ராமனின் நாடு

IMG_7453

 

 

மணி ரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனை ஒரு சினிமாவாக எடுக்கும் திட்டம் ஆறாண்டுகளுக்கு முன்பு உருவானது. நான் அதற்குத் திரைக்கதை எழுதினேன். ஆனால் தமிழகத்தின் எந்தக்கோயிலிலும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. கோயில்களின் சுற்றுச்சுவர்கள் அல்லாமல் தமிழகத்தில் தரைத்தளத்தில் அமைந்த பெரிய கோட்டைகள் இல்லை. வரைகலை இன்றைய வளர்ச்சி அடையாத அன்றைய சூழலில்  செட் போட்டு எடுப்பதென்றால் ஐம்பதுகோடி வரை செலவாகுமென கணக்கிடப்பட்டது. ஆகவே திட்டம் கைவிடப்பட்டது.

 

அந்தத்திரைக்கதையை நான் கோதாவரியின் கரையில் பிரம்மாவரம் அருகே இருந்த எலமஞ்சலி லங்கா என்னும் ஊரில் ஒரு விருந்தினர் மாளிகையில் ஒருமாதகாலம் தங்கி எழுதினேன்.

 

அற்புதமான சூழல். எலமஞ்சலி ஒரு அழகிய சிற்றூர். வளையோடுவேய்ந்த நீளமான வீடுகள் நிரைவகுத்த சீரான தெருக்கள் கொண்டது. வறுமையோ குப்பைக்கூளமோ இல்லாத சூழல். வீடுகளுக்கு முன்பக்கமாகவே இரு வாசல்கள். ஒன்று ஆண்களுக்கு இன்னொன்று பெண்களுக்கு.

 

ஊருக்கு அப்பால் பிரம்மாண்டமான தென்னந்தோப்புகள். தென்னங்காடு என்றே சொல்லவேண்டும். நடுவே ஓடும் மண்சாலை இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று கோதாவரியை அடையும். கோதாவரிக்கரையின் ஓரமாக செம்படவர்களின் ஊர்கள். மண்ணாலான சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். ஆனால் சுத்தமானவை. வாரந்தோறும் செம்மண்ணாலும் சுண்ணத்தாலும் கோலமிட்டு அவற்றை அழகுறச்செய்வார்கள்.

 

தென்னந்தோப்பு நடுவே இருந்தது நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. பத்தடி உயரமான சிமிண்ட் தூண்களுக்குமேல் அது நின்றது. அதன் முகப்பு ஊரைநோக்கியிருந்தாலும் ,மறுபக்கம் மிகவிரிவான ஒரு உப்பரிகை கோதாவரியை நோக்கித்திறந்திருந்தது.  அங்கிருந்து நோக்கினால் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் அகலத்திற்கு கோதாவரி விரிந்து கிடக்கும்.

 

கோதாவரியின் மிக அதிகமான அகலம் அங்கேதான்.  இரண்டு பெரிய நீர்வழிகளாகப்பிரிந்து கடலை அணுகியது. நடுவே பெரிய மணல்திட்டு ஒரு தீவுபோல தென்னைமரங்களும் புதர்களும் செறிந்து தெரியும். கோதாவரியின் நீரோட்டத்தில் அந்தத்தீவு கப்பல் போல மிதந்துசெல்வதாக பிரமை எழும். கோதாவரியின் நீர்ப்பாசிமணம் படிந்த காற்று அலையலையாக வீசிக்கொண்டிருக்கும்.

 

நானும் எனக்கு உதவியாக வந்த தனசேகரும் அங்கே குடியேறினோம். எங்களுக்குக் காவலாக ஒரு வாட்ச்மேன் மட்டும்தான். அவர்தான் அருகே ஒரு வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவை தினமும் கோதாவரியில் சிறுபடகில் சென்று எடுத்துவந்து தருவார். வயதானவர். எஞ்சிய நேரம் முழுக்க கீழே சிமிண்ட் தூண்களுக்கு நடுவே போடப்பட்ட கயிற்றுக்கட்டிலில் சுருட்டுப்பிடித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் அமர்ந்திருப்பார்.

 

நான் அந்த உப்பரிகையிலேயே நாள் முழுக்க அமர்ந்திருப்பேன். காலை எழுந்ததும் திரைக்கதையை கொஞ்சம் எழுதுவேன். பிறகு கண்ணை நிறைத்தபடி ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரியின் அலைகளையும், அதன் மேல் மெல்ல ஒழுகிச்செல்லும் படகுகளின் விரிந்து புடைத்த கொக்குச்சிறகு போன்ற வெண்ணிறப்பாய்களையும், அப்பால் வளைந்திறங்கும் வானத்தையும் பார்த்துக்கொண்டிருப்பேன். மறுகரை மெல்லிய பச்சைக்கோடு போல நெளிந்துகொண்டிருக்கும்.

 

படகுகளில் இருந்து செம்படவர்கள் வலைவிரிப்பதைப்பார்ப்பது ஓர் அபாரமான அனுபவம். படகுகள் சிறகு விரிப்பதுபோலத்தோன்றும். வலை சென்று நீரில் விழும் இடம் எப்படி கச்சிதமான வட்டமாக அமைகிறது என்று எண்ணி எண்ணி வியப்பேன். படகில் நின்றபடி செம்படவன் வலையை இழுக்கையில் அந்த விசைக்கு எப்படி படகு நகராமலிருக்கிறது?  சிலசமயம் படகு பெரும்பாலும் நீருக்குள் மூழ்கியிருக்க படகோட்டி வெறும்நீரில் துடுப்பிட்டு செல்வதுபோலத்தெரியும்

 

அந்தியில் வேறுவகை மீன்கள் வரும். ஆகவே சிறிய லாந்தல்விளக்குகளுடன் செம்படவர்கள் நீர்ப்பரப்பில் மீன்பிடிப்பார்கள். இருளுக்குள் அவை விண்மீன்கள் போலத்தெரியும். அலையடிக்கும் விண்மீன்கள். வானத்து விண்மீன்களுடன் அந்தச்செந்நிற விண்மீன்களும் கலந்துவிடும். அவர்களுக்கு என்றே பாடல்கள் உண்டு. நம்மூர் தெம்மாங்குபோல. பல மெட்டுக்களை பின்னாளில் தேவிஸ்ரீபிரசாத் சினிமாப்பாட்டுகளாக ஆக்கியிருக்கிறார். காற்றின் அலைவேறுபாடுகளுக்கேற்ப அந்த பாடல்கள் கிழிந்து கிழிந்து பிசிறுகளாக வந்து காதில் விழும்.

நான் அந்த மனநிலையை நீட்டிக்கச்செய்வதற்காக தெலுங்கு பாடல்களை மட்டுமே இரவில் கேட்பேன். ராமராவ் நடித்தபடங்களுக்காக கண்டசாலா பாடிய பாடல்கள் அற்புதமானவை. கண்டசாலா என்பது ஓர் ஊர், கோதாவரிக்கரையில்தான் அதுவும் இருக்கிறது.  ராமராவை நினைக்காமல் ஆந்திரத்தை பார்க்கமுடியாது. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். சிலைகளாக, சினிமாப்பாடல்களாக. இன்றைய ஆந்திரம் என்பது ராமராவின் சிருஷ்டி. தேங்கிக்கிடந்த ஆந்திரத்தை மறுபிறப்பு எடுக்கவைத்தவர் அவர்.என்றும் மக்களுடன் ஒருவராக இருந்தவர்

 

கூடவே தியாகய்யர் பாடல்கள்.அவையும் ராமா ராமா என்றுதான் கூவுகின்றன. ‘ராஜாதி ராஜ வேஷா ராஜனுத லலித பாஷா” என்கிறார் தியாகராஜர். அரசனுக்கரசனாக தோற்றமளிப்பவன். அரசனுக்குரிய எளிமையான பேச்சு கொண்டவன்” ராமன் ஒரு கனவு. ஓர் இலட்சியம்.

 

எங்கள் வாட்ச்மேனுக்கு தமிழ் தெரியாது. எங்களுக்கு தெலுங்கும் தெரியாது. ஆகவே பெரும்பாலும் சைகைமொழியால்தான் உரையாடல். பெரிய சிக்கலொன்றும் இல்லை. சிலநாட்களில் தெலுங்கு புரியத்தொடங்கியது. நான் அதிகாலையில் எழுந்து வேலைசெய்வதையும், என் செலவுக்கான பணத்தை தனசேகரே அளிப்பதையும், தனா அரைக்கால்சட்டை போட்டிருப்பதையும் கண்ட வாட்ச்மேன் அவரை என் எஜமான் என்று புரிந்துகொண்டார்.

 

காலையில் வந்ததும் என்னிடம் “பெத்தராயுடு எழுந்ததும் டீ கொண்டு வைத்திருப்பதைச் சொல்லிவிடுங்கள்” என்று பவ்யமாகச் சொல்வார். பெத்தராயுடு ஒன்பதரை மணிக்கு எழுந்து டீயை சாப்பிடுவார். மதிய உணவை பெத்தராயிடுவுக்கு வாட்மேனே அன்புடன் பரிமாறுவார். சமயங்களில் பெத்தராயிடுவை எழுப்பி உணவூட்டவில்லை என்பதற்காக என்னிடம் கோபித்துக்கொள்வதும் உண்டு

 

நாங்கள் ஒருமுறை வெளியே நடக்கச்சென்றபோது வாட்ச்மேனிடம் பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டுப் போனோம். அவர் சரி என்றார். திரும்பி வந்தால் விடுதி எல்லா வாசல்களும் திறந்து அனாதையாக கிடந்தது. அப்பகுதியில் எங்கும் மானுடநடமாட்டம் இல்லை. உள்ளே மடிக்கணினிகள் , செல்பேசிகள், பணம் ,நகை எல்லாம் இருந்தது. நல்லவேளை திருட்டுப்போகவில்லை.

 

ஒருமணிநேரம் கழித்து வாட்ச்மேன் வந்தார். கையில் இரவுணவு. தனா அவரை கண்டபடி திட்டினார். அவருக்கு என்ன புரிந்ததோ சிரித்தபடி தலையாட்டிக்கொண்டிருந்தார்.  மீண்டும் மறுநாள் அவரிடம் பலமாக எச்சரித்துவிட்டு நடக்கச்சென்றோம். திரும்பி வந்தபோது வீடு திறந்து கிடந்தது. அனு தனா உக்கிர ரூபம் கொண்டார். வாட்ச்மேன் தெய்வீகப்புன்னகை புரிந்தார்.

 

மீண்டும் அதேதான் கதை. அவர் அங்கே இருக்கையில் நாங்களே பூட்டிவிட்டும் செல்லமுடியாது. அப்படியும் ஒருமுறை சாவி வாங்கி பூட்டிவிட்டுச்சென்றோம். அவர் அதன் பின்னர் திறந்திருக்கிறார். அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். என்ன செய்வதென்றே தெரியவில்லை

 

அப்பகுதியில் டைகர்பிரான் எனப்படும் இறால்வளர்ப்புப் பண்ணைகள் மிகுதி. கோதாவரியின் நீரை மோட்டார் வைத்து இறைத்து வயல்களில் தேக்கி இறால் வளர்ப்பு செய்வார்கள்.  அங்கே கேட்டால் அதை ‘டிகர்’ என்பார்கள். டைகர் பிரான் என்பதன் சுருக்கம். வளர்ந்த இறால்களை வாங்கிச்செல்ல வந்த லாரியில் ஒருவர் தமிழ் பேசினார். எங்கள் தமிழ்ப்பேச்சைக்கேட்டு அவரே வந்து எங்களிடம் உரையாடினார். மாணிக்கம் என்று பெயர். திருப்பத்தூர்காரர்

 

அவரிடம் வாட்ச்மேனிடம் இந்தச்செய்தியைச் சொல்லிப்புரியவைக்க முடியுமா என்று கோரினோம். மதிப்புமிக்க பொருட்கள் இருக்கின்றன, கதவை மூடிவிட்டுச் செல்லும்படி நாங்கள் மன்றாடுவதாகச் சொல்லச் சொன்னோம். மாணிக்கம் சிரித்தார். “சார், இவனுகளுக்கு அதைச் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. ஏன்னா இங்க திருட்டே கெடையாது”

 

ஆச்சரியமாக இருந்தது. “பாத்தீங்கள்ல, ஒரு வீட்டையாவது மூடி வைக்கிறாங்களா? பலசமயம் ராத்திரிகூட கதவு தெறந்துதான்சார் கெடக்கும். இங்க திருட்டு நடக்கிறதே இல்ல. அதனால அந்த மாதிரி நெனைப்பே இவனுகளுக்கு இல்ல…. வேணுமானா சொல்றேன்”. நான் “வேண்டாம்” என்றேன். அது திருட்டை அவர்களுக்கு நாமே கற்பிப்பதுபோல.

 

உண்மையில் எலமஞ்சலி அப்படித்தான் இருக்கிறது என்பதை அதன்பின் கண்டேன். அங்கே குற்றம் என்பதே இல்லை. திருட்டு, அடிதடி எதுவும். இத்தனைக்கும் எல்லா மளிகைக்கடைகளிலும் சாராயம் கிடைக்கும். குடித்தால் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அவ்வளவுதான். எல்லா வீடுகளும் திறந்துதான் கிடந்தன. மீனவர்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு இரண்டுநாட்கள் மீன்பிடிக்கச்செல்வதும் உண்டு

 

கோதாவரியில்தான் மிகச்சிறந்த உணவை உண்டேன். மிகக்காரமான உணவு, ஆனால் அற்புதமனா சுவை. மீன்குழம்புடன் இட்லி.மீன்குழம்பின்மேல் இரண்டு இஞ்ச் கனத்துக்கு எண்ணை நிற்கும். கோதாவரியில் மீனுக்கு நெய் மிக அதிகம். பளிங்குத்தயிர். காலையுணவாக உளுந்துவடை சாப்பிட்டது அங்கேதான். வாட்ச்மேன் எப்போதுமே நிறைய உணவு கொண்டுவருவார். ஏழுஎட்டுபேருக்குத் தாங்கும். ஆந்திரர்கள் நன்றாகச்சாப்பிடுபவர்கள். நாங்கள் கொறிப்பவர்கள்.

 

பரிமாறி எஞ்சிய உணவை வாட்ச்மேன் சாப்பிடுவார். மிச்ச உணவை வைத்துக்கொண்டு கீழே அமர்ந்திருப்பார். படகுகள் செல்லும்போது ‘ஓகே ஓ!” என கூவுவார். பசியுடன் இருக்கும் செம்படவர்கள் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். விலையேதும் இல்லை. நன்றிசொல்வதும் இல்லை. இயல்பாகச் சாப்பிடுவார்கள்.

 

ஒருநாள் நாங்கள் நடைசென்றுவிட்டு திரும்பிவந்தோம். விடுதிக்குள் இரு செம்படவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும் நட்புடன் சிரித்து “பசித்தது , ஆகவே வந்தோம். நீங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்றால் பாத்திரம் தரையில் இருக்கும் என்றார் அண்ணா. தரையில் இருந்தது. ஆகவே சாப்பிடுகிறோம்” என்றார்கள்.

 

“நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அவர் எங்கே?” என்றென். “அவர் நாங்கள் வரும்போதே இல்லை. மகள் வீட்டுக்குப்போயிருப்பார் என நினைக்கிறோம்” சாப்பிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு துடுப்பைத்தூக்கிக்கொண்டு படகைநோக்கிச் சென்றார்கள்.

 

நான் “வண்மை இல்லை ஓர் வறுமை இல்லையால்” என்ற கம்பன் வரியை நினைத்துக்கொண்டேன். வறுமை இல்லாத இடத்தில் கொடையும் இருக்கமுடியாது. பகிர்தல் இருக்கும். அது கொடை அல்ல. பகிரும்போது கொடுப்பவனும் பெறுபவனும் சமமான நிலையில் இருக்கிறார்கள். பகிர்தல் இருந்தால் வறுமை இருக்காதுதான். எலமஞ்சலி லங்கா வாழ்வது வறுமையும் வள்ளல்தன்மையும் இல்லாத பழைய ஒரு காலகட்டத்தில். கம்பன் பாடிய ராமனின் நாட்டில்.

 

முந்தைய கட்டுரைகனவுத்தமிழகம்,கோரதெய்வங்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51