குளறுபடிகள், கடிதம்

 

bell11417699916823

அன்பின் ஜெ..

 

உங்களின் துயர் கண்டேன்.  இந்தியாவின் வான் வெளிப்பயணமும், விடுதித் தங்கலும், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பிட்ச்களில்  கிரிக்கெட் விளையாடுவது போன்றது. தகுந்த முன்பயிற்சியும், திட சித்தமும், மிக முக்கியமாக பிட்ச் பற்றிய முன்னறிவும் தேவை.

 

ஏர் இந்தியா ஒரு அற்புதமான விமான சர்வீஸ் – ஆனால் ட்ரங்க் வழிகளில். எடுத்துக்காட்டாக,  சென்னை மும்பை, தில்லி மும்பை – அதுவும் அதிகாலை / மாலை சர்வீஸ்கள்.. இந்த 9:30 மணி சர்வீஸ் போன்றவை, இன்னொரு சிறு நகரை இணைக்கும் சர்வீஸாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்களின் விமானம், ஜெய்ப்பூர் போன்ற இன்னொரு ஊரில் இருந்து, தில்லி வந்து சென்னை செல்லும் விமானமாக இருக்கலாம். இவை பெரும்பாலும் இருப்பதிலேயே த்ராபை யான  விமானங்கள்..  9:30 மணிக்கு விமானம் பிடிக்கும் ஆளுக்கு நேரம் வெகு முக்கியமாக இருக்காது என்பதும் ஒரு காரணமும். அதே 6 மணிக்கு விமானம் பிடிப்பவர்கள், பெரும்பாலும், அன்று சென்று முடிக்க வேண்டிய வேலையாக வருவர்; எனவே, அந்த சர்வீஸுக்கு எப்பவும் நல்ல விமானங்கள் இருக்கும். நான் கடந்த 15 ஆண்டுகளாக மிக அதிகம் பயணம் சென்றிருக்கிறேன் – இந்த விமான தாமதம் என்பது ஜெட் ஏர்வேஸ் தவிர மீதி அனைத்திலும் (குளிர்காலத்தில் அனைத்து ஏர் லைன்ஸூகளும்) உண்டு என்பதுதான் என் அனுபவம்.

 

சமீப காலகட்டங்களில், ஸ்பைஸ் ஜெட் / கிங் ஃபிஷர் போன்ற விமானங்கள்,  மிக அதிகப் பிரச்சினைகளைத் தந்திருக்கின்றன.  ஏன், நேரம் தவறாமையின் மன்னர்கள் எனப் பீற்றிக் கொள்ளும் இண்டிகோ, ஒரு நாள் காலை 7  மணியில் இருந்து, மதியம் 2 மணி வரை ஒரு தீர்வும் சொல்லாமல், மும்பை ஏர்போர்ட்டில் (மும்பை / அமதாபாத் பயணம்) என்னை நிறுத்தி வெறுப்பேற்றியிருக்கிறார்கள் – நான் காரில் சென்றிருந்தாலே அமதாபாத் சென்று சேர்ந்திருப்பேன்.

 

இது போக, ஏர் இந்தியாவின் உணவு மற்றும் பயணிகள் பாதுகாப்பு (உங்களின் அம்மாயி வீட்டில் இருப்பது போல உணர்வு) – மற்றும் குளிர் காலத்தில், தில்லியில் விமானத்தை இறக்கி ஏற்றும் திறன் இவையெல்லாம் அதன் நேர்மறை அம்சங்கள்.. ஒரு முறைப் பயணத்தில், எனது சகாவின் முகத்தைப் பார்த்தே அவருக்கு மாரடைப்பு எனக் கண்டு கொண்டு அதற்கான மாத்திரை அளித்துக் காத்தார்.. (தனியார் ஏர்லைன்ஸ் அம்மணிகள் அவருக்கு, சாகும் முன்பு ஒரு அழகான புன்னகையை அளித்திருப்பார்கள்  ஸ்மைலி ஸ்மைலி..)

 

எனவே, சில மணி நேரம் தாமதம் என்பதை , இதெல்லாம் சகஜமப்பா என ஒரு சிரிப்புடன் எதிர்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.  ஏர் இந்தியாவைக் காக்க நீங்களும் நானும் தான் உதவ வேண்டும்..   வேற யார் இருக்காங்க?

 

விடுதிகள் விஷயத்தில், நம் முன்னோடியான நாஞ்சில் பல குறிப்புகளை அளித்திருக்கிறார்கள்.. நீங்களும் கடந்த 6-7 வருடமாகச் சென்னையில் தங்கிப் பழம் தின்று கொட்டையும் போட்டிருக்கிறீர்கள்.. இதற்குப் பின்னும் இணையத்தில் தேடியது உங்கள் தவறுதான் ஐயா..

 

நிற்க. இறுதியில், ஏடிஎம் விஷயத்தில் ஆஃப்பிரிக்க நாடுகளை இணைத்ததை, இன்றையா கிழக்கு ஆஃப்பிரிக்க வாசியான நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  பண பரிமாற்றத்துக்கு, நாங்கள் ஏடிஎம்மை நம்புவதில்லை.  நாங்கள் மொபைல் வழி வங்கிகளை உபயோகிக்கிறோம்..   வேலை செய்யாதவரை ஏடிஎம் என்றும், ஒன்றுக்கும் உதவாதவரை ஏடிஎம்  ஏஸி என்றும் அழைக்கிறோம்.

 

பாலா

 

 

அன்புள்ள பாலா,

 

ஆப்ரிக்காவில் நீங்கள் பல மனைவிகளுடன் வாழ்வதாகச் சொல்லப்படுவது புரளிதான் என நம்புகிறேன்.

 

ஸ்பிடி சமவெளியின் படுபயங்கரமான சாலைகளில் பயணம் செய்யும்போது இந்திய ஓட்டுநர்கள் மேல் நம்பிக்கை வருகிறது. டெல்லியின் நாற்கரச்சாலையில் அவநம்பிக்கை.

 

உங்கள் அலுவலகத்தில் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்பதைப்புரிந்துகொண்டேன்

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்.
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சி