‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73

[ 18 ]

இரவெல்லாம் கர்ணன் துரியோதனனுடன் அவனது மஞ்சத்தறையில் துணையிருந்தான். ஒருகணமும் படுக்க முடியாது எழுந்து உலாவியும், சாளரத்தினூடாக இருள் நிறைந்த வானை நோக்கி பற்களை நெரித்து உறுமியும், கைகளால் தலையை தட்டிக் கொண்டும், பொருளெனத்திரளா சொற்களை கூவியபடி தூண்களையும் சுவர்களையும் கைகளால் குத்தியும் துரியோதனன் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இரும்புருக்கை குளிரச்செய்வதுபோல படிப்படியாக அவனை மெல்ல கீழிறக்கிக் கொண்டு வந்தான் கர்ணன்.

ஒரு போர் அத்தருணத்தில் எப்படி பேரழிவை கொண்டுவரக்கூடுமென்று சொன்னான். “அரசே, இப்போரில் நாம் வெல்லலாம். ஆனால் வெற்றிக்குப்பின் நம் படைகளை இழந்து வலுக்குறைந்தபின் ஒரு நிஷாதனிடம் தோற்க நேர்ந்தால் அது பேரிழிவை கொண்டு வராதா?” என்றான். “இன்று நமது நோக்கம் ராஜசூயம் என்றால் அது எவ்வகையில் நிகழ்ந்தாலென்ன? வென்று முடிசூட்டி சக்ரவர்த்தியான பின்னர் மேலும் நம் வலிமையை பெருக்கிக் கொள்வோம். பிறிதொரு சரியான தருணத்தில் நாம் படை சார்ந்த வெற்றியை அடையலாம்” என்றான்.

சொல்லடுக்கிப் பேசுவதைவிட உணர்த்த விரும்பிய கருத்துக்களை ஓரிரு சொற்றொடர்களில் அமைத்து மீள மீளச் சொல்வதே துரியோதனனிடம் ஆழ்ந்த பதிவை உருவாக்கும் என்பதை அவன் அறிந்திருந்தான். உள்ளம் கொந்தளிக்கையில் சலிக்காத உடலாற்றல் கொள்பவன் அவன். உள்ளம் சலிக்கையில் அவன் உடல் குழைந்து துவண்டு விடுவதையும் கர்ணன் கண்டிருந்தான்.  அவன் ஆற்றலடங்கி அமைவதற்காக காத்திருந்தான். முற்புலரியில் மெல்ல குளிர்ந்து எடைமிக்க காலடிகளுடன் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்த துரியோதனனின் விழிகள் துயில் நாடி சரியத்தொடங்க அவன் கால்கள் மரத்தரையில் உரசி தள்ளாடின.

கர்ணன் எழுந்து அவன் கைகளைப் பற்றியபோது காய்ச்சல் கண்டவை போல வெம்மையும் அதிர்வும் கொண்டிருப்பதை உணர்ந்தான். “படுத்துக் கொள்ளுங்கள், அரசே” என்றபோது சிறுகுழந்தையென வந்து மஞ்சத்தில் படுத்தான். அவன் உடலில் மூட்டுக்கள் சொடுக்கொலி எழுப்பின. அவன் இமைகள் அந்தியில் வாகையிலையடுக்குகள் என சரிந்து மூடின. இமைப்படலத்திற்குள் கருவிழிக் குமிழி ஓடிக்கொண்டே இருந்தது. உதடுகள் ஒலியென மாறாத சொற்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. விரல்கள் எதையோ பற்றி நெரித்துக் கொண்டிருந்தன.

மஞ்சத்தில் அருகமர்ந்த கர்ணன் அவன் வலக்கையை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு “ஆம் அரசே, இதுவே இப்போதைக்கு உகந்த வழி. இதை கடந்து செல்வோம். மாதுலர் சகுனியும் கணிகரும் நமக்கு முன்னரே விரைந்தோடும் சித்தம் கொண்டவர்கள். இத்தருணத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுப்போம். அவர்கள் இதை வென்று நமக்கு அளிக்கட்டும். நமது வெற்றியை பிறிதொரு முறை அடைவோம்” என்றான். மிகத்தொலைவிலென எங்கோ இருந்து துரியோதனன் “ஆம்” என்று முனகினான்.

“இது சிறுமை அல்ல. பீஷ்மருக்கும் தங்கள் தந்தைக்கும் கனிந்து தாங்கள் தங்கள் வீரத்தையும் நிமிர்வையும் விட்டு சற்று இறங்கி வந்திருக்கிறீர்கள் என்றே பொருள். நாம் இறுதியில் வெல்வோம். உடனே வெல்வதற்கான சிறுவழி இதுவென்றால் இப்போதைக்கு இதுவே ஆகுக!” என்றான் கர்ணன். “ஆம்” என்றான் துரியோதனன். அவன் மூச்சு சீரடையத்தொடங்கியது. “இன்று இது ஒன்றே வழி” என்றான் கர்ணன். உலர்ந்த உதடுகளைத் திறந்து “ஆம்” என்று அவன் முனகினான்.

அவன் கொந்தளிப்புகள் அடங்க இருண்ட ஆழத்திலிருந்து விழிமின்னும் தெய்வங்கள் எழுந்து வருவதை கர்ணன் உணர்ந்தான். அவற்றிடமென தாழ்ந்த குரலில்  அவன் சொன்னான் “நமது வஞ்சம் அழியாது. பாரதவர்ஷத்தின் அனைத்து தலைகளையும் அறுத்திட்டாலும் அது பலிநிறைவு கொள்ளாது. ஆனால் நமக்குத் தேவை ஒரு  முகம் மட்டுமே. அதில் எழும் ஒரு துளி விழிநீர் மட்டுமே. அதை வெல்வோம். முற்றிலும் வென்று கடந்து செல்வது வரை அமையமாட்டோம்.” “ஆம்” என்று துரியோதனனுக்குள்ளிருந்து அத்தெய்வம் மறுமொழி சொன்னது.

துரியோதனனின் விரல்கள் நாண் தளர்ந்த சிறிய விற்கள் போல ஒவ்வொன்றாக விடுபட்டன. சீரான மூச்சில் அவன் நெஞ்சுப்பலகைகள் ஏறி இறங்கத்தொடங்கின. கர்ணன் ஓசையின்றி எழுந்து அகன்று நின்று இடையில் கைவைத்து நண்பனை நோக்கினான். துரியோதனன் நன்கு துயின்றுவிட்டான் என்று உணர்ந்ததும் மெல்ல குனிந்து குறுபீடத்தில் இருந்து தன் மேலாடையை எடுத்து அணிந்து வாயிலை நோக்கி சென்றான். கதவில் கைவைத்து மெல்ல திறக்க முயன்றதும் பின்னால் துரியோதனன் முனகியது போல் ஒலியெழுந்தது. அவன் விழித்துக் கொண்டானா என்று கர்ணன் திரும்பிப் பார்த்தான்.

அதுவரை அவன் கண்ட துரியோதனனுக்கு மாறாக தெய்வச்சிலைகளுக்குரிய அழகும் அமைதியும் கொண்ட முகத்துடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தான். அம்முகத்திலிருந்தும் விரிந்த பெருந்தோள்களிலிருந்தும் நோக்கை விலக்க முடியவில்லை. பகலெல்லாம் தான் நோக்கிக் கொண்டிருந்தது அலைகளை மட்டுமே என்றும் அப்போது அங்கிருப்பதே சுனை என்றும் அவன் எண்ணினான். பெருமூச்சுடன் கதவைத் திறந்து வெளியே வந்து தாழ் ஒலிக்காது மெல்ல சார்த்தினான். பலகைப்பொருத்து இறுகும் தருணத்தில் உள்ளே “குருதி” என்றொரு சொல் ஒலிக்கக் கேட்டான்.

மயிர்க்கால்கள் ஒவ்வொன்றும் சிலிர்த்து நிற்க, அச்சிறு இடைவெளி வழியாக உள்ளே பார்த்தான். அதே தெய்வமுகத்துடன் துரியோதனன் துயின்று கொண்டிருந்தான். அவ்வறைக்குள் பிறிதெவரோ இருந்து சொன்ன சொல்லா அது? அல்லது தன்னுள் இருந்த ஏதோ ஒன்று உரைத்த செவிமயக்கா? அச்சத்தில் என சிலிர்த்து முனையில் நின்ற உடலுடன் அசையா  விழிகளுடன் கர்ணன் நோக்கி நின்றான். பின்பு உடல் தளர்ந்து திரும்ப எண்ணிய கணம் மீண்டும் அச்சொல் ஒலித்தது. “குருதி.” இம்முறை தெளிவாகவே அதை கேட்க முடிந்தது. அது எவருடைய குரல் என்பதில் எந்த ஐயமும் இருக்கவில்லை.

[ 19 ]

கர்ணன் மீண்டும் மந்தண அறைக்கு வந்தபோது அங்கு விதுரர் அவனுக்காக காத்திருந்தார். அவனைக் கண்டதும் எழுந்து அவர் முகமன் சொன்னபோதே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை கர்ணன் உய்த்துணர்ந்து கொண்டான். துச்சாதனன் உரத்த குரலில் “தந்தையார் வடக்கிருந்து உயிர் துறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார், அங்கரே” என்றபடி அவனை நோக்கி வந்தான். “அவர் வீண் சொல் சொல்வது இல்லை. அவரது உள உறுதி பெரும் களிறுகளுக்குரியது.”

கர்ணன் திகைப்புடன் விதுரரை நோக்கி திரும்ப அவர் “ஆம்” என்று தலையசைத்தார். அதுவரை உடலை இயக்கிய உளவிசை முற்றிலும் வழிந்தோட கர்ணன் தளர்ந்தான். நான்கு அடிகள் எடுத்து வைத்து பீடத்தை அணுகி அமர்வதற்குள் உடலின் பொருத்துக்கள் அவிழ்ந்து உதிர்ந்துவிடுமோ என்று தோன்றியது. தலையை கையில் தாங்கி எண்ணங்களற்று அமர்ந்திருந்தான். விதுரர் அவன் முன் அமர்ந்து “என்னால் முடிந்தவரை விளக்க முயன்றேன். அவரது உறுதி கற்கோட்டையைப்போல் குறுக்கே நிற்கிறது. கடப்பது எளிதல்ல” என்றார்.

துர்மதன் ஆங்காரத்துடன் “அவரிடம் சொல்லுங்கள், அவருடைய மைந்தர் நூற்றுவரும் அவருடன் இல்லை என்று” என்றான். விதுரர் விழிநோக்கி புன்னகைத்து “உங்கள் நூற்றுவரின் கால்களால் நிற்பவர் அல்ல அவர். இதுநாள் வரை உங்கள் நூற்றுவரையும் தாங்கி நின்ற அடிமரம் அது” என்றார். துச்சலன் மேலும் சினத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க கர்ணன் கைதூக்கி அவனை அமரச்செய்தான்.

“நான் என்ன செய்வது, அமைச்சரே? நேற்றிரவு முழுக்க தெய்வங்களுக்கு நுண்சொல்லால் ஆற்றலேற்றுவது போல் அரசரின் உள்ளத்திற்குள் சொல்புகுத்தி பகடையாடுவதற்கு ஒப்புதலை பெற்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வருவது வரை மட்டுமே அந்நிறைவு நீடித்திருக்கிறது” என்றான். “அவர் அதை இழிவென்று எண்ணுகிறார். அவரது மூதந்தையின் ஆணை அது” என்றார் விதுரர்.

“பகடையாடுவதை தவிர்த்தால் போர்தான் என்று சொல்லுங்கள் தந்தையிடம்” என்றான் சுபாகு. விதுரர் “போர் அல்லது பகடை எதுவானாலும் உடன் பிறந்தோர் முட்டிக் கொள்ளுதல் ஆகாது என்று அவர் எண்ணுகிறார் அதைப் பார்ப்பதைவிட உயிர் துறப்பதே மேல் என்று என்னிடம் சொன்னார்” என்றார்.

சுபாகு பற்களைக்கடித்து “இது அவரது எண்ணமல்ல. அவரது நிழலென அங்கிருக்கும் விப்ரரின் எண்ணம். முதலில் அந்த முதியவரை வெட்டி வீசவேண்டும்” என்றான். விதுரர் கசப்புடன் சிரித்து “நீங்கள் நூற்றுவரும் பலமுறை உள ஆழத்தில் அவரை கொன்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விப்ரரை அழிக்காமல் உங்களால் பேரரசரை வெல்ல முடியாது” என்றார். “என்ன வீண் பேச்சு?” என்று கர்ணன் கையசைத்தான். “ஆவதென்ன என்று பார்ப்போம்.”

விதுரர் “மிகக் குறைவான சொற்களில் சொல்லப்படும் முடிவுகளுக்கு எதிராக சொல்லாடுவது எவராலும் இயலாது, அங்கரே. இனி பேரரசர் ஒரு சொல்லேனும் எடுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றார். “ஏன்?” என்று சுபாகு உரக்க கேட்டான். “அவருக்கு என்னதான் வேண்டும்? ஏன் இந்த முரட்டு உறுதி?” விதுரர் அமைதியாக “ஏனெனில் அவர் தந்தை” என்றார்.

“தந்தையா? அப்படியென்றால் அவருக்கு மைந்தராகிய நாங்கள் என்ன பொருள் அளிக்கிறோம்? மைந்தரை தளையிட்டு வீணர்களும் கோழைகளும் ஆக்கிவிட்டு அவர் தந்தையென அமர்ந்திருப்பது எதற்காக? அமைச்சரே, பெருந்தந்தையென அவரை ஆக்குபவர்கள் நாங்களே. நாங்கள் ஈன்ற எங்கள் மைந்தர்களே. தன் குலமே தன்னை வெறுத்து ஒதுக்குகையில் தந்தையென்று அமர்ந்திருக்கும் அப்பீடத்திற்கு என்ன பொருள் என்று அவர் எண்ணியிருக்கமாட்டாரா?”

துச்சாதனன் “இது என் ஆணை! நம் நூற்றுவரில் எவரும் அவரைச் சென்று பார்க்கலாகாது. நூற்றுவர் மைந்தரில் ஒரு குழவியேனும் அவரருகே அணுகலாகாது” என்றான். கர்ணன் எழுந்து தன் சால்வையை தோளிலிட்டுக் கொண்டு “நான் சென்று பார்க்கிறேன்” என்றான். “மூத்தவரே…” என்றான் துச்சாதனன். கர்ணன் “நான் நூற்றுவரில் ஒருவன் அல்ல” என்றபின் வெளியே நடந்தான்.

விதுரர் அவனுக்குப் பின்னால் வந்தபடி “அதனால் ஏதும் பயனில்லை, அங்கரே. அவர் கரும்பாறையைப்போல் இறுகிவிட்டார்” என்றார். கர்ணன் தலை குனிந்து ஒரு கையால் மீசையை நீவியபடி நடக்க விதுரர் விரைந்து அடிவைத்து அவனுக்குப் பின்னால் வந்து “இன்றுகாலை காந்தாரத்து அரசியரும் சிந்து நாட்டரசியும் சென்று அவர் முன் அமர்ந்து மன்றாடினார்கள். எச்சொல்லேனும் அவருக்குள் கடக்கும் என்றால் அது அவர்களின் சொல்லே. அவையும் வழிகாணாது பயனற்றன” என்றார்.

கர்ணன் முற்றத்துப் படிகளில் இறங்க விதுரர் மூச்சிரைத்து நின்றுவிட்டார். அவருக்குப் பின்னால் வந்த துச்சாதனன் “நம்மை புறக்கணிப்பவர்களிடம் ஏன் தலை தாழ்த்தவேண்டும்? மைந்தருக்கு தந்தையுடன் கடமையுண்டு. தந்தைக்கு மைந்தருடனும் கடமைகள் உண்டு” என்றான். துச்சலன் “அங்கரே, உறுதிபட ஒன்றை அவர் செவியிலிட்டு வாருங்கள். நாங்கள் எங்கள் மூத்தவரின் நிழல்கள் மட்டுமே. இப்பிறப்பில் தந்தையரோ மூதாதையரோ தெய்வங்களோ எங்களுக்கில்லை” என்றான்.

கர்ணன் தேரில் ஏறி அமர்ந்ததும் “புஷ்பகோஷ்டத்துக்கு” என்றபின் கண்களை மூடிக்கொண்டான். தேர்ச்சகடங்களின் ஒலி தனது குருதிக் குமிழிகளை அதிரவைப்பதை விழிகளுக்குள் உணர்ந்தான். தடைக்கட்டை சகடங்களின் மேல் அழுந்தி கூச்சலிட தேர் நின்றபோது அதை ஒரு அடியென தன் பின் தலையில் உணர்ந்தான். “அரசே, புஷ்பகோஷ்டம்” என்று பாகன் சொன்னதும் எழுந்து படிகளில் கால்வைத்திறங்கி நின்றபோது பழமையான தூண்களும் முரசுப் பரப்பென கால்பட்டுத் தேய்ந்த படிகளும் கொண்ட அந்த மாளிகை முற்றிலும் அயலாகத் தெரிந்தது.

அவனுக்கு எப்போதும் மிக அணுக்கமாக இருந்தது அது. இக்கட்டுகளில், சோர்வுகளில் இயல்பாகவே நெஞ்சில் கோயிலென எழுவது. அதனுள் வாழ்ந்த தெய்வம் கல்லென மாறியதும் அதுவும் கற்குவியலென மாறிவிட்டது. திரும்பிச் சென்றுவிடவேண்டுமென்ற உணர்வை அடைந்தான். அங்கு வந்ததனால் எந்தப் பொருளும் இல்லை என்று தோன்றியது. அவ்வெண்ணத்தை உள்ளத்தால் உந்திக் கடந்து படிகளில் ஏறி இடைநாழியில் நடந்தான்.

அவன் அங்கே குண்டாசியை எதிர்பார்த்தான். இடைநாழியில் ஒரு தூணருகே குண்டாசி நின்றிருப்பதைக் கண்டதும் கால்கள் விரைவு குறைந்தன. குண்டாசி அவனைக் கண்டதும் கள்மயக்கு கொண்டவர்களுக்குரியவகையில் அவனை நோக்கி கைசுட்டினான். “அங்கரே, நீர் வருவீர் என நான் நினைக்கவில்லை” என்றான். அவன் முன்வாயின் பற்களனைத்தும் உதிர்ந்திருந்தமையால் முகமே சிறுத்திருந்தது. மூக்கு வாயின் மேல் வளைந்திருந்தது. கழுத்தில் இரு நரம்புகள் புடைத்து நிற்க மெல்ல நடுங்கியபடி சிரித்து “வேதம்காக்க எழுந்த சூதன்மகன்! நன்று!” என்றான்.

“வருகிறாயா?” என்றான் கர்ணன். “எங்கே? கிழவரைப் பார்க்கவா?” என்றான் குண்டாசி. கர்ணன் “ஆம், வா…” என்றான். “நூற்றுவரில் எவரும் கிழவரைப் பார்க்கக்கூடாதென்ற ஆணை சற்றுமுன்னரே வந்தது. உடனே சென்று பார்க்கவேண்டுமென நினைத்தேன். ஆனால் உடனே வேண்டியதில்லை என்று தோன்றியது. என்னை ஆணையிட்டு நிறுத்த அஸ்தினபுரியின் அரசனுக்கும் அவனைச் சூழ்ந்து பறக்கும் நூறு வௌவால்களுக்கும் உரிமை இல்லை. ஆனால் அதற்காக இந்தக் குருட்டுக் கிழவருக்கு அவர் தன்மைந்தர்கள் நூற்றுவராலும் புறக்கணிக்கப்பட்டார் என்னும் தண்டனை கிடைப்பதை ஏன் நான் மறுக்கவேண்டும்?”

தொண்டைமுழை ஏறியிறங்க அவன் சிரித்தான். “மைந்தரில் ஒருவன் வந்தாலும் அவர் உள்ளம் நிறைவடையும் என்று தோன்றியது. ஆகவே நின்றுவிட்டேன்.” குழிந்த கன்னங்கள் அதிர கருகிய குழிகளுக்குள் குருதிபடிந்த சளி போன்ற விழிகள் உருள அவன் நகைத்தான். “அதுவே அவர் ஊழ் என்றால் அந்த ஊழாகி நிற்பதல்லவா என் பொறுப்பு? என் கடமையைச் செய்ய முடிவெடுத்தேன்.” கர்ணன் “யுயுத்ஸு அங்கிருப்பான்” என்றான். “இருக்கட்டும். இந்தப் பெருநகரின் கொடிவழி ஆற்றிய குருதிப்பழி முழுக்க அவன் தோள்களில் அல்லவா ஏறியமரப்போகிறது? ஷத்ரியனின் அழுக்கை சூத்திரன் சுமக்கட்டும்” என்றான் குண்டாசி.

கர்ணன் அவனை கடந்து சென்றான். “சினம் கொள்ளவேண்டாம், அங்கரே. நீங்கள்தான் ஷத்ரியராக ஆகிவிட்டீர்களே” என்றபடி குண்டாசி நடந்துவந்தான். “விழியற்றவரை நான் வெறுக்கிறேன் என்று நினைக்காதீர்கள். அவரது விழியின்மையையே வெறுக்கிறேன். எத்தனை தேர்ச்சியுடன் அவர் தான் விழையாதவற்றை நோக்கி விழியிலாதாகிறார்…!” கர்ணன் நின்று திரும்பி நோக்கி “என்ன சொல்கிறாய்?” என்றான். “ஆ! விழியின்மை எனும் தற்காப்பு இல்லாத மானுடர் எவர்? அங்கரும் விழிமூடக் கற்றவர் அல்லவா?” என்றான் குண்டாசி.

“விலகு, களிமகனே” என்றான் கர்ணன். “இதுநாள்வரை குருகுலத்தின் பெருங்களிமகன் என்னும் புகழுடனிருந்தேன். இன்று அரசன் என்னை கடந்துசென்றுவிட்டான்” என்றான் குண்டாசி. “என்னைப்போல அவன் குடித்துவிட்டு உண்மைகளை சொல்வதில்லை. உண்மையை எதிர்கொள்பவர்களை குடி கோமாளிகளாக ஆக்குகிறது. அவர்களை கரைத்தழிக்கிறது. உண்மையை விழுங்குபவர்களை அது எரித்தழிக்கிறது…” அவன் கைநீட்டி “இவ்விரைவில் சென்றால் அஸ்தினபுரியின் அரசருக்கு விண் துணையாக இன்னொரு களிமகனாகிய நானே செல்லவேண்டியிருக்கும்” என்றான்.

கர்ணன் அவன் சொற்களைக் கேட்டபடி நடந்துசென்றான். “கிழவர் இந்நாள் வரை அனைத்தையும் பிறர்மேல் ஏவி தன்னை காத்துக்கொண்டவர், அங்கரே. இன்று ஏவியவை அனைத்தும் எதிர்மீண்டு அவர்மேல் பாய்கின்றன. அவர் உண்ணாநோன்பிருந்து உயிர்துறப்பதில் அழகிய ஒருமை உள்ளது. விழியிழந்தவருடன் போரிட எவர் விழைவார்? ஆகவே அவருக்கு கதையாலோ கைச்சுருளாலோ இறப்பில்லை. பசி விழிநோக்கா பெரும்பகை. அது அவரைக் கொல்லும் என்றால் அஸ்தினபுரிக்கு இன்னொரு மூதாதைதெய்வம் கிடைப்பார்.”

கர்ணன் பின்னால் குண்டாசியின் குரலை கேட்டுக்கொண்டே சென்றான். “இந்த மூதாதை தெய்வத்திற்கு நாம் எப்படி சிலை வைக்கவேண்டும் தெரியுமா? ஓர் ஆமைவடிவில். ஐந்தும் உள்ளிழுத்து அமைந்த பெரும் கடலாமை. முட்டைகளைப் போட்டுவிட்டு திரும்பாமல் சென்றுவிடும் பெருந்தந்தை.” குண்டாசியின் குரல் அவனுள் இருந்து என கேட்டுக்கொண்டே இருந்தது. “வணங்குபவரை பொருட்படுத்தா தகுதியாலேயே அவர் தெய்வமென ஆகிவிட்டார்…”

[ 20 ]

கர்ணன் தனது காலடியோசையை கேட்டபடி சென்று இசைக்கூடத்தின் வாயிலை அடைந்தான். அங்கு நின்றிருந்த காவலர் தலைவணங்கி “எவரையும் உள்ளே விடவேண்டாம் என்று ஆணை உள்ளது, அரசே” என்றான். “நான் உள்ளே செல்லவேண்டும், விலகு” என்று  சொல்லி அவன் தோளில் கைவைத்து விலக்கி கதவைத் திறந்து உள்ளே சென்றான். இயல்பாகவே விப்ரர் அமர்ந்திருக்கும் குறுபீடத்தை நோக்கி திரும்பி அங்கு அவரது இல்லாமையைக் கண்டு சிறு அதிர்வை அடைந்தான்.

பாதக்குறடுகளை விலக்கி மரவுரி இட்ட மெத்தைமேல் இரை நோக்கிச் செல்லும் புலிபோல் காலெடுத்துவைத்து நடந்தான். இசைக்கூடத்தின் மையத்திலிருந்த சுனை காலையொளி பட்டு நீலச்சுடர் எரியும் பேரகல் போல் ஒளிகொண்டிருந்தது. அவ்வொளியின் அலையில் சூழ்ந்திருந்த தூண்கள் நெளிந்தன. ஓசைமுழுமைக்காக அங்கே தேக்கப்பட்டிருந்த அமைதி நெடுநேரமாக கலைக்கப்படாமையால் குளிர்ந்து நீர்மை கொண்டு பெருகியிருந்தது.

நடுவே தரையில் விரிக்கப்பட்ட தர்ப்பைப்புல் அடுக்கின்மீது கால் மடித்து அமர்ந்து மடியில் கைகோத்து சற்றே தலைதூக்கி தன்னுள் மூழ்கி இருந்த திருதராஷ்டிரரை அவன் முதலில் கண்டான். அவரது இமைகள் மூடியிருக்க உள்ளே கருவிழிகள் ஓடின. அருகே வலப்பக்கம் விப்ரர் நாய்போல உடலைச் சுருட்டி படுத்திருந்தார்.

சற்று அப்பால் தரையில் பதினொரு காந்தாரியரும் துச்சளையும் அமர்ந்திருந்தனர்.  அசைவின்மை திரைச்சீலை ஓவியமென  அவர்களை ஆக்கியது. கர்ணனைக் கண்டதும் அப்பால் தூண்சாய்ந்து நின்றிருந்த சஞ்சயன் அருகே வந்து கைகூப்பி முறைமை வணக்கம் செய்தான். தலையசைத்து அதை ஏற்றபின் தாழ்ந்த குரலில் “உண்ணாநோன்பென்று அறிந்தேன்” என்றான். அவன்  “ஆம்” என்றான். “நீரும் அருந்த மறுக்கிறார். ஏனென்பதை விதுரரிடம் சொல்லிவிட்டேன் என்றார்.”

கர்ணன் சென்று திருதராஷ்டிரரின் முன் குனிந்து அவரது மடித்தமைத்த வலக்கால் கட்டை விரலைத் தொட்டு சென்னி சூடிவிட்டு அவர் முன் அமர்ந்தான். அவன் வந்ததை அவர் அறிந்தது உடலில் பரவிய மெய்ப்பில் தெரிந்தது. “தங்கள் கால்களை சென்னி சூடுகிறேன், தந்தையே” என்றான் கர்ணன். அவரது விழிக்குழிகள் மட்டும் அசைந்து கொண்டிருந்தன.

“தங்கள் ஆணையை விதுரர் சொன்னார். நான் தங்கள் மைந்தன். ஆனால் தங்கள் மைந்தனுக்கு முற்றிலும் கடன் பட்டவன். இப்பிறவியில் அவரது விழைவன்றி பிறிது எதுவும் எனக்கு முதன்மையானதல்ல. தாங்களேகூட” என்றான். உறுதியான குரலில் “அவர் பொருட்டு இங்கு பேசவந்துள்ளேன்” என்று தொடர்ந்தான்.

திருதராஷ்டிரரின் முதிர்ந்து ஒட்டிய உதடுகள் மெல்ல பிரியும் ஒலியைக்கூட கேட்க முடிந்தது. “நேற்று மாலை காந்தார இளவரசரும் கணிகரும் அரசரைக் காண வந்தனர். போரை தவிர்க்கும்படி பீஷ்மபிதாமகரின் ஆணையை ஏற்று கணிகர் வகுத்த மாற்றுத் திட்டமே இப்பகடைக்களம் என்றனர். இதற்கு அஸ்தினபுரியில் முன் மரபு உள்ளது. பகடை ஆடுதல் என்பது தீங்கென்று நூல்கள் கூறுகின்றன என்பது உண்மை. ஆனால் போரெனும் பெருந்தீங்கை தவிர்ப்பதற்கு பிறிதொரு வழியில்லை என்றனர்.”

“தங்கள் மைந்தர் ஏற்கவில்லை. பகடைபோல் இழிவில்லை என்று கொதித்தார். நேற்றிரவு முழுக்க தங்கள் மைந்தரின் அருகமர்ந்து போரிலிருந்து அவரை விலக்கி பகடைக்களத்தை ஏற்க வைத்துள்ளேன். உடன்பிறந்தார் குருதியை தவிர்க்க உகந்த வழியென்றே நானும் அதை எண்ணுகிறேன்” என கர்ணன் தொடர்ந்தான். “ஆனால் இன்று பகடைக்களத்துக்கு தங்கள் எதிர்ப்பை அறியநேர்ந்தபோது என்ன செய்வதென்று அறியாது நின்றிருக்கிறேன்.”

“மீண்டும் அரசரின் உள்ளம் போர் நோக்கி சென்றால் அதைத் தடுக்க எவராலும் இயலாது. இம்மண்ணில் உடன்பிறந்தார் குருதியொழுகாமல் இருக்க ஒரே வழி பன்னிரு பகடைக்களம் மட்டுமே. ஏற்றருளுங்கள்” என்றான்.

திருதராஷ்டிரரின் முகத்தில் எவ்வுணர்வும் தென்படாமை கண்டு “அரசே, தாங்கள் தந்தை மட்டுமல்ல, பேரரசரும் கூட. தங்கள் மைந்தருக்கு மட்டுமல்ல இந்நகரின் அத்தனை மக்களுக்கும் தந்தையானவர். ஒரு பெரும் போர்க்களம் எழுமென்றால் அதில் இறந்து வீழும் ஒவ்வொருவருக்கும் நீர்ப்பலி அளிக்கப்படுகையில் மூதாதையர் நிரைக்கு நிகராக உங்கள் பெயரும் சொல்லப்படும் என்று அறிவீர்கள். தங்கள் மைந்தரை மட்டுமல்ல இந்நகரின் படைவீரர் அனைவரையும் கருத்தில் கொண்டு முடிவெடுங்கள். போர் தவிர்க்கப்படுவதற்கு ஒரே வழி பகடைக்களம் மட்டுமே” என்றான்.

மதம் கொண்டு நின்றிருக்கும் களிறு ஆணைகளை புரிந்து கொள்ளாது என்று கண்டிருந்தான் கர்ணன். தன் மொழியே அவர் சித்தத்தை அடையவில்லை என்று தோன்றியது. “தந்தையே, பெருந்தந்தையென்று தாங்கள் இங்கமர்ந்திருப்பதும் உங்கள் குருதியிலிருந்து பெற்றுப் பெருகிய மைந்தராலேயே. அவர்களில் ஒருவர்கூட இன்று தங்களுடன் இல்லை. முற்றிலும் தனித்து தாங்கள் அடைவதுதான் என்ன?” என்றான்.

அவர் அசைவற்றிருப்பதை நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் “என் சொற்களை சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என்றே வந்தேன். தங்கள் முடிவால் உடன்பிறந்தார் கொலைக்கு கூடுதலாக தந்தைக்கொலை செய்தாரென்ற பெரும்பழியையும் தங்கள் மைந்தர் மேல் சூட்டிவிட்டு செல்கிறீர்கள். இத்தவத்தின் விளைவென்பது அது மட்டுமே” என்றபின் எழுந்து மீண்டும் அவர் கால் தொட்டு சென்னி சூடி வெளியே நடந்தான்.

இடைநாழியில் வீசிய காற்றில் உடலை உணர்ந்தபோது கர்ணன் விழி இலாதாக்கும் இருளிலிருந்து ஒளிக்கு வந்ததுபோல் உணர்ந்தான். எழுமூச்சுவிட்டு மேலாடையை சீரமைத்து திரும்பியபோது கனகரும்  மருத்துவர் கூர்மரும் அவனுக்காக காத்து நின்றிருந்தனர். கனகர் தலைவணங்கி அவனை அணுகி “நேற்று மாலை மூவந்தி வேளையில் அமர்ந்தார். இத்தருணம் வரை உணவோ நீரோ அருந்தவில்லை. ஐந்து நாழிகை வேளைக்கு மேலாக அவர் எதுவும் அருந்தாமல் இருந்ததே இல்லை” என்றார்.

“அரசியர்?” என்று அவன் கேட்டான். “அவர்களும் உணவருந்தவில்லை. இன்று காலைதான் அவர்களுக்கு அரசர் வடக்கிருக்கும் செய்தி தெரிந்தது. அனைவரும் வந்து அருகமர்ந்துகொண்டனர்” என்றார் கனகர். “பேரரசி என்ன சொன்னார்?” என்றான். “அவர் பேரரசரின் கால்களைத் தொட்டு சென்னிசூடி வாழ்வெனினும் நீப்பெனினும் இறப்பெனினும் உடனுறைதல் எங்கள் கடன் என்று மட்டும் சொல்லி இடப்பக்கமாக சென்று அமர்ந்தார். அவர் தங்கையரும் சூழ்ந்து அமர்ந்து கொண்டனர். பின்பு ஒரு சொல்லும் அவர்கள் சொல்லவில்லை” என்றார்.

“ஆனால் சிந்து நாட்டரசி தந்தையிடம் பேசினார்” என்று மருத்துவர் சொன்னார். “அப்போது நான் உடனிருந்தேன். தன் தமையர்களை பழிசூழ்ந்தவர்களாக்க வேண்டாம் என்றும், அவர்கள் தங்கள் தந்தையிடமிருந்தே உளஉறுதியை பெற்றுக்கொண்டவர்கள் என்பதால் ஒருபோதும் இறங்கிவரப்போவதில்லை என்றும் சொன்னார். எச்சொல்லும் அரசரை சென்றடையவில்லை.”

கர்ணன் “அவர் உடல்நிலை என்ன?” என்றான். “பேரரசரின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. நிகரற்ற ஆற்றல் கொண்டவர் என்பதால் இருபது நாட்கள் வரைக்கும் கூட உணவோ நீரோ இன்றி அவர் நலமாக இருப்பார். ஆனால் விப்ரர் இன்னும் இருநாட்கள்கூட உணவின்றி இருக்க முடியாது” என்றார். “ஆம், இப்போதே மிகவும் சோர்ந்திருக்கிறார்” என்றான் கர்ணன். “அவர் உடலில் நெடுநாட்களுக்கு முன்னரே நீர்வற்றத் தொடங்கிவிட்டது. மிகக்குறைவாகவே உணவு அருந்திக் கொண்டிருந்தார். இன்று காலை அவர் நாடியை பற்றினேன். வீணைநரம்பென அதிர்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.

“என்ன செய்வதென்று அறியேன். இருதரப்பும் இப்படி உச்ச விசை கொண்டுவிட்டால் எவர் என்ன செய்யமுடியும்?” என்றான் கர்ணன்.  கனகர் “செய்வதொன்று உள்ளது” என்றார். கர்ணன் அவரை நோக்க “சென்று அரசரை இங்கு வரச்சொல்லுங்கள், அங்கரே” என்றார் கனகர். கர்ணன் “அவர் வந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. இதற்கு நிகரான உறுதி கொண்டவர் அவர்” என்றான்.

“அவர் தன் முடிவிலிருந்து இறங்க வேண்டியதில்லை. ஆனால்  அவர் மைந்தனென வந்து நின்று தந்தையிடம் இறைஞ்சினால் பேரரசரின் உறுதி கரையும். அவர் சினந்தெழுந்தது அஸ்தினபுரியின் அரசருக்கு எதிராகவே. பேரரசரால் தோளிலும் தலையிலும் சூடப்பட்ட அச்சிறுமைந்தனாக மாறி அரசர் இங்கு வந்தால் பேரரசரால் ஒருபோதும் மறுக்க முடியாது” என்றார் கனகர். “அங்கரே, மைந்தர் தந்தையின் நெஞ்சின் ஆழத்தில் அறியாக்குழவி என்றே எப்போதும் வாழ்கின்றனர்.”

கர்ணன் சிலகணங்களுக்குப்பின் “ஆம், உண்மை. நான் அரசரிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றபின் நடந்தான்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 72
அடுத்த கட்டுரைநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் – ஒரு வாசிப்பு