கோப்ரா

Forest

 

எங்கள் கோதாவரிப்பயணம் இணையம் வழியாகப் புகழ்பெற்றது. இன்னொரு கோதாவரிப்பயணம் செய்தேயாகவேண்டும் என்றனர் நண்பர்கள். குறிப்பாக எங்களுடன் சமணக் கோயில்களுக்கெல்லாம் வந்த நண்பர் லண்டன் முத்துக்கிருஷ்ணன் அடம்பிடித்தார். ஆகவே இன்னொரு பயணத்துக்கு நண்பர் சேலம் பிரசாத் ஏற்பாடு செய்தார். ராமச்சந்திர ஷர்மா அப்போது அமெரிக்கா சென்றுவிட்டிருந்தார்.

முத்துக்கிருஷ்ணன் இதற்கென லண்டனிலிருந்து கிளம்பி வந்தார். நாங்கள் பெங்களூரில் இருந்து கும்பலாக கோதாவரிக்குக் கிளம்பும் நாளில் செய்திவந்தது. படகுப்பயணம் செய்யமுடியாது. ஏனென்றால் கோதாவரியில் பெருவெள்ளம். கோதாவரி வெள்ளம் என்பது சாதாரணமானது அல்ல. சும்மாவே பெருவெள்ளம் பெருக்கெடுக்கும் நதி அது.

எல்லாம் திட்டமிட்டாகிவிட்டது. கிளம்பும் மனநிலை வந்துவிட்டது. என்ன செய்வது? கிருஷ்ணன் ஒரு மாற்றுத்திட்டம் சொன்னார். பெங்களூரிலிருந்து மங்களூர் செல்லும் பாதையிலுள்ள ஆகும்பே என்னும் ஊருக்குச் செல்லலாம். தென்னாட்டிலேயே அதிகமான மழைபெய்யும் ஊர் அதுதான். வெள்ளத்தால் தடையான பயணத்தை மழையில் கொண்டாடுவோம்

ஆகவே உடனே ஒரு வேன் ஏற்பாடுசெய்துகொண்டு கூட்டமாக ஆகும்பே சென்றோம். அதற்குமுன் அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. சுற்றுலா மையமாக இருக்கும் என நம்பினோம். செல்லும்போதே மழை பெய்துகொண்டிருந்தது. ஆகும்பே சென்றடைந்தபோது மழை பேருருக்கொண்டு எங்களைச் சூழ்ந்திருந்தது. அந்த நீர்த்திரைக்கு அப்பால் ஊர் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருந்தது.

ஆகும்பேயில் ஒரே ஒரு தங்கும்விடுதிதான். அதில் பயணிகள் என எவருமே இல்லை. எல்லா அறையும் காலி. அகவே பேரம்பேசி மிகக்குறைவான கட்டணத்துக்கு அறைகளை அமர்த்திக்கொண்டோம். மழைச்சாரலில் சுவர்கள் ஈரம்படிந்திருந்தன. போர்வைகளில் கூட மெல்லிய நீர்த்துளிப்படலம். தலையணை ஈரத்துணியாலானதுபோலிருந்தது. தரையில் நடந்தால் காலடிகள் ஈரத்தடமாக விழுந்தன

“மழைக்குப் பயப்படக்கூடாது. நாம் வந்திருப்பதே மழைநனையத்தான்” என்றார் கிருஷ்ணன். “ஆமாம்” என்று முத்துக்கிருஷ்ணன் பரிதாபமாகச் சொன்னார். லண்டனின் வருடத்தில் முந்நூறுநாள் மழைபெய்யும். மிஞ்சியநாட்களில் புயல். ”அதுக்கு முன்னாடி சாப்பிடலாமே” என ராஜமாணிக்கம் மென்மையாகக் கேட்டார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கடுமையான பசி. வரும் வழியெங்கும் ஒரு டீக்கடை கூட திறந்திருக்கவில்லை

வெளியே நல்ல இருட்டு. மழை இருட்டுக்குள் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. மழைக்கோட்டுகள் அணிந்துகொண்டு சேற்றிலும் பெருகி ஓடிய நீரிலுமாக நடந்து சென்று விடுதி நடத்துபவரிடம் “இங்கே சாப்பிட என்னென்ன கிடைக்கும்?” என்றோம். “அதோ அந்த தெருமுனையில் ஷேனாய் ஒருவர் சிறிய மெஸ் நடத்துகிறார். இங்கே வேலைபார்க்கும் வாத்தியார்கள் தான் அங்கே சாப்பிடுவார்கள். அனேகமாக கடையை மூடியிருப்பார்” என்றா

பதறியடித்துக்கொண்டு அங்கே சென்றோம். கடையை சாத்திவிட்டிருந்தனர். “இந்தமழையிலே பட்டினியா? இதுக்காய்யா வந்தோம்?” என முத்துக்கிருஷ்ணன் கேட்கவில்லை, முகம் அதைக்காட்டியது. நம்பிக்கை இழக்காத கிருஷ்ணன் கதவைத்தட்டினார். அரைவாசி திறந்த ஒரு வயதான பிராமணர் “கடை மூடிவிட்டோம்” என கன்னடத்தில் சொன்னார்

”நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம். மதியமே கூட சாப்பிடவில்லை. வேறு கடையே இல்லை” என தமிழில் சொன்னோம். ஷேனாய் கதவைத்திறந்து “வாங்க” என்றபின் “ரவா மட்டும்தான் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவீர்களா?” என்றார். “கொண்டாடுவோம்” என்றார் கிருஷ்ணன்.

அவர் உள்ளே சென்று படுத்துவிட்டிருந்த தன் மனைவியை எழுப்பும் ஒலி கேட்டது. அந்தப்பெண்மணி எழுந்து அடுப்பு மூட்டினாள். புகையின் மணம். அதன்பின் உப்புமாவின் மணம். பசி என்பது எவ்வளவு இனிய உணர்வு என அப்போதுதான் அறிந்தோம்.

ஷேனாய் உப்புமாவை எங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறினார். தேய்ந்துபோன பற்கள். ஒருவார வளர்ச்சிகொண்ட நரைத்தாடி. குட்டையான உடல். ஆனால் நான் பார்த்த மிக அழகிய சிரிப்புகளில் ஒன்று அது. சிலர் எதற்கும் வாய்விட்டு உரக்கநகைப்பார்கள். ஷேனாய் அத்தகையவர்.

”நன்றாக நனைந்துவிட்டீர்களா? இங்கே நனையாமல் வாழவே முடியாது” என்றார். “இங்கே இதுதான் மழைக்காலமா?” என்றார் கிருஷ்ணன். “இங்கே வேறு காலமே இல்லையே” என்றார் ஷேனாய். “தென்னிந்தியாவிலேயே மழை மிகுந்த இடம் என்றார்கள்” என்றேன். “ஆமாம்… அதனால்தான் இங்கே நிறைய மழைபெய்கிறது” என்று சொல்லி வெடித்துச்சிரித்தார்.

சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது “காலையில் வாருங்கள். இட்லி தோசை எல்லாம் உண்டு” என்றார் ஷேனாய். “கர்நாடக இட்லி உண்டா?” என்றார் ராஜமாணிக்கம். “உண்டு, செய்து தருகிறேன்” என்றார் ஷேனாய்

மழை நின்றுபெய்தது. எங்கும் மழையின் ஓலம். “சார், மழைக்காக வந்தாச்சு. வயிறும் நிறைஞ்சாச்சு. ஒரு மழைநடை போவமா?” என்றார் கிருஷ்ணன். மழையில் இருண்ட சாலைவழியாக கூட்டமாக நடந்தோம். “கதை சொல்லுங்க சார். இந்த மூடுக்கேத்த கதை” என்றார் கடலூர் சீனு. நான் பேய்க்கதைகள் சொல்லத் தொடங்கினேன்

முதலில் கேலி சிரிப்பு என அதைக்கேட்டவர்கள் மெல்ல ஒரு மந்தையாக திரண்டு கைகளைப் பற்றிக்கொண்டார்கள். மழையிலேயே நடுங்கிக்கொண்டு திரும்பிவந்தோம். விடுதிக்குள் நுழையும்போது கடலூர் சீனு “தலையை எண்ணிக்கிடுங்க. ஒண்ணு குறைஞ்சாலும் தப்பு. கூடினாலும் தப்பு” என்றார். சிரித்துக்கொண்டே மழையின் குரல்கேட்டுக்கொண்டு தூங்கினோம்

காலையில் ஷெனாயின் ஓட்டலில் இட்லி தோசை என ஆளாளுக்கு வெறிகொண்டு சாப்பிட்டார்கள். “இந்த சிரிப்புக்காகவே நாலு தோசை ஜாஸ்தியா சாப்பிடலாம் சார்” என்றார் ராஜகோபாலன். “மழையைப்பாக்க இந்த தூரம் வரை ஏன் வரணும்? உங்க ஊர்ல மழை இல்லியா?” என்றார் ஷேனாய். “அது வேற மழை” என்றார் கிருஷ்ணன்

ஆகும்பே விசித்திரமான ஊர். மழைக்குள் நின்றபடி மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன். மழைக்குள் பையன்கள் கால்பந்து விளையாடினார்கள். மழைநனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றன. மழைக்குள்ளேயே நனைந்துசொட்டியபடி ஓர் அம்மாள் காய்கறிகளைப் பரப்பி வைத்து விற்றாள். மழை அவர்களுக்கு வெயில்போல. அது பாட்டுக்கு பொழியும், அவ்வளவுதான்

நாங்கள் இரவு நடந்து சென்ற காட்டுவழியாக அருவி ஒன்றைப் பார்க்கச்சென்றோம். கிருஷ்ணன் தான் முதலில் அந்த படத்தைப்பார்த்தார். “சார்!” என அலறினார். ஆகும்பே ராஜநாகத்தின் சரணாலயம் என அறிந்துகொண்டோம். அந்தக்காடு முழுக்கவே ராஜநாகங்கள் உள்ளன. ஆகவே இருட்டில் நடமாடவேண்டாம் என்றும் புதர்களுக்குள் செல்லக்கூடாதென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது!

அதன்பின்னர்தான் கிருஷ்ணனுக்கும் ராஜமாணிக்கத்திற்கும் நினைவுச்சுரப்பிகள் ஊறி ஆகும்பே ராஜநாகச் சரணாலயம் பற்றி வாசித்தவை நினைவுக்கு வரத்தொடங்கின. அங்கே இரண்டு மாதங்களுக்கு முன்னால்கூட ஒருவர் நச்சுக்கடி பட்டு இறந்திருக்கிறார். ஆகும்பேயில் ராஜநாகத்திற்கு வருடம்தோறும் பல பலிகள் உண்டு

”காலெல்லாம் கூசுது சார்” என்றார் ராஜகோபாலன். அத்தனைபேரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். ராஜநாகம் கடித்தால் இறப்பு உறுதி. அதன் குட்டியே ஒரு யானையைக்கொல்லக்கூடிய நஞ்சு கொண்டது. உலகின் மிக நஞ்சுள்ள விலங்குகளில் ஒன்று அது. நேராக நரம்புகளை தாக்குவது அதன் விஷம்

“நேத்து இந்தப்பாதையிலதான் போனோம் சார்” என்றார் கிருஷ்ணன். “சொல்லாதீங்க” என்றார் சிவராமன். அருவியைப்பார்த்தபோது அது படமெடுத்த ராஜநாகம் போலத் தோன்றியது. எதைப்பார்த்தாலும் ராஜநாகம். கால்கள் தரையை தொட்டதுமே உலுக்கிக்கொண்டன.

மதியச் சாப்பாட்டுக்குத் திரும்பி வந்தோம். வழியில் ஒருவர் அறிமுகமானார். ஆசிரியர். வேற்றூர்க்காரர் “எங்க சாப்பாடு? கோப்ரா கடையிலயா?” என்றார். புரியவில்லை. “கொங்கணி பிராமணர் என்பதன் சுருக்கம்சார்” என சிரித்தார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு. “சும்மா, சுவாமியை கிண்டல்செய்வதற்காக. ஆனால் அவரை எவரும் கோபப்படவைக்கமுடியாது” என்றார் அவர்

மதியம் சாப்பிடும்பொது மிகப்பெரிய நகைச்சுவையை சற்றுமுன் கேட்டவர்போல சிரித்துக்கொண்டிருந்த ஷேனாயிடம் “உங்களை கோப்ரா என்கிறார்கள்” என்றேன். “இது கோப்ரா சரணாலயம். கடிச்சா கேஸில்லை” என்று அவர் உரக்கச் சிரித்தார். “இந்தக் கோப்ராவுக்கு விஷம் இல்லை” என்றார் அங்கிருந்த ஒருவர்.

கிளம்பும்போது கிருஷ்ணன் சொன்னார். “கிங் கோப்ரா சாங்சுவரின்னு தெரிஞ்சப்பவே இந்த ஊர் பயங்கரமா ஆயிட்டுதுசார். இதோட இயற்கை அழகுகள் கூட கண்ணில படாம ஆயிட்டுது. ஆனா இப்ப இந்த கோப்ராவோட சிரிப்பப் பாத்தப்ப எல்லாமே மாறிட்டுது. ஊரே அழகா தெரியுது”

ஷேனாயிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். மழை சற்று விட்டு இளவெயில் நிறைந்தது வானில். இலைகள் ஒளிசொட்டின. காற்று நீர்த்துளிகளை அள்ளி தூவியது. என் மனதில் கோப்ரா என்றால் ஓர் இனிய அழகிய விலங்கு என எப்படி ஒரு மனச்சித்திரம் உருவாகியது, எப்படி அது இன்றும் நீடிக்கிறது என்பதை நீண்டநாட்களுக்குப்பின் நினைத்துக்கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது.

[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]

 

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் நாட்கள்