்டன. அவை தலைகளால்முட்டி போரிடத்தொடங்கியபோது நாகம் வழிந்து கீழிறங்கி மறைந்தது.

நகர் அதிரத்தொடங்கியதை முதலில் உணர்ந்தவன் முதற்சிற்பியாகிய கர்மகனே. அவனுடைய கணையாழியில் இருந்த சின்னஞ்சிறு நீலமணிக்குள் ஒளிநலுங்குவதை அவன் கண்டான். “நகர் நிலையழிகிறது… கிளம்புக! அனைவரும் கூரைமீதிருந்து அகல்க!” என்று கூவினான். அவன் வெளியே வந்து அச்செய்தியை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே நகரில் வாழ்ந்த கூண்டுக்கிளிகள் நிலையழிந்து ஒலியெழுப்பலாயின. பசுக்கள் தொடர்ந்து குரலெழுப்பின. நாய்கள் ஊளையிட்டபடி வெளியே ஓடின.

அனைவரும் வெளியேறிவிடும்படி அறைகூவி நகரின் பெருமுரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அவ்வொலி கேட்டு அஞ்சியும் கூவியும் அசுரர்குலம் தெருக்களுக்கு வந்தது. கூரையிலிருந்து தூசுப்பொருக்குகள் உதிர்ந்தன. மரங்கள் திடுக்கிட்டு சருகுதிர்த்தன. பின்னர் அடிபீடம் ஆட தூண்கள் நடுங்கத் தொடங்கின. வெண்முட்டையோடுபோன்ற சுவர்களில் நீர்வரிபோல விரிசல்கள் ஓடி கொடிப்பரப்பென கிளைவிட்டுப் பரவின. கூரைப்பரப்பு பிளந்து வெண்ணிற வானம் தெரிந்தது.

பாறை பிளக்கும் ஒலியுடன் காவல்மாடமொன்று உடைந்து சரிந்தது. அந்த அதிர்வில் இரு சிறுமாடங்கள் சரியலாயின. மெல்ல கரைந்து நதிநீரில் விழும் கரைமணல்குவை என அரசமாளிகையின் முகடுகளில் ஒன்று சரிவதைக்கண்டு மக்கள் அஞ்சி கூச்சலிட்டார்கள். அடுக்குகள் வெடித்து கற்கள் சரிய அடிபட்டுப்புரளும் மலைப்பாம்பு போல  கோட்டை புரண்டுவிழுந்தது. மெல்ல நிலையழிந்து காலிடறுவதுபோல தடுமாறி மண்ணை பேரெடையுடன் அறைந்து விழுந்தது முரசுமேடை.

உயர்ந்தவை ஒவ்வொன்றாக சரியலாயின. “வெளியேறுக! வெளியேறுக!” என முரசுகள் கூவின. மக்கள் கூவியும் அலறியும் மைந்தரையும் பெற்றோரையும் அள்ளி தோளிலேற்றிக்கொண்டு நீரலைத்திரளென கோட்டையின் நான்கு வாயில்களையும் நோக்கி முண்டியடித்தனர். அவர்கள் வெளியேறும்பொருட்டு பொறிகளால் இயக்கப்பட்ட பெருவாயில்கள் திறக்கப்பட்டன. அவர்கள் மதகுமீறிய வெள்ளமென வெளியே பீரிட்டனர்.

அப்போது விட்டில்கூட்டம் மண்ணிலிறங்குவதுபோல தேவர்கள் விரித்த சிறகுகளும் கைகளில் நாணேற்றப்பட்ட அம்புகளுமாக கோட்டையைச் சூழ்ந்துகொண்டு தாக்கத்தொடங்கினர். அசுரர்கள் கூட்டம்கூட்டமாக இறந்துவிழுந்தனர். தங்கள் மக்களே கட்டுப்பாடிழந்து தெருக்களில் நிறைந்தமையால் சேற்றில் சிக்கிக்கொண்ட யானைபோலாயினர் நகரின் அசுரப்படையினர். விரைவிலேயே அவர்கள் அனைவரும் கொன்றழிக்கப்பட்டனர். ருத்ரர் நால்வரும் அரண்மனைக்குள் அமைந்த கரவுப்பாதை வழியாகத் தப்பி மண்ணுக்கு அடியில் அமைந்திருந்த கரளாகம் என்னும் சுரங்கமாளிகைக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.

இந்திரன் அந்நகரை முற்றாக இடித்தழித்தான். அதன் மக்களையும் படைகளையும் அவன் படைக்கலங்கள் கொன்று குவித்தன. அச்சடலங்களை இடிந்திடிந்து விழுந்த நகரின் மாளிகைகளே அடக்கம் செய்தன. மகாவீரியம் ஒரு பெரும் இடுகுழியாக மாறியது. அதன் பெருமாளிகை சரிந்த புழுதி விண்ணில் பெரிய குமிழி என எழுந்தது. அதில் முகில்தொட்டதும் குளிர்ந்து மழையென்றாகியது. அப்புழுதியில் அசுரர்களின் குருதியும் கலந்திருந்தது. சுற்றிலுமிருந்த காடுகள் அனைத்திலும் குருதிமழை பெய்தது.

கான்மக்கள் கைநீட்டி மழையைத் தொட்டபோது ஒட்டும்பசையென குருதியில் கைநனையக்கண்டு அஞ்சி குகைகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர். அந்தணர் வேள்வித்தீ மூட்டி அவியளித்து இந்திரனைப் போற்றி வேதம் பெருக்கினர். இடிந்தழிந்த நகர்மேல் ஏழு வண்ணத்தில் இந்திரவில் எழுந்து நிற்பதை உயிர் எஞ்சிய சிலரே கண்டனர். அவ்வில்லைக்கண்டு அந்தணர் தங்கள் வேள்விச்சாலைகளிலிருந்து வெளியே ஓடிவந்து கைகூப்பி வாழ்த்து கூவினர்.

தன் குடியுடன் கரவறையில் ஒளிந்துகொண்டு த்வஷ்டா கண்ணீர் விட்டான். “நான் படைத்தவை அழிவதைக் கண்டேன். மைந்தர்துயருக்கு நூறுமடங்கு பெரிய துயர் இது” எனச் சொல்லி ஏங்கினான். அவன் அளித்த அவியை ஏற்க முன்னோர் அனலிலும் புனலிலும் எழவில்லை. கனவுகளில் அவர்களின் முனகலோசைகளை இருளுக்குள் கேட்டான். திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவனை அவன் துணைவியாகிய சுபகை தேற்றினாள். “அனைத்தையும் மறப்போம்” என்றாள்.

“மறப்பதற்கு நிறையவே உள்ளன தேவி” என்றான் த்வஷ்டா. பொன்மாளிகையின் ஒவ்வொரு தூணையும் ஒவ்வொரு சிற்பத்தையும் மறந்தாகவேண்டும். மறக்கமுனைகையில் அவை மேலும் ஒளிகொண்டெழுந்து வந்தன. கண்மூடினால் அங்கே சென்றுலாவ முடிந்தது. “நான் சென்று மீளும் அந்நகர் எங்குள்ளது, இளையோனே?” என்று அவன் தன் தம்பியாகிய ருத்ரனிடம் கேட்டான். “அவை உங்களால் பொன்னில் செதுக்கப்படுவதற்கு முந்தைய வடிவில் உள்ளன, மூத்தவரே. பொருளில் எழாத கலையின் உலகொன்று உள்ளது. அது மண்ணுள் வாழும் விஸ்வகரின் கனவு என்கின்றனர்.”

“என் ஆணவத்தால் நால்வரையும் தோல்வியுறச் செய்தேன். என் குடியை முற்றழித்தேன்” என்று த்வஷ்டா சொன்னான். இளையோனாகிய ருத்ரன் சொன்னான் “மூத்தவரே, ஆணவம் அழிந்த சிற்பியின் கைகள் வெறும் தசைக்கொடிகள். அவன் விரல்களில் குடிகொள்ளும் தெய்வங்களுக்குரிய இன்னமுதென்பது அவன்கொள்ளும் கனவுகளே. கனவுகள் ஆணவம் செழிக்கும் வயல்கள். கனவுநிறையட்டும் உங்களுக்குள்.”

“ஆம்” என்றான் த்வஷ்டா. “நான் மீண்டு எழுந்தாகவேண்டும். என் உள்ளத்தின் அனல் முளைக்கவேண்டும்.”  ருத்ரன் “மூத்தவரே, அந்நகரிலிருந்து ஒரு கல்லை எடுத்துவரச் சொல்லுங்கள். அதை என் அனலில் இட்டு உங்கள் வஞ்சத்தை எழுப்புக! அதுவே உங்கள் படைப்புக்கு விதையாகட்டும்” என்றான். “நான் இனிமேல் படைப்பதென்றால் இந்திரனை வென்றபின்னரே அது நிகழமுடியும். இவ்வஞ்சம் நஞ்சென்று என்னுள் இருக்கையில் இனி நான் சிற்பியே அல்ல” என்றான் த்வஷ்டா.

அசுரர்கள் வெளியே சென்றால் கொன்றழிப்பதற்காக அத்தனை நீர்க்குமிழிகளிலும் விழிகளை நிறுத்தியிருந்தனர் தேவர். த்வஷ்டாவின் மைந்தர்களில் ஒருவனாகிய நளன் என்னும் குரங்கு அவர்களை ஏமாற்றி இடிந்து சரிந்த நகருக்குள் சென்றது. அங்கே சடலங்கள் வெள்ளெலும்பாகக் கிடந்தன. மண்டைகளின் சிரிப்பைக் கண்டு அஞ்சி அது கண்களை மூடிக்கொண்டது. கைநீட்டி சிக்கிய  அங்கிருந்த முதற்கல்லை எடுத்துக்கொண்டு துள்ளிவிலகித் திரும்பி ஓடிவந்தது.

அந்தக் கல்லை கையில் வாங்கிப்பார்த்தான் த்வஷ்டா. அது மூன்றுதலைகொண்ட சிம்மம். மகாவீரியத்தின் காவல்மாடங்களில் ஒன்றின் முகப்பிலிருந்த முத்திரைக்கல். “ஆம், இது ஒரு செய்தி” என்று சொல்லிக்கொண்டான். “இதுவே எஞ்சவேண்டுமென்பது ஊழ்.” ஒருமுறையேனும் அவன் அந்நகரில் அதை பார்த்திருக்கவில்லை. ஆனால் உயரத்திலமைந்து அந்நகரை அது பார்த்துக்கொண்டிருந்தது என்று உணர்ந்தான்.

அதை அவன் ருத்ரனின் வேள்வித்தீயிலிட்டான். தழலில் அலையலையென எழுந்து கரைந்து சென்றன முகங்கள். அவற்றில் மும்முகம் கொண்ட மைந்தன் ஒருவனை அவன் கண்டான். “ஆம், அவன்தான். அவன் பெயர் திரிமுகன். அவனே என் மைந்தன்” என்று கூவினான். “என் ஆற்றலெல்லாம் அம்மைந்தன் ஆகுக! பேருருக்கொண்டு அவன் எழுக! அவன் வெல்லட்டும் இந்திரனை” என்று வஞ்சினம் உரைத்தான்.

முந்தைய கட்டுரைதனிமையும் பயணமும்
அடுத்த கட்டுரைகன்யாகுமரி வாசிப்பனுபவம்