‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26

[ 5 ]

கோபாயனர் சினம்கொண்டிருப்பதை உள்ளே நுழைந்ததுமே தருமன் அறிந்துகொண்டார். அவர் அருகே நின்றிருந்த மாணவன் பணிந்து அவரை அமரும்படி கைகாட்டினான். அவர் அமர்ந்துகொண்டதும் வெளியேறி கதவை மெல்ல மூடினான். அவர்களிருவரும் மட்டும் அறைக்குள் எஞ்சியபோது கோபாயனர் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டார். சினமின்றி இயல்பாகப் பேசவேண்டுமென அவர் எண்ணுவதை காணமுடிந்தது. எதுவானாலும் முதற்சொல் அவரிடமிருந்தே எழட்டும் என தருமன் காத்திருந்தார்.

“இன்றுகாலை கிருதன் என்னும் இளையோன் இங்கு வந்து என்னிடம் உரையாடிச் சென்றான்” என்று உணர்ச்சியற்ற இறுகிய குரலில் கோபாயனர் சொன்னார். அக்கணமே நிகழ்ந்தவை அனைத்தையும் தருமன் புரிந்துகொண்டார். ஒன்றும் சொல்லாமல் நோக்கியபடி அமர்ந்திருந்தார். “நேற்றிரவு ஆகாவல்கொட்டகையில் நீங்கள் பேசியதை அவன் என்னிடம் சொன்னான். அச்சொற்களை நீங்கள் அச்சொல்லாடலில் ஒரு அதிர்ச்சிக்காக சொல்லியிருக்கலாம். அவன் அதை அப்படியே எடுத்துக்கொண்டுவிட்டிருக்கிறான்” கோபாயனர் சொன்னார்.

“எளிய உள்ளம் கொண்ட இளையோன். அத்தனை தத்துவச்சொல்லாட்சிகளையும் வாழ்க்கையுடன் நேரடியாக இணைத்துப் பார்ப்பவன். அத்தனை உவமைகளையும் வாழ்க்கையிலிருந்து நேரடியாகவே எடுத்துக்கொள்பவன். அத்தகையோர் இங்கு வந்தபடியே இருப்பார்கள். அவர்களை எளிதில் நிறைவடையச் செய்யமுடியாது. ஏனென்றால் நாம் வாழ்க்கையைப்பற்றி பேசினால் அதற்கு தத்துவ ஒருமையை கோருவார்கள். தத்துவ ஒருமைகொண்ட கூற்றுகளுக்கு வாழ்க்கையில் ஆதாரம் கேட்பார்கள். அவர்கள் தாங்களே அறிந்து அடங்கவேண்டும் அல்லது அனைத்திலிருந்தும் அகன்று செல்லவேண்டும். அதுவரை அவர்களை வைத்திருப்பது கடினம், அகற்றுவது மேலும் கடினம். ஏனென்றால் நம் கல்விநிலையின் மிகக்கூரிய மாணவர்கள் அவர்களே” என்றார் கோபாயனர்.

“ஆம், அவ்விளையோன் அத்தகையவன்” என்றார் தருமன். “அவன் என்னிடம் சொன்னான், நீங்கள் இளைய யாதவரை தொல்வேதத்தின் தெய்வங்களை வென்ற இந்திரனை வென்றவர் என்றீர்கள் என. வேதம் புதிதுசெய்த சுனக்ஷேப முனிவர் போன்றவர்கள் அனைவருக்கும் அவர் ஒருவரே நிகர் என்றீர்கள் என.” தருமன் மெல்ல தன்னை இறுக்கிக் கொண்டு “ஆம்” என்றார். “அதை நீங்கள் உண்மையிலேயே நம்பித்தான் சொல்லியிருக்கிறீர்களா?” என்றார் கோபாயனர். “நம்பாத எதையும் நான் சொல்வதில்லை, முனிவரே” என்றார் தருமன்.

சிலகணங்கள் கோபாயனர் அசைவற்று கீழே சாய்ந்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். பின்பு தொண்டையை கனைத்துக்கொண்டு பேசத்தொடங்கினார். “அரசே, நீங்கள் உஷஸ்தி சக்ராயனரின் கதையை கேட்டிருப்பீர்கள்” என்றார். தருமன் பேசாமலிருக்க அவரே தொடர்ந்தார். “முழுமையான கதையை எங்கள் பிராமணங்கள் சொல்கின்றன. முன்பு உத்தரகுரு நாட்டில் இஃப்யா என்னும் சிற்றூரில் வாழ்ந்துவந்த வேதமெய்யாளர் அவர். வேதம் உரைத்த வாழ்க்கையை வாழ்ந்தார். ஒவ்வொருநாளும் அருகிருக்கும் வயல்களிலும் காட்டிலும் திரிந்து பறவைகள் உதிர்த்த கதிர்களையும் தானாக கனிந்த கனிகளையும் சேர்த்துக் கொண்டுவந்து தன் துணைவியிடம் அளித்து சமைத்துண்டார். ஐவேளை எரி ஓம்பினார். மூவேளை பொழுதிணைவு வணக்கத்தை செய்தார்.”

“அப்போது பெரும்பஞ்சம் வந்தது. எங்கும் பசுமை என்பதே இல்லாமலாயிற்று. மக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறினர். கொடையளிக்க எவருமில்லாமல் கிராமங்கள் ஒழிந்தன. உணவில்லாமல் காட்டுவிலங்குகளும் தொலைவு தேடின. நாட்கணக்கில் உணவு ஏதுமில்லாமல் உஷஸ்தி சக்ராயனர் மெலிந்து உலர்ந்து ஒடுங்கினார். ஆயினும் அங்கு அவர் செய்துவந்த தவத்தை நிறுத்தலாகாதென்பதனால் அங்கேயே வாழ்ந்தார். அறமீறல் நிகழ்ந்தாலொழிய அந்தணன் வாழ்நிலத்தை கைவிடலாகாது. அவன்பொருட்டே மீண்டும் அங்கு மழை எழவேண்டும்.”

“அந்நாளில் ஒருமுறை குருநாட்டின் அரசன் கிருதவர்மன் வேட்டைக்கென அங்கு வந்து காட்டில் இளைப்பாறிக்கொண்டிருந்தான். கையிலிருந்த உணவை முழுக்க அவர்கள் உண்டுமுடித்துவிட்டிருந்தமையால் துணைவர்கள் எஞ்சிய உணவுத்துகள்களைத் திரட்டி அரசனுக்கு மட்டும் அளித்துவிட்டு விலகி நின்றிருந்தனர். உணவின் மணம் அறிந்து அங்கு வந்த உஷஸ்தி சக்ராயனர் அரசனை அணுகி உணவுக்கொடை இரந்தார். திகைத்த அரசன் ‘முனிவரே, வைதிகர்களுக்கு தூயநல்லுணவையே அளிக்கவேண்டும் என்பது என் முன்னோர் வகுத்த நெறி. இது மிச்சில். கெட்டுப்போனதும்கூட’ என்றான். ‘உயிர்காக்கும் உணவு அமுதே. இன்று இது என்னுள் அமைந்த நால்வேதங்களையும் காக்கும் வல்லமைகொண்டது’ என்றார் உஷஸ்தி சக்ராயனர்.”

“அரசன் தயங்கியபடி அந்த உணவை அளிக்க உஷஸ்தி சக்ராயனர் அதை பெற்றுக்கொண்டார். ‘என் குடிலில் மனைவி இருக்கிறாள். முதலில் அவளுக்கு இதை அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார். ‘விடாய்க்கு இன்நீர் உள்ளது முனிவரே, அது தூயதும்கூட’ என்றான் அரசன். ‘பசிக்கு இரக்கையில் தெய்வங்கள் உடன்நிற்கின்றன. சுவைக்கு இரந்தால் அவை நெறிகளை நோக்கத் தொடங்கிவிடும். நீர் என் கால்வாயிலேயே ஓடுகிறது’ என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிச்சென்றார். அந்த உணவை தன் துணைவியுடன் பகிர்ந்து உண்டார்.”

’மழைபொழிவதற்காக அரசன் பெருவேள்வி ஒன்றை செய்தான். வேள்வி முடிந்தபின்னரும் மழை எழவில்லை. வேள்வி நிறைவுறவில்லை என்று கண்டு நிமித்திகரை அழைத்து நற்குறி கேட்டான். ‘இவ்வேள்வியை குறையற்ற அந்தணர் இயற்றவில்லை என்றே தெரிகிறது’ என்றார் நிமித்திகர். அப்போது தன்னிடம் இரந்துசென்ற உஷஸ்தி சக்ராயனரை அரசன் நினைவுகூர்ந்தான். அவரை அழைத்துவர தன் அமைச்சர்களை அனுப்பினான்.”

“அரசனின் ஆணைக்கேற்ப உஷஸ்தி சக்ராயனர் தலைநகருக்கு வந்தார். அங்கு வேள்வி செய்துகொண்டிருந்த அந்தணர்கள் பட்டும் பொன்னணியுமாக பொலிந்தனர். நல்லுணவு உண்டு உடல் ஒளிகொண்டிருந்தது. வேதமுழுமையையும் கற்றறிந்தவர் என அவர்களின் உள்ளம் தருக்கியிருந்தது. அவர்கள் எளிய மரவுரி அணிந்து பிச்சைக்காரனைப்போல வந்த உஷஸ்தி சக்ராயனரைக் கண்டு எள்ளல் நகைகொண்டனர். ஒருவர் அவரிடம் ‘வேள்வி முடிந்தபின்னரே உணவளிக்கப்படும் அந்தணரே, அவ்வழி சென்று காத்திருங்கள்’ என்றார்.”

“அவர்களிடம் பணிவுமாறாமல் உஷஸ்தி சக்ராயனர் சொன்னார் ‘வைதிகர்களே, நான் உங்களிடம் மூன்று வினாக்களை கேட்கிறேன். விடை சொன்னீர்கள் என்றால் விலகிச்செல்கிறேன்.’ அவர்கள் செருக்குடன் ‘கேளுங்கள்’ என்றனர். ‘இந்த வேள்விப்பந்தலை ஆளும் தெய்வம் எது? அந்த எரிகுளத்தின் தலைவன் யார்? இங்குள்ள அவிக்குவைகள் எவருடையவை?’ அவர்களுக்கு விடைதெரியவில்லை. வெவ்வேறு பெயர்களை எண்ணிப்பார்த்த பின்னரும் எதுவும் பொருந்தவில்லை. ‘என் பெயர் உஷஸ்தி சக்ராயனர். நான் வசிஷ்ட குருமரபைச் சேர்ந்தவன். என் சொற்களை நீங்கள் ஏற்கலாம்’ என்றார்.”

“உஷஸ்தி சக்ராயனர் அவர்களிடம் சொன்னார். ‘வைதிகர்களே, வேள்விச்சாலையின் அரசன் பிராணன். வேள்விச்சாலையை ஒரு புருஷன் என்கின்றன நூல்கள். அப்புருஷனுக்கு மூச்சென ஓடுவது பிராணன் எனும் தெய்வம். வாயுவின் மைந்தன் அவன். அவனுக்கு நான்கு தம்பியர். அபானன் உதானன் சமானன் வியானன் என்னும் துணைவருடன் அவன் இங்கு வந்துள்ளானா?’ அவர்கள் திகைத்தனர். ‘வைதிகர்களே, இந்த வேள்விச்சாலை மூச்சுத்திணறுகிறது. ஏழுமுறை இதன் அனல் அவிந்தது. இச்சாலையை ஐந்து பிராணன்கள் நிறைக்கட்டும்.’ அவர்கள் தலைவணங்கினர்.”

“உஷஸ்தி சக்ராயனர் அவர்களிடம் சொன்னார் ‘வைதிகர்களே, அனைத்து அனல்களும் ஆதித்யர்களே. எரிகுளத்தின் இறைவன் நம் ஆதித்யனாகிய சூரியன். எரிகுளத்து நெருப்பு சூரியனை நோக்கவேண்டும். அவை தொட்டுக்கொள்ளவேண்டும். எரிகுளத்திற்குமேல் கூரை அமையலாகாது.’ அவர்கள் வணங்கி ‘அவ்வண்ணமே’ என்றனர். ‘வைதிகர்களே, இங்குள்ள அவிக்குவைகள் அனைத்தும் அன்னம். அன்னமே பிரம்மம். பிரம்மம் பிரம்மமாக மாறுவதையே நாம் வேள்வி என்கிறோம்.’ அவர்கள் அவருடைய தாள்பணிந்து அவ்வேள்விக்கு தலைமை ஏற்கும்படி சொன்னார்கள்.”

“வேள்வி நிகழ்ந்தது. குருநாட்டில் பெருமழை பெய்து நீர்நிலைகள் நிறைந்தன. பைங்கூழ் பழனங்கள் செழித்தன. வேதம் நிலத்தைக் காத்தது, நிலம் வேதத்தைப் புரந்தது” என்றார் கோபாயனர். “அரசே, இக்கதையின் உட்பொருள் புரிந்திருக்கும். வேதவேள்விக்குத் தலைவன் என வந்தமர்ந்தவன் முடிசூடி கோல்கொண்டவன் அல்ல. பட்டும்பொன்னும் அணிந்தவன் அல்ல. உஷஸ்தி சக்ராயனர் இரந்துண்டு கந்தை அணிந்து மண்ணில் கலந்து வாழும் எளியவர். வேதம் என்றும் அத்தகையோராலேயே புரக்கப்படுகிறது. இந்த பாரதவர்ஷம் அவர்களால் கோத்திணைக்கப்பட்டது. வாள்முனையால் அல்ல. அரசு சூழ்தலால் அல்ல.”

“வானளித்ததை உண்டு மண்ணுக்கு அறிவை மட்டுமே அளித்துச்சென்ற சான்றோர் தறிமேடையில் அமர்ந்து நெய்தெடுத்த பட்டு இந்த மண். பெறுவதற்கு எவரிடமும் எதுவும் இல்லை என்பதனால் முழுவிடுதலைகொண்டோரால் சொல்நிறுத்திக் காக்கப்படுவது” என்று கோபாயனர் சொன்னார். “அவர்கள் அமைத்த வேதத்தை மாற்றியமைக்கவேண்டும் என்றாலும் அவர்களே வரவேண்டும். அரசர்கள் இங்கு பிறந்து வென்று தோற்று ஆண்டு அடைந்து இறந்து மறைந்தபடியே இருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கு எந்நெறியையும் மாற்றும் உரிமை இல்லை. அவ்வுரிமை அளிக்கப்பட்டிருந்தால் இதற்குள் ஒவ்வொருவரும் வேதநெறியை தங்களுக்கு உகந்தவகையில் மாற்றியமைத்திருப்பார்கள். அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாகும் அறம் என இங்கு வேதம் அவர்களுக்கு மேல் எழுந்து நின்றிருக்கிறது. அக்காவல் அழிந்து மக்கள் கொடுங்கோலுக்குமுன் கையறுநிலை கொண்டிருப்பார்கள்.”

“உங்கள் யாதவர் யார்? கன்றோட்டும் குலத்தோர். வென்று ஒருநாட்டை அடைந்தமையால் அரசர். வெல்லப்படாத காலம் வரை அவர் அப்படியே அழைக்கப்படுவார். அரசர் என அமர்ந்து அவர் ஆற்றிய வேள்விகள் என்ன? அஸ்வமேதமோ ராஜசூயமோ வேண்டாம், எளிய வேள்வியைக்கூட துவாரகையில் அவர் ஆற்றியதில்லை. ஆம், அவர் வேதம் கற்றிருக்கிறார். இங்குள்ள அத்தனை கல்விநிலைகளிலும் புகுந்து வெளிப்பட்டிருக்கிறார். ஆனால் மாமன்னர் யயாதியோ அரசமுனிவர் ஜனகரோ துணியாததைச் செய்ய அவருக்கு என்ன தகுதி?” என்றார் கோபாயனர்.

அவர் குரல் எழுந்தது. “அவரை இந்நிலம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவரது ஆற்றல் என்பது துவாரகையால் அவரிடம் சேர்ந்த செல்வம், அவரைச் சூழ்ந்துள்ள யாதவகுலம். அதைவைத்து இந்நாட்டை முழுமையாக வென்று தன் சொல்லை இங்கு நிலைநாட்ட முயல்வார் என்றால் அவருக்கு ஹிரண்யகசிபுவின் கதையை சொல்லுங்கள். நால்வேதத்தை தடைசெய்து தன் அசுரவேதத்தையே பாரதவர்ஷமெங்கும் நிலைநிறுத்தவேண்டும் என அவர் எண்ணினார். அவர் மைந்தனின் நாவிலேயே எழுந்தது வேதம். அவர் அரண்மனைத் தூண்பிளந்து எழுந்தது சிம்மம்.”

அவரது சிவந்த முகத்தை நோக்கியபடி சற்றுநேரம் தருமன் அமர்ந்திருந்தார். பின்பு கைகூப்பி தலைவணங்கி “தைத்ரிய மரபின் முதலாசிரியரை தாள்தலைதொட வணங்குகிறேன். இங்கு எனக்குரைக்கப்பட்ட சொற்கள் அனைத்தும் மெய்யே என்பதில் எனக்கு ஐயமில்லை” என்றார். சினத்துடன் கோபாயனர் “அவ்வண்ணமென்றால் இன்றே அதை அவரிடம் சென்று சொல்லுங்கள். இன்று இளைய யாதவன் எதை நம்பி வேள்விகளை மறுக்கிறான்? சாந்தீபனி மரபு கௌஷீதகத்தின் ஒரு சிறுகிளை. அதற்கென்றொரு வேதச்சொல்வைப்பு இல்லை. பொருள்கோடலும் இல்லை. புதியன சொல்லுதல் எவருக்கும் எளிது. அதைச் சொல்லி நிறுத்துதல்  அரிது. தகுதியற்றவரிடம் பிறக்கும் சிந்தனை அதனாலேயே தகுதியற்றதாகிவிடுகிறது” என்றார்.

தணிந்த குரலில் “ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் வேதமுதல்வர் என எழுந்து வருகிறார் என்பதே இம்மரபின் வல்லமை என நான் எண்ணுகிறேன், ஆசிரியரே” என்றார் தருமன். “இன்று எழுந்து வந்திருப்பவர் அவர். ஆம், சடைமுடி சூடி கானகத்தில் அமர்ந்தவர் அல்ல. இரந்துண்டு வாழ்பவரும் அல்ல. ஆனால் அது மட்டுமே வேதத்தின் நெறி என எவர் சொல்வது?” மேலும் பணிந்து தருமன் தொடர்ந்தார். “இவையனைத்தையும் முற்றுணர்ந்தவன் அல்ல நான். இதை என்றேனும் உணர்வேனா என்றே இன்று ஐயுறுகிறேன். ஆயினும் எந்த அவையிலும் எவர் முன்னிலையிலும் நான் சொல்வதற்கு ஒன்றுண்டு. பாண்டவர்கள் இளைய யாதவருக்கு உரியவர்கள். இப்பிறவியில் பிறிதொரு எண்ணமில்லை.”

மீண்டும் தலைவணங்கி தருமன் எழுந்துகொண்டார். சினத்துடன் கைநீட்டி கோபாயனர் சொன்னார் “யுதிஷ்டிரனே, தொல்வேதங்களில் பேசப்பட்ட ரிஜிஸ்வானின் கதை ஒன்றுண்டு, அறிந்துகொள்! அவன் இரக்கமற்ற தந்தையால் அடித்து குருடாக்கப்பட்டான். குருடானதனால் வேத அவைகளில் விலக்கப்பட்டான். காட்டுக்குள் தனித்துப்புகுந்த அவன் அங்கே குகை ஒன்றுக்குள் சென்று ஒதுங்கினான். அங்கு காலொடிந்த அன்னை ஒநாய் ஒன்று மகவீன்று கிடந்தது. பசித்துக் கிடந்தபோதும் எழுந்துவந்து அவனைக்கொல்ல முடியாமல் அது உறுமியது.”

“அதன் நிலையுணர்ந்த அவன் சந்தைக்குச் சென்று தன் கையில் இருந்த பணத்தால் ஒர் ஆட்டை வாங்கிக்கொண்டு வந்து ஓநாய்க்கு அளித்தான். அவ்வாறு அவன் நூற்றியொரு ஆடுகளை அந்த அன்னைஓநாய்க்கு குருதிக்கொடை என அளித்தான். உடல்மீண்டு வல்லமைகொண்ட ஓநாய் ஓநாய்களின் வயிற்றில்வாழும் ஜடரை என்னும் அனலிடம் வேண்டிக்கொண்டது. ஜடரையின் குரல்கேட்டு அஸ்வினிதேவர்கள் இறங்கி வந்தனர். அவர்கள் அவனை விழிகொண்டவனாக ஆக்கினர்.”

தருமன் அவரை நோக்கியபடி நின்றார். “நான் இதற்குமேல் சொல்வதற்கொன்றுமில்லை. நன்று சூழ்க!” என்றார் கோபாயனர். மறுமொழி சொல்லாமல் தருமன் தலைவணங்கி வெளியே சென்றார்.

 

[ 6 ]

“ஆம், அவர் எளிய யாதவர்தான்” என்று வெடிப்புறுகுரலில் அர்ஜுனன் சொன்னான். அவன் அருகே தருமன் அமர்ந்திருக்க எதிரே கிருதனும் பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றிருந்தனர். “சென்று சொல் உன் ஆசிரியரிடம், இளைய பாண்டவன் இக்கதையை சொன்னான் என!” அவன் முகம் சிவந்திருந்தது. கண்கள் சினத்தால் நீர்மைகொண்டிருந்தன. தருமன் “இளையோனே, இதை பிறிதொரு தருணத்தில் பேசிக்கொள்ளலாமே” என்றார். “இல்லை அரசே, இவ்விடையைக் கேளாமல் என்னால் இங்கிருந்து நகரமுடியாது” என்றான் கிருதன். “குடியிலும் பிறக்காமல் ஆசிரியர் காலடியிலும் அமராமல் எப்படி கற்றார் வேதங்களை என்று என் மூத்த மாணவர்கள் கேட்டனர். அதற்கு என்னிடம் மறுமொழி இல்லை.”

“சத்யகாம ஜாபாலரின் கதையை உங்கள் குருநிலைகளில் சொல்லியிருப்பார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஜாபாலி என்னும் வேட்டுவப்பெண்ணுக்கு மைந்தராகப் பிறந்தார். இளமையில் அன்னையுடன் காட்டுக்குச் சென்று கனிகளும் கிழங்கும் ஊனும் தேனும் சேர்த்து மீள்வார். ஊர்ச்சந்தையில் அவற்றை விற்று உப்பும் உடையும் வாங்கி மீள்வார். அவர் வாழ்ந்தது பெரும்பாலும் காட்டிலேயே. அன்னை தன் வேட்டுவமொழியை அன்றி எதையும் அவருக்கு கற்பிக்கவுமில்லை. ஆனால் அன்னைஓநாய் மைந்தருக்கு என காட்டை கற்பித்தாள். பறவைமொழிகளை, விலங்குத்தடங்களை, வான்குறியை, மண்ணின் மாற்றங்களை என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி கற்பித்தாள்.”

ஒருநாள் அன்னையிடம் சத்யகாமன் கேட்டான் “இந்தக் குயில் எத்தனை காலமாக இப்படி கூவிக்கொண்டிருக்கிறது?” அன்னை “மைந்தா, குஞ்சென வந்த கணம் முதல்” என்றாள். “அதன் அன்னை எப்போதிருந்து அப்படி கூவுகிறது?” என்றான். அன்னை “அதன் முதல்கணம் முதல். புவியில் குயில் தோன்றிய கணம் முதல் அதன் பாடல் ஒன்றே” என்றாள். “மானுடர் மொழி மட்டும் ஏன் மாறிக்கொண்டிருக்கிறது?” என்று அவன் கேட்டான். “ஏனென்றால் மானுடரைச் சூழ்ந்துள்ள பொருளுலகம் மாறிக்கொண்டிருக்கிறது” என்று அன்னை சொன்னாள். “மாறாதவை என்று சில உண்டா மானுடருக்கு?” என்றான். “ஆம், மாறாதவை விண்ணில் இருந்து மானுடர் பெற்ற ஆணைகள்” என்று அன்னை சொன்னாள். “அவற்றைச் சொல்லும் மொழியும் அழியாததாகவே இருக்கமுடியும்” என்று மைந்தன் சொல்லிக்கொண்டான்.

ஒருநாள் சந்தையிலிருந்து அவன் மீளும்போது குறுங்காட்டின் அருகே ஒரு சிற்றாறின் கரையில் அந்தணர் ஒருவர் வேதம் ஓதி அந்திவணக்கம் செய்வதை கண்டான். அருகே சென்று “முதியவரே, நீங்கள் குயில்போன்றவரா?” என்றான். அவர் அவன் சொல்வதை புரிந்துகொண்டார். “ஆம், நான் என்னை ஆளும் விசைகளின் ஒலி மட்டுமே” என்றார். “அது என்ன சொல்? அதை நான் கற்கும் வழி என்ன?” என்றான் சத்யகாமன். “இது வேதம். இதைக் கற்க உன் குலமும் குடிமரபும் தந்தை பெயரும் வேண்டும்” என்றார் வைதிகர்.

அன்னையிடம் திரும்பிவந்த சத்யகாமன் “அன்னையே, என் குலமும், கோத்திரமும் எவை?” என்று கேட்டான். “அவ்வினா எழுமென்று காத்திருந்தேன், மைந்தா. நாம் மலைவேடர். இங்கு அன்னை மட்டுமே குருதியுறவு. தந்தையென நகர்மாந்தர் சொல்லும் உறவுக்கு இக்காட்டுக்குள் பொருள் இல்லை. எனவே நீ ஜாபாலியின் குலத்தில் பிறந்தவன். ஜாபாலகுடியைச் சேர்ந்தவன். மேலான உண்மையை விழைந்தமையால் இனி உன் பெயர் சத்யகாமன். எவர் கேட்டாலும் சத்யகாம ஜாபாலன் என உன் பெயரைச் சொல்” என்றாள். “நான் வேதச்சொல் பயில காடுவிட்டுச் செல்லவிழைகிறேன், அன்னையே” என்று அவள் கால்தொட்டு வணங்கி அருட்சொல் பெற்று கிளம்பினான்.

சத்யகாமன் கௌதம குருநிலையின் முதன்மையாசிரியரான ஹரித்ருமதரை அணுகி கால்தொட்டு வணங்கி வேதம் பயில வந்திருப்பதாக சொன்னான். “உன் குல, குடி, தந்தை பெயர் சொல்லி அமைக!” என்றார் ஆசிரியர். “மெய்விரும்பி வந்தவன். ஜாபாலியின் மைந்தன்” என்றான் சத்யகாமன். “வேதம் கற்க அதற்குமேல் தகுதி வேண்டுமென்றால் சொல்க, மீள்கிறேன்!” ஆசிரியர் புன்னகைத்து “முதல் தகுதியே போதும். பின்னது உன் அன்னைக்கு உன் கொடை என்று இம்மண்ணில் சொல்லப்படட்டும்” என வாழ்த்தினார்.

குருநிலையில் மாணவனாகச் சேர்ந்த வேடன் ஒவ்வொருநாளும் அங்கிருந்தவர்களால் அயலவனாகவே பார்க்கப்பட்டான். “அவன் பிறப்பு இழிந்தது. அவனால் வேதம்பயில முடியாது” என்றனர் மாணவர் சிலர். “தூய்மையற்ற கலத்தில் அமுதை வைக்கலாகுமா?” என்றனர் வேறுசிலர். “மாணவர்களே, வேதமெய்மையை அடைய வேதமும் தேவையில்லை என்று அறிக! சிறகுள்ளவனுக்கு ஏணி எதற்கு?” என்றார் ஹரித்ருமதர். மறுநாளே சத்யகாமனை அழைத்து “மைந்தா, இந்தத் தொழுவத்தின் மெலிந்து நோயுற்ற நூறுபசுக்களை உனக்களிக்கிறேன். அவற்றை ஆயிரமாக ஆக்கி திரும்பி வருக!” என்றார்.

நூறுபசுக்களுடன் அன்றே சத்யகாமன் காட்டுக்குச் சென்றான். அவனை ஆசிரியர் திருப்பியனுப்பிவிட்டார் என்று மகிழ்ந்தனர் மூத்தமாணவர்கள். “தனக்குரிய தொழிலை அவன் செய்யலாம்” என்றனர். புன்னகைத்து ஹரித்ருமதர் சொன்னார் “ஐவேளை எரியோம்புதலுக்கு இணையானது ஆபுரத்தல் என்கின்றது தொல்வேதம். நீங்கள் உளமொருக்காது ஓதும் வேதம் வீண். அவன் நிறைந்து செய்யும் கன்றுமேய்த்தல் கனியும்.”

ஏழாண்டுகாலம் காட்டிலிருந்தான் சத்யகாமன் என்கின்றன தொல்கதைகள். அங்கு அவன் மானுடரை ஒருமுறையும் காணவில்லை. அவன் உதடுகள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. மெல்ல அவன் உள்ளத்தில் ஓடிய சொற்களும் அணையத்தொடங்கின. ஓராண்டுக்குள் அவன் மானுட மொழியிலிருந்து முழுமையாகவே விலகிச்சென்றான். கன்றுகளிடம் பேச மட்டுமே அவன் வாய் அசைந்தது. பின்னர் அவற்றுடன் அவற்றின் மொழியில் தான் பேசத்தொடங்கியிருப்பதை ஒருநாள் உணர்ந்தான். உச்சிப்பொழுது கடப்பதைக் கண்ட அன்னைப்பசு ஒன்று அவனிடம் “மைந்தா, பசித்திருக்காதே, உண்டுவா. இப்பகுதியை என் மைந்தன் பார்த்துக்கொள்வான்” என்றது. அருகே நின்றிருந்த இளங்காளை “ஆம், நான் பொறுப்பு” என்றது.

பின்னர் சத்யகாமன் அங்குள்ள அனைத்து உயிர்களிடமும் பேசலானான். “ஆசிரியர்களே, சொல்க! என்றும் அழியாதது எது?” என்று அவன் கேட்டான். அக்காட்டில் வசித்த முதிய எருதொன்றை தன் முதலாசிரியனாகக் கொண்டான். அது சொன்னது “மைந்தா, அறிக! ஆற்றலே அழியாதது. எனவே வாயுவே இறைவடிவம்.” பின்னர் அவன் செங்கழுகுடன் அமர்ந்தான். “இளையோனே, தூய்மையே அழியாதது. எனவே அனலே இறைவன்” என்றது. அன்னப்பறவை ஒன்று அவனுக்குச் சொன்னது “ஆதித்யர்களால் ஆனதே ஒளி. ஒளியே அழியாதது.” மீன்கொத்தி சொன்னது “ஒவ்வொரு கணமும் துடிப்பது எதுவோ அதுவே நீ. பிராணனே அழியாதது என்றறிக!”

“இவை ஐந்தாலும் ஆனதே நான். இவையனைத்தும் அழியாதவை. அழிவின்மையே பிரம்மம். நானும் அதுவே” என்று அவன் உணர்ந்தான். ஆயிரம் பசுக்களுடன் அவன் திரும்பிவரக் கண்டபோது ஹரித்ருமதரின் குருநிலையில் இருந்தவர்கள் எழுந்து தொழுதுநின்றனர். பொன்னாலான கொம்புகளும் வைரங்கள் என ஒளிவிட்ட விழிகளும் கொண்ட நான்கு பசுக்களாக வேதங்கள் அவனை தொடர்ந்துவந்தன. வெண்பசுவாக ரிக். செம்பசுவாக யஜுர், பழுப்புநிறப் பசுவாக சாமம். கரும்பசுவாக அதர்வம். “வருக மைந்தா, நீ கற்றவற்றை எளியவர்களாகிய எங்களுக்குச் சொல்” என்று உரைத்தார் ஹரித்ருமதர்.

IMG-20160813-WA0003

“இன்றுமிருக்கிறது ஜாபால வேதமரபு. ஆயிரம் கல்விநிலைகளாக பாரதம் முழுக்க பரவியிருக்கிறது அது. சென்று சொல்க, உங்கள் ஆசிரியரிடம்! கன்றுமேய்த்தவன் பெற்ற அந்த வேதத்தை அனலோம்புபவன் எளிதில் பெறமுடியாது என. என்றும் அழியாதது தன்னை வெளிப்படுத்தத் தேர்வுசெய்யும் கருவிகளை இன்றிருந்து நாளை மடியும் எளிய மானுடர் வகுக்கமுடியாது என.” அர்ஜுனன் எழுந்துகொண்டு “வினாக்கள் எழுந்த உன் உள்ளம் வாழ்க, மைந்தா! நீ சென்று சேருமிடம் ஏதென்று நான் அறிவேன். அவ்வாறே ஆகுக!” என வாழ்த்திவிட்டு நடந்தான்.

முந்தைய கட்டுரைபோகன்!
அடுத்த கட்டுரைஇன்று நண்பர்கள் சந்திப்பு