இலக்கிய வாசிப்பும் பண்படுதலும்

tolstoy1

ஜெ,

சமீபத்தில் ஒரு நண்பரிடம் உரையாடும்போது இலக்கிய வாசிப்பு புதிய பார்வைகளையும், சிந்தனைகளையும் அளித்து பண்படுதல் என்கிற நிலைநோக்கி நகர்த்துவதாகக் குறிப்பிட்டேன். ஆனால் அவர் இலக்கியத்தைப் பண்படுதலுக்கான கருவியாகக் கொள்ள முடியாதென்றும் அது ஒரு கலை மட்டுமே என்றும் குறிப்பிட்டார். பண்படுதலுக்காக இலக்கியம் என்றால் இலக்கியவாதிகளே பண்படவில்லையே எனக் கேட்கிறார். ஒரு எழுத்தாளர் காமம் சார்ந்த சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு செல்கிறார். ஆனால் அவரிடமிருந்து ஒரு நல்ல இலக்கியம் கிடைக்கிறது. இப்பொழுது அவரது எழுத்தை நாம் எப்படி அணுகவேண்டும்? எழுதுபவரின் ஆளுமையை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாதா? ஒரு எழுத்தாளனே கொலைகாரனாய் இருந்துவிட்டு, இலக்கியம் படித்தால் மக்கள் உருப்படுவார்கள் என்று அறைகூவல் விடுத்தால் அதை எப்படிப் பார்ப்பது?

ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்குப்பின்பு சமகால எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே பேசப்படும் அவர்மீதான விமர்சனங்கள் பெரும்பாலும் மறைந்துவிடும் எனும்போது எழுத்தாளரின் ஆளுமை தேவைப்படாமல் போய்விடுமா? எழுத்தாளனையே பண்படுத்தாத எழுத்து எப்படி சராசரி மனிதனை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும். ஒருவேளை நண்பர் சொல்கிறபடிக்கு அது வெறுமனே மகிழ்ந்திருப்பதற்கான, துக்கப்படுவதற்கான ஒரு கலை மட்டும்தானா ?அது பண்படுதலை எல்லாம் நிகழ்த்தாதா? ஒரு இலக்கிய வாசிப்பின் தேவைதான் என்ன?

அன்புடன்,
அகில் குமார்.

***

அன்புள்ள அகில்

எப்போதுமிருக்கும் கேள்விதான் இது. கம்பனைப்பற்றியும் காளிதாசனைப்பற்றியும் புழங்கும் கதைகள் எவையும் கௌரவமானவை அல்ல. ஆனால் தமிழ்ச்சமூகத்தில் ஆழ்ந்த விழுமியங்களை நிறுவிவிட்டுச்செல்ல கம்பனால் முடிந்தது அல்லவா? இன்றும் கம்பன் சொல்வழியாகத்தானே அவ்விழுமியங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம்?

அப்படியென்றால் ‘அதெப்படி கெட்டவன் நல்ல விழுமியங்களைப் பரப்பமுடியும்?” என்ற கேள்விக்கு பொருளே இல்லை. பரப்பி நிலைநாட்டியிருக்கிறான். அது கண்ணெதிரே மலைபோல நின்றிருக்கிறது. எப்படி நிலைநாட்டினான் என்றுதான் ஆராயவேண்டும்.

உங்கள் கேள்வியில் உள்ள பிழை இலக்கியவாதியை அறநெறி சொல்லும் உபதேசகனாக நினைத்துக்கொள்வதுதான். அதாவது கம்பன் காமத்திலாடலாம். வள்ளுவர் அப்படி இருக்கமுடியாது. இதுதான் வேறுபாடு. இலக்கியப்படைப்பு நெறிகளை அறிவுறுத்துவது அல்ல. அது வாழ்க்கையைச் சித்தரிப்பது. வாசகனை நிகர்வாழ்க்கை ஒன்றை வாழச்செய்வது

அவ்வாழ்க்கை அனுபவத்தை அடையும் வாசகன் தான் நெறிகளை அதிலிருந்து பெற்றுக்கொள்கிறான். எப்படி ஓர் உண்மை வாழ்வனுபவத்தில் இருந்து நெறிகளைப் பெற்றுக்கொள்கிறானோ அப்படி. அவ்வாறு உணர்வுச்செறிவுடன் வாழ்க்கையை அளிக்கும் எழுத்தாளன் பிறரை விட மேலதிக மென்மையுடன் மேலதிக நுண்மையுடன் மட்டுமே இருக்கமுடியும். சுந்தர ராமசாமியை மேற்கோளாக்கிச் சொன்னால் ஜன்னல் கம்பிகளுக்கும் வீணைத்தந்திகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு சாமானிய மக்களுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே உள்ளது

இந்த மென்மை, நுண்மை காரணமாகவே எழுத்தாளன் அல்லலுறுகிறான். வாழ்க்கையை வாழ அவனால் முடியவில்லை, வாழ்க்கையின் பொருளைத் தேடிக்கொண்டே இருக்கிறான். ஆகவே எல்லாரையும்போல ’நிம்மதி’யாக வாழமுடிவதில்லை. சின்னச்சின்ன விஷயங்களில் அமைதி இழக்கிறான். சாதாரண வாழ்க்கையைத் தாங்கமுடியாமல் அதை விசைகொள்ளச்செய்யும்பொருட்டு குடிக்கிறான். மிதமிஞ்சிய சினம் கொள்கிறான். கட்டற்று காமம் கொள்கிறான். அதீதமான மரணபயத்தில் உழல்கிறான். சாமானியரிடமில்லாத அறச்சீற்றம் கொள்கிறான். மிகப்பெரிய நம்பிக்கையையும் கனவையும் சென்றடைகிறான். சமயங்களில் விரக்தி மீதூறச் சரிகிறான். கட்டுமீறி களியாட்டமிடுகிறான். வறுமையில் உழல்கிறான். பூசலிடுகிறான். ஆணவம் கொள்கிறான். தனிமையில் இருக்கிறான்.

நீங்கள் ஓர் உதாரணபுருஷன் இலக்கியம் படைக்கவேண்டும் என விரும்பினால் அது எப்படி எளியவர்களின், வீழ்ச்சி அடைந்தவர்களின், புறக்கணிக்கப்பட்டவர்களின், தீயவர்களின் வாழ்க்கையாக ஆகும்? அது சான்றோர் மட்டுமே அறியும் ஓர் இலக்கியமாக அல்லவா இருக்கும்? அதற்கு என்ன உண்மையின் மதிப்பு இருக்கமுடியும்?

இலக்கியவாதி சமூகத்தின் வெவ்வேறு உறுப்பினர்களாக தான் மாறி நடிப்பவன். அதனூடாக தன் உள்ளத்தைக்கொண்டு அவ்வாழ்க்கையின் உள்ளாழத்தை அறிந்து எழுதுபவன். அத்தனை கீழ்மைகள் தீமைகளையும் அவன் தன்னுள் இருந்தே எடுக்கிறான். ஆகவே அத்தனை துயர்களையும் சரிவுகளையும் அவன் அடைகிறான். அத்துடன் அத்தனை மேன்மைகளையும் எழுச்சிகளையும் அவன் அடைகிறான்

எழுத்தாளன் நல்லுபதேசம் செய்யும் ஞானி அல்ல. அவன் வாழ்க்கையின் கீழ்மைகளில் தொடங்கி ஞானி அமர்ந்த உச்சம் வரைச் செல்பவன். ஆகவேதான் அவன் முழுவாழ்க்கையையும் எழுதமுடிகிறது. தல்ஸ்தோயை எப்படிச் சொல்வது? ஞானி அல்லவா? ஆம். மனைவியின் தங்கையுடன் கள்ளக்காதல் கொண்டவர் அல்லவா? ஆம். மாபெரும் அறச்சீற்றம் கொண்ட தத்துவவாதி அல்லவா? ஆம். காமத்தில் திளைத்தவர் அல்லவா? ஆம்

உங்கள் விவாதத்தின் சிக்கல் என்ன தெரியுமா? நீங்கள் விவாதித்தது இலக்கியவாசிப்பு அற்றவரிடம். இலக்கியவாசிப்பற்றவர்கள் இலக்கியம் என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டும் நன்னெறிகளின் தொகுதி என நினைப்பார்கள். இலக்கியவாசகன் அது ஒரு உயிருள்ள வாழ்க்கை என அறிவான். வாசிக்காதவர்கள் இலக்கியவாதியை ஒரு சான்றோன் என்பார்கள். வாசிப்பவர்கள் அவன் ஓர் உடலின் பல வாழ்க்கை வாழ்பவன் என நினைப்பார்கள்

ஜெ

 

afa94486-788b-411c-970d-f7e64d3c6edd

அகில்குமார் இணையதளம்

முந்தைய கட்டுரைருத்ரை
அடுத்த கட்டுரைகிராதம்,அய்யனார்,கதகளி