அயல் வாழ்க்கை – குறிப்பு

images

 

ஜெ

(சமீபத்தில் பாலாவுக்கான பதிலில் ஜெ-ன்  “ஆப்ரிக்காவில் நீங்கள் பல மனைவிகளுடன் வாழ்வதாகச் சொல்லப்படுவது புரளிதான் என நம்புகிறேன்” வரியைப்படித்து அலுவலகத்தில் நான் சிரித்த வெடிச்சிரிப்பிற்கும், கீழ்க்காணும் கட்டுரைக்கும் தொடர்பில்லை என்பதை பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்!)

நான் அறிந்த அளவில், அன்றாட வேலைசெய்து மாத ஊதியம் வாங்கும் சமூக தளத்தில், இங்கு கென்யாவில் மூன்று வகையான திருமணங்கள் வழக்கத்தில் இருக்கின்றன.

முதலாவது “சர்ச் திருமணங்கள்”. இது கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் எடுத்த எடுப்பில் பெரும்பாலும் யாரும் இவ்வகையை தேர்ந்தெடுப்பதில்லை. சுற்றத்தை, நண்பர்களை அழைக்கவேண்டும்; அவர்களை கூட்டி செல்வதற்கு வண்டி ஏற்பாடு செய்ய வேண்டும்; உணவு செலவு; சர்ச்சிற்கு பணம் கட்டவேண்டும்; உடைகளுக்கான செலவு – குறிப்பாய் மணமகளுக்கான வெண்ணீள் உடை; சர்ச் பூக்கள் அலங்காரத்திற்கான செலவு. ஓரளவுக்கு வசதிகொண்ட மேல்மத்யமரும், மத்யமரும் மட்டுமே நேரடியாய் இதற்கு செல்கின்றனர்.

கீழுள்ளவர்கள் வேறுமுறையில் முதலில் திருமணம் செய்துகொண்டு, பணம் சேர்ந்தபின் சர்ச்சில் திருமணம் செய்துகொள்கின்றனர். சிலசமயம் குழந்தைகளுடன் அல்லது பேரக்குழந்தைகள் வரவுக்கு பின்கூட சர்ச் திருமணங்கள் நடைபெறுவதுண்டு. சிலவற்றில் தம்பதிகள் அதற்குள் மாறிவிடுவதுமுண்டு. சர்ச் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிலகாலத்திற்கு பின் இருவரும் பிரிந்தால் இருக்கும் சொத்தில் ஆளுக்கு பாதி (சர்ச் தலையிட்டு தீர்த்துவைக்கும்).

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள், எங்கள் நிறுவன, விமான நிலையத்திற்கு பூ கொண்டுசெல்லும் ட்ரக்கின் ஓட்டுநர் உதவியாளன் ஜான் திருமண அழைப்பிதழ் கொண்டுவந்து கொடுத்தான். “யாருக்கு ஜான்? உனக்கா அதுக்குள்ளயா?” என்று கேட்டபடி கையில் வாங்கி பிரித்தேன். ”இல்லை. என் பெற்றோர்களுக்கு”-ஜான் சொல்ல வியப்புடன் பார்த்தேன். ஜானுக்கு இரண்டு மூத்த சகோதரிகள்; இருவரும் ஜான் அம்மாவிற்கு முதல் கணவர் மூலம் பிறந்தவர்கள். ஜானும், இரண்டு இளைய சகோதரிகளும் இப்போது திருமணம் செய்துகொள்ளும் கணவர் மூலம் பிறந்தவர்கள்.

 

இரண்டாவது “சிவில் திருமணங்கள்”. தற்போது  இவைதான் அதிகம். பரஸ்பரம் நண்பர்களாயிருக்கும் ஆணும் பெண்ணும் (நட்புக்காலத்தில் உடல்சார் இணைவுகளுக்கு தடையில்லை) தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து இருவரின் குடும்பங்களும் அந்த பகுதியின் தலைவரிடம் (Area Chief) சென்று, வரதட்சணை முதலான விஷயங்களை இருபக்கமும் ஒத்துக்கொண்டு பதிவுசெய்கின்றனர். இங்கும் சான்றிதழ் கொடுக்கப்படும். வரதட்சணை பெரும்பாலும் செம்மறி ஆடுகள், பசுக்கள் மற்றும் பணம்; ஆண் பெண்ணின் பெற்றோருக்கு தரவேண்டும்; தவணை முறையிலும் கொடுக்கலாம். திருமணத்திற்கு பின்னான குடும்ப தகராறுகள், தலைவரிடம் முறையிட்டு தீர்த்துகொள்ளவேண்டும். காவல் நிலையம் செல்லும் தகராறுகளில் பெரும்பாலும் பெண்ணிற்கு சாதகமாகத்தான் காவல்நிலையம் நடவடிக்கை எடுக்கும்.

மூன்றாவது “பாரம்பரிய திருமணங்கள்”. தற்போது இவை குறைந்துவருகின்றன. அப்பகுதி தலைவரிடமோ, சர்ச்சுக்கோ செல்ல தேவையில்லை. பதிவு கிடையாது. ஆணும் பெண்ணும் அவர்களின் குடும்ப பெரியவர்களுக்கு தெரிவித்துவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழலாம். குடும்ப பிரச்சனைகள் இரண்டு குடும்பங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். தலைவரோ, சர்ச்சோ உதவிக்கு வராது.

இம்மூன்றை தவிர நான்காவதும் உண்டு. பெற்றோர்களுக்கும் தெரிவிக்க தேவையில்லை. வேலை செய்யுமிடத்திலோ, வசிக்குமிடத்தின் அருகிலோ பிடித்துபோன ஆண்/பெண் இருந்தால், பேசி முடிவுசெய்து, ஒரே வீட்டில்/அறையில் தங்கி குடும்பம் நடத்துவதுண்டு. ஒத்துப்போகும்வரை சேர்ந்து வாழ்வது; பிடிக்கவில்லையென்றால் விலகிக்கொள்வது. குழந்தைகள் பெற்றபின்னும் விலகுதல்கள் நேர்வதுண்டு.

ஒருமாதம் முன்பு, எங்கள் பண்ணையின் முதன்மை நுழைவாயிலிலிருந்து, உள்ளிருக்கும் அலுவலகத்திற்கு, கம்பியில்லா இணைப்பில் பாதுகாப்பு அதிகாரி அழைத்து உள்ளூர் காவல் நிலைய வண்டி வந்திருப்பதாகவும், காவலர்கள் மனிதவள அலுவலரை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். நிறுவனத்தின் அரசுசார் வெளிவிவகாரங்களை மனிதவள அலுவலர்தான் பார்த்துகொள்கிறார். உள்ளேவர அனுமதிக்க சொல்லிவிட்டு நான் மனிதவள அலுவலர் அறைக்கு சென்றேன்.

மூன்று காவலர்கள் வந்தனர். பண்ணையில் வேலைசெய்யும் ஜாக்குலின் எனும் பெண்ணை அழைத்துப்போக அனுமதி கேட்டனர். என்ன விஷயம் என்று கேட்க, பண்ணையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கராட்டி எனும் கிராமத்தின் சிறு வணிகவளாகத்தில் வேலைசெய்த கெவின், கொஞ்சம் பணத்தையும், பொருட்களையும் திருடிக்கொண்டு ஓடிவிட்டதாகவும், ஜாக்குலின் கெவினுடன் இருப்பதாக கேள்விப்பட்டு, ஜாக்குலினை அழைத்துப்போய் வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஜாக்குலினை முதல் பசுங்குடிலிலிருந்து அழைத்துவர, காவலர்கள் விஷயம் சொல்லி “கெவின் எப்படிப்பட்டவன்?; சமீபத்தில் பணம் ஏதேனும் அதிகம் புழங்கியதா அவன் கையில்?; வீட்டிற்கு ஏதேனும் புதிய பொருட்கள் கொண்டுவந்தானா?” என்று விசாரித்தனர். ஜாக்குலினின் பதில்…

“அவன் எப்படிப்பட்டவன் என்று அதிகம் எனக்குத்தெரியாது. ஒருமாதம்தான் அவனுடன் சேர்ந்து வாழ்ந்தேன். கடந்த பதினைந்து நாட்களாக வீட்டுக்கு வருவதில்லை. சரி, வேறெங்கேனும் நகரத்திற்கு சென்று வேறுவேலை தேடி, வேறு பெண்ணை பிடித்திருப்பான் என்று விட்டுவிட்டேன்”

வெங்கடேஷ் சீனிவாசகம்

முந்தைய கட்டுரைநமது நீதிமன்றத்தீர்ப்புகள்….
அடுத்த கட்டுரைகுடைநிழல் -மென்மையின் வல்லமை