வணங்குதல்

unnamed

அன்புள்ள ஜெ,

கலைக்கணம் வாசித்ததிலிருந்தே கதகளியை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. முதற்கட்டமாக அடிப்படை முத்திரைகளை கற்கலாம் என இறங்கினேன். வெறும் ஐந்து விரல்களின் சைகைகள் முற்றிலும் வெவ்வேறான இருபத்திநாலு முத்திரைகள் சமைப்பதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. சில காணொளிகளை பார்த்த பின்பு முத்திரைகள் ஓரளவு நினைவில் நின்றது. இனி கதகளியை பார்த்தால் கபக்கென புரிந்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

கதகளியை நேரடியாக பார்த்தபோதுதான் புரிந்தது நான் கற்றது மிகமிக அடிப்படையானது என. இம்முத்திரைகள் இரு கைகளிலும் பலவகையிலும் இணைந்து கதையின் போக்கிலும் பாவங்களுக்கு ஏற்றவாறும் நுட்பமாக பல்வேறு பொருள்கொள்வதையும் உணர்ந்தேன். தனிமுத்திரைகள் வெறும் எழுத்துருக்களே என்றும் அதை மட்டும் வைத்துக் கொண்டு கதகளி எனும் சங்கபாடலை முழுமையாக பொருள்கொண்டுவிட முடியாது என புரிந்தது. அதுவும் மனோதர்ம பகுதிகளின் நுட்பங்களை புரிந்துகொளவது ஓரளவு பயிற்சியல்லாமல் இயல்வதல்ல.

இருப்பினும் இரு கைகளின் சைககளின் வாயிலாக தனி உலகமே கண்முன் விரிவது பரவசமூட்டும் அனுபவமாகவே இருந்து வந்தது. மேலும் ஓசை நின்ற பின்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் செண்டையின் தாளமும் பெயரறியா தூரத்து கேரள கிராமங்களில் அமைந்திருக்கும் கோயில்களின் இரவில் உருவாகும் கனவுச் சூழல் தரும் இன்பமும் கதகளியை எவ்வகையிலும் ஏமாற்றமளிக்காத ஒன்றாக பார்த்துக் கொள்கிறது.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 2 அன்று வடகேரளாவில் அமைந்துள்ள செரிப்பூரில் ‘துரியோதன வதம்’ நடைபெறுவதாக இணையத்தில் அறிவிப்பு கண்டு சென்றேன். இரவு 8 மணி ஆரம்பிக்கும் கதகளிக்கு நான்கு மணிக்கெல்லாம் அருகிலுள்ள ’அரங்கோட்டுகரா’ எனும் ஊர்வரை சென்றுவிட்டேன். நிறைய நேரமிருந்ததால் அங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் நடந்தே பயணித்தேன்.

நானும் ஒருகடையில் கட்டன்சாயா குடித்துக் கொண்டு ‘எந்தா சேட்டா’ என கண்களால் விளித்து பார்த்தேன். ம்ஹூம். யாரும் என்னை மலையாளியாக ஏற்றுக் கொள்வதாக இல்லை. வழியில் குறைந்தது ஐந்து பேராவது ‘எந்தா இவிடே?’ என சாலையில் சென்றவனை மடக்கி விசாரித்தார்கள் (சாலையில் எதிர்கொண்டதே ஐந்து பேரைத்தான்). முதலில் சந்தேகமாக பார்த்தாலும் ’கதகளி காண..’ என விளக்கிய பிறகு அனைவருமே இலகுவாகி வழியனுப்பினார்கள். கதகளி என்றவுடன் சற்றே நட்பான தோரணையும் காண முடிந்தது.

இருமுறை வழிதவறி ஒருவழியாக எட்டு மணிக்கெல்லாம் நிகழ்வு நடைபெறும் ஐயப்பன் காவு வந்தடைந்தேன். வந்தவுடன் பார்வையாளர்கள் அனைவருக்கும் பட்ஷனங்கள் உண்டு எனும் மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவிப்பாளர் ஒலித்தார். ஆனால் வந்திருந்த பத்துபேரில் யார் பந்தியை ஆரம்பித்து வைப்பது எனத் தெரியாமல் சிறிதுநேரம் சோதித்தனர். ஆப்பமும் இட்லியும் மனதை நிறைத்தன.

கேளிகொட்டு முழங்க தொடங்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்தார்கள். இரு பெரிய குடும்பங்கள் காரில் குழந்தைகளும் தாத்தா பாட்டிகளுமாக வந்திருந்தார்கள். சட்டென ஐம்பது பேருக்குமேல் திரண்டு அரங்கு நிறைந்தது போன்ற காட்சியளித்ததால் ஏமாற்றமாக இருந்தது. இதற்குமுன் நான் கண்ட களியில் பத்துபேரும் முப்பது பேருமே பார்வையாளர்கள். இது ஒருவேளை வணிக கதகளியோ என்று எழுந்த எண்ணத்தை விலக்கினேன். கதகளியில் அப்படியொன்று கிடையாது. அன்றைய களியில் கிருஷ்ண வேடத்திற்கு தோன்றவிருந்த கலாமண்டலம் பாலசுப்ரமணியன் ஆசான் கதகளி அறிந்தவர்களிடையே புகழ்மிக்கவர் என்பதால் இருக்கலாம்.

கேளிகொட்டு முடிந்தபின் புதியவர்களின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. இரண்டு இளவயது பையன்கள் ராமனும் சீதையுமாக அபிநயம் பிடித்தனர். அரங்கேற்றம் முடிந்தபின்னர் இரண்டு பெரிய குடும்பங்களும் கிளம்பிவிட்டனர். தங்கள் வீட்டு பிள்ளைகளை செல்பி எடுத்து உற்சாகபடுத்தியதுடன் கடமை முடிந்ததாக நிறைவுற்றிருக்கலாம். பாதி அரங்கு காலியானதுபோல் இருந்தது. ஆனால் அதற்குள்ளாக ஊரிலுள்ள கதகளி ரசிகர்கள் வந்திருந்தனர். சில தாத்தாக்கள் கைத்தாங்கலாக கூட்டிவரப்பட்டனர்.

முதல்காட்சி பாஞ்சாலி தனக்கு நேர்ந்த கொடுமையை கிருஷ்ணனிடம் எடுத்துசொல்லி அழுதுபுலம்புவதாக இருந்தது. அவையில் தனக்கு நடந்ததை வாயெடுத்து சொல்லக்கூட இயலாத அபலைபெண். துயரமும் ஆற்றாமையும் நிறைந்த பாஞ்சாலியைக் கண்டேன். கைகள் மேலெழ முயற்சித்து தோற்று துவண்டு விழுந்து கொண்டேயிருந்தன. முகத்தில் எப்போதும் அடுத்தகணம் கதறி அழுதுவிடக்கூடிய பாவம். வெண்முரசின் நிமிர்வும் வஞ்சமும் கொண்ட பாஞ்சாலிக்கு நேரெதிர். ஆனால் இருவரும் ஒன்றே எனவும் தோன்றியது! கிருஷ்ணன் எல்லா கணக்குகளையும் தான் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து ஆற்றுப்படுத்தினான்.

துச்சாதனன் தொண்டைகிழியும் வெறிக்கூச்சலுடன் அறிமுகமாகி இரண்டாம் காட்சியை தொடங்கி வைத்தான். துரியன், துச்சாதனன், திருதா, அவைக்கு விருந்தினராக வந்திருந்த ஒரு அந்தணர் என அஸ்தினபுரியின் அவை அங்கே நிகழ்ந்தது. பாண்டவர்களின் தூதுவனாக கிருஷ்ணன் அங்கே வரப்போகும் செய்தி அவைக்கு கிடைத்தது. துரியனும் துச்சாதனனும் கொந்தளித்தனர். கன்றோட்டி பால்கறந்து பிழைக்கும் அந்த எளிய யாதவனுக்கு இந்த அவையில் எவ்வகையிலும் முறைமையோ மரியாதையோ அளிக்கப்படலாகாதென்று அனைவருக்கும் அறிவித்தனர். மீறுபவர்கள் வெட்டி வீழ்த்தபடுவார்கள் என எச்சரித்தனர். தடா புடாவென்று ஒரே அதட்டல். நானும் சற்றே கால்களை குறுக்கி பவ்யமாக அமர்ந்து கொண்டேன்.

திடீரென அவையில் இருந்த அந்தணர் மேடை விட்டிறங்கி கீழே பார்வையாளர்கள் நடுவே ஓடினார். ஒரே குழப்பம்.

பிறகுதான் புரிந்தது, கிருஷ்ணன் பார்வையாளர் அரங்கின் பின்புறத்தில் எழுந்தருளியுள்ளார் என்று. சிறு வணக்கம் கூட வைக்கப்படலாகாதென்று சொல்லப்பட்ட யாதவனுக்கு மொத்த அரங்கே காலில் விழப்போகும் பாவத்துடன் எழுந்துநின்று மரியாதையளித்த காட்சியை பார்த்தேன். அங்கிருந்த அனைவரும் அந்த கிருஷ்ணனை அறிந்திருந்தனர். தோழனாக, அரசனாக, கடவுளாக. அவருடன் கைசைகைகள் வாயிலாகவே உரையாடினர். கிண்டல்கள், சிரிப்புகள்.

சட்டென ஒரு தாத்தாவை பார்த்ததும் பாலசுப்பிரமணியன் ஆசான் தாள்பணிந்து அவரிடம் ஆசி வாங்கினார். அடக்கமான பாவத்துடன் அவருடன் ஏதோ உரையாடினார். புகழ்மிக்க ஆசான் ஒருவர் ஓர் எளிய கதகளி ரசிகரான கிழவரின் காலில் விழுவது பிரமிப்பாக இருந்தது! வேறெந்த கலையிலும் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. கதகளி கலைஞர்களை காட்டிலும் அதன் ரசிகர்கள் கலைஞர்களால் கெளரவிக்கப்படுகிறார்கள்.

கிருஷ்ணன் அனைவரிடமும் பேசியவாறும் உட்கார சொல்லியவாறும் பெண்கள்நிரை பக்கம் சென்றார். பெண்களிடமும் மாமிகளிடமும் களியாடினார். பாட்டிகளிடமும் கூட. அனைத்து பெண்களின் முகத்திலும் வெளிப்படும் காரணமில்லா பிரேமையை கண்டேன். காரணமில்லாமல் ஒருவர்மீது ஏற்படும் பிரேமைதான் எத்தனை மகத்தானது!

இதுவரை பக்தியோடு வழிபடுபவர்களை பார்க்கும் போது பொதுவாக பிழைப்புவாதம் என்றோ அசட்டுத்தனம் என்றோதான் தோன்றும். முதன்முறையாக அவ்வாறல்ல என்றும் அதுவொரு ஆசிர்வதிக்கப்பட்ட நிலை என்பதையும் உணர்ந்தேன். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். வாழ்க்கையில் முதல்முறையாக மனதார என் கடவுளை நானும் வணங்கி நின்றிருந்ததை! என்னவொரு விடுதலையான நிலை! கடவுளும் தோழனுமாகிய என் நாயகனை அங்கு கண்டுகொண்டேன்.

முருகனோடும் பெருமாளோடும் கருப்பனோடும் நாள்தோறும் பேசிக்கொண்டிருக்கும் பக்திமரபில்வந்த சென்ற தலைமுறைக்கு இது மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அம்மரபிலிருந்து நவீன இளைஞர்கள் வெகுதூரம் விலகி வந்தாயிற்று. திருநீறு இட்டுக் கொண்டால் அவ்வளவு கெத்தாக இருக்காதோ என யோசிக்கும் இன்றைய இளைஞனுக்கு கடவுளரிடம் பேசும் மொழியேதும் மிச்சமிருப்பதாகத் தெரியவில்லை.

ஒருவகையில் வெண்முரசு செய்வது இதைத்தான் என பொருள்கொள்கிறேன். கருவறை அமர்ந்த தெய்வங்களை பீடம்விட்டிறக்கி எங்கள் வரவேற்பறையில் விட்டிருக்கிறீர்கள். தேவர்களோடும் அசுரர்களோடும் இனி நாங்கள் தோள்கோர்த்து களியாடலாம். வெண்முரசல்லாமல் நான் கிருஷ்ணன் எனும் களித்தோழனை அடையாளம் கண்டிருக்கமாட்டேன். நன்றி என்பதற்கப்பால் என்ன சொல்வதென தெரியவில்லை.

அன்புடன்,

தே.அ.பாரி.

முந்தைய கட்டுரைகாந்தி கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்