பியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்

1

 

நண்பர் கண்ணன் தண்டபாணி அவரது வலைப்பூவில் எழுதியது இது. கண்ணன் எனக்கு அணுக்கமானவர் என்பதைவிட என் பெருமதிப்புக்குரியவர் என்பதே பொருத்தம். இயற்கை வேளாண்மையை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர். காந்திய அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். நம் காலகட்டத்தின் அபூர்வமான இலட்சியவாதிகளில் ஒருவர்.

கண்ணன் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் சுயகல்வியால் வளர்க்கிறார் என்பதையே ஒரு பெரும் சாதனையாக நினைக்கிறேன். அவரது மகள் சென்ற விஷ்ணுபுரம் விழாவன்று மாலையில் பாடியது நெகிழ்ச்சியூட்டும் நினைவு. அபாரமான அறிவாற்றலும் நுண்ணுணர்வும் கொண்டவள் அவள்.

கண்ணன் எழுதியது இது. அவரது வலைத்தளம்

 

 

இன்று ட்விட்டரில் பியூஷ் மனுஷ் பற்றி ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறோம். தேசிய அளவில் ‪#‎StandWithPiyush trend ஆகிக்கொண்டிருக்கிறது. இதனிடையில் பியூஷ் வழக்கினை நீதிமன்றத்தில் முடித்துக் கொள்ளவேண்டியது தானே, எதற்கு இத்தனை இடுகைகள் என்று சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. எனக்குமே பல அற்பமான விஷயங்களுக்காக நிகழும் சமூகவலைதளப் பொங்குதல்களைப் பற்றி பெரிய அபிமானம் கிடையாது. ஆனால், இன்றைக்கு பியூஷுக்காக இதை செய்ய வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.

ஏன், இன்றைக்கு, இதற்கு மட்டும் என்ன விஷேச தேவை வந்தது?

இது இப்பிரச்சனையை வெறும் சட்டச்சிக்கலாக பார்ப்பதால் வரக்கூடிய கேள்வி.

முறைதவறிக் கட்டப்படும் ஒரு மேம்பாலத்தைத் தடுப்பதற்காக ஒரு சிறு போராட்டம் நடத்தியதற்காக மட்டும் பியூஷ் கைது செய்யப்படவில்லை என்பதை அவரைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். அவர் தொடர்ந்து எல்லா அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறார். சசிப்பெருமாளுக்காக, வினுப்ரியாவுக்காக, கோயிலில் அனுமதி மறுக்கப்பட்ட தலித்களுக்காக, ஏரிகளை நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக, ஏரிகளில் நடத்தப்படும் சமயச் சடங்குகள், ரசாயன விநாயகர் சிலை கரைப்பு போன்றவற்றிற்கும் எதிராக, கெம்பிளாஸ்ட வேதாந்தா போன்ற பெருநிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிராக, ஈஷா போன்ற நிறுவனங்களின் தவறான சூழியல் நடவடிக்கைகளுக்கு எதிராக, போப்பால் சத்திஸ்கர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, கிராமங்களில் ஒலிபெருக்கிகளோடு வளரும் கோயில் கலாச்சாரத்துக்கு எதிராக, தனது சொந்த சமண சமூகத்தினரின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்காக, இயற்கை வழிபாட்டின் மூலம் இயற்கையைக் காக்கலாம் என எடுத்த முயற்சிகளுக்காக, தனியார் கல்விநிறுவனக் கொள்ளைக்கு எதிராக என்று பல செயல்பாடுகளில் ஈடுப்பட்டார்; மிகமிக அகலக்கால் வைத்தும் அனைத்திலும் சிரத்தையோடும் கடும் உழைப்புடன் செயல்பட்டார். பல சமயங்களில், கலெக்டர், கமிஷனர், கவுன்சலர் என்று பேதம் பார்க்காமல் அரசு எந்திரத்தோடு அனைத்து மட்டங்களிலும் நேரடியாக மோதினார். ஆனால் அவருக்கு வன்முறைப் போராட்டம் மீது நம்பிக்கை இருந்ததில்லை – ஆயுதம் ஏந்தியவனை அரசு மிக எளிதாக நசுக்கிவிடும் என்பதை உணர்ந்திருந்தார். அமைதி வழியில் வெவ்வேறு நூதன முறைகளில் செயல்பட்டுவந்தார்; தகவலறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்டது இந்தப் பல்லாண்டுச் செயல்பாடுகள் அனைத்தின் காரணமாகவும்தான்; அல்லது அண்மைக்காலத்தில் அவர் ஏற்படுத்திய பல நிர்ப்பந்தங்களின் நேரடி விளைவாகவும் இருக்கலாம்.

இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக நடத்தப்பட்டவை. அநீதிக்கு எதிரான இப்படியான போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு மக்களின் ஆதரவு அவசியம்; இத்தகைய ஆதரவு இருப்பதை அரசு அறிவதும் அவசியம். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரவேண்டியது தேவை தானெனினும் (அதற்கான நடவடிக்கைகளும் ஒருபுறம் நடந்துகொண்டுதானிருக்கின்றன), நீதிமன்றத்தில் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியப்படாது. மக்கள் குரல் ஆட்சியாளர்கள் செவிகளில் ஒலித்தாக வேண்டும்.

மேலும் பியூஷ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டுமே இந்த இணையப் போராட்டம் நடைபெறவில்லை. பியூஷ் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் – இது அவரைச் சந்தித்த அவரது குடும்பத்தாரிடம் நேரடியாகக் கேட்டு நான் உறுதிசெய்துகொண்டது. அவர் மீதான தாக்குதல் தான் இத்தனை பேரின் மனசாட்சிகளைத் தீண்டியுள்ளது.

இன்னொன்று – பியூஷ் போன்ற துணிவான ஒருங்கிணைப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டு, அடிக்கப்படும் போது, களப்பணியில் அவரோடு நின்றவர்களின் செயல்பாட்டில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தருவதற்கும் இந்த இணையப் போராட்டம் கட்டாயம் துணைசெய்யும்.

பியூஷ் சமூகப் போராளி என்கிற அடையாளத்தைத்தான் தனது முதன்மையான அடையாளமாய் தானே முன்வைத்தாலும், 150 ஏக்கர் வரண்ட பகுதியில் ஒரு கூட்டுறவு காட்டினை உருவாக்குவது, ஏரிகளை மீட்பது என்று பல ஆக்கப்பூர்வமான நிர்மாணப் பணிகளில் அவர் ஈடுபட்டார் என்பது தான் அவரைத் தனித்துக் காண்பிக்கிறது.

எது எப்படியாகினும், நம் எதிர்காலத்துக்காகத் தொடர்ந்து உழைத்த ஒருவருக்காக நம் குரலை ஒருநாள் முழுக்க ஒலிக்கச் செய்வதால் நாம் என்ன குறைந்துவிடுவோம்? காந்தியையும் காமராசரையும் எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில், நம்மிடையே வாழும் பியூஷ்களையும், நம்மிடையே தோன்றக்கூடிய புதிய பியூஷ்களையும் நாம் இழந்துவிடலாகாது.

முந்தைய கட்டுரைபியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக
அடுத்த கட்டுரைஉற்றுநோக்கும் பறவை [சிறுகதை]