சிறுகதைகள் என் மதிப்பீடு -4

 

புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால் உண்டு. சிலம்புவித்தை கற்றுக் கொள்பவர்கள் சிலம்பை மறந்தால் அன்றி களம் நின்று போராட முடியாது., அதைப்போல மொழிநடை தன்னியல்பாக கைகளில்எழுந்து வருமளவுக்கு உள்ளம் பழகினாலன்றி இலக்கிய நடையில் சரளமான ஓட்டத்தை உருவாக்க முடியாது.

எண்ணி எண்ணி கதை எழுதுவதாகவும், ஒவ்வொரு சொல்லாகக் கதையை கோர்ப்பதாகவும் அவ்வப்போது சில எழுத்தாளர்கள் சொல்வதுண்டு. உண்மையிலேயே ஒரு எழுத்தாளர் அப்படிச் செய்தார் என்றால் அது துளிகளின் திரட்டாகவே இருக்கும். புனைவுக்கு இருந்தாகவேண்டிய ஓட்டம் அமையாது

பெரும்பாலான நல்ல கதைகள் ஒரே வீச்சில் உருவாகுபவை. ஒரு கனவு போல  உணர்ச்சிகரமான ஒரு பேச்சு போல. மௌனி சொல்லெண்ணி கதை எழுதியதாக சொல்வார்கள். அவருடைய ஒரு சில நல்ல கதைகள் தவிர மிகப்பெரும்பாலான கதைகள் வெற்றுச் சொற்கோவைகளாக இருப்பதற்கு அது ஒரு காரணம்.

கதைப்பயிற்சி என்பது மொழி தன்னிச்சையாக வெளிப்படும்படி ஆசிரியன் தன் மனதைப்பழக்குவதுதான் அதுவே எழுத்தாளனின் நடையை உருவாக்குகிறது. பல்லாயிரம்பேர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் மொழியில் ஒரு எழுத்தாளனுக்கு மட்டும் தனித்துவமான அடையாளம் எப்படி உருவாகிறது? அவனுடைய முகம் எப்படி தனித்துவம் வாய்ந்ததோ கைரேகை எப்படி தனித்துவம் வாய்ந்ததோ அப்படித்தான் மொழியும்.

ஒவ்வொருக்கும் அவர்களுக்கான அந்தரங்கமான உள் மொழி ஓட்டம் ஒன்று இருக்கும். மனம் என்று அவன் அதைத்தான் உணர்ந்து கொண்டிருப்பான். அந்த மொழிக்கு மிக நெருக்கமாக எழுத்து மொழியைக் கொண்டு வரும்போது அது அவருக்கு மட்டுமே உரித்தான நடையாக மாறுகிறது.

எழுத வரும் எவரும் எழுதும் சூழலில் பிறர் எழுதுவதைப்படித்து அதன் பாதிப்பில்தான் எழுத வருகிறார்கள். எந்தப்பெரும் எழுத்தாளனுக்கும் தொடக்கத்தில் பிற எழுத்தாளர்களின் நேரடி பாதிப்பு இருக்கும். எழுத எழுத அப்பாதிப்பு குறைந்து அவனுடைய ஆழ்மன மொழி நேரடியாகவே புனைவு மொழியாக ஆகும்.

இப்பரிணாமம் தொடர் பயிற்சியால் நிகழ்வது. சலிக்காமல் நிறைய எழுதுவதன் மூலமாகவே இது சாத்தியமாகும். ஆனால் இவ்வாறு எழுதும் படைப்புகள் அனைத்தும் பிரசுரமாகும் என்றால் ஆரம்பத்திலேயே அவ்வெழுத்தாளனைப் பற்றிய பிழையான சித்திரம் உருவாகிவிடுகிறது. இன்றைய வாசகன் மிகப்பொறுமையற்றவன் அதிகபட்சம் ஒர் எழுத்தாளனுடைய இரண்டோ மூன்றோ கதைகளை அவன் வாசித்துப் பார்க்கக்கூடும். அத்துடன் அவ்வெழுத்தாளனைப் பற்றிய உளச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்வான். அதை அவனால் கடக்க முடியாது. கடக்கும் அளவுக்கு பொறுமையை, கவனிப்பை அவன் எழுத்தாளனுக்கு அளிப்பதில்லை.

மிகச்சில எழுத்தாளர்கள்தான் அந்த ஆரம்பகட்ட எதிர்மறைச் சித்திரத்தை கிழித்து வெளிவந்திருக்கிறார்கள். மிக வலுவான இரண்டாம்கட்ட கதைகள் வழியாக இது நிகழ வேண்டும். உதாரணம், கந்தர்வன். சாதாரண தீக்கதிர்க்கதைகளைத் தான் அவர் வாழ்நாளில் பெரும்பகுதியிலும் எழுதியிருக்கிறார். ஆனால் கடைசிச் சில வருடங்களில்  எழுதிய கதைகள் அவருக்கு இலக்கியத்தில் அழியாத இடத்தை உருவாக்கிக் கொடுத்தன.

இளம் எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டும். அதேசமயம் வெற்றிபெற்றது என்று அவர்களுக்கு உள்ளூர நம்பிக்கை வரும் படைப்பை மட்டுமே வெளியே அளிக்கவேண்டும். இவற்றை என் அனுபவத்திலிருந்து தான் சொல்கிறேன். எனது முதல் கதை பிரசுரமானது எனது எட்டாவது வகுப்பு படிக்கும்போது. கல்லூரி இறுதியாண்டில் மட்டும் வெவ்வேறு பெயர்களிலாளாக நாற்பது கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆனால் எனது முதல்கதை என்று நான் இன்று அறிவிக்கும் கதை கணையாழியில் வெளி வந்த நதி.

அதற்கு முன்பு எப்படியும் இருநூறு கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. அவற்றில் இருபது கதைகளை இன்றைய இலக்கிய தரத்தைக் கொண்டவை என்றே சொல்ல முடியும். ஆனால் அவற்றை நான் ஒட்டுமொத்தமாக நிராகரித்தேன். அக்காலத்தில் என் பெயரிலேயே வெளிவந்த கதைகளைக் கூட பின்னாளில் தொகுப்புகளில் எடுத்துக் கொண்டதில்லை.

வேறு பெயர்களில் நான் பிரசுரித்ததற்கு முக்கியமான காரணம் அவை என் பெயருடன் தொடர்பு படுத்தக் கூடாது என்பதுதான். அன்று அவ்வலவு எழுதி பிரசுரத்திற்கு அனுப்பியமைக்கு அப்போது பணம் கிடைப்பதும் ஒரு காரணமாக இருந்தது. எனது கல்லூரி வாழ்க்கை முழுக்க எழுத்தில் ஈட்டிய பணத்தில் தான் கொண்டாடப்பட்டது.

ஆக நிறைய எழுத முயலும்முனையும் எழுத்தாளன் குறைவாகவே பிரசுரிக்கவேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்டிருக்கிறான். இந்த சமன்பாடைத்தான் எழுத்தாளன் கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு முக்கியமான இடர் உள்ளது நிறைய எழுதும் காலகட்டத்தில் எல்லாமே எழுதுவதற்குரிய கருத்துக்களாக கண்ணில் படும். சாலையில் செல்லும் போது ஒரு நிகழ்வு சற்றே கவனத்தைக் கவர்ந்தால் அக்கணமே அது ஒரு கதையல்லவா என்று தோன்றிவிடும். உடனே அமர்ந்து அதை எழுதத்தோன்றும்.

இளம் எழுத்தாளன் எழுத ஆரம்பிக்கும் காலத்தில் எழுதிப்பார்ப்பதற்கான ஒரு பயிற்சிமுறையாக தோன்றுவதை எல்லாம் அவ்வபோது எழுதிக் கொண்டிருப்பது நல்லதுதான். வாரம் ஒரு சிறுகதை வீதம் ஒரு வருடம் எழுதக்கூடிய ஒருவன் அதற்கு அடுத்த வருடத்திலேயே தன்னியல்பான மொழிநடையை அடைந்திருப்பான்.

ஆனால் அதற்கு அடுத்தகட்டத்தில், கதைகளைப் பிரசுரித்து கவனத்தை கோரும் நிலையில் அவ்வாறு கண்ணில்பட்ட அனைத்துக் கதைக்கருக்களையும் எழுதுவது என்பது தனக்கு எதிராக தானே போஸ்டர் ஒட்டிக் கொள்வதற்கு நிகர் .அன்றாட வாழ்க்கை எழுதுவதற்கான கருப்பொருள்கள் நிறைந்ததுதான். வாழ்க்கைநிகழ்வுகளில் பிறரிடம் நாம் சொல்ல விரும்பும் ஏதோ ஒன்று ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்குள் அது வரவேண்டுமா என்பது முக்கியமான வினா.

இரண்டு காரணங்கள் ,ஒன்று அவை ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டவை. ஒரு விதவையின் துயரம் என்பது இன்றும் யதார்த்தமே. ஆனால் ஆ.மாதவய்யா நூறு வருடங்களுக்கு முன் எழுதிய கரு அது. இன்று அதை திரும்ப எழுதும்போது எந்தப் புதுமையும் அதில் வாசகனுக்கு இல்லை. வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கைவிடுவது இன்றும் ஒரு யதார்த்தம். ஆனால் வாசகன் அதில் புதிதாகத் தெரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை. எழுதிச்சலித்துவிட்ட விஷயம் அது

நவீன இலக்கியத்திற்குள்  நுழையும் ஓர் அனுபவம் அல்லது அறிதல்  அனன்யதா என்னும் வடமொழிச் சொல்லால் குறிக்கப்படும் ஒரு குணத்தைக் கொண்டிருக்கவேண்டும். பிறிதொன்றிலாமை என்று தமிழில் அதை சொல்லலாம். வேறெங்கும் கிடைக்காத, வேறெவரும் சொல்லாத ஒரு விஷயம் அதில் நடந்திருக்க வேண்டும். அந்த அம்சம் இல்லாதபோது அது எவ்வளவு கவனமாக எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் தன் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது.

அதற்கு ஒரே வழி அந்தக் கதை உங்களில் எந்த அளவுக்கு பாதிப்பை செலுத்தியிருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்வதுதான். பலநாட்களுக்கு அந்த அனுபவம் உங்களைச் சீண்டியதா, நிம்மதியிழக்க வைத்ததா என்று கவனியுங்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகும் அந்த நிகழ்வு உங்களில் அதிர்வலைகளை எழுப்பினால் அது கதை ஆகும் தகுதி கொண்டது.

ஒர் அனுபவத்திலிருந்து மேலும் மேலும் என அறிதல்கள் எழுந்துவருமென்றால் மட்டுமே அது படைப்பாகத் தகுந்தது. ஒர் அனுபவம் வாழ்க்கையில் உங்களுக்கு மறக்கமுடியாத படிப்பினையாக அமையுமென்றால்தான் அது எழுதத் தக்கது. அந்த மேலதிக அழுத்தம் அனுபவத்துக்கு இல்லாத போது அதை புனைவாக்குவதைப்பற்றி மறுசிந்தனை செய்ய வேண்டும்.

இங்கு நம்மை ஏமாற்றும் அம்சம் ஒன்று உண்டு. மேதைகள் என்று நாம் சொல்லும் பெரும்படைப்பாளிகள் மிக எளிய அனுபவங்களை கதையாக்கி இருக்கிறார்கள். அசோகமித்திரன் அவ்வகையில் இளம்எழுத்தாளர்களை மிகவும் ஏமாற்றும் ஒரு படைப்பாளி.

உதாரணமாக கொத்தனார் ஒருவன் சிமெண்டு வாங்குவதற்கு காசுவாங்கி அந்தக் காசை மது அருந்துவதற்கு செலவிடும் ஒரு தருணத்தை கதையாக்கி இருப்பார். அதைப்போன்ற நூற்றுக்கணக்கான தருணங்கள் நம் வாழ்க்கையில் இருக்கும், அதை நாமும் கதையாக்கலாமே என்று தோன்றும். ஆனால் நாம் அசோகமித்திரன் அல்ல.

மேதைகள் இரண்டு வகையில் கதையை முக்கியமாக்குகிறார்கள் ஒன்று, ஒரே சாதாரண நிகழ்வைக் கதையாக்கும்போது அதை மிகச்சரியாக மொத்த வாழ்வுக்கும் பொருத்துவதனூடாக வாழ்வின் பொது உண்மை ஒன்றைச் சொல்ல அவரால் முடிந்திருக்கும். சூரியனை நோக்கி ஒரு சரியான கோணத்தில் கண்ணாடிக்கல்லை திருப்பி வைப்பது போன்றது அது. அசோகமித்திரனின் பல கதைகளை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மேலோட்டமான வாசகப் பார்வையில் அன்றாட வாழ்க்கையின் ஒரு தருணம் போன்றிருக்கும் அக்கதை எதை பிரதிநிதித்துவப்படுத்துவது என்று பார்த்தால் மொத்தவாழ்க்கையின் பொருளின்மையோ பொருளையோ காட்டி நிற்பதைக் காணமுடியும். உதாரணம் புலிக்கலைஞன்.

இன்னொன்று அசோகமித்திரன் ஒரு கதை எழுதும்போது அசோகமித்திரன் எழுதிய புனைவுலகு என்ற பிரம்மாண்டம் அதற்கு பின்னணியாக அமைந்துள்ளது. அதுவும் அந்தக் கதைக்கு பொருள் கொடுக்கிறது. அது அசோகமித்திரனின் கதை என்பதனாலேயே நாம் மேலதிகமாகக் கவனிக்கிறோம். அவருடைய வாழ்க்கைப்பார்வை என்ன அவருடைய தரிசனம் என்ன என்று நமக்குத் தெரியும், அதுவும் சேர்ந்து அந்தக் கதைக்கு அர்த்தத்தை உருவாக்குகிறது.

காஃப்காவின் குட்டிக் கதைகளை தனியாக எடுத்து ஒரு பிரசுரித்தால் அது பொருளற்ற சாதாரணமான ஒரு பத்தியாக அமையும் .ஆனால் காஃப்காவின் தனிவாழ்க்கையும் காஃப்காவின் புனைவுலகும் சேர்ந்து அந்தக் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. ஆக இளம் எழுத்தாளர்கள் எளிய கருக்களை எடுப்பதென்பது மிக அபாயகரமானது.

 

 

*

download (1)
கே ஜே அசோகுமார்

 

 

இந்த சிறுகதை விவாதத்தில் நான் எடுத்துக் கொண்ட மூன்று கதைகளுமே  மேலேசொல்லப்பட்ட இக்குறைகளைக் கொண்டவை. இவற்றில் கே.ஜே.அசோக்குமாரின் பாம்புவேட்டை என்னும் கதை எழுதித் தேர்ந்த ஒரு கையால் உருவாக்கப்பட்டது என்பதற்கான தடயங்கள் உள்ளன. சரளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது அக்கதை. பாவண்ணன் போன்ற முன்னோடி எழுத்தாளரின் பாதிப்பும் உள்ளது.

நிகழ்வுகளையும் நினைவுகளையும் எண்ணங்களையும் பின்னி ஒற்றை மொழிப்பரப்பாக ஆக்க ஆசிரியரால் முடிந்திருக்கிறது . சரளமான வாசிப்பனுபவம் அளிப்பதாக உள்ளது அக்கதை. ஆகவே மொழி நடை சார்ந்து இவருக்கு மேலதிக பயிற்சிகள் தேவையில்லை என்ற எண்ணமே ஏற்படுகிறது.

சூழலை நுணுக்கமான தகவல் வழியாகச் சொல்லவும் கதாபாத்திரங்களை கண்முன் காட்டவும் அசோக்குமாரிடம் திறமை இருக்கிறது. இன்று இக்கதையை வைத்துச் சொல்லப்போனால் அவருடைய எதிர்காலச் சாத்தியங்கள் சரளமான மொழிநடையிலும் நுண்தகவல்களைக் கொண்டு சூழலையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கும் திறமையிலும் அமைந்துள்ளன என்று தோன்றுகிறது.

இக்கதையிலிருந்து தெரியும் அவரது பலவீனங்கள் என்ன? முதலாவதாக, ஒரு கதையாக ஆவதற்கான அழுத்தம் இல்லாத எளிய கருவொன்றை எடுத்திருக்கிறார் என்பது. ஒரு வணிகன் தனது இரைகளை எப்படி வீழ்த்துகிறார் ,அவர் முன் வந்து சேரும் ஒருவர் எப்படி இரையாக ஆகிறார் என்பதே கரு. அதற்கு உருவகமாக அந்த எலியைப் பின்தொடரும் சாரைப்பாம்பைப் பின்தொடரும் பெரிய பாம்பு என்னும் உருவகத்தை பயன்படுத்தியிருக்கிறார்.

வணிகரின் அந்தக் குணம் மிக இயல்பான ஒன்று. உண்மையில் வணிகர்களைப்பற்றி ஒரு பொதுப்படுத்தல் மட்டும்தான் இங்கு இருக்கிறது. மேலதிகமாக  கதைசொல்லி அறிந்து, நமக்குச்சொல்லும் வாழ்க்கை உண்மை என்ன? இக்கதையினூடாக மட்டுமே வாசகன் அறிந்து கொள்வது என்ன? அவ்வறிதல் இக்கதையாலன்றி எங்கும் அறியப்படமுடியாத ஒன்றா? இல்லை என்பதே பதில்

இந்த குறையால் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்த முடியாமல் தேங்கிவிடுகிறது இந்தக் கதை. இதை கதை சொல்லியின் பார்வையின் போதாமை என்று சொல்லலாம். ஆசிரியர் அவரை வெகுவாக பாதித்த ஒன்று வாசகனையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி பாதிக்காத ஒன்றை புனைவாக்க வேண்டுமா என்று அவர் யோசிக்கலாம்.

கதைத்தொழில்நுட்ப ரீதியாக இக்கதையின் குறைபாடுகள் என்ன?  புறவயமான எளிய தகவல்களை சரளமாகச் சொல்லிச் செல்லும்போது அவை வாசகன் மனதில் நின்றாக வேண்டுமென்பதில்லை.இக்கதைக்குள்  ஒரு விபத்து சாதாரணமான வார்த்தையில் சொல்லப்படுகிறது. அந்த விபத்தைப்பற்றி மேலதிகமான ஒரு ஆர்வம் வாசகனிடம் உருவாகும்போது விபத்துக்குள்ளானவன் ஆஸ்பத்திரியில் இருக்கும் சித்திரம் வந்துவிடுகிறது. ஆஸ்பத்திரியில் அவனுடைய எண்ணங்களைப் பின் தொடரும்போதே அவன் பணியாற்றும் அந்த வணிகரின் உளச்சித்திரத்திற்குள் சென்றுவிடுகிறது கதை. வணிகர்கள் வழியாக சென்று அவருடைய வாழ்க்கை நோக்கைச் சென்றடைந்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்து கதை முடிகிறது. இத்தகைய ஊசலாட்டத்தை சிறுகதை வாசகன் எதிர்மறையாகத்தான் பார்ப்பான். அவனுள் கதை திரளாமல் ஆசிரியரே கதைக்களங்களை மாற்றிக் கொண்டிருப்பதுபோல் உள்ளது.

கதை இப்படி அழுத்தமாக எதையும் உருவாக்காமல் நழுவி உருண்டு செல்வதே இதை வாசக அனுபவமாக ஆக்காமல் நின்றுவிடச்செய்கிறது. கதை வாசகனை உள்ளே இழுத்தபின் அவனுடைய ஊகங்களையும் கருத்தில்கொண்டு தன்னை வளர்க்கவேண்டும். அவன் ஆர்வத்தைத் தக்கவைக்கவேண்டும். ஆகவேதான் சிறுகதையில் எது தொடங்குகிறதோ அதுதான் வளரவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இக்கதையில் விபத்து, ஆஸ்பத்திரி என கதைவிரிந்தபின்னர் தொடர்பே இல்லாமல் அந்த முதலாளி உள்ளே வருகிறார்

எளிதில் இதை சீரமைத்திருக்கலாம். உதாரணமாக இக்கதை விபத்தாகி ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது அவனுடைய முதலாளி வந்து பார்க்கும் கணத்தில் தொடங்கியிருந்தால் வாசகனுக்கு இவன் ஆஸ்பத்திரியில் இருப்பதும் அவன் முதலாளியினுடைய குணச்சித்திரமும் ஒரே சமயத்தில் குவிமையமாக ஆகியிருக்கும். இரண்டையுமே சொல்லிவந்து கதையை முடித்திருக்க முடியும்

இன்னொரு மிகப்பெரிய பலவீனம் என்பது இக்கதையின் மையமாக உள்ள அந்த வணிகர் வெறுமே நினைவுகளில் மட்டும்தான் வருகிறார் என்பது. அப்படி வரக்கூடாதா என்று கேட்டால் எப்படியும் வரலாம் என்பதே பதில். அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் கதைக்குள் நேரில் வரும் ஒரு கதாபாத்திரம் அளிக்கும் அழுத்தமான சித்திரம் ஒரு கதாபாத்திரத்தின் நினைவில் வரும் கதாபாத்திரத்தால் அளிக்கப்படுவதில்லை. நினைவில் வரும் கதாபாத்திரம் ஒருவகையில் வழுக்கிச் செல்லும் சித்திரம்தான்.

இக்கதையின் இன்னொரு பிழை என்பது கதைத்தொடக்கத்திலேயே ஒரு பெண்ணைப்பற்றிய குறிப்பு வருவது. எவ்வகையிலும் அது கதைக்குள் வளரவில்லை. எதையும் சுட்டவில்லை. இது போலிக்குறிப்பு என கதைத்தொழில்நுட்பத்தில் சொல்லப்படும். கதையில் ஒரு துப்பாக்கி சொல்லப்பட்டால் கதைமுடிவுக்குள் அது வெடித்தாகவேண்டும் என்பது இதைத்தான். ஏனென்றால் வாசகன் அங்கே கற்பனைசெய்ய ஆரம்பித்துவிடுகிறான். அவனை விட்டுவிட்டு ஆசிரியன் தன்போக்கில் செல்லமுடியாது.

இக்கதையில் மறைமுகமாக நிகழ்வுகள் நிறைந்துள்ளன. இளைஞனாக வேலைக்குச் சேர்வதிலிருந்து விபத்துக்குள்ளாவது வரை அவன் வாழ்க்கை முழுக்க சொல்லப்படுகிறது. ஆனால் நேரடியாக நிகழ்வுகள் என்று எதுவுமே இல்லை. ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் ஒருவனுக்கு அவன் உதவியாளன் உணவு கொண்டு வருவதும் செல்வதும் தவிர எதுவுமே இல்லை.  ஆகவே இது கதையல்ல. ஒரு சாதாரன அனுபவப்பதிவு மட்டுமே

கதைக்குள் ஒரு களம் இருக்க வேண்டும் ஒரு வாழ்க்கை தொடங்கி, ஒரு கண்டடைதலை நோக்கிச் சென்று, முடிவடைய வேண்டும். சிறுகதை என்பது  வலுவான திருப்பம் மூலம் உயிர் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு சாதாரண கண்டடைதலை சொல்வதற்காகச்சென்று முடியும் அனுபவக்குறிப்புக்கு சிறுகதை என்னும் வடிவம் இல்லை.    முடிவின் கணத்தில் மீண்டும் தொடங்கும் ஒன்று, முடிவுக்கணத்தில் எதிராகத் திரும்பி புதிய வளர்ச்சியை அடையும் ஒன்று, தான் சிறுகதையாக கருதப்படமுடியும். அல்லது மேலதிகமான கவித்துவ உட்குறிப்புகள் மூலம் விரிவடையும் ஒன்று

இம்மூன்றுமே நிகழாதபோது இக்கதையை நினைவுகளின் மூலம் வெளிப்படும் ஒரு வாழ்க்கைச் சித்திரம் என்பதற்கு அப்பால் சிறுகதையாகச் சொல்லி வகுத்துவிட முடியாது. அத்துடன் அவ்வாழ்க்கை சித்திரமும் வாசகனுக்கு எந்த புதிய அறிதலையும் அளிக்காமல் நின்றுவிடுகிறது. சிறுகதை ‘நிகழ’ வேண்டும். அதன் குணச்சித்திரங்களுடன் வாசகன் உடன் வாழவேண்டும். அவ்வாழ்க்கை களத்திலிருந்து முன்பு அறிந்திராத ஒரு மெய்மையை வாசக்ன் அறிய வேண்டும். அது  இக்தையில் நிகழவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

p

 

யாதும் காமமாகி நின்றாய் மகேந்திரன் மிக ஆரம்பநிலையில் எழுதிய ஒரு கதை. அனேகமாக அவருடைய முதல்கதையாக இருக்கலாம். இக்கதையிலும் சிறுகதையின் வடிவம் என்பதோ பார்வை என்பதோ ஒருமையோ இல்லை, ஓர் ஆணும் பெண்ணும் ஒரு புதுநிலத்திற்குச் சென்று உல்லாசமாக இருக்கிறார்கள் என்பது ஒரு சிறுகதை அல்ல ,அது தொடக்கம் மட்டும்தான். இக்கதையை ஒருவரிடம் சொன்னால், சரி அப்படி இருந்து என்ன ஆனார்கள் என்றுதான் கேள்வி வரும். அந்தக் கேள்விக்கான விடையே சிறுகதை. ஆகவே ஒரு சிறுகதைக்கான முதல் பத்தி மட்டும் தான் விரித்து எழுதப்பட்டது போல் உள்ளது இக்கதை.

 

ஒரு பெண்ணை காமத்துடன் அணுகும் ஒருவனின் களியாட்டத்தை ஓரளவுக்கு தனிப்பட்டக் குறிப்புத்தன்மையுடன் எழுத முயன்றிருக்கிறார். புனைவெழுத்தின் விதிகளில் ஒன்று மிக அந்தரங்கமான ஒன்றை கூடுமானவரை புறவயமாக சொல்ல முயலவேண்டுமென்பதுதான். அப்போது தான் அதற்கு ஒரு தெளிவான வெளிப்பாடு அமையும். அந்தரங்கமான ஒன்றை மேலும் அந்தரங்கமான மொழியில் சொல்வதென்பது ஒரு பெரிய புனைவுப் பரப்பிற்குள் நிறுத்தித்தான் சாத்தியமாகும். அதுவும் மொழிதேர்ந்த எழுத்தாளன் மட்டுமே செய்யக்கூடியது அது. வெறும் துயரத்தை வெறும் காதலை வெறும் தனிமையை மட்டும் மொழியாக மாற்றினால் அது எங்கும் தொடர்புறுத்தாமல் வெறும் மொழி விளையாட்டாக மட்டுமே நின்றுவிடும்.

இக்கதையின் கதாபாத்திரங்கள் எவையும் நமக்கு அணுக்கமானவை அல்ல. ’அவன்’ மட்டும் தான் ’அவள்’ மட்டும் தான். அவர்களின் முகமோ குணமோ திரளவில்லை. அவர்கள் செல்லும் நிலமும் காட்டப்படவில்லை. அவர்களின் உணர்வுகளில் ஒரு சிறு பகுதி மட்டுமே சொல்லப்படுகிறது. அப்படி சொல்லப்பட்ட ஒன்றும் நமக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒன்று. இதில் மேலதிகமாக வாசகன் கவனம் கொள்ள வேண்டுவது என்ன? வாசகன் எந்த உணர்வை அடைய வேண்டுமென்று ஆசிரியர் விரும்புகிறார். இவ்வனுபவத்திலிருந்து கதாசிரியன் பெற்ற பகிர விரும்பும் அறிதல் என்ன?

வெறும் உணர்ச்சிகளை புனைவுகள் என்று எண்ணி மயங்கும் ஒரு நிலை இளம் எழுத்தாளனின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்வது. அதை சிறுகதை எழுத்தின் பிழைபுரிதல்களில் ஒன்றாகவே சொல்லலாம். தத்துவ சிந்தனையில் உள்ள fallacy என்று சொல்லப்படும் பிழைபுரிதல்களில் ஒன்று உணர்வு நிலையை சிந்தனை என்று மயங்குவது. தத்துவக்கல்வி பெறும்போது நமக்கு இதை ஆசிரியர்கள் புரியவைப்பார்கள். கால-இடத்திற்குள் நிற்கும் ஒர் அனுபவத்தை மானுடப் பொதுமையாக்குவது இரண்டாவது பிழைபுரிதல். புனைகதையிலும் ஏறத்தாழ அது பொருந்தி வரும். ஒரு தனிமனித அனுபவத்தை ,சாதாரண உணர்வுநிலையை கலை வெளிப்பாடென்று கருதும் பிழையே இக்கதையில் நிகழ்ந்துள்ளது.

தூயனின் தில்லையம்மா விமர்சகர்கள், வாசகர்கள் பலர் சொன்னது போல மிக எளிமையான ஒரு கதை .வணிகக்கேளிக்கை எழுத்தின் மாதிரிவடிவம் இது, அதற்குமேல் ஒன்றுமில்லை. வஒவ்வொரு காலகட்டத்திலும் புனைகதையில் டெம்ப்ளேட்டுகளை அல்லது மாதிரிவடிவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவான வாசகனுக்கு இந்த மாதிரிவடிவங்கள் தான் அதிகம் வந்து சேர்கின்றன. தினமலர் கவிதைகளை எடுத்துப்பார்த்தால் முதிர்கன்னி, அனாதை விடுதியில் இருக்கும் பெற்றோர், வரதட்சினைக் கொடுமை, சாதிக்கொடுமை என்று ஒரு சில தலைப்புகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒரேவகைக் கவிதைகள் வந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.

மாதிரிவடிவங்கள் உண்மையில் முதன்மையான படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நல்ல படைப்புகளின் நகல்கள். அந்த நல்ல படைப்புகளின் வடிவ அமைப்பை மட்டும் ஓர் அச்சாக ஆக்கிக்கொண்டு அதைப்படைக்கிறார்கள். தேர்ந்த வாசகனுக்கு சலிப்பூட்டினாலும் ஒருவகையான இலக்கிய நிகழ்வுதான் இது. இலக்கியம் என்பது நீரில் கல்விழுந்த அலைவட்டம். அவ்வட்டம் விரிந்து விரிந்து சாதாரண மனிதர்களைச் சென்றடையும்போது எளிமையான மாதிரிவடிவங்களாக மாறித்தான் செல்லமுடியும்.

ஒரு பொதுவாசகன் அந்த மாதிரிவடிவங்கள் வழியாகத்தான் இலக்கியத்துக்குள் வருவான். முதல் வட்டம் சலித்து இரண்டாவது வட்டத்தை வந்து சேர்வான். இரண்டாவது வட்டத்திலிருந்து மூன்றாவது வட்டத்திற்கு வந்து கடைசியாக கல் விழுந்த மையத்திற்கு வந்துசேர்வான். அவன்தான் இலக்கிய வாசகன். தில்லையம்மா அந்த முதல்வட்டத்திற்குள் எழுதப்பட்டிருக்கிறது. எவ்வகையிலும் இலக்கியத்தகுதி கொண்ட படைப்பு அல்ல. தூயன் அது தன் ஆரம்ப கதை என்றும் ,வாசிப்பினூடாக தான அடுத்த அடுத்த கட்டங்களுக்கு வந்துவிட்டதாகவும் அறிவித்திருப்பதனால் அக்கதையையும் இணையத்தில் இருந்து நீக்கியிருப்பதனால் அதைப்பற்றி விரிவாக விவாதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் இளம் எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றை மட்டும் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இந்த மாதிரிவடிவம் மிக எளிமையான வடிவில் நாம் எழுத ஆரம்பிக்கும் போதே நம் முன் வந்து நிற்கிறது. அதை நாம் பின்னாளில் கடந்துவிடுவோம். ஆனால் நாம் தேர்ந்த எழுத்தை எழுதுகிறோம் என்று எண்ணும் போதுகூட  நம்மை அறியாமலேயே அது நமக்குள் இருக்கும்.வைரஸ் போல. உதாரணமாக,  ஒரு சமூக உண்மையை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக சொல்ல வைப்பது ,அனைவரும் அறிந்த ஒரு அன்றாடக் கருத்தை சொல்லும் பொருட்டு ஒரு கதையை கட்டமைப்பது, எவரும் எண்ணியிராத ஒரு தளத்தை கதையில் முன்னரே புதைத்துவைத்து திறப்பது,  ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்தை சொல்லிவிட்டு அது நன்னோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு நாடகம்தான் என்று காட்டுவது  – போன்ற பல மாதிரிவடிவங்கள் நமது மூளைக்குள் எங்கோ படிந்திருக்கும்.

படைப்பூக்கத்துடன் நாம் எழுதும்போது அவை நமக்கு தொந்தரவாக அமையாது. ஆனால் எங்கோ ஓரிடத்தில் புனைவு தரைதட்டும்போது இந்த மாதிரிவடிவங்கள் நமது கைக்கு எழுந்து வரும். உணர்வு ரீதியாக நாம் பேசும்போது தேய்வழக்குகளை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் மனத்தொய்வில்லாமல் அன்றாட வாழ்க்கையில் பேசும்போது ‘பார்த்து ரொம்ப நாளாயிற்று’ ’அடிக்கடி கூப்பிடுங்கள்’,‘காசு வரும்போகும், மனசுதான் முக்கியம்’ போன்று தேய்வழக்குகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தேய்வழக்குகளுக்கு இணையானவை இந்த மாதிரிவடிவங்கள். நமது புனை கதைக்குள் மாதிரிவடிவங்களின் செல்வாக்கு மறைமுகமேனும் இல்லாமல் இருக்க பார்த்துக்கொள்வது மிக அவசியமான ஒன்று.

புதியபடைப்பாளிகளின் படைப்புகளின் எல்லாச் சிக்கல்களும் எப்படியோ இந்தக் கதைகளைப்பற்றிய விவாதத்தில் பேசுபொருளாகிவிடும். அவற்றை கவனமாகக் களையவேண்டியதில்லை. அவற்றை அறிந்து விவாதித்து உள்ளத்தில் பதியவைத்துக்கொண்டாலே போதும், இயல்பாகவே நாம் அவற்றிலிருந்து வெளியே சென்றுவிடுவோம். நண்பர்கள் ஊக்கத்துடன் எழுத வாழ்த்துக்கள்

 

 

==========================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

 

முந்தைய கட்டுரைநீர் நிலம் நெருப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36