‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79

[ 6 ]

கனகர் அறைவாயிலில் வந்து வணங்கி “ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும்” என்று அறிவித்ததும் தருமன் எழுந்து தலைக்குமேல் கைகூப்பியபடி வாசலை நோக்கி சென்றார். மரவுரியாடை அணிந்து நரைகுழலை தலைக்குமேல் கட்டி இடைக்கச்சையில் உடைவாளுடன் துரோணர் உள்ளே நுழைந்ததும் கையும் தலையும் மார்பும் இடையும் காலும் மண்ணில் பட விழுந்து அவரை வணங்கினார். அவர் குனிந்து தருமன் தலையைத் தொட்டு “நிகரற்ற புகழுடன் திகழ்க! பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியாக நிறைவுறுக! விண்ணில் பொலிக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.

சகதேவனும் எழுந்து வந்து துரோணரை வணங்கினான். தருமன் தன்னை வணங்கியபோது கிருபர் “நன்று சூழ்க! தொட்டவை அனைத்தும் பொலிக! அறம் என்றும் வழித்துணையாகுக!” என்று வாழ்த்தினார். தருமன் அவர்களை பீடங்களில் அமர்த்தி “பிதாமகர் தங்களை வரச்சொன்னார், ஆசிரியர்களே. நாங்கள் அங்கு வருவதாக இருந்தபோது என்னிரு இளையவரையும் படைக்கலப் பயிற்சிக்கு கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்” என்றார்.

துரோணர் எழுந்து கிளர்ந்த குரலில் “இளையவன் வந்திருக்கிறான் அல்லவா? அறை நுழைந்ததுமே அவனைத்தான் என் விழிகள் தேடின. எப்படி இருக்கிறான்?” என்றார். அவர் மறுவாயிலை நோக்கி செல்வதற்குள் அதன் வழியாக அர்ஜுனன் உள்ளே வந்தான். விரைந்த காலடிகளுடன் ஓடிவந்து அவ்விசையிலேயே முட்டி மடித்து குப்புற அவர் கால்களில் விழுந்தான். அவர் குனிந்து அவன் தோள்களைத் தொட்டு இழுத்து தன் நெஞ்சுடன் இறுக அணைத்துக்கொண்டு அவன் நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டார். முகர்ந்து தீராதவர் போல மீண்டும் மீண்டும் முத்தமிட்டுத் தவித்தார்.

அவன் இரு செவிகளையும் பற்றி முகத்தை தூக்கி கண்களை பார்த்தபின் “என்ன இது? ஏன் இத்தனை நரை?” என்றார். “ராஜசூயப்பந்தலில் அரசணிக்கோலத்தில் எதுவும் தெரியவில்லை. இன்று என் மாணவனாக மீண்டு வந்திருக்கிறாய்” என்றார். “வயதணைகிறது, ஆசிரியரே” என்றான். அவர் கண்களில் நீர் ததும்ப சிரித்தபடி அவனை மேலும்கீழுமென பார்த்தார். “வயதா? என்ன வயது உனக்கு? இது நீ இடமறியாது அலைந்து அயல்நாட்டுச் சுனைகளில் நீராடியதால் வந்தது” என்றார். அவன் தோள்களைச் சுற்றி தன் தோள்களில் சேர்த்து அணைத்தபடி “கிருபரே, பார்த்தீர்களல்லவா? இன்னமும் இறுக்கி பூட்டப்பட்ட வில்நாண் போல் உடல் கொண்டிருக்கிறான். பாரதவர்ஷத்தில் இவனுக்கு நிகர் நிற்க ஒரு வில்வீரரில்லை” என்றார்.

கிருபர் சிரித்து “ஆசிரியரிலிருந்து அவரது சிறந்த வடிவம் ஒன்று வெளிவந்து மாணவனாகிறது என்பார்கள்” என்றார். “ஆம், இவன் வடிவில் நான் பாரதவர்ஷத்தை வெல்வேன். இவன் நாணொலியில் நான் என்றுமிருப்பேன்” என்றார் துரோணர். மீண்டும் உள்ளத்து வெறியெழ அவனை நெஞ்சோடணைத்து அவன் குழலிலும் தோள்களிலும் முத்தமிட்டார். “எப்படி இருக்கிறான்! அவன் இடை சற்றும் பெருக்கவில்லை” என்று தருமனிடம் சொன்னார். “இந்திரப்பிரஸ்தத்தில் எவனோ போலிருந்தான். மூத்தவனே, அவன் இடம் இது. அவன் பாண்டுவின் மைந்தன். என் மாணவன்.” அவன் தாடியை கைகளால் பற்றி “எதற்கு இந்தத் தாடி? இதை எடுத்துவிட்டால் என் குருகுலத்திற்கு வந்த அந்த இளையவனையே நான் காணமுடியும்” என்றார்.

பின்பு நினைத்திருக்காத ஒரு கணத்தில் உடைந்து “பார்த்தா! என் இறையே!” என்று கூவியபடி அவனை நெஞ்சோடணைத்து அழத்தொடங்கினார். “ஆசிரியரே! என்ன இது, ஆசிரியரே!” என்று அவர் தோள்களையும் முதுகில் சரிந்த குழல்களையும் வருடியபடி அர்ஜுனன் அழைத்தான். கிருபர் கண்ணீருடன் சிரித்து “தந்தையரின் தனிமையை நூறு காவியங்கள் பாடியுள்ளன. ஆசிரியரின் தனிமையை எவரும் உணர்வதே இல்லை” என்றார்.

தன்னைத் திரட்டிக்கொண்டு விலகிய துரோணர் மேலாடையால் கண்களை அழுத்தித் துடைத்து மீண்டும் உளம் பொங்க விம்மினார். “ஆசிரியரே, பொறுத்தருள்க!” என்றான் அர்ஜுனன். “நீ என்ன செய்தாய்? அடைகாத்த மரம் பறவைக்கு உரிமைகொண்டாட முடியுமா என்ன?” என்றார் துரோணர். “நீ சென்ற பின்பு ஒருநாளும் நான் நிறைவுடன் இரவுறங்கியதில்லை. உனக்குப்பின் என் நெஞ்சில் ஊறிய அனைத்துச் சொற்களையும் சொல்லிவிட்டேன் என்று ஒருபோதும் உணர்ந்ததில்லை.”

கிருபர் அர்ஜுனனின் கைகளைப்பற்றி தன் நெஞ்சுடன் வைத்துக்கொண்டு “ஆசிரியர் தன்னை மாணவனில் நிறைக்கிறார் என்பார்கள். தன்னைப் பெய்து ஒழிந்தவனின் வெறுமை என்றும் ஆசிரியனில் எஞ்சியிருக்கும்” என்றார். அவர் தோளில் தட்டி “அது வெறுமையல்ல மூடா, நிறைவு” என்றார் துரோணர். முதியவர்களுக்குரிய வகையில் அவ்வழைப்பின் வழியாக எதையோ கடந்துசென்று முகம் மலர்ந்து நகைத்தார். “ஆனால் நிறைவே ஆயினும் அதன் எடையைத் தாங்க முதுமையால் முடிவதில்லை.”

அர்ஜுனன் “ஒவ்வொரு நாளும் உங்கள் கால்களை எண்ணியே விழிக்கிறேன். உங்கள் கைகளை எண்ணியபடி இரவுறங்குகிறேன். உங்கள் சொல்லைத்தொடங்காமல் எதைப்பற்றியும் எண்ணியதில்லை” என்றான். “ஆம், உன்னை எண்ணாமல் ஒரு நாளும் நான் விழித்ததும் உறங்கியதும் இல்லை” என்று துரோணர் சொன்னார். அவன் கைகளைப்பற்றி இறுக்கி குலுக்கியபடி “எப்படி இதை நாம் நிறைவுறச்செய்வோம்? எப்படி இன்னும் நெருங்குவோம்?” என்றார்.

கிருபர் உரக்கச்சிரித்து “ஒன்று செய்யலாம், ஒருவரோடொருவர் படைக்களத்தில் பொருதலாம். ஒருவருக்குள் ஒருவர் புகுந்து கொள்ள அதுவே சிறந்த வழி” என்றார். துரோணர் உடன் நகைக்க அர்ஜுனன் திரும்பி கிருபரின் கால்களைத் தொட்டு தன் சென்னி சூடினான். அவர் அவன் தலையில் கைவைத்து “எங்கும் வெற்றியே திகழ்க!” என்றார்.

துரோணர் “எங்கே மந்தன்?” என்றார். “பிதாமகருடன் தோள் கோக்கிறார்” என்றான் அர்ஜுனன். “இந்நாள் இத்தனை இனிதாகும் என்று எண்ணவே இல்லை” என்றார் துரோணர். “நீங்கள் நகர் புகுகிறீர்கள் என்று கேட்டபோது பதற்றத்துடன் தவிர்க்கவே விழைந்தேன். விழையாத ஒன்று நிகழப்போகிறதென்று எங்கோ தோன்றிக்கொண்டிருந்தது. விழைந்தது அனைத்தும் இங்கு நிகழ்ந்துள்ளன.” மீண்டும் கைகளை விரித்து “வா! உன்னைத் தழுவி எனக்கு சலிக்கவில்லை” என்றார்.

அர்ஜுனன் புன்னகைத்து அருகணைந்தான். தருமன் “சிறுவன் போல் நாணுகிறான்” என்று நகைத்தார். துரோணர் அவனை மீண்டும் இழுத்து தன் நெஞ்சோடணைத்து அவன் தோள்களைத் தடவியபடி “நீ சென்ற ஊரெல்லாம் உன் கதைகள் முளைத்தன. அங்கிருந்து சொற்கள் ஒவ்வொரு நாளும் என இங்கு வந்து கொண்டிருந்தன. என் இத்தனை நாள் வாழ்க்கையில் இனிது நிற்பது நாளும் வந்தடைந்த உன் வெற்றிச் செய்திகளே” என்றார்.

தருமன் பணிந்து “ஒவ்வொன்றும் மேலும் மேலும் இனிதாகின்றன. இனி நாங்கள் தந்தையையும் அன்னையையும் சந்திக்கவேண்டும். இன்றிரவுக்குள் குலதெய்வங்கள் ஆலயங்கள் அனைத்திலும் பூசனை கொள்ளவும் வேண்டும்” என்றார். “ஆம், நாங்கள் வந்திறங்கியப்போது வாசலிலேயே அதை சௌனகர் சொல்லிவிட்டார்” என்றார் துரோணர். “நான் நெடுநேரம் இவனை நெஞ்சில் எடுத்துக்கொள்வேன் என்பதை முன்னரே அறிந்துவிட்டார் போலும்.”

“அனைத்தையும் அறிந்து அனைத்தின் மேலும் ஐயம் கொள்வது அவரது இயல்பு” என்றார் தருமன். துரோணர் அர்ஜுனனின் இரு கைகளையும் கையில் எடுத்துக்கொண்டு “உன்னை எண்ணும்போதெல்லாம் இளைய யாதவன் நினைவுக்கு வருகிறான். நான் உனக்கு வில்லை அளித்தது போல அவன் யோகத்தை அளித்தான் என்றான் ஒரு சூதன். ஏனோ அதை முதல்கணம் கேட்டபோது என் உள்ளம் இளைய யாதவன் மேல் பெரும் கசப்பை அடைந்தது. அவன் உனக்கு அதை அளித்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. அதன் பொருட்டு அவனை நூறுமுறை வாழ்த்தவே உள்ளம் எழுகிறது. நூற்று ஒன்றாவது முறை பொறாமையால் என் ஆழம் வலிகொள்கிறது” என்றார்.

கிருபர் நகைத்து “அன்னையர் கொள்ளும் பொறாமைக்கு நிகர் அது” என்றார். “யாதவப் பேரரசியிடம் கேட்டால் அவரும் இதே உணர்வை சொல்லக்கூடும்.” அர்ஜுனனிடம் “இளையோனே, தோழனாக ஆசிரியனை அடைந்தவன் வாழ்த்தப்பட்டவன். அவனுக்கு மெய்மை அழகிய களித்தோழியென வந்தமையும். நீ வில்வெற்றியால் மட்டுமல்ல மெய்யுணர்ந்த யோகி என்றும் ஒரு நாள் புகழ் பெறுவாய்” என்றார்.

துரோணர் தன் கைகளை அவன் தலையில் வைத்து “நீ அடையக்கூடாததென்று எதுவும் இப்புவியில் இருக்கப்போவதில்லை. உன் பொருட்டு என் பெயரும் பாரதவர்ஷத்தில் என்றும் நிலை கொள்ளும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

[ 7 ]

திருதராஷ்டிரரின் இசைக்கூடத்தில் நுழைவதற்கு சற்று முன்னர்தான் அங்கு பேரரசியும் இருக்கிறார் என்பதை தருமன் அறிந்தார். அவர் சற்றே திகைக்க “அரசே, இது முறைமைசார் சந்திப்பென்பதால் பேரரசியும் இருக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது” என்றார் கனகர். அவர்களுக்குப்பின் வந்த பீமன் “எவர் எடுத்த முடிவு?” என்றான். கனகர் அவனை நோக்கி மீண்டும் பணிந்து “அமைச்சர் எடுத்தார்” என்றார்.

உரத்த குரலில் “ஆகவே இந்திரப்பிரஸ்தத்தின் அரசராக அஸ்தினபுரியின் பேரரசரை சந்திக்கும்படியும் உறவுமுறைச் சந்திப்பு அல்ல என்றும் எங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது அல்லவா?” என்றான் பீமன். “அவ்வாறல்ல. ஆனால் முறைமை பேணப்படவேண்டும் என்பதனால்…” என்று அவர் சொல்ல “நன்று” என்று அவன் அவரை கடந்தான்.

தருமன் “எவ்வாறெனிலும் நாம் நம்  அன்னையையும் தந்தையையும் சந்திக்கிறோம். நம்மை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது அதை மாற்றுமா என்ன?” என்றார். அவரருகே நின்ற திரௌபதி தன் தலைமறைத்த வெண்பட்டை முகத்தின் மேல் இழுத்துக்கொண்டு நிமிர்ந்து மூடிய வாயிலை நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் அஸ்தினபுரிக்கு கிளம்பிய பின் ஒரு சொல்லும் உரைக்கவில்லை என்பதை தருமன் எண்ணிக்கொண்டார். சொல்லற்றவர்கள் சூழலில் இருந்து மறைவதே வழக்கம். அவளோ அனல்போல தன்னிருப்பை உணர்த்திக்கொண்டே இருந்தாள்.

அறைவாயிலைத் திறந்து வெளியே வந்த அறிவிப்பாளன் “நுழைவொப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றான். “நன்று” என்றபின் தருமன் திரௌபதியை நோக்கி “வருக!” என்றழைத்து உள்ளே சென்றார். இளைய பாண்டவர்கள் தொடர்ந்தனர். கனகர் வெளியே நின்றார்.

இயல்பாகவே தருமன் விப்ரர் அமர்ந்திருந்த பீடத்தை நோக்க அங்கு அது இல்லாததை உணர்ந்த பின்னரே அவரது மறைவை நினைவுகூர்ந்தார். மரவுரி மெத்தையிட்ட இசைக்கூடத்தில் காலடி ஓசைகள் இன்றி மிதந்ததுபோல் அவர்கள் சென்றனர். இசைக்கூடத்தின் நடுவே தனது பீடத்தில் திருதராஷ்டிரர் இரு கைப்பிடிகளிலும் கைவைத்து முகம் சரித்து சற்றே செவி அவர்களை நோக்க அமர்ந்திருந்தார். அவரருகே சற்று சிறிய பீடத்தில் காந்தாரி நீலநாடாவால் கண்களை கட்டிக்கொண்டு பெருத்த வெண்ணிற உடல் மெழுகென பீடத்தில் உருகி வழிந்திருப்பதுபோல தெரிந்தாள். அவளுக்குப் பின்னால் காந்தார அரசியர் நின்றனர். உடனே சம்படையின் இன்மையை தருமன் உணர்ந்தார்.

திருதராஷ்டிரருக்கு வலப்பக்கம் நின்றிருந்த சஞ்சயன் குனிந்து பாண்டவர்கள் வருகையை அவர் செவிகளில் அறிவித்தான். அருகணைந்த தருமன் அவர்கள் முன் எண்சாண் உடல் நிலம் தொட விழுந்து வணங்கி “வாழ்த்துங்கள், தந்தையே. தங்கள் சொற்கள் என் குலம் பெருக வைக்கட்டும்” என்றார்.  உடலை மெல்ல அசைத்தமைந்து “நன்று நிகழ்க!” என்று தாழ்ந்த குரலில் திருதராஷ்டிரர் சொன்னார். திரௌபதி வணங்கியபோது திருதராஷ்டிரரின் குரல் எழவேயில்லை.

காந்தாரி தன்னை வணங்கிய திரௌபதியை கைபற்றி அருகணைத்து இடைசுற்றி “பெருத்துவிட்டாய்!” என்றாள். அவள் புன்னகையுடன் “ஐந்து மைந்தர்கள் பிறந்துவிட்டார்கள், அன்னையே” என்றாள். “ஆம், ஒவ்வொருவரையும் தொட்டுத் தழுவியதை நினைவு கூர்கிறேன்” என்றாள் காந்தாரி. மீண்டும் அவளை அணைத்தபடி “அரசமுறைமைகள் இன்றி இப்படி சந்திப்பதற்காகவே நீ முன்னரே இங்கு வந்திருக்கலாமடி” என்றாள். சத்யசேனை “ஆம், நான் உன்னை இந்திரப்பிரஸ்தத்தில் பார்த்தபோது அஞ்சி பின்னால் நின்றுவிட்டேன்” என்றாள்.

சத்யவிரதை திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டு “அஸ்தினபுரிக்கு நெடுநாட்களுக்குப்பின் நீ வந்தது மகிழ்வளிக்கிறது, கிருஷ்ணை” என்றாள். சத்யசேனை “பிற மருகிகளையும் அழைத்து வந்திருக்கலாம். அவர்களும் இங்கு வந்து பல்லாண்டுகளாகின்றன” என்றாள். சுதேஷ்ணை “ஆம், நான் பலந்தரையை மிக விரும்பினேன். எளிமையான பெண். அங்கிருந்த நாளில் அவளிடம் நன்றாகப் பேசக்கூட முடியவில்லை” என்றாள். தேஸ்ரவை “இங்கேயே ராஜசூயம் நிகழவிருக்கிறது என்கிறார்கள். பிறகென்ன?” என்றாள். மிக இயல்பாக பெண்கள் ஒன்று கலந்ததை தருமன் வியப்புடன் நோக்கினார்.

பாண்டவர் ஒவ்வொருவரும் வந்து தன்னைப் பணிய ஒற்றைச் சொற்களில் அவர்களுக்கு வாழ்த்துரைத்தார் திருதராஷ்டிரர்.  அந்த அமைதியை கலைக்கும்பொருட்டு “தங்கள் ஆணையை ஏற்று பன்னிரு பகடைக்களம் சூழ இங்கு வந்துள்ளோம்” என்றார் தருமன். அவர் அச்சொற்களைக் கேட்டதாகத் தெரியவில்லை. எனவே தொடர்ந்து “எவ்வகையிலும் தங்கள் மைந்தர் களம் நின்று குருதி சிந்தக்கூடாதென்பதை நான் எண்ணிக்கொண்டிருந்தேன், தந்தையே. அவ்வண்ணமே இன்று நிகழவிருப்பது தங்கள் வாழ்த்தும் மூதாதையரின் அருளுமேயாகும்” என்றான்.

திருதராஷ்டிரர் உடலை மெல்ல அசைத்து இதழ்களைப் பிரித்து ஏதோ சொல்ல வந்தார். பின்பு சினத்துடன் சஞ்சயனை நோக்கி “மூடா, என்ன செய்கிறாய்?” என்றார். அச்சினத்திற்கு சற்றும் அஞ்சாமல் “சொல்லுங்கள், அரசே…” என்றான் சஞ்சயன். “இவர்களுக்கு நான் பரிசளிக்கவேண்டுமே, எங்கே அவை?” என்றார். “இங்குள்ளன” என்று சொல்லி சஞ்சயன் திரும்பி நோக்கி கைகாட்ட ஏவலர் அறுவர் சிறிய தாலங்களுடன் நிரையாக வந்தனர்.

திருதராஷ்டிரர் முதல் தாலத்திலிருந்து கணையாழி ஒன்றை எடுத்து தருமனுக்கு அணிவித்தார். “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். அவன் மீண்டும் அவர் காலைத் தொட்டு சென்னி சூடி “தங்கள் இனிய தொடுகையாக என் விரலில் என்றுமிருக்கட்டும் இது” என்றார். அவர் உறுமினார். பீமனுக்கு அணிவித்த கணையாழி சிறிதாக இருந்தது. அவன் ஆழிவிரலிலிருந்து சிறுவிரல் வரை மாறிமாறிப் போட்டு நோக்கியும் அது உள் நுழையவில்லை.

“பேருடல் கொண்டவனாக இருக்கிறாய்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். கசப்புடன் நகைப்பதுபோல அவரது முகத்தில் தசைகள் இழுபட்டு வாய் கோணலாகியது. “ஆம், தந்தையே. கதைப்பயிற்சியால் உடல் பெருத்துக்கொண்டே செல்கிறேன்” என்றான் பீமன். “இடைவிடாத பயிற்சியில்தான் எனது மூத்தவனும் இருக்கிறான். அவனும் உனக்கு நிகராகவே உடல் பெருத்திருக்கிறான்” என்றார் திருதராஷ்டிரர். பின்பு “நல்லூழாக போர் நிகழாது போய்விட்டது” என்றார்.

“நல்லூழாக அது மீண்டும் நிகழவும் கூடும்” என்றான் பீமன். முகம் சுருங்க “என்ன சொல்கிறாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “போர் தெய்வங்களுக்கு உகந்ததல்லவா?” என்றான் பீமன். “ஆம். போர் உகந்தது. ஆனால் உடன் பிறந்தார் போர் அல்ல” என்று கூவியபடி திருதராஷ்டிரர் சினத்துடன் கையை ஓங்கினார். மெல்லிய குரலில் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பெண்கள் திகைத்து திரும்பிப் பார்த்தனர். “நான் நகையாட்டுக்கென சொன்னேன், தந்தையே” என்றான் பீமன். “இங்கு நிற்கட்டும் நகையாட்டு. இதற்கு மேல் சொல்லாடுவது எனக்கு உவப்பல்ல” என்றார் திருதராஷ்டிரர்.

அவருள் ஆழத்தில் ஏதோ சினம் கனன்றுகொண்டே இருப்பதை ஐவரும் உணர்ந்தனர். முறைமைச் சொற்களால் அதை மூடிவைக்க முயல்கையில் இடைவெளிகளில் எல்லாம் அது கொதித்துக் கசிந்துகொண்டே இருந்தது. தன் அகத்தை கடந்து வந்து தருமனிடம் இறுக்கமான புன்னகையைக் காட்டி “இளைப்பாறிவிட்டாயா?” என்றார் திருதராஷ்டிரர். பீமன் “அரச விருந்தினர் மாளிகையில் இளைப்பாறுகிறோம்” என்றான்.

காந்தாரி திகைப்புடன் “விருந்தினர் மாளிகையிலா? இவ்வரண்மனையின் மறுபக்கம் பாண்டவர்களுக்குரியதல்லவா? அங்கு தங்குமிடம் அமைத்தாலென்ன?” என்றாள். திரௌபதியிடம் “நீயும் அங்கேயா இருக்கிறாய்?” என்றாள். தருமன் சொல்லெழாது நிற்க சஞ்சயன் பணிந்து “அப்பகுதி மாற்றிக் கட்டப்பட்டுள்ளது, பேரரசி. அங்குதான் இப்போது கௌரவர்களில் இளையவர்கள் தங்கள் மனைவியருடன் வாழ்கிறார்கள்” என்றான். “அவர்களை வெளியேற்றுவதற்கு எவ்வளவு காலமாகப் போகிறது? இது என்ன விருந்தினர் மாளிகையில் இக்குடி பிறந்தோரை தங்க வைப்பது?” என்று காந்தாரி சொன்னாள்.

அதை கடந்துசெல்ல விரும்பிய தருமன் “பிதாமகரையும் துரோணரையும் கிருபரையும் சந்தித்தோம், தந்தையே. அவர்கள் கொண்ட உவகையையும் கண்ணீரையும் கண்டு இன்று எங்கள் நாள் நிறைந்தது” என்றார். “ஆம். துரோணர் ஒவ்வொரு நாளும் இளைய பாண்டவனுக்காக எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தார்” என்றார் திருதராஷ்டிரர். “அவர் மைந்தனும் அவரிடமிருந்து அகன்றுவிட்டான். அஸ்வத்தாமனை எண்ணும்போதெல்லாம் அர்ஜுனன் நினைவு வருகிறது என்று ஒருமுறை சொன்னார்.”

பீமன் “உத்தர பாஞ்சாலத்தில் அரசு சூழ்தலில் அஸ்வத்தாமன் அம்பு எய்வதை மறந்திருக்கமாட்டான் என்று எண்ணுகிறேன்” என்றான். அவன் சொன்னதில் பொருளேதும் உண்டா என்று புருவங்கள் சுருங்க தலையை சரித்த திருதராஷ்டிரர் “கற்ற கலை மறக்குமா என்ன? துரோணரின் குருதியென்றால் அது அஸ்வத்தாமனல்லவா?” என்றார். அர்ஜுனன் “ஆம், தந்தையே. அவருக்கு என்றும் முதன்மையானவர் அஸ்வத்தாமனே” என்றான்.

அச்சந்திப்பை முடித்துக்கொள்ள விரும்பியவனாக சஞ்சயன் உட்புகுந்து “பாண்டவ அரசரும் இளையோரும் அந்தியில் குலதெய்வப் பூசனைக்கு செல்ல வேண்டுமென்றும் அது முடிந்த பிறகே இன்றையபொழுது அமைந்ததென்று முரசறைய வேண்டுமென்றும் விதுரர் ஆணையிட்டுள்ளார், பேரரசே” என்றான். பெருமூச்செறிந்து “முறைமைகள் எதையும் மாற்றவேண்டியதில்லை. அவ்வண்ணமே ஆகுக!” என்றார் திருதராஷ்டிரர்.

காந்தாரி “பூசனைகள் முடிந்த பின்னர் நீ எதற்காக விருந்தினர் மாளிகையில் தங்குகிறாய்? நீ என் மாளிகைக்கு வந்துவிடு” என்று திரௌபதியிடம் சொன்னாள். திருதராஷ்டிரர் உரக்க “அவள் இன்று பாரதவர்ஷத்தின் அரசி. அதற்குரிய இடத்தில் அவள் இருப்பதே முறை” என்றார். “அதற்காக அவள் என் மருகி அல்ல என்றாகுமா என்ன?” என்றாள் காந்தாரி. “எதற்கு வந்தார்களோ அது முடியட்டும். அதன் பிறகு நாம் குருதி உறவுமுறைகளுக்கு திரும்புவோம்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம் தந்தையே, முறைமைகளை அதற்குப்பின் களைவோம். முதலில் இந்த பன்னிரு பகடைக்கள ஆடல் நிறைவுறுக!” என்றார் தருமன்.

பீமன் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனன் அவன் கையை பற்றினான். தருமன் அதை அரைக்கண்ணால் நோக்கியபின் “நாங்கள் கிளம்புகிறோம், தந்தையே. மீண்டும் படைக்களம் சூழ்கையில் அவையில் தங்களை பார்க்கிறோம்” என்றார்.

“நன்று சூழ்க!” என்று மீண்டும் வாழ்த்தினார் திருதராஷ்டிரர். உரத்த குரலில் பீமன் “இத்தருணம்வரை கௌரவர்கள் எவரும் எங்களை வந்து சந்திக்கவில்லை. ஒருவேளை பன்னிரு பகடைக்களத்தில் மட்டும் சந்தித்தால் போதும் என்று எண்ணுகிறார்களோ என்று ஐயுறுகிறேன்” என்றான்.

திருதராஷ்டிரர் திகைத்து சஞ்சயனை நோக்கி முகம் திருப்பி “உண்மையா?” என்றார். “ஆம். முறைமைகளை மீற வேண்டியதில்லை என்று அரசர் எண்ணுகிறார்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “ஆம், முறைமைகள் என்றால் அதைப் பேணுவதே உகந்தது” என்றார். “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றார் தருமன். “அஸ்தினபுரியின் அரசர் பன்னிரு பகடைக்களத்துக்குப் பிறகு எனது இளையவனாக அருகணையட்டும். காத்திருக்கிறோம். நன்றி” என்றபின் “செல்வோம்” என்று இளையோருக்கு கைகாட்டிவிட்டு திருதராஷ்டிரரை வணங்கி பின்பக்கம் காட்டாது நடந்தார்.

“நாளை பகலில் என் மாளிகைக்கு வா, இளையோளே” என்று சொல்லி காந்தாரி திரௌபதியின் கன்னத்தைத் தடவி தலையை இழுத்து வகிட்டில் முத்தமிட்டாள். “வருகிறேன், அன்னையே. துச்சளையைப் பார்த்து நெடுநாட்களாகிறது” என்றாள் திரௌபதி. காந்தாரியர் ஒவ்வொருவரின் கைகளையாகத் தொட்டு தலையசைத்து விடைபெற்று தருமனுடன் நடந்தாள்.

மீண்டும் தருமன் விப்ரரை நினைவு கூர்ந்தார். அவரது இருப்பு எத்தனை இயல்பாக முழுமையாக மறைந்துவிட்டது என்று எண்ணினார். புடவியின் உயிர்வெளியென்பது நீர்ப்பரப்பு போல எத்தனை அள்ளினாலும் தடம் எஞ்சாது என்றொரு சூதர் பாடலை நினைவுகூர்ந்தார். திருதராஷ்டிரராவது விப்ரரை எண்ணிக்கொள்கிறாரா என்றொரு எண்ணம் வந்தது. அவர் மறக்கவே முயல்வார் என்று தோன்றியது. மறக்க முயல்பவை கனவுக்குள் சென்று பதுங்கிக்கொள்கின்றன. புற்றுக்குள் நாகமென விழிமணியொளிரும் நஞ்சென அமுதத்தின் அருமணியென.

முந்தைய கட்டுரைமணம் கமழும் சிரிப்பு
அடுத்த கட்டுரைகடிதங்கள்