கலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாதக் கருதுகோள்கள்…

என்னுடைய இலக்கிய விமர்சனங்களை வாசிப்பவர்கள் நான் ஏன் இலக்கியவிமர்சனத்தை இந்த அளவுக்கு விரிவாக்குகிறேன் என்று கேட்பதுண்டு.எதற்காக நான் ஓர் இலக்கியப்படைப்பாளியைப்பற்றி பேசும்போது அந்த படைப்புக்கும் அது சொல்லும் சூழலுக்கும் உள்ள ஒட்டுமொத்தமான வரலாற்றுப்பின்னணியையே இழுத்துக்கொண்டு வருகிறேன்?

உதாரணமாக சமீபத்தில் ஆ.மாதவனைப்பற்றி எழுதிய கட்டுரையில் திருவனந்தபுரம் சாலைத்தெருவைப்பற்றிய மாதவனின் சித்தரிப்பை விளக்க காந்தளூர்ச்சாலையை ராஜராஜன் வென்றதில் இருந்து ஆரம்பிக்கிறேன். இலக்கியப்பிரதியை வாசிப்பதற்கு இந்த விரிவான அடித்தளம் தேவையா?

என்னுடைய ஆய்வுமுறையை நான் கோட்பாட்டாய்வு என்று சொல்ல மாட்டேன். ஒரு கோட்பாட்டை சார்ந்து இலக்கியப்படைப்புகளை ஆராய்வதிலும், கோபாடுகளை உருவாக்க இலக்கியப்படைப்புகளை வாசிப்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நானும் ஓர் இலக்கியவாதி. இலக்கிய ஆக்கத்தின் அகம் கோட்பாட்டுக்குள் அடைபடாது என நான் அறிவேன்.

ஆனால் இலக்கியப்படைப்புகளை உள்வாங்கிக்கொள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்துவது என் வழக்கம். அவ்வகையில் புதுவரலாற்றுவாத கோட்பாடுகள் பல எனக்கு உதவிகரமாக உள்ளன.நான் ஆக்கங்களை எப்போதும் வரலாற்றுப்பின்னணியில் வைத்துப்பார்க்க அதுவே அடிப்படை.

நம்முடைய பண்பாட்டு விவாதங்களிலும் இலக்கிய விவாதங்களிலும் பின்நவீனத்துவ சிந்தனைகள் உருவாக்கிய கருதுகோள்களை இப்போது இயல்பாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டிருக்கிறோம். தமிழில் பின் அமைப்பியல்- பின்நவீனத்துவம் பேசப்பட்ட காலகட்டத்துக்குப் பின் கோட்பாட்டாய்வில் பெரிதாக எந்த முன்னேற்றமும் நிகவில்லை. ஆகவே அதற்கு மாற்றாக உருவான புது வரலாற்றுவாத[New historicism ] சிந்தனைகள் இங்கே விரிவாக அறிமுகமாகவில்லை.

புதுவரலாற்றுவாதம் அடிபப்டையில் மார்க்ஸிய நோக்கு கொண்டது. பின் நவீனத்துவ சிந்தனைகள் மார்க்ஸிய ஆய்வாளாரக்ளின் இரு அடிப்படைகளை தாக்கி தகர்க்க முற்பட்டன. ஒன்று வரலாறு, இரண்டு இலக்கியப்பிரதி. வரலாறென்பது ஒரு புறவய நிகழ்வோ,யதார்த்தமோ அல்ல என்றும் அது ஒரு மொழிபு[Narration ] மட்டுமே என்றும் பின் நவீனத்துவம் சொன்னது. கதைகளைப்போல கட்டுரைகளைப்போல கலைகளைப்போலத்தான் அதுவும். வரலாற்றுக்கு ஒழுங்கையும் நோக்கத்தையும் உருவாக்குவதை வரலாற்றுவாதம்[Historicism ] என்று சொல்லும் பின்நவீனத்துவர்கள் எல்லா வரலாற்றுவாதங்களும் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட நோக்கில் விளக்கி அதன்மூலம் அதிகாரத்தைக் கட்டமைக்கச்செய்யபப்டும் முயற்சிகளே என்றார்கள். மார்க்சியமும் ஒரு வரலாற்றுவாதம் என்றார்கள்.

இலக்கியப்பிரதி என்பது ஒரு மொழிநிகழ்வு மட்டுமே என்றார்கள் பின்நவீனத்துவர்கள். மொழியின் தொடர் பின்னலாட்டத்தின் ஒரு கணம் அது. பின் நவீனத்துவ நோக்கில் பார்த்தால் இலக்கியப்பிரதியை அது நம் முன் வைக்கும் குறிகள் மற்றும் குறியிடுகள் உருவாக்கும் அர்த்தங்களின் தொகையாக மட்டுமே பார்க்க வேண்டும். அதற்கு வரலாற்றுப்பின்னணியை அளிப்பதென்பது அதை வகுத்துக்கொள்வதும் அதை சாராம்சப்படுத்துவதும் ஆகும்.

பின் நவீனத்துவத்துடன் மோதி உரையாடி தன்னை உருமாற்றம்செய்துகொண்ட ஐரோப்பிய மார்க்ஸியமே புதுவரலாற்றுவாதத்தின் உள்ளுறை. அதற்கு பல்வேறு அமெரிக்க விளக்கமாறுபாடுகள் உள்ளன. வரலாற்றை ஒரு மொழிபு என்று ஏற்றுக்கொண்ட புதுவரலாற்றுவாதம் ஆனால் அந்த மொழிபு மட்டுமே வரலாற்றை பயனுள்ளதாக்குகிறது என்கிறது. பண்பாடு, சமூக இயக்கம் அனைத்தையும் அந்த மொழிபுக்குள் மொழிபுகளாக வைத்து மட்டுமே அர்த்தபூர்வமாக விளக்க முடியும் என்றது. இலக்கியப்பிரதியும் மொழிபே. அது வரலாறென்ற மொழிபுக்குள் நிகழும் மொழிபு.

புதுவரலாற்றுவாதத்தை விரிவாக முன்வைத்து தமிழில் எவரேனும் பேசமுடியுமென்றால் இன்று தமிழில் கோட்பாட்டு விமர்சனத்தளத்தில் இருக்கும் தேக்கத்தை அகற்றமுடியும் என்று தோன்றுகிறது. குறிப்பாக கலாச்சாரம் குறித்த இரு கருதுகோள்கள் நம்முடைய விவாதத்தின் பல தளங்களை புதியதாக ஆக்க முடியும். தமிழக வரலாறு என்ற பிரம்மாண்டமான பிரதியில் நம் இலக்கியப்பிரதிகள் எப்படி பொருள்கொள்கின்றன என்று ஆராய்வது பல்வேரு திறப்புகளை அளிக்கும்.


கலாச்சார கவிதையியல் Cultural Poetics

இலக்கியப் பிரதியின் அழகியலை ஒரு தனித்த சுயமான இயக்கமாகக் கருதாமல் அதை வரலாற்று மொழிபின் பகுதியாக ஆராயும் திறனாய்வு முறைமை. இதை புது வரலாற்றுவாத சிந்தனையாளரான ஸ்டீபன் கிரீன்பிளாட் உருவாக்கினார். ஒரு காலகட்டத்தில் ஒரு பகுதியின் பொதுவான கலாச்சாரத்தை உருவாக்கும் சமூக, பண்பாடு, அரசியல், வரலாற்று கூறுகளுடன் தொடர்புபடுத்தி இலக்கியப்பிரதியை வாசிக்கும் முறை இது.

கிரீன்பிளாட் தன் கட்டுரைகளை ஒரு பழங்கதை அல்லது உதாரணக் குறிப்பு அல்லது சம்பந்தமில்லாத ஒரு தகவலைச் சொல்லி துவங்குகிறார். மிக நுண்மையான வாசிப்பு மூலம் அங்கிருந்து இலக்கியப் படைப்புக்கு வருகிறார் அந்த முதல் உதாரணம் மூலம் வெளிப்படும் சமூக, அரசியல், வரலாற்றுப் போக்குகளுடன் படைப்பை தொடர்புபடுத்துகிறார். இவ்வாறாக அப்படைப்பை உருவாக்கக்கூடிய நம்பிக்கைகள், கலாச்சார, உட்கூறுகள், குறியீட்டுக் கூறுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தி அப்படைப்பின் நுண் அதிகாரம் செயல்படும் அடிப்படைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

தன் ‘கண்ணுக்குத்தெரியாத குண்டுகள்’ [Invisible Bullets] என்ற பிரபலமான கட்டுரையில் கிரீன்பிளாட் தாமஸ் ஹாரியட்டின் ‘விர்ஜினியாவில் உள்ள புதிதாக கண்டெடுக்கப்பட்டு நிலம் குறித்த சுருக்கமான உண்மை அறிக்கை’ என்ற 1588ல் எழுதப்பட்ட கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். அமெரிக்காவை ஆதிக்கம் கொண்ட ஆங்கில காலனிவாதிகள் எவ்வாறு அதிகாரத்தை நேரடியாக கைப்பற்றி அதை கொண்டாடினர் என்பதை விவரிக்கிறார். அந்நிலத்திற்கு உரியவர்களான செவ்விந்தியர்கள் எப்படி இழிவாக கணிக்கப்பட்டு பிறகு வேட்டையாடப்பட்டனர் என்று சுட்டிக்காட்டி அங்கிருந்து ஷேக்ஸ்பியரின் ‘புயல்’ என்ற நாடகத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு தீவை உரிமை கொண்டாடிய பிராஸ்பரோவின் நடத்தையை ஒப்பிட்டு விவரித்து அதே பாணி கூறுமுறையும் மனநிலையும் ஷேக்ஸ்பியரின் பிற நாடகங்களான ஹென்றி நான்காமவன் முதலியவற்றில் தொடர்வதை எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு ஒரு தனிப்பட்ட மொழியின் உள்ளே பலநூறு வரலாற்று மொழிவுகளின் சரடுகள் பின்னி ஊடுருவிச் செல்வதை கிரீன் பிளாட் எடுத்துக்காட்டுகிறார். இதையே அவர் கலாச்சாரக் கவிதையியில்’ என்கிறார்.

தெளிவுபடுத்திக் கொள்வதற்காக கிரீன்பிளாட் தி ஜனாகிராமனின் மோகமுள் குறித்து ஒரு திறனாய்வுக் கட்டுரை எழுதுவதை கற்பனை செய்து பார்க்கலாம்.

சங்க இலக்கியத்தில் தலைவி மீது தலைவன் ஒருதலைக்காதல் கொண்டு மடலேறுவதைச் சித்தரித்தபடி கட்டுரை தொடங்குகிறது. தமிழ் சமூகத் தளத்திலும் வரலாற்றுத் தளத்திலும் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்ட ஒருதலைக்காதல் அல்லது ஊமைக்காதல் வெளிப்பட்டுள்ளத என்று ஆராய்கிறது கட்டுரை. மணிமேகலை மீது ஆசைகொண்டு அலைக்கழிகப்பட்டு மறைந்த உதயகுமாரன் போன்ற கதாபாத்திரங்கள் வழியாக பாபுவுன் கதாபாத்திரக் கட்டுமானத்திற்குள் நுழையும் ஆய்வுமுறை அதன் உருவாக்கத்தில் தமிழ்ப்பண்பாட்டின் பலவிதமான கூறுகள் எப்படி எப்படி செயல்பட்டது என்பதை விவரிக்கிறது. மடலேறுதல் மூலம் தலைவியை அறக்கட்டாயத்திற்கு உள்ளாக்கி வெல்கிறது தலைவனின் தாபம். அதையே பாபுவின் இறுதி ‘வெற்றி’யிலும் காண்கிறோம். தலைவனுக்கு இறுதி வெற்றியை உறுதிப்படுத்தும் அந்த அறக்கட்டாயத்திற்குள் செயல்படும் ‘அறம்’ என்ன என்பதை சுட்டிக்காட்டி கட்டுரை முடியும். இதுவே சுருக்கமாகச் சொன்னால் புதுவரலாற்றுவாதம் உருவாக்கிய திறனாய்வு முறையாகும்.


கலாச்சாரப் பொருள்முதல்வாதம் Cultural Meterialism

வரலாறு அல்லது இலக்கியப் படைப்பின் பிரதித் தன்மையானது புறவயமான பொருளியல் சக்திகளின் நேரடியான பாதிப்புக்கு உட்பட்டது என்று கூறும் திறனாய்வுக் கோட்பாடு. மார்க்ஸிய இலக்கியத் திறனாய்வாளரான ரேமான்ட் விலியம்ஸ் உருவாக்கிய கலைச்சொல் இது. புது வரலாற்றுவாதத்தில் மார்க்ஸிய இது வரலாற்றுவாதத் திறனாய்வாளர்கள் இக்கருதுகோளை பரவலாகப் பயன்படுத்தினர்.

வரலாறு என்பது தனக்குரிய இயங்குவிதிகள் கொண்ட பொருண்மையான அமைப்போ போக்கோ அல்ல என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அது ஒரு பிரதிதான். ஆனால் அப்பிரதியின் மொழியை உருவாக்குவதில் கலாச்சார, சமூகவியல் சக்திகளின் பங்களிப்பைவிட முக்கியமான பங்களிப்பை ஆற்றுவது உற்பத்தி வினியோகம், நுகர்வு ஆகியவற்றாலான பொருளியல் அடிப்படைதான். அதாவது வரலாற்று மொழிபின் முன்வைப்பைத் தீர்மானிப்பவை வர்க்க நலன்களே. அம்முன்வைப்புகள் அனைத்துமே உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றை நேரடியாக சார்ந்தவையே.

ஆகவே ஓர் இலக்கியப் படைப்பின் மொழி்பு தன் முன்வைப்புகள் மூலம் எத்தகைய வர்க்க நலன்களை வெளிப்படுத்துகிறது என்பது இவ்வகைத் திறனாய்வின் முக்கியமான வினாவாகும். ஒரு பிரதி அது உருவான காலகட்டத்தில் வெளிப்படுத்தும் வர்க்க நலன்கள் மட்டுமல்ல அதன் பல்வேறு காலத்தைய மறுவாசிப்புகள் வெளிப்படுத்தும் வர்க்க நலன்களும் இணைந்ததே அதன் பிரதித்தன்மையாகும என்கிறார்கள் இவர்கள்.

உதாரணமாக இப்படிக் கூறலாம். சிலப்பதிகாரம் அது உருவான காலகட்டத்தில் வரம்பற்ற மன்னரதிகாரத்திற்கு எதிராக பொதுவான அறம் என்ற ஒன்றை உருவாக்கி முன்நிறுத்தி வணிகர்களின் நலனை பாதுகாக்கும் தன்மை கொண்டிருந்தது. பத்தினி வழிபாட்டை வணிகர் குலத்தை மையமாகக் கொண்டு உருவாக்கி வணிகர்களின் சமூக அதிகாரத்தை வலியுறுத்தியது அது. பிற்பாடு கற்பு என்ற விழுமியத்தை முன்நிறுத்தும் பிரதியாக மாறி பெண்களுக்கு எதிரான நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை வலியுறுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மாண்பின் அடையாளமாகி சமஸ்கிருத, பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக சைவ, தமிழ், வேளாள அரசியலின் கருவியாக மாறியது. சிலப்பதிகாரத்தின் பிரதித்தன்மை இவையனைத்தையுமே உள்ளடக்கிற ஒன்று என்று இத்திறனாய்வாளர் கூறுவர்.

மார்க்ஸிய புதுவரலாற்றுவாதிகளின் நோக்கில் திறனாய்வு என்பது ஓர் அரசியல் செயல்பாடும்கூட. வடிவவாதம், அமைப்புவாதம், பின் அமைப்புவாதம், கட்டவிழ்ப்பு முதலிய தளங்களில் திறனாய்வு என்பது பிரதியின் முன் வாசகன் தன்னை ஒரு எதிர்நிலையாக (அறியும் தன்னிலையாக) நிறுத்திக் கொள்வதன் மூலம் உருவாக்கப்படுவதாகும். ஆனால் மார்க்ஸிய புது வரலாற்றுவாத நோக்கில் திறனாய்வு என்பது சமூகப் பொறுப்பு கொண்டதும், சமூக மாற்றத்திற்கான கருத்துச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிகழ்வதுமான ஒரு செயல்பாடாகும். ஆகவே எழுதுவதற்குச் சமானமான ஒரு வரலாற்றுச் செயல்பாடே வாசிப்பும் என்கிறார்கள் இவர்கள்.

என்னுடைய ஆய்வுகள் இவர்களின் ஆய்வுமுறைகளுடன் ஒத்துப்போவதை காணலாம். மார்க்ஸியம் போன்ற ஒரு அரசியல் செயல்திட்டம் சார்ந்து நான் பிரதிகளை குறுக்குவதில்லை. ஆனால் அவற்றை வரலாற்றில் வைத்துப்பார்க்கிறேன். வரலாறென்பது ஒரு பிரம்மாண்டமான் மொழிபு, தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கும் கூட்டுப்பிரதி என்றே எடுத்துக்கொள்கிறேன். அந்த பின்னணியில் படைப்புகள் தொடர்ந்து உருமாறும் அர்த்தங்கள் கொண்டிருக்கின்றன என்று காண்கிறேன். அத்தனை அர்த்தங்களையும் கருத்தில்கொண்டு இந்தக்காலத்தில் நின்று ஒரு வாசிப்பை உருவாக்க முயல்கிறேன்

முந்தைய கட்டுரைஇசை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரு திருமணங்கள்