நமது முகங்கள்…

சியார் பாபா அருவி

 

 

சென்ற 2016 அக்டோபர் ஏழாம்தேதி நாங்கள் ஒரு குழுவாக கேதார்நாத் சென்றோம். பேசிக்கொண்டே இமயமலை இடுக்குகள் வழியாக வளைந்து ஒசிந்து செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தோம். காரில் கண்ணாடிக்கு வெளியே அலையலையாக எழுந்து அமைந்து கொண்டிருந்தன இமயமலை முடிகள். கூரிய உலோக முனை பளபளப்பது போல அவற்றில் பனிச்சிகரங்கள் முன்காலை ஒளியில் மின்னின. என் அருகே கல்லூரி இளங்கலை இறுதியாண்டு படிக்கும் என் மகள் சைதன்யா அமர்ந்திருந்தாள். இமயமலைப்பகுதியில் அவளுடைய முதல் பயணமாகையால் விழிகளை விரித்து ஒருவித பரவசத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள்.

நான் சொன்னேன் ”அப்பாவின் எல்லாப்பயணங்களிலும் நீ சேர்ந்து கொள்ளவேண்டுமென்பதில்லை. மலை ஏறுவதற்கான குழுக்கள் உள்ளன. பெண்கள் மட்டுமான குழுக்கள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து கொள்ளலாம்” என்றேன். பின் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணபிரபா சற்றே சீற்றத்துடன் ”ஏன் பெண்கள் மட்டுமான குழு?” என்று கேட்டாள். நான் சொன்னேன் ”மலை ஏறுவதென்பது ஒருவகையான தனித்த பயணம். ஆண்களை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரியவில்லையே?”

கிருஷ்ணபிரபா ”நீங்கள் சொல்வது உண்மைதான். கேரள இளைஞர்களையோ தமிழக இளைஞர்களையோ நம்பி அப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக வட இந்திய இளைஞர்களை நம்பலாம். ஆண்களும் பெண்களும் இணைந்து செல்லும் பல மலையேற்றக் குழுக்களில் நான் உறுப்பினராக இருக்கிறேன். பலசமயம் குடில்களில் நெருக்கமாக தங்க வேண்டியிருக்கும். காட்டு ஓடைகளில் குளிக்க வேண்டி இருக்கும். மலைகளில் கைகளைப்பற்றிக் கொண்டு ஏற வேண்டியிருக்கும். எந்த இடத்திலுமே பெண் என்று உணர்ந்ததில்லை. பார்வையிலோ பேச்சிலோ ஒரு சிறிய சீண்டலையோ அவமதிப்பையோ உணர்ந்ததில்லை.”

”மலையாள இளைஞர்கள் அப்படி அல்ல. அவர்கள் பெண்களை வேட்டைப்பொருள் போல பார்க்கக்கூடியவர்கள். தமிழ் இளைஞர்கள் அதற்கும் பலபடி கீழே. பெண்களை மிகுந்த தாழ்வுணர்ச்சியுடன்தான் அவர்கள் அணுகுகிறார்கள். அவமதிக்கிறார்கள். சிறுமைப்படுத்துகிறார்கள். அதில்தான் அவர்களுடைய மகிழ்ச்சியே உள்ளது. அவர்களை நம்பி ஒரு பேருந்துப் பயணத்தைக்கூட செய்ய முடியாது.” என்றாள்

காருக்குள் அமைதி நிலவியது. எவருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை என்பது போல. ஏனென்றால் அது கிருஷ்ணாவின் நேரடி அனுபவத்திலிருந்து வந்தது என்பதனால் சும்மா ஒரு இதுக்காகக்கூட மறுத்துப்பேச முடியாது. நான் அவ்வப்போது டிவிட்டருக்குச் சென்று அங்கு இளைஞர்களுக்குள் நடக்கும் உரையாடல்களைப் பார்ப்பதுண்டு. தன் சொந்தப் பெயருடன் ஒரு பெண் டிவிட்டருக்கு வருவாளென்றால் பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல நம் இளைஞர்கள் கூடி சீண்டி,வசைபாடி, இரட்டை அர்த்தத்தில் பேசி, அவமதித்து கும்மாளமிடுவதைப் பார்க்கலாம். அசாதாரணமான தைரியமும் எந்த எல்லைக்கும் போகும் தீவிரமும் கொண்ட பெண்கள் சிலரைத்தவிர எவரும் அங்கு நீடிக்க முடியாது.

இந்த இளைஞர்களின் பிரச்னைதான் என்ன என்பதை பெரும் பரிதாபத்துடன்தான் எண்ணிக் கொள்கிறேன். பிரச்சினை இருப்பது இவர்களின் அன்னையரிடம்தான். அவர்கள் தங்கள் தாழ்வுணர்ச்சியால் இவர்களை தலைக்குமேல் ஏற்றிவைக்கிறார்கள். ‘நீ ஆண், பெண்ணுக்கு நீ ஒருபடி மேல்’ என்று அவர்களைச் சொல்லி வளர்க்கிறார்கள். ஆகவே சிறிதளவாவது தன்னம்பிக்கையோ சுதந்திர உணர்வோ கொண்ட பெண்ணை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அத்துடன் இங்கு பெரும்பாலான குடும்பங்களில் பெண்களுடன் கலந்து விளையாடவோ பேசவோ பழகவோ வாய்ப்பில்லாமல் ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பாலியல் வரட்சி கொண்ட விசித்திரமான மிருகங்களாகவே தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள்.

தமிழகத்தின் சுற்றுலா மையங்கள் இம்மனநிலையின் மிக மோசமான வெளிப்பாடு உடையவை. தமிழகத்திலேயேமிக அபாயகரமான சுற்றுலாப்பகுதிகள் என்றால் என் அனுபவத்தில் இரண்டைச் சொல்வேன். ஒன்று தேனி அருகே உள்ள சுருளி அருவி. இன்னொன்று கோவை அருகே உள்ள திருமூர்த்தி அருவி.

பெண்களைச் சீண்டி, முடிந்தால் நேரடியாகவே தாக்கும் நோக்கம் கொண்ட ஒரு பொறுக்கிக் கூட்டமே இந்தச் சுற்றுலா மையங்களைச் சுற்றி உள்ளது. சுருளி அருவிக்கரையில் பெண்களிடம் அத்துமீறும் பையன்களை பல முறை கண்டிருக்கிறேன். பலமுறை அவர்களிடம் சண்டையிட்டிருக்கிறேன். ஒரு முறை அவர்களால் தாக்கப்பட்ட அனுபவமும் எனக்கு உண்டு.

குற்றாலம் குடும்பத்துடன் செல்லும் பெண்களுக்குக்கூட பாதுகாப்பற்ற ஒரு சுற்றுலா மையமாக மாறிவிட்டது. ஒருமுறை குடித்து நிலையழிந்த நடுவயதான ஏழெட்டுப்பேர் உள்ளாடை மட்டும் அணிந்தபடி கூவி ஆர்ப்பரித்து குதித்தபடி அருவியைச் சுற்றிக் கும்மாளமிட்டனர். அவர்களை காவலர்கள் கெஞ்சி மன்றாடி விலக்குவதைப் பார்த்தேன். அத்தனை பேரும் ஒரு குழுவாக வந்த வழக்கறிஞர்கள். மறுநாள் அவர்களை போலீஸார் கைதுசெய்ததாக தினதந்தி செய்தி வெளியிட்டது.

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆபாசச் சைகைகளைச் செய்வதும், ஆபாசமாக பேசுவதும், ஊளையிடுவதும், குடித்தபின் புட்டிகளை பாறைகளை நோக்கி வீசி எறிவதும், எதிர்பாராத கணத்தில் உள்ளாடையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக நிற்பதும் குற்றாலத்தில் சாதாரணம். அருவி ஓங்கி விழும் பகுதிக்கு வெளியே வெற்றுக் கால்களை வைப்பது கூட ஆபத்தானது. உடைந்த மதுபுட்டிகள் சிதறிக்கிடக்கும். ஒவ்வொரு முறை குற்றாலத்துக்கு செல்லும் போதும் அவற்றால் கால் கிழிபட்டு குருதி வழியச் செல்லும் பயணிகளைப்பார்க்க நேரிடுகிறது.

ஒருமுறை மலேசியாவில் இருந்து வந்த என் நண்பர் ஒருவருடன் குற்றாலத்திற்கு சென்றேன். அங்கு ஆண்களும் பெண்களும் குளிப்பதற்காக மிகப்பெரிய தடுப்புகளை உருவாக்கி அருவியே இரண்டாக பிரித்திருப்பதைக் கண்டு அவர் அதிர்ந்தார். “என்ன இப்படி செய்திருக்கிறார்கள்? என்ன இப்படிச் செய்திருக்கிறார்கள்? கேவலமாக இருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த தடுப்புக்கு மேல் போலீஸ்காரர்கள் நீண்ட கழிகளுடன் நின்றுகொண்டு அதை ஏறிக் கடந்து ஏறி மறுபக்கம் பெண்களை நோக்கிப் போக முயன்றவர்களை ஓங்கி அறைந்தும் காலால் உதைத்தும் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

பருவ காலத்தில் காமம் மீதூறிய காட்டுவிலங்குகள் போல இளைஞர்கள் அந்தச்சுவரை நோக்கி முண்டியடித்தனர். போலீஸ்காரர்களிடம் அறைபட்டு ஒருவன் நிலத்தில் விழுந்தபோது அவனைச் சூழ்ந்து அவன் நண்பர்கள் ஊளையிட்டு ஆர்ப்பரித்தனர். அநேகமாக குற்றாலத்தில் உள்ள இந்தக் காட்சியை உலகெங்கும் எந்த அருவியிலும் பார்க்க முடியாது. அந்தக்காட்சியை பிரசுரித்தால் உலகமே அதிர்ச்சி அடையக்கூடும். ஏன் அந்தத் தடுப்புச் சுவரின் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பிரசுரித்தாலே நாகரீக உலகம் வெட்கிக் கூசும்.

 

பீம்கர்

 

சென்ற ஜுலை 2014 அன்று நண்பர்களுடன் ஒரு காஷ்மீர் பயணத்தை மேற்கொண்டேன். ஜம்முவில் சென்றிறங்கி அங்கிருந்து கார் வழியாக ’பூஞ்ச்’சை சுற்றிக் கொண்டு ஸ்ரீநகருக்குள் நுழைந்து கார்கில் சென்று மீள்வது எங்கள் பயணத்திட்டம். செல்லும் வழியில் ரியாசி என்னும் ஊரில் ஒரு சர்தார்ஜியின் உணவு விடுதியில் தங்கினோம். எங்களைத் தவிர அங்கே வேறு விருந்தினர் எவரும் இல்லை. பொதுவாக ஜம்மு ஒரு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு காஷ்மீர் என்று இருப்பதனாலேயே காஷ்மீர் பிரச்னை இங்கும் பாதிக்கும் என்று பயணிகள் அனேகமாக வருவதே இல்லை. அமர்நாத் பயணம் ஒன்றே இங்குள்ள விடுதிகளுக்கு ஓரளவாவது பயணிகளைக் கொண்டு வருகிறது.

 

1

காலையில் எழுந்தபோது நல்ல வெளிச்சம். அங்கே இரவு எட்டரைக்குத்தான் கோடை காலத்தில் ஒளி மறையும். காலை ஐந்துக்கே விடிந்துவிடும். ஆனால் பகல் முழுக்க இளந்தூறலுடன் மழை இருந்தது. எழுந்ததும் விடுதியின் உப்பரிகையில் நின்றபடி மலை அடிவாரத்தில் சீனாப் நதி பெருகி ஓடுவதைப்பார்த்தோம். மலையில் இருந்து செம்மண் பாதை வழியாக ஓடிவருவதனால் செக்கச் சிவப்பாக குருதி வெள்ளம்போல் ஓடிக் கொண்டிருந்தது பெருக்கு.

ஜம்மு பலவகையிலும் கேரளத்தை நினைவூட்டியது. எங்கும் பசுமை பசுமை அடர்ந்த மலைகள். குளிரற்ற நீராவி செறிந்த காற்று. இளம் வெயில் காலை நடையே மன எழுச்சி அளிப்பதாக இருந்தது. ரியாசுக்கு அருகே ஒரு அருவி இருப்பதாக கூகுள் சொன்னது. ஆனால் அதைப்பற்றி விசாரித்தபோது ஒவ்வொருவரும் என்ன என்று தெரியாமல் விழித்தார்கள். சரி, ஆற்றங்கரையிலேயே செல்வோம். அருவியைச் சென்று அடைவோம் என்று எண்ணிக் கொண்டோம்.

ஆறு மலையை சுற்றிக்கொண்டு சென்றது. ஏராளமான ஆற்றிடைக்குறைகள் கொண்ட ஆறு. மூன்று கிலோமீட்டர் அகலத்திற்கு விரிந்து, செந்நிற வெள்ளம் அலைத்துச் சுழித்து கொப்பளிக்க சென்று கொண்டிருந்தது. முதலில் வலப்பக்கமாக வந்து கொண்டிருந்தது பல ஆறுகளின் தொகை என்றேதான் நினைத்தேன்.

ஊர்களில் ஆங்காங்கே ராணுவ முகாம்களின் மாபெரும் கம்பிகள்.மலை அடுக்குகளில் சில கட்டிடங்கள் தொங்கியதுபோல் நின்றன. கண்ணை நிறைக்கும் பசுமைக்குக் கீழே ஒரு செந்நிறப்பதாகை போல நதி சென்றது. தொலைவிலேயே அருவியை பார்த்துவிட்டோம். சியார் பாபா என்று அழைக்கப்படும் அந்த அருவி செங்குத்தாக மலையுச்சியிலிருந்து ஒரு வெண்ணிற கோடுபோல விழுந்து சீனாப் நதியில் கலந்தது.

சாலையிலிருந்தே அந்த அருவியைப்பார்ப்பது ஒரு விழிவிரிய வைக்கும் அனுபவம். வானிலிருந்தே முகில் உருகி பெய்வது போல் இருந்தது. ஆனால் சிறிய அருவிதான். ஒரு ஓடை அளவுக்குதான் நீர். கிட்டத்தட்ட அறுநூறு அடி உயரத்திலிருந்து விழுந்தது. கரிய மலை தோளில் சரியும் வெண்துகில் போல நல்லவேளையாக நேராகச் சென்றுவிடாமல் மலையை ஒட்டியே பாறைகளில் விழுந்து சிதறி சிதறி வந்தது. எனவே கீழிருந்து குளிக்க முடிந்தது.

அவ்வேளையில் அங்கே அதிகம் பயணிகள் இல்லை. மழைச்சாரல் இருந்ததனால் நாங்கள் ஏற்கனவே அருவியில் குளித்தது போல் நனைந்து விட்டிருந்தோம். காரிலேயே ஆடைகளைக் கழற்றி வைத்து உள்ளாடைகளுடன் அருவியை நோக்கிச் சென்றோம். அருவியில் இருபது முப்பது இளம்பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு பேருந்தில் வந்த கல்லூரி மாணவிகள்.

அனைவரும் இறுக்கமாக ஆடைகளையே அணிந்திருந்தனர். பொது இடங்களில் நமது பெண்களிடம் இருக்கும் எச்சரிக்கையும் குறுகலும் இல்லாமல் சுதந்திரமாகவும் களியாட்ட மனநிலையுடனும் இருந்தனர். ஒருவரையொருவர் பிடித்து அருவிக்கு முன்னால் இழுத்துக் கொண்டு சென்றனர். நீரில் நீளக்கூந்தல்களைச் சுழற்றி நீச்சல் அடித்து துளி தெறிக்க வைத்தனர். பாறைகளின் மேல் ஏறித் தாவி கீழிருந்த சுனையில் குதித்தனர். கூச்சல்கள் ஒளி கொண்டு மின்னும் பற்கள் .

மேலே இருந்து ஒரு இளைஞர் கும்பல் உற்சாகக் கூச்சலிட்டபடி வந்தது. இன்னொரு பேருந்து வந்திருந்தது. வந்ததுமே அவர்களும் நீருக்குள் பாய்ந்து அந்தப் பெண்களுடன் கலந்தனர். நீரில் அவர்கள் ஒருவர் பிடித்துத்தள்ளியும் அள்ளி இறைத்தும் விளையாடிக் களிப்பதைக் கண்டோம். சங்க காலத்து புதுப்புனலாட்டு விழவுகள் நினைவுக்கு வந்தன. ஆனால் அதில் சீண்டல் இருக்கவில்லை. எந்தப்பெண்ணும் அந்த ஆண்களின் கைகள் அத்துமீறியதாக உணர்வதாகத் தெரியவில்லை. சிறுபிள்ளை விளையாட்டு போலவே இருந்தது.

ஒருவேளை அவர்கள் ஒரே கல்லூரியைச் சார்ந்தவர்களாகவும் முன்னரே அறிமுகமானவர்களாகவும் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மாணவர்களைக் கவனிப்பதைக் கண்டதும் கிருஷ்ணன் ”இல்லை சார், அவர்கள் வேறு வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் இந்தியில் அறிமுகம் செய்து கொண்டார்கள்” என்றார். ”அப்படியா…!” என்று ஆச்சரியத்துடன் சொன்னேன்.

சற்று நேரத்தில் நீராடிக் களைத்த பெண்கள் அந்த ஆண்களிடம் விடை பெற்றுக் கொண்டு கரையேறி ஒவ்வொருவராக ஆடைகளைப் பிழிந்தபடி சென்றனர். இளைஞர்கள் தொடர்ந்து அருவியில் நீராடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். எவரும் மது அருந்தியிருப்பதாகத் தெரியவில்லை. எவரும் அத்துமீறவில்லை. கூழாங்கற்களில் கால் தடுக்க நான் நடந்து சென்ற போது துள்ளிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வழிவிட்டு புன்னகையுடன் உள்ளே செல்லும்படி கைகாட்டினார்கள்.

நாங்கள் நீராடி முடித்து மேலே வந்த போது அந்தப் பெண்கள் வந்த வண்டி சென்றுவிட்டிருந்தது. இன்னொரு பெரிய மார்வாடிக் குடும்பம் வண்டியில் வந்து இறங்கியது. இளைஞர்கள் அப்போதும் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

மிகப்பெரிய ஏக்கம் ஒன்று என் நெஞ்சில் எழுந்தது. இந்தப்பெண்களுக்கு இருக்கும் கொண்டாட்டமும் சுதந்திரமும் என் மகளுக்கு இல்லை. தமிழகத்தின் ஒவ்வொரு ஆணைப்பற்றியும் எச்சரிக்கையாக இரு என்று சொல்லித்தான் அவளை வளர்க்கவேண்டியிருக்கிறது. என் இணைய தளத்தில் அவ்வனுபவத்தை 2014 ஜூலை 30 ல் இவ்வாறு எழுதினேன் ‘பொறுக்கியாக இருப்பதே ஆண்மை, நாகரிகம் என்ற எண்ணம் தமிழகத்தில் வேரூன்றியது எப்படி என்றே தெரியவில்லை. அத்தனை ஆண்கள் நீராடும் இடத்தில் பெண்கள் இயல்பாக இருந்த அச்சூழலை அடுத்த நூறாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கி விட முடியாது’

திரும்பவும் ரியாசிக்கு வந்து அருகிலிருந்த பீம்கர் என்ற மலைக் கோட்டையைப்பார்த்தோம். 17ம் நூற்றாண்டில் லோக்கி மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையின் மேலேறி நின்று சூழ நிறைந்திருந்த பசுமையை பார்த்து கொண்டிருந்தபோதும் மனம் இதையே நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தது. ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? ஏன் அதைப்பற்றி எளிய வெட்கம் கூட நம்மிடம் இல்லை? குற்றாலத்தில் நாம் கட்டி வைத்திருக்கும் அந்த சுவர், நமது நாகரிகத்தின் இழிவின் அடையாளம் என்றுகூட ஏன் நமக்குத் தோன்றவில்லை?

குங்குமம் ‘முகங்களின் தேசம்’

 

 

முந்தைய கட்டுரைகெய்ஷா -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28