இசை,டி.எம்.கிருஷ்ணா – கார்த்திக்

image3

 

அன்பு ஜெ ,

டி.எம்.கிருஷ்ணா விக்கு மெக்சசே விருதளித்தது பற்றிய உங்கள் கட்டுரை பார்த்தேன் நீங்கள் எழுதியதுதானா என்று சந்தேகமே வந்துவிட்டது , சும்மா விளாசியிருந்தீர்கள்.அவர் அந்த விருதுக்கு தகுதியானவராக அந்த விருதின் தகுதி என்ன , எதன் அடிப்படையில் அந்த விருது அளிக்கப்படுகிறது,எந்தெந்த பிரிவுகளில் அளிக்கப்படுகிறது என்பதெல்லாம் நியாயமான கேள்விகளே .ஆனால் நீஙகள் அதன் பொருட்டு ஒரு கலைஞனான / இசைஞனாக அவர் மீது வைக்கும் மதிப்பீடுகள் அதன் இலக்கை பெரும் வித்தியாசத்தில் தவறிவிட்டது என்றே தோன்றுகிறது.

டி.எம்.கிருஷ்ணா இந்த விருதுக்கு தகுதியானவர் அல்ல என்பதே உங்கள் முக்கிய விமர்சனமாக்க் கொள்கிறேன் ஆனால் நீங்கல் ஒரு இசைக் கலைஞனாகவும் அவர் மீது சில விமர்சனஙகளை வைத்துள்ளதால் அதைக் குறித்துப் பேசுவதும் முக்கியமாகிறது.

எனக்கு இந்திய மரபிசை மீதான நீண்ட நாள் ஆர்வம் அதிகமாக இருந்தாலும் , இசை குறித்த என் அறிதல் மிக ஆரம்பநிலையானதே , ஆனால் இன்று கர்நாடக இசை , அதன் அழகியல் , அதன் வடிவம் , அதன் சமூக தளம் போன்ற விஷயங்களைப் பற்றி நான் சிறிதாவது அறிந்துள்ளேன் என்றால் அது டி.எம்.கிருஷ்ணா வினால் தான் , அதற்கு நான் அவருக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.என் புரிதலின் இந்த எல்லைக்கு உட்பட்டே நான் சில கருத்துக்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

இலக்கியத்தில் செவ்வியல் என்ற கருத்துருவாக்கத்தை நான் தங்கள் எழுத்தின் மூலமே விரிவாக்கிக்கொண்டேன். இங்கிருந்தே நான் ஏனைய மரபான கலைகள் , அவற்றின் செவ்வியல் தன்மை , அவற்றின் அழகியல் என்று அறிய முற்பட்டேன்.

இயன்றவரை இந்திய இலக்கியம் , இசை , நடனம் இவற்றின் அழகியல் – இவ்வழகியல் நோக்குகளில் இந்திய அழகியல் என்று சொல்லக்கூடிய பொதுவான கூறுகள் உள்ளனவா என்று அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்தது . நான் முன்பொரு முறை பரதம் பற்றி எழுதிய குறிப்பொன்றை இவ்வகை தேடலின் மூலமே பெற்றேன். சிறிது காலம் என் பெண் நடனம் கற்றும் ஆசிரியரிடம் நானும் கற்றுக்கொண்டேன்.இதன் இயல்பான நீட்சியாகவே கர்நாட்க சங்கீத ஆழகியல் மற்றும் ரசனை குறித்த அறிந்து கொள்ளும் அவா இருந்து வந்தது.

நான் கர்நாடக சங்கீதம் பற்றியோ அல்லது ஒரு பாடகர் குறித்தோ எழுத நேரும் என்ற நான் கனவிலும் நினைத்திருந்தலில்லை , இன்று எழுதுகிறேன் என்றால் அதற்கு முழு முதற் காரணம் டி.எம்.கிருஷ்ணா தான்.நீங்கள் குறிப்பிட்டது போல கர்நாடக சங்கீதம் ராகங்களாக , கணக்கு வழக்குகளாக கற்றுக்கொள்ள வகுப்புகளும் ஆசிரியர்களும் இருந்தார்களே ஒழிய கர்நாடக சங்கீதத்தை ஒரு கலையாக அனுக , புரிந்துகொள்ள , அதன் அழகியல் நோக்கை அறிந்துகொள்ள எளிய வழிகள் இருக்கவில்லை.சங்கீதத்தில் விற்பன்னர்களாக இருந்தாலும் அதை சங்கீதத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் கலைச்சொற்கள் சாராது விளக்க பலரால் முடிந்ததில்லை.

இந்த ஒரு தருணத்திலேயே நான் டி.எம்.கிருஷ்ணா வை கண்டடைந்தேன் , அவரின் கர்நாடக இசை குறித்த ஒரு முழு நீள விரிவுரைத் தொடரின் மூலம்.இதில் அவர் கர்நாடக சங்கீதத்தின் அமைப்பு , வடிவம் , அழகியல் ,கணக்கு வழக்குகள் , கணக்கு வழக்குகள் ஏன் முக்கியம் அவை முக்கியமல்லாமல் போகும் இடம் எது , கற்பனைவளம், படைப்பூக்கம் அதன் பிரயோகம் என்பது பற்றி எல்லாம் செய்முறை விளக்கத்தோடு விளக்கியிருப்பார் .இதுவே எனக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது .முழுத்தொடரும் கிட்டத்தட்ட 40 சிறு உரைகளால் ஆனது.இது நடந்து ஒரு மூன்று நான்கு வருடம் இருக்கும்

இந்தப் பின்னனியில் சுமார் ஒரு வருடம் முன் தற்போது கர்நாடக சங்கீதச் சூழலில் (அதாவது பாடகர்கள் , ரசிகர்கள் , சபாக்கள் ) diversity இல்லாதது பற்றியும் அதை முன்னெடுக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் நண்பர்களிடையே ஒரு நீண்ட விவாதம் நடந்தது . அந்த விவாதத்திலேயே டி.எம்.கிருஷ்ணா , அவர் இசை மற்றும் சாதி சார்ந்து கருத்துக்கள் பற்றிய காட்டமான விவாதம் நடந்தது .இசையறிந்த நணப்ர்கள் பலரும் அந்த விவாதத்தில் இருந்தாரகள் ஆனால் கர்நாடக சங்கீதச்சூழலில் தற்சமயம் diversity இல்லை என்ற நிலைப்பாட்டையே பலர் ஏற்றுக்கொள்ளவில்லை .அப்படி ஒரு சிக்கலே இல்லை என்று அந்த விவாதம் தரை தட்டியது .அதன் பின் வேறு சில தருணங்களில் டி.எம்.கிருஷ்ணா ஒரு நவ மார்க்சியர் , மேட்டுக்குடி லிபரல் , அவர் பின்னால் ஒரு வலைப்பின்னல் உள்ளது, அவர் ஊடக கவனம் பெற இதையெல்லம் செய்கிறார் என்று பலவாரான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்த விவாதத்தின் பின்னரே நான் அவரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன் .அதே சமயம் தொடர்ந்து கர்நாட்க இசையும் கேட்க ஆரம்பித்திருந்தேன் . சமகால கலைஞர்கள் , கடந்த கால கலைஞர்கள், இசையறிந்த நண்பரக்ள் பரிந்துரைகள் என்று அனைவரையும் கேட்டு வந்தேன்.இசை பற்றி படிப்பது , இசை கேட்பது , அது பற்றி பேசுவது என்று இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. ராகம் குறித்த அறிவு மிக அடிப்படையானதாக இருந்தாலும் பாடகர்களின் கற்பனைவளம் மற்றும் தரம் குறித்த அவதானிப்பு மெல்ல உருவாக ஆரம்பித்தது.

ஆஸ்திரேலியாவில் , குறிப்பாக சிட்னியில் கர்நாடக சங்கீதம் மிகச் செழிப்பாகவே உள்ளது ( பரதநாட்டியமும்) .மாதம் ஒரு முறை வளரும் இசைக் கலைஞர்களின் கச்சேரி நடைபெறும் நான் சில கச்சேரிகளுக்கு சென்றுள்ளேன். இந்தியாவிலிருந்து வரும் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் எப்படியும் 3 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் முத்தாய்ப்பாய் ஒவ்வொரு ஜூன் மாதமும் சங்கீத விழாவெனறு 3 நாள் தொடர் கச்சேரிகள் வடிவில் நடைபெறும். 3 நாட்கள் , காலை ஒன்பதிலிருந்து இரவு ஒன்பது வரை , மொத்தம் 10-12 கச்சேரிகள் நடக்கும் . 750 பேர் அமரக்கூடிய அரங்கு மூன்று நாட்களுமே நிறைந்திருக்கும்.

இவ்வருட நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணா விம் கலந்துகொண்டார் .அந்த மூன்று நாட்களில் பல்வேறு தருணங்களில் அவருடன் பொதுவிலும் தனியேவும் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது . இசையை பற்றி , அவர் புத்தக்ம் பற்றி , இசைச்சூழல் , அவர் கட்டுரைகள் பற்றி ,அவ்ர் நிலைப்பட்டை வளர்த்துக்கொண்ட விதம் பற்றி , அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் , குற்றச்சாட்டுகள் என்று நீண்ட விவாதமாகவும் அது அமைந்தது .

மிகவும் நேரடியாகவும் , வெளிப்படையாகவும் ,தீவிரமாகவும் பேசும் தன்மை கொண்டிருந்தார் .உங்களைப் பற்றியும் வெண்முரசு பற்றியும உரையாடினோம்.நான் தமிழில் உயிர்ப்பாக இருக்கும் இலக்கிய / அறிவுச் செயல்பாட்டை சுட்டி அவர் எழுத்துக்கள் / கட்டுரைகள் தமிழில் வருவது முக்கியம் என்று சொன்னேன் .அவர் உங்களை பற்றி நன்கு அறிந்துள்ளார் , அவர் தமிழில் படிப்பது குறைவே என்றாலும் வெண்முரசு பற்றி அறிந்துள்ளார் . பொதுவான சில நண்பர்கள் மூலம் இலக்கியச் சூழலில் என்ன நிகழ்கிறது என்று ஓரளவு உணர்ந்திருப்பதாகவும் சொன்னார்.

பின் ஒரு தருணத்தில் இந்த உரையாடல் பற்றி வரிவாக எழுதுகிறேன்

 

image1

என் புரிதல் அளவில் நான் அவரை நான்கு தளங்களில் அனுகுகிறேன் ,

1.ஒரு இசைக் கலைஞனாக அவர் பங்கு

2. இசை குறித்த அவர் கருத்துக்கள்- கச்சேரி வடிவத்தில் அவர் கொண்டுவரும் சில பரிசோதனை முயற்சிகள்

3.இசைச்சூழல் குறித்த அவர் கருத்துக்கள்

4.இசை தவிர்த்த சமூகம் பற்றிய அவர் எழுத்துக்கள் கருத்துக்கள் .

1.ஒரு பாடகராக , ஒரு கலைஞனாக நாம் TMK வை எங்கே வைக்குறோம் என்பது மற்ற தளங்களுக்கும் முக்கியமாகிறது .நீங்கள் ஏன் பேச வேண்டும் , கர்நாடக சங்கீத பாடகர்கள் யாருமே அதிகம் பேசுவதோ , பொது விஷயங்களைப் பற்றி கருத்துகளை கூறுவதோ இல்லையே என்று கேட்டதற்கு தான் பாடுவதால் தான் பேசுகிறேன் என்றார் .இசை மூலமே ஆழம் கொண்ட தன் நுண்ணுணர்வு தன்னை பேசவும் கேள்வி கேட்க வைத்தது என்றார்.

என்னளவில் சமகால பாடகர்களில் TMK ஒரு மாஸ்டர் என்றே கருதுகிறேன் – கணக்கு வழக்கில் , கற்பனைவளத்தில் , அழகியலில் , படைப்பூக்கத்தில் . அவர் இசையில் முன்னெடுக்கும் சில பரிசோதனைகளும் மாற்றங்களும் பெரும் மாற்றங்கள் கொண்டு வருமா தெரியாது ஆனால் அவர் அதை முழு புரிதலோடுதான் செய்கிறார் என்று நம்புகிறேன் . அதன் காரண் காரியங்களையும் அவர் சீராகவும் ஆமோதிக்கதகுந்த வகையிலும் முன்வைக்கிறார் .

ஜோகப்பாக்களுடன் சேர்ந்து அவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சி , அது போன்ற fusion வகை இசை நிகழ்வுகளை எப்படி நிகழ்த்த வேண்டுமென்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.இசை , அழகியல் , கலை என்று பூரணமான புரிதல் இல்லாத ஒருவரால் இது போன்ற நிகழ்வை நிகழ்த்த முடியாது.

TMK இசையை ப் பொறுத்தவரை technically ஒரு மாஸ்டர் தான் ஆனால் அவர் சிறப்பு அதுவல்ல அது ஒரு பிளாட்பார்ம் அல்லது சட்டகம் மட்டுமே அதிலிருந்து அவர் கற்பனை வளத்தால் மேலே தாவிப் பறக்கிறார் , என்னளவில் இதை நான் உணர்ந்திருக்கிறேன்.எனக்கும் கணக்கு வழக்குகளில் அதிகம் பரீச்சையம் இல்லாததால் இதை என்னால் ரசனை அனுபவத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு சொல்ல முடிகிறது .வேறு பாடகர்களும் அதே நிகழ்ச்சியில் பைரவியில் RTP பாடினார்கள் ஆனால் கிருஷ்ணா பாடிய அம்பா காமாக்‌ஷியில் இயல்பாக என்னை மறந்த நிலை கைகூடியது .அவர் கருத்துக்களை மிக வன்மையாக எதிர்ப்பவர்கள் கூட அவர் இசையை சிலாகிப்பதை நேரில் கண்டுள்ளேன்.

2.இன்று கர்நாடக இசைச் சூழலில் அவர் சகித்துக்கொள்ளப்படுகிறார் என்றால் அது ஒரு பாடகராக அவர் நிராகரிக்கப்பட முடியாதவர் என்பதாலேயே.அவர் மேற்சொன்ன தகுதியௌ முன் வைத்தே , கச்சேரி வடிவில் சில மாறுதல்கள் , வாத்திய கலைஞர்களூக்கான சில வெளிச்சங்கள் , முன்னிறுத்தல்கள் ,எல்லா பாடல்களையும் ஏதொ ஒரு வகையில் பக்தி பாவமாக்குவிடும் போக்கு குறித்த விமர்சனம் ,பாடல் வரிகளின் பொருளை விட (literality of text ) அவற்றின் இசைத்தன்மை குறித்த முக்கியத்துவம், இசையில் பெண்களுக்கான இடம் என்று பல மாற்று கருத்துக்களை முன்வைத்தும் , செயல்படுத்தியும் வருகிறார் .சிட்னி கச்சேசியில் கஞ்சிரா வாசிப்பவரை மேடையில் முன்னால் அமரச் செய்தார்,மேற் பார்வைக்கு இது ஒரு gimmick போல தோன்றினாலும் அது கச்சேரியின் dynamics யையும் ரசிகர்களின் மனநிலையையும் மாற்றி அமைத்தது என்பதே உண்மை .இதில் சில முயற்சிகள் பரிசோதனை முயற்சிகளே , அவற்றின் பாதிப்பு நீண்ட கால நோக்கிலேயெ நாம் எடைபோட முடியும.

3.மேற்சொன்ன இரண்டு தளங்களில் இருந்தே நம் சமூகத்தின் இசை இருக்கும் இடம் , இசைச் சூழலில் பன்முகத்தன்மை இல்லாதது , கலாச்சார மேலாதிக்கம் , மரபிசையில் ஆர்வமிருக்கும் அனைவருக்கும் இசையை அனுக்கமாக்குவது போன்ற கருத்துகளை முன் வைக்கிறார் ..மரபிசை என்ற வார்த்தைக்கு மாற்றாக கலைஇசை ( art music ) என்ற பதத்தை பயன்படுத்துகிறார். அதே போல நாட்டார் இசையை சமூக இசை ( social music ) என்று விளிக்கிறார். இந்த தளத்திலே அவர் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறார்.

இசையில் பிராமண ஆதிக்கமே இல்லை என்று பிராமனரில்லாத ஒரு லிஸ்ட்டை தருவது . பிராமணரல்லாதோரை யார் இசை கற்பதிலிருந்து தடுக்கிறார்கள் என்ற வாதம் , கர்நாடக இசை எல்லோருக்கும் ஆனதல்ல , கர்நாடக் இசையை பிராமணர்கள் போஷித்தார்கள் இதை அவர்கள் கட்டுக்குள் வைத்திருப்பதில் என்ன தவறு.நீ சொல்வதோ செய்வதோ புதிதல்ல முன்பே இதை செய்தி விட்ட்டார்கள் , நீ என்ன செய்திருக்கிறாய் இதுவரை , உன்னை வளர்த்து விட்ட சங்கீதச்சூழலுக்கே நீ துரோகம் இழைத்துவிட்டாய் என்று பெரிய பட்டிலே இருக்கிறது.

என்னளவில் TMK இந்ததளத்தில் முக்கியம் கருத்து ரீதியான மாற்றங்களை நிகழ்த்தியிருப்பதேகவே உணர்கிறேன்.இது குறித்த விழிப்புணர்வை அவர் தொடர்ந்து பல தளங்களில் பேசியும் எழுதியும் வந்துள்ளார்.இதை பலர் இதுவரை முன்வைத்திருக்கலாம் நான் சொல்லலாம் , நீங்கள் சொல்லலாம் ஆனால் அவை மிக எளிதாக கடந்து செல்லப்படும் ஆனால் கர்நாடக சங்கீதத்தின் கர்ப்பகிரகத்திலிருந்தே இப்படியொரு குரலை ஒருவர் எழுப்பும் போதும் அது நிராகரிக்கப்படவே முடியாக ஒரு குரலாகிறது.த்ன் கச்சேரிக்கு இடையே கிருஷ்ணா பேசினால் மொத்த ரசிகரகளும் காது கொடுத்து கேட்கத்தான் வேண்டும் இந்த mindset மாற்றம் முதலில் நிகழ வேண்டிய டார்கெட் ஆடியன்ஸ் அங்குதான் உள்ளார்கள் .

ஜோகப்பாஸ் , ஆல்காட் குப்பம் போன்ற இவர் களப்பணிகள் நடப்பது இந்த தளத்திலேயே .அது போக பல கலை , இலக்கிய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று இசை பற்றி பேசி வந்துள்ளார் .இசையை குப்பத்திற்கு எடுத்துச்செல்வது இசையை அவர்களுக்கு சொல்லித்தரவோ, திணிக்கவோ அவர்கள் உடனடியாக அதை ரசிக்கவோ அல்ல.கர்நாடக இசை எங்கோ எவரே மட்டும் புழங்கும் ஒரு கலைவடிவமல்ல அது தங்களுக்குமானதே அது தங்க்ளையும் உள்ளடக்கமுடிவதே என்றெ inclusive உணர்வை உண்டாக்குவதே அதன் முதல் பணியாக இருந்தது.

சமூக கலை விஷ்யங்களில் – மனமாற்றம் சார்ந்த மாற்றங்கள் நிகழ முக்கியமாக பொதுவெளியில் கருத்துருவாக்கத்திலேயே பெரும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் . ஏழ்மையை அல்லது பசியை அகற்றும் களப்பணிக்கும் இதற்கும் ஒப்புமை வைப்பது சரியாக இருக்காது என்றே தோன்றுகிறது.இவ்விஷயங்களைப் பற்றி அவர் பேசாதிருந்தார் அவர் இன்னேரம் சங்கீதத்தில் ஒரு demi god ஆகத்தான் பார்க்கப்பட்டிருப்பார்.

4.இது இசை தவிர்த்து அவர் சமுகம் பற்றி , அரசியல் பற்றி (குறிப்பாக மோடி பற்றி ) அவர் முன்வைக்கும் பார்வைகள் . இவற்றைப் பற்றி எனக்கு பெரிய அறிமுகமோ அல்லது ஆர்வமோ இருந்ததில்லை .ஆனால் பல நாளிதழ்களில் இது போன்று பல் சிறு கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்.இதில் அவர் குறிப்பிடத்தகுந்த மாதிரி எதுவும் எழுதியதாய் தெரியவில்லை .ஆனால் இந்த தளத்தில் அவர் மோடி விமர்சகராக , இடதுசாரி வகையான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்று அறிகிறேன்.

போதாமைகள் .

1.செவ்வியல் வடிவம் , மேல்நிலையாக்கம் குறித்த அவர் தட்டையான புரிதல் அல்லது மாற்றான புரிதல் .

2.சில விஷயங்களை அதிரடியாக சொல்லும் /செய்யும் முறை – இது மரபில் ஊரிய மனங்களில் பெரும் அதிருப்தியையும் , பயத்தையும் விதைக்கிறது . பின் அவர்கள் TMK சொல்ல வருவதை பெரும் சந்தேகத்துடனும் நம்பிக்கையின்மையுடனுமே பார்க்கிறார்கள்.

3.மாற்றத்திற்கான தன் விழைவை – போதிய களப்பணிகள் மூலம் நிகழ்த்த் அவருக்கு வாய்ப்பு இருந்தது , அவர் அதை நிகழ்த்தியிருக்கலாம் என்னும் விமர்சனம் . குறிப்பாக இந்த விருதுக்கும் பின் அது இன்னும் அதிகமாகி உள்ளது.

4.தமிழ் சமூகத்தை பாதிக்கும் மிக முக்கிய விஷயத்தை பற்றி தமிழ் அறிவுத்தளத்தில் முன்னெடுக்காமல் பெரும் மாற்றம் கொண்டுவர முடியாது .அவரின் எழுத்துக்கள் தமிழில் அதிகம் இல்லாதது அவர் elitist என்ற பிம்பத்தை மக்கள் மனதில் கெட்டிபடுத்துவதை தவிர்க்க முடியாது போய்விட்டது .

விருது

முதலில் இந்தக் கட்டுரையை நீங்கள் ஏன் எழுதினீர்கள் என்றுதான் நினைத்தேன் , ஆனால் யோசித்துப் பார்க்கையில் இதுவும் நல்லதற்கே என்று தோன்றுகிறது .பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதி , கர்நாடக சங்கீதம் , லிபரல் மேல்தட்டு விவாதங்களில் மட்டுமே புழங்கி வந்த TMK பெயரை உங்கள் கட்டுரை தமிழ் இலக்கிய அறிவுச்செயல்பாட்டின் நடுச்சந்திக்கு கொண்டுவந்துள்ளது .

இன்னொரு வகையில் நீங்கள் சொன்னது போல இதை ஒரு வகையான cultural & Intellectual governance என்றே பார்க்கிறேன் . நீங்கள் என்ன செய்திவிட்டீர்கள் என்று TMK வை கேட்பது ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்ளப்பட்டு இது அனைவருக்கும் பங்குபெறும் ஒரு கூட்டு அறிவுச்செயல்பாடாக மாறினால் அதுவும் நல்லதே.

சங்கீதம் பற்றி ஆர்வமோ அல்லது TMK யார் என்று இது வரை அறிந்திராதவர்களோ கூட திடீரென்று அவருக்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதும் அல்லது அவரை எதிர்த்து பேசுவதுமாக சுவாரசியாமாகவே இருக்கிறது.:)

சரி இதுவரை நான் முன்வைத்தது சரி என்று கொண்டால் கூட TMK மெக்சசே விருதுக்கு தகுதியானவரா என்று கேட்டால் தெரியாது என்றே சொல்வேன் .ஆனால் அவ்விருது ஏதோ வகையில் ஊடக கவனத்தை வாங்கி , தொடர்புகளை பய்ன்படுத்தி பெறப்பட்டது என்று கூற்றை ஏற்கவும் தயங்குகிறேன். .நான் அவரை அறிந்தவரை அவர் விருதை குறிவைத்தோ அல்லது எளிய ஒரு சமூகச்சிக்கலை வசதிக்காக கையிலெடுத்துக்கொண்டு செயல்படுகிறார் என்று நான் எண்ணவில்லை

அப்படியே விருதிற்கான தகுதியை நிராகரித்தாலும் அதற்கான அவரின் மொத்த பங்களிப்பையும் போட்டு விளாசியிருப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது. tmk நிச்சயம் ஒரு கலைஞர் , கலையை பற்றி பேச அக்கறை கொள்ள எல்லா தகுதியும் கொண்டவர்.

தமிழ் இலக்கியத்தில் நான் உங்களை வைத்திருக்கும் உயரத்திலேயே நான் TMK வை கர்நாடக இசையில் வைத்திருக்கிறேன்.அவருக்கான இடத்தை நாம் அளித்து பின்அவர் மீதான விமர்சனங்களை வைப்பத்தே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்

கார்த்திக்

முந்தைய கட்டுரைவிக்ரகங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13