”இதான் ஒரிஜினல் சார்!”

1

இன்றும் நேற்றும் நாகர்கோயிலில் அலைந்தேன். ஒன்றுமில்லை, வெளிநாட்டுப் பயணத்திற்கு முன் சில இன்றியமையாத பொருட்களை வாங்கவேண்டியிருந்தது. எப்போதும் நான் உணர்ந்ததை இவ்விரு நாட்களில் பிடரியிலறைந்ததுபோல உணர்ந்தேன். என் மனமயக்கமாக இருக்குமா என்னும் சந்தேகத்தில் பார்வதிபுரம் முதல் நாகர்கோயில் நகர்மையம் வரை சென்று ஏராளமான கடைகளில் நானே அதை சோதித்தும் பார்த்தேன். ஆம், நாகர்கோயிலில் கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் போலிகள்.

முதலில் ஜாக்கி ஜட்டிகள் நான்கு வாங்கவேண்டுமென முயன்றேன். எந்தக்கடைக்குச் சென்றாலும் ஏதாவது மலிவாக போலி பிராண்டுகளை எடுத்துப்போட்டு “கம்பெனி பொருள்சார்!” என்கிறார்கள். விலை ஜாக்கி ஜட்டியை விட அதிகம். ஜாக்கி ஜட்டி என குறிப்பாக கேட்டால் பெரும்பாலும் “அதெல்லாம் வர்ரதில்லை சார்!” என்று பதில் . ஓரிரு கடைகளில் jaky  என்றும் jakee என்றும் பெயருள்ள அதேபோன்ற ஜட்டிகளை எடுத்திட்டு “இதான் சார் ஒரிஜினல்” என்கிறார்கள்

நாகர்கோயிலின் மிகப்பெரிய ரெடிமேட் கடையான டவர் ரெடிமேட்டில் கூட ஜாக்கி இல்லை. பெயரறியா சில்லறை பிராண்டுகள்தான். கடைசியாக ஒரு நண்பரை ஃபோனில் கூப்பிட்டுக்கேட்டேன். ஒருகடை சொன்னார். அங்கே இருந்தது.

இப்படியே ஒவ்வொரு பொருளும். பேட்டரி வாங்கப்போனால் எழுத்துப்பிழை கொண்டவை மட்டுமே கிடைத்தன. ரெயினால்ட்ஸ் பேனாவுக்கு எத்தனை எழுத்துவடிவங்கள் உண்டு என்று இப்போதுதான் அறிந்தேன்.ஷேவிங் பொருட்களில் நம்பவே முடியாத அளவுக்குப் போலிகள். கிரீம்களில்கூட!

நண்பர் ஒருவர் மேஜை டிராயரைத்திறந்தபோது கத்தை கத்தையாக பேட்டரிகளைப் பார்த்தேன். “டிவி ரிமோட்டுக்குப்போட்டா மூணுநாள் வரமாட்டேங்கு சார். அதான் சேத்தே வேங்கிடுறது” என்றார். பார்த்தால் அதே எழுத்துப்பிழை பேட்டரிகள். ஒலிப்பதிவுக்கருவிக்காக டியூரோ செல் பேட்டரிக்காக முப்பது கடை ஏறி இறங்கி மனமுடைந்து ஒருகடையில் கேட்டேன் “எங்காவது டியுரோ செல் பேட்டரி கெடைக்குமா?” அவர் புன்னகைத்தார்.

கடைசியாக  லௌகீக மேதையான நண்பருக்கு போன்செய்து புலம்பினேன். ”நாலு சூப்பர் மார்க்கெட் தவிர எங்கியுமே  ஒரிஜினல் கெடைக்காது. பார்வதிபுரத்திலே சான்ஸே இல்லை”  திகைப்புடன் “ஏன்?” என்றேன். “பாருங்க, நாகர்கோயிலிலே ஃபேன்ஸி ஸ்டோர் எவ்ளவு இருக்குன்னு. ஒருகடையிலே நாளொன்னுக்கு பத்தாயிரம்ரூபா வித்தா அதிசயம். மூவாயிரமாவது லாபம் நின்னாகணும். ஒரிஜினல் வித்தா எப்டி கட்டும்? அதனால டூப்ளிகேட் மட்டுமே விக்கிறதுன்னு முடிவோட இருப்பாங்க. அசல் கெடைச்சா யாரும் டூப்ளிகேட் வாங்க மாட்டாங்க. ஏன்னா அது பெரிய நஷ்டம். அதனால அசல் எங்கியுமே கெடைக்காம பாத்துக்கிடுவாங்க”

“ஏன், அதை விக்கிற ஏஜெண்ட் கடையிலே போடமாட்டானா?” என்றேன். “என்ன நீங்க? அவனுக்கும் லாபம்தானே குறி? அது எப்டி வந்தா என்ன?” அவர் சொன்னார் “இங்க பெரும்பாலான கன்ஸ்யூமர் பெண்கள்தான். அவங்க புடவைதவிர எதிலயும் பிராண்ட் தெரிஞ்சுக்கிடறதில்லை. அதான் இப்டி” இரண்டு நாட்கள். இன்னமும் டியூரசெல் கிடைக்கவில்லை. வேறுவழியில்லை.

நாகர்கோயிலைப் பற்றி நான் எழுதும் இவ்விஷயங்கள் ஒருவேளை தமிழகத்தின் அனைத்துச் சிறு கிராமங்களுக்கும் பொருந்தக்கூடும். இது மிகப்பெரிய ஒரு கூட்டுக்கொள்ளை. உண்மையில் ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் டூஜீ த்ரீஜீக்களுக்கெல்லாம் குருஜீ இந்த திருட்டு. அரசதிகாரிகளும் வணிகர்களும் சேர்ந்து செய்வது. இரைகள் மக்கள். அவர்களுக்கு அதைத் தெரியப்படுத்துவதே கடினம்,

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78
அடுத்த கட்டுரைமணம் கமழும் சிரிப்பு