தலைகொடுத்தல்

CkZ7JvcWYAAFYgP

 

உத்தர ராமாயணத்தை ராவணோத்பவம் என்னும் பேரில் கதகளியில் ஆடுவார்கள். அதில் ஒரு காட்சி. ராவணன் பிரம்மனிடம் வரம்பெறுவதற்காகத் தவம் செய்கிறான். அவன் குலம் அழிந்து, தம்பியருடன் பாதாளத்தில் ஒளிந்திருக்கும் தருணம் அது. அசுரர்களின் இழந்தமேன்மையை அடையவேண்டும் என்பதே அவனுடைய இலட்சியம். அதற்காக எதையும் செய்யும் இடத்தில் இருக்கிறான். அத்தவத்தின் இறுதியில் அவன் தன் பத்து தலைகளையும் கிள்ளி வேள்விநெருப்பில் இடுகிறான். பத்தாவதுதலையையும் கிள்ளும்போதுதான் இறைவன் தோன்றுகிறார்

கதகளியின் நுணுக்கமான மனோதர்ம வெளிப்பாடு வழியாக அதை அகங்காரத்தை வென்று செல்வதாக பலவகையில் விளக்குவார்கள். அந்த பத்துதலையும் பத்து சுயங்கள். பத்தாவது சுயத்தையும் கொடுக்கச்சித்தமாகும்போதன்றி மெய்மை கைகூடுவதில்லை. பந்தங்களின் அசையும் ஒளியில் ராவணன் தன் தலைகளை கைபாவனைகள் வழியாக பிடுங்கும் காட்சி கலையறிந்தவர்களை மெய்சிலிர்க்கச்செய்வது

தலைகொடுத்தல் என்பது நம் மரபின் ஒரு பொதுப்படிமமாகவே உள்ளது. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஆசைகளும் கனவுகளும் பல இருக்கும். ஆனால் இறுதியில் முக்கியமானது தன் இருப்புதான். அதையும் கடந்த ஒன்றே உண்மையில் முக்கியமானது. ஒருவன் எதன்பொருட்டுச் சாகவும் சித்தமாக இருக்கிறானோ அதுவே அவனை வாழ்நாளெல்லாம் ஆட்கொள்ளும் இலட்சியமாக இருக்கமுடியும். தன்னை தன்னுள் எழுந்து பேருருக்கொண்ட பிறிதொன்றின் முன் படைப்பதற்குப்பெயரே இலட்சியவாழ்க்கை.

தலைகொடுத்தல் சுட்டுவது அதையே. மகாபாரதத்தில் அரவான் பாண்டவர்களின் வெற்றிக்காக அவ்வாறு தன்னை களப்பலியாக கழுத்தறுத்து களத்தில் தலைவீழ்த்தினான். சிலப்பதிகாரத்தில் எயினர் தங்கள் போர்த்தெய்வமான கொற்றவை வடிவில் ஒரு கன்னியை அலங்கரித்து, முக்கண் எழுதி,பன்றிப்பல்லால் நிலவு செய்து அவள் சடையில் சூடி, கலைமான் மேல் ஏற்றி அமரச்செய்து, அவள் காலடியில் தலையை வெட்டியிட்டு தன்பலி கொடுக்கிறார்கள். ’இட்டெண்ணி தலைகொடுக்கும் எயினர்’ என்கிறது சிலப்பதிகாரம்

அவ்வாறு தலைகொடுப்பதை நவகண்டம் என்றனர். அது புனிதமான ஒரு சடங்காக உலகம் முழுக்க போர்ச்சமூகங்களில் கருதப்பட்டது. நவகண்டம் செய்துகொண்ட வீரனுக்கு தன் தலையை தானே வெட்டும் கோலத்தில் சிலைபொறித்த நடுகற்கள் வைக்கப்பட்டன. தமிழகத்தில் பல இடங்களில் அத்தகைய நடுகற்களை நாம் காணலாம். அனேகமாக ஏரி மற்றும் ஆற்றங்கரைகளில். அன்றெல்லாம் அங்குதான் இடுகாடுகள் அமையும். இன்று அத்தகைய பல நடுகற்கள் தெய்வச்சிலைகளாக ஆகி கோயிலுக்குள் அமைந்துள்ளன. ஆந்திரத்தில் பல இடங்களில் பெண்களின் நவகண்டச்சிலைகள் உள்ளன

ஒரு போர்முனையில் தன் தலையை தான் வெட்டி வீழ்பவன் பிறருக்கு அளிக்கும் செய்தி என்ன? அவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த இலக்கை உயிரைவிட முக்கியமானவனாக அவன் சுட்டிக்காட்டிவிடுகிறான். வாழ்வை விட மேலான இலட்சியமே வாழ்வை வழிநடத்தவேண்டும் என்று காட்டுகிறான். அவன் அத்தனைபெரிய படிமமாக ஆவது அதனால்தான். அவன் அரசனுக்கு நிகராக நடுகல்நாட்டி வழிபடப்படுகிறான். ஏனென்றால் அரசனைப்போலவே அவனும் ஒரு பெரிய முன்செல்லும் வாள்.

இன்று பிற அனைத்தையும்போலவே தலைகொடுத்தலும் குறியீடாக ஆகிவிட்டது. காந்தியின் சத்யாக்கிரகப்போர் காலகட்டத்தைய பாடல் ஒன்று “அகிம்சைக்காக தலைகொடுக்க வா!” என அறைகூவுகிறது. அதுவும் தலைகொடுத்தலே. ‘இதந்தரு மனையின் நீங்கி இடர்தரு சிறைப்பட்டாலும் பதம்திரு இரண்டும் நீங்கி பழிமிகுந்து இழிவுபட்டாலும்’ சுதந்திரதேவியை வணங்குவதென்பது தன் தலையை தானே பலிபீடத்தில் வைப்பதல்லாமல் வேறென்ன?

கடந்த சிலநாட்களாக பாரீஸ், ஃப்ளாரென்ஸ், ரோம் என அருங்காட்சியகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ரத்தசாட்சிகளின் சிலைகளை பார்க்கையில் எழும் உணர்வுகள் மிகக்கலவையானவை. அவர்களின் விழிகளை அமைப்பதில் பெருவெற்றி அடைந்திருக்கிறார்கள் கலைஞர்கள். அந்நோக்கு இந்த உலகியல்வெளியை மிகஅப்பாலிருந்து நோக்குகிறது. கனிவுடன் இரக்கத்துடன். அவர்கள் இங்கே வாழ்ந்தனர். வேறு ஒரு வாழ்க்கையை. அதன் ஒவ்வொரு கணமும் அர்த்தப்படுத்தப்பட்டிருந்தது. சலிப்பால், சோர்வால், வெறுமையால் ஒரு தருணமும் கடந்துசெல்லவில்லை.

தலையை வெட்டி வைப்பதற்குரிய பலிபீடங்களைக் கண்டடைந்தவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்கள் வாழ்க்கையை பொருள்கொள்ளச்செய்கிறார்கள். அவர்களின் காலம் பலமடங்கு செறிவுபடுத்தப்பட்டது.

முந்தைய கட்டுரைகல்வி- மேலுமொரு கேள்வி
அடுத்த கட்டுரைகோவை வாசகர் சந்திப்பு -ஒரு தாமதமான பதிவு