‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87

[ 20 ]

அனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய  அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த  மேடை.

வாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை அவை ஒற்றைக்குரலில் எதிர்கொண்டது. “ஆ!” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு! அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர்? பிழையல்ல…” என்றது அக்குரல்.

கடும்சீற்றத்துடன் “விலகு!” என அவன் சொன்னான். உதடுகள் நெளிய கைவிரல்களை சுருட்டிப்பற்றி “விலகிச்செல்!” என்றான். “நான் எவரிடமிருந்தும் விலகமுடியாது, மைந்தா. கருப்பைக்குள் நுழைந்து வந்து உன்னைத் தொட்டவன் நான்.” விகர்ணன் மூச்சிரைத்தான். தலையை இல்லை இல்லை என்பதுபோல அசைத்தான். கடும் வலி உள்ளே எழுந்தது போல அவன் உடல் இறுகி நெளிந்தது. அருகிருந்த ஒருவனின் கன்னம் ஒளிகொண்டிருப்பதை கண்டான். அவன் விழிகளுக்குள் ஒளிப்புள்ளிகள். அவ்வொளி அவன் புன்னகைப்பதுபோல காட்டியது.

அப்பால் இன்னொருவனும் ஒளியை முகம் என கொண்டிருந்தான். அதற்கப்பால் இன்னொருவனும். அங்கிருந்தவர் அனைவரும் ஒளிஏற்றிருந்தனர். தூண்வளைவுகளில் திரைநெளிவுகளில் பீடங்களின் செதுக்கல்களில் எல்லாம் ஒளி எழுந்திருந்தது. “ஒளி!” என்றது குரல். “இப்போது நீ நோக்கலாம்… இது ஒளிதான்!” அவன் விழிதிருப்பி பார்த்தான். துச்சாதனன் திரௌபதியின் குழலைப்பற்றி இழுத்து அவைநடுவே வருவதை கண்டான். கனவிலிருப்பவள்போல் அவள் முகம் அமைதிகொண்டிருந்தது. விழிகள் நீள்மலரிதழென அரைப்பங்கு மூடியிருக்க கைகள் குழைந்து கிடந்தன. கால்கள் தளர்ந்து அவன் தூக்கியதனால் மட்டுமே முன்னகர்ந்தாள். அவள் அணிகளேதும் பூண்டிருக்கவில்லை. இடைக்குக் கீழே வெண்ணிற ஒற்றையாடையை முழங்கால்வரை அணிந்திருந்தாள். அதன் நீள்நுனியைச் சுற்றி முலைகளை மறைத்து தோள்சுற்றி செருகியிருந்தாள். அவள் வலத்தோளும் புயங்களும் கால்களும் வெளியே தெரிந்தன.

கரிய உடல். ஆனால் அது நிலவென ஒளிவிடுவதாக தோன்றியது. அவளில் இருந்தே அவ்வொளி எழுந்து பன்னிரு பகடைக்களக்கூடத்தை நிறைப்பது போல. அவள் மட்டுமே அங்கே இருப்பதுபோல. சூழ்ந்திருந்தவை நிழல்கள். இருளின் அலைகள். துச்சாதனன் கையை தளர்த்தியதும் அவள் துணிச்சுருள்போல உடல் தழைய விழப்போனாள். ஆனால் கால்களை ஊன்றி எழுந்து நின்று தன் மேலாடையை கைகளால் பற்றிக்கொண்டாள். நீள்குழல் அலைகளாகச் சரிந்து தோள்களைத் தழுவி நிலம்தொடுவதுபோல விழுந்தது.

அவள் வரவைக் கண்டதும் அதுவரை அரியணைமேடையில் கைகளை முட்டிக்கொண்டும் பற்களைநெரித்தும் ஓசையற்ற சொற்களை உமிழ்ந்தும் பித்தன்போல் நகைத்தும் நிலையழிந்து சுற்றிவந்துகொண்டிருந்த துரியோதனன் அசைவற்று நின்றான். இணைந்த இருகைகளும் இயல்பாக எழுந்து கூப்புபவைபோல் நெஞ்சில் படிந்தன.  விகர்ணன் திகைப்புடன் நோக்கினான். கர்ணனும் கைகூப்பியிருப்பதாகத் தோன்றியது. விதுரர் கண்களை மூடி இமைப்பொருத்தில் நீர் ஊறிவழிய நெளியும் முகத்துடன் அமர்ந்திருந்தார். பீஷ்மர் விழிமூடி ஊழ்கத்தில் மறைந்தவர் போலிருந்தார்.

துரியோதனன் முகம் கனிந்து உருகிக்கொண்டிருந்தது. அன்னையிடம் மன்றாட்டொன்றுடன் அணுகும் மைந்தனைப்போல. தணிந்தகுரலில் அவன் எதையோ கேட்கப்போவதுபோல விகர்ணன் எண்ணினான். அவன் இடத்தோள் சிலிர்ப்பதை அங்கிருந்தே காணமுடிந்தது. இடப்பக்கம் நின்றிருந்த ஏவலன் ஏதோ சொல்ல அவன் அதற்கு செவிகொடுப்பதுபோல் தோன்றியது. ஆனால் ஏவலன் திரௌபதியைத்தான் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன.

துரியோதனன் தன்னிடம் பேசிய எவரையோ புறந்தள்ளுவதுபோல வலக்கையை வீசினான். அச்சொற்களை மறுப்பவன்போல முகம் சுளித்து தலையசைத்தான். இடப்பக்கம் பேசியவரின் சொற்களை ஏற்று சுட்டுவிரல்தூக்கி ஆம் என்று தலையசைத்தான். இருபக்கமும் காற்றடிக்கையில் புல்நுனியில் நின்று ததும்பும் நீர்த்துளி போல  தத்தளித்தான்.

விகர்ணன் உடல் குளிரிலென சிலிர்த்தது. உண்மையிலேயே அக்களத்தில் அறியாத்தெய்வங்கள் நிறைந்துள்ளனவா? அவைதாம் அனைத்தையும் ஆட்டிவைக்கின்றனவா?  அவன் தன் காதருகே ஏதேனும் குரலெழுகின்றதா என்று உளம்கூர்ந்தான். மூச்சொலிகள், ஆடை சரசரப்புகள். விழிதூக்கி மேலே நிறைந்திருந்த தேவர்களையும் தெய்வங்களையும் அசுரர்களையும் நாகங்களையும் நோக்கினான். தூரிகை தொட்டிழுத்த வெற்று வண்ணங்களாகவே அவை தெரிந்தன.

உரத்த குரலில் துச்சாதனன் “அஸ்தினபுரியின் அரசே, தங்கள் ஆணைப்படி இதோ இத்தொழும்பியை அவைக்கு கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.  அவள் இருபக்கமும் நிகர்கொண்டமைந்த கற்சிலை போல் நின்றாள். துரியோதனன் “நன்று!” என்றான். அவன் குரல் இடறியது. கயிறுமேல் நின்றிருக்கும் கழைக்கூத்தாடிபோல் அவன் உடல் தத்தளித்தது. “நன்று, இளையோனே” என அவன் மீண்டும் சொன்னான். என்ன சொல்வதென்றறியாமல் கர்ணனை பார்த்தான். கர்ணன் அவன் நிழலென அதே தத்தளிப்பை தானும் கொண்டிருந்தான்.

“நம் அரசவைத் தொழும்பி இவள். அதை இவளுக்கு உணர்த்தவேண்டும் என்றீர்கள், அரசே” என்றான் துச்சாதனன். “ஆம், அதை சொல்லவேண்டும்” என்றான் துரியோதனன். அவள் விழிகளை நோக்கி “பெண்ணே, உன் கொழுநன் உன்னை பணயம் வைத்து தோற்றிருக்கிறான். அவன் தொழும்பன் என உடன்பிறந்தாருடன்  இதோ நின்றிருக்கிறான். நீ என் அவைத் தொழும்பி என்றானாய். அறிந்துகொள்!” என்றான்.

அவள் தலையைச் சொடுக்கி நிமிர்ந்தாள். தணிந்த குரலில் அவள் சொன்னது அவையினர் அனைவருக்கும் கேட்டது. “எப்பெண்ணும் தொழும்பி அல்ல.” புரியாதவனாக கர்ணனை நோக்கியபின் “ஏன்?” என்றான். உடனே சினமெழுந்து “என்ன உளறுகிறாய்? சித்தம் அழிந்துவிட்டாயா?” என்று கூவினான். “அலைகள் கடலை ஆள்கின்றன என்றுரைப்பவன் அறிவிலி” என்றாள் திரௌபதி. “நுண்சொல் பேசி விளையாட நீ அரசி அல்ல. நீ இழிகுலத்தாள். என் அவைத்தொழும்பி” என்று துரியோதனன் கைகளை நீட்டியபடி எவருடையதோ என்னும் குரலில் கூச்சலிட்டான். “நீ என் உடைமை. என் அடிமை நீ!”

“எவருக்கும் எவரும் முற்றுரிமைகொண்டவர்கள் அல்ல. இங்குள்ள அனைத்தும் தன் தனிவழிப்பயணத்தில் இருக்கின்றன. அஸ்தினபுரியின் அரசே, ஊர்ந்துசெல்லும் எறும்பைக்கூட நாம் உரிமைகொண்டாட முடியாதென்றறிக! வைத்தாடுவதற்கும் இழப்பதற்கும் தன் வாழ்வன்றி ஏதும் மானுடருக்கில்லை.” அவள் புன்னகையுடன் “நீ இன்று  வைத்தாடி இழந்துகொண்டிருப்பதும் அதுவே” என்றாள்.

அச்சிரிப்பால் அவன் அனைத்து தளைகளையும் கடந்து எழுந்து பற்றிக்கொண்டான். “வாயை மூடு, இழிமகளே! என்னவென்று எண்ணினாய்? இது அஸ்தினபுரியின்  சூதுமாளிகை. நீ என் அரியணைக்கருகே கால்மடித்து நெற்றியால் நிலம்தொட்டு வணங்கவேண்டிய அடிமை… வணங்கு!” அவள் மெல்ல சிரித்தது அவையெங்கும் கேட்டது. “வணங்கு! இல்லையேல் இப்போதே உன் தலையைச் சீவி எறிய ஆணையிடுவேன். வணங்கு கீழ்மகளே!” என துரியோதனன் பெருங்குரல் எழுப்பி தன் கைகளை ஓங்கி அறைந்தான்.

அவள் “பெண் என நான் எந்த ஆண் முன்னும் இன்றுவரை தலைவணங்கியதில்லை” என்றாள். “முலையூட்டுகையில் உளம்கனிந்து குனிந்து நோக்கியிருக்கிறேன். மைந்தருடன் ஆடும்போது அவர்களின் கால்களை சென்னிசூடியிருக்கிறேன். அவர்களை நெஞ்சில் ஏற்றி அணைத்திருக்கிறேன். ஒருபோதும் பணிந்ததில்லை.” அவள் அதை சொல்கிறாளா அல்லது பிறிதொரு தெய்வம் தன் செவிகளை அச்சொல்லால் நிறைக்கிறதா? அவள் உதடுகள் அசையவில்லை என்றே தோன்றியது. அம்முகம் தன் கனவிலிருந்து எழவுமில்லை.

“பணிந்தாகவேண்டும்! என்முன் நீ பணிந்தாகவேண்டும்…” என்றான் துரியோதனன். “இல்லையேல் உன் தலையை வெட்டி என் கால்களில் வைக்க ஆணையிடுவேன்.” அவள் ஏளனத்துடன் சிரிப்பது தோளசைவிலேயே தெரிந்தது. துரியோதனன் மேலும் வெறிகொண்டு “உன் ஐந்து கணவர்கள் தலைகளையும் வெட்டி என் காலடியில் வைப்பேன். அவர்களின் குருதியால் உன்னை நீராட்டுவேன்… பார்க்கிறாயா? தயங்குவேன் என எண்ணுகிறாயா?” என்றான்.

“அவர்கள் எனக்கு யார்?” என்று அவள் மேலும் விரிந்த சிரிப்புடன் சொன்னாள்.  “நீயும் எனக்கு என்ன பொருட்டு?” துரியோதனன் இரு கைகளும் செயலற்று விரிய, அஞ்சிய எருதுபோல உடல் சிலிர்க்க அசைவற்று நின்றான். விழிகள் உருள தலைதாழ்த்தினான். அவன் உடலில் தசைகள் இறுகி அலைநெளிந்தன. அவன் திருதராஷ்டிரர் போல  விழியின்மை கொண்டுவிட்டதாக விகர்ணன் எண்ணினான். அவன் தலையை சற்று சரித்து மெல்ல உருட்டினான். இரு கைகளையும் பொருளின்றி தூக்கியசைத்தான். உதடுகளை மெல்வதுபோல அசைத்தான். தாடை இறுகி நெகிழ்ந்தது.

எவராலோ உந்தித்தள்ளப்பட்டதுபோல துரியோதனன் இரு அடி முன்னெடுத்து வைத்தான். தொண்டை நரம்புகள் புடைக்க விரல்சுட்டி துச்சாதனனை நோக்கி கூவினான். “அடேய், மூடா! அறிவில்லையா உனக்கு? அடேய், தொழும்பிக்கு ஏது மேலாடை? அகற்று அதை…!” விகர்ணன் “மூத்தவரே…” என்று கூவியபடி பாய்ந்து எழுந்தான். ஆனால் தன் உடலுக்குள் மட்டுமே தான் எழுந்ததை, உடல் உயிரிலாதது என குளிர்ந்து பீடத்தில் கிடப்பதை அவன் உணர்ந்தான். அவன் காதருகே ஒரு குரல் “நீ செய்வதற்கென்ன இதில்? நீ இங்கு இல்லை” என்றது.

அவன் மயிர்ப்பு கொண்ட உடலுடன் நெஞ்சைப்பற்றி “யார்?” என்றான். “உன் ஆழ்மனைத்தையும் அறிந்த தேவன்… நீ இங்கில்லை. நீ மறைந்துவிட்டாய்.” விகர்ணன் “இல்லை! இல்லை!” என திமிறி எழமுயன்றான். அரக்கில் முழுமையாகவே உடல்சிக்கியிருப்பது போலிருந்தது. அல்லது துயிலிலா? இது கனவா? அவ்வெண்ணமே இனிதாக இருந்தது. ஆம் கனவுதான். “ஆம், கனவே. கனவுமட்டுமே… துயில்க!” என்றது அக்குரல். அவன் நாகம் போல  குளிர்ந்த வழவழப்புடன் காற்று தன்னை தழுவி மூடுவதை உணர்ந்தான். “துயில்க! இது கனவே. கனவைக் கண்டு விழித்துக்கொள்ள இன்னும் பொழுதுள்ளது. துயில்கொள்க!”

திரௌபதி தன் ஆடையைப் பற்றியபடி “சீ! விலகு, இழிமகனே. என்ன செய்யப்போகிறாய்? உன் அன்னையின் ஆடையையா களைகிறாய்?” என்றாள். துரியோதனன் தன் அரியணையில் சென்றமர்ந்து  “அன்னையா? நீயா? நீ விலைமகள். ஆணொருவனின் குருதியை மட்டும் அறிந்தவளே  குலப்பெண். நீ  ஐவரை அணைந்தவள். ஐநூறுபேரை உளமறிந்திருப்பாய்…” என்று சிரித்தான். ஓங்கி தன் தொடையை அறைந்து “வா, வந்து அமர்ந்துகொள்… நீ தழுவிய ஆண்களில் ஒருவன் கூடுவதனால் இழுக்கென ஒன்றுமில்லை உனக்கு” என்றான்.

கர்ணன் “ஆம், ஐவருக்கும் துணைவி என்றால் ஒருவனுடன் உடலிருக்கையில் பிற நால்வருடனும் உளமிருக்குமா?” என்றான். துரியோதனன் வெறியுடன் சிரித்து “ஆம், எங்களுடனிருக்கையில் நீ அவர்களை நினைக்கலாம்…” என்றான். மேலும் சிரித்துக்கொந்தளித்து “இப்போது நான் சிரிக்கிறேன்… இழிமகளே. இதோ நான் சிரிக்கிறேன். பார்…! நான் சிரிக்கிறேன்” என்றான். சித்தமழிந்தவனைப்போல கண்ணீர்வார சிரித்து மேலாடையால் விழி துடைத்தான். “செல்…! அறிவிலியே, அவள் ஆடையை இழுத்துக்களை…!”

துச்சாதனன் நடுங்கும் உடலுடன் காலெடுத்துவைத்து அவளை நோக்கி கைநீட்ட ஆடைபற்றி அவள் விலகி அதே விரைவில் சுழன்று அவையை நோக்கி  “இங்குள்ளோர் எவரும் இதற்கு மறுகுரல் எழுப்பவில்லையா? உங்கள் நெறிகளும் முறைகளும் பொய்யா? உங்கள் நூல்களெல்லாம் மொழியழிந்தனவா? உங்கள் அன்னையரும் தேவியரும் மகளிரும் நெறிமறந்தனரா?” என்றாள். “எங்கே உங்கள் மூதாதையர்? எங்கே உங்கள் அறவுருக்கொண்ட தெய்வங்கள்?”

கர்ணன் சினத்துடன் “இது அஸ்தினபுரியின் அரசனின் அவை, கீழ்மகளே. இங்கு அவன் ஆணைக்கு அப்பால் தெய்வமும் இல்லை” என்றான். “அரசாணையை அவையோர் அவைமுறைப்படி சொல்சூழலாம். அடிமை  அதை ஆராயலாகாது. அவ்வுரிமையை நீ இழந்துவிட்டாய். செல், அவன் காலடியில் தலைவைத்து வணங்கு! அவன் ஆணையைச்சூடி அவையில் நில்! அதுவே உன் கடமை.”

“அரசியல் பிழைத்தால் கூற்றென அறம் எழுந்து வந்தாகவேண்டும் என்கின்றன உங்கள் நூல்கள். எங்கே அவை?” என்றாள் திரௌபதி. “நன்றென்றும் தீதென்றும் வகுத்து அமைந்த உங்கள் ஸ்மிருதிகள் எங்கே? ஒருவனுக்கு இழைக்கப்படும் மறம் உலகுக்கே என்று கூவிய உங்கள் சுருதிகள் எங்கே? மண்ணையும் மழையையும் ஆற்றையும் காட்டையும் புலரியையும் அந்தியையும்  அன்னையென வழுத்திய உங்கள் வேதங்கள் எங்கே?” துரோணரை நோக்கி திரும்பி “அறநூல் கற்று அமைந்த ஆசிரியர்களே, சொல்க!” என்றாள்.

துரோணர் “தேவி, நால்வேதங்களும் வேந்தனை வழுத்துபவையே” என்றார். “அறங்கள் வாழவேண்டுமென்றால் அரசன் ஆற்றல்கொண்டு அரியணையில் அமர்ந்திருக்கவேண்டும். கோலில்லா குடி மேய்ப்பனில்லா மந்தை. தனியொரு பிழைக்கென அரசன் ஏந்திய கோலை பழித்தால் இறுதியில் அவன் குடிகளுக்கே அது பேரிழப்பாகும்” என்றார். “அப்படியென்றால் இப்பிழை செய்ய அரசனுக்கு உரிமை உண்டு என்கிறீர்களா?” என்றாள். “உயிர்க்கொலை இன்றி வேளாண்மை நிகழவியலாது. மறம் இழக்காது கோல்கொண்டமைய அரசர் எவராலும் இயலாது” என்றார் துரோணர்.

கிருபர் “நான்கு வேதங்களையும் பேணி அவையமர்ந்த ஷத்ரியன் மண்ணுக்கு வந்த தெய்வத்திருவுருவே என்பதுதான் வேதநெறி என்றறிக!” என்றார். “அவனுக்கு சொல்லளிக்க கடமைகொண்டிருக்கிறோம், அவன் கோலை மறுக்க உரிமைகொண்டவர்கள் எவருமிருக்க இயலாது. தனியொருவருக்கு இழைக்கப்படும் தீயறத்தின்மேல் அரசின் வெற்றியும் அதன் குடிகளின் பெருநலனும் வாழும் என்றால் அதுவும் அரசனுக்கு அறமே.”

“சொல்லுங்கள், பீஷ்மரே! இந்த அவையில் உங்கள் சொல்லும் எழுந்தாகவேண்டும்…” என்று திரௌபதி கூவினாள். “பெண்ணே, ஆசிரியர்கள் முறைமையேதென்று சொல்லிவிட்டனர். பல்லாயிரமாண்டுகாலம் அரசின்மை நின்றாடிய மண் இது. உன்னைப்போல் பல்லாயிரம் பெண்டிர் இழிவடைந்தனர். பற்பல பல்லாயிரம் மைந்தர் அன்னையர்முன் தலையறுந்து விழுந்தனர். குருதிகாயாமல் மண் கீழ்மைகொண்டது. அறமென்று எங்கும் ஏதுமிருக்கவில்லை. அவ்விருளில் இருந்து எழுந்து வந்த ஒளியை வேதமென்றனர். அதைத்திரட்டி நான்கென்று வகுத்தனர் தொல்வியாசர் முதலான முனிவர். இங்கு அனல்சூடி நின்றெரியும் அதை வாளேந்தி தலைகொடுத்து காத்து நிற்பதற்கென எழுந்ததே ஷத்ரியர் என்னும் குடி” என்றார் பீஷ்மர்.

“அரசெனும் அமைப்பு மானுடருக்கு இறைவல்லமைகள் அளித்த பெருங்கொடை” என்று பீஷ்மர் தொடர்ந்தார். “மணிமுடியும் செங்கோலும் அரியணையும் உருவாகி வந்தபின்னரே இங்கே அறமும் நெறியும் முறையும் உருவாயின. கன்னியர் கற்புடனும், வேதியர் சொல்லுடனும், கவிஞர் கனவுடனும், கைத்தொழிலோர் திறனுடனும்  வாழத் தொடங்கினர். எதன்பொருட்டும் வேதக்கொடி இறங்கலாகாது. அதை விண்ணில் நிறுத்தும்  அரசு என்னும் அமைப்பு அழிய நான் எந்நிலையிலும் ஒப்பமாட்டேன். இங்கெழுந்தது அரசாணை. அவையில் அதை குடிகள் மீறலாகாது. நானும் குடியே.”

“இங்கு நீங்கள் பிதாமகர் அல்லவா? குலமூத்தார் அல்லவா?” என்றாள் திரௌபதி. “இல்லை, அவையில் நான் அஸ்தினபுரியின் குடி மட்டுமே. அதற்கென வில்லெடுத்த போர்வீரன். தலைகொடுக்க சொல்லளித்தவன்.  அவன் என்னை வாளால் வெட்டி வேதநெருப்புக்கு அவியென்றாக்குவான் என்றால் அதுவே என் முழுமை என்று எண்ணவேண்டியவன்” என்றார் பீஷ்மர். “அரசனின் மந்தணஅறைக்குச் சென்று அவனுக்கு மூதாதையாகிறேன். அவன் கன்னத்தில் அறைந்து குழல்பற்றிச் சுழற்றி என் கால்களை மண்டியிட்டு வணங்கச்செய்கிறேன். அவன் ஆற்றியவற்றில் எவை பிழை, எவை பழி என அறிவுறுத்துகிறேன். ஆனால் ஒருநாளும் அவையில் அமர்ந்து அரசனை ஆளமுயலமாட்டேன்” என்றார் பீஷ்மர்.

“இதோ எழுந்து ஒரு சொல்லுரைத்து இவ்வரியணையை நான் மறுக்கலாகும். அதன்பின் அஸ்தினபுரிக்காக நான் வில்லேந்த முடியாது. இன்று அஸ்தினபுரி சிம்மங்களின் காட்டில் கன்றை ஈன்ற பசு என சூழப்பட்டுள்ளது. அசுரர்களும், நிஷாதர்களும், புத்தரசுகளும் அதன் குருதியை விழையும் தருணம் இது” என்று பீஷ்மர் சொன்னார். “இது வேதம்புரந்த வேந்தர் அமர்ந்தாண்ட அரியணை. வேதம் காக்க வாளேந்தி எழுந்த அரசு இது. பெண்ணே, வாழ்நாள் முழுக்க இந்நகரையும் இதன் அரசகுடியையும் காப்பேன் என்று என் தந்தைக்கு சொல்லளித்தவன் நான். இக்கணம் வரை அதன்பொருட்டே உயிர்தரித்தவன். எந்நிலையிலும் அதை கைவிடவும் மாட்டேன்.”

துச்சாதனனை நோக்கி கைசுட்டி “இதுவா அரசன் சூடும் அறம்? பிதாமகரே, இதுவா நால்வேதம் ஈன்ற குழவி?” என்றாள்  திரௌபதி. “ஆம், இதுவும்தான். ரஜோகுணம் எழுந்தவனே ராஜன் எனப்படுகிறான். வெல்வதும் கொள்வதும் அவனுக்குரிய நெறியே. விழைவே அவனை ஆளும் விசை. காமமும் குரோதமும் மோகமும் அவனுக்கு இழுக்கல்ல. புவியை பசுவென ஓட்டிய பிருதுவையே பேரரசன் என்கிறோம். வான்கங்கையை ஆடைபற்றி இழுத்துக் கொண்டுவந்த பகீரதனையே வேந்தர்முதலோன் என்கிறோம். பெருவிழைவால் உருவாகிறார்கள் பேரரசர்கள்” என்று பீஷ்மர் சொன்னார். “அரசன் கொள்ளும் விழைவுகளுக்காகவே பூதவேள்விகளில் அனலோன் எழுகிறான். மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் அவனுக்களிக்கவே அதர்வவேதச் சொல்லுடன் வைதிகர் அவியளிக்கிறார்கள்.”

உணர்வெழுச்சியுடன் பீஷ்மர் தொடர்ந்தார் “ஆம், இங்கு நிகழ்ந்தது குலநெறி அழியும் தருணம். ஆனால் குட்டிகளுடன் மான்கணத்தைக் கொன்றுதின்றே சிம்மம் காட்டில் முடிசூடி ஆள்கிறது.  பலநூறு குலநெறிகளின் மேல்தான் அரியணையின் கால்கள் அமைந்துள்ளன.” அவர் குரல் சற்றே நடுக்கத்துடன் ஒலித்தது. “பெருந்தந்தையென என் உள்ளம் சொல்கிறது, இது அறப்பிழை. ஆனால் ஷத்ரியன் என நின்றிருக்கையில் என் நாட்டின் எந்த ஒரு பெண்ணும் எனக்கு நிகரே.  என் கடன் இங்குள்ள குடிகள் அனைவருக்கும்தான். அரசகுடிப்பிறந்தாள்  என்பதற்காக உனக்கென எழுந்து அவர்களை நான் கைவிடலாகாது.”

“ஆம், இது பெரும்பழியே.  ஆனால் இதன்பொருட்டு நான் தந்தைக்களித்த சொல்லைத் துறந்தால் அஸ்தினபுரி அழியும். பாரதவர்ஷத்தில் வேதப்பெருநெருப்பு அழியும். வேதம் மறந்த கீழோர், புறவேதம் கொண்ட  பகைவர், வேதம் மறுக்கும் விலங்கோர் வேல்கொண்டெழுவர். எங்கும் இருள்சூழும். என் குடிக்கு நூறுமடங்கு பழிசூழும்” என்றார் பீஷ்மர். தன் நெஞ்சைத்தொட்டு உரத்தகுரலில்  “இதன்பொருட்டு எனக்குப் பழிசூழ்வதென்றால் ஆகுக! இந்நகருக்கும் குடிகளுக்குமென களத்தில் தலை அளிப்பதற்கு சொல்கொடுத்தவன் நான். என் புகழையும் மறுமையையும் உடனளிக்கிறேன். ஆம், இதோ அளிக்கிறேன்” என்று கைதூக்கினார்.

பெருமூச்சுடன் “அரசாணையை மீற எவருக்கும் உரிமையில்ல, பெண்ணே” என்றார் துரோணர். “ஆற்றலுள்ளோர் அதை மீறலாம். அவ்வழியே அனைவரும் மீறுவர். அதன் பின் அரசென்பதே இருக்காது. நெறியிலமைகிறது அரசு என்று உணர்க!”  கிருபர் “ஆம், அதனால்தான் அங்கே உன் கொழுநர் ஐவரும் வெறுமனே நின்றிருக்கிறார்கள்” என்றார்.

“அவர்களும் உங்களவரே” என்று பாஞ்சாலி சொன்னாள். “நான் அவர்களில் ஒருத்தி அல்ல. உங்கள் அரசும் கொடியும் முடியும் எனக்குரியவையும் அல்ல. நான் எவருக்கும் குடியல்ல.” உரத்த குரலெழுப்பியபோது அவள் பேருருக்கொண்டதுபோல் தோன்றியது. அவள் நின்றிருந்த மையம் அவள் குரலைப்பெருக்கி அவைமேல் பொழிந்தது. “நான் குலமகள் அல்ல. துணைவியல்ல. மகளும் அல்ல. நான் அன்னை. என்னை தளைக்க உங்களிடம் நெறிகளில்லை.”

அச்சொல்கேட்டு சீறி எழுந்து கூவினான் துரியோதனன் “என்ன செய்கிறாய் அங்கே? அறிவிலியே, அவள் மேலாடையைக் களைந்து இழுத்துவந்து என் அவைமுன் அமர்த்து!” துச்சாதனன் விலங்கென உறுமி தன் சினத்தைப் பெருக்கி கைகளை ஓங்கி அறைந்துகொண்டு அவளை நெருங்க “அப்பால் செல்…! அணுகாதே!” என அவள் தன் ஆடையைப்பற்றியபடி கூவினாள். “உன் அன்னையின் பெயரால் சொல்கிறேன், அணுகாதே!” துரியோதனன் தொடையைத் தட்டி நகைத்து “ஆம், அன்னைதான். முதல்விடியலில் அன்னை துர்க்கையின் அணியிலாக்கோலம் காண்பதும் வழக்கமல்லவா?” என்றான்.

“இனி ஒருபோதும் உனக்கு அன்னை மடி என ஒன்று எஞ்சாது, மூடா!” என்றாள் திரௌபதி விலகிச்சென்றபடி. துச்சாதனன் “வாயை மூடு. தொழும்பியர் பேச அவை கூடிக் கேட்கும் இழிநிலை இன்னும் அஸ்தினபுரிக்கு வரவில்லை” என்று கூவியபடி அவள் மேலாடையைப்பற்றி இழுத்தான். அவள் விலகிச்சுழல அவள் ஆடை தோளிலிருந்து சரிந்தது. முலைகள் மேல் அதை அள்ளிப்பற்றி உடல்குறுக்கினாள்.

துரியோதனன் தன் தொடையிலறைந்து உரக்க நகைத்தான். விழிகள் நீரணிந்து முகம் கடும் வலியிலென சுளிக்க அச்சிரிப்பு கெடுதெய்வம் வெறிகொண்டு வந்தேறியதுபோல் தோன்றியது. கர்ணனும் அச்சிரிப்பில் இணைந்தான். கௌரவர்கள் உடன்எழுந்து நகைத்தனர். அந்த பகடைக்கூடமே பெருங்குரல் எடுத்து சிரித்து முழங்கியது. எதிரொலியின் அலைகளாக தெய்வங்களின் சிரிப்பொலி எழுந்து இணைந்துகொண்டது.

அனைத்துச் சாளரங்களும் மூடிக்கொண்டதுபோல அவை இருளத் தொடங்கியது. கரிய காகங்கள் நிழலசைவென உள்ளே நுழைந்து அவைமூடிப்பறப்பதுபோல ஓசை கேட்டது. அவற்றின் சிறகசைவின் காற்று காதுகளை தொட்டது. குளிர் ஏறிவந்தது. தூண்கள் சிலிர்த்தன. விண்நிறைத்திருந்த அத்தனை தேவர்களும் விழிகொண்டனர். அசுரர்களின் இளிப்புகள் பெரிதாயின. அவர்களின் கைகளில் உகிர்கள் எழுந்தன. கோரைப்பற்கள் கூர்கொண்டு வளர்ந்தன.  இருளில் அவையமர்ந்த எவர் முகமும் தெரியாமலாயிற்று. உப்பென மின்னும் விழிகள் மட்டுமே சூழ்ந்த வட்டமென்றாயிற்று பன்னிரு பகடைக்களம்.

சினந்து திரும்பும் பிடியானையின் உறுமல் போல ஒலியெழுப்பியபடி திரௌபதியின் தலை எழுந்ததை விகர்ணன் கண்டான். அவள் குரல் எழுந்து எரிகுளத்து அவி என தழலாடியது.  “எழுக புதியவேதம்! ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக!” என்று கூவியபடி  இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி கண்மூடி நின்றாள்.

அவள் மேலாடை அவிழ்ந்து துச்சாதனனின் கைக்குவர அவிழ்ந்த முடிப்பெருக்கால் பாதிமறைந்த  தோளும் முலைகளும் தெரியத் தொடங்கிய கணத்தில் உப்பரிகைமேடையில் வெண்பட்டுத் திரையை விலக்கியபடி லட்சுமணை தோன்றினாள். “அன்னையே!” என்று கூவியபடி படிகளில் இறங்கி ஓடிவந்தாள். துச்சாதனன் மேலே நோக்கி திகைத்தான்.

லட்சுமணையின் அருகே எழுந்த அசலை  “யாதவா! இறையோனே!” என்று கூவியபடி  தன் மேலாடையை எடுத்துச் சுருட்டி திரௌபதியின் மேல் வீசினாள். அவள்தோள்மேல் வெண்பறவைபோல வந்தமைந்து நழுவி அலையலையாகவிரிந்து உடல்மூடியது அவ்வாடை. இரு உப்பரிகைவட்டங்களும் முகிலுக்குள் இடியென முழங்கின.  “யாதவனே! இளையோனே!  கரியோனே! கார்வண்ணனே!” என்று அலறியபடியும் அரற்றியபடியும் பெண்கள் தங்கள் மேலாடைகளை எடுத்து திரௌபதியின் மேல் வீசினர். ஒன்றன் மேல் ஒன்றென மரத்தில் வந்து கூடும் வண்ணப்பறவைக்கூட்டம்போல  ஆடைகள் அவள் மேல் பொழிந்து மூடின. அனைத்து ஆடைகளையும் சூடியவளாக அவள் கைகளை விரித்து நின்றாள்.

துரியோதனன் அரியணை விட்டெழுந்து ஓடிச்சென்று இரு கைகளையும் விரித்து தன் புதல்வியை மறித்து “கிருஷ்ணை, நில்! எங்கே செல்கிறாய்?” என்றான். அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் அவள் உறுமினாள் “விலகி நில்! மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்!” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்.

அசலை ஓடிவந்து அவர்கள் இருவரையும் தழுவினாள். பானுமதியும் துச்சளையும் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் ஓடிவந்து ஒருவரை ஒருவர் தழுவி ஒற்றை உடற்சுழிப்பென்றாயினர். பன்னிரு பகடைக்களத்தின் நடுவே அச்சுழி மெல்ல சுழன்றது. அவள் அதன் மையமென்று தெரிந்தாள். விகர்ணன் விழிநீர் சோர கைகூப்பினான்.

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்
அடுத்த கட்டுரைஇன்னொருவரின் ஆன்மீகம்