தஞ்சை தரிசனம் – 5

அக்டோபர் இருபதாம் தேதி காலையில் கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்றோம். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நான் செல்வது நான்காவது முறை. ஒருமுறை அஜிதனும் நானும் வந்து ஒருநாள்முழுக்க அங்கிருந்தோம். அந்த ஆலயத்தின் வளாகமும் கோயிலின் ஒட்டுமொத்த அமைப்பும் எல்லாமே தஞ்சைபெரியகோயிலை நினைவூட்டுபவை. சில கணங்களில் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தையே உருவாக்கிவிடக்கூடியவை

வீராணம்

வீராணம் கரையில்

தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ராஜராஜசோழன் இறந்ததும் ஆட்சிக்குவந்த அவர் மகன் ராஜேந்திரசோழன் இந்த நகரத்தை உருவாக்கினார். இங்கே கங்கைகொண்டசோழீச்ச்வரம் என்ற மாபெரும் ஏரியைவெட்டி அருகே இந்த ஆலயத்தையும் அமைத்தார். தலைநகரத்தை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக்கொண்டார்.

ராஜேந்திரசோழனுக்கும் அவர் தந்தைக்குமான உறவைப்பற்றி இரு தரப்புகள் உள்ளன. வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் இடையே அதிகாரம் சார்ந்த பனிப்போர் ஒன்று இருந்துகொண்டே இருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். மிக இளம்வயதிலேயே ராஜேந்திரன் சோழப்படைகளின் படைத்தலைவனாக ஆகிவிட்டார். சோழ மரபின் ஆகப்பெரிய படைத்தளபதி அவரே. ராஜராஜசோழனின் பெரும்பாலான போர்வெற்றிகள் உண்மையில் அவரது படைத்தலைவரான ராஜேந்திரனின் வெற்றிகளே.

ராஜராஜனின் காலத்திலேயே தந்தை மகன் முரண்பாடு மேலோங்கியது. விளைவாக ஒருவகையான அதிகாரப்பகிர்வு கண்டடையப்பட்டது. ராஜராஜன் தஞ்சையில் முடிச்சூட்டி ஆள அவருக்கு இணையான அதிகாரத்துடன் ராஜேந்திரன் இணை அரசனாக 1012ல் முடிசூட்டிக்கொண்டார். இருவருடம் கழித்து ராஜராஜன் மரணமடைந்ததும் ராஜேந்திரன் படிப்படியாக தந்தையின் அதிகார மையத்தை மாற்றியமைத்தார். அதன் விளைவே கங்கை கொண்ட சோழபுரம்.

வரலாற்றாய்வின் இன்னொரு தரப்பும் உள்ளது. உண்மைகளுக்குப் பதிலாக பெருமைகளை பட்டியலிடும் பாடப்புத்தக வரலாறு. இவ்வரலாற்றின்படி ராஜேந்திரசோழனுக்கும் அவர் தந்தைக்கும் இலட்சிய உறவு நிலவியது. தந்தையின் ஆலயத்தைவிட உயரமாக தன் ஆலயத்தை ராஜேந்திரசோழன் கட்டவில்லை என்பதை மட்டுமே அவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இவ்வகையான பெருமைப்படுத்தல் என்பது ஒருவகை புராண உருவாக்கம்தான். சிறந்த உதாரணம், கல்கி பொன்னியின்செல்வனில் செய்தது. சுந்தரசோழரின் மகனாகிய ஆதித்த கரிகாலன் சதியால் கொல்லப்பட்டான். அவனுக்குப்பதிலாக சுந்தரசோழரின் அண்ணன் கண்டராதித்த சோழனின் மகன் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சி செய்த 17 வருடங்களில் ஆதித்தகரிகாலன் கொலைசெய்யப்பட்டதற்குக் காரனமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதும் உத்தமசோழன் மரணமடைந்தபின் ராஜராஜசோழன் பதவிக்கு வந்தபின்னரே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் உடையார்குடிக் கல்வெட்டு தெளிவாகவே தெரிவிக்கிறது. ஆதித்தகரிகாலன் உத்தமசோழனால் கொல்லப்பட்டான் என்பது வரலாற்றாசிரியர் நடுவே அனேகமாக உறுதிசெய்யப்பட்ட உண்மை.

ஆனால் ஒரு சோழமன்னன் மேல் கொலைப்பழி விழுவதை விரும்பாத கல்கி தன் நாவலில் உத்தமசோழன் அப்பாவி என்றும் சிவபக்தன் என்றும் சித்தரிக்கிறார். ஆதித்த கரிகாலன் மர்மமான சதியால் கொலைசெய்யப்பட்டதாக காட்டுகிறார். இவ்வகையான மழுப்பல்களுக்கு அப்பாற்பட்டே நாம் வரலாற்றை அணுகவேண்டியிருக்கிறது. ராஜேந்திர சோழனுக்கு தந்தையின் நினைவை மக்கள் மனதில் மங்கச்செய்யவேண்டிய தேவை இருந்திருக்கிறது.

தஞ்சையின் பெரிய கோயில்களில் ஒன்று இது. இருபத்தைந்து வருடங்களாக நான் இங்கே வரும்போதெல்லாம் இதை கட்டிக்கொண்டே இருப்பதைத்தான் பார்க்கிறேன். முன்பு பிரம்மாண்டமான கற்குவியல்கள் நாற்புறமும் கிடந்தன. இப்போது பெருமளவுக்கு கோயில் கட்டப்பட்டுவிட்டது. கோயிலின் முகப்பில் இருந்த பெரிய கோபுரம் இடிந்து அடித்தளம் மட்டும் கிடக்கிறது. 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ளது மையக்கோயில். தஞ்சையைப்போலவே பிரம்மாண்டமான முகமண்டபம். ராட்சத துவாரபாலகர்கள்.

தஞ்சைபோலவே மிகபெரிய சிவலிங்கம். நாங்கள் செல்லும்போது உள்ளே தண்ணீர் விட்டு இலிங்கத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். மறுநாள் அன்னாபிஷேகம் என்றார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம்பேர் சாப்பிடுவார்களாம். கருவறை மட்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அர்ச்சகர் அமர்ந்து கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு சமையற்காரர் வந்து அவர்தான் சமைக்கப் போவதாகச் சொன்னார்.

கோயிலைச் சுற்றி வந்து சிற்பங்களைப்பார்த்தோம். பொன்னிறமான மணற்பாறைச்சிற்பங்கள். பலபக்கங்களிலும் அவை அரித்துப்போயிருந்தன. ஆனால் உள்ளே நுழையும் பக்கவாட்டு படிக்கட்டில் சண்டேஸ்வரருக்கு அருளும் சிவபெருமானின் சிலை காற்று படாத இடம் காரணமாக முழுமையாக உள்ளது. பெருமானின் உடலின் அமைப்பும் அருள் நிறைந்த புன்னகையும் அச்சிலையை தமிழகத்தின் மிகச்சிறந்த சிலைகளில் ஒன்றாக ஆக்குகின்றன. பெருமானின் உடல் களிறுபோல ஆண்மையுடன் இருக்க அருகே உமை சிறுமியைப்போல மெல்லிய பெண்மையுடன் அமர்ந்திருக்கிறாள்.

கங்கைகொண்டசோழீச்வரம் ஏரி பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே பெரும்பாலும் தூர்ந்துவிட்டது. இப்போது அது சமூகவனமாக உள்ளது. கோயிலில் இருந்து வெளியே வந்து சாலையில் கொஞ்சதூரம் சென்று இடப்பக்கம் திரும்பி அரண்மனைமேடு என்று அழைக்கப்படும் இடத்தைப்பார்க்கச் சென்றோம். அங்கே ராஜேந்திர சோழனின் அரண்மனையின் செங்கல்லால் ஆன அடித்தளம் கண்டடையப்பட்டிருந்தது. அங்கே பெரிய அளவில் தொல்பொருளாய்வு ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

ராஜராஜன் கட்டிய கோயிலும் தஞ்சையும் எப்படி ராஜராஜனால் கைவிடப்பட்டதோ அதைப்போல ராஜேந்திர சோழனின் கங்கைகொண்டசோழபுரமும் இரண்டாம் ராஜராஜனால் கைவிடப்பட்டது. முக்கியமான காரணம் அங்கே உருவான தண்ணீர்பஞ்சம்தான் என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் ராஜராஜன் பழையாறையில் தாராசுரம் கோயிலைக் கட்டி தலைநகரை அங்கே மாற்றிக்கொண்டான். அங்கே உள்ள ஆயிரத்தளி என்ற இடத்தில் அவன் அரண்மனை கட்டி ஆண்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. ஆனால் கங்கைகொண்ட சோழபுரமும் ஒரு நிர்வாகநகரமாக நீடித்ததையும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

கங்கைகொண்டசோழபுரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் சென்று அங்கிருந்து வீராணம் நோக்கிச் சென்றோம். கொள்ளிடம் ஆற்றின் கடைசி தடுப்பணையை கண்டோம். இருபெரும் கால்வாய்களாக நீல நீர் நுரைத்து பொங்கிச்சென்றுகொண்டிருந்தது. இறங்கி சிறிது நேரம் நீரின் பெருஞ்சிரிப்பை கேட்டுக்கொண்டிருந்தோம்.

முதலில் வீராணம் தெரிந்ததும் ஏமாற்றமாக இருந்தது. பெரியதோர் ஓடைபோல இருந்தது. அது வீராணமேதானா என ஒருவரிடம்கேட்டோம். ‘போங்க…போகப்போக பெரிசாயிடும்’ என்றார். உண்மையில் சீக்கிரத்திலேயே வீராணம் கண்முன் நீலப்பெருவெளியாக அகன்று சிற்றலைகளுடன் பார்வையை நிறைத்துக்கிடந்தது. மனித உழைப்பால் வெட்டப்பட்ட ஓர் நீர்நிலை என்றே நம்ப முடியாது.

ஒருவேளை மனிதர்கள் வெட்டிய நீர்நிலைகளில் மிகப்பெரியவற்றில் ஒன்றாக அது இருக்கக்கூடும். சோழர்காலத்தில் 20 கிலோமீட்டர் நீளமும் 7 கிலோமீட்டர் அகலமும் உடையதாக இருந்திருக்கிறது. இப்போது 16 கிமீ நீளமும் நான்கு கிமீ அகலமும் இருக்கிறது. அரைநூற்றாண்டுக்கும் மேலாக தூர் வாரப்படாத காரணத்தால் திட்டுதிட்டாக மணால்மேடுகள் ஏரிக்குள் எழுந்து நாணல் அடர்ந்து நின்றன. வீராணம்பேரில் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருக்கிறது. என்னைப்போன்ற நடுவயதினருக்கு வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. இப்போதும் சென்னைக்கு சோழர்கள்தான் குடிநீர் தந்துகொண்டிருக்கிறார்கள்.

விஜயாலய சோழனின் பேரரான முதற் பராந்தக சோழனின் உண்மையான பெயர் வீரநாராயணன். அவனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜதித்தனை பல்லவர்களின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும்படி திருமுனைப்பாடி நாட்டில் பெரும் படையுடன் இருக்க செய்தான். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம்பேர் கொண்ட அந்த படை நான்கு ஆண்டுகள் அங்கே இருந்தது. அப்படைகள் சும்மா இருந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு இந்த மாபெரும் ஏரி வெட்டப்பட்டது. அதற்கு தன் தந்தையின் பெயரால் வீரநாராயணம் ஏரி என்று பெயரிட்டான். அதுவே மருவி வீராணம்.

இத்தகையதோர் பெரும்பணியை ஆற்றுவதற்கு அளப்பரிய ஆளுமைத்திறன் தேவை. ஒரு தலைவனின் விரலசைவுக்கு பல லட்சம்பேர் கட்டுப்படவேண்டும். அவன்மேல் அபாரமான பிரியமும் விசுவாசமும் கொண்ட கீழ்மட்ட தலைவர்கள் வேண்டும். இராஜாதித்தன் தக்கோலத்தில் நிகழ்ந்தபோரில் வீரமரணம் அடைந்து ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ என பெயர்பெற்றான். ஒருவேளை உயிரோடிருந்தானென்றால் அவன் ராஜராஜசோழன்போல மக்கள்நலம்நாடும் மனம் கொண்ட, நிர்வாகத்திறமை கொண்ட மன்னனாக ஆகியிருந்திருக்கக்கூடும்.

வீராணம் கரையிலேயே காரில் சென்றோம். லாலாப்பேட்டை வந்ததும் வீராணம் மறைந்தது. அதை அப்படியே மறுபக்கம் சுற்றி வந்து பார்க்கமுடியுமா என விசாரித்தோம். அப்படி ஒருவர் கேட்பதே முதல்முறை என்பதைப் போல அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார்கள் மக்கள். ஆளுக்கொரு வழி காட்டினார்கள். பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் பைக்கில் வந்து என் பின்னால் வாருங்கள் காட்டுகிறேன் என்றார். அவருக்குப் பின்னால் மெல்ல காரில் சென்றோம். ஆங்காங்கே நின்று எங்களுக்காக வழிகாட்டியபடி 12 கிமீ தூரமும் அவரும் வந்தார். வழியில் விறகு ஏற்றிக் கொண்டு நடுப்பாதையில் நின்ற லாரியை கடக்க உதவினார். கிளம்பும்போது ‘சோடா கலர் குடிச்சுட்டு போங்க சார்’ என்றார். வேண்டாம் என்று மறுத்து நன்றி சொல்லி கிளம்பினோம். அவ்வப்போது சட்டென்று கண்ணில் படும் மானுட மேன்மை ஏனோ கொஞ்சம் கூச்சம் தருகிறது

முந்தைய கட்டுரைமார்க்ஸ்-கடிதம்
அடுத்த கட்டுரைசமணம்,பிரமிள்: கடிதங்கள்