கபாலிக்காய்ச்சல் -கடிதங்கள்

1
அன்புள்ள ஜெயமோகன்,
 
 
கடிதம் எழுதுபவர்களின் படங்களை, பக்கங்களில் முதலில் வெளியிடும் தங்கள் பழக்கத்தை அறிந்ததால் எங்கே சூப்பர் ஸ்டார் உங்களுக்கு எழுதிவிட்டாரோ என்று படித்தேன். நல்லவேளை அதெல்லாம் நடந்து உலகம் அழியவில்லை. 
 
வழக்கம்போல் நீங்கள் தர்க்கபூர்வமாக, கோர்வையாக, அழகாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
 
இ(எ)ங்கும் இதே பஞ்சாயத்து தான். ஆனால், இவர்களிடம் விவாதிப்பது மிகவும் கொடுமையானது.  
 
தர்க்கங்களின்றி ரசிப்பதற்கும் ஒரு மனநிலைத் தேவைப் படுகிறது. என் மகள் என்னை “டேய் அப்பா” என்பது மகிழ்வூட்டுவது போல. 
 
என்றும் அன்புடன்,
மூர்த்திஜி
பெங்களூரு

அன்புள்ள ஜெ,

கபாலிக்காய்ச்சல் குறித்து உங்களின் உக்கிரமான பதிவைக் கண்டேன். மகிழ்ச்சி. உண்மையில் நான் கூட்டுக்கேளிக்கைக்கு எதிரானவன் அல்ல. திரைப்படங்களின் விளைவுகளை மையப்படுத்திதான் இந்தக் கருத்தியலையும் வைத்தேன். ஆனால் நீங்கள் எல்லாவிதமான கேளிக்கைகளையும் நான் வெறுப்பதுபோல் எழுதியிருக்கிறீர்கள். என்னை ஏதோ மனிதகுலம் காணா விசித்திரஜீவிபோல உருவகப்படுத்திவிட்டீர்கள்.சுந்தர இராமசாமி என் கருத்தியலைக் கொண்டிருந்தார் எனும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.என் அகங்காரம்கூட இவைகளுக்கு காரணமென்று சொன்னீர்கள். பிரபஞ்ச பெருவெளியின் முன்னால் நீங்கள் பிரபஞ்சமென்று கருதிக்கொண்டிருப்பதே பிரபஞ்சமல்ல அது எண்ணத்திலடங்காதது அதன் ஒரு சிறு தெறிப்புதான் நாமென்று நீங்கள் சொன்னதை சிந்தித்துக் கொண்டிருப்பவனுக்கு இது தேவைதான். கமர்ஷியல் படங்களுக்கு எதிரான மனநிலை எனக்கு என்றுமே இல்லை. நானும் அவைகளின் ரசிகன்தான்.ஆனால் அதன் விளைவுகளைப் பார்த்துதான் அஞ்சுகிறேன்.

அவை வணிகமென்றும், காலப்போக்கில் மாறுமென்றும் நீங்கள் சொல்கிறீர்கள். அதன் விளைவுகளை அரசியலில் திராவிட இயக்கந்தொட்டு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அவை கூட்டுக்கேளிக்கைகள் வெறுமனே கடந்துசெல்லப்பட்டதால் ஏற்பட்டதா? திரைப்படங்களில் நாயகன் செய்வதெல்லாம் உண்மையென்று நம்பிய கூட்டுக்கேளிக்கையின் விளைவில்லையா? தமிழகத்தில் பியூஸ் மானுஷோ,அரவிந்த் கெஜ்ரிவாலோ, அன்னா ஹசாரேவோ அரியணை ஏற முடியுமா? தமிழகத்தில் நடிகைகளுக்கு கோவில் கட்டப்பட்டிக்கிறதே? சமீபத்தில் ஏதோ கடைதிறப்பிற்கு வந்த நடிகையைப் பார்க்கச் சென்று நம் இளைஞர்கள் காவலர்களிடம் தடியடி வாங்கினார்களே? இவை வெறுமனே கடந்துசெல்லப்பட்ட கூட்டுக்கேளிக்கையா? கூட்டத்தோடு அமர்ந்து படம் பார்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது, புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஆடுவது, விசில் அடிப்பது, கத்துவது, கூட்டமாக மது குடிப்பது அதன் லயத்தோடு பழைய நினைவுகளை மீண்டெடுத்து பேசிச் சிரிப்பது அல்லது அழுவது எல்லாம் எனக்கும் பிடிக்கும். ஆனால் அந்தக்கணங்கோடு அவை முடிந்தால் நன்றாய் இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கை முழுக்க அதையே பிடித்துக்கொண்டு தொங்குவதுதான் இங்கு நடக்கிறது. அதன் விளைவுகள் நிச்சயமாய் மிகச் சுலபத்தில் கடந்துசெல்லத்தக்கவையல்ல.

அன்புடன்,
அகில் குமார்
www.itzmeakhil.blogspot.com

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 4
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் – கடிதங்கள்