பரிபாஷை பரவிய நிமிடங்கள்!!!

தமிழ்பேப்பர் இதழில் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் என்பவர் கவிதை-கிவிதை என்று ஒரு பத்தி எழுதியிருக்கிறார்.

ஏதேனும் ஒரு நொடியில்
கோபம் வந்துவிடுகிறது உனக்கு
உன் ஏதேனும் ஒரு செயல்
என்னைக் காயப்படுத்துகிறது
தழும்பில்லாக் காயங்களின்
வலிகளுக்கான களிம்பு
உன் விரல்கள் என் தலைகோதி
உன்னால் சொல்லப்படும்
“ஸாரிடா”.

என்று ஒரு கவிதையை எழுதிவிட்டு அதற்கு நவீனச் சிற்றிதழ்க்கவிதை மொழியை அளித்து

நதியைச் சூடும் மலரின் ஸ்பரிசம்
மென்விரல் அலையெனவென் தலைகோதும்
நின் அதரங்கள் அதிர்ந்துதிர்க்கும்
அவ்வொற்றைச் சொல்லில்
திரண்டிருந்த கோபப்பந்து
உருண்டு திரள்கிறது பாதரசச் சில்லுகளாய்
மீண்டும் கேளந்த
வசீகர செளந்தர்ய ஸாரியை.

என்று கிவிதையாக ஆக்குகிறார். முக்கியமான தமிழ்ச்சேவை என்றே நினைக்கிறேன். இதேபோல இவர் தமிழ்ச்சிற்றிதழ்களில் உண்மையிலேயே வெளிவரும் கவிதைகளை தமிழாக்கம் செய்து காட்டினால் தமிழில் இவரை பலர் கண்ணீருடன் கையெடுத்து கூப்பி வணங்குவார்கள்

உதாரணமாக அக்டோபர் உயிரெழுத்து இதழில் வெளீவந்த இந்தக்கவிதை. இதை தலையானங்கானத்தார் மறுஆக்கம் செய்தளித்தால் நன்றாக இருக்கும்

யௌவன நிமித்தங்களின் பொழுது

அப்பொழுதொன்றின் பரிபாஷை பரவிய நிமிடங்கள்
உன்னதங்களால் போர்த்தியவை
கனவுகளினூடே நீள்பயணச் சந்திப்பில்
பெருகும் சொற்களில் மிதந்தன மனோகர கணங்கள்
நிச்சலனத்தின் இளஞ்சூட்டில் பசியாரிபோயின
விகசிப்பின் உன் என் பொழுதுகள்
பசுங்கொடி படர்ந்த விருட்சத்தினூடே யௌவனப்பிரதிமை
இன்னமும்
ஒளியுருகி வழிகின்றன பதின்பருவச் சிற்றோடையில்
துக்கித்து வீழ்ந்த கொடும்பரப்பின் அகாலம்
அரவமின்றி யுகாந்தரத்தின் செவிகளில் புகுந்தபடி இருக்கிறது
நம்மிரவின்
காதை உலர்த்தின மொழிதொன்றில்
இருண்மைநினைவுகள் பின்னலிடுகின்றன
வெளிச்ச நிகழ்வின் சுயங்கள் நிகழ்த்தின
ககனவெளி மின்னலின் அநாமதேயப் பொற்கணங்களவை
ஆயினும்
தாகித்துச்செல்லும் நதியின் மாமையினுள்
கரைந்திடவே யத்தனிக்கின்றன இக்கண கணங்கள்
மொழிநாவின் லிபிகளில் நம்மின் நிமித்தங்களை
சித்திரவனத்தில் தொட்டெழுதியபடி இருக்கும்
உன்மத்தன் நான்

அ.பிரபாகரன்

நன்றி உயிரெழுத்து நவம்பர் 2000


கவிதை-கிவிதை

நீங்களும் புதுக்கவிதை வனையலாம்

புதுக்கவிதை சுருக்கமான வரலாறு

முந்தைய கட்டுரைதி ஜானகிராமனின் பாயசம்
அடுத்த கட்டுரைதீபாவளி