கொடுந்தெய்வங்களை அகற்றுவது குறித்து…

index

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிங்கையில் நலமாக எண்ணிய யாவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

கோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா?என்ற கட்டுரை படித்தேன். ஒரு கேள்வி என்னவெனில் – இந்திய தர்ம மதங்கள் நாட்டார் தெய்வங்களை உள்ளிழுத்துக்கொண்டாலும் அதனின் தனித்துவம் குறையாமல் மேலதிக தத்துவம் மற்றும் குறியீட்டு விளக்கம் அளித்து உன்னதப்படுத்துவதும், இது எப்படி ஆபிரகாமிய மத மாற்றத்திலிருந்து வேறு பட்டது என்பதையும் உங்களுடைய முந்தைய கட்டுரைகள் மூலம் புரிந்து கொண்டேன். ஒரு கட்டுரையில் நாராயண குரு மக்களிடம் புழங்கிய கோர தெய்வ வழிபாட்டிற்கு மாற்றாக சரஸ்வதி (கல்வி குறியீடு), விளக்கு ஆகிய வழிபாட்டை முன்னிறுத்தியது பற்றியும் கூறி இருந்தீர்கள். நாராயண குரு இதை சமூக கூட்டு மடைமாற்றத்திர்க்கு செய்தார் என்பது புரிகிறது.

ஆன்மிகத்தில் ரூப வழிபாடு ஒரு சாத்தியம் தான் என்பது தெரிகிறது. நான் அத்வைத சார்பு உடைவன் என்ற போதிலும் விக்ரக வழிபாட்டில் நம்பிக்கை இருந்து ஆரம்பிக்கும் ஒருவரின் கோணத்தில் இருந்து இதை புரிந்து கொள்ள முயல்கிறேன். தனி மனித ஆன்மிகத்தில் மனம் இசைந்திசைந்து மேற்கொண்டு கனிய இந்த தெய்வ ரூப மாற்றங்கள் நிச்சயம் அவசியம் தானா? காளியை வழிபட்ட சாத்விக ராமகிருஷ்ணர் அமைந்தாரே? நிச்சயமாக இதை தெளிந்து கொள்வதற்கு மட்டுமே கேட்கிறேன்.

நன்றி,

தியாகராஜன்

கொலம்பஸ், ஓஹயோ

***

அன்புள்ள தியாகராஜன்,

தெய்வங்களை ஏதோ ஒரு சதிவேலை என்று மட்டும் புரிந்துகொள்ளும் மொண்ணைத்தனத்தைக் கடந்து இங்கே விவாதிக்க பல உள்ளன. நான் கட்டுரைகளில் அழுத்தமாகச் சொல்வது அதையே. தெய்வங்கள் கருத்துருவங்கள், ஆழ்படிமங்கள். அவை தொல்பழங்கால வாழ்க்கையில் உருவாகி நம் ஆழ்மனக்கனவுகளாலும் அச்சங்களாலும் விழைவுகளாலும் வளர்க்கப்பட்டு இன்றைய உருவத்தை அடைந்துள்ளன. மேலும் வளர்ந்து மாறியபடியேதான் உள்ளன.ஒரு சமூகத்தின் ஆழ்மனத்தை கட்டமைப்பவை. ஆழ்மனத்தைப்புரிதுகொள்ள உதவக்கூடியவை. குடித்தெய்வங்கள்ஒவ்வொரு குடியின் எழுதப்படாத வரலாற்றையும் அவ்வரலாறு உருவாக்கிய அவர்களின் கூட்டுநனவிலியையும் நமக்குக் காட்டுபவை.

தெய்வங்கள் உருவாகி உருமாறிச்செல்வதற்கு நியதமான ஒரு செல்நெறி இல்லை. விதிகளும் இல்லை. ஏன் அப்படி நிகழ்கிறது என ஆய்வாளன் கூர்ந்து ஆராயலாம். தன் தரப்பை முன்வைக்கலாம். அவ்வாறு பலதரப்புகள் உருவாகிவரும்போது அவற்றுக்கிடையே உள்ள விவாதம் மூலம் ஒரு பொதுப்புரிதல் திரண்டு வரலாம். ஆனால் இங்கே அதைப்பற்றிப்பேச நிதானமான நோக்கும் ஆய்வுமுறைமையும் கொண்ட ஆய்வாளர்கள் மிகமிகக்குறைவு. அதிகம் சத்தம்போட்டு நம்மால் அதிகமாக அறியப்படுபவர்கள் தங்கள் எளிய அரசியலையும் சாதிக்காழ்ப்புகளையும் ஆய்வென்றபேரில் வெளியிடுபவர்கள். அவர்களைக் கடந்துசென்று நாமே சிந்திக்கவேண்டிய கட்டாயம் இன்று உருவாகியிருக்கிறது.

தெய்வங்கள் மாற்றமடைவது பலவகையில். பெருந்தெய்வ வழிபாடு கொண்ட மதங்களுடனோ தத்துவமதங்களுடனோ இணைகையில் அவை மாறுதலடைகின்றன. உதாரணம் சாத்தன் என்னும் தொல்தமிழ் நாட்டார்த் தெய்வம் பௌத்தத் தொடர்பால் போதிசத்வருக்குரிய அடையாளங்கள் பெற்று பௌத்தம் மறைந்தபின் இந்துமரபுக்குள் சாஸ்தாவாக அமர்ந்திருப்பது. இன்னொருவகை, அந்தத்தெய்வத்திற்குரிய குடிகள் தாங்கள் அடையும் மாற்றத்திற்கு ஏற்ப தெய்வங்களை மாற்றமடையச்ச்யெவது. இன்று பெரும்பாலான நாட்டார்தெய்வங்கள் அவர்களின் வன்மையான இயல்புகளை இழந்து வருவது இவ்வாறுதான். சுடலைமாடசாமி அருள்மிகுசுடலைமாடனாக ஆவதை கவனித்தால் இது தெரியும்.

என் வீட்டருகே ஒரு சுடலைமாடச்சாமி கோயில் உள்ளது. நான் கல்லூரியில்படிக்கையில் அது சூழ்ந்திருக்கும் வயல்களின் நடுவே இருக்கும் சுடுகாட்டில் நின்றிருக்கும் ஓர் ஆலமரத்தடியில் கூம்புவடிவ மண்அமைப்பாக நிறுவப்பட்டிருந்தது. இரு எவர்சில்வர் கண்கள், ஒரு பெரிய வாய், அவ்வளவுதான். அருகே சிதைமேடை. வருடத்திற்கு இருபது பிணம் எரியும். யாதவ சமூகத்திற்குச் சொந்தமான சுடுகாடு அது. சாமிக்கு வருடத்தில் இருமுறை கொடை. படுக்கை என்பார்கள். ஆடுவெட்டி அந்தக்கறியை சோறுடன் சேர்த்துச் சமைத்த ஊன்சோறு.

அங்கே சாரதா நகர் உருவாகி வந்தது, காரணம் நகர விரிவாக்கம். அந்தப்பகுதி மதிப்புமிக்க நிலமாக மாறியது. சுடுகாட்டைச்சுற்றி நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டன. அவர்கள் பணம் கொடுக்கவே சுடுகாட்டை மேலும் மலையடிவாரம் நோக்கி அகற்றிக்கொண்டனர். நான் 2000- த்தில் அங்கே குடிவந்தபோதுகூட அச்சுடுகாடு அதேபோலத்தான் இருந்தது. பத்துவருடம் முன்புதான் கடைசிப்பிணம் அங்கே எரிந்தது.

இப்போது அது அருள்மிகு சுடலைமாடசாமி கோயில். அங்கே அய்யர் வந்து பூசை செய்கிறார். சாமிக்கு சைவம்தான் படையல். இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது ? யாரும் அதை மாற்றவில்லை. கோனார் சமூகம் பொருளியல் மேம்பாடு அடைந்தது. கல்வி முன்னேற்றம் அடைந்தது. அவர்களின் பழைய வாழ்க்கைமுறை மாறியது. அந்நிலம் மதிப்புமிக்கதாக ஆகியது. பெரும்பாலான சுடலைமாடன், மாரியம்மன், முத்தாலம்மன் கோயில்கள் மேம்பாடுஅடைந்தது இப்பின்னணியிலேயே.

இதன் மறுபக்கமாக, பின்னால்சென்றுதான் அந்த தெய்வங்கள் அந்தக்குடிகளுக்கிடையே செலுத்தும் செல்வாக்கை நோக்கவேண்டும். வன்முறை கொண்ட குடித்தெய்வங்கள் அக்குடிகளின் ஆழத்தில் வன்முறைமனநிலையை நிலைநிறுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதை இன்றும் தமிழகத்தில் பலசாதிகளிடம் நாம் காணமுடியும் அக்குடிகளிடமிருந்து வன்முறைமனநிலையை அகற்றவேண்டுமென்றால் அந்தத் தெய்வங்களை அகற்றவேண்டும் என வாதிடுவதில் ஒரு நடைமுறை நியாயம் உள்ளது. வன்முறை அக்குடியில் இல்லாமலானால் உடனே தெய்வமும் இயல்பாகவே வன்முறையை இழப்பதே அதற்கான ஆதாரம்.

நாராயணகுருவைப்போன்ற ஒரு சமூகசீர்திருத்தவாதி, தத்துவஞானி, மெய்யுணர்ந்தவர் தன் சமூகத்திற்காக அதைச்செய்ததற்கான வரலாற்றுக்காரணம் இதுவே. அவர் கொலைத்தெய்வங்களை, பலித்தெய்வங்களை அகற்றிவிட்டு அங்கே கல்வித்தெய்வமான சரஸ்வதியை நிறுவினார். அத்வைத ஆப்தவாக்கியத்தை தெய்வமாக்கினார். அது நேரடியாகவே பெரிய விளைவை உருவாக்கியது. கல்வியறிவற்றவர்களும் கள்ளிறக்கும் தொழில்செய்தவர்களும் அடிதடிச்சாதியான ஈழவர் கல்வியில் இந்தியாவுக்கே முன்னுதாரணமான சாதியாக மாறினர். ஒரே தலைமுறைக்குள்.

இது அதே தெய்வங்கள் பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் நுழைந்து தத்துவார்த்தமாக விளக்கப்படும்போது தேவையாவதில்லை. காளிக்கும் இன்னொரு எளிய நாட்டார்தெய்வத்துக்குமான வேறுபாடு அதுதான். காளிக்கு சாக்த மெய்ஞான மரபின் மிகப்பிரம்மாண்டமான தத்துவப்பின்புலமும் மெய்யியல் பின்புலமும் உள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர் காளியை அந்தப்பின்புலத்திலேயே புரிந்துகொண்டார். ஏன் , வன்முறைத்தெய்வங்களை அகற்றிய நாராயணகுருவே காளிநாடகம்என்னும் உக்கிரமான கவிதைநூலை இயற்றியிருக்கிறார். காளியின் நடனத்தைப் பற்றியது அது. அந்தக்காளி வன்முறையின் வடிவம் அல்ல. இப்பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் ஆற்றலின் வடிவம்.

ஆனால் கொலைத்தெய்வங்களையும் பலித்தெய்வங்களையும் அகற்றுவது வரலாற்றுநீக்கம் செய்வதாகும். அதை நாராயணகுரு கருத்தில்கொள்ளவில்லை. அது அக்கால வழக்கம். பாரதி மாடனை காடனை வேடனைப்போற்றி மயங்கும் அறிவிலிகாள்என்றதும் மறைமலை அடிகளும் வள்ளலாரும் சிறுதெய்வ வழிபாட்ட முற்றாக நிராகரித்ததும் அந்தப்பின்னணியிலேயே .குடித்தெய்வங்களை முற்றாக அகற்ற அவரால் முடியவில்லை என்றாலும் ஈழவர் கணிசமான வரலாற்றுப்பின்புலத்தை இழந்தனர். அத்தெய்வங்கள் வன்முறையை இழந்து உருமாற்றம் அடைவதே சாத்தியமான சிறந்த நடைமுறை வழியாக உள்ளது.

ஜெ

 

முந்தைய கட்டுரைகாடு -ஒரு பார்வை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60